Published:Updated:

குறுகுறுப்பு - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

சிறுகதை : நர்சிம் - ஓவியங்கள்: ராஜா

குறுகுறுப்பு - சிறுகதை

சிறுகதை : நர்சிம் - ஓவியங்கள்: ராஜா

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை
டெல்லி என்று முடிவானதும் மனதிற்குள் உடனே திட்டமும், அது கொடுத்த குறுகுறுப்பும் ஆரம்பித்துவிட்டது. எங்கெங்கோ போகவேண்டுமெனத் திட்டங்கள் போட்டுப் போட்டு, எங்கேனும் போனால் சரி என்ற நிலையை மகன் அடைந்திருந்தான். பதின்மத்தின் முதற்படியில் நிற்கிறான், அடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறான் எனக் காரணங்களை அவன் பக்கமாகச் சுமத்தினாலும், அடிக்கடி அலுவல் விஷயமாகப் போகும் இடம்தான் இந்த டெல்லி என்றாலும், இப்படிக் குடும்பத்தோடு போவதென்றவுடன், அந்த நீண்ட நாள் திட்டத்தைச் செயல்படுத்திட வேண்டும் என்ற, ஆம், குறுகுறுப்புதான் மிகச்சரியான சொல்.

காது குடையும் ஆட்கள் டெல்லியில் ஆங்காங்கே, குறிப்பாய், இண்டியா கேட், கெனாட் ப்ளேஸ் போன்ற பகுதிகளில் கையில் சிறிய பெட்டியுடன் சுற்றுவார்கள். சாலை ஓரமாய் இருக்கும் நடைபாதையில், எவருடைய காதையேனும் குடைந்துகொண்டிருப்பார்கள். குடையப்படுபவரின் முகம், சொர்க்கத்தில் லயித்திருப்பதுபோல இருக்கும். ஒவ்வொரு முறையும் இக்காட்சியைக் கடக்கும்போதும், காது மன்றாடும். ஆனால் உடனிருக்கும் சக அலுவல் கனவான்களைப் போலவே நாமும் டை, கோட் சகிதம் கண்டும் காணாததுபோல் நடந்து கடக்க வேண்டும் என்ற நாகரிகக் கோட்பாடுகளுக்குட்பட்டு அடக்கி வைக்க வேண்டியதாகும். இம்முறை செயல்படுத்திட வேண்டும் என்ற நினைப்பே அந்த உணர்விற்குள் கொண்டுபோய் விட்டது.

இப்போது சொல்லுங்கள், அது குறுகுறுப்பு தானே!

‘‘யப்பா இந்த ஷூ ஓக்கேயா, இந்த வாட்சு’’ என அவன் இறங்க, “லவ் மேரேஜ்னுதான் பேரு, தாஜ்மஹால கண்ல காட்டணும்னு தோணியிருக்கா? இத்துணூண்டு பய கேட்டதும் மண்டைய மண்டைய ஆட்ற சரின்னு. அப்ப நான்லாம் இனி தேவையில்ல, அதான” என்ற இன்னதுதான் இலக்கு என்றில்லாத வழக்கமான குத்துமதிப்பு அம்பு ஒன்றை ஏவினாள். அதாவது, பயணத்திட்டத்தில் தாஜ்மஹாலை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற புரிதல் இருக்கும் அளவு இன்னும் காதல் இருக்கிறது என்பது இவளுக்குத் தெரியுமா?

குறுகுறுப்பு - சிறுகதை

யோசித்துப் பார்த்தால் சிரிப்பு வருகிறது என்ற வரியைப் படித்தவுடன் ஏதாவது பின்னோக்கி ஒளிபாய்ச்சும் ஃப்ளாஷ்பேக்கிற்குள் போகப்போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். ஒரு வரிதான், “கல்யாணத்த தாஜ்மஹால்ல வச்சு பண்ணிக்குவமா?" என்ற என் உணர்வுமிக்க கேள்விக்கு, என் இரு கைகளையும் இறுகப் பிடித்து, ``லவ் யூ டா. வேண்டாம், பயமா இருக்கு. மேரேஜ் முடிச்சுட்டுப் போலாம்” என்றாள். அடேங்கப்பா, அந்தத் தருணம், ஈருயிர் ஓருடல் என்று தவறாகச் சொல்லும் அளவு உணர்ச்சிவயப்பட்டு நின்றிருந்தேன். ஆனால் இன்றுவரை நிறைவேற்றாத எல்லா வேலை களையும், காந்தி கணக்கு போல, ‘தாஜ்மஹால்ல கல்யாணம்னயே, அந்த மாதிரியா’ என்று கேலி செய்யும் அளவு ஆகிவிட்டது. ஷாஜஹானைப் பார்த்தால், “ஏன்ய்யா! நீ பாட்டுக்குக் கட்டிவிட்டுப் போய்ட்ட. எதை எடு, தாஜ்மஹாலத் தூக்கிட்டு வந்துர்றாளுக” என்று ஆண்களின் சார்பாக நாக்கைப் பிடுங்கும்படி கேட்க வேண்டும் என்றும் தோன்றியது.

சரி, அதையெல்லாம் விடுவோம், மகனுக்கு ஊர் சுற்றல், இவளுக்குத் தாஜ்மஹால், நமக்குக் காது குடைதல் என்ற இலக்குகளோடு, டெல்லி அலுவலக நண்பரிடம் சொல்லி வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துகொண்டு கிளம்பி, பயணத்தடைகள், நோய்மை பயங்கள் எனக் கடந்து, டெல்லி விமான நிலையத்தை அடைந்தாயிற்று.

அப்படி ஒரு முகமலர்ச்சியை அதுவரை கண்டதில்லை என்பதுபோல் பற்களின் ஈறுகள் தெரியச் சிரித்து எங்களை வரவேற்று, பெட்டிகளை வாங்கும் வண்ணம் கைகளைப் பரபரப்பாக நீட்ட, நான் தவிர்த்து, சிரித்து, பின்தொடர, வண்டி விமான நிலையக் கசகசப்புகளைக் கடந்து வெளியேறியதும் ஆசுவாசம் அடையும் பொருட்டு, பெயரிலிருந்து ஆரம்பித்தேன்.

“விஜய் சிங் சாப்.”

குறுகுறுப்பு - சிறுகதை

விஜய் சிங்கின் உடல்மொழி கச்சிதமாய் இருந்தது. கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில்கள் வந்தன. மகன் என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நான் விஜய் சிங்கிடம் கேட்கும்வரை பொறுமையாக் காத்திருந்து, பதில் சொன்னது பிடித்திருந்தது. இப்படி ஏதேனும் ஒரு காரணம் போதுமாய் இருக்கிறது, கவரப்பட.

தயார் செய்து வைத்திருந்த பட்டியலை வாட்ஸப்பில் அனுப்பினான் மகன். இவள்தான் அனுப்பச் சொல்லி ஏவியிருக்கிறாள் என்பது புரிந்தது. மலை மந்திர், இண்டியா கேட், ஓய்வு, நாளை தாஜ்மஹால், மூன்றாம் நாள், டெல்லி லோக்கல்.

இன்று இண்டியா கேட் எனில், காது குடைதல் வைபவம் சட்டென முடிந்துவிடுமோ என்று தோன்றியது. கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது எனக்கு. பிடித்தமானவற்றை அவ்வளவு சீக்கிரம் நெருங்கிவிட்டால் எப்படி? மலை மந்திருக்குப் போய்விட்டு, ஆந்திரா பவனில் சாப்பாடு, பிறகு அறை, மற்றவை பிறகு எனும் திட்டங்களைக் கிட்டத்தட்ட கட்டளைகள் போல் அடுக்கினேன்.

மலை மந்திரில் குளிர் சூழ சிறு குன்றின்மேல் முருகன் நின்றிருக்க, கூட்டமில்லாமல் அப்படி முருகன் முன் நிற்பது ஒருவித நிறைவைத் தந்தது. காதலிக்கும்போது திருப்பரங்குன்ற முருகனை அவ்வப்போது போய்ப் பார்ப்பது வழக்கம். அது நினைவிற்கு வந்தது எனச் சொல்லி இவளை அசத்த வேண்டும் எனக் கையில் இருக்கும் விபூதியை அவளுடைய ஹேண்ட்பேக்கிற்குள் இருந்த பேப்பரில் தட்டிக்கொண்டே நிமிர, “திருப்பரங்குன்றத்துல தூண்ல தடவுவ. அப்பிடியே பக்திப்பழமா இப்ப பேப்பர காட்ற வரைக்கும் கைலயே வச்சிருக்க” தட்டினேன்.

நினைவு என்பது நதி எனில் கடந்தோர் கால்களை ஒருபோலத்தானே நனைத்திருக்கும் எனத் தோன்றியது.

குறுகுறுப்பு - சிறுகதை

காதலித்த காலங்களில் பெரிதாய் ஒன்றும் புரிபடவில்லை. எங்கேனும் பார்த்தல், ஏதேனும் பேசல், விரல் பிடித்துவிட்டால், கரம் பற்றிவிட்டால் ஏதோ ஒன்றைச் சாதித்துவிட்ட சாயலோடு சுற்றுதல் என இருந்ததைக் காதல் என்றே நினைத்திருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது போலிருந்தது. மெல்ல மலையிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தோம். மகன் படபடவென்று தாவி இறங்கி, கீழிருந்து எங்களைப் புகைப்படம் எடுத்தான். அவ்வளவுதான், எடுத்து முடித்தவுடன் ‘‘சீக்கிரம் வாங்க’’ எனக் கத்தினான்.

“நாளைக்கு சீக்கிரமா கிளம்பிருவோம், அப்பதான் தாஜ்மஹால முடிச்சிட்டு வரமுடியும்.”

“சீக்கிரம்னா? ஒன்னோட சீக்கிரமா இல்ல சீக்கிர சீக்கிரமா?”

“அய்ய, ஆறு மணிக்குக் கிளம்புவோம்.”

அவ்வளவுதான், ஏதோ கேட்காததைக் கேட்டதுபோல், உலக அழகிப் பட்டம் பெறும்போது, கன்னத்தில் கை வைத்து வாயைப் பிளப்பார்களே, கிட்டத்தட்ட அதுபோல் ஒரு பாவனையைக் காட்டினாள். ‘‘நாளைக்கு தாஜ்மஹாலப் பார்க்கப் போறமா’’ எனக் கட்டியம் வேறு கூறிக்கொண்டாள்.

“அட, அது ஒரு கட்டடம், அவ்ளோதான். எல்லாத்தையும் ரொமாண்டிஸைஸ் பண்ணி, பெருசா ஆக்கிர்றோம்ல” என்ற என் அறிவார்ந்த வாதத்தை, புத்தரின் கைபோல் காட்டி, மூடு எனும் அமைதி மார்க்கத்திற்கு இட்டுச் சென்றாள்.

போகும் வழியில் இண்டியா கேட் இவர்களுக்குத் தட்டுப்பட, எனக்கு நம்மூர் கிளி ஜோசியர்கள் கையில் வைத்திருக்கும் பெட்டி சகிதம், என் நாயகர்கள், காது குடைவோர் தென்படத் தொடங்கினார்கள். உடனே காது என்னிடம் மன்றாடியது. பத்து வருடமாக மன்றாடுகிறது. ஒருமையில் சொல்கிறேன். ஆம் வலப்பக்கக் காதுதான் அதிகம் எதிர்பார்க்கிறது அச்சுகத்தை.

சட்டென விஜய் சிங் தோளைத் தொட, புரிந்து, பார்க்கிங் தேடி நிறுத்த, மகன் இறங்கி அந்தக் கட்டடம் நோக்கி ஓட ஆரம்பித்தான்.

குறுகுறுப்பு - சிறுகதை

நானும் இவளும் மெல்ல நடக்க, அந்த நீண்ட தார்ச்சாலை, நிமிர்ந்தால் இண்டியா கேட் கட்டடம். சுற்றிலும் பசுமை, மக்கள், காதல் ஜோடிகள் என சினிமாவில் காட்டப்படும் காட்சி, அப்படியே கண் முன் நிகழ்ந்துகொண்டிருந்தது.

அருகே செல்லும்போதே புகைப்பட நிபுணர்கள், உடனடியாக எடுத்துத் தந்துவிடும் வித்தையை விளக்கி, கட்டடம் நினைவுச்சின்னம் என விளக்க, அவர்களைத் தவிர்க்க ஒரே வழி, ஒரு போட்டோ எடுத்துக்கொண்டு, அதைக் கையில் வைத்துக்கொள்வது என்பதை உணர்ந்து செயல்படுத்திவிட்டு, வா வா என்று அழைக்கும் பானிபூரிக் குவியல்களை நோக்கி இருவரையும் அனுப்பிவிட்டு, ``இங்கயே இருங்க, காதுல லேசா அழுக்கு எடுத்துட்டு” என என் இலக்கை அடையும் பொருட்டு நகர, “இந்தா, அப்புறம் சில்ற இல்லன்னு நூறு ரூவாயத் தூக்கித் தருவ” என ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினாள். ஆம், சில்லறை இல்லைதான் என வாங்கிக்கொண்டு கூட்டம் விலகி, இடத்தை அடைந்தேன்.

கைதேர்ந்த சிற்பி செதுக்கும் பொசிஷனில் அமர்ந்து குடைந்துகொண்டிருக்க, காதுக்குச் சொந்தக்கார ராஜஸ்தான் ஆள், கண்கள் சொருக அரை மயக்கத்தில் லயித்துக்கொண்டிருக்க, எங்கே எனது ஜீவன் என நான் திரும்ப, என்னை முட்டிவிடுவதுபோல் பின்னால் நின்ற ஆள், சிரித்து, ‘‘சார், பாஞ்ச் மினிட்’’ என ஐந்து விரலைக் காட்டி ஒருமுறை சுருக்கி விரித்தார். கித்னாவுக்கும் அதே ஐந்து விரல் பிசுக்கல். பச்சாஸ் சாப்.

நல்லவேளை, சில்லறை கொடுத்தாள். ‘இதற்காகத்தான் நீங்கள் காதல் திருமணம் செய்துகொள்ள வேண்டும்’ என உலகிற்கு உரக்கச் சொல்ல வேண்டும்போல் இருந்தது. இப்படியான குறிப்பறிதல்கள்தானே வாழ்க்கை.

அவரிடம் என் கூச்ச சுபாவத்தைப் புரியவைத்து, ‘‘சற்று ஒதுக்குப்புறமாகப் போவோம்’’ என்றேன். ‘‘இதில் என்ன இருக்கிறது, மனிதன் என்று இருந்தால் காது என்ற ஒன்று இருக்கும். காது என்று இருந்தால் அழுக்கு இருக்கும்தானே’’ என்றார். ‘‘சர்றாப்பா, கொஞ்சம் ஓரமாப் போ’’ எனத் தள்ளிக்கொண்டு போய், வாகாக ஓர் இடம் பார்த்து அமர்ந்தேன்.

ஆம். என் பத்து வருடக் குறுகுறுப்பு இன்று நிறைவேறப்போகிறது. அதுவும் அவரின் காதுமடல்கள் தொடுகையே ஒருவிதப் பரவசத்தை ஏற்படுத்தியது.

அந்தச் சிறிய பெட்டியைப் பிளந்தார். ஆம், திறக்கவில்லை, அது பிளப்பதுபோல் திறக்கப்பட, விதவிதமான தைலங்கள் நீர்மக் கூழ் நிலையில் இருக்க, வாட்டர் கலர்போல் தோன்றியது. தூரிகைபோலவே இருந்த இரும்புக் குச்சி ஒன்றைக் கையில் எடுத்து நன்றாக நீவிக்கொண்டிருந்தார்.

‘சீக்கிரம் நோண்டுடா யப்பா’ என என் கண்கள் ஆர்வமாகப் பார்க்க, கையில் இருந்த சின்னஞ் சிறிய பென்சில் டார்ச்சை வைத்து காதிற்குள் ஒளியைப் பாய்ச்சினார். ஏதோ செய்து என் கழுத்துப்பகுதியை ஒரு கோண நிலைக்கு வைத்துக்கொண்டு, ஆஹா, ஆம், மெல்லக் குடைய ஆரம்பித்தார். குறுகுறுத்து இறங்கியது இரும்புக்குச்சி.

“சாப்”

“ம்ம்”

இந்த ம்ம்மில் என் சொர்க்க நிலை உணர்ந்து, மெதுவாய் நிமிர்த்தி, கையில் இருந்ததைக் காட்டினார்.

‘அட, இவ்வளவு அழுக்கா’ என்பதுபோல் நான் பார்க்க, அது லேசாக எடுத்ததற்கே அப்படி என்றும், கன்னத்தின் அடியில் அமுக்கிக் காட்டி, அங்கேதான் ஆபத்து இருக்கிறது எடுத்துவிடவா என்றும் கேட்க, மேலாக எடுத்ததே சொர்க்க வாசல்போல் இருக்கிறதே, இன்னும் இறங்கினால் மேனகை டான்ஸ்கள்தான் என, தலையாட்டினேன்.

சட்டென பெட்டிகளிலிருந்து திடங்களை திரவத்தால் குதப்பிக் கூழாக்கி, படக்கென என் மண்டையைக் கீழ்நோக்கி அழுத்தி, அதை ஊற்றி, காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றும் நிகழ்வுபோல் கொஞ்சம் சூடாக ஏதோ நான் உணர, கப்பென தன் கையால் காது ஓட்டையை அடைத்துக் கொண்டு என்னை முன்னும் பின்னுமாக லேசாக ஆட்டி, விடுவித்து, காதிலிருந்து எடுத்த கசடுகளைக் காட்டினார். எப்படியும் அரை லிட்டர் கன்னங்கரேலென. ‘நீங்க உயிரோட இருந்ததே பெருசு சார்’ என்ற ரீதியில் சொல்லி, துணியால் துடைத்துத் தூக்கி எறிந்துவிட்டு, ‘சரி குடுங்க’ எனக் கைய நீட்ட, இடது காது என நான் சைகை செய்ய, ‘‘இதுக்கு அஞ்சாயிரம் ரூவா குடுங்க, அதுக்கு அஞ்சு நிமிஷம் கழிச்சு, அதுலயும் இதே மாதிரி எடுக்கவா’’ என அவர் கேட்கும் போதே எனக்குக் காது கேட்காதது போல் தோன்றத் தொடங்கியது.

‘‘ஐயாயிரமா?’ என நான் அதட்ட, பதிலுக்கு அவர் என்ன அவர், அவன் மிக அதிகமாக அதட்டி, ‘சும்மாவா இவ்வளவு எடுத்து விடுவாங்க, நீ என்ன மாமனா மச்சானா மானங்கெட்டவனே’ ரேஞ்சில் ஹிந்தி பஞ்சாபி எனக் கலந்து கட்டித் திட்ட, ‘என்னடா இப்படி பாஷை தெரியாத ஊரில் வந்து ரெளடியிடம் மாட்டிக் கொண்டோமே என்ற சுயகழிவிரக்கம் என் தொண்டையைக் கவ்வியது.

சரி, இவனை வேறு மாதிரி டீல் செய்வோம் எனச் சிரித்துக்கொண்டே, அவ்ளோலாம் ஆகாதுன்னு தெரியும் என பர்ஸை எடுக்க, அதற்குள் இரண்டு பேர் அவனோடு வந்து நின்றார்கள். அவர்களிடம் அந்தத் துணியைக் காட்டி, ‘ஒரு வண்டி அழுக்க எடுத்துருக்கேன், இவனப்பாரு’ எனச் சிரித்து கேலி செய்து என்னைச் சீண்ட, வந்த ஆத்திரத்திற்கு கொடுத்தேன் ஒரு நாலாயிரத்தை. இதற்கு மேல் ஒரு பைசா கொடுக்க முடியாது என மிகுந்த கோவத்தோடு சொல்ல, வாங்கி எண்ணிப்பார்த்து, இன்னொரு ஐந்நூறு கொடுத்தால் அந்தக் காதையும் க்ளீன் செய்வதாகச் சொல்ல, புத்தர் அருளிய கையைக் காட்டி போதும் என்பது போல் நகர்ந்தேன்.

மரத்திற்கு இந்தப் பக்கமாக நாற்பது பாகையில் குனிந்து அமர்ந்து காதைக் காட்டிக்கொண்டிருந்த ஒருவரிடம், ஏற்கெனவே இருந்த அழுக்கை சட்டென கையில் மாற்றிக் காட்டிக் கொண்டிருந்தார் இன்னொரு சிற்பி. அடடா, ஏமாந்துவிட்டோமே என்ற கோபம் சற்று திசை திரும்பி, இவளுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான் எனும் பயமாக மாறிக் கவ்வத் தொடங்கியது.

ஒருமுறை நிம்மதியாக இருக்கவேண்டும் என வீட்டில் லீவு போட்டு இருக்க, எங்கிருந்தோ வந்த வியாபாரி ஒருவர், ‘காசெல்லாம் வேணாம் சார், சும்மா பாருங்க’ என என்னை வெளியே அழைத்து, இழுத்துவிட்டு, அதைப் பார்க்க வைத்து, அசல் காஷ்மீர்க் கம்பளம் என்றும், சென்னையில் எங்குமே கிடைக்காது என்றும், பார்த்தே இல்ல, வாங்கு என்றும் அதட்டி, பணியவைத்து என்றெல்லாம் அவர் எண்ணிக்கொண்டிருக்க, ‘சரி வெயிலில் அலைந்து விற்கிறாரே பாவம்’ என அவர் சொன்ன இரண்டாயிரம் ரூபாயெல்லாம் கொடுக்க முடியாது எனக் கறாராகப் பேசி ஆயிரத்து ஐந்நூருக்கு முடித்து, ஹாலில் அந்தக் கம்பளம் விரித்து மெத் மெத் எனப் பாதம் தேய்த்து, இவள் வரும் வரை காத்திருந்தால், வந்ததும் ‘‘அய்ய், வாங்கிட்டியா? ஆபீஸ் பக்கத்துல வச்சிருந்தான், ஐந்நூறு சொன்னான், முந்நூறு ரூவான்னா குடு இல்லேன்னா வேணாம் போடான்னு வந்துட்டேன்’’ என்றாள். வயிறெல்லாம் கலங்கி, பட்டென சமயோசிதமாக யோசித்து, ‘நல்லவேள, நானூறு சொன்னான். டூ ஹண்ட்ரடுக்கு குடு இல்லேன்னா எடத்த காலி பண்ணு’ன்னு சொல்ட்டேன். அத விடு, தலவலிக்குது காபி குடு’ என கொறப்பாச்சம் போட்டதெல்லாம் நினைவிற்கு வந்தது. நாலாயிரம் என்பது எனக்கே என்மீது கோபமும் பதற்றமும் அவமானமும் கடுப்பும் கொஞ்சம் அழுகையும் எனக் கலந்துகட்டி வந்தது.

“என்னப்பா காது செவசெவன்னு இருக்கு” எனக் காதைப் பிடித்தவனைக் கத்தினேன்,

“விட்றா, வலிக்குது.”

சட்டென அவன் முகம் வாட, நான் சுதாரித்து, ``என்னடா டெல்லி எப்டி, இண்டியா கேட் செம்ம இல்ல?’’ என மடைமாற்ற, இவள் ‘‘பானி பூரி சாப்டு’’ என வெறும் பூரியில் மசால் வைத்ததைக் கொடுத்தாள். அவள் உள்ளங்கை வியர்வைப் பிசுபிசுப்பு, நெடுநேரமாய் எனக்குப் பிடிக்கும் என வைத்திருக்கிறாள் எனப் புரிந்தது.

“நல்லா க்ளீன் ஆகிருச்சா, இனி சொல்றது கேட்கும்ல, அம்பதா இல்ல தாராளப் பிரபுவா நூறக் குடுத்துட்டியா?”

``என்னயப் பாத்தா இளிச்சவாயன் மாதிரி இருக்கா, அம்பதுதான், அவனுக்கு எதுக்கு நூறு?”

எனக் காதைத் தடவிக்கொண்டு கிளம்பி, அறையை அடையும் வரை மனம் குறுகுறுவென அலைபாய்ந்தது. அதுவும் ஏடிஎம்மில் இருந்து எடுத்த புத்தம் புது ஐந்நூறு ரூபாய்த் தாள்கள். அவன் எச்சில் தொட்டு எண்ணியதை, ஏமாந்துபோனதைத் தாங்கவே முடியவில்லை.

நம் வீட்டில் இருக்கும் சின்னஞ் சிறிய நடைபாதையில், திடீரென ஒரு யானை நின்றால் எப்படி இருக்கும்? அப்படியான ஒரு திடுக் பிரமாண்டம், அட எனும் பரவசம் தாஜ்மஹாலைப் பார்த்த மாத்திரத்தில் தோன்றியது. அந்தச் சிறிய சந்துகளைக் கடந்து, நடக்கையில் சட்டெனக் கண்ணில் படும் அவ்வளவு பிரமாண்டமான அந்தக் கட்டடம். அந்த அழகு. அந்த உன்னதம் என அருகில் செல்லச் செல்ல ஒருவித அமைதியை அடைந்தது மனம். இவள் தோள்களில் கை வைக்க தட்டிவிட்டு, “நேத்துல இருந்து திடீர்னு உர்னு இருக்க, எரிஞ்சு விழுகுற, இப்ப மட்டும் என்ன, கைய எடு” என்றாள். சிரித்து, மீண்டும் அவள் தோள்களில் கையை வைத்து,

“செமயா இருக்குல்ல, மும்தாஜ் நினைவாத்தான் கட்டினாரு, ஆனா ஷாஜஹான்தான நினைவுக்கு வர்றாரு.”

“ஆமா, ஏன்னா உண்மையான அன்போடு யாருக்காக என்ன பண்ணாலும் அது நின்னுக்கும், இந்தக் கட்டடம் மாதிரி” என்றாள், என்பக்கம் திரும்பாமலே.

அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

“நேத்து என்னைய ஏமாத்திட்டான், காது குடையுற எடத்துல, நாலாயிர ரூவா வாங்கிட்டான்.”

“அட சொகமா இருந்துச்சுல்ல, அந்த எக்ஸ்பீரியன்ஸ்தான முக்கியம். அத விடு, இந்தப் பக்கமா இருந்து பார்த்தாதான நல்லா இருக்கு” என தாஜ்மஹாலின் பக்காவாட்டுப் பக்கம் இருந்து நிமிர்ந்து பார்த்து என்னையும் பார்க்கச் சொன்னாள்.

ஆம், உள்ளும் புறமும் அவ்வளவு அழகாகத் தெரிந்தது, அந்த இடத்தில் நின்று கொண்டிருக்கும்பொழுதில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism