Published:Updated:

சிறுகதை: துளிர்ப்பு

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

கவிப்பித்தன்

சந்திரா அக்கா என்றால் சண்முகத்திற்கு உயிர்.சந்திராவுக்கும் தம்பி சண்முகத்தின் மீது கொள்ளைப் பாசம்.

19 வயதில் சந்திராவுக்கு முதல் திருமணம் நடந்தபோது சண்முகத்துக்கு 9 வயது. அப்போது அவன் நான்காவதுதான் படித்துக்கொண்டிருந்தான் என்றாலும், அவளது திருமணம் ஒரு சினிமாவைப்போல அவன் மனதில் இன்னமும் ஆழமாகப் பதிந்திருக்கிறது.

திருமணத்தன்று சந்திராவின் முகம் மேகங்களற்ற பெளர்ணமி நிலவைப்போலப் பிரகாசித்தது. கண்களிலும் கன்னங்களிலும் வெட்கம் படர, திருவிழா நாளின்போது தெருவில் வீற்றிருக்கும் கெங்கையம்மன் சிலையைப்போல ஜொலித்தாள்.

அதை நினைத்துக்கொண்டதும் ஒரு பெருமூச்சு வந்தது சண்முகத்திற்கு.

தலையை உதறி சுற்றும் முற்றும் பார்த்தான். மருத்துவமனை முழுவதும் நோயாளிகளின் வலி நிறைந்த காற்றும், பார்மலின் வாசனையும், பரபரப்பும் பரவிக்கிடந்தது. வெய்யிலில் அறுத்துப்போட்ட வாழை மட்டையைப்போல மருத்துவனைக் கட்டிலில் கந்தல்கூலமாய்க் கிடக்கிறாள் சந்திரா. உலகமே பெருந்தொற்று பயத்தில் கிலியடித்துக்கிடக்க, சந்திராவை மருத்துவமனைக்குக் கொண்டுவந்து சேர்ப்பதே பெரும்பாடாகிவிட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எப்படி இருந்தவள் சந்திரா...!

ஒரு மதமதத்த குதிரையைப் போலக் குதியாட்டமான நடை. ஆறடி பூங்கரகம் போன்ற உயரம், அலை அலையாய் விரிந்த கூந்தல், எத்தனை பேரைப் பெருமூச்சு விடவைத்த பேரழகி அவள்.

இருந்த கால் காணி நிலமும் மழை பார்த்த மானாவாரி நிலம் என்பதால், அதை நம்பிப் பிழைக்கமுடியாமல் கரும்புவெட்ட, அண்டை கழிக்க, கதிரடிக்க, மரம் வெட்ட என தினக் கூலிக்குப் போய்த்தான் குடும்பத்தைக் காப்பாற்றினான் அவர்களின் அப்பன் சுந்தரம். அம்மா செண்பகம் வீட்டில் ஊதுவத்தி உருட்டினாள்.

ஒரு வெள்ளிக்கிழமை உச்சிவெயிலில் மாரியம்மன் கோயில் ஆலமரத்தில் காய்ந்த விறகுகளை ஒடித்துக்கொண்டி ருந்தபோது கால் தவறிக் கீழே விழுந்தான் சுந்தரம். கோயில் வாசலில் நட்டு வைத்திருந்த ஆளுயர சூலத்தின் மீதே விழுந்ததில், வயிற்றில் குத்திய சூலம் முதுகையும் துளைத்துவிட்டது. அங்கேயே துடிதுடித்து அவன் உயிர் விட்டபோது, அம்மன் மரத்தில் கால்வைத்து ஏறியது தெய்வக் குற்றம் என்று கிலியோடு பேசிக்கொண்டது ஊர். அப்போது சண்முகம் கைக்குழந்தை. சந்திராவுக்கு 10 வயது. கழுத்தறுபட்ட ஆட்டைப்போல கோயில் வாசலில் சரிந்து, அடித்தொண்டை கிழிய கதறிக் கதறி அழுதாள் செண்பகம்.

 சிறுகதை: துளிர்ப்பு

ஒரே நாளில் திக்கற்றுப்போனது அவர்களின் குடும்பம். நண்டும் சிண்டுமாய் இருந்த குழந்தைகளை வளர்க்க செண்பகம் பட்டபாடு பெரும்பாடு. ஊரே அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் நடு இரவிலும் சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் அவள் மட்டும் “சர்ரக்... சர்ரக்...” என ஊதுவத்தியை இழுத்துக்கொண்டிருப்பாள்.

ஆண் துணை இல்லாத வீடு என்பதால் செண்பகத்துக்கு எத்தனை எத்தனை வலை விரிப்புகள்…! மாம்பழக் காலத்தில் அடை அடையாய் வீட்டைச் சுற்றும் ஈக்களைப்போல, செண்பகத்தை எவ்வளவு பேர் சுற்றிச் சுற்றி வந்தனர். எல்லாரையுமே நெருப்புப் பார்வையால் விரட்டிவிட்டு, இரவும் பகலும் வத்தி மனையே கதியாகக் கிடந்தாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உள்ளூர்ப் பள்ளியில் எட்டாவது வரை மட்டுமே படிக்க முடிந்த சந்திராவும் அதன் பிறகு தாயோடு சேர்ந்து ஊதுவத்தி உருட்டத் தொடங்கினாள்.

மனையின் கீழே கால்களை நீட்டி உட்கார்ந்து, வெண்ணிற ஊதுவத்திக் குச்சிகளை பிசைந்த கறுப்பு மாவில் அழுத்தித் தேய்த்து, இழுத்து இழுத்து அவர்கள் மடிமீது தள்ளும் ஊதுவத்திகளின் அழகு பார்க்கப் பார்க்கச் சலிக்காது. பதமாய் வெயிலில் உலரும் வத்திகளை மறுநாள் காலையில் ஆயிரம் ஆயிரமாய் எண்ணி, கட்டுகள் கட்டி வீட்டுக்குள் அடுக்கி விட்டுதான் பள்ளிக்குப் போவான் சண்முகம். கம்பெனி முதலாளியால் சென்ட்டு தோய்க்கப்பட்ட பின்னர் அவை எங்கெங்கோ புகைந்து வாசனையைப் பரப்ப… அதுதான் அவர்களின் அடுப்பையும் புகையவைத்தது. அதில்தான் சண்முகம் கல்லூரிவரை படித்தான்.

செண்பகத்தைப்போலவே தகதகக்கும் ஆவாரம் பூ நிறமும், நிமிர்ந்து பார்க்கும் உயரமுமாய் சந்திரா வளர்ந்தபோது... ஊராரின் கண்கள் செண்பகத்தோடு சேர்த்து சந்திராவையும் மேயத்தொடங்கியது.

குள்ளாக் கண்டை மீன் போன்ற அகலமான கண்கள், செம்பருத்தி அரும்பைப்போன்று விரிந்த மூக்கு, மதுரை மீனாட்சியின் மூக்குத்தியைப்போல ஜொலிக்கும் ஒற்றைத் தெற்றுப்பல் சிரிப்பு, இறுக்கமான மேல் சட்டைக்குள் விம்மும் இளமை என சந்திரா வளர வளர… மனதில் பரவசமும் பதற்றமுமாய்க் கிடந்தாள் செண்பகம்.

சந்திராவைப் பெண்கேட்டு வந்த உள்ளூர் வரன்களையெல்லாம் வம்படியாய்த் தவிர்த்தாள் செண்பகம். ஆறு மைல் தூரத்தில் இருக்கும் பரமசாத்தில் ஐந்து ஏக்கர் நிலமும், பம்ப்செட்டுமாய் விவசாயம் பார்த்த சதாசிவத்தை அவர்கள் எல்லோருக்குமே பிடித்துவிட்டது.

சதாசிவம் மாநிறம்தான். உடன்பிறந்தவர் யாரும் இல்லை என்றாலும், அவனைப் பெற்றவர்கள் நல்ல குணமானவர்களாகத் தெரிந்தனர். முடிந்ததைச் செய்தால்போதும் என்ற அவர்களின் பெருந்தன்மை செண்பகத்தின் கண்களில் நீர் கோக்கவைத்தது.

கரம்பாகவே கிடந்த கால்காணி நிலத்தை விற்று சந்திராவுக்கு மூன்று பவுன் சங்கிலியும், ஒரு ஜோடி கம்மல், ஜிமிக்கியும், மாப்பிள்ளைக்கு இரண்டு பவுன் கழுத்துச்செயினும்தான் அவர்களால் போடமுடிந்தது.

சண்முகத்திற்கு அதுதான் முதல் பேருந்துப் பயணம். பேருந்தின் நடுவில் நின்று இருக்கைக் கம்பியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். அப்படியும் அவன் கால்கள் தள்ளாடி, முன்னும் பின்னுமாய் கரகம் ஆட…

திருமணத்தன்று மாலை ஊரே ஒன்று திரண்டு கிளம்பியது. மசமசத்த இருட்டில் வண்ணார ஆனந்தனின் தீவட்டி மிதந்து மிதந்து முன்னே செல்ல, தங்கக்குடமாய் ஜொலித்த சந்திரா தலைகுனிந்து நடக்க… சீர் சாமான்களைத் தோளில் சுமந்த ஊர்க்காரா்களும், குழந்தைகளும் கேலியும் கிண்டலுமாய்ப் பின் தொடர்ந்தனர்.

நீவாநதியின் கிழக்குக் கால்வாயில் இறங்கி, வெளுத்த துணியாய் மணல் பூத்திருந்த நடைபாதையில் கால்கள் புதையப் புதைய நடந்து, கரையேறி, வானுயர இலுப்பை மரங்களையும், இருட்டின் நிறத்தில் வட்டமிடும் வௌவால்களையும் ரசித்தபடியே தார்ச் சாலையில் நின்றனர். அடுத்த கால் மணிநேரத்தில் விளக்குகள் ஜெகஜோதியாய் எரிய… நீளமாக ஹாரன் அடித்தபடி வந்துநின்ற செங்கல் நிற ஈஸ்வரிப் பேருந்தில் முண்டியடித்து ஏறினார்கள்.

சண்முகத்திற்கு அதுதான் முதல் பேருந்துப் பயணம். பேருந்தின் நடுவில் நின்று இருக்கைக் கம்பியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். அப்படியும் அவன் கால்கள் தள்ளாடி, முன்னும் பின்னுமாய் கரகம் ஆட… அவனுக்கு பயமாகவும், கூடவே மனக்கிளர்ச்சியாகவும் இருந்தது.

ஊற்றுப்பள்ளங்களில் மட்டும் தண்ணீா் நிரம்பிக்கிடந்த அணைக்கட்டைச் சில நொடிகளில் கடந்து, கீரைச்சாத்து, இடையகுப்பம், பாலம் கூட்ரோடு நிறுத்தங்களில் பேருக்கு நின்று, கடைசி ஊரான பொன்னையில் பேருந்து நின்று குலுங்கியபோது முதன்முறையாகப் பொன்னையைப் பார்த்தான் சண்முகம்.

காந்தித் தாத்தா மினுமினுக்கும் வெள்ளை நிறத் தடியுடன், வேகமாக நடப்பவரைப்போல நின்றிருக்க, அவரைச் சுற்றி முட்டி உயரத்தில் ஒரு சுற்றுச் சுவர். அதைச் சுற்றி வந்த வேலூர், திருத்தணி, ஆற்காடு பேருந்துகள் சிறிது நேரம் நிற்பதும், ஆட்களை ஏற்றிக்கொண்டு வேகமாய் உறுமியடி கிளம்பிப்போவதுமாக இருந்தன. `ப' வடிவில் வரிசையாக இருந்த கடைகளில் மஞ்சளும் சிவப்புமாய் போண்டாக்களும், பஜ்ஜிகளும் மணத்தன. பரோட்டா குருமாவின் வாசனை நாக்கில் எச்சிலைச் சுரக்கவைத்தது.

அடுத்துவந்த சித்தூர்ப் பேருந்தில் அவர்கள் திபுதிபுவென ஏறினார்கள். அவர்கள் யாருக்குமே உட்கார இடம் கிடைக்கவில்லை. ஆனாலும் கால் மணி நேரத்திலேயே பரமசாத்து வந்துவிட்டது சண்முகத்துக்கு ஏமாற்றமாக இருந்தது.

தலை நிறைய சிரிக்கும் பூக்களோடும், நெற்றியிலும் வகிட்டிலும் மிளிரும் குங்குமத்தோடும், களிப்பில் மினுமினுக்கும் முகத்தோடும் சந்திரா ஊருக்கு வரும்போதெல்லாம் நம்ப முடியாமல் பார்த்தது ஊர்.

இருட்டில் சலனமற்றுக் கிடந்த அந்த ஊர் நிறுத்தத்தில் அவர்கள் இறங்கியபோது கிழக்கு மேற்கு எதுவும் தெரியவில்லை. ஆனந்தன் மீண்டும் தீவட்டியைக் கொளுத்திக் கொண்டு முன்னால் நடக்க, சற்று தூரம் நடந்ததும் ஒரு குழல் மின்விளக்கு மின்னலைப் போல விட்டு விட்டு கண்சிமிட்டிக் கொண்டிருந்தது. அதையும், மாப்பிள்ளையின் ஊரையும் கிண்டலடித்தபடியே கால் மணி நேரம் நடந்த பின்னர் அவர்கள் ராமர் கோயிலை அடைந்தனர். மஞ்சள் தெருவிளக்கின் கீழே சப்பணமிட்டிருந்த கோயிலின் முன்புறம் கிழக்கில் நீண்டிருந்தன தெருக்கள். மஞ்சுப் புல் கூரை வீடுகளும், ஓட்டு வீடுகளும் மின்விளக்கு வெளிச்சங்களில் மங்கலாய்த் தெரிந்தன. தெருவின் பின்பகுதியில் தெரிந்த சில மெத்தை வீடுகள் மட்டும் பளிச்சிட்டன.

மாப்பிள்ளை வீட்டார் வெல்லம் கரைத்த பானகமும், நீர் மோரும் கொடுத்து மஞ்சள் நிறக் கோரைப் பாய்களில் இவர்களை உட்கார வைத்தனர். தவில்களும் நாதஸ்வரங்களும் காதைக் கிழிக்க, எட்டு மணிக்குத் தொடங்கியது பெண் அழைப்பு. அணிலின் முதுகில் கிடக்கும் கோடுகளைப்போல ஊரில் மொத்தமே மூன்று தெருக்கள்தான். அதைக் கடக்கவே மணிக் கணக்கானது. எல்லோருக்கும் வயிற்றில் பசி அமிலம் சுரந்து பிறாண்டத் தொடங்கியது.

சுற்றுப்பட்டு ஊர்க்காரர்கள் எல்லாருமே வள்ளிமலையில் மண்டபங்களில் நாகரிகமாய்த் திருமணங்களை நடத்தத் தொடங்கிய காலம். ஆனாலும் ஊரிலேயே, தெரு அகலத்துக்கு விஸ்தாரமாய் பந்தல் போட்டிருந்ததும், பல நிற சீரியல் விளக்குகள் பள்ளிக் குழந்தைகளைப் போல முன்னும் பின்னுமாய் ஓடி ஓடி மின்னியதும் அவர்கள் எல்லோருக்குமே பிடித்திருந்தது. ஒருவழியாய் ஊர்வலமும், பந்தியும் முடிந்த பின்னர் எல்லோரும் படுக்க இடம் தேடினர்.

பந்தலுக்குள்ளும், பக்கத்து வீடுகளின் வாசல்களிலும், சர்க்கார் பள்ளிக்கூட வளாகத்திலுமாய் பல பேர் கட்டையை நீட்ட, சண்முகம் சந்திராவுடன் பக்கத்து ஓட்டு வீட்டிலேயே படுத்துக்கொண்டான். சந்திராவின் சிநேகிதிகள் அவனைச் சீண்டிக்கொண்டே இருந்தனர்.

“ம்... தம்பியார இப்டி முந்தானிலியே சொருவி வெச்சிகினு கீறியே... இனிம அவன உட்டுட்டு எப்டி இருப்ப சந்த்ரா…?’’ என்று கேட்டாள் ஒருத்தி.

அதைக் கேட்டதும் திக்கென்றது சண்முகத்திற்கு.

“கறிவேப்லக்கொத்து மாறி ஒரே ஒரு தம்பி எனுக்கு... அவன எங்கூடவே வெச்சிக்கீறங்…” என்று சொன்ன சந்திரா அவனது கன்னத்தை வழித்து முத்தமிட்டாள்.

திருமணத்திற்குப் பிறகு சந்திரா இல்லாத அவர்களின் வீடு வீடாகவே இல்லை. அவள் தேய்த்த ஊதுவத்தி மணை திண்ணை மூலையில் கால்களை விரித்துக்கொண்டு பாவமாய்க்கிடந்தது. அவள் கைகள் உரசாத அந்த மணையும் மனசு ஒடிந்துதான்போயிருக்கும். வத்தி உருட்டுகிற எல்லோருமே பிளாஸ்டிக் வளையல்களைத்தான் போடுவார்கள். கண்ணாடி வளையல்கள் போட்டால் கைகள் முன்னும் பின்னுமாய் அசைகிறபோது உராய்ந்து உடைந்துபோகும். ஆனால் சந்திரா மட்டும் கண்ணாடி வளையல்கள்தான் போடுவாள். அவளது வளையல்கள் உரசும் ஓசை ஒரு இசையைப்போல கேட்டுக்கொண்டே இருக்கும்.

அவள் இல்லாதபோதும் அந்த இசை தொடர்ந்து கேட்பதைப்போல பல நாள்கள் பிரமிப்பாய் இருந்தது சண்முகத்துக்கு.

சனி ஞாயிறுகளில் அம்மாவோடு அக்கா வீட்டுக்குத் தவறாமல் கிளம்பிவிடுவான். ஆம்லெட், அவித்த முட்டை, கோழிக் கறிக்குழம்பு, அப்பளம், கிச்சலி ஊறுகாய் எனத் திகட்டத் திகட்ட அவனுக்கு ஆக்கிப் போடுவாள் சந்திரா. சதாசிவமும் கடையிலிருந்து மொறு மொறுப்பான நெருப்பு நிற காராசு வாங்கிவந்து தருவார்.

 சிறுகதை: துளிர்ப்பு

அவர்களின் பம்ப் செட்டிலிருந்து பீய்ச்சியடிக்கிற தண்ணீர்… இரையை விழுங்கிய மலைப்பாம்பைப்போல கால்வாயில் நெளிந்து நெளிந்து ஓடுவதைப் பார்க்கப் பார்க்கச் சலிக்காது சண்முகத்துக்கு. கிணற்று மேட்டிலிருக்கும் ஊளமூக்குப் பழ மரத்தில் ஏறி ஊஞ்சல் ஆடுவான். ஆரஞ்சு நிறத் தேன்மிட்டாயைப்போல குட்டிக் குட்டியாய்ப் பழுத்திருக்கும் ஊளமூக்குப் பழத்தைப் பறித்து நிதானமாகத் தின்பான். புளிப்பும் துவர்ப்பும் கலந்து, ஒழுகும் ஊளமூக்கைப் போன்ற வழவழப்பான அதன் சுவை அவனுக்குப் பிடிக்காது என்றாலும் அது சதாசிவம் மாமாவின் மரம் என்பதால் அவனுக்குப் பிடித்திருந்தது.

பொன்னையில் ஓம் சக்தி டென்டுக்கு அவனையும், சந்திராவையும் எப்போதாவது முதல் ஆட்டத்துக்குக் கூட்டிப் போவார் சதாசிவம். டி.வி.எஸ் வண்டியில் மாமாவுக்கும் அக்காவுக்கும் நடுவில் உட்காரந்து போவதே ஒரு சுகம் அவனுக்கு. பார்த்த படத்தைப் பற்றி வழியெல்லாம் பேசிக்கொண்டே வருவார் சதாசிவம்.

அவையெல்லாமே திடீரெனக் கனவாகிவிடும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. பயிருக்கு உரம்வாங்க, மாடுகளுக்குப் புண்ணாக்குவாங்க, வண்டிக்குப் பெட்ரோல்போட என பொன்னைக்குப் போகும் போதெல்லாம் மிக்சரும், இனிப்பும், மல்லிகைப் பூவுமாய் வாங்கி வந்து கொடுத்த சதாசிவம், கொஞ்சம் கொஞ்சமாய் மாறிவருவதாக ஒரு முறை ஊருக்கு வந்தபோது தன் அம்மாவிடம் சொல்லிவிட்டு சந்திரா அழுதபோது சண்முகத்துக்கும் அழுகை வந்தது. கூடவே மாமாவின் மீது கோபமும் வந்தது.

அப்போது அவன் பத்தாவது முடித்திருந்தான். திருமணமாகி ஏழு வருடங்கள் கடந்தும் சந்திராவுக்குக் குழந்தை இல்லை என்பதை இரண்டு ஊர்களுமே முக்கியப் பேச்சாக்கி யிருந்தன.

வள்ளிமலைத் தெப்பக்குளத்தில் முழுகி ஈரம் சொட்டச் சொட்ட மலை ஏறி, முருகனிடம் உருகி உருகி வேண்டினாள் சந்திரா. பெரியாண்ட வனுக்கும், கெங்கையம்மனுக்கும் அடிக்கடி விரதம் இருந்தாள்.

இப்படியாக மேலும் ஒரு வருடம் கழிந்தபிறகு, ஒரு வெள்ளிக்கிழமை காலையில் சந்திராவை இவர்கள் வீட்டுக்கு அழைத்துவந்தார் சதாசிவம். மறுநாள் காலையில் திரும்பவந்து அழைத்துப் போவதாகச் சொல்லி சந்திராவை விட்டுப் போனார். ஆனால் ஒரு வாரம் கடந்தும் அவர் திரும்பிவரவில்லை.

அவள் இல்லாமல் மாடுகளும், கன்றுகளும், கோழிகளும் தவிக்கும் எனப் புலம்பிக் கொண்டிருந்தாள் சந்திரா. அதற்கடுத்த ஞாயிறு காலையில் அம்மாவோடும், சண்முகத்தோடும் இவர்களாகவே கிளம்பி பரமசாத்துக்குப் போன போது, இவர்களை வீட்டுக்குள் கால் வைக்கவே விடவில்லை சந்திராவின் மாமியார்.

“ஒரு கொட்டு பொண்ண கட்டி வெச்சிக் கய்த்தறுத்துட்டீங்ளே... இந்த பட்ட மர்த்த வெச்சிகினு இன்னா பண்னுறது…?’’ என்று அவள் ஆவேசமாகக் கத்தினாள்.

அந்த ஊர்க்காரர்கள் சிலர் சமாதானம் பேசினார்கள். கொஞ்சநாள் அம்மா வீட்டிலேயே இருந்து வைத்தியம் பார்க்கட்டும் என அந்த ஊர் நாட்டாமைக்காரர் சொன்னதை ஏற்று, மீண்டும் ஊருக்கே திரும்பிவந்தனர்.

தேசிகாமணி பண்டாரம், நரசிம்மன் வைத்தியர், அருணகிரி சாமியார் என அலைந்து திரிந்து ஏராளமான மருந்து மாத்திரைகளைத் தின்றாள் சந்திரா. ஊரை விட்டுக் காட்டில் தனித்திருக்கும் கொள்ளாபுரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமைதோறும் விளக்கேற்றினாள்.

வழி தவறி வரும் ஒற்றை மழையைப்போல… எப்போதாவது ஊருக்கு வரும் சதாசிவம் திண்ணையிலேயே உட்கார்ந்து பட்டும் படாமலும் பேசிவிட்டுப் போய்விடுவார். அப்படி ஒரு முறை திண்ணையில் உட்கார்ந்து அவர் பேசிக்கொண்டிருந்த போது, தேசிகமணி பண்டாரம் கொடுத்த திருநீற்றை அவரின் தலைக்கு மேலாக அவருக்கே தெரியாமல் பின்புறமிருந்து தூவினாள் செண்பகம். அந்தத் திருநீற்றை சதாசிவத்தின் உச்சந்தலையில் வைத்து விட்டால் அவர் சந்திராவையே சுற்றிச் சுற்றி வருவார் எனப் பண்டாரம் சொல்லியிருந்தார். அப்படி அவரின் உச்சந்தலையில் அதை நேரடியாக வைக்க யாருக்கும் தைரியம் இல்லை.

ஆனால் அதற்குப் பிறகு அவர் ஊருக்கு வரவே இல்லை. அவருக்கு இரண்டாவது திருமணம் நடக்கப்போவதாக இரண்டு மாதங்கள் கழித்துத் தகவல் வந்தது. ஊரிலிருந்து பத்துப் பேரோடு கிளம்பிப் போய் அவர்களிடம் பஞ்சாயத்து பேசினார்கள். சண்முகம் அப்போது பன்னிரண்டாவது முடித் திருந்தான்.

அங்கே இவர்களின் பேச்சு எடுபடவே இல்லை. மலடியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்ட கேள்விக்கு இவர்களால் என்ன பதில் சொல்லமுடியும்?

திருமணத்திற்குப் போட்ட நகைகளையும், சீர் சாமான்களையும் திருப்பித் தருவதோடு, ஜீவனாம்சமாக முப்பதாயிரம் ரூபாயையும் மொத்தமாகத் தருவதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

ஆனால் ஜீவானாம்சப் பணத்தை மட்டும் வாங்க வேண்டாம் என்று தீர்மான மாகச் சொல்லிவிட்டாள் சந்திரா. தளும்பிவழிகிற கண்களோடு சதாசிவத்தை ஒரு ஆழமான பார்வை பார்த்தாள். கண்களைத் துடைத்தபடி எழுந்து வேகமாக நடக்கத்தொடங்கிவிட்டாள்.

மீண்டும் ஊரில் ஊதுவத்தி மணையோடு ஒன்றிப்போனாள் சந்திரா. இடையிடையே களை எடுக்க, நாற்று நட, கதிர் அறுக்க என அவள் கூலி வேலைக்குப் போகும் போதெல்லாம் ஊராரின் குத்தல் பேச்சுகளும், கிண்டல்களும் வாழை நாராய் அவளைக் கிழித்துப்போட்டன. கட்டுக்கோப்பான அவளின் உடலையும், மதர்த்துக்கொண்டு நிற்கும் இளமையையும் பார்த்துப் பார்த்துச் சீண்டின ஆண்களின் பார்வைகள். அதனால் எந்நேரமும் ஊதுவத்தி மணையுடனே தவம் கிடக்கத்தொடங்கினாள்.

சண்முகம் கல்லூரிக்குள் நுழைந்தபிறகு அவனுக்காக இரவும் பகலுமாய் வத்தி உருட்டினாள். நாடி தளரத் தொடங்கிய செண்பகத்துக்கு அது ஆறுதலாக இருந்தாலும், இப்படி அவள் உள்ளுக்குள் உருகிச் சிதைவதை அவளால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

சந்திராவின் குலையாத உடல் வனப்பு ஊரில் பல ஆண்களின் ஏக்கப்பெருமூச்சுகளைக் காற்றோடு காற்றாய்க் கரையவைத்தது. மலடி தானே என்று பல பேர் அவளைச் சுற்றிச் சுற்றி வந்தனர். அவர்களின் வீட்டு வாசலில் நிற்கும் வேப்ப மரத்தடியில் எந்நேரமும் தவம் கிடந்தனர்.

ஆனாலும் தாயைப்போல கணகணக்கும் நெருப்பாகவே இருந்தாள் சந்திரா. அந்த நெருப்பில் அவளே எரிந்தாள். அவளை அவளே புடம் போட்டுக்கொண்டு மேலும் தகதகத்தாள்.

“இன்னா மச்சாங்... உங்க பக்கத்தூட்ல செனைக்கி வந்த கடேரி ஒண்ணு எப்பப் பாத்தாலும் வானத்தப் பாத்துக் கத்திக்கினே கீது... உங்கூட்லயும் அதுமாதிரி கடேரி எதுனா கீதா...?” என்று சண்முகத்தின் நண்பன் திருலோகு ஒரு முறை இவனிடம் கேட்டுவிட்டு அசிங்கமாக இளித்தான்.

இரவும் பகலும் ஓங்காரமாகப் பெருங்குரலெடுத்துக் கத்தும் அந்தக் கடேரிகள் காளையோடு சேர்க்கிறவரை அடங்காது. திமிறித் திமிறி கழுத்துக் கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடுவதையும், முன்னால் நடக்கிற ஆட்களின் மீது கால்களைத் தூக்கிப் போட்டுத் தாவுவதையும் சண்முகமும் பார்த்திருக்கிறான்.

வத்தி மணையின் முன்பாக உட்கார்ந்து அசைந்து அசைந்து வத்தி உருட்டும்போது முந்தானையை மீறி அவளின் செழிப்பான தனங்கள் கலசங்களைப்போலத் தெரியும். அதற்காகவே சில இளசுகள் சண்முகத்திடம் பேசுகிற சாக்கில் அவர்கள் வீட்டுத்திண்ணையில் உட்கார வருவார்கள்.

அதனால் மாராப்புக்கு மேலாக சண்முகத்தின் சட்டை ஒன்றை மாட்டிக்கொண்டு மனையில் உட்காருவாள் சந்திரா. அப்படி அவள் உடுத்திய சட்டையைத் துவைத்து மீண்டும் சண்முகம் கல்லூரிக்குப் போட்டுக்கொண்டு போகிறபோது, சட்டையின் முன்புறங்கள் உப்பியபடி தெரியும்.

“ன்னா மச்சாங்.... முன்னாடி ரெண்டு பக்கமும் பம்முனு உப்பிக்கினு நிக்கிது சட்ட...?” என்று கல்லூரியில் நண்பர்கள் அவனிடம் கேட்பார்கள். அவர்களிடம் எதுவும் சொல்லாமல் அசடு வழிவான்.

ஆனால் விசயம் தெரிந்த உள்ளூர் திருலோகு, ஒரு நாள் சண்முகம் அந்தச் சட்டையைப் போட்டிருக்கும்போது, அவனை அணைத்து போதையோடு முன்புறத்தைக் கைகளால் தழுவினான். கள் குடித்ததைப்போல அவன் கண்கள் சொக்கின. அதைப் புரிந்து கொண்டதும் ஆத்திரத்தோடு அவன் அடி வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டான் சண்முகம்.

ஒருவழியாக அவன் கல்லூரிப் படிப்பை முடித்து, சிப்காட்டில் ஒரு தோல் தொழிற்சாலையில் கிளார்க் வேலையில் சேர்ந்தான். அதன்பிறகு செண்பகமும் சந்திராவும் ஊதுவத்தி உருட்டக்கூடாது என்று பிடிவாத மாகத் தடுத்துவிட்டான். சந்திரா வையும் அவர்கள் கம்பெனியிலேயே ஹெல்ப்பர் வேலைக்குச் சேர்த்து விட்டான்.

மூன்று மாதங்கள்தான். மேலாளரின் பார்வையையும், பேருந்தில் அத்துமீறும் ஆண்களையும் பார்த்துவிட்டு சண்முகமே அவளை வேலைக்கு வரவேண்டாம் என நிறுத்திவிட்டான். மீண்டும் வத்தி மணையோடு ஒன்றிவிட்டாள்.

எந்நேரமும் மாடுகள் இறங்கி மேயத்துடிக்கிற பயிராக சந்திராவை எவ்வளவு காலம்தான் வைத்திருக்க முடியும்? கை கால் முடமான யாராவது வந்தால்கூட அவளுக்கு இரண்டாவது திருமணம் செய்துவிடலாம் என, தயங்கித் தயங்கி முடிவெடுத்தாள் செண்பகம். சண்முகத்துக்குத் திருமணமானால் வருகிறவள் எப்படி இருப்பாளோ என்ற கவலையும் அதற்குக் காரணமாக இருந்தது.

அந்த நேரத்தில் எதிர்பாராமல் கிடைத்த வரத்தைப்போல திருவலத்திலிருந்து வந்தவர்தான் இந்தக் கோட்டீஸ்வரன்.

52 வயது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பே விபத்தில் மனைவியை இழந்தவர். குழந்தைகளும் பிறக்காததால் தனிக்கட்டையாகக் கிடந்தவர். ஒரு பெரிய தொழிற்சாலையில் பொறுப்பான வேலை. முன்தலையில் பெரிய கொட்டாங்குச்சியைக் கவிழ்த்ததைப்போல முக்கால் வழுக்கை. பின்தலையிலும் முக்கால்வாசி நரைமுடி. ஒற்றை நாடி சரீரம். யாரோ ஒரு உறவினர் மூலம் விசாரித்து, நம்பிக்கை இல்லாமல்தான் பெண்கேட்டு வந்தார்.

அவரைப் பார்த்த உடனே மனசு விட்டுப்போனது சண்முகத்துக்கு. மாலைகளும் ஆரங்களும் குலுங்கும் தேரைப்போல ஆர்ப்பாட்டமாய் நடக்கிற சந்திராவுக்கு, அவர் கால்தூசுக்குக்கூடக் காணமாட்டார்.

சண்முகம் எந்தப் பேச்சுமில்லாமல் அவரை நிராகரித்துவிட்டான். ஆனால் அவர்கள் யாருமே நம்ப முடியாதபடி சம்மதம் சொல்லிவிட்டாள் சந்திரா. அப்போது அவள் கண்களில் பளீரிட்ட வைராக்கியம் சண்முகத்தையும் சந்திராவையும் சம்மதிக்க வைத்தது.

ஊரார் வாயடைத்து நிற்க... திருமணம் நடந்தேவிட்டது. எளிமையாக மாரியம்மன் கோயிலில் நடந்த திருமணத்தின்போது, கனவில் நடப்பதைப்போல… எதையும் நம்ப முடியாமல் பேந்த பேந்த விழித்துக்கொண்டிருந்தார் கோட்டீஸ்வரன்.

அடுத்த நான்காண்டுகள் அவளது வாழ்க்கை எந்தப் பிசிருமில்லாமல் நிம்மதியாகப் போனது. குழந்தை பாக்கியம் இல்லாவிட்டாலும், தலை நிறைய சிரிக்கும் பூக்களோடும், நெற்றியிலும் வகிட்டிலும் மிளிரும் குங்குமத்தோடும், களிப்பில் மினுமினுக்கும் முகத்தோடும் சந்திரா ஊருக்கு வரும்போதெல்லாம் நம்ப முடியாமல் பார்த்தது ஊர்.

 சிறுகதை: துளிர்ப்பு

அப்படிப் பார்த்தவர்களில் யாருடைய கண்கள் பட்டதோ... இரண்டு நாள்களாகக் குமட்டிக் குமட்டி வாந்தி எடுத்து, இதோ மருத்துவமனையில் அலங்கோலமாகக் கிடக்கிறாள்.

மூன்று மாதங்களுக்கு முன்பும் இப்படி வாந்தி எடுத்திருக்கிறாள். `ஃபுட்பாய்சன்' என குளுக்கோஸ் ஏற்றி மருந்து கொடுத்திருக்கிறார்கள். இப்போதும் அப்படித்தான் ஆகியிருக்கும் என்ற நினைப்பில்… ஊரடங்கால் வெளியேபோக முடியாமல் கிடந்திருக்கிறார்கள்.

இரண்டு நாளுமே பச்சைத் தண்ணீரைக் குடித்தாலும் வயிற்றில் தங்கவில்லை. குழாய் உடைத்துக்கொண்டு சீறுவதைப்போல ஓங்காரமான வாந்தி. பாம்பைப்போல உடலை முறுக்கி முறுக்கி ஓங்கரிப்பு. மூன்றாவது நாள் காலையில் நைலான் துணியாய் உடல் துவள, கண்கள் நிலை குத்தி, பேச்சு மூச்சற்றுக் கீழே சரிந்திருக்கிறாள். அதற்குப் பிறகுதான் பயத்தோடு சண்முகத்திற்குத் தகவல் சொன்னார் கோட்டீஸ்வரன்.

சண்முகமும் செண்பகமும் பதறிக்கொண்டு அவர்கள் வீட்டுக்குப் போனபோது… சூரைக்காற்று முறித்துப் போட்ட மரக் கிளையைப் போல வெறுந் தரையிலேயே சரிந்து கிடந்தாள் சந்திரா.

மருத்துவமனைக்குள் கால் வைத்தாலே தொற்றுப் பரிசோதனை செய்து தனி வார்டில் போடுவார்கள், குடும்பத்தையே தனிமைப்படுத்து வார்கள், தெருவையே அடைத்து விடுவார்கள் என்றெல்லாம் பயம் காட்டிய பக்கத்து வீட்டுக்காரர்களை மீறி, கோட்டீஸ்வரனின் நண்பர் ஒருவரின் காரில் சந்திராவைத் தூக்கிப் போட்டுக்கொண்டு கிளம்பினார்கள். வழியெல்லாம் நடப்பட்ட தடுப்பு வேலிகளையும், சோதனைக் கெடுபிடிகளையும் கடந்து பெரும் போராட்டங்களுக்குப் பின்னர் இந்தத் தனியார் மருத்துவமனைக்குள் அவர்கள் நுழைந்தபோது… கோட்டீஸ்வரனும் வாய் உலர்ந்து, நாக்கு வறண்டு துவண்டுவிட்டார்.

நோயாளிகள், உடன் வந்தவர்கள், பணியாளர்கள் என எல்லோருமே முகக் கவசங்களுடன் விலகி, விலகி நடப்பதையும், அவர்களின் கண்களில் தெரிந்த பீதியையும் பார்க்கப் பார்க்க சண்முகத்தின் மனசும் பதறியது.

உடனே மருத்துவனைக்கு வராமல் காலம் கடந்து வந்ததற்காக மருத்துவர்கள் ஏகமாய்த் திட்டினார்கள். செவிலியர்களின் படபடப்பு இவர்களின் நெஞ்சை மேலும் உலரவைத்தது. அவர்களும்கூட பெருந்தொற்று பயத்துடனே இருப்பது முகக் கவசங்களுக்கு மேல் அசைந்த அவர்களின் கண்களில் தெரிந்தது. தள்ளி நின்றபடியே அவர்கள் சந்திராவின் கையிலிருந்து ரத்தத்தை உறிஞ்சியபோதும், புறங்கை நரம்பில் விரல் நீள ஊசியைச் செருகி குளுக்கோஸ் ஏற்றிய போதும் மரக்கட்டையைப்போல அசைவின்றிக் கிடந்த சந்திராவைப் பார்த்ததும் சண்முகத்துக்கு மனசு விட்டுப்போனது.

அறைக்குள் கும்பல் சேரவேண்டாம் என செவிலியர்கள் விரட்ட… அறைக்கு வெளியே கிடந்த நீளமான மர பெஞ்சில் உட்கார்ந்தவனுக்கு மனம் இருப்புக்கொள்ளவில்லை. தொற்று பயத்தில் வேறுயாரும் அவன் பக்கத்தில் உட்காரக்கூட இல்லை.

இரண்டு மணி நேரமாக செவிலியர்களும், மருத்துவர்களும் உள்ளும் வெளியுமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். யாரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. கடைசியாக பெரிய மருத்துவரும் உள்ளேபோய் கால் மணி நேரத்தையும் கடந்துவிட்டது.

திடீரென அறைக்குள்ளிருந்து வெளியே வந்த கோட்டீஸ்வரன் வேக வேகமாக மருந்து கவுன்டரை நோக்கி ஓடினார். அவர் முகம் மேலும் கறுத்திருந்தது.

கைநிறைய மருந்துக் கவர்களோடு திரும்பி வந்தவரைப் பார் த்து “மாமா...’’ என்றபடி எழுந்து நின்றான். அவனைப் பரிதாபமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே போய்விட்டார். அந்தப் பார்வையே அவனுக்கு கபீர் என்றது.

சந்திரா அவர்களை விட்டுப் போய்விடுவாளோ? அய்யோ! இப்படி திடீரெனப் போவதற்கா அவ்வளவு காலமும் அக்கினிப் போராட்டத்தை நடத்தினாள்?

பதற்றத்தோடு மீண்டும் உட்கார்ந்தான். முள்ளாய்க் குத்தியது பெஞ்சு. மேலும் பத்து நிமிடங்கள் நரகமாய் நகர்ந்தது.

எதிர்ச்சுவரில் இருந்த கடிகாரத்தில் மூன்று முட்களும் பன்னிரண்டைத் தொட்டு விலகியபோது, செண்பகம் பரபரப்பாக வெளியே வந்தாள்.

சட்டென்று எழுந்துநின்றான் சண்முகம். அவள் என்னவோ சொல்லவருகிறாள். அவள் கண்களையும் உதடுகளையும் மாறி மாறிப் பார்த்தான். அவனுக்கு பயமாக இருந்தது.

“சம்முகம்...” என்றாள்.

அவளால் பேச முடியவில்லை. உதடுகள் துடித்தன. சண்முகத்துக்கு முகமெல்லாம் குபீரென வியர்த்தது.

”கடவுளு கண்ணத் தொறந்துட்டாண்டா... சந்திரா மாசமாயிருக்காளாம்...” என்றாள்.

சட்டென்று மனசு துள்ளிக் குதித்தது சண்முகத்துக்கு. பட்ட மரத்தில் திடீரென ஒரு துளிரா... அதற்காகத்தான் அவள் உடலில் இவ்வளவு பெரிய போராட்டமா? ஐயோ கடவுளே...!

உடனே சந்திராவின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று அவன் மனம் பரபரத்தது.

சட்டென்று அறைக்குள் நுழைந்தான்.

கட்டில் வெள்ளை விரிப்பின் மீது கண்களை மூடி மல்லாந்து படுத்திருந்தாள் சந்திரா. மனசு பூரிக்க அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்.

சந்திராவின் முகத்தில் ஒரு குட்டிச் சந்திரா தெரிந்தாள்.