Published:Updated:

சிறுகதை: சகாயம்

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

ஆர்.என்.ஜோ டி குருஸ்

சிறுகதை: சகாயம்

ஆர்.என்.ஜோ டி குருஸ்

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

திகாலைப் பொழுது, மண்டபம் கடற்கரைக்குச் செல்வதற்காக பாம்பனிலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் கிளம்பியிருந்தார் சகாயம். பாம்பன் சாலைப் பாலத்தின் வழியாகப் பயணம், பழைய பதற்றமில்லை. ஓரளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட கொரோனாக் காலம் என்பதால் பாலத்தில் அதிக வாகனப் போக்குவரத்துகளும், இரவு, பகல், மழை, வெயில் என்றும் பாராமல் செல்பி படமெடுப்பதற்காகக் குறுக்குமறுக்காகச் சாடும் கூட்டமும் இல்லை. பாலத்தின் வடபுறமும் தென்புறமும் ஆங்காங்கே சிலர் தூண்டல் போட்டு மீன்பிடித்தபடி இருந்தார்கள். மாவுளா, பாறை, ஓரா, மதனம் போன்ற மீன்கள் கிடைக்கலாம். இடுப்பில் தொங்கும் பைகள் நிறைந்தவுடன், பாலத்துக்குக் கீழே இருக்கும் ஏற்றுமதிக் கம்பெனிகளில் கொண்டுபோய்க் கொடுத்துப் பணம் வாங்கிக் கொள்வார்கள். நிலையில்லாத இந்த வருமானத்திலேயே குமருகளைக் கரையேற்றிய பலரை சகாயத்துக்குத் தெரியும். நிதமும் பாலத்தைக் கடந்து வருகிறார், போகிறார். ஆனாலும் இப்படித் தூண்டல் போடும் எண்ணம் மட்டும் அவருக்கு வந்ததே இல்லை. காரணம், கடல் நடுவே இருக்கும் இந்தப் பாலம், தனிமையில் பிரபஞ்சப் பெருவெளியோடு தான் உரையாடுவதற்கான புனிதமான இடம் என்ற புரிதல் அவருக்கு.

சிறுகதை: சகாயம்

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், சாலைப்பாலத்தின் நடுப்பகுதியில் நின்று சுத்தமான காற்றை ஆசைதீர முகர்ந்து, கடல் நடுவே நூறு வருடங்களுக்கு மேலாக கம்பீரமாய் நிற்கும் ரயில்வே பாலத்தையும், தெற்கின் மரங்கள் அடர்ந்த தீவுக்கூட்டத்தையும், குடிநீரைத் தேக்கி வைத்துக் கரைகளிலும் இயற்கை அரணாய் நிற்கும் மணற்குன்றுகளையும், கடற்பரப்பில் நங்கூரமிட்டுக் கிடக்கும் விசைப்படகுகளையும், அங்கு குறுநடை செய்யும் வத்தைகளையும், வள்ளத் தொழில் நாள்களில் கரைவரும் வள்ளங்களிலிருந்து கூடை கூடையாகக் கரையேறும் வகை வகையான மீன்களையும், அவற்றை ஏலமெடுக்க மொய்க்கும் மக்கள் கூட்டத்தையும், மீன்களைக் கவர வானில் வட்டமிடும் பறவைக் கூட்டத்தையும் ரசித்தபடியே கடந்து போவதுண்டு.

அமாவாசை இரவுகளில் மட்டும், தனிமையில் இளம்போதையில் நடுப்பாலத்தில் நின்றபடி தன் வானகத் தந்தையோடு அளவளாவுவார். போகிற போக்கில் பார்ப்பவர்கள், யாரோ பிராந்தன் என எண்ணிக் கடப்பார்களாம். அவரோ, பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே, உமது நாமம் பரிசுத்தம் எனப் போற்றப்படுக. உமது இயற்கையான அரசு வருக. உமது சித்தம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல இந்த மண்ணுலகிலும் செயல்படுவதாக. எங்கள் அன்றாட உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகத் தீமை செய்தவர்களை நாங்கள் மன்னிப்பதுபோல எங்கள் பாவங்களை மன்னித்தருளும். பலவீனர்களாகிய எங்களைச் சோதனையில் விழவிடாதேயும், தீமைகளிலிருந்து எங்களைக் காப்பாற்றும் என நெக்குருகி நிற்பாராம்.

சிறுகதை: சகாயம்

தூண்டல் போடுபவர்களின் முகங்களில் மலர்ச்சியைப் பார்க்க முடிந்தது. நல்ல மீன்பாடு போல… யாரோ எவரோ, ஆனாலும் மக்கள் மகிழ்வாய் இருக்கிறார்கள், வழக்கமாய் புன்னகைத்தபடியே பயணிக்கும் அவரால் அன்று புன்னகைக்க முடியவில்லை. மனம் முழுவதும் வியாகுலத்தால் நொந்து நிரம்பியிருந்தது.

கச்சான் காலமாதலால் தென்பகுதியிலிருந்து நீரோட்டம் வடக்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. வாடையில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும் நீரோட்டம் சுழிப்பெடுத்துப் பாயும். கச்சானில் அப்படியில்லை, நின்று நிதானமாய் நிரம்பிப் பாயும். கரைவாடைக் காலத்தில் தீவில் கபளீகரமாகும் வடகடல் கரைபற்றியும், அழிந்து வரும் இயற்கையான நீர்வளம் பற்றியும் அவருக்கு ஆதங்கம் உண்டு. கடல் நடுவே இருக்கும் தீவில் மீனவர்களுக்கான திட்டங்களை பிரசாதம்போலத் தூக்கி எறிகிறார்களே, தீவு நிலப்பரப்பின், கடலின், காற்றின் தன்மையறிந்த பாரம்பர்ய மீனவர்களிடம் கருத்து கேட்காமல் திட்டங்களை முன்னெடுக்கிறார்களே என அவர் வருந்தியதுண்டு. வாடைக்காலமானால் தங்கச்சிமடம் மாந்தோப்புக்கு வடக்கே, கடலில் துருத்திக்கொண்டிருக்கும் புது ஜெட்டியைப் பதற்றத்தோடேயே போய்ப் பார்ப்பார். கரைப்பகுதியில் கிழக்கு மேற்காக அமைத்திருந்தால் கச்சான் காலத்துக்காவது அது பயன்பட்டிருக்குமே. மக்கள் பேச்சைக் கேட்காமல் கடலுக்குள் இயற்கையின் இயல்பு தெரியாமல் யாருக்கு வந்த விருந்தோ என்று அமைத்ததால், எந்தத் தொழிலுக்கும் பயன்படாமல் போய், வாடையில் வடகடற்கரையின் குடியிருப்புகள் கடலுக்குள் மூழ்குவதற்கும் காரணமாகி இருக்கிறதே ஜெட்டி என்றுதான் சந்திக்கும் மீன்துறை அதிகாரிகள் எல்லோரிடமும் சொல்வார். ஆனால், அவர்கள் வழக்கம்போல் அவரைக் கண்டுகொள்வதில்லை.

சிறுகதை: சகாயம்

பாம்பனில் பெருங்கொண்ட வியாபாரிகள் முண்டியடித்து ஏலம் கேட்பதால், வாளி தூக்கும் சிறிய வியாபாரிகளுக்கு மரியாதை இல்லை. மண்டபத்தில் வடக்கு, தெற்காக ஆறு கடற்கரைகள். ஒரு கடற்கரையில் விட்டால், மறுகடற்கரையில் பிடித்துக் கொள்ளலாம். முகம் தெரிந்த வியாபாரிகள், மரியாதையான சனங்கள், அன்பொழுகப் பழகும் மரைக்காயர் உறவுகள்... அதனாலேயே மண்டபத்தில் தொழில்செய்ய அவருக்குப் பிடிக்கும். ஒருகாலத்தில் கொழும்பில் சீரும் செல்வாக்குமாய் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த மஸ்கரஞாஸ் குடும்பத்துக்காரர் சகாயம். இலங்கையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிலைமை கட்டுக்கடங்காமல் போனபோது தாய்நாடு திரும்பியவர்கள், அதே வியாபாரத்தில் இங்கு வெற்றி பெற முடியவில்லை. அந்தக் காலத்தில் தனுஷ்கோடியிலிருந்து, இலங்கை மன்னார்வரை இயக்கப்பட்ட போட் மெயில் கப்பல் போக்குவரத்தில், மஸ்கரஞாஸ் குடும்பத்தின் பங்கு அதிகமாம். இன்று வியாபாரத்தில் நொந்து நொடிந்து போனாலும், அடிமையாய் கூலிவேலை பார்ப்பதில் மட்டும் அவருக்கு ஏனோ மனம் ஒப்பவேயில்லை.

வாழ்க்கை சிலரைச் சிலவேளைகளில் முட்டுச் சந்துகளில் நிறுத்திப் பரிதவிக்க வைக்கும், ஆனால் ஒவ்வொரு நாளும் முட்டுச் சந்தா! எவ்வளவு உழைத்தாலும் பொருளாதாரம் மட்டும் அவர் கைக்குள் அடங்க மறுத்தது. நிலையில்லாத மீன் வியாபாரத்தில் கடன் வாங்கிப் போட்ட முதலும் கையைக் கடித்து, மீன் விற்ற பணமும் அங்கங்கு முடங்கி, நாளும் கடன்காரர்கள் தொல்லை. ஆனாலும் தொழிலை விட முடியவில்லை. தொழில் சூழல் எப்படியிருந்தாலும், இருப்பதை வைத்து வாழத் தெரிந்த மனைவி வாய்த்திருந்ததால் வாழ்வது குடிசையே ஆனாலும் வீடு சொர்க்கம். தனக்குக் கிடைக்காத மேற்படிப்பு; தன் பிள்ளைகளுக்காவது கிடைக்க வேண்டுமே என எவ்வளவோ முயன்றார், ஆனாலும் வறுமையில், பிள்ளைகள் கடலேறித் தொழில் செய்வதைத் தடுக்க முடியவில்லை. கவலை போக்கும் மருந்தாய், சமீபத்தில் பிறந்திருந்த மகள் வயிற்றுப் பேரப் பிள்ளைகள் மாறியிருந்தன.

‘வாழ்வின் மிகப்பெரிய தானம் கன்னிகா தானம் என்கிறார்களே. கடன வுடன வாங்கி அதையும் செய்து முடிச்சிற்றம… ஆனாலும் பிரச்னைகள் தொடர்கதையா இருக்க. நான் ரத்தமும் சதையுமான மனுசனா இருக்க விரும்புறேன். சகாயமின்னு எனக்கு சரியாத்தான் பெயர் வச்சிருக்காங்க. கண்ணுக்கு முன்னால ஒரு கஷ்டத்தக் கண்டா மனசு தானா எளகிருத…இவ்வளவு பிரச்னைக்கிடையிலயும் ஓடிக்கிட்டுருக்க ஓட்டத்துக்கு, இந்த எளகுன மனசுதாம் காரணம்போல. ஆனா குடும்பக் கஷ்டத்துல, பதினஞ்சி வயசுல நண்டு வியாபாரத்துக்காகத் தூக்குன வாளி மட்டும் இன்னும் கையவுட்டு இறங்குவனான்னு அடம் புடிக்கிது.’

பாம்பனில் நோய்நொடியில் சிரமப்படுபவர்கள் மருத்துவமனை போக வேண்டுமா, வறுமையில் தவிக்கும் பிள்ளைகளைத் தொண்டு நிறுவனங்களைத் தொடர்புகொண்டு பள்ளிகளில் சேர்க்க வேண்டுமா, இயற்கைச் சீற்றத்தால் பாதிப்புக்குள்ளாகுபவர்களுக்கு அரசின் உதவி பெற்றுத் தர வேண்டுமா, ஏழை எளியவர்களுக்கு அரசின் பல்வேறு நலத் திட்டங்களைப் போராடிப் பெற்றுத் தரவேண்டுமா, சமூக முன்னேற்றத்திற்காகக் கூட்டங்கள் நடைபெறுகிறதா... எல்லாவற்றிலும் முதல் ஆள் சகாயம். சமூக அக்கறையுடனான இலக்கிய ஆர்வத்தால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் நூலகங்களைத் தேடிச்சென்று வாசிக்கும் பழக்கமும் உண்டு. தேர்ந்த எழுத்தாளுமைகளின் நாவல்களை வாசிக்கும்போதெல்லாம், கடற்கரைச் சமூக வாழ்வும் இப்படிப் பதிவானால் பிறவிப்பயன் பெற்றவனாவேனே என ஆதங்கப்படுவார்.

அவரிடம் உதவிபெற்ற உறவுகளே காதுபட ‘`உண்டான தொழிலப் பாக்காம, பொதுச் சேவ பண்ண வந்திற்றான் போக்கத்த பய. இவனத்தான கொண்டுபோயி கவுன்சிலரா வைக்கப் போறாங்க’’ எனத் திட்டியிருக்கிறார்கள். எதையும் ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டுவிடும் பழக்கம் அவருக்கு. ஆனால் ஆள் சரியான நக்கல் பேர்வழி. ஒருமுறை வீட்டில் ‘`ஞாயிற்றுக் கிழமையின்னும் பாக்காம, கோயிலுக்கு பூசைக்கும் போகாம இப்புடிப் படுத்துக் கிடக்கிறியள’’என்று மனைவி கேட்க, முந்தின நாள் இரவு குடித்திருந்த மதுவின் போதை இறங்காமல் இருந்தவர், ‘`கிங்பிசர் பீரினால் என்மேல் தெளிப்பீர், நானும் தூய்மையாவேன். பீரே என்னைத் தழுவ நான் உறைபனிதனிலும் வெண்மையாவேன்’’ என்று பாடினாராம்.

யாராவது அவரிடம் வியாபாரம் குறித்துப் பேசினால் ‘`தம்பி, பொருளாதாரம் உள்ள பூன 27 புலிக்கி சமம்; அதுவே பொருளாதாரம் இல்லாத புலியா, அது 27 பூனைக்கி சமம்’’ என்பாராம். ‘ஊரார் மெச்ச சீரும் சிறப்புமா வாழ கையில பணங்காசு இல்ல, ஆனா இயேசுவப்போல மாமனிதனா வாழாட்டியும் இருக்குறத வச்சி மனுசனா வாழலாமே’ன்னு மனைவியிடம் அடிக்கடி சொல்வார். வாழ்வை அதன் போக்கிலேயே வாழ்ந்து கழித்துவிட வேண்டும். காரணம், இனி ஒருமுறை பிறக்கப்போவதில்லை என்பதில் திடமான நம்பிக்கை உள்ளவர் சகாயம்.

ஒரு வாரத்துக்கு முன்னால் இப்படியான பயணம். பாலத்தின் இறக்கத்தில் புள்ளியாய்த் தெரிந்த ஒரு உருவம், அருகில் வரவரச் சிறுமியாய்த் தெரிந்தது. ‘கொரோனாத் தளர்வுகள் அறிவிச்சவுடன பாம்பனுக்கு வேலைக்கி போறா போல… யாரு பெத்த புள்ளையோ, மண்டபம் அகதி முகாமுல இருந்து ஓட்டமும் நடையுமா வாறா…அப்புடியே எம்பொண்ணுமாரி இருக்காள, என்ன கஷ்டமோ கடவுளே… அக்காவ பொத்திப் பொத்தி வளத்து அழகு பாத்து, டீச்சருக்குப் படிக்க வச்சி வேலையும் வாங்கிக் குடுத்தாரு அப்பா, அவ முதல் மாத சம்பளத்தக்கூட வாங்கப் பொறுக்காம கொத்திக்கிட்டுப் போயிற்றாரு மச்சான். தாயும் புள்ளயுமா இருந்தாலும் வாயும் வயிறும் வேறதான… அவளாவது நல்லாயிருப்பான்னு பாத்தா, தேவையில்லாம புருசன்மேல சந்தேகப்பட்டு சித்தப்பிரம புடிச்சி இருக்காளாம். அவ வாங்கி வந்த வரம் அப்புடிபோல. இந்தப் புள்ளைய பாலத்தக் கடத்திக் கொண்டு போய் விடலாம், ஆனா கடக்கரையில ஏலம் முடிஞ்சிபோயிரும…’

கண்களில் இயல்பாய்க் கசிந்த கண்ணீரைத் துடைத்தபடியே அவளைக் கடந்து போனார். கடற்கரையில் ஏலம் எடுக்கும் வேளையிலும் திரும்பத் திரும்ப அக்காவின் நினைப்பும், கடந்து போன சிறுமியின் நினைப்பும் மனதில் அலை மோதியபடியே இருந்தன. மண்டபம் கடற்கரையில் ஏலம் எடுத்துக் கிடைத்த மீன்களைக் கைமாற்றி விற்றால், அது கைநட்டமாய்க் கணக்கு வந்திருந்தது. சரக்கை வண்டியில் ஏற்ற, இறக்க உதவி செய்யும் சங்கிலி அண்ணனும் ஒருநாள் ‘`சாப்புடாட்டி உசுரா போயிரும், காலையில குடிச்ச சாயாவே வவுறு நெறைய இருக்கு’’ என்றார். இறைவன் இன்று அளந்தது அவ்வளவுதான் என்றபடி சகாயம் வீடு திரும்ப, மதியத்துக்கு மேல் ஆகியிருந்தது. நல்ல பசி வேறு. வீட்டை நெருங்கினால் வாசலில் அதே சிறுமி.

‘`அக்கா, சித்தாள் வேல பாக்கும்போது கண்ணுல சிமெண்ட் விழுந்திரிச்சி, கண்ணுவலி தாங்குல. ரெண்டு சொட்டுத் தாய்ப்பால் தாங்கக்கா’’ கெஞ்சுகிறாள். உள்ளத்தில் பொங்கி வந்த கருணையை அடக்க முடியாமல் வீட்டுள்ளே பார்க்கிறார். பேறுகாலமாகி ஒரே பிரசவத்தில் ஆணொன்றும், பெண்ணொன்றுமாய் பெற்றிருந்த மகள், மார்புச்சேலையை விலக்கியவாறே சிறுமியை வீட்டுக்குள் அழைக்கிறாள். அடுப்பங்கரையிலிருந்து கையில் சிறுகிண்ணத்தோடு அவர் மனைவி. மனசெல்லாம் நிறைந்து வழிய, வீட்டுள்ளே நுழைகிறார் சகாயம்.

தற்செயலாய் உள் அறைக்குள்ளிருந்து வெளியே வந்து சிறுமியைக் கண்ட அவரது மருமகனோ, ‘`புள்ளயளுக்கு வச்சிருக்க பாலப்போயீ…’’ என்றவாறே சிறுமியை விரட்டுகிறான். சிறுமி மிரண்டு ஓடுகிறாள். கண்மூடித் திறப்பதற்குள் சம்பவம் நடந்து முடிந்து விடுகிறது. யாரிடமும் எந்த அனக்கமும் இல்லை. ஏறிட்டு தன்னைப் பார்த்த மனைவியின் விழிகளில் ததும்பிய கண்ணீரைப் பார்த்த மருமகன் திரும்பினால் மாமனார், மாமியார் இருவர் கண்களிலும் அதே கண்ணீர். தவற்றை உணர்ந்தவனாய் பதற்றத்தோடு தெருவுக்கு ஓடிப் பார்க்கிறான், அந்தச் சிறுமியோ அங்கிருந்து மறைந்துபோனாள். கையறு நிலையில் செய்வதறியாது திகைத்து நின்ற மொத்தக் குடும்பத்தின் நிசப்தமான நிமிடங்களைக் குழந்தைகளின் அழுகுரல்களே கலைத்தன.

மனம் சுக்குநூறாய் உடைய இரண்டு நாளாய் அவருக்குச் சாப்பாடும் தூக்கமும் இல்லாமல்போனது. இரவுகளில் ‘`நான் பசியாய் இருந்தேன், எனக்கு நீங்கள் உணவு கொடுக்கவில்லை; தாகமாய் இருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தணிக்கவில்லை; நோயுற்றிருந்தேன், என்னை நீங்கள் கண்டுகொள்ளவில்லை…’’ என்ற புலம்பல். இன்றும் பாம்பன் பாலத்தைக் கடக்கும் போதெல்லாம் அந்தச் சிறுமியின் உருவம் சகாயத்தைப் பாடாய்ப் படுத்துகிறதாம்.

எளிய மனதோர் பேறு பெற்றோர், ஏனெனில் இறையரசு அவர்களது.