Published:Updated:

உமையா(ள்) - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

சிறுகதை : ஏக்நாத்

உமையா(ள்) - சிறுகதை

சிறுகதை : ஏக்நாத்

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை
சிறூகதைளிக்கதவைப் பூட்டிவிட்டுத் தெருவுக்கு வந்த உமையா பாட்டியைப் பார்த்ததும், கீழோரத் தொட்டியில் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கும் வெள்ளாட்டுக்குட்டி, ‘ம்மே’ என்றபடி அவளை நோக்கி வந்தது.

‘‘ஆமா, எங்க போனாலும் எம் பொறத்தாலயே வந்துரு. ஏம்னா எனக்கு வேற சோலி இல்லைலா? வெளியில எங்கயாது மேயப் போவியா... ‘ம்மே’ன்னு தொண்டையப் போட்டுகிட்டு வார?’’ என்றபடி மேற்கு நோக்கித் திரும்பி, எதிரில் யார் வருகிறார்கள் என்று பார்த்தாள்.

‘பத்திரமாக வைத்திருக்கிறோமா’ என்று இடுப்பில் செருகிய வீட்டுச்சாவியை ஒருமுறை சரிபார்த்துக்கொண்டாள். இப்போதுதான் முழுவதுமாக விடிந்து, நிழல் படிந்து கிடக்கிற வீட்டுச் சுவர்கள் மெள்ள மெள்ள வெயிலுக்குள் அகப்பட்டுக்கொண்டிருந்தன. மலையில் இருந்து குளிர்தரும் காற்று வீசிச்செல்கிறது.

பலசரக்குக்கடை சுப்பையா, சரக்குகள் சுமக்கும் கேரியரைக் கொண்ட டிவிஎஸ் மொபெட்டில், பாட்டியைத் தாண்டிப் பறந்தார், ‘ஏய் கெழவி, ஓரமா நின்னு’ என்று சொல்லிவிட்டு. மூக்கன் வீட்டு கிடாரிக்கன்னு, அவன் வீட்டு வாசலில் நின்று சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தது. கொஞ்சம் தூரத்தில் அசை போட்டபடி பெருமாள் கோயில் காளை, மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தது. அது தனது வீட்டைத் தாண்டியிருக்கிற செல்லம் மாவின் தொழுவுக்குத்தான் போகும். அங்குதான் கொழுக் மொழுக்கென நான்கு பசுக்கள் இருக்கின்றன.

உமையா(ள்) - சிறுகதை

அதைத் தவிர, வெறிச்சோடிக் கிடந்தது தெரு. இன்னும் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஒருவேளை முன்பே கிளம்பி, தங்கள் சோலிகளைப் பார்க்கப் போய் விட்டார்களோ என்னவோ?

பாட்டியின் கையில் வெளிறிப்போன, கைப்பிடி பிய்ந்த மஞ்சள் பை. அதற்குள், நான்கு முனைகளிலும் மஞ்சள் பூசப்பட்ட மூத்த பேரனின் கல்யாணப் பத்திரிகையும் வெற்றிலைபாக்கு, தேங்காய், பழங்களும் பத்திரமாக இருந்தன.

கீழ்வீட்டுத் திண்ணையில், ஒரு காலைத் தரையில் ஊன்றிக் குத்த வைத்தபடி உட்கார்ந்திருக்கும் கொம்பையா, பீடியை இழுத்துக்கொண்டிருந்தார். நரைத்துப்போன தலையின் முன்பக்க முடிகளைக் காணவில்லை. இவளைப் பார்த்ததுமே முகத்தை மேல்நோக்கித் திருப்பிக்கொண்டார். அவர் முகத்தில் கோபம் கொடுமையாக மாறியது. பிறகு அக்கொடுமையை அடக்கி, ‘‘கோட்டிக்காரி செரிக்கி, இன்னைக்கு எங்கையாலதாம் உனக்கு சாக்காலம்...’’ என்று கறுவிக்கொண்டார்.

பக்கத்து வீடு என்றாலும் பல வருடங்களாகப் பேச்சில்லை. ஒருகாலத்தில் மைனி, கொழுந்தன் என மகிழ்வோடு உறவாடிய பாசமுறைகள் முறிந்து வருடங்களாகிவிட்டன. இந்த வீட்டிலிருந்து அந்த வீட்டுக்கு, ஆடும் கோழியும் கறிகளாகப் பரிமாறிய பழக்கமெல்லாம் முடிந்துவிட்டது. கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என்றாலும், ஓடி ஒத்தாசை செய்த கைகளும் கால்களும் இப்போது திசை மாறிவிட்டன.

ஒன்றுமில்லை. சாதாரணப் பேச்சு நீண்டு, பெரும் வில்லங்கமாகி இப்போது கொலை வெறியாகி இருக்கிறது கொம்பையாவுக்கு.

பாட்டி, நடையைத் தொடர்ந்தாள். வயற்காட்டு வழியாக நேராக மேற்கு நோக்கி நடந்தால், மரங்களும் வயல்களும் சூழ்ந்த பெத்தான் பிள்ளை குடியிருப்பைத் தாண்டியதும் மலை. வனத்துக்குள் சிறிது தூரம் நுழைந்தால், கிராம்பு வாசனை சூழும் தாழ்ந்த ஓடையின் வடப்பக்கத்தில் கருஞ்சிலையென நிற்கிறார், காட்டுமாடன். யாருமற்ற வனத்தில் இருந்தபடியே, ஊருக்குள் இருக்கும் சொந்தங்களை அவர் காத்துவருவதாகச் சொல்லப்பட்டு வந்தது.

பாட்டியின் மனசு முழுவதும் குடும்பத்தைச் சுற்றியே ஓடிக்கொண்டிருந்தது. ‘எதுவா இருந்தாலும் குலதெய்வத்தைக் கும்புட்டுட்டு வந்துதாம் முதல்ல செய்யணும்’ என்று பாட்டி சொல்லிச் சொல்லி ஓய்ந்துவிட்டாள். அவளுக்கு முந்தைய காலத்திலிருந்தே வரும் வழக்கம் அது.

ஆனால், அவளுடைய இரண்டு மகன்களுக்கும் சாமி ஆகாது. ‘அதைலாம் ஒன்னோட வச்சுக்கோ’ என்று சொல்லிவிடுகிறார்கள். பேரப் பிள்ளைகளுக்காவது ஆகுமா என்றால், அப்பன்களைப் பின்தொடர்கிறார்கள் அவர்களும். பிழைப்பின் பொருட்டு பக்கத்து ஊர்களில் வசிக்கிறார்கள்.

மூத்த மகனின் முதல் மகனுக்கு இப்போதுதான் திருமணம். வைகாசியில் தேதி குறித்திருக்கிறார்கள். பெங்களூரில் ஐ.டி வேலை பார்க்கும் பேரன், வட இந்தியப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளப்போகிறான். கல்யாணம் ஊரில்தான். மூன்று நாள்கள் கழித்து பெங்களூரில் வரவேற்பு.

முதல் பத்திரிகையைக் குலதெய்வத்துக்கு வைக்க வேண்டும் என்பதை பிள்ளைகள் கேட்டபாடில்லை என்றாலும், விட்டுவிட முடியுமா, தொன்று தொட்டுவரும் வழக்கத்தை? வேறு வழியில்லை. உமையா பாட்டி, அவளாகவே காட்டுக்குள் போக முடிவு செய்துவிட்டாள். மூத்தவன் பொண்டாட்டி எப்போதாவது பாட்டியின் பேச்சைக் கேட்பவள்தான். இந்த விஷயத்தில் புருஷனை மீற மாட்டேன் என்று சொல்லிவிட்டதால், தானே செல்வது என்று தீர்மானித்து இதோ நடையைக் கட்டிவிட்டாள்.

‘திங்கதுக்கு மூணு வேளை சோறும், கண்ட நேரம் செலவழிக்கத் துட்டும் இருந்துட்டா எல்லாரும் போதும்னு நெனைக்காவோ. அதை யாரு கொடுத்ததுன்னு நெனைக்காண்டாமா? குலசாமி கொடுத்ததுன்னு எப்படிச் சொல்லிப் புரிய வைக்க? சாமி வேண்டாம், சாத்தா வேண்டாம்னா, குடும்பம் நல்லாருக்குமா?’ தன்னால் பேசிக்கொண்டே நடந்தாள்.

உமையா(ள்) - சிறுகதை

ரயில்வே பாலத்தின் அருகில் சென்றுகொண்டிருந்தபோது மறித்தான், இன்னொரு பேரன் மந்திரம். ‘‘ஒனக்கென்ன கோட்டியா கெழவி புடிச்சிருக்கு? முந்தா நாளுதாம் நாலு யானை எறங்கியிருக்கு. பாரஸ்ட்காரங்க கையில காலுல விழுந்து அதை விரட்டிக்காரவோ... பரம்சண்ணன் தோப்புல கரடி கெடந்து அட்டகாசம் பண்ணியிருக் குங்காவோ... நீ இப்பம் ஒத்தைல காட்டுக்குள்ள போறன்னு வீம்பு புடிச்சிட்டு இருக்க’’ என்றான்.

‘‘வந்தா வந்துட்டுப் போது. என்னய அதுவோ என்ன செய்யும்? இன்னைக்கு நேத்தா, இந்தக் காட்டுக்குள்ள அலையுதேன்?’’ என்றாள் பாட்டி.

‘‘இங்காரு, உங்காலம் மாதிரிலாம் இப்பம் இல்லை. சொன்னா கேளு. அப்பாதாம் கூட்டியாரச் சொன்னாரு. ஒழுங்கா வீட்டைப் பாத்து நட.’’

வயலுக்கு மருந்தடிக்கப் போகும் செல்லையா, இவர்களைப் பார்த்ததும் விவகாரத்தைக் கேட்டுவிட்டு, ‘‘ஒத்த செத்தையில காட்டுக்குள்ள போவப் போறியளாங்கும். நல்லாருக்கு கதை. வயசானாலே புத்தி இப்படிப் பேதலிச்சிரும் போலுக்கு. பேசாம வீட்டைப் பாத்துப் போ’’ என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான்.

‘‘ஏல மூக்கடைச்சான், யாருக்கு புத்தி பேதலிச்சிருக்குங்க? உங்க ஆத்தாவமாரின்னு நெனச்சியோல, ஒன் துருத்திய ஊதிட்டுப் போ, பேசாம’’ என்று ஏசியவள், ‘‘நீங்களாம் பொறக்கதுக்கு முன்னாலயே நான் இங்க கெடந்து உருண்டவளாங்கும். நிறைய யானையளையும் புலியளையும் பாத்தவா. ஒங்க சோலிய பாத்துட்டுப் போவேளா, எனக்கு புத்தி சொல்ல வந்துட்டாம்’’ என்ற பாட்டி, தொடர்ந்து நடக்கத் தொடங்கினாள்.

வாசலில் உட்கார்ந்திருந்த கொம்பையா, வீட்டுக்குள் போனார். மேல் பக்கம், மாடுகள் குடிக்கக் கருங்கல்லால் ஆன, கழனித் தண்ணீர்த் தொட்டி. அதில் அவர் மனைவி முந்தாநாள் பொங்கியிருந்த பழைய சோறை நீத்தண்ணி யோடு கொட்டி வைத்திருந்தாள். அதில் இருந்த கலங்கலுடன் சேர்ந்த புளிச்ச வாசம் கப்பென்று வீட்டின் முன்பகுதியில் வீசிக்கொண்டிருந்தது.

திண்ணைக்கு மேலே, முன்கூரையில் உறையோடு செருகிப் பத்திரமாக வைத்திருந்த கத்தியை எடுத்தார். மாட்டுத்தோலில் செய்யப்பட்ட கத்தியின் உறை, இளம்பச்சை நிறத்தில் கரடுமுரடாக சொரசொரப்புடன் இருந்தது. அதை அருகில் வைத்துவிட்டு, தொழுவின் ஓரமாக, எப்போதோ வெட்டப்பட்ட பூவரசமரத் தூரின் அருகில் குத்த வைத்து, கத்தியைத் தீட்டத் தொடங்கினார். கொஞ்சம் சாம்பலை மரத்தூரில் தூவி, அதன் மேல் வைத்து சிறிது நேரம் அப்படியும் இப்படியுமாகத் தீட்டினார். கத்தி கூர்மையானது.

உமையா பாட்டிமீதான கோபம் ஏங்கி ஏங்கி வந்துகொண்டிருந்தது. அவள் கோயிலுக்குப் போவது நேற்றே தெரிந்ததுதான். போய்விட்டு வரும் வழியில், ஆட்கள் நடமாட்டமில்லாத, திருடி அம்மன் கோயில் அருகே, சோலியை முடித்துவிட நினைத்திருந்தார்.

அது பல வருடப் பஞ்சாயத்து. உமையாளின் வயலுக்கு அடுத்த கீழ்ப்பக்கம் கொம்பையாவின் வயல். இரண்டும் ஐந்து மரக்கா வெதப்பாடு. மழைத் தண்ணீருக்காக வானம் பார்த்துக் காத்துக்கிடந்த காலம் ஒன்றில், பயிர்கள் கருகி, உருக்குலைந்து உயிர்விடத் தயாராகியிருந்தன. அந்த நேரத்தில் அணையில் இருந்த கொஞ்ச தண்ணீரையும் திறந்துவிட்டிருந்தார்கள். வாய்க்காலில் மண் உரிந்தபோது, கொஞ்சமாக அசைந்து ஆடி வந்துகொண்டிருந்தது தண்ணீர். இரவு பகலாக வயலில் காத்துக்கிடந்து, ஒவ்வொரு வயலுக்கும் தண்ணீரை அடைத்து அடைத்துப் பாய்ச்சிக்கொண்டிருந்தார்கள் சம்சாரிகள். உமையாள் வயலுக்குத் தண்ணீர் வர மறுநாள் ஆகிவிடும் என்று சொல்லப்பட்ட அன்று, தங்கச்சி மாப்பிள்ளை மாரடைப்பில் இறந்துவிட்டார் பக்கத்து ஊரில். போகாமல் இருக்க முடியாது. கொம்பையா பொண்டாட்டி யிடம், ‘‘என் வயல்ல எப்படியாது தண்ணி பாய்ச்சிரும்மா, மறந்துராத’’ என்று ஏழு தடவை சொல்லிவிட்டுப் போனாள், கண்ணீரோடு மாரில் அடித்துக்கொண்டு.

காரியம் முடிந்து மறுநாள் அவசரம் அவசரமாகத் திரும்பி வந்தவள், நேராக வயலுக்குத்தான் போனாள். ‘கருகும் நிலையில் இருந்த பயிர்களுக்கு இந்தத் தண்ணீர் உயிர்கொடுக்குமா?’ என்ற யோசனையில் இருந்தவள், வயலைச் சுற்றிப் பார்த்தாள். பாதி வயலில் மட்டும் ஈரம் இருக்க, மீதி அப்படியே பழையபடி காய்ந்துகிடந்தது, சொட்டுத் தண்ணீர் இல்லாமல். மற்ற வயல்களில் தண்ணீர் நிறைந்திருக்க, இவள் வயல் மட்டும் இப்படி இருந்ததில் கொதித்துவிட்டாள் உமையாள். கொம்பையா பொண்டாட்டியைத் திட்டித் தீர்த்தாள். ‘‘பாதவத்தி இப்படியா ஓரவஞ்சனை பண்ணுவ?’’ என்று ஆரம்பித்து, தொடங்கியது பெருஞ்சண்டை.

கொம்பையா, தன் மனைவிக்கு ஆதரவாக வந்தார். பேச்சு நீண்டு நீண்டு பெரிதானது. தொழுவில் கிடந்த ஈக்கங்குச்சி வாரியலைத் தூக்கிக்கொண்டு அவர் பொண்டாட்டியை அடிக்கப் போன உமையாளை, கொம்பையா ஓடிவந்து வழிமறித்தார் நாக்கைத் துருத்திக்கொண்டு. ஆத்திரத்தில் அவரையே விளாசிவிட்டாள் பாட்டி. அது எதிர்பாராத அடிதான். இருந்தாலும் தாக்குதல் தாக்குதல்தானே.

‘‘தொழுவைத் தூக்குத வாரியள வச்சு, மீசை வச்ச ஆம்பளைய இப்படியா அடிப்பா, சிறுக்கி? உன்னைய என்ன செய்தேன் பாரு’’ என்று அவர் பொண்டாட்டி அரிவாள் மனையோடு உமையாளை நோக்கி ஓடியபோது, தெருக்காரர்கள் கூடிவிட்டார்கள். அவளை அப்படியே பிடித்துக் கொண்டார்கள். பிறகும் சண்டை ஓயவில்லை.

சில பல சமாதானப் பேச்சுகளுக்குப் பிறகு கொஞ்சம் ஓய்ந்தது பிரச்னை. உமையாளின் மகன்கள், வெளியூரில் மாமா வீட்டில் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இந்தச் சண்டை சச்சரவுகளை நாகரிகமற்றதாகக் கருதியதால், அம்மாவுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டுப் போனார்கள். கூடவே, அம்மாவையும் திட்டிவிட்டுப் போனார்கள்.

எப்போதாவது டாஸ்மாக் கடைகளில் சேக்காளிகளோடு குடித்துக் கொண்டிருக்கும்போது யாராவது ஒரு சொந்தக் காரன் உசுப்பேற்றி விடுவான் கொம்பையாவை. ஏதாவது ஒரு வாக்குவாதத்தில், ‘‘என்னத்த இருந்தாலும் ஒரு பொட்டச்சி கையால வாரியப் பூசை வாங்குனவம்தான நீ? பேச வந்துட்டாம் பேச?’’ என்று எக்காளமாக ஆரம்பித்துவிட்டால் போச்சு. கூட சேர்ந்து மற்றவர்களும் சிரிக்க, கொம்பையாவுக்குக் கோபம் உச்சிக்கு ஏறி, ‘அவளை ஏதாவது செய்ய வேண்டும்’ என்று தலைக்குள் கொதிக்கும். அந்தச் சம்பவம் இப்படியொரு ஆறாத வடுவாக மாறும் என அவர் நினைக்கவில்லை. அவரே மறந்தாலும் உடன் இருப்பவர்கள் மறப்பதாயில்லை. பிறகு சில நாள்களில் வேறு வேறு தினப்பாடுகளில் கோபம் அடங்கிவிடும்.

இப்போது கோபம் அடங்காமல் கொதித்துக்கொண்டிருந்தது. முந்தா நாள், ‘‘எல்லாத்தையும் ஆறப்போட்டுச் செய்யணும்னு சொல்லிட்டே இருந்தீரே, இன்னும் எவ்வளவு நாளைக்கு, கைகால் ஓஞ்ச பெறவா?’’ என்று சின்ன மச்சினன் சொன்னான். அதிலிருந்து அமைதியாகிக் கிடந்த கொம்பையாவின் நெஞ்சுக்குள் வெறி அதிகமாகியிருந்தது. அதற்குப் பிறகுதான் இந்த முடிவு.

கருத்தப்பிள்ளையூர் தாண்டியதும் சிவ சைலத்துக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த பீடிக் கடைக்காரர் மகன், பாட்டியிடம் விசாரித்துவிட்டு, ‘‘வண்டியில ஏறு பாட்டி, அடிவாரத்துல விட்டுட்டுப் போறேன்’’ என்றான். ஏறிக்கொண்டாள். ஆடு மாடு மேய்ப்பவர்கள் காலையிலேயே மலை நோக்கிப் பத்திக்கொண்டிருந்தார்கள்.

‘‘இப்படி ஒத்தையில இவ்வளவு தூரம் நடக்கதுக்கு, சின்னப் பேரனையாது கூட்டிட்டுப் போலாம்லா?’’ என்றான் பீடிக் கடைக்காரர் மகன்.

‘‘கூப்டா யாருடே வாரா? போனை வச்சு நோண்டிட்டே இருக்கானுவள தவிர, இருக்க எடத்தை விட்டு அங்க இங்க நவுர மாட்டங்கானுவோ’’ என்று ஆவலாதி சொல்லத் தொடங்கிவிட்டாள்.

‘‘செரி செரி, நான் வாரன் இப்பம். உங்க சாமியையும் பாத்த மாதிரி இருக்கும்’’ என்றான் அவன்.

‘‘நீ எனக்காவ அவ்வளவு தூரம் வராண்டாண்டே. நான் போயிக்கிடுவேன். உனக்கு சோலி இருந்தா பாரு.’’

‘‘இல்ல இல்ல, வாரேன். காட்டுமாடன்தான உங்க குல தெய்வம்?’’

‘‘காட்டுமாடன்னு சொல்வாவோ. மருதமலை சாஸ்தாவும், பிரம்மராட்சதையும் ஒண்ணா இருக்க கோயிலு அது. பிரம்மராட்சதைதான் குலதெய்வம். காட்டு மாடன், சாஸ்தா’’ என்றாள் பாட்டி.

‘‘எங்க குலதெய்வம் மணிமுத்தாறு அருவிகிட்ட இருக்கு’’ என்றான் பீடிக்கடைக்காரர் மகன்.

உமையா(ள்) - சிறுகதை

‘‘தெரியும் தெரியும், வந்திருக்கேன்’’ என்ற பாட்டி, ‘‘எய்யா. நீ எனக்காவ அங்கவரை வராண்டாம்... சோலி இருந்தா பாரு’’ என்றாள் மீண்டும். கேட்கவில்லை அவன். அவளுடனேயே சைக்கிளை மிதித்து அணைக்கு வெளியே இருக்கும் பிரமாண்ட ஆலமரத்தின் அருகில் நிறுத்திவிட்டு, பூட்டி சாவியை எடுத்துக் கொண்டான்.

அணையின் பின்பகுதியில் அதிக தண்ணீர் இல்லை. அங்கு குட்டைபோலக் கிடக்கும் இடத்தில் குளிக்கவும் துணிகள் துவைக்கவும் சில உள்ளூர்க்காரிகள் சென்றுகொண்டிருந்தார்கள்.

குலதெய்வக் கோயில், காட்டின் தொடக்கத்திலேயே இருந்தது. உயர்ந்து வளர்ந்திருக்கிற கோங்கு மரங்களின் நடுவே, கற்களால் செய்யப்பட்ட சில சிலைகள். அவற்றில் இரண்டு தரையில் சாய்ந்து கிடந்தன. பாட்டி அவற்றை நிமிர்த்தி வைத்தாள். சிலைகளுக்குக் கீழே பழுத்து விழுந்து கிடந்த மரத்தின் இலைகளையும் செடிசெத்தைகளையும் காலாலும் கைகளாலும் இரண்டு பேருமே ஒதுக்கினார்கள்.

பிறகு பாட்டி, பையிலிருந்து சூடம், பத்தி, வெற்றிலைபாக்கு, தேங்காய் உள்ளிட்ட பூஜை சாமான்களை எடுத்து வைத்து வழிபட்டாள். கல்யாணப் பத்திரிகையை சாமிகளுக்கு முன் வைத்து, ‘எங்களை வாழவச்சது மாதிரி, எங்க பேரப் பிள்ளையளையும் நல்லா வாழவைக்கணும்’ என்று வேண்டியபடி கும்பிட்டாள். பீடிக் கடைக்காரர் மகனும் விழுந்து கும்பிட்டான். சில நிமிடங்களிலேயே வந்த வேலை முடிந்துவிட்டது. சிறிது நேரம் அங்கு உலை வைக்கப் போட்டிருக்கும் கற்களின் மீது இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள். தூரத்தில் இரண்டு வரையாடுகள் இவர்களை அதிசயமாகப் பார்த்துவிட்டுத் திரும்பின.

கீழோடையில் தண்ணீர் குடிக்க இறங்கிய பீடிக்கடைக்காரர் மவன், ‘‘இந்த நேரத்துலயும் இவ்வளவு குளிருத தண்ணி'’ என்று சொல்லிவிட்டு, அப்படியே குனிந்து நின்றபடி அள்ளிக் குடித்தான். சுவையாக இருந்தது. இன்னும் சில முறை அள்ளி அள்ளிக் குடித்துக்கொண்டான். பாட்டியும் குடித்தாள். பிறகு சில சாமி கதைகளைப் பேசிக்கொண்டு திரும்பினார்கள் இருவரும்.

‘‘இந்தா முடிஞ்சுட்டாடே பேரா. இதுக்குப்போயி, என்னைய வரக்கூடாதுங் கானுவோ. காட்டுக்குள்ள யானை இறங்கி இருக்கு. கரடி இறங்குதுன்னு என்னமா பயங்காட்டுதானுவோங்க, பச்சைப் பிள்ளைலுட்ட சொல்லுத மாதிரி. நாம்லாம் அதைப் பாக்காமயா வளந்தேன்’’ என்று பேசிக்கொண்டே போனாள் பாட்டி.

உமையா(ள்) - சிறுகதை

‘‘இருந்தாலும் ஒத்த செத்தையில, வயசானவோ வந்தா, பயம் இருக்கதானெ செய்யும்?’’

‘‘என்ன பயம், என் தெய்வம் கூட இருக்கும்போது எனக்கென்னடா பயம்? எவ்வளவு வருஷமா இந்தக் காட்டுக்குள்ள அலைஞ்சிருக்கேன். என்ன நடந்தது எனக்கு?’’

‘‘நல்ல நேரத்துல அப்படி இருக்கும். இப்பம்லாம் எந்த நேரத்துல என்ன நடக்குன்னு யாரு கண்டா?’’

‘‘அதெல்லாம் ஒண்ணும் ஆவாதுடா பேரா’’ என்ற பாட்டியை மீண்டும் சைக்கிளில் ஏற்றி, பெத்தான் பிள்ளை குடியிருப்பு விலக்கில் இறக்கி விட்டுவிட்டு, சிவசைலம் ரோட்டில் திரும்பினான் அவன். ‘‘மெதுவா போ பாட்டி’’ என்று சொல்லிவிட்டுப் போனான், எம்.ஜி.ஆர் படப் பாடல் ஒன்றைப் பாடியபடி.

திருடி அம்மன் கோயிலுக்குப் பின்பக்கத் தென்னந்தோப்பில், இடுப்பில் செருகிய கூர்தீட்டப்பட்ட கத்தியோடு காத்திருந்தார், கொம்பையா. ‘இன்னையோட அவா சோலிய முடிச்சிரணும்’ என்றும் ‘எப்படி கதையை முடிக்கலாம்’ என்றும் யோசனை செய்துகொண்டு அலைந்தார். அதற்குள் ஒருகட்டு பீடி இழுத்து இழுத்துக் காலியாகியிருந்தது.

கொம்பையா நினைத்தது மாதிரியே பாட்டி தூரத்தில் வருவது தெரிந்தது. அவருக்கு உடம்பில் பதற்றம் தொற்றிக்கொண்டது. நெருங்கி வந்துகொண்டிருந்த உமையா பாட்டி, வழக்கமாக இரண்டு வயற்காட்டை மேல்பக்கமாகச் சுற்றி வருவதற்குப் பதிலாக, கீழணையின் மேலே போடப்பட்டிருக்கிற தண்ணீர்ப் பாலத்தின் மீதேறி நடந்து வந்தாள். அந்தத் தண்ணீர், அக்கரையில் உள்ள வயல்களுக்குச் செல்கிறது. அதற்காகப் போடப்பட்ட ஓடைபோல தண்ணீர் செல்லும் சிறு பாலம் அது. அதில் இளவட்டப் பயல்களே பயத்தோடுதான் நடந்து வருவார்கள். லேசாகக் கால் லம்பி எந்தப் பக்கம் விழுந்தாலும் பாதிப்பு பலமாக இருக்கும்.

பக்கத்து வயல்களில் வேலை செய்யும் பெண்கள், ‘‘ஏம் பாட்டி, இந்த வயசுல இதுல ஏறிப் போறியளே, சுத்திப் போனாதாம் என்ன?’’ என்று கேட்டனர். ‘‘ஆமா போவணும்’’ என்ற பாட்டி, கீழே பார்த்துக்கொண்டே நடந்தாள். அவள், நேராக இந்தக் கோயில் அருகேதான் வந்து இறங்கவிருக்கிறாள் என்று காத்திருக்கும் கொம்பையா, இடுப்பில் இருந்த கத்தியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார். அவருக்குத் திடீரென்று மூச்சு வாங்கியது. கையில் லேசான ஆட்டம். ‘ஏன் இந்த ஒடம்பு இந்தா மாதிரி ஆடுது’ என்று நினைத்துக் கொண்டிருந்தபோதே, மேற்கே அவயம் கேட்டது. ‘‘ஏத்தா, ஏ.. பாட்டி...’’ என்று.

கொம்பையா நின்ற இடத்திலிருந்து பார்க்கும்போது அவளைப் பாலத்தில் காணவில்லை. ஆற்றுக்குள் விழுந்திருந்தாள். அந்த இடத்தில் வட்ட மாகத் தண்ணீர் அலையடித்துக் கொண்டிருந்தது. நேராக ஓடியவர், ஆற்றுக்குள் பாய்ந்தார். கழுத்தளவு தண்ணீருக்குள் விழுந்து மயங்கிய நிலையில் முங்கிக் கிடந்த பாட்டியை இழுத்து வந்தார் கரைக்கு. ஈரமணலில் அப்படியே சாயப் போட்டார்.

கீழே விழுந்த வேகத்தில் கன்னத்தில் சுள்ளென்று அறைந்த தண்ணீரின் காந்தல் அவள் செவிகளுக்குள் விண்ணென்று கேட்டுக்கொண்டி ருந்தது. அதற்குள் வயக்காட்டில் வேலை பார்க்கும் பெண்களும் சில இளவட்டப் பயல்களும் ஓடி வந்தார்கள். பாட்டியின் முகத்தைத் துடைத்துவிட்டு, அங்கும் இங்கும் அவளை ஆட்டி சத்தம் கொடுத்தார்கள். இப்போது கண்ணை முழித்துப் பார்த்தாள் பாட்டி. எதிரில், ஈரவேட்டி நனைய கொம்பையா நின்றிருந்தார், கீழ்ப்பக்கமாகத் திரும்பி.

அவள் நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டிருந்தது. ‘‘கெழடான காலத்துல, இந்தச் சின்னப் பாலத்துல நடக்கலாமா, இந்தக் கூறுகெட்ட செரிக்கி? இல்லனா இவளுக்குக் கொமரின்னு நெனப்பா? கொஞ்சமாது உயிர்ப்பயம் வேண்டாம்? வயசானா இப்படித்தான் புத்தி பேதலிச்சிரும் போலுக்கு’’ என்று அந்தப் பொம்பளைகளிடம் உமையா பாட்டியைக் கோபத்தில் ஏசிய கொம்பையா, ‘‘கொஞ்சம் கீழ்ப்பக்கமா விழுந்திருந்தா என்னத்துக்கு ஆயிருக்கும்? அங்ஙன பாறாங்கல்லு கெடக்கு. விழுந்தான்னா, இந்நேரம் போய்ச் சேர்ந்திருப்பா, பொட்டுனு. கூறுவேண்டாம், கொஞ்சமாது? இவாளாம் ஒரு பெரிய மனுஷி, மண்டையில ஈரமண்ணுதான் இருக்கு’’ என்று தன்னால் ஏசிக்கொண்டே, இடுப்பில் செருகியிருந்த கத்தியைத் தேடினார். அது அங்கு இல்லை.