Published:Updated:

சிறுகதை: காப்பாளன் திரு.நல்லசாமி

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

வா.மு.கோமு

சிறுகதை: காப்பாளன் திரு.நல்லசாமி

வா.மு.கோமு

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

ங்கும் பீதி எதிலும் பீதி என்கிற மாதிரியான வாழ்வோட்டத்தை திரு.நல்லசாமி இந்த நாற்பத்தைந்து வருட காலங்களாக சந்தித்ததேயில்லை. கொரோனா பற்றியான எச்சரிக்கைகளையும், மக்கள் எவ்விதம் அதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் தினமும் செய்திச் சேனலில் பார்த்துப் பார்த்து திரு. நல்லசாமி சலிப்பான மனநிலையில் இருந்தான். எங்கேயேனும் குறுநகர்ப்பக்கமாகப் போய் வரலாமென்றாலும் ஊரின் முகப்பிலேயே போலீஸ் அதிகாரிகள் இருவர் நின்றிருக்கிறார்கள். ‘எங்கே போறே?’ என்ற கேள்விக்கெல்லாம் திரு.நல்லசாமி பதில் சொல்லிக்கொண்டு சென்று வர வேண்டும். ‘விஜயமங்கலம் வரைக்கும் போய் கபசுரக் குடிநீர்ப் பொட்டணம் வாங்கீட்டு வரத்தான் சார்’ என்றும், `காய்கறி வாங்கிட்டு வரத்தான் சார்’ என்றும் சொல்லிச் சென்று வந்துகொண்டிருந்தான் தன் டிவிஎஸ் எக்ஸலில். முகக்கவசம் காவல்துறை அதிகாரிகளைத் தாண்டும் வரையில்தான். தாண்டியதும் மூச்சு முட்டுகிறதேயென கீழே இழுத்து விட்டால் கழுத்தில் தொங்கிக்கொண்டு வரும்.

விஜயமங்கலத்திலோ டீக்கடைகள், சரக்குக் கடைகள் கிடையாது. சரக்கு நினைப்பே இல்லாமல் நாள்கள் கழிகின்றன. ஒரு கோட்டரை ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார்களாம். சாராயம் காய்ச்சுபவர்களை போலீசார் கைது செய்கிறார்கள். அதுவும்கூட ஒருலிட்டர் கேன் இரண்டாயிரம் ரூபாயாம். திரு. நல்லசாமி பீடி ஒன்றே தன் கதியென நாள்களை வெறுமனே ஓட்டினான். இருபது ரூபாய்க்கு விற்ற பீடிக்கட்டு திடீரென நாற்பது ரூபாய் ஆகிவிட்டது. பாதி குடித்துவிட்டு பத்திரமாய் அதே கட்டில் பாதி பீடியை செருவி வைத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டான். தொட்டதற்கெல்லாம் ஓமனாவிடம் ‘பீடி வாங்கக் காசு குடுடி!’ என்று எத்தனை முறை கேட்பது?

சானிட்டைசர் வாங்கி கையை அலம்பிக்கொள்ள அருகதையற்றவனாக துணிகள் துவைக்கும் மலர் சோப்பினால் கைகளை வெளியே போய் வந்ததும் அலம்பிக்கொண்டு வீட்டினுள் நுழைகிறான். அரசாங்கம் சிந்தாமணியில் தரும் அரிசியில் கறுப்பு நிற அரிசிகளும் கலந்து குப்பையாய் வருகிறது. பல ஊர்களில் ‘எங்கூர்ல இந்தக்கட்டாப்பு சூப்பரான அரிசி’ என்று சொல்கிறார்கள். திரு.நல்லசாமியும் அவனது அலைபேசியில் யார் அழைத்தாலும் எடுத்தவுடன் ‘எங்கூர் சிந்தாமணியில சூப்பரான அரிசி போட்டாங்க!’ என்று சொல்லிவிட்டுத்தான் யாரு எவரென விசாரித்துப் பேசினான். ஒருமுறை கோவிட் 19 கொரோனாவுக்கு எதிராக என்று ரிங்டோனிற்குப் பதிலாகப் பேசத்தொடங்கிய பெண்மணியிடமும் ‘நிறுத்துடி உம்படதெ! நாங்க பாக்காத கோவிட்டா? சிந்தாமணி அரிசி எங்கூர்ல சூப்பர் தெரியுமா? அதுக்கென்ன சொல்றே?’ என்றான்.

சிறுகதை: காப்பாளன் திரு.நல்லசாமி

நாற்பது நாள்களாக குடிக்காமல் விட்டிருந்ததால் ஊருக்குள் சும்மா காலார நடந்து செல்கையில் தன்வயதையொத்த நண்பர்கள் கோயில் திண்டில் வெயிலுக்கு அரசமர நிழலில் அமர்ந்திருப்பார்கள். எல்லோர் முகமும் சற்று வெளுத்துப் போய் வீக்கமாய் காட்சியளிப்பதாகவே திரு. நல்லசாமி நினைத்துக்கொள்வான். குடியில்லாமல் போனதால் நேரா நேரத்திற்குப் பசியெடுக்க ஆரம்பித்துவிட்டது. ஒரு வட்டல் சோறு தின்றாலும் மேலும் ஒரு வட்டல் அள்ளிப் பூசலாம் என்றே இருக்கிறது. கொரோனா என்று இப்படியே டாஸ்மாக் கடையை சாத்திவிட்டால் கூட நல்லதுதான். இரண்டு வருடகாலமாவது சேர்த்து இந்த ஊருக்குள் நடமாடலாம். கடையை நீக்கிவிட்டால் அந்த இரண்டு வருட காலம் குறையும்.

திரு. நல்லசாமி பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் கம்பெனி ஒன்றில் வாகன ஓட்டியாக நான்கைந்து வருடமாகச் சென்று வந்துகொண்டிருந்தான். அவனின் ஒரே பையன் ஆறு மாதம் முன்பாகத்தான் உள்ளூருக்குள்ளேயே காதல் திருமணம் செய்துகொண்டு அவனது மாமனார் வீட்டிலேயே போய்த் தங்கிவிட்டான். எத்தனையோ உள்ளூர்க் காதல் கதைகளை முன்பே அறிந்து அதில் வரும் நன்மை தீமைகளை உணர்ந்து மற்றவர்களிடம் எடுத்து இயம்பும் திரு. நல்லசாமி தன் மகன் விசயத்தில் ஏமாந்து போனது எப்படி என்றே தெரியவில்லை. இதற்கு முழு ஒத்துழைப்பை நல்கியவள் மனைவி ஓமனா என்று அறிந்ததும் ஓமனாவை ஓங்கி ஒரு மிதி வைத்ததோடும், மூன்று நாள்கள் சோகமாய் சரக்கு குடித்ததோடும் துக்கத்தை முடித்துக் கொண்டான் திரு. நல்லசாமி.

ஊரடங்கு காலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை எந்த சப்தமுமில்லாமல் கிடந்தது. வேலையிழந்த கூட்டத்தாரோடு திரு.நல்லசாமியும் ஒருவனாகிப் போனான். சரக்கு கிட்டாமல் தற்கொலை செய்துகொண்டவர்களைப் பற்றிச் செய்திச் சேனலில் காட்டுகையில் இவனுக்கும்கூட ‘இனி இங்கே வாழ்ந்துதான் என்ன பிரயோசனம்?’ என்ற கேள்வியெல்லாம் உதிக்கத் தொடங்கிற்று.

திரு.நல்லசாமி ஓமனாவை மணம் முடித்து வேலந்தாவளத்திலிருந்து கூட்டி வந்து இருபத்து மூன்று வருடங்களாயிற்று. அப்போது பெருந்துறை ஸ்டேண்டில் வாடகைக்கார் ஓட்டிக் கொண்டிருந்தான் திரு.நல்லசாமி.

சிறுகதை: காப்பாளன் திரு.நல்லசாமி

வேலந்தாவளத்திற்கு அடிக்கடி வாடகைக்குச் சென்று வந்துகொண்டிருந்தவனுக்கு டீக்கடையில் தாயோடு இருக்கும் ஓமனாவின் மீது காதல் வந்து விட்டது. ஓமனாவிற்கும் ஒருசேர காதல் வந்துவிடவே அவள் தாயாரின் அனுமதியோடு காரில் கூட்டி வந்து, நான்கு உள்ளூர் நண்பர்கள் முன்னிலையில் ஊத்துக்குளி கைத்தமலையில் வைத்துத் தாலி கட்டினான் திரு. நல்லசாமி.

முதலாக ஊருக்குள் வந்த ஓமனாவைக் கண்ட உள்ளூர்ப்பெண்கள் எல்லோருமே தாவாங்கட்டையில் கைவைத்து அவள் அழகுக்காகவும், சிவந்த மேனிக்காகவும் ஆச்சர்யமடைந்தார்கள். அழகான பெண்களையெல்லாம் முன்பாக தூர்தர்சனில் ஒளியும் ஒலியும் ஓடுகையில் பார்த்திருந்தவர்களுக்கு கண்ணுக்கும் முன்னால் ஓமனாவைப் பார்த்ததும் பொறாமைத்தீ பற்றிக்கொள்ள வெந்து புழுங்கினார்கள்.

திரு.நல்லசாமிக்கு மிருகங்களின்பால் அன்பு வரக் காரணமாய் இருந்தவள் ஓமனாதான். திருமணம் முடித்து வருகையில், கடையில் தான் பாசத்தோடு வளர்த்த சுந்தரி நாயையும் கூட்டி வந்துவிட்டாள் ஊருக்கு. அது ஏழு வருடம் போல பிச்சாம்பாளையத்தில் உயிர்வாழ்ந்தது. அது இறந்துபோன அன்று திரு.நல்லசாமியும், ஓமனாவும் அழுது வடிந்தார்கள். ஒரு நாள் முழுக்க சோறு திங்காமல் இருந்தார்கள்.

பின்பாக திரு. நல்லசாமி பெருந்துறையிலிருந்து டாமி என்கிற குட்டி நாயைக் கொண்டு வந்தான் வீட்டுக்கு. டாமியும் ஒன்பது வருடம் உயிர்வாழ்ந்து அன்போடு மூவரிடமும் விடைபெற்றுப் போய் விட்டது. மகன் சுரேந்திரனும் டாமிக்காக அப்பன் அம்மாவோடு இணைந்து ஒருநாள் சோறில்லாமல் துக்கம் அனுஷ்டித்தான். பின்பாக திரு.நல்லசாமி ரோட்டில் திரிந்த குட்டி நாயொன்றை வீடு கொண்டு வந்தான். அதற்கும் டாமி என்றே பெயரிட்டு அழைத்து வந்தான்.

கொரோனா காலத்தில் ரேசன் அரிசி உணவை உண்பதற்கு டாமிக்கு எரிச்சலாயிருந்தது. ஒரு சட்டி டீலக்ஸ் பொன்னி அரிசிச்சோற்றை அவுக் அவுக்கென ஐந்து நிமிடத்தில் காலி செய்துவிடும் டாமி இப்போது இரண்டு நிமிடத்தில் கொஞ்சமாய் சாப்பிட்டுவிட்டு நழுவியது. கொரோனா காலத்திற்கும் முன்பாக வார வாரம் ஞாயிறு என்றால் திரு.நல்லசாமி வீட்டில் கறிச்சோறுதான். போக விஜயமங்கலம் கடையில் கோழித்தலைகள், கால்கள் என தனியே கட்டி வந்துவிடுவான். ஓமனா அவற்றை அப்படியே வடைச்சட்டியிலிட்டு உப்பு, மிளகாய்த்தூள் போட்டு தண்ணீர் ஊற்றி வேக விடுவாள். ஒரு பொழுதுக்கும் டாமிக்கு அதுதான். போக வீட்டில் பூனைகள் மூன்று, வாத்துகள் இரண்டு, கீரிப்பிள்ளைகள் இரண்டு, கோழிகள் பத்து, இரண்டு ஆடுகள், சிட்டுக்குருவிகள் என வளர்த்துகிறான்.

சிட்டுக்குருவிகளுக்கு செருப்புக்கடையிலிருந்து எடுத்து வந்த அட்டைப் பெட்டிகளை வீட்டின் தாழ்வாரங்களில் கம்பிக்கட்டு போட்டுக் கட்டியிருப்பான். குருவிகள் உள்ளே போய் வர ஒரு கதவுத் திறப்பும் உண்டு. போக கோதுமைத் துணுக்குகள், அரிசித்துணுக்குகள் பெட்டியினுள் எப்போதும் இருக்கும். போக கீரிப்பிள்ளைகளுக்குக் கம்பிக்கூண்டு. அது எப்போதும் திறந்தே கிடக்கும். வெளியில் சுற்றிவரும் கீரிப்பிள்ளைகள் தங்களுக்கான வீடு அதுதான் என அதில் வந்து தங்குகின்றன. கோழிகளுக்கும் கூடாரம் போட்ட தங்கும் விடுதி வீட்டின் பின்புறம் இருக்கிறது. பூனைகளுக்குத்தான் இவன் வீடே சொந்த வீடு என்பதுபோல சேர் மீதும், டிவி பொட்டிமீதும், கட்டிலிலும் படுத்துக் கிடக்கும். டாமிக்கு வாசல்படியில் கிடக்கும் சாக்கே கதி. ஆட்டுக்குட்டிகளுக்கு சின்னச் சாலை. அது கோழிகளின் இருப்பிடத்திற்கு அருகிலேயே இருக்கிறது.

ஒவ்வொரு வாரம் கறி எடுக்கவில்லை என்றால் டாமியிடம் திரு. நல்லசாமி காலையிலேயே சொல்லிவிடுவான். `இன்னிக்கி நம்மூட்டுல சீச்சி சோறு கிடையாது பாத்துக்க, அதனால அப்புக்குட்டி ரோட்டுல கறி வெட்டுவான். அங்க போயி மத்த நாய்களோட சண்டைகட்டாம கீழ வுழுறதை நாலு துண்டு சாப்டுட்டு வம்பிழுக்காம வந்துடணும், சரியா?’ என்று சொல்லிவிடுவான். அதுவும் அப்படியே கிளம்பிவிடும். அப்புக்குட்டி கடையருகே டாமி வருகையில் மற்ற நாய்கள் ஒதுங்கிவிடும். இதன் உருவம் அப்படி.

குடிவிரும்பிகளின் நலனை முன்னிட்டு அரசாங்கம் டாஸ்மாக்கை நீக்கிவிட்டதும் நல்லசாமி நிம்மதியானான். மெதுவாக சிறு தொழில்கள் இயங்கலாம் என்று அறிவிப்பு வரவும் சிப்காட்டுக்குப் பயணமானான். திருப்பூருக்கும் பெருந்துறை சிப்காட்டுக்கும் கம்பெனி மினிலாரியை இயக்கினான். சாமம் ஏமத்தில் எப்போதும்போல வீடு திரும்பினான்.

திரும்புகையில் பிச்சாம்பாளையத்திற்கும் முன்பாகவே எலையபாளையத்தில் ரயில்வே பாலத்தினடியில் மணலில் அமர்ந்து ஒரு கோட்டரைக் குடித்து முடித்துவிட்டு வருவது வழக்கம். அங்கே அப்படி அமர்ந்து குடிக்கையில் கறுப்பு நிறத்தில் குட்டி நாய் ஒன்று தாவிக் குதித்து வர, ‘வாடா வாடா என் நண்பா! நீ எத்தனை நாளா இங்க இருக்கே? எவன் கொண்டாந்து பொட்டைன்னு வீசிட்டுப் போனான்? பொட்டைன்னுதான் உன் ஓனரும் கொண்டாந்து இங்க உட்டுட்டுப் போயிருக்கான்! உன் பேரு என்ன சாமி? நானேதான் வைக்கணுமா? மொத நீயி கடுவனா பொட்டையான்னு பாக்கோணும் நானு!’ இருளில் செல்போன் டார்ச்சை உயிர்ப்பித்து நாயை செக்கப் செய்தான். பொட்டைக்குட்டிதான்.

டாமிக்கு வாங்கி வந்திருந்த புரோட்டாவிலிருந்து ஒன்றை எடுத்துப் பிய்த்துப்போட்டான் ஒரு காகிதத்தின்மீது. ‘இன்னில இருந்து நீ சுந்தரி. சுந்தரி! உன்னை என் ஊட்டுக்குத் தூக்கீட்டுப் போனா டாமி கோவிச்சுக்குவான். நானிருக்கப்ப இன்னொருத்தியா அப்படின்னு கேப்பான்! சண்டையாயிப் போயிரும்! அதனால நீ இங்கியே இரு!’

திரு.நல்லசாமி தினமும் டூட்டிக்குச் செல்லுகையில் பாலத்தினடியில் தங்கியிருக்கும் சுந்தரிக்குத் தின்பண்டங்கள் எதாவது வைத்துப் போனான். அதேபோல் டூட்டி முடிந்து திரும்புகையில் புரோட்டா! ஆயிற்று ஒரு மாதம். சுந்தரி அந்த இடத்தை விட்டு எங்கும் ஓடிப்போகவுமில்லை. பாலமே தன்னுடையது என்ற நினைப்பில் பகலில் அதன் நிழலில் மணலில் சொகுசாய்க் கிடந்தது. அதுவழியாக போவோர் வருவோர் எதாவது உணவு வகைகளை வாங்கிப் போட்டுச் சென்றுகொண்டிருந்தனர்.

சிறுகதை: காப்பாளன் திரு.நல்லசாமி

இப்படியான சூழலில் அழுக்குச் சட்டை, கிழிந்த பேன்ட்டுடன் தாடி வைத்த அறுபது வயது மதிக்கத்தக்க மனிதனொருவன் அங்கு வந்து சேர்ந்தான். அவன் முதுகில் ஒரு அழுக்கு மூட்டையுமிருந்தது. அவன்தான் அந்தக் குட்டி நாயை ‘ஹாய் பெல்லா’ என்று பெயரிட்டு அழைத்தான். ‘மை நேம் ஈஸ் எமண்டிஸ். டுடே யுவர் நேம் ஈஸ் பெல்லா.’ சுந்தரி அவன் அழுக்கு மூட்டையைப் பார்த்துக் குரைக்கத்தொடங்கியது வாழ்வில் முதலாக. அந்த மனிதனும் அதைப்பார்த்து குரைக்கத் தொடங்கவும் மிரண்டு பின்வாங்கியது. ஒரு மனிதன் தன்னைப்போன்றே குரைப்பான் என அது நினைத்துப்பார்த்ததேயில்லை.

மணலில் அழுக்கு மூட்டையை வைத்து அதன் மீது தலை வைத்துப் படுத்த மனிதன் மிகப்பெரிய கொட்டாவி ஒன்றை விட்டான். சுந்தரி நாயும் ஒரு கொட்டாவி விடுவதைப் பார்த்து, தன்னருகில் வந்து படுத்துக்கொள்ளுமாறு அதை அழைத்தான் எமண்டிஸ். பீதியிலிருந்த சுந்தரி நேரம் போகப்போக அதிலிருந்து விடுபட்டது.

இரவில் எக்ஸல்சூப்பரில் பிச்சாம்பாளையம் திரும்பிக்கொண்டிருந்த திரு. நல்லசாமி வழக்கம் போல பாலத்தினடியில் தன் வண்டியைக் கொண்டு வந்து நிப்பாட்டினான். `யாரோ ஒரு சார் வந்திருக்காரு நம்ம ஆபீஸுக்கு, யார்னு விசாரிச்சுட்டு வந்து தகவல் கொடுங்க பெல்லா’ என்று படுத்துக்கிடந்தவன் பேசியதை திரு.நல்லசாமி கண்டுகொள்ளாமல் தன்னிடத்தில் அமர்ந்தான். கோட்டரையும் தின்பண்டங் களையும் டம்ளர் தண்ணீர் கேன் என்று எடுத்து மணலில் வைத்த திரு.நல்லசாமி ‘சுந்தரீ’ என்றான். சுந்தரி அவன் எக்ஸெல் சூப்பர் டயர் மீது பிஸ் அடித்துவிட்டு அருகில் வாலை ஆட்டிக்கொண்டு இவன் எதிர்க்கே குந்த வைத்து அமர்ந்தது. தூரத்தில் படுத்துக் கிடந்த புதியவனை ஒரு பார்வையும், திரு.நல்லசாமியை ஒரு பார்வையும் பார்த்தது சுந்தரி.

”அவனெ எதுக்காக பாக்குறே நீயி? உனக்கு புரோட்டா கொண்டாந்திருக்கேன்! இன்னிக்கி ரெண்டு கோட்டர் வச்சிருக்கேன் தெரியுமா? ஒண்ணு திருப்பூர்ல ஓசில மத்தியானம் கெடைச்சுது! மத்தியானம் குடிச்சா வேனை யாரு ஓட்டுறது? அதான் குடிக்கல.”

“பெல்லா யார் அவரு? பொருளாதார வீழ்ச்சியில நாடு இருக்குது. இந்த நேரத்துல உலக பட்டாளியன்களே ஒன்று கூடுங்கள்! அப்படின்னு சப்தம் போடுறவரு! நம்மாளா அவரு? அவருக்கு ஒரு கொட்டாவி போட்டுக் காட்டிரு!” என்றான் எமண்டிஸ். அந்தச் சமயத்தில் சுந்தரி அவன் சொல்பேச்சு கேட்டு திரு.நல்லசாமிக்கு ஒரு கொட்டாவி போட்டுக் காட்டியது.

“யார்றா நீயி? சுந்தரி நாயைக் கொட்டாவி போடச் சொல்லி கெடுத்து வச்சிருக்கே? நாளைக்கி காலையில நான் வர்றப்ப நீயி இடத்தைக் காலி செஞ்சுட்டு ஓடிப் போயிருக்கணும்! இது சுந்தரியோட எடம்! அரசாங்கத்துகிட்ட பேசிட்டு இருக்கேன். பட்டா மாறுதல் சுந்தரி பேர்லதான் பண்ணணும்.”

“சார் ஐ ஆம் எமண்டிஸ்”

“நீ யாரா இருந்தா எனக்கென்னடா?’’

”நீங்க இந்த ஏழையிடம் இப்படி கோபித்துக் கொண்டு பேசக்கூடாது சார். அதுவும் பொருளாதாரம் வீழ்ச்சியடைஞ்சுட்டு இருக்குற இந்த நேரத்துல தப்புங்க சார்.”

“டேய், எங்கூட்டுச் செவுரும்தான் இன்னிக்கோ நாளைக்கோன்னு நிக்கிது! நான் உன்கிட்ட எதாச்சிம் சொன்னனாடா? சுந்தரி இந்தக் கிறுக்குப்பயல் கிட்ட நீ இருக்க வேண்டாம்! இப்பவே நான் உன்னை எங்கூட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடறேன்! இவனென்ன உன்கிட்ட கொட்டாவி போடச் சொல்றான், நீயும் பிரியமா கொட்டாவி போடறே! இதெல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சியா?” திரு.நல்லசாமி அரைக்கட்டிங் மட்டுமே அடித்திருந்த நிலையில் நாயை தன் எக்ஸெல் சூப்பரில் கால் வைக்குமிடத்தில் அமர வைத்து இரவோடிரவாக வீடு கூட்டி வந்தான்.

வீட்டின் முகப்புப் படலைத் திறந்து வண்டியை வாசலுக்கு உருட்டிக்கொண்டு போய் நிறுத்தினான். அப்போதும் சுந்தரி வண்டியிலேயே அமர்ந்திருக்க ‘இறங்கு’ என்றான். வீட்டின் முகப்பில் குண்டு பல்பு எரிந்துகொண்டிருந்தது. வாசலில் படுத்திருந்த டாமி புதிய வரவை நோக்கி உறுமிக்கொண்டு வந்தது.

“டாமி, சும்மாயிருக்கணும். இனிமேல் சுந்தரி இங்கதான் இருப்பா!” வாசலில் கிடந்த கட்டிலில் சரக்கு மற்றும் தீம்பண்டங்களை வைத்தான். ஒரு பலகையை எடுத்துக் கட்டிலின் குறுக்கே வைத்து அதன் எதிரில் கட்டிலில் அமர்ந்து அடுத்த ரவுண்டை ஆரம்பித்தான். பக்கத்து வீடுகளெல்லாம் இருளில் கிடந்தது. ஓமனா விழித்திருப்பாள் என்றாலும் எழுந்து வெளியில் வரவில்லை வீட்டினுள்ளிருந்து.

பாதி பாட்டில் சரக்கை டம்ளரில் ஊற்றி தண்ணீர் கலந்து ஒரே மூச்சில் எடுத்துக் குடித்தான். புரோட்டா பார்சலை எடுத்து பலகைமீது விரித்தான். உள்ளேயிருந்த ஆம்லெட்டைப் பிய்த்து வாயில் திணித்துக் கொண்டான். அப்போது போண்டாக்கோழி மீனா ‘கொக் கொக்’கென வாசலுக்கு ஓடி வந்தது.

“அடி மீனா! உனக்குத் தூக்கம் வரலியா? இன்னாரத்துல ஓடி வர்றே? பசியா இருக்குதா? இந்தா!’ என ஆம்லெட்டில் துளி கிள்ளி வீசினான். மீனா பட்டுப் பட்டெனக் கொத்தி வாசலில் ஆட்டிப் பிய்த்து விழுங்கியது. இத்தனைக்கும் டாமியும், சுந்தரியும் முன்னங்கால்களை ஊன்றி பின்னங்கால்களை மடித்து அமர்ந்தபடி இவனையே பார்த்துக்கொண்டிருந்தன. மீனா ஆம்லெட்டை விழுங்கிவிட்டு கட்டிலுக்குத் தாவியது. `ஒண்ணுமே திங்கலியா நீயி? இந்தக் கருமத்தையெல்லாம் தின்னீன்னா வயிறு கெட்டுப் போயி பீச்சீட்டே கிடப்பே நாளைக்கி! சரி என்ன வேணும் உனக்கு? புரோட்டா இருக்குது! சரக்கு இருக்குது! ஆம்லெட் இருக்குது! அட புல்பாயிலும் ஒண்ணு கிடக்குமே! எல்லாம் உங்க முட்டையில இருந்து போட்டதுதான் இந்த ஆம்லெட்டும் புல்பாயிலும்!” என்றவன் புரோட்டாவைத் துளி துளியாய்ப் பிய்த்து உள்ளங்கையில் வைத்து நீட்டினான் மீனாவுக்கு எதிர்க்கே!

பட்டு பட்டெனக் கொத்த, ‘`அட கைவெரலைக் கொத்தி புண்ணு பண்ணிப் போடுவியாட்ட இருக்குதா! கீழயே போட்டுடறேன் சாமி!;’ என்று கயிற்றுக் கட்டில் சந்தில் கீழே வீசினான். போண்டாக்கோழி மீனா கட்டிலிலிருந்து தாவி இறங்கிற்று. கட்டிலிலிருந்து இறங்கிய திரு.நல்லசாமி வண்டிக்கவரிலிருந்து இன்னொரு கோட்டரையும் எடுத்து மரப்பலகைமீது வைத்தான். முன் எப்போதோ ஆட்டுச்சாலையில் செருவி வைத்திருந்த சிரிஞ்சைத் தேடி எடுத்து வந்தான். அதை வாசல் பக்கெட் தண்ணீரில் விட்டு அலசிவிட்டு கட்டிலில் வந்தமர்ந்தான். கோட்டர் பாட்டில் மூடியைத் திருகி கழற்றி விட்டு சிரிஞ்சை அதனுள் செலுத்தி சிரிஞ்சினுள் சரக்கை இழுத்தான். அதை பத்திரமாக பலகை மீது வைத்துவிட்டு டம்ளரில் மேலும் சரக்கை ஊற்றி தண்ணீர் கலந்து குடித்தான். பின்பாக ‘`மீனா, மேல வாடி என் தங்கமே!’’ என்றான்.

மீனா போண்டாக்கோழி மீண்டும் கட்டிலுக்குத் தாவியது. தாவி வந்ததை கப்பெனப் பிடித்து மடியில் வைத்தான். சிரிஞ்சை எடுத்து மீனாவின் வாய் பிளந்து சரக்கைப் பீய்ச்சினான். சின்ன நாக்கை நீட்டி அது சப்புக்கொட்டியது. ‘`அட! சப்புக் கொட்டறியா? இன்னும் ஊத்துறேன்! அத்தனையும் உனக்குத்தாண்டி!’’ சிரிஞ்சில் உள்ள சரக்கு முழுதையும் போண்டாக்கோழி குடித்துவிட்டது. கீழே இறக்கி விட்டான். என்னதான் பண்ணுதுன்னு பார்ப்பமே! அது மீண்டும் புரோட்டாத் துகள்கள் கிடந்த பகுதிக்கே கட்டிலின் அடியில் செல்ல, ‘`ஓ பத்தலையாட்ட இருக்குது!’’ என்று மீண்டும் பாட்டிலில் இருந்து சிரிஞ்சில் சரக்கை உறிஞ்சிக்கொண்டான். மீண்டும் ‘மீனா’ என்று கூப்பிட, தெளிவாய் கட்டிலுக்குத் தாவி வந்தது.

இந்த முறை நேராக இவன் மடியிலேயே வந்து படுத்தது மீனா. ``இன்னும் உங்கா வேணுமா? நான் ஊத்துறேன். காத்தால ஓமனா கிட்ட சொல்லி என்னை மாட்டி வச்சிடக்கூடாது! என்ன சரியா!’’ என்றவன் மீண்டும் சிரிஞ்சிலிருந்த சரக்கை அதன் வாயில் துளி துளியாய்ப் பீய்ச்சி அடித்துக் குடிக்க வைத்து இறக்கி விட்டான். சிறிது நேரம் இறக்கி விட்ட இடத்திலேயே நின்ற போண்டாக்கோழி மீனா, தலையை ஒருமுறை சிலிப்பிக்கொண்டு குட்டி நாய் சுந்தரியை நோக்கி விரைவாய் ஓடி ரெண்டு கொத்துப் போட்டது!

சுந்தரி மிரண்டு ‘`கைக் கைக்’’கெனக் கத்திக் கொண்டு வாசலைச் சுற்றி வீட்டின் பின்புறம் ஓடியது. வெளிச்சத்தை விட்டு இருட்டுக்குள் சுந்தரி ஓடியதும் பின்னால் துரத்த விருப்பமில்லாமல் மீனா கோழி அடுத்து டாமியை நோக்கி விரைந்து வரவே டாமியும் ‘என்னதான் ஆச்சு இந்தக் கோழிக்கு?’ என்று மிரண்டு பின் வாங்கியது. டாமிக்கும் ரெண்டு கொத்து விழவே அது செய்வதறியாது வாசப்படிக்கு ஓடியது. திரு.நல்லசாமி சிரிக்கத்தொடங்கினான்.

‘`அடக் கருமம் பிடிச்ச மீனாவே இங்க வாடி! இன்னும் கொஞ்சம் குடிச்சுட்டுப் போயி படுத்துக்குவியாமா! உம்பட அலம்பலும் பெரிய அலம்பலா இருக்குமாட்ட!’’ என்றான். மீனா போண்டாக் கோழி இவனைத் திரும்பிப் பார்த்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism