“இந்தக் குமாரு பய எங்குட்டுத் தொலைஞ்சான்? மேற்கு வாய்க்கால்லெ தண்ணிவுட்டிருக்கான்...!”

“காங்கலெ!”

“வாய்க்கால் பக்கம் போயிருப்பானா?”

“அவனுக்கு அம்புட்டு கூறுவாடா இருக்கு!”

“அப்படினா, சும்மா தின்னுபோட்டுச் சுத்தச் சொல்லு...”

“சின்னவன அனுப்புவோம்.”

‘`அவனுக்கு அந்தப் போனை நோண்டவே பொழுது சரியா இருக்கும்!’’

‘`என்ன செய்யுறது?’’

‘`கழுதப்பய, அப்படி எங்கதான் போறானாம்?’’

‘`லைபரேரிக்குப் போறேன்னான்.!’’

‘`வௌங்கிப்போயிடும்!’’

‘`படிக்கத்தானே போறான்!’’

‘`பத்து வருசமாவா?’’

`‘பாவம். இவனும் எழுதிப் போட்டுக்கிட்டுத்தானே இருக்கான். எதுனா தெகைஞ்சாதானே?’’

‘`கருத்தா இருந்து ஒரு கொப்பைப் பிடிக்கத் துப்பில்லை!’’

‘`அம்புட்டுத்தேன்’’

‘`சரி, பொறவாக்குலெ, அந்தப் பெரிய மம்பட்டி கெடக்கும். எடுத்தா! நா போய் என்னான்னு பாத்துப்பிட்டு வரேன்.’’

‘`இருங்க. சின்னவனாவது வரானான்னு பார்ப்போம்.’’

‘`அதுக்குள்ள, தண்ணிய நிப்பாட்டிப் போடுவான். நாலு மடைதான். டக்குனு நிப்பாட்டிட்டானா?’’

‘`இப்பத்தான் வூட்டுக்குள்ள நொலஞ்சீங்க. ஒரு வாய் காப்பித் தண்ணியாவது குடிச்சுட்டுப் போங்க...’’

‘`அது கழுதைய, நீ வெக்கி றதுக்குள்ள விடிஞ்சிடும்!’’

‘`ஒரு கொதிதான்! பட்டுனு எறக்கிப்பிடுவேன்.’’

முருகேஸ்வரி மடியில் கிடந்த முறத்தையும் அகத்திக்கீரைக் கட்டையும் விருட்டென்று நகர்த்திவிட்டு, சேலையை ஒரு உதறு உதறி விசுக்கென்று எழுந்து அடுப்படிக்குள் சென்றாள். பெருமாள் வீதியைப் பார்த்து, நடைவாசலிலே உட்கார்ந்து விட்டான். அப்படியே வெளியே போகத் தோதாக இருக்கும். வீட்டிற்குள் போனால் கை கால் கழுவணும், எதற்கு. இப்படியே ஒரு வாய் காப்பித் தண்ணியை சுள்ளுனு வாயிலெ ஊத்திகிட்டுக் கிளம்பலாம். வெயில் வீட்டிற்குள் ஏறிவந்து கொண்டிருந்தது! தெரு காலை நேரத் தனிமையை விரித்திருந்தது! ‘கொய்யா... கொய்யா...’ என்று ராக இழுப்பு தூரத்தில் சன்னமாகக் கேட்டது. மெல்ல மெல்ல அது உருத்திரண்டுகொண்டிருந்தது. அது சின்னம்மாள் குரலாகத்தான் இருக்கும். பெருமாள் தெருவையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். காதைத் தீட்டினான். அவளாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். திடீரென்று மனதில் அப்படி ஒரு ஆவல்! சற்று நேரத்தில் அந்தக் குரல் நெருங்கி விட்டது. சின்னம்மாவேதான். சாயம் வெளுத்த ஊதாக் கலர் சேலையில் சின்னம்மா. வெளுக்காத அதே பளீர் சிரிப்பு! அவனைப் பார்த்து விட்டாள்.

“எதுக்கு இப்படி வெயில்லெ வெரச்சுகிட்டு ஒக்கார்ந்திருக்கீகளாம்?”

‘`நீ வருவேன்னுதேன்!’’

‘`ஆமா... வந்தப்ப வுட்டுப்போட்டு...’’ என்று அவன் எதிரில் வந்து நின்றாள்.

‘`அந்தச் சுமையை சித்த எறக்கி வையி...’’

‘`அதெல்லாம் எறங்குற சுமையில்லை’’ என்று அவன் கண்களைப் பார்த்தாள். அவனால் அவளைப் பார்க்க முடியவில்லை. ஒரு கணம் தடுமாறி, ‘`சித்த எறக்கிவையி, ஒரு செம்பு தண்ணி குடிச்சுட்டுப் போவ...’’ என்றான்.

“தண்ணீதானாக்கும்?”

‘`வேற என்ன வேணுமாம்?”

‘`கேட்டாலும் நீங்க தந்துடுவீங்களாக்கும்!”

“கேளேன்?”

“கேட்டப்ப, ஒண்ணையும் காணோம்!”

‘`கோக்குமாக்கா பேசாத?”

அதற்குள் ஏதோ சத்தம் கேக்கிறதே என்று வாசலை எட்டிப் பார்த்தாள் முருகேஸ்வரி.

‘`சின்னம்மாவா?”

“என்னக்கா, மாமனை வெயில்லெ இப்படிக் காயப் போட்டிருக்க?’’

“நீ வருவேண்டுதேன்.”

“அடுப்புச் ஜோலி ஆச்சா?’’

‘`இன்னும் காலைப் பாடே ஆகலெ.”

‘`என்ன விசேஷம்?’’

‘`ஒரேயடியா சோத்தைப் பொங்கி எறக்கணும். கொழம்பு இருக்கு; கீரை ஆயுறேன்.”

‘`சரி, பாருக்கா..’’

‘`ஒரு வா காப்பித் தண்ணி குடியேன்!”

‘`வேண்டாங்க...’’

‘`இதா, ஆச்சு! ஒங்க மாமனுக்கு வெச்சேன். நீயும் ஒரு வா வாயிலெ ஊத்திப் போ”

‘`சுமையை எறக்கினா, அப்புறம் நேரம் ஓடிடும்!’’

‘`எறக்கு, என்ன பெரிய கலெக்டர் உத்தியோகமா?’’ என்றான் பெருமாள்.

“ஒங்க மாமா பிரியமாச் சொல்றாரு பாரு...”

“அவரு, பிரியத்த எல்லாம் பாத்தாச்சுக்கா...”

முருகேஸ்வரி இரண்டு டம்ளர்களில் காபி கொண்டு வந்தாள். ஒன்றைப் பெருமாளிடம் நீட்டினாள். ஒன்றைச் சின்னம்மாள் கையில் கொடுத்தாள். சின்னம்மாள் தலையில் இருந்த கொய்யாப்பழக் கூடையைத் திண்ணையில் இறக்கி வைத்தாள். சுருமாட்டுத் துணியைப் பிரித்து முகத்தைத் துடைத்துக்கொண்டாள். சேலை முந்தானையைப் பிரித்து கழுத்தைச் சுற்றிலும் துடைத்துக்கொண்டாள். ‘`யப்பா வெயிலைப் பாரு... சித்திரை மாசம் கெனக்காவுலெ கொழுத்துது...’’ என்று டம்ளரை எடுத்து ஊதினாள். சூடு! ‘`இந்த வெயிலுக்கு இப்படி சூடா குடிச்சாதான் நல்லதாம். ஜில்லுனு குடிச்சமுண்டா தொண்டை பொத்துப் போயிடுமாம்...’’ என்று காபியை ஊதி ஊதி அண்ணாந்து வாயில் ஊற்றினாள்.

‘`சும்மா குடி...” என்றாள் முருகேஸ்வரி.

“தம்பிங்கள காணோம்?”

“வெளியிலெ போயிருந் தாங்க...’’

“பெரியவரு?”

“அவனுக்குத்தேன் இன்னும் ஒண்ணும் அமையலெ!”

“அது அதுக்கு நேர காலம் அமையணும்கா!”

“அதானே...”

“இந்தா மேலத் தெருவுலெ நம்ம பொன்ராஜ் மவே; எத்தனை வருசம்? சும்மாவே கைலிய மடிச்சுக் கட்டிக்கிட்டு தெருவுலெ திருஞ்சாப்புலெ. இப்ப தூரம் தொலைவெட்டுல.... கொள்ள காசு தரானாம்”

“எந்தப் பொன்ராஜ்?”

“மாடுமுட்டி மவன்.”

“ஓ அவனா?”

“பார்ப்போம். வயசும் ஏறிக்கிட்டே போவுது...”

``எங்கய்யாவ வுட்டு, தோட்டத்துக்காரவுகிட்டவும் ஒரு வார்த்தை போட்டு வெப்போம். இஞ்சினீயரு தானேக்கா?”

“ம்... பி.இ.”

“அவுக பெரிய கம்பேனி வெச்சிருக்காவ...”

“சொல்லுப்பா...”

“கலங்காதீய... எல்லாம் வெடிப்பா நடக்கும்”

“ஒன்னோட வாக்கு பலிக்கட்டும்!”

“பெரிசுக்காவது, எங்க சைடுலெ முடிங்க.”

“எப்படி எழுதியிருக்கோ...’’

“அத சொல்லுங்கோ’’ என்று பெருமாளை ஓரக்கண்ணால் பார்த்தாள் சின்னம்மாள். அந்தப் பார்வையை முழுவதுவும் வாங்காததுபோல காபி டம்ளரைக் கீழே வைக்கக் குனிந்தான். சின்னம்மாள் கூடையில் கைவிட்டு நல்ல பழமாக நாலு கொய்யாப் பழங்களைத் தேடி யக்கா... அம்புட்டுத் தித்திப்பூ... கடிச்சுப் பாருங்க...” என்று முருகேஸ்வரியிடம் நீட்டினாள். ‘`எதுக்கு இது... யாவாரத்துக்குக் கொண்டு போறத...’’ என்று தயக்கத்தோடு வாங்கிக்கொண்டாள்.

பெருமாளுக்கு முதலில் வீரசின்னம்மாளைத்தான் கேட்டார்கள். ரொம்பவும் நெருங்கி நெருங்கி வந்தார்கள்! எப்படியும் நல்ல தாக்கல் வரும் என்று ஒரு வருசமோ, ரெண்டு வருசமோகூடக் காத்திருந்தார்கள்.

சின்னம்மாள் அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும் நல்ல முகக்களை! செதுக்கினாற்போல் முகம்; சற்று நகர்ந்த பின்பும் திரும்பிப் பார்க்கச் சொல்லும் முகம்! நல்ல குணவதி.

வேலைக்காரியும் கூட; பெருமாளும் ஒரே நோக்கமாகத்தான் இருந்தான். ‘ஏறிப் பேசி முடிங்க’ என்றுதான் சொன்னான். ‘உள்ளூர்லெ பொண்ணு எடுத்தா மதிப்பு இருக்காது. குடும்பமும் வெடிப்புனு சொல்ல முடியாது! பெரிசா செய்முறை எல்லாம் செய்ய மாட்டாங்க. வீடும் ரொம்பச் சின்னது. ஒண்ணுக்கு ரெண்டுக்கு புழங்குறதுக்குக் கூடச் சிரமம்; அப்புறம் பின்னாடி வருத்தப்படப்படாது!’ என்று ஆள் ஆளுக்கு ஒன்றைச் சொல்லி அவன் மனசைத் திருப்பி விட்டுவிட்டார்கள்.

அதற்குப் பிற்பாடுதான் முருகேஸ்வரியை மார்க்கையன் கோட்டையிலிருந்து கட்டிக்கொண்டு வந்தான். அப்புறம்தான் சின்னம்மாளுக்குக் கிழக்குத் தெருவுலே சம்பந்தம் ஆனது. சிறிது காலம் சடவு. பேச்சு வார்த்தை கிடையாது. அப்புறம் எப்படியோ ஒண்ணாகிவிட்டார்கள். இந்தக் கதையெல்லாம் முருகேஸ்வரிக்குத் தெரியும். இதையெல்லாம் கேட்ட பிற்பாடுதான் சின்னம்மாள்மீது அவளுக்குப் பிரியம் கூடிற்று! அவள் குரலைக் கேட்டதும் வாசலுக்கு ஓடிவந்துவிடுவாள். அவளுக்கு ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு வியாபாரம்! கொய்யா, மாம்பழம், வாழைப்பழம், எளந்தப் பழம். ஆனால் அவள் ‘நவ்வாப்பழம்’ விற்றுவரும்போதுதான் ‘அம்சமா’ இருப்பாள். இந்தத் தெருப்பக்கம் வரும் போதெல்லாம், முருகேஸ்வரி அவளுக்கு வீட்டில் இருப்பது ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டுபோய்க் கொடுப்பாள், இல்லை குடிப்பதற்குக் கொடுப்பாள். அவளும் அப்படித்தான், கூடையிலிருந்து எதையாவது எடுத்து நீட்டாமல் போக மாட்டாள். வீட்டில் ஏதாவது ஜோலி தொந்தரவாக இருந்தால்கூட வாசலில் வைத்து விட்டுப் போவாள். வியாபாரம் மந்தமாக இருந்தாலோ, வெயில் ஜாஸ்தியாக இருந்தாலோ முருகேஸ்வரியோடு சிறிது நேரம் உக்கார்்ந்து, எதையாவது பேசிவிட்டுப் போவாள். அதில் இருவருக்குமே ஒரு நிறைவு!

பெருமாள் மண்வெட்டியைத் தூக்கிக்கொண்டு, வயலுக்குக் கிளம்பினான். யானைத் தோப்பு தாண்டிச் சற்று தூரம் நடந்தால் வயல் வந்துவிடும். கிழக்கு மடையை ஒட்டினாற்போல் ஒரு ஏக்கர். மூன்று போகம்! பெருமாளுக்கு பி.யு.சிக்குப் பின்பு படிப்பு ஏறவில்லை. விவசாயத்தில் இறங்கிவிட்டான். ஐயாவின் காலத்திற்குப் பின்பு ‘பங்கு-பாகம்’ பிரித்தலில் பெருமாளுக்கு இந்த வயல் வாய்த்தது. சிறு வயதில் இருந்தே அவனுக்கு இந்த வயல் பிடிக்கும். காரணம் வயல் அல்ல; அதன் விளைச்சல் அல்ல; வயலுக்குப் போகும் வழி. இரண்டு பக்கங்களிலும் அடர்ந்த மரங்கள். தென்னை, மா, புளி என்று மரங்கள். சற்று தூரம் நடந்தால் போதும். ‘யானைத் தோப்பு’ தொடங்கி விடும். இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமாக நீண்ட தோப்பு. தோப்பின் ஒரு கரை வாய்க்கால்; எப்போதும் சலசலவென்று ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்கால்; யானைத் தோப்பு மரங்களின் அடர்த்தியில் இருண்டு கிடக்கும்; கிளி, கோட்டன், குருவி இன்னும் என்ன என்னவோ பறவைகள் குரல் எழுப்பிக்கொண்டுதான் இருக்கும். கிணற்றுப் பக்கம் இருக்கும் அரச மரத்தில்தான் பசுங்கிளிகளின் கூட்டம். தோட்டத்துக்குள் கால் வைத்துவிட்டால் போதும்; ஈர வாடையும் மா மரங்களின் பால் வாடையும்; விதவிதமான பறவைகளின் வாசமும். பெருமாள் இங்குதான் வந்து கிடப்பான்.

போடி, குமுளி, தேக்கடியிலிருந்தும் கேரளாவிலிருந்தும் யானைகளை ஓட்டி வருகிறவர்களின் ‘தங்கல்’ளுக்கு இந்த செட்டியாரின் தோட்டத்தைத்தான் தேர்வு செய்வார்கள். ஒன்று மாத்தி ஒன்று என்று எப்போதும் அந்தத் தோட்டத்தில் ஒரு யானை நின்றுகொண்டிருக்கும். அபூர்வமாக எப்போதாவது இரண்டு யானை! பத்து இருபது நாள் யானை தங்கும். செட்டியாரும் மனம் கோணாமல் செய்வார். தென்னை மட்டைகளை வெட்டிப் போடுவார். ‘கோடாப்பில் பழுத்த’ வாழைத்தாறுகளை ஒன்றிரண்டு தருவார். பாகனுக்கும் படுக்க வசதி. மூங்கில் மரத்திலான குடில்கள்; இரண்டோ மூன்றோ இருக்கின்றன. பம்பு செட் மோட்டார் அறைகூட விசாலமானது தான். படுக்க, குளிக்க, பொங்கிச் சாப்பிட, யானைகளைக் குளிப்பாட்ட பக்கத்திலே வாய்க்கால் ஓடுகிறது. இதைவிட வேறு என்ன வேண்டும்! செட்டியாரும் ஏதோ அந்த ‘பிள்ளையாருக்கு’ச் செய்வது போலவே இதைச் செய்து கொண்டிருந்தார்.

செட்டியாரின் இந்தத் தோப்பில்தான் சின்னம்மாளின் அப்பா வீரையன் வேலையாளாக இருக்கிறார். அவருக்கு இரவு, பகல் என்று எதுவும் தெரியாது. எதையாவது கொத்திக் கொண்டோ, வெட்டிக் கொண்டோதான் இருப்பார். கூலிக்குச் செய்வதுபோலவே எதையும் செய்ய மாட்டார். தன் சொந்தத் தோட்டம் போலவே உரிமை எடுத்துக்கொள்வார். அவருக்கு இரவு அங்குதான் படுக்கை. கிணத்தடியிலே ஒரு குடிசை. கயிற்றுக்கட்டில். டிரான்சிஸ்டர் ரேடியோ. இப்போது கலைஞர் கொடுத்த டிவியை வைத்திருக்கிறார். அவர் அறையின் ஒரு மூலையில் மாம்பழம், பப்பாளி, கொய்யாப் பிஞ்சுகள், அரி நெல்லி என்று குவிந்து கிடக்கும்; எல்லோருக்கும் எடுத்து எடுத்து சாப்பிடக் கொடுப்பார். பளபளவென்று ஒரு கத்தி வைத்திருக்கிறார். கொடுக்காப் புளி சீசனில் கூடை கூடையாக வெளியேறும். பகலில் சின்னம்மாளும் அவளின் அம்மாவும் இங்குதான் இருப்பார்கள். ஏதாவது ஒரு வேலை இருக்கும்; காலையில் பொங்கி எடுத்துக்கொண்டு வந்தால், இரவு தான் கிளம்புவார்கள்; இரவுக்கு வீரை யனே இங்கு வடித்துக்கொள்வார். சின்னம்மாள் பெரும்பாலும் உதிர்ந்த மாம்பிஞ்சுகளைப் பொறுக்கிக்கொண்டிருப்பாள். தென்னை மட்டை பொறுக்கு வாள். இல்லாவிட்டால் வாழை நாரை உரித்து உரித்துக் காயப் போடுவாள். தென்னை ஓலையில் ‘கிடுகு’ பின்னுவாள். அவளுக்கு ஆறோ ஏழோதான் படிப்பு. பெருமாளும் வயலுக்குப் போகிறேன் என்று பெரும்பொழுதை இந்தத் தோப்பில்தான் கழிப்பான்.

அப்பாவைக் கண்டதும் அன்று வீரையன் அதிகமாக உற்சாகம் கொண்டார். குத்த வைத்து உட்கார்ந்துகொண்டு ஏதோ வேலை செய்தவர் எழுந்துகொண்டார். ண்டார்.

பெருமாள் இப்போதும் யானைத் தோப்பைத் தாண்டும்போது, அவனை அறியாமலே பார்வை அந்தத் தோப்புக்குள் செல்லும். இப்போதும் ஒன்றும் குறைவில்லை என்றாலும் முன்புபோல் இல்லை. முன்புபோல் அடர்ந்த குளுமை இல்லை. வெயில் உள்ளே நுழைந்து, யானை போலப் படுத்துக்கிடக்கிறது. யானை வரத்தும் குறைந்துவிட்டது. எப்போதாவதுதான் வருகிறது. செட்டியார் காலமாகிவிட்டார். அவர் மகன் சின்ன வயசிலே அமெரிக்காவுக்குப் போய் விட்டார்; ஒரே மகன்தான்; அவர் இந்தப் பக்கம் வருவதே இல்லை. அப்படியே வந்தாலும் மதுரையில் ஹோட்டலில் தங்கிக்கொண்டு, வீரையனை மட்டும் அங்கு வரச் சொல்கிறார். அவர்களுக்கு இந்தக் கணக்கு வழக்கெல்லாம் பெரிசாக இல்லை. ரொம்பப் பெரிய ஜோலி தொந்தரவு அவர்களுக்கு. மிகப் பெரிய சாப்ட்வேர் கம்பெனி நடத்துகிறார்கள். யானைத் தோப்பைப் பொறுத்தவரை வீரையன்தான். அவர்தான் இன்னும் இருக்கிற மரங்களோடும் மண்ணோடும் புழங்கிக்கொண்டிருக்கிறார்.

வீரையன் பெருமாளின் அப்பாவைவிட மூப்பு. நான்கு வயது மூப்பு என்பார். பார்த்தால் அப்படிக் கணிக்க முடியாது. அப்பா போய்ச் சேர்ந்துவிட்டார். ‘அந்தச் சம்பவத்திற்கு’ முன்பு வரை அப்பா வீரையனோடு யானைத் தோப்பில்தான் இருப்பார். வெயில் தணிகிறவரை அங்குதான். கோழி கூப்பிட வீட்டை விட்டுக் கிளம்புவார். வயல் வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்புவார். இருப்பதை சாப்பிட்டுவிட்டு யானைத்தோப்பு. வெயில் இறங்கியதும் வயல். பொழுது சாயவும் வீடு. இதுதான் அவரின் வழக்கம். அப்பா உட்கார்ந்திருக்கும் பட்டியக் கல் இன்னும், அந்தக் கிணத்தோரம் அப்படியேதான் இருக்கிறது! வீரையன் அப்பாவிடம் மாங்காய், தேங்காய், எழுமிச்சை, நெல்லி என்று ஏதாவது ஒன்றை ஓலைக்கொட்டானில் போட்டுத் தந்துவிடுவார். திடீர் என்று பெரிய பலாப்பழத்தைத் தோளில் வைத்துத் தூக்கிக்கொண்டு வருவார்.

பெருமாளும் அடிக்கடி தோப்புக்குள் வந்து விளையாடுவான். மரம் ஏறுவான். அணில் பிடிப்பான். கிணற்றில் இறங்கி, தென்னை ஓலையில் ‘சுருக்கு’ மாட்டி, தவளைகளைப் பிடித்துக் கரையில் போட்டு விளையாடுவான். அப்புறம் அதையெல்லாம் விட்டுவிட்டு வீர சின்னம்மாளை ‘வேடிக்கை’ பார்க்கத் தொடங்கினான். சில நேரம் ஜாடையாகப் பேசுவான். சில சமயங்களில் நேராகவே பேசுவான். சில சமயங்களில் தரையில் சித்திரம் தீட்டி, பரமபதம் ஆட்டம்கூட நடக்கும். இதையெல்லாம் வீரையன் பார்த்துக் கொண்டுதான் இருப்பார். இதையெல்லாம் சேர்த்து மனதில் ஒரு எண்ணத்தைக் கூட்டி வைத்துக்கொண்டு, அது பழுப்பதற்கான தருணத்தைத் தேடிக்கொண்டிருந்தார். அன்று அப்பா வயலில் உரம் போட்டுவிட்டு, மோட்டுச் சுப்பையாவுடன் திரும்பிக்கொண்டிருந்தார். நல்ல வெயில். உரச்சாக்கையும், மரக்காலையும் அவனிடம் கொடுத்துவிட்டு, வாய்க்காலில் ஒரு குளியல் போட்டார். கட்டியிருந்த வேட்டியைத் தண்ணீரில் நனைத்து கும்மிப் பிழிந்தார். நெஞ்சளவு நீருக்குள் நின்றுகொண்டு கட்டியிருந்த லங்கோடுவை உருவி எடுத்து, அதையும் அலசிப் பிழிந்து ‘லபக்’கென்று மேடேறிக் கட்டிக் கொண்டார். வேட்டியைத் தலைக்குமேல் பறக்க விட்டு உலர்த்திக்கொண்டே ‘யானைத் தோட்டத்திற்குள்’ சென்றார்.

அப்பாவைக் கண்டதும் அன்று வீரையன் அதிகமாக உற்சாகம் கொண்டார். குத்த வைத்து உட்கார்ந்துகொண்டு ஏதோ வேலை செய்தவர் எழுந்துகொண்டார். அப்பாவும் ஏதோ பேசிக்கொண்டே அந்தப் பட்டியக் கல்லில் போய் உட்கார்ந்துகொண்டார். வேட்டியை இடுப்பில் சுற்றிக்கொண்டார். வெளியில் வெயில் சுட்டெறிக்கிறது. உள்ளே அதன் சுவடே தெரியவில்லை. வீரையன் அப்பாவிடம் பேச்சுக் கொடுத்தார். அந்தப் பேச்சும் அதன் தொனியும் வழக்கம்போல் இல்லை. ஏதோ ஒரு விசேஷம் போல் தெரிந்தது. அப்பா பேச்சு ஊர் உலகத்தைச் சுற்றிக்கொண்டு திரிந்தது. வீரையன்தான் கையிறு போட்டு நிறுத்துவதுபோல நிறுத்தினார்.

“தம்பிக்குப் படிப்பு முடிஞ்சுடுச்சா?”

“படிடான்னா கேட்டாத்தானே?”

“பின்னே?”

“விவசாயம் பாக்கப் போறேங்கிறான்!”

“சரி. அது அதுக தோதுதான்.”

“கட்டுமா?”

“என்னாங்கட்டும்? இந்தக் காலத்துப் பிள்ளைங்க நோக்கத்துக்கு விடும்படியாத்தானே இருக்கு!”

“அது அதுக பாடுகளை அது அதுக பாத்துக்கிட்டாத்தான். இந்தா ஆச்சு. நம்ம காலம் அம்பட்டுத்தேன்.”

“அது உள்ளதுதேன்.”

“முன்னமாதிரியா காலம் கெடக்கு? தண்ணிப்பாடே பெரும்பாடு. வெதச்சத வீடு கொண்டுவரதுக்குள்ள பெரும்பாடு...”

“தொழிலு?”

“நியாயம் கெட்டுப்போச்சு. படிச்சு எங்குட்டுனா போயிட்டாத்தேன்.”

“அது உத்தமம்.”

“இந்தா செட்டியார் மகனைப் பாத்தீலெ. அவகளுக்கு இல்லாத வெள்ளாமையா?”

“வாஸ்தவம்தான்”

“பின்ன சொல்ற?”

“அது அதுக கூறுவாடா பொழச்சுக்கிட்டாத்தேன்.”

“காலமும் முன்னமாதிரி இல்லை.”

“அதுகளுக்கு ஒரு கால்கட்டைப் போட்டுட்டா அப்புறம் நம்ம பாடு நிம்மதி!”

வீரையன் அப்பாவின் முகத்தைப் பார்த்தார். அப்பாவே வீரையனுக்குத் தோது பண்ணிக் கொடுத்துவிட்டார். வேலை சுலுவு! வீரையன் எச்சிலைக் கூட்டி விழுங்க, அதை ஒட்டி ஏதேதோ பேசிவிட்டு மெல்ல தயங்கித் தயங்கி விசயத்துக்கு வந்தார்.

“நம்ம வூட்டுலையும் ஒண்ணு இருக்கு. பொட்டப் புள்ள.”

‘`ம்’’

`‘உழைக்கிறது அதுக்குத்தேன். செட்டியாரும் நம்மளெ சும்மா விட்டுட மாட்டார்.”

அப்பா புரியாமல் எங்கோ பார்த்தார்.

“ஊர்லெ உண்டானத செய்யப் போறோம். ஒத்தப்புள்ள. சும்மாவா வுடப்போறோம்!”

“என்னா சொல்ற வீரா?”

“ஒங்க மனசுலெ என்னா இருக்குன்னு யார் கண்டா?”

“எங்க வரேன்னு தெரியுது!”

“சும்மா ஒரு கோடி காட்டலாம்னு.”

“பேச்சே சரியில்லை...”

“தப்பிதமா... சொல்லலை. உங்க மேலே உசந்த மரியாதை. அதான் மனசுல இருந்ததை ஒடச்சுட்டேன்.”

“மனப்பால் குடிச்சுக்கிட்டுத் திரிய வேண்டாம்...”

“அதுகளும் ஒண்ணுக்குள்ள ஒண்ண நெனச்சுக்கிட்டுத் திரியுறாப்புலெ தெரியுது. வெளிச்சமா இல்லைன்னாலும் என்னான்னு காங்க மாட்டமா?”

“ஓஹோ...! அப்படிச் சிக்கவைக்க கொக்கி போடுறீயாக்கும்...”

“என்ன அப்படி நெனச்சுப்பிடாதீங்க..”

“என்னடா எலி அம்மணமா ஓடுதேன்னு பாத்தேன்...”

“அப்படியெல்லாம் பேசாதீக. உங்க விருப்பம் என்னான்னு அறியலாம்னுதேன்...”

“பெருமைக்கு மாவு இடிச்சு எருமைக்கு வெச்ச கதையாவுள்ள இருக்கு...” என்று அப்பா எழுந்து கொண்டார். வெடவெடவென்று தோப்பை விட்டு நகர்ந்தார். அவர் பல் நறநறவென்று கடிபடுவதையும், முகத்தில் ரத்தம் ஏறிச் சிவப்பதையும் வீரையன் பார்த்தார். ‘இப்ப நாம என்ன தப்பிதமா கேட்டுட்டோம்’ என்று நினைத்தாலும் உள்ளே பதற்றம் கூடிற்று. அவரை சமாதானப்படுத்தி நிறுத்தக்கூடத் தோன்றவில்லை. அப்பா அதே கோபத்தோடு வெளியேறி வேலிப் படலுக்கு வந்தார். ஆள் இல்லாத அந்த ரோட்டில் ‘அசிங்கமாக’ ஏதோ பேசினார். பின்பு காறி அந்த வேலிப் படலில் துப்பினார். இத்தனையும் வீரையன் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். ‘நாம் என்ன குறைந்துவிட்டோம்?’ உள்ளூராக இருந்தாலும் உறவுமுறைதான் வருகிறது. என்ன, அவருக்குக் கொஞ்சம் நிலபுலன் இருக்கு. வீரையன் செட்டியாரிடம் கூலிக்கு இருக்கிறார். இதுதான் அப்பாவைச் சுட்டிருக்கும். அதற்குப் பிற்பாடு, வைராக்கி யமாக பெருமாளுக்குப் பெண் தேட ஆரம்பித்தார். அதில் அவருக்கு வெற்றிதான். அதற்குப் பிற்பாடு அவர் சாகும் வரை இந்த ‘யானைத் தோப்புக்குள் நுழையவே இல்லை!’

பெருமாள் வயலிலிருந்து திரும்பும்போது ‘யானைத் தோப்பில் வீரையன் இலை தழைகளையெல்லாம் திரட்டிக் குவித்து, அதில் தீ வைத்து எரித்துக்கொண்டிருந்தார். குபுகுபுவென்று புகை பொங்கி எழும்பிக் கொண்டிருந்தது. அந்தப் பகுதியே புகை மூட்டமாக இருந்தது! பெருமாள் சற்று நின்று தோப்பைப் பார்த்தான். உருவங்கள் தெளிவில்லை. உள்ளே ஒரு நடை போய்ப் பார்த்து வரலாம் என்று நுழைந்தான். வீரையன் ஆள் அரவத்தைக் கண்டு கொண்டார். ‘`யாரது?’’ என்று குரல் கொடுத்தார். என்ன கூர்மை!

“நான்தான்...”

“நான்தான்னா?”

“பெருமாளு...”

“வாங்க, இப்படி உள்ர வாங்க...”

வீரையன் தளர்ந்துவிட்டார். உடம்பு வத்திப் போய் எலும்புக்கூடுதான் தெரிந்தது. குரல் கணீர்! எப்படியும் எம்பதுக்குமேல் இருக்கும்.

“தண்ணிகட்டிட்டு வரீங்களா?”

“ஆமாம்.”

“முன்னமாதிரி ஏற மாட்டேங்குது. மூணு மடை தாண்டுறதுக்குள்ள பெரும்பாடு...”

“ரொம்ப செரமம்தான்!”

“சட்டுனு அடைச்சுவேற போடுறான்...”

“அதான் ஓடியாந்தேன்.”

“மாம்பிஞ்சு கெடக்கு, கொண்டுபோறீகளா, ஊறுகாய் போடுவீங்க?”

“இருக்கட்டும்.”

“முன்னமாதிரி, இப்ப காப்பு பிடிக்கிறதில்லை. நம்மாளையும் இதுக்குப் பண்டுதம் பாக்கவா முடியுது?”

``செட்டியார் மவன்?”

‘`அவுகளுக்கு இதுதானா... யே... யப்பா எம்புட்டுச் ஜோலி தொந்தரவு!’

‘`அமெரிக்காவா?’’

‘`ஆமா. பெரிய கம்பெனி. நம்மூர்லெ பாதியளவு இருக்குமாம்!’’

“அப்படியா...!”

‘`என்ன அப்படியாங்குறீங்க... கொள்ள சோலிங்கய்யா... ரொம்ப உசந்திட்டாங்க... அவுக மனசு மாதிரியே...”

“ஓ...!”

‘`நூறு ஆள் வேலை பாக்குதாம்... நம்ம வூட்டுலெ மூத்தவரு என்ன படிப்பு?”

“இஞ்சினியர்தான்.”

`‘அவுகட்ட சொல்லிட்டாப் போதும். ஒரு சிரமமும் இல்லை. நான் சொல்றேன்.”

“ரொம்ப உபகாரமா இருக்கும்.”

“மதுரைக்காரவுகமூலியமா சொல்லிடுவோம். அப்படியே இழுத்துக்குவாக...”

“சும்மாவே சுத்திக்கிட்டு கிடக்கான். நமக்குச் சங்கடமா இருக்கு...”

“ஒண்ணும் கவலைப்படாதீக. நானாச்சு!”

“நிம்மதியாப்போவும்.”

“நான் செய்யுறன். உங்களுக்குச் செய்யாமலையா...’’

சிறிது நேரம் வீரையன் ஒன்றும் பேசவில்லை. ஏதோ நினைவில் ஆழ்ந்துவிட்டார். பெருமாள்தான் அந்த மௌனத்தை உடைக்கும் விதமாக ‘`அப்ப எங்க இங்குட்டு வரப் போறாக..!” என்றான்.

“செட்டியார் என்னை ஒரு நாளும் வேலைக்காரன்போல நடத்தினது இல்லை. எனக்கு நெனவு தெரிஞ்சப்ப இருந்து இங்குதான் கிடந்தேன்.”

“வாஸ்தவம்தான்.”

‘`தோ தெரியுது பாருங்க குட்ட புளி. அதுல தான் தூரி கட்டி செட்டியார் மவனை ஆட்டி விட்டுக்கிட்டு இருப்பேன்.”

“ம்.”

“யானைன்னா அவகளுக்கு அம்புட்டுப் பிரியம். வூட்டுக்குப் போயி தூக்கியாந்திடுவேன். யானை போகும் முட்டும் இங்கயே வெச்சிருப்பேன். இப்ப வந்தப்பகூட அவுக இத சொல்லிக் காட்டினாங்க...”

“அப்படியா?”

“தங்கமானவங்க...”

“இப்ப இந்தத் தோட்டம் எம்புட்டுக்குப் போவும்?”

வீரையன் பதில் பேசவில்லை.

‘`எப்படியும் ரெண்டு மூணு கோடி?’’

“மதுரைக்காரவுகமூலியமா ஆள் வந்து பாத்துச்சு!”

“எம்புட்டுக்குக் கேட்டான்?”

“நாலு, அஞ்சுனாக்கூட முடிங்கன்னான்!”

“கோடி?”

“ம்.”

“போகும். எப்படியும் இருபத்து அஞ்சு ஏக்கர் இருக்குமுள்ள?”

“முப்பத்தி நாலு சொச்சம்! அந்தாக்குல மூக்கையா ஆசாரி தோட்டம் வரை, இங்குட்டு பரமத் தேவர் தோட்டம் வரை. மேற்க கொஞ்சம் புறம்போக்கு வேற...”

“யே... யப்பா...”

“நம்மாள எங்க இப்ப பாக்க முடியுது? யாவாரிங்களுக்கு குத்தகைக்குப் பேசிவுட்டு, அவுக கொடுக்கிறதைக் கணக்கு வெச்சு மதுரைக்காரவுக மூலியமா அனுப்பிக்கிட்டு இருந்தேன்...”

“ஒங்களுக்கு எதுனா...?”

வீரையன் அதற்குப் பிற்பாடு ஒன்றும் பேசவில்லை. அவர் கண்களில் ஈரம் தளும்பிற்று! முகமே பழுத்துக் கனிந்துபோயிற்று. ‘`செட்டியார் ஐயா காலம்தொட்டு நானும் எதுவும் கேக்கிறதில்லை. அவுகளும் கேக்கும்படியா வெக்கிறதுமில்லை. எல்லாம் தெய்வப் பிறவிங்க...” என்று கலங்கிவிட்டார். பெருமாளுக்கு ஏன்டா இதைக் கேட்டோம் என்றுகூடத் தோன்றிவிட்டது!

“சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டேன்.”

வீரையன் ஒரு கணம் இப்பாலும் அப்பாலும் திரும்பிப்பார்த்தார். ஒருவரும் இல்லை. சிறிது நேரம் மௌனம். அவர் நெஞ்சுக்கூடு மேலும் கீழும் இறங்கிற்று. பெருமாளுக்கு மட்டும் கேட்கும் படியான தனிந்த குரலில் பேசினார்.

“போன வருசம் வந்தாக பாத்தீகளா?”

“சாத்தா கோயில் விசேஷத்தப்ப...”

“ம்”

“ஒங்ககிட்ட மட்டும்தான் சொல்றேன்.”

“சொல்லுங்க.”

“வெளியிலெ கலந்துக்க வேண்டாம்.”

“ரொம்ப உசந்த மனுசங்கையா” என்று வானம் பார்த்துக் கைகளைக் குவித்தார். அவர் குரல் பரவசத்தில் நடுங்கிற்று. கையும் உடம்பும் கூட ஆடிற்று.

“என்ன செஞ்சுபோட்டார் தெரியுமா?”

பெருமாள் அவருக்கு அருகில் சென்று, காதைத் தீட்டினான்.

“வெளியிலெ சொல்ல வேண்டாம்.”

“மாட்டேன்.”

“கார் வெச்சு பத்திர ஆபீசுக்குக் கூப்பிட்டுப் போயி இந்தத் தோட்டத்தை என் பேருக்கு மாத்தி எழுதிக் கொடுத்துட்டுப் போயிட் டாங்க. நான் சின்னப் புள்ளையா இருக்கிறப்ப இருந்து, இந்தத் தோட்டத்துலெதானே ஒழைச்சீங்க. இது ஒங்ககிட்டதான் இருக்கணும்னு அப்படியே தூக்கிக் கொடுத்துப் பிட்டுப் போயிட்டாங்க...”

பெருமாளுக்கு அப்படியே குதுகுதுவென்று வந்தது. உடம்பில் சூடு ஏறி, காய்ச்சல் கண்டது போல ஆயிற்று. நிஜமா... நிஜமா என்று கேள்வி வந்தது. நா எழவில்லை. அப்படியே மூச்சடைத்துப் போயிற்று!

மேற்கொண்டு எதுவும் பேசமுடியாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான். கிளம்பும்போது மட்டும் இழுப்பை மரத்தடிக்குப் போனான். அவனும் வீரையன் மகள் சின்னம்மாளும் மணிக்கணக்காக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த இடம். சிறிது நேரம் அந்த நிழலில் நின்றுவிட்டு வெளியேறினான். சற்று தூரம் நடந்த பின்பு ஒருமுறை அந்த `யானைத் தோப்பை’த் திரும்பிப் பார்த்தான்.