Published:Updated:

அவள் ஒரு விடுகதை!

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

சிறுகதை : அ.குமரேசன்

அவள் ஒரு விடுகதை!

சிறுகதை : அ.குமரேசன்

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை
டித உறைகளைப் பிரித்து அலுவலகக் கோப்பில் வைத்துக்கொண்டிருந்தான் நிரஞ்சன். அவற்றை ஞானராஜ் மேசையில் வைக்க வேண்டும். அவர் வந்ததும் முதலில் அதைத்தான் பார்ப்பார். யாருக்கு என்ன பதில் தெரிவிப்பது, சம்பந்தப்பட்ட மேலாளர்களுக்கு என்ன குறிப்புகளோடு அனுப்புவது என அவர்தான் சொல்வார். ஏதாவது நிகழ்ச்சி அழைப்பிதழ்களும் வந்திருக்கும். தானே நேரில் செல்ல வேண்டியது, நிறுவனத்தின் சார்பில் யாரையாவது அனுப்ப வேண்டியது, வாழ்த்து அனுப்பினால் போதுமானது எது என்றும் அவரே கூறுவார்.

அந்த அழைப்பிதழைப் பார்த்ததும் இதயம் தனது கூடுதல் துடிப்பைக் கண்களுக்குக் கடத்தியது. நிர்மலாவா இது? நாற்பத்தைந்து வயதுக்கான பதிவுகள் படத்தில் தெரிந்தாலும் முகத்தில் அதே அழகு, அதே தெளிவு, அதே திடம். இவற்றோடு இவனை இருபதுகளில் ஈர்த்த அதே புன்னகை. அந்த முகத்தை வருடுவதற்காக நீண்ட விரலை சட்டென இழுத்துக்கொண்டான். அந்த விருது விழா அழைப்பிதழ் தனக்கு வந்ததல்ல என்ற உறுத்தலுடன் கோப்பில் சேர்த்தான்.

இருக்கையில் அமர்ந்திருக்க இயலவில்லை. ஒரு காபி பருகலாம் என்று வெளியே வந்து, நுழைவாயிலை ஒட்டியே கண்ணாடிச் சுவருக்குப் பின்னால் இருக்கும் சிறு கூடத்திற்குள் சென்றான். கதவில் ‘சிற்றுண்டியகம்’ என்றும் ‘கேன்டீன்’ என்றும் பதிக்கப்பட்டிருந்தது. பன்னாட்டுத் தொடர்புகளுள்ள நடுத்தர நிறுவனம் என்றாலும், அதன் பிரிவுகளைக் குறிப்பிடத் தமிழும் அதன் கீழ் ஆங்கிலமும் இருப்பது, வேறு பல நிறுவனங்களும் உள்ள அந்த வளாகத்தில் இங்கே மட்டும்தான். ஞானராஜ் விருப்பப்படி இவ்வாறு இருப்பது, நிரஞ்சன் கூடுதல் ஈடுபாட்டோடு இங்கே வேலை செய்வதற்கு ஒரு காரணம்.

அவள் ஒரு விடுகதை!

ஒரு மேசைக்குச் சென்று அமர்ந்தவன் இலக்கின்றி வெளியே நோக்கிக்கொண்டிருந்தான். காபி வந்ததும் முதல் உறிஞ்சலின் சூட்டை நாக்கு சந்தித்தவுடன், முதன்முதலில் நிர்மலா ஒரு சூடான விவாதத்தோடு தன்னைச் சந்தித்தது மூளையில் இறங்கியது.

மொழியாசிரியர்கள் சிலர் சேர்ந்து நடத்திய ஒரு பயிற்சியகம் அது. இவன் தேர்வெழுதும் நோக்கமில்லாமல் சொந்த ஆர்வத்தில் தமிழ் இலக்கணம் பயின்றான். ஆண்டுவிழாவில் அனைத்து மாணவர்கள் சார்பாகவும் இவனைப் பேசச் சொன்னார்கள்.

“அன்பார்ந்த நண்பர்களே, சகோதரிகளே…” என்று தொடங்கியவன், பல்வேறு மொழிகளைப் பயில்வதால் அமையும் வேலைவாய்ப்பு, உலகளாவிய இலக்கியப் பயணம் என்ற கோணங்களில் பேசினான். “…முக்கியமாக இங்கே எனக்குப் புதிய நண்பர்களும் சகோதரிகளும் கிடைத்தார்கள், அதற்காகவும் இந்தப் பள்ளியை என்னால் மறக்க முடியாது” என்று முடித்துக் கைத்தட்டல்களைப் பெற்றான். வயதின் குறுகுறுப்போடு, கைதட்டியவர்களில் பெண்களும் இருக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டான்.

விழா முடிந்து, எல்லோரும் வெளியே வந்து, வரிசையில் சென்று, சிற்றுண்டித் தட்டுகளைப் பெற்றுக்கொண்டு, மர நிழல்களில் நின்று பேசியபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அரங்கத்திற்குள் தேநீர் விநியோகித்தவளின் நளினமும் சுறுசுறுப்பும் அவளைத் திரும்பத் திரும்பப் பார்க்க வைத்திருந்தன. இப்போது அவள் வரிசையில் வந்துகொண்டிருந்தாள். தான் கவனிப்பதை அவள் கவனித்துவிடக்கூடாதென்று தலையைக் குனிந்து தட்டைத் துளாவினான். ‘யார் இது? அவங்களாவே வந்து பேசினா நல்லா இருக்கும்…’

“ஹலோ நிரஞ்சன் சார்!”

இவனை அப்படியே பின்னால் சாய்த்துவிடுவது போல எதிரில் வந்து நின்றாள் அவள். கூடவே ஒருத்தி. நினைத்ததுபோலவே சில நிகழ்வுகள் நடக்கிறபோது உண்டாகும் பரவசம் ஒரு படபடப்பையும் ஏற்படுத்தும்.

“ஹால்ல இவளை சைட்டடிச்சிட்டிருந்தீங்க… வெளியேயும் நோட் பண்ணிட்டிருந்தீங்க... அதான் என்னா மேட்டர்னு கேட்க வந்தோம்” என்றாள் தோழி.

“அதெல்லாம் இல்லையே… இவங்க நல்லா செர்வ் பண்ணிட்டிருந்ததைத்தான் கவனிச்சேன்.” இவன் சொன்னது கொஞ்சம் குளறலாகத்தான் வந்தது.

அவள் ஒரு விடுகதை!

வாய்க்குள் அடக்கிவைத்திருந்த சிரிப்பை விடுவித்தாள். “இவ கலாய்க்கிறா சார். அதைக் கேட்கிறதுக்காக நான் வரல. ஆனா நீங்க பேசுனதுல ஒரு கருத்து வேறுபாடு இருக்கு, அதுக்காகச் சண்டை போடலாம்னு வந்தேன்.’’

“ஆகா, தாராளமா சண்டை போடுங்க!” இது அறிவுத்தளச் சண்டை என்று புரிந்து கொண்டவனாகச் சொன்னான். ‘என்ன சண்டையாக இருக்கும்’ என்று மனம் தனது பேச்சில் தொட்ட கருத்துகளுக்குள் தேடியது.

அவளோ பேச்சின் தொடக்கத்தைத் தொட்டாள். “நீங்க நண்பர்களே, சகோதரிகளேன்னு ஆரம்பிச்சீங்கில்ல? முடிக்கிறப்பவும் சொன்னீங்க…”

“அதிலே என்ன சண்டை... ஓ, முதல்ல சகோதரிகளேன்னு பெண்களைச் சொல்லலையேன்னு சண்டைக்கு வர்றீங்களா?”

“அதில்லை. நண்பர்களே, சகோதரிகளேன்னு பிரிச்சிச் சொல்றீங்கன்னா, நாங்க நண்பர்கள் இல்லைன்னுதானே அர்த்தம்?”

அந்த இடத்தில் தனது ஆளுமையை விட்டுத்தரக்கூடாது என்று நினைத்தவனாக, “அதுக்காக அன்பார்ந்த காதலிகளேன்னா பேச முடியும்,” என்று கேட்டு, கூட இருந்தவர்களோடு சேர்ந்து சிரித்தான்.

“நீங்க அப்படித்தான் நினைக்கிறீங்கன்னா அப்படியே சொல்லுங்க” என்று எதிரடி கொடுப்பாளென்று எதிர்பார்க்கவில்லை. “பெண்கள் வந்து ஆண்களை அண்ணன், தம்பி, அப்பா, அங்கிள்னுதான் நினைக்கணுமா? அதை விட்டா லவ் ரிலேஷன்தானா? ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் நண்பர்களா இருக்கிற மாதிரி பெண்ணும் ஆணும் பழக முடியாதா?”

அப்போதைக்கு ஏதோ சொல்லிச் சமாளித்தது, நிர்மலா தன்னையும் தோழியையும் பிரெஞ்ச் பயில்கிறவர்களாக அறிமுகப்படுத்திக்கொண்டது, அதற்குப் பிறகு அத்தகைய நிகழ்ச்சிகளில் அவையினர் எல்லோரையுமே ‘நண்பர்களே’ என்று விளிக்கத் தொடங்கியது... காபியோடு நினைவுகளையும் உறிஞ்சிக்கொண்டான். வெளியே ஞானராஜ் வருவது தெரிந்தது. சிற்றுண்டியகத்திலிருந்தும் நிர்மலா நினைவோட்டத்திலிருந்தும் வெளியேறினான்.

நிரஞ்சன் தன்னை மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவனாகக் காட்டிக்கொண்ட அளவுக்கு ஒரு முற்போக்காளனாக அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. எப்போது என்ன சிந்தனை நியாயமாகப் படுகிறதோ அதை ஏற்றுப் போய்க்கொண்டே இருக்க வேண்டும், குறிப்பான சித்தாந்தத்துக்கோ அமைப்புக்கோ வாழ்க்கைப்படத் தேவையில்லை என்பான்.

அதைப் பற்றியேகூட இருவரும் விவாதித்திருக்கிறார்கள். லட்சியமும் கொள்கையும் ஒத்துப்போகுமானால் ஒரு இயக்கத்தோடு இணைந்து செயல்படுவது ஒரு பலம்தானே என்று வாதிடுவாள். ஆயினும் அத்தகைய அமைப்புகளில் அவளும்கூடச் சேர்ந்ததில்லை. ஆனால், இவன் அமைப்புகளைத் தவிர்த்ததற்கும், அவள் சேராததற்கும் வேறுபாடு இருந்தது.

அவள் ஒரு விடுகதை!

வருத்தத்தில் இருக்கிறவர்களுக்குத் தொண்டு செய்வதில் அவளுக்கு ஈடுபாடு இருந்தது. தங்கள் குடும்பம் உறுப்பினராக இருந்த தேவாலயத்தின் வழிகாட்டலில் அமைக்கப்பட்ட ஒரு சேவைக் குழுவில் செயல்பட்டாள். ஆனாலும் இரண்டு பேருமே மற்ற அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்குத் தயங்காமல் போவார்கள். பொதுவான பிரச்னைகளில் சரியான நிலையெடுக்கிற இயக்கங்கள், தனக்கு அக்கறையுள்ள சில பிரிவினருக்கு ஆதரவாக வருவதில்லை என்ற விமர்சனம் அவளுக்கு இருந்தது.

புத்தகம், வரலாறு, சுற்றுச்சூழல் என்று இருவரும் விவாதிக்காத பொருள்களே கிடையாது. “ஏம்பா, கொஞ்சம் ரொமான்டிக்கா ஏதாச்சும் பேசுங்கப்பா. எப்பவும் சீரியஸ் மேட்டர்தானா? தனியா மீட் பண்றப்பவும் இப்படித்தான் பேசிப்பீங்களா” என்று கேட்டு நண்பர்கள் சிரிப்பார்கள். “ஏன், ரொமான்ஸ் சீரியஸ் மேட்டர் இல்லையா” என்று நிர்மலா கேட்பாள். அவர்கள் கும்பிடு போட்டுவிட்டு ஒதுங்கிவிடுவார்கள்.

தனிமையிலும் நெருக்கமாகப் பேசிக்கொள்ள மாட்டீர்களா என்று நண்பர்கள் கேட்கிற அளவுக்கு இருவரும் பழகினார்கள். இவன் தோளில் அவள் சாய்ந்துகொள்வாள். அவள் தோளில் இவன் கைபோட்டுக்கொள்வான்.

தோளில் கைபோட்டுக்கொண்டதில் இருந்தது நட்புணர்வு மட்டும்தானா? பாலின ஈர்ப்பும், காதல் விருப்பமும் இருந்ததில்லையா? அதை அவளிடம் வெளிப்படுத்தவிடாமல் தடுத்தது எது? ஈகோ? மதம்? சாதி? சுதந்திரமான நட்பாகத் தொடரலாம், அடிமைத்தனமான காதல் வேண்டாம் என்பதான சிந்தனை? அவளுடைய வேறு பழக்க வழக்கங்கள்?

மாலையில் திட்டமிட்டிருந்த நிகழ்ச்சியைத் தவிர்த்துவிட்டு நேராக வீட்டுக்குப் போனான். “அதிசயமா இருக்கு” என்று வரவேற்ற பத்மினி, ஊற்றெடுத்த உற்சாகத்தை இனிப்பு உப்புமாவாக்கிப் பரிமாறினாள். கேசரியை நிரஞ்சன் இப்படித்தான் சொல்வான். உப்புமாவைக் காரக் கேசரி என்பான்.

நாக்கு சுவை தேடவில்லை என்றாலும் சாப்பிட்டான். அவளுடைய உற்சாகம் குலையக்கூடாது, என்ன ஆச்சு என்று குடைவதற்கும் இடமளிக்கக்கூடாது. பிள்ளைகளோடு உட்கார்ந்து ஆன்லைன் வீட்டுப் பாடங்களை முடிக்க உதவினான். லேப் டாப் எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றான். அலுவலக வேலையைத் தொடர்கிறான் என்று புரிந்துகொண்டு தொந்தரவு செய்யாமல் இருப்பார்கள்.

மாடியில் சுவரில் சாய்ந்து கால்களை நீட்டி மடியில் வைத்த கணினியை சும்மா விரித்து வைத்தான். நிறுத்தி வைத்த இடத்தில் நிர்மலா நினைவைப் பிடித்தான்.

‘காதலில் மனங்கள் இசைவது போலவே ரசனைகளும் கருத்துகளும் ஒத்துப்போக வேண்டுமா’ என்றொரு விவாதம் வந்தது. ‘அது காதலைப் பல மடங்கு இனிமையானதாக்கும்’ என்றான் இவன். ‘இல்லை, கருத்து மாறுபாடுகளோடு நேசத்தைத் தொடர்வதுதான் அறிவார்ந்த காதல்’ என்றாள் அவள்.

``அறிவார்ந்த காதலில் உறவு இருக்கும், உணர்வு இருக்காது’’ என்று இவன் சொன்னதை நண்பர்கள் அங்கீகரித்தார்கள்.

``உணர்ச்சிக் காதல் மேலோட்டமா இருந்து உலர்ந்துபோகலாம். அறிவார்ந்த காதல்தான் ஆழமா உறுதியா இருக்கும். விவாதிச்சு ஒரே கருத்துக்கு வந்தா ஓகே. அப்படியில்லாம காதலனோட கருத்துங்கிறதுக்காகக் காதலி ஏத்துக்கிடறதும், அவ சொல்லிட்டாங்கிறதுக்காக அவன் ஏத்துக்கிடறதும் அடிமைத்தனம்தான். என் உடலை நீ ஆளலாம், என் சிந்தனையை எப்படி அடக்குவ?’’ 

ஆண் நண்பர்கள் மௌனமாக இருந்தார்கள். பெண்கள் அங்கீகரித்துத் தலையாட்டினாலும் வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை. `என் உடலை நீ ஆளலாம்னு என்ன அர்த்தத்துல சொல்லியிருப்பா' என்று இவன் நினைப்பு ஓடியது.

இன்னொரு நாள், காதலைப் பற்றிக் குடும்பத்தில் பேசுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைப் பேசினார்கள். “உண்மை என்னன்னா, இன்னாரை லவ் பண்றேன்னு அம்மா அப்பாட்ட சொல்ல பயப்படுறது கேர்ள்ஸை விட பாய்ஸ்தான்” என்றாள் நிர்மலா. எல்லோரும் அவளையே பார்த்தார்கள். “ஆமா. பொண்ணை எப்படின்னாலும் வேற வீட்டுக்குத்தானே அனுப்பப்போறாங்க? அதனால ஒரு முயற்சி பண்ணிப் பார்த்திடலாம்னு நினைச்சுச் சொல்லிடுவா. ஆனா, பையன் வீட்டோட இருக்கப்போறவன். சொத்து, கௌரவம், சொந்தக்காரங்க, கான்டாக்ட்ஸ் அது இதுன்னு இருக்கே? அதையெல்லாம் இழக்கிறதுக்கு லேசுல மனசு வராது.”

தன்னைக் குத்திக்காட்டுவதாக சுருக்கென்றிருந்தது. பின்னொரு நாளில் நண்பர்கள் ‘அவள் தன்னுடைய வழக்கப்படி பொதுப்படையாகத்தான் சொன்னாள்’ என்றார்கள். அவர்கள் இதைச் சொன்னபோது இருவருக்கும் ஒரு இடைவெளி ஏற்படத் தொடங்கியிருந்தது.

பின்னர் நடந்த ஒரு நிகழ்ச்சி இடைவெளியை விரிவுபடுத்தியது. ‘பெரிய இன்டெலக்சுவல் மாதிரி பேசிக்கிட்டிருந்தவ இப்படிப்பட்டவளா’ என்று எண்ண வைத்தது.

அவளுடைய குடியிருப்புப் பகுதியில் வீடெடுத்துத் தங்கியிருந்த இரண்டு பெண்களை உடனே காலி செய்ய வற்புறுத்திக் கும்பலாகக் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தார்கள். வாடகையை இருவருமாகப் பகிர்ந்து கொண்டதோடு, வாழ்க்கையையும் இணையராகப் பகிர்ந்துகொண்டவர்கள் அவர்கள். வாசலில் நிறுத்தி உரக்கக் கத்தினார்கள் வீட்டு உரிமையாளரும் அண்டை வீட்டாரும்.

பிரச்னையில் தலையிட்ட நிர்மலா, “வீட்டுக்குள்ள வெச்சு டீசன்டாப் பேசாம, இப்படித் தெருவுல இவங்களை அசிங்கப்படுத்துறீங்களே நியாயமா?” என்று கேட்டாள்.

``ஒழுக்கமில்லாதவங்களுக்கு இடம் கொடுத்தோம்னா நம்ம பிள்ளைகள் கெட்டுப்போயிடுவாங்க” என்றுதான் திரும்பத்திரும்ப அவர்கள் நியாயப்படுத்தினார்கள். “இவங்களா போனாங்கன்னா மரியாதை. இல்லைன்னா போலிஸ்ல வேற மாதிரி கம்ப்ளெய்ன் பண்ண வேண்டியிருக்கும்.” கௌரவமான வேலைகளில் நல்ல ஊதியம் பெறுகிற இருவரும் கண்கலங்கி நின்றார்கள்.

``ரெண்டு பேரும் திங்ஸ் எடுத்துக்கிட்டு வாங்கப்பா. வேற வீடு பார்க்கிற வரைக்கும் இப்போதைக்கு எங்க ஹெல்ப் ஹோம்ல தங்கிக்கிடுங்க” என்று உடனடியான ஒரு தீர்வுக்கு அவள் வழி செய்தாள். நிரஞ்சன் ஒரு மினி வேன் ஏற்பாடு செய்தான். இப்படி அடிக்கடி அனுபவப்பட்டவர்கள் என்பதாலோ என்னவோ ஆடைகள், சமையல் பாத்திரங்கள், அலங்கார சாதனங்கள், ஒரு மேசை, இரண்டு பிளாஸ்டிக் நாற்காலிகள் தவிர்த்து பெரிய பொருள்கள் எதுவும் வைத்திருக்கவில்லை. “ஹெல்ப் ஹோம்ல எதுக்கெல்லாம் ஹெல்ப் பண்றாங்க பார்த்தீங்களா!” சிலர் சிரிப்பது காதில் விழுந்தது.

அந்தச் சிரிப்பு இவன் மூளையில் இரைந்துகொண்டே இருந்தது. அதைப்பற்றிப் பேசுவது தன் கடமை என்று நினைத்தான். மறுநாளே பயிற்சியகத்தில் அதற்கொரு நேரம் கிடைத்தது. நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்காக அங்கே அவள் பிரெஞ்ச் ஆசிரியராக வேலை செய்துகொண்டிருந்தாள். மாலையில் அங்கே சென்றவன், “ஒரு முக்கியமான விஷயம் பேசணும்பா” என்றான்.

“இங்கேயே பேசலாம்பா” என்றாள். அறைகளைப் பூட்டிக்கொண்டு வந்த பணியாளர் தயங்கி நிற்க, “அண்ணே ஒரு பத்து நிமிஷம்” என்று கூறினாள். தலையசைத்தவரிடம், “கோவிச்சுக்காம ரெண்டு காபி கொண்டாங்கண்ணே” என்று கேட்டுக் கொண்டாள்.

“உன்கிட்ட போயி யாராவது கோவிச்சுக்குவாங்களா பாப்பா” என்று கேட்ட படி திரும்பியவரைப் பார்த்துக்கொண்டிருந்தான் நிரஞ்சன். அவர் காபி கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போன பிறகுதான் எதற்காக வந்தானோ அதைப் பேசினான்.

“லெஸ்பியன்ஸ், கேய்ஸ் மேல மனிதாபிமானம் காட்டலாம். ஆனா கூடவே அழைச்சிட்டுப் போகணுமா? நீயும் அப்படிப்பட்டவதான் போலன்னு பேசுறாங்க, தெரியுமா? உன் ஃபிரெண்ட்ஸ் சர்க்கிள்ல உனக்கு ‘லெஸ்ஸி’ன்னு பட்டப்பெயர் வெச்சிருக்காங்க. நீ ஸ்வீட்டா பழகுறவங்கிறதால அப்படிச் சொல்றாங்கன்னு நினைச்சேன். இவங்களோட சுத்துறதானாலதான் அப்படிச் சொல்றாங்கன்னு இப்பப் புரியுது.”

புன்னகை மாறாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். “இவங்க விஷயத்திலே மட்டுமில்ல, டிரான்ஸ்ஜெண்டர்ஸ் பிரச்னையிலே தலையிடறப்பவும் இது மாதிரியெல்லாம் பேசுறது எனக்குத் தெரியும். எங்க சர்ச்சுக்கு வர்றவங்கள்ல கூட இப்படிப் பேசிச் சிரிக்கிறவங்க இருக்காங்க. சில பேரு இப்படி வாழுறது ஒழுக்கக்கேடு இல்லைப்பா, அது ஒரு இயற்கை. அந்த நேச்சரை மதிக்கணும்னு சொசைட்டிக்குப் புரியற வரைக்கும் இது மாதிரி கமென்ட்ஸ் வந்துக்கிட்டுதான் இருக்கும்.”

‘இதை எப்படி இயற்கைன்னு சொல்றா’ என்று எண்ணியபடி தலைகுனிந்திருந்தவனின் மௌனத்தை அவளே கலைத்தாள். ”மத்தவங்க நினைக்கிறது இருக்கட்டும். நீ அப்படித்தான் நினைக்கிறியா?”

‘சுத்தி வளைக்காமப் பேசுறதுதான் நல்லது’ என்று எண்ணினான். “நான் சந்தேகப்படுறனா இல்லையாங்கிறது பிரச்னையில்ல. ஆனா அப்படியாப்பட்ட சந்தேகம் வந்தா என்ன தப்பு?”

“ஸ்ட்ரெய்ட்டாவே கேட்கலாம் நிரஞ்சன். உன் சந்தேகத்துக்கு ஆமான்னோ இல்லைன்னோ பதில் சொல்ல நான் விரும்பலை. ஆனா ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன். நான் அப்படிப்பட்டவளாவே இருந்தாத்தான் என்ன?”

காலி காபி கிளாஸ்களை எடுத்துப்போக வந்தவரிடம், “தேங்க்ஸ்ணே. ரூமை நீங்க பூட்டலாம்” என்று சொல்லிவிட்டு எழுந்தாள் நிர்மலா. இவன் பின்தொடர்ந்தான், வெளியே வண்டியை நிறுத்தியிருந்த இடம் வரையில்.

அப்புறம் நேரில், அஞ்சலில், மின்னஞ்சலில், தொலைபேசியில், கைப்பேசிக் குறுஞ்செய்தியில், நண்பர்களிடம் விசாரிப்பதில் எதிலுமே பின்தொடர்வது நின்றே போனது. முன்செல்லும் வாழ்க்கை என்னவோ இனிமேல் பின்பற்றினாலும் பயனில்லை, ஆனால் மற்றவர்களுக்காவது சொல்லலாம் என்கிற படிப்பினைகளைக் கற்பித்திருந்தது.

“லேப்டாப்பை ஓப்பன் பண்ணி வெச்சிருக்கீங்க, ஆனா ஒர்க் பண்ணலை. ஆபீஸ்ல ஏதாச்சும் பிராப்ளமா?”

பத்மினி கேட்டதும், அதெல்லாம் ஒண்ணுமில்லை என்பதாகத் தலையாட்டினான். ``டின்னரை இங்கேயே கொண்டு வந்திடு, பசங்களையும் வரச்சொல்லு” என்றான்.

அடுத்த நாள் ஞானராஜ் இவனிடம், “நாளைக்கு இந்த ஃபங்ஷனுக்கு நானே போகணும்னு இருந்தேன். ஆனா தவிர்க்க முடியாம ஃபேமிலியோட இருக்க வேண்டியிருக்கு. இந்த மேடம் பத்தி உங்களுக்குத் தெரியுமா? சின்சியர் சர்வீஸ் மைண்டட் வுமன். நான் விருப்பத்தோட டொனேஷன் கொடுக்கிற லிஸ்ட்டுல இருக்கிறவங்க. நீங்க ஃபங்ஷனை அட்டெண்ட் பண்ணுங்க” என்று அழைப்பிதழைக் கொடுத்தார்.

நினைத்ததுபோலவே சில நிகழ்வுகள் நடக்கிறபோது உண்டாகும் பரவசத்துக்கு உள்ளானான், படபடப்பு இல்லாமல்.

மறுநாள் பத்மினியையும் அழைத்துக்கொண்டு விழா மண்டபத்திற்குச் சென்றான். அழைப்பிதழைப் பார்த்து முதல் வரிசையில் அமர வைத்தார்கள்.

‘மேடையிலிருந்து என்னைப் பார்ப்பாளா – இல்லை - பார்ப்பாங்களா? அடையாளம் தெரிஞ்சிக்கிடுவாங்களா?’

விலகலுக்குப் பின், அவளுடைய வீட்டில் நிகழ்ந்த சில துயரங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்தபோதுகூட போய்ப் பார்க்காமல் இருந்துவிட்டது இந்த நொடியில் மிகவும் உறுத்தியது. ‘நட்பைப் புதுப்பிச்சிக்கிடணும். நடந்ததுக்கெல்லாம் மன்னிப்பு கேட்கணும். ஆனா, இப்ப அவங்க இருக்கிற பொசிஷன்ல அதையெல்லாம் பேச விரும்புவாங்களா?’

சுற்றிலும் பார்த்தான். பல தரப்பினர் வந்திருந்தார்கள். மனித உரிமை, குழந்தை உரிமை, மகளிர் சட்ட அதிகாரம், இயற்கைச் சமநிலை, மாறுபாலினத்தவர், தற்பாலின உறவாளர்கள், வன்கொடுமை கண்காணிப்பு என்று பெரும்பாலும் தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள், ஊழியர்கள். ஒன்றைக் கவனித்தான். ‘அந்த ஹெல்ப் ஹோம் ஆட்கள் யாரையும் காணோமே?’

சிந்தனையைக் கலைத்தது ஒலிபெருக்கியின் உற்சாக அறிவிப்பு. சிறப்பு விருந்தினர்களை ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்தார் நிகழ்ச்சித் தொகுப்பாளர். “இப்போது, நாம் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற, விழா நாயகியை, சேவைச் செம்மல் விருதுபெறும் தன்னலமற்ற தொண்டரை அழைக்கிறேன். வாருங்கள் சகோதரி.”

`இவரு எதுக்கு சிரிக்கிறாரு?’ தலையை ஆட்டிக்கொண்டே ஓசைப்படாமல் சிரித்தவனைப் பார்த்து யோசித்தாள் பத்மினி. பின்வரிசை ஒன்றிலிருந்து எழுந்து சென்று மேடையில் ஏறினார் நிர்மலா.

முதல் வாழ்த்துரைக்கு அழைக்கப்பட்டவர் ஒரு பத்திரிகையாளர். “இவரை நான் பேட்டி கண்டபோது, ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை, அது சேவைக்குத் தடை என்று நினைத்தீர்களா, அல்லது, சொந்த ஏமாற்றமா என்று கேட்டேன். அதற்கு, இவர் சொந்தச் சுதந்திரம் என்று பதில் சொன்னதை என்னால் மறக்கவே முடியாது...”

நிரஞ்சன் கண்கள் மேடையின் மைய நாற்காலிக்குச் சென்றன. நிர்மலா தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. முகத்தில் அதே புன்னகை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism