சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

சிறுகதை: உப்புமா கம்பனி

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

ராஜ்குமார்

திர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள்!

காலை தினசரியில் ராசிபலன் படிக்கும் போது அசட்டுத்தனமான திருப்தி கிடைத்தது. சினிமா செய்திகள், புதிதாய் வரும் படங்கள், பேட்டிகள், `அப்படியா?’ என்ற தலைப்பில் வரும் நடிகர், நடிகை கிசுகிசுக்கள் எல்லாம் படித்து விட்டு, முன்னும் பின்னும் புரட்டும் போதுதான் அந்தப் பெட்டிச் செய்தியைப் பார்த்தேன்.

ஸ்ரீ கருமாரி அம்மன் மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம்.

‘மாஸ்டர் செல்வா’

இப்படத்திற்கு நடிகர்கள்/ நடிகைகள், உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர்கள் தேர்வு நடைப்பெறுகிறது.

திறமையுள்ளவர்கள் கீழ்க்கண்ட முகவரியை அணுகவும்.

15/9, 8-வது தெரு, அன்பு நகர்,

வளசரவாக்கம், சென்னை

திறமையுள்ளவர்கள் என்ற வார்த்தை மட்டும் சற்றுப் பெரியதாக இருந்தது. நான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்.

சிறுகதை: உப்புமா கம்பனி

நான் ஏன் துள்ளிக் குதித்தேன் என்பதைத் தெரிந்துகொள்ள, என்னைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.

சினிமாத் துறைக்கு சம்பந்தமே இல்லாத அரசாங்க ஊழியர் குடும்பத்தில் பிறந்தவன் நான். தந்தை என்னைக் கணிதப் பேராசிரியராக்கும் கனவில் இருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக மீசை முளைக்கும் பருவத்தில் காதல் வந்தது. காதல் வந்ததால் கவிதைகள் வந்தன. கவிதைகள் எழுத ஆரம்பித்த பிறகு என் கணித அறிவும், தந்தையின் கனவும் கெட்டுத் தொலைந்தது.

பள்ளியில் கவிதை, கதைப் போட்டிகளில் பரிசுகள் வாங்கிவிட்டு, வெண்பா, ஆசிரியப்பாக்களை எழுதிப் பார்த்து, வார்த்தைகளை லாகவப்படுத்தப் பயிற்சி செய்து, இலக்கணம் உடைத்து பக்கம் பக்கமாக புதுக்கவிதைகள் எழுதி, என் எழுத்தின் மதிப்பீடு அறியும் முன்னரே என்னைக் கவிஞனாகக் கற்பனை செய்துகொண்டேன்.

அடுத்த கட்டமாக, திரைப்படங்களில் பாடல் எழுத முயற்சி செய்யலாமே என்று ஒரு நாள் இரவு திடீரென எனக்கும் ‘சினிமா ஆசை’ முளைத்தது. ‘அது’ ஒருமுறை வந்துவிட்டால், பிறகு அதிலிருந்து வெளியேறுவது கடினம் என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை...

என்ன செய்வது, யாரை அணுகுவது என்று யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் அந்தப் பெட்டிச் செய்தி, சிக்னல் இல்லாத காட்டுக்குள் தவிக்கும்போது இன்கம்மிங் கால் வந்ததைப் போல இருந்தது.

“நான் சினிமாவுல பாட்டெழுதப் போறேன்”

இரவு உணவு நேரத்தில் தந்தையிடம் கூறினேன். அவர் முகம் இறுகியது. சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்த தாய்க்கு இன்று வீடு ரெண்டாகப் போகிறது என்பது தெரிந்திருக்கும்.

தந்தை மிகக் கடுமையானவர். கண்டிப்பான வாத்தியார் மாதிரிதான்! அவர் விரும்பியதை நான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தார். எனக்கு விருப்பமானதைத் தெரிந்துகொள்ள அவர் விருப்பப்பட்டதே இல்லை. அதனால் விடலைப் பருவத்தில் இருக்கும் எல்லா ஆண்களைப் போல, நானும் அவரை எதிரியாகவே பார்த்தேன்.

“ஒழுங்கு மரியாதையா படிக்கிற வேலைய பாரு.”

“ஒரு சினிமா கம்பனில பாட்டெழுத ஆளுங்க எடுக்கறாங்க. நான் போய் பாக்குறனே.”

“டேய், நிறைய பேர் வாழ்க்கை சினிமாவால போயிருக்கு. பெரிய பெரிய ஆளுங்ககூட காணாமப்போயிருக்காங்க. நிரந்தரமா ஒரு வேலைல உட்காரணும். இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது.”

பல்லைக் கடித்துக் கொண்டு பேசினார்

“இல்ல... அதெல்லாம் சரிப்பட்டு வரும்.” நானும் பல்லைக் கடித்துக்கொண்டேன்.

“முதல்ல காலேஜ் முடி... அப்புறமா...”

“அவன் ஏதோ ஆசைப்படறான். என்னான்னு போய்ப் பார்க்கட்டுமே.”

எனக்கு ஆதரவாக குறுக்கே பேசிய தாய்க்கு, சாப்பிடும் கையாலேயே ஒரு அறை வைத்தார். நான் வாங்க வேண்டிய அறை அது... எதிர்பார்த்ததைப் போலவே அன்று வீடு ரெண்டானது.

மனது ஆறவில்லை எனக்கு. தந்தை மேல் கோபம் பன்மடங்காக எகிறியது. சினிமாத்துறையில் நுழைகிறோம் என்றால் எவ்வளவு பெரிய விஷயம். என் திறமையை மதிக்கத் தெரியாத அவர் முன்னால் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற வெறி ஏறியது.

மறுநாள்,

என் கவிதைகளைத் தெளிவான கையெழுத்தில் எழுதி, கல்லூரிக்கு செல்வதைப் போல் வீட்டிலிருந்து கிளம்பி, பஸ்ஸைப் பிடித்து, வளசரவாக்கம் சென்றேன். மெயின் ரோட்டிலிருந்து பல கிலோ மீட்டர்கள் உள்ளே சென்று, ஆள் நடமாட்டமில்லாமல் புதர் மண்டி இருந்த எட்டாது தெருவில் நான் தேடி வந்த 15/9-ஐ வந்தடைந்தேன். மிகப் பெரிய பங்களாவாக இருந்தது. அந்த ஏரியாவின் மொத்த மனிதர்களும் இங்கேதான் இருப்பதைப் போல, வாசலில் ஏகப்பட்ட செருப்புகள்.

சிறுகதை: உப்புமா கம்பனி

உள்ளே, பிரமாண்டமான ஹால். மேலே செல்ல படிக்கட்டுகள். அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தாலும் கனத்த அமைதி, ஊதுவத்தி கொளுத்திய சாமி படங்கள், பார்க்கவே தெய்விகமானதாக இருந்தது. ஒருவர் என்னிடம் வந்தார் ‘சொல்லுங்க.’

என்ன சொல்வது? எப்படித் தொடங்குவது?

டி.ராஜேந்தரின் ஒரு படத்தில் பாடல் எழுத வாய்ப்பு தேடிப் போகும் ஹீரோபோல ‘நான் நல்லா கவிதை எழுதுவேன். ஏதாவது வாய்ப்பு கிடைக்குமான்னு வந்தேன்.’

ஒரு முறை என்னை ஏற இறங்கப் பார்த்தார். ‘உட்காருங்க.’

கொஞ்சம் மூச்சு விட்டுக்கொண்டு உட்கார்ந்தேன். வேர்த்தது. சோபாவில் சற்றுப் பருமனான பெண். ஸ்லீவ்லெஸ் போட்டு, அடர்த்தியான மேக்கப்புடன் இருந்தாள். ஹீராயினா(?!) அருகே சற்று வயதானவள், அடர்த்தி குறைவான மேக்கப்புடன், அவள் அம்மாவாக இருக்கக் கூடும். அலட்சியமாகப் பார்த்தாள்.

இறுக்கமான டி-ஷர்ட் அணிந்த வாட்ட சாட்டமான இளைஞன், அந்நியன் விக்ரமைப் போல் நீண்ட முடி வளர்த்த ஒருவன் மற்றும் சிலர். எல்லாருடைய கையிலும் போட்டோ ஆல்பம் இருந்தது. ஒவ்வொருவராக மேலே அழைக்கப்பட்டு சிறிது நேரம் கழித்து இறங்கிச் சென்றனர். திரும்பி வரும் எல்லா முகங்களிலும் மகிழ்ச்சி இருந்தது. எல்லோருக்குமே வாய்ப்பு கிடைத்துவிட்டதா?

‘மேலதான் டைரக்டர் ஸ்ரீதர் இருக்காரு’ அருகிலிருந்தவன் கூறினான்.

‘நான் உதவி இயக்குநராக வந்திருக்கேன். இளமுருகு என் பேரு... கடலூர். நீங்க..?’

‘நான் பாட்டெழுத வந்திருக்கேன்...’

‘சொந்த ஊரு..?’

‘சென்னைதான்’

சென்னையிலிருந்து வாய்ப்பு தேட வந்திருக்கிறேன் என்பதை அவன் புதிதாகப் பார்த்தான்.

மூன்று, நான்கு மணி நேரக் காத்திருப்புக்குப் பின் நான் மேலே அழைக்கப்பட்டேன். அந்த அறையில் மிகப்பெரிய படுக்கை தரையில் போடப்பட்டிருந்தது. அதிலே நடுநாயகமாக ஒருவர் அமர்ந்து, கையில் வைத்திருந்த புகைப்படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தார். இவர்தான் இயக்குநராக இருக்கவேண்டும். அருகே இரண்டு பேர் நின்றுகொண்டிருந்தனர். காலருகே ஒருவன் அமர்ந்திருந்தான். ஓரத்தில் ஒருவன் எதையோ எழுதிக்கொண்டிருந்தான். இயக்குநர் அமரச் சொல்லி சைகை காட்டினார். சாந்தமான முகம். நாற்பது வயதைக் கடந்திருக்கும். நரை நன்றாகத் தட்டியிருந்தது. ‘சொல்லுங்க’ என்றார்.

மறுபடியும் ‘என் பேரு ராஜ்குமார். நான் நல்லா கவிதை எழுதுவேன். ஏதாவது வாய்ப்பு கிடைக்குமான்னு வந்தேன்.’

கையில் வைத்திருந்த கவிதைகளை அவரிடம் நீட்டினேன். ஒவ்வொரு பக்கமாக பொறுமையாகப் புரட்டினார். அவர் முகத்தில் எந்த உணர்ச்சியையும் அனுமானிக்க முடியவில்லை.

‘நல்லா இருக்கு... என்ன பண்ணுறீங்க?’

‘காலேஜ் படிக்கறேன் சார்’

‘நம்ம படம் காலேஜ் சப்ஜக்ட் தான்... யூத்தான பாட்டு வேணும்.’

‘சரி சார்’

‘இங்கிலீஷ் வார்த்தைங்கலாம் போட்டு வேணும்.’

தமிழ்மேல் தீவிர காதலில் இருந்த சமயம். உடன்பாடில்லாமல் அமைதியாக இருந்தேன்.

‘இப்போ வர பாட்டுங்களாம் அப்படித்தான இருக்கு. ஆடியன்ஸ் அதான எதிர்பாக்குறான். நான் பாலு சார் கிட்ட அஸிஸ்டன்டா இருந்தபோது...’ என்று அருகிலிருப்பவரிடம் பேச ஆரம்பிக்க, அவரும் தலையாட்டிக் கொண்டிருந்தார்.

‘சொந்த வீடா?’

‘வாடகை வீடு சார்’

‘அப்பா என்ன பண்ணுறாரு?’

‘எழிலகத்துல கிளார்க்’

என்னைப் பற்றி முழு விவரங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். எதற்காகக் கேட்கிறார் என்று தோன்றவில்லை. சினிமாவில் நான் சந்தித்த முதல் இயக்குநர் என்னை மதித்துப் பேசியது பிடித்திருந்தது.

‘நம்ம படத்துல அஞ்சு பாட்டு. எல்லாம் பெரிய ஆளுங்களை வச்சு போகலாம்னுதான் புரொடியூசர் சொன்னாரு. நான்தான் ஒரு பாட்டாவது புதுசா வர்றவங்களுக்குக் கொடுக்கலாம்னு சொன்னேன். நான் சினிமாவுல வரும்போது எவ்வளவோ கஷ்டப்பட்டேன். திறமையானவங்களா இருந்தா தூக்கி விடலாமே.’

எனக்கு அவர் மேல் மரியாதை கூடியது. இயக்குநர் சில நொடிகள் அமைதியாக இருந்தார். எனக்கு அந்தப் பாடலைக் கொடுக்கலாமா, வேண்டாமா என்று யோசிப்பதாக நினைத்தேன்.

‘மியூசிக் டைரக்டர் வருவாரு. அவரு ட்யூன் ரெகார்டு பண்ணிக் கொடுத்தா பாட்டு எழுதுறீங்களா?’

சிறுகதை: உப்புமா கம்பனி

எனக்கு ஒரு 1000 வால்ட் பல்பு தலைக்கு மேலே எரிந்தது. சினிமாவில் பாடல் எழுதுவது இவ்வளவு சுலபமா? இது அதிஷ்டமா? இல்லை.. என் திறமையால் கிடைத்ததா? வைரமுத்து, வாலி போன்ற கவிஞர்களுக்கு வாய்ப்பு கிடைத்த கதைகளைப் போல நானும் சுய சரிதையில் எழுதுவதற்கு ஏற்ற நிகழ்வல்லவா இது? நெகிழ்ந்து போனேன்...

‘எழுதறேன் சார்’ என்று ஆர்வமாகத் தலையாட்டினேன். சிறிது நேரம் அமைதியானார். ‘சரி, வர்ற வெள்ளிக்கிழமை வந்து பாருங்க.’

இன்னும் நான்கு நாள்கள்தான்... பேருந்து ஜன்னல் வழியாக கலர் கலராகக் கனவுகள் விரிந்தது. எல்லா ரேடியோவிலும், டிவியிலும் ஓடும் என் பாடல், ஆட்டோகிராப், பத்திரிகைப் பேட்டிகள், விருதுகள், கார், பங்களா என்று எதிர்காலக் கற்பனைகள் இரவு வரை தூங்கவிடாமல் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன.

இயக்குநர் ஸ்ரீதருக்கு இது முதல் படம்... நடிகர் முரளி கல்லூரி மாணவனாக நடித்து வெற்றி பெற்ற ஒரு படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதாகக் கூறினார். கே டிவியில் ஒளிபரப்பான அந்தப் படத்தில் உதவி இயக்குநராக இவரது பெயரையும் பார்த்தேன்.

வெள்ளிக்கிழமை... முதல் காதலை சொல்லப் போவதைப் போல, முதல் பாடல் எழுதும் படபடப்புடன் சென்றேன். அந்த அலுவலகத்தில் எப்போதும் போல ஏகப்பட்ட செருப்புகள். எப்போதும் போல பரபரப்பு.

இளமுருகு சாமி படங்களுக்கு ஊதுவத்தி கொளுத்திக்கொண்டிருந்தான். உதவி இயக்குநராகச் சேர்ந்துவிட்டதாகக் கூறினான். நட்பாகச் சிரித்தான்.

மாஸ்டர் செல்வாவின் தயாரிப்பாளர்தான் அதில் கதாநாயகனாக நடிப்பதாக இளமுருகு கூறினான். அவருக்கு 35 வயதுக்கு மேல் இருக்கும். தடித்த உருவம். வில்லனாக நடிக்கும் முகம். சிறு வயதுப் பொன்னம்பலம்போல இருந்தார். இவர் எப்படி கல்லூரி மாணவனாக? அதுவும் ஹீரோவாக? இருந்தாலும் சினிமாவில் முதல் வாய்ப்பு. படம் நன்றாக ஓட வேண்டும் கடவுளே!

சில மணி நேரக் காத்திருப்புக்குப் பின் இயக்குநரை சந்தித்தேன். மரியாதையாக நடத்தினார். அருகிலிருப்பவரிடம் அறிமுகப்படுத்தினார்.

‘தம்பி கவிஞர். நல்லா எழுதுறாரு... நம்ம படத்துல ஒரு பாட்டு கொடுக்கப்போறோம்.’

‘ஓ’

பிறகு பொதுவான விஷயங்களையே பேசினார். நானாகவே தொடங்கினேன்.

‘சார் மியூசிக் டைரக்டர் வருவாருன்னு சொன்னீங்களே.’

‘வருவாரு... எப்ப வருவாருன்னு சொல்றேன்... நீ திங்கள் கிழமை வா.’

எனக்கு சற்று ஏமாற்றமானது. இன்று ஜன்னலின் வழியாக கனவுகள் எதுவும் தோன்றவில்லை. அம்மா கட்டிக்கொடுத்த உணவை பார்க்கில் உட்கார்ந்து அருந்தி விட்டு, மாலை வீடு திரும்பினேன்.

திங்கள் கிழமை வந்தது. மறுபடியும் சில மணி நேரக் காத்திருப்பு. மறுபடியும் நாட்டு நடப்பு, சினிமா செய்திகள், பழைய அனுபவங்கள் என்று பஞ்சமில்லாமல் பேசினார். மறுபடியும் சில நாள்கள் கழித்து வரச் சொன்னார்.

மறுபடியும் மறுபடியும்... இப்படியாக இரண்டு மாதங்கள் கடந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் ஆர்வத்துடனேயே அவரை சந்தித்தேன். எதற்காக இத்தனை முறை அலைக்கழிக்கிறார் என்று கோபிக்கக்கூடத் தோன்றவில்லை. பாடலாசிரியராக வேண்டும். அவ்வளவுதான்!

ஒரு நாள் இயக்குநர் கூறினார், ‘நாளைக்கு வா. கேசட் தரேன்.’

நாளைய பொழுது விடியும்போது நம் வாழ்க்கை மாறிவிடும் என்ற நம்பிக்கைதான், சினிமாக்காரர்களை வாழ வைப்பதாக எண்ணுகிறேன்.

சிறுகதை: உப்புமா கம்பனி

மறுநாள்,

‘ட்யூன் நல்லா வந்திருக்குப்பா. உனக்கு சரியான ஓப்பனிங்’ என்று ஒரு கேசட்டை எடுத்து வைத்தார். நான் உற்சாகமானேன். சிறிது நேரம் அமைதியாக இருந்தார். அப்போது அங்கேயிருந்த இருவர், எழுந்து வெளியே சென்றனர்.

‘இவங்க ஏன் எழுந்து போனாங்க தெரியுமா... நான் உன்கிட்ட எதப் பத்திப் பேசப் போறேன்னு அவங்களுக்குத் தெரியும். சினிமா அத்தனை புரிதல் மிக்க இடம்.’

எனக்குப் புரியவில்லை.

‘இப்போ... உன் பேரு டைட்டில் கார்ட்ல வரப்போகுது. கோடிக்கணக்கான பேர் பார்க்கப் போறாங்க. உன் பாட்டு ஹிட்டாச்சுன்னா லட்சம் லட்சமா சம்பாதிக்கப் போற. உனக்கு அப்படி ஒரு சான்ஸ் கிடைக்குறதுக்கு காம்ப்ளிமென்டா நீ என்ன செய்யப்போற?’

காம்ப்ளிமென்ட்...? எனக்குக் குழப்பம் அதிகமானது.

‘டைட்டில் கார்டுல பேரு வர்றது சாதாரண விஷயமில்ல. உனக்கு அந்த வாய்ப்பு கொடுக்கறேன். எத்தனையோ பேர் இப்படி ஒரு வாய்ப்புக்காகக் காத்துக்கிட்டு இருக்காங்க. எதுவுமே ஈசியா கிடைச்சுட்டா அதோட மதிப்பு தெரியாதுல்ல... நீ ஒரு 5,000 ரூபா காம்ப்ளிமென்டா கொடுத்தா, உனக்கு அதோட வேல்யூ தெரியும்.’

வேல்யூ - இப்போது விளங்கியது.

நான் திகைத்துப்போனேன். கிட்டத்தட்ட இருபது நாள்கள் கல்லூரிக்கு மட்டமடித்து விட்டு, நாள் முழுக்க இந்த அலுவலகத்தில் காத்திருந்து, அவர் இப்படிப் பேசுவார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை.

‘என்கிட்ட அவ்ளோ பணமில்லையே.’

‘எவ்ளோ இருக்கு?’

பாக்கெட்டில் பஸ் டிக்கெட் எடுக்க பத்து ரூபாய் இருந்தது.

‘யோசிச்சுச் சொல்றேன் சார்’

அவர் எதுவும் பேசவில்லை.

‘ஊர்ல விளைஞ்சத வித்து நானும் ஒரு அமவுன்ட் கொடுத்துதான் சேர்ந்தேன். சினிமாவுல உள்ள வர்றதே கஷ்டம். இதெல்லாம் பண்ணாதான் முடியும் ஜி’ வாசலில் இளமுருகு கூறினான்.

திரும்பி வரும்போது எனக்கு மிக வருத்தமாக இருந்தது. எதற்காகப் பணம் கொடுக்க வேண்டும்? வாய்ப்பு கொடுப்பதற்கு லஞ்சமா? வைரமுத்து, வாலி பணம் கொடுத்துதான் வாய்ப்பு வாங்கியிருப்பார்களா? கைக்கெட்டும் தூரத்தில் கேசட்டை வைத்துவிட்டு அவர் பேரம் பேசியது, சினிமாமேல் நான் வைத்திருந்த மாபெரும் நம்பிக்கையில் மண்ணை வாரிப் போட்டதைப் போல இருந்தது. “நிறைய பேர் வாழ்க்கை சினிமாவால போயிருக்கு” தந்தையின் வார்த்தைகள் அசரீரிபோலக் கேட்டது. கண்களில் நீர் முட்டியது. இனிமேல் அந்த அலுவலகத்துக்குச் செல்வதில்லை என்று முடிவு செய்தேன்.

வீடு திரும்பியபோது எனக்கு வேறொரு திருப்பம் காத்திருந்தது. தந்தை என்னுடைய கல்லூரிக்குச் சென்றிருக்கிறார். கல்லூரிக்குப் போகவேண்டும் என்று காலையில் அவசரமாகக் கிளம்பியவன், அவர் கையெழுத்தைப் போட்டு விடுமுறை எடுத்து எங்கோ ஊர் சுற்றியிருக்கிறான் என்பது தெரிய வந்திருக்கிறது. அவரைப் பொறுத்தவரை அது கொலைக்குற்றத்துக்கு நிகரானது. கன்னம் பழுக்க நான்கு அறை விட்டார். வேதம் புதிது திரைப்படத்தில் சத்யராஜ் வாங்கும் அறையைப் போல, ஞானக் கண்ணைத் திறந்து விட்ட ‘அடி’ அது.

இரண்டு மாதங்கள் கழித்து ஸ்ரீதர் போன் செய்தார். ‘என்னப்பா எப்படி இருக்கே? ஆபீஸ் பக்கம் வர்றதே இல்ல.’

‘இல்ல சார்.. கொஞ்சம் வேலை’

‘அப்படியா?’ சில நொடிகள் அமைதியாக இருந்தார் ‘அந்தக் காசு விஷயம் யோசிச்சியா?’

‘அவ்ளோ காசு என்கிட்டே இல்ல சார்.’

‘5000 ரூபா வேணாம்ப்பா.. ஒரு 2000 ரூபா இருக்கா?’

மறுபடியும் திகைத்துப் போனேன். இந்த முறை கோபம் வந்தது.

‘சார் கவிதை எழுதுறது எனக்குக் கடவுள் கொடுத்த வரம்... அத எழுதுறதுக்கு நான் காசு கொடுக்கணும்னு அவசியம் இல்ல.’

இந்த பதிலை எதிர்பார்த்திருக்க மாட்டார். அவர் முகம் மாறியது போன் வழியே தெரிந்தது.

சிறுகதை: உப்புமா கம்பனி

‘சரிப்பா... சரிப்பா...’ போனைத் துண்டித்து விட்டார்.

இரண்டு மாதங்கள் கழித்து ஒரு பப்ளிக் டெலிபோன் பூத் நம்பரிலிருந்து போன் வந்தது.

‘நான் ஸ்ரீதர் பேசறேன்ப்பா. மாஸ்டர் செல்வா டைரக்டர்.’

‘சொல்லுங்க சார்’

‘நல்லாருக்கியா?’

‘நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க?’

‘இருக்கன்ப்பா... சாயங்காலம் வீடு வரைக்கும் வர்றியா?’

என்ன விஷயம் என்று கேட்கத் தோன்றவில்லை. போகலாம் என்று நினைத்துவிட்டேன். முகவரியை வாங்கிக்கொண்டேன். புளியந்தோப்புப் பட்டாளம் மார்க்கெட்டை ஒட்டிய குறுகலான சந்து. ஹவுசிங் போர்டின் அட்டைப் பெட்டி வீடுகள். ஏழாம் நம்பர் வீட்டு வாசல். ஒடிசலான பெண்மணி ஒருத்தி, இடுப்பில் கைக்குழந்தையுடன் வந்தாள். அவர் மனைவியாக இருக்கக் கூடும். குழி விழுந்த கண்கள். முகத்தில் நிரந்தரமான சோகம்.

‘யார் வேணும்?’

‘ஸ்ரீதர் சார்’

பதில் எதுவும் பேசாமல் உள்ளே போனாள். சுவரில் பிரபல நடிகருடன் ஸ்ரீதர் சிரிக்கும் புகைப்படம் தொங்கிக்கொண்டிருந்தது. ‘வா ராஜி... ஒரு நிமிஷம்’ ஒரு மிகப்பெரிய பங்களாவில் அரசனைப் போல் வீற்றிருந்த இயக்குநரை ஹவுசிங் போர்டு ஒண்டுக் குடித்தனத்தில் பார்ப்பது வித்தியாசமாக இருந்தது. பேன்ட் மாட்டிக்கொண்டு வெளியே வந்தார்.

‘கையில காசு ஏதாவது வெச்சிருக்கியா?’

நான் சலிப்புடன் அவரைப் பார்த்தேன்.

‘எனக்குக் கொடுக்க வேணாம்ப்பா. கொஞ்சம் மனசு கஷ்டம். பக்கத்துல ஒரு பார்ல உட்காந்து பேசுவோமா?’

அருகிலிருக்கும் மதுபானக் கடைக்குச் சென்றோம். கோட்டர் ஓல்டு மாங்க், வாட்டர் பாக்கெட், கிளாசுடன், காய்கறிக் கடையில் ஒரே ஒரு கேரட்டையும் வாங்கிக்கொண்டார்.

‘இதான் நம்ம சைடிஷ். உனக்கு...’

‘நான் குடிக்க மாட்டேன் சார்’

‘நல்ல பழக்கம்’

முதல் ரவுண்டு ஊற்றிக்கொண்டே பேசினார்.

‘என்ன படிக்கறன்னு சொன்ன?’

‘பி.எஸ்ஸி மேத்ஸ்.’

ஒரு மடக்கு குடித்து கேரட்டைக் கடித்துக் கொண்டார்.

‘நான் எல்லா சீனியர் ஆர்ட்டிஸ்ட்கிட்டையும் வொர்க் பண்ணியிருக்கேன். நிறைய படம்... ஒருமுறை மனோரமா ஆச்சியோட வொர்க் பண்ணும்போது...’ தன்னுடைய ஞாபகங்களில் மூழ்கினார். அவர் சொன்னவற்றில் அதிகபட்சம் ஏற்கெனவே சொன்னவை.

‘உங்க படம் எப்படி சார் போகுது?’

அந்தக் கேள்வியில் அவருக்கு விருப்பமில்லை என்று தெரிந்தது. ‘ஹீரோவா நடிக்கறவர் கட்சியில இருக்காரு. எலக்‌ஷன் முடிஞ்ச பிறகு ஸ்டார்ட் பண்ணலாம்ங்குறார். புரட்டாசிக்கு அப்புறம் நம்ம ஜாதகமே மாறுதுப்பா.’

நம்பிக்கையாகத்தான் பேசினார். மூன்றாவது மடக்கு அடித்தவுடன் கண்கலங்க ஆரம்பித்து விட்டார்.

‘உன்கிட்ட காசு கேட்டேன்னு நீ தப்பா நினைக்கக் கூடாது. 15 வருஷம், எத்தன அடி, எத்தன அவமானம் தெரியுமா. படம் எடுக்குறது அவ்ளோ கஷ்டம். நான் சினிமாக்காரன்னு எவனும் பொண்ணு தரல. லேட்டாத்தான் கல்யாணம் ஆச்சு. குழந்த லேட். குடும்பத்த காப்பாத்தலாம்னா, வேற எங்கயும் வேலைக்கும் போக முடியல. சினிமாவுல இருந்தவனுக்கு வேற எவன் வேலை கொடுப்பான். இப்போ வீட்டுக்கு அரிசி பருப்பு வாங்கக்கூடக் காசில்ல. ஆனாலும்...’

வார்த்தைகள் அவர் தொண்டையில் அடைத்துக்கொண்டன. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கண்ணைத் துடைத்து இறுதி ரவுண்டை ஊற்றினார்.

‘ஊர்ல எங்களுக்கு நல்ல சொத்து. சினிமா ஆசையில அப்பாகிட்ட சண்டைபோட்டு வந்துட்டேன். நானும் பாட்டெல்லாம் எழுதுவேன். ரெண்டு மூணு பத்திரிகையில என் கதை, கவிதைலாம் வந்திருக்கு. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு, ஜெயிச்சிட்டுதான் ஊருக்குப் போகணும்னு வைராக்கியமா மெட்ராஸ் வந்தேன். ஹோட்டல்ல வேலை செஞ்சு, ஆபீஸ் பாயா சேர்ந்து, அசிஸ்டன்ட் டைரக்டராகி வயசு போச்சு... நான் செஞ்சது தப்பு, எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கன்னு சொல்ல இப்ப என் அப்பாவும் இல்ல... சொத்தெல்லாம் கேஸ்ல இருக்கு. ஒரு படம் எடுத்துட்டா என் கடனெல்லாம் தீர்ந்துடும் ராஜி.’

அந்தக் கலங்கிய கண்களை மறக்கவே முடியாது.

வெளியே வரும்போது கட்டாயப்படுத்தி அவர் கையில் நூறு ரூபாய் திணித்தேன். குற்ற உணர்ச்சியில் திரும்பிப்பார்க்காமல் நடந்து போனார்.

ஒவ்வொரு மனிதனும் நமக்கு ஏதேனும் ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறான். அந்த நாளுக்குப் பிறகு, எனக்குப் பாடல் எழுதத் தெரியுமா, தெரியாதா என்பதை முழுவதுமாகத் தெரிந்துகொண்ட பிறகே வாய்ப்பு தேடத் தொடங்க வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு செய்துகொண்டேன்.

கதைகள் முடிவதே கிடையாது.

சில வருடங்கள் கழித்து... சில திரைப்படங்களில் பாடல் எழுதிக்கொண்டிருந்த சமயம், தெரிந்த மேனேஜர் ஒருவர் போனில் அழைத்தார்.

‘நம்ம நண்பரோட படம். பாட்டு எழுதறியா?’

‘நல்ல டீமா இருந்தா சொல்லுங்கண்ணே... கண்டிப்பா பண்ணலாம்’

‘டைரக்டர வந்து பாரு. ஒத்து வந்தா பண்ணு’

அந்த அலுவலகத்துக்குச் சென்றேன். பெரிய ஹால். பெரிய சோபா. கையில் ஆல்பங்களுடன் சிலர். இயக்குநர் அறையில் தரையில் பெரிய படுக்கை. அங்கே கையில் புகைப்படங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவரை எங்கேயோ பார்த்ததுபோல் இருந்தது.

‘இளமுருகுதான நீங்க?’

‘ஆமா... நீங்க... (கொஞ்சம் யோசித்து) ராஜ்குமார்ல... ஸ்ரீதர் சார் ஆபீஸ்ல பார்த்தோம்.’

‘ஆமா.’

‘சிவி படத்துல பாட்டு எழுதுனவருன்னு மேனேஜர் சொன்னாரு. நீங்கதான்னு தெரியாது. சினிமா ரொம்பச் சின்னது பாருங்க. நாம திரும்பவும் இப்படிச் சந்திக்கிறோம்.’

‘ஸ்ரீதர் என்ன பண்ணுறாரு?’

‘அவரு ஊருல செட்டில் ஆகிட்டாரு.’

‘ஓ’

‘வர்ற ஆறாம் தேதி நம்ம படத்துக்கு ஏவிஎம்-ல பூஜை... அன்னைக்கே ரெக்கார்டிங். காலேஜ் சப்ஜெக்ட். நீங்க எழுதுறீங்களா?’

‘எழுதலாமே... படத்துக்கு என்ன பேரு?’

‘மாஸ்டர் செல்வா’