Published:Updated:

சிறுகதை: மறதி

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

மயிலன் ஜி சின்னப்பன்

சிறுகதை: மறதி

மயிலன் ஜி சின்னப்பன்

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

‘`ராஜேந்தர் சார், அந்த பையன் வந்து நிக்கிறான்... நானே கொடுத்து செட்டில் பண்ணிடுறேன். எஸ்டாப்ளிஷ் மென்ட்ல எல்லாருமா ஷேர் பண்ணிக்கலாம்...’’ அமுத்தலாக இண்டர்காமில் அசோகன் பேசினார்.

‘`பொறுங்க... மத்தவங்ககிட்டயும் கேட்ருவோம். பேங்க்காரெல்லாம் லா பாயின்ட் பேசுவாரு.’’

அசோகனுக்கும் அதுதான் சரியென்று பட்டது.

வீட்டிற்குள் இருந்தபடியே ‘`தம்பி சாய்ந்தரமா வர்லாமா? கலெக்ட் பண்ணி வெக்கிறேன்’’ என்றார்.

காக்கி நிற பேன்ட் சட்டையும், பாக்கெட்டில் சிவப்பு அட்டையும், கழுத்தில் கறுப்புக் கயிற்றில் சிலுவை டாலருமாக நின்ற இளைஞனிடமிருந்து எந்தவொரு பதிலுமில்லை. முன்னரே தொலைப்பேசியில் விஷயத்தைச் சொல்லிவிட்டுதான் புறப்பட்டு வந்திருந்தான். நான்கு கிலோமீட்டர் வதக்கு வதக்கென சைக்கிள் மிதித்துக்கொண்டு வந்ததெல்லாம், இந்தப் பதிலில்தான் கெண்டை நரம்பில் வலியாகத் தெரிந்தது.

பதிலுக்கு அவன் நின்ற தோரணையிலிருந்த எதிர்க்குரலைப் புரிந்துகொண்டதைப்போல, வீட்டிலிருந்து வெளியே வந்த அசோகன், `‘இல்ல தம்பி, இது ப்ளாட்ஸ்ல எல்லாருமா முடிவு பண்ணுற விஷயம்... அதுக்குதான்’’ என்றார். திருப்தியில்லாதவனாக மெல்ல தலையை அசைத்துவிட்டு அவன் விடைபெற்றான்.

கிரில் கதவுக்குப் பின்னின்றபடி இதைப் பார்த்துக்கொண்டிருந்த அசோகனின் மனைவி, ‘`சாயங்காலம் வந்து வாங்கிக்கோ நாயேன்னு சொல்லிட்டு, கதவச் சாத்திட்டு உள்ள வராம, என்னமோ போயி அவனக் கொஞ்சிக் கொஞ்சி தாஜா பண்ணிட்டிருக்கீங்க?’’ என்றாள். அசோகன் அலட்டிக்கொள்ளவில்லை.

சிறுகதை: மறதி
சிறுகதை: மறதி

ஊரடங்கு ஆரம்பித்த நாளில் பெரியவருக்கு எல்லாமே புதிதாக இருந்தது. திடீரெனத் திணிக்கப்பட்ட எதார்த்தத்திற்கேற்ப வளைந்துகொடுக்க முடியவில்லை. அத்தியாவசியக் கடைகள் திறந்திருக்கலாம் என்ற அரசாணையின் சலுகையையும் மீறி, தொற்று பயத்தால் தெருவின் அத்தனை கடைகளும் பூட்டியே கிடந்தன. சோற்றுக்கு ஊறுகாயோ மிக்சர் பாக்கெட்டோ வாங்கிக்கொள்ளக்கூட அவருக்குக் கடை இருக்கவில்லை. தெருமுக்கிலிருக்கும் தள்ளுவண்டி இட்லிக் கடையையும் ரோந்துக்கு வந்த மாநகராட்சி ஆட்கள் மிரட்டி மூடவைத்துவிட்டார்கள். ஒரு வேளை மட்டுமேனும் எப்போதும் அங்கே கை நனைப்பவர்.

குடியிருப்பிலும், கார்கள் வெளியே போய்வருவது குறைந்துபோனதால், வாயிலின் இரும்புக்கதவைத் திறந்து மூடும் சோலியும் இல்லை. வாகன ஒலியற்ற சாலையின் வெறுமை, நேரத்தை நீட்டித்துக் காட்டியதில் இனம்புரியாத தனிமையுணர்வு பீடிப்பதைப் போலிருந்தது.

இத்தனை வருடங்களில் அப்படியெல்லாம் இங்கு அவருக்குத் தோன்றியதேயில்லை. பன்னிரண்டு குடும்பங்களுக்கும் தன்னுடைய உறவு என்றோர் அமைதி அவருக்குள் இருந்திருக்கிறது. பத்து வருட பந்தம். அவர் இந்தா அந்தா என்று விரட்டி மேய்த்த மூன்றாவது மாடி சேட்டு வீட்டுப் பெண் குழந்தை, வளர்ந்து மணமாகிப் போய்விட்டாள். சுட்டிப் பையன்கள் மீசை வைத்துக்கொண்டுவிட்டார்கள். சைக்கிள் விடப் பழகிக்கொண்டிருந்த டாக்டர் வீட்டு வாண்டு, தனது ஸ்விப்ட்டைத் துடைத்துவைப்பதற்கு வாரத்திற்கு முந்நூறு ரூபாய் கொடுக்குமளவிற்குப் பெரிய மனுஷனாகிவிட்டான். வெள்ளைக் கட்டடம் பழுப்பேறிப்போனதால், இரண்டாண்டுகளுக்கு முன்னர் மஞ்சளடிக்கப்பட்டது. ஒரு தசாப்தத்தில் என்னென்னவோ திரிந்துபோய்விட்டன. பெரியவருக்கு ஆண்டுக்கொரு முறை ரெண்டு செட் வேஷ்டியும் கை வைத்த பனியனும்தான் மாறிக்கொண்டிருந்தன; ஆள் அப்படியேதான் இருந்தார். அல்லது அப்படித்தான் தெரிந்தார். கிழவனில் என்ன சின்னக் கிழவன் பெரிய கிழவன்?

குடியிருப்புக்கென ஒரு நிர்வாகம் உருவாக்கப்பட்டு, அசோகன் அதன் தலைவராகப் பொறுப்பேற்ற காலத்தில், செக்யூரிட்டிக்கென ஏஜென்ஸியை அணுகியபோது, பகலில் ஒருவர், இரவில் ஒருவர் - நடுவயது ஆசாமியொருவரும், பெரியவரும் - மாதம் வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று பேசிமுடிக்கப்பட்டது. வசூலிக்கப்படும் பன்னிரண்டாயிரத்தை ஏஜென்ஸியிடம் கொடுத்துவிடவேண்டும்; கமிஷன் போக அவர்கள் இருவருக்கும் பிரித்துக்கொடுப்பார்கள்.

நடுவயது ஆள், பகலிலேயே தூங்கினார், பெட்டிக்கடைக்கு அடிக்கடி போய் பீடி இழுத்தார், இரவுப்பணி நாள்களில் கார்களுக்குக் கதவைத் திறந்துவிட அவரை எழுப்புவதற்குள் தாவு தீர்ந்தது. பெரியவர் இதிலெல்லாம் கெட்டிக்காரர். விசாரித்ததில் ஆளும் ஒண்டிக்கட்டை என்று தெரிய, ஏஜென்ஸியிலிருந்து விலகி முழுநேர செக்யூரிட்டியாகச் சேர்ந்துகொள்ள, ஒன்பதாயிரம் சம்பளத்திற்கு அவரை அசோகன்தான் சம்மதிக்கவைத்தார். சாக்குத்துணி செக்யூரிட்டி உடுப்பிலிருந்து அவருக்கு விடுதலை கிடைத்தது. மின்தூக்கிக்கு அருகிலிருக்கும் பெட்டி அறையில் ஒரு பெஞ்சு, டேபிள் பேன், சிறிய அடுப்பு... ஒன்றொன்றாய் வந்து சேர்ந்தன. பகலில் பக்கத்துக் குடியிருப்புக் காவலாளிகளுடன் அரட்டை, மாலையில் கட்டடத்துக் குழந்தைகளை மேய்ப்பது, இரவில் ரேடியோ - பொழுதைக் கழிக்க ஓர் அட்டவணை வைத்திருந்தார். மாதமொரு முறையும், பண்டிகை நாள்களிலும் பேரப்பிள்ளைகளைப் பார்க்கப்போவதற்காக விடுப்பு எடுத்துக்கொள்வார்.

ஒரு கூட்டத்தின் செளகர்யத்திலேயே ஒப்பேற்றியதால் மழுங்கிப்போயிருந்த தனிமை, இந்த ஊரடங்கால் மீண்டும் பகிரங்கமாகிவிட்டது.

இரண்டாவது மாடியிலிருக்கும் வாத்தியாரின் அப்பாவும் கீழே வருவதேயில்லை. வாத்தியார் அனுமதித்திருக்கமாட்டாராய் இருக்கும்; தொடைநடுங்கி. அந்த வயதானவரின் மதியப்பொழுதுகள் இதுவரை பெரியவருடன் கதையளப்பதில்தான் கழிந்திருக்கின்றன. பலமுறை வந்துபோயிருக்கும் கூரியர்/ஸ்விகி ஆட்களுக்கே இருவரில் யார் காவலாள் என்பது சட்டென விளங்காது. இரண்டுமே ஒடிசலான தேகங்கள். சீருடையும் கிடையாது. சரிக்கு சமமாக பிளாஸ்டிக் நாற்காலி போட்டு பேசிக்கொண்டிருப்பார்கள். செக்யூரிட்டி பெரியவருக்கு கடைசி இரு வருடங்களில் ருமட்டாய்டு சிக்கல் காரணமாக வலது மூட்டு கொஞ்சம் வெளிப்பக்கமாக வளைவு கண்டுபோய்விட்டது - தாங்கிதான் நடக்க வேண்டிய நிர்பந்தம். படிகளில் எளிதில் ஏறியிறங்க முடிவதில்லை. ஒவ்வாமையோ பயமோ, மின்தூக்கியில் ஏறமாட்டார். மாலைகளில் மேல்தளங்களிலிருக்கும் வாசல் விளக்குகளை, வாத்தியாரின் அப்பாவே போட்டுவிட்டுவிடுவார். இப்போது மனிதரை முடக்கிவிட்டதால், நாளுக்கு இருமுறை இவர்தான் நான்கு மாடிகள் படியேற வேண்டியிருக்கிறது.

பக்கத்துக் கட்டட ஏஜன்ஸி செக்யூரிட்டிகள் வேலைக்கு வருவதில்லை - பேச்சுக்குரலைக் கேட்பதே அரிதாகிப்போய்விட்டது. எப்போதாவது மேலேயிருந்து தொலைக்காட்சி கேட்கும். இஸ்திரி வண்டி, காய்க்கார கிழவி... எந்த அரவமுமில்லை. நிலவிய அமைதியில் கைகாலெல்லாம் தினவு கண்டதாய்த் தெரிந்தன. நேரத்தைக் கழிப்பதில் இத்தனை சிக்கல் இருக்குமென்றெல்லாம் கற்பனைகூட செய்திருந்ததில்லை. உறக்கமும் கூடி வந்துதொலைப்பதில்லை. ஒரு வார முடிவிலேயே, சுவர்களற்ற திறந்தவெளிச் சிறையில் கைகால்கள் கட்டிப்போடப்பட்டு மல்லாந்து கிடப்பதைப்போலத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. எஞ்சியிருக்கும் ஆயுள் வெறும் ஆயுள்தண்டனை என்றளவில்தான் தெரிந்தது. எல்லாம் சில நாள்களில் பழையபடி சீராகிவிடுமென்ற நம்பிக்கையும் நாளாகாக அருக ஆரம்பித்தது.

காலையில் சோறு வடித்து மூன்று வேளையும் அதைத் திண்பதைத் தாண்டி எதுவுமே நிகழாத ஆறு நாள்கள். வெறும் ஆறு நாள்கள்தான் ஆகின்றனவா? ரேடியோ செய்திகளில் வேறு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்பதாகச் சொல்கிறார்கள். யாருமே வேலைக்குப் போவதாகத் தெரியவில்லை. ‘அட, வேலைக்குப் போகவேணாம்... வெளிய வந்து காத்தாட ஒரு நட நடந்துட்டாவது போவலாம். இந்தத் தீப்பெட்டிக்குள்ளேயே எப்படி அடஞ்சு கெடக்குதுக? செறு புள்ளைகள சத்த நேரம்கூட வெளாட உடாம இப்புடிப் போட்டுப் பூட்டி வெச்சு... கெரகம்.’

நான்காவது மாடியில் இருக்கும் டாக்டர் முதல் வாரம் முடிந்ததும் பணிக்குப் புறப்பட்டார். பழைய மிடுக்கு உடைகள் இல்லை. சாதாரண அரைக்கைச் சட்டை, ஜீன்ஸ் பேன்ட், செருப்பு சகிதம் காரை எடுத்தவரிடம், “ஆஸ்பத்திரி போலீங்களா?” பெரியவர் கேட்டார்.

“அங்கதான் போறேன்... ஒரு வாரம் விட்டு ஒரு வாரந்தான் வேல இப்போ.”

“எத்தினி நாளிக்குங்க இதோட கெடந்து மல்லுக்கட்றது?”

“ஒண்ணு ஒண்ணர மாசம் ஆயிடும் எப்டியும். அதுவரைக்கும் இப்படித்தான். வெளிய எங்கிட்டும் போய்ட்டு இருக்காதீங்க.”

“போறதுக்கு என்ன கடையா கெடக்கு வெளிய, பூரா அடச்சுப் போட்டானுங்க.காத்துலேயேவா கிருமி இருக்கப்போவுது.. இப்படி மொடங்கியே கெடந்தா தப்பிச்சுக்க முடியுமா? அடிச்சுதுன்னா போக வேண்டி தான். பொழப்பப் பாக்காம கதவப் பூட்டிக்கிட்டே கெடக்குதுக.”

டாக்டர் சிரித்துக்கொண்டார். அடுத்தடுத்த நாள்களில் அவரும் பச்சை நீலம் என அறுவை அரங்க உடுப்பிலேயே புறப்பட்டுப் போவது பெரியவருக்கு வேடிக்கையாக இருந்தது. ஏதோ இந்த ஒரு வண்டியாச்சும் போயிக்கிட்டு வந்துக்கிட்டு இருக்கே. பெரியவர் எப்போதும்போல, கதவைத் திறந்துவிட்டு கடந்துபோன காரின் முதுகுக்கு சலாம் வைத்துக்கொண்டிருந்தார்.

பன்னிரண்டாவது நாள் தெரு முக்கிலிருக்கும் பாண்டியின் பலசரக்குக் கடை திறக்கப்பட்டது. கடையையொட்டி கொஞ்சம் சனநடமாட்டம் கண்ணில் பட ஆரம்பித்ததும் பெரியவருக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. கடை வாசலில் கோலமாவை வைத்து, ஆட்கள் நிற்பதற்கு பாண்டி வட்டம் வரைந்துவைத்திருந்தான். பெரியவருக்குச் சிரிப்பு கொள்ளவில்லை.

“இந்த ரெண்டு வட்டத்துக்கு நடுவாப்ல கிருமியால பறக்க முடியாதாரா பாண்டி?”

“இந்த நக்கலுக்கு ஒன்னயதான்யா மொதல்ல கொண்டுப்போகப் போவுது?”

“பயத்துலயேதாண்டா அதிகம் பேரு சாவப் போறான்... பாத்துக்கிட்டே இரு.”

அங்கு நின்ற மூன்றாவது ஆள் சொன்னார், “மருந்தெல்லாம் கண்டுபுடிச்சுட்டான் சைனால.. அவஞ் சொல்ற ரேட்டு கொடுத்து வாங்க இவனுக யோசிக்கிறானுங்க.”

பாண்டி சிரித்துக்கொண்டே பொட்டலம் போட்டுக்கொண்டிருந்தான்.

ஒரு சிறிய பையில் ஐந்து கிலோ அரிசியை வாங்கிக்கொண்டவர், வந்து குடியிருப்பின் கதவைத் தள்ளியபோது, வாத்தியாரின் மனைவி மதிலையொட்டி நின்றுகொண்டிருந்தாள். நைட்டியின் குறுக்கே நூல்துண்டுடன், குளிப்பதற்குத் தலையில் எண்ணெய் வைத்துக்கொண்டு, நெற்றியில் பொட்டில்லாமல் அப்படியவள் நிற்பது பெரியவருக்கு அமங்களமாகப் பட்டது.

“என்னம்மா?”

“கட வரைக்கும் போயிட்டு வரீங்களா? பாண்டி கட தெறந்துருக்கறதா போனடிச்சு சொன்னான்.”

“அங்கதாம்மா போயிட்டு வரேன் இப்ப. தெறந்துட்டான்”

``தெரிஞ்சா முன்னாடியே சொல்லியனுப்பிருப்பேனே” வருத்தப்பட முயன்றாள்.

“அட அதுக்கென்னம்மா, ரெண்டு தப்படி... ஓடிப் போயிட்டு ஓடியாந்துருவேன்” என்றவர், அவளது துண்டுச்சீட்டை வாங்கிக்கொண்டு, தாங்கித் தாங்கி கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னான உற்சாகம் அந்தத் தாங்கலை, ஏதோ எம்பிப் பறக்க அவர் எத்தனிப்பதைப்போலக் காட்டியது.

ஊரடங்கு நீட்டிக்கப்படப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டிருந்தது. நடுவில் விளக்கு வைக்கவும் பட்டாசு கொளுத்தவும் எல்லோரும் வெளியே வந்த நாளில், வீதியே பிரகாசமாக ஜொலித்தது. பெரியவருக்கு அந்நாள்களில் அந்த இரவுதான் அத்தனை ஆசுவாசமாக இருந்தது. அடுத்த காலையே மீண்டும் ஓட்டிற்குள் சுருண்டுகொள்வார்கள் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

பாண்டி கடையைத் தவிர, இன்னொன்றும் அத்தெருவில் திறக்கப்பட்டது. அதில் கடைக்காரரே சொந்தமாகத் தைத்த முகக்கவசமெல்லாம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததைப் பெரியவர் பார்த்துக்கொண்டிருந்தார்.

“இந்த காடாத் துணி காப்பாத்திப்புடுமா மனுசாள?” சுரண்டிப்பார்த்தப்படி விசாரித்தார்.

“மோடியே மூஞ்சில துண்ட போத்திக்கிட்டுதான் பேசுறாப்டி. மூக்க மறச்சுக்கிட்டா போதும்ண்ணே” கடைக்காரர் தமாஷாகச் சொன்னார்.

“எங்க கட்டடத்து டாக்டர கவனிச்சியா? மண்டைக்கொரு உடுப்பு, மூஞ்சிக்கொரு உடுப்பு, செருப்புக்கு மேல ஒரு உடுப்பு.”

“பாத்தன் பாத்தன்... தள்ளியே இருங்க அவருகிட்டல்லாம்.”

“காசுக்காண்டிதான ஓடுறான் மனுசன்... பாவம்.”

“எனக்கு மட்டும் கடைய தெறந்துவைக்கணும்னு விதியா? காசுக்குத்தான்...”

பேசிக்கொண்டிருக்கும்போதே டாக்டரின் கார் குடியிருப்புக்குள் நுழைவது தெரிந்தது. அவர் வருகிற நேரம் என்பதால் கதவைத் திறந்துவைத்துவிட்டுத்தான் பெரியவர் கடைப் பக்கம் வந்திருந்தார்.

சிறுகதை: மறதி

பெரியவர் அங்கு போவதற்குள் காரை நிறுத்திவிட்டு அவர் மேலே ஏறிவிட்டார். போனதும் நேராக குப்பைத் தொட்டியைத்தான் பார்த்தார். தினமும் அந்த மருத்துவர் உள்ளே வந்ததும் கையுறைகள், முகக்கவசம், தொப்பி மூன்றையும் கழற்றி அந்தக் குப்பைத் தொட்டிக்குள் போடுவதைப் பெரியவர் கவனித்திருக்கிறார். அதிலிருந்த முகக்கவசத்தைக் கையிலெடுத்துப் பார்த்தார்: கடையில் பார்த்த துணி மாதிரி இல்லை. இவ்வளவு மொந்தையா இருக்கு. இது வழியா எப்புடி மூச்சுவுடுறது. முகத்தில் வைத்து ஒரு முறை மூச்சை இழுத்துப் பார்த்தார். ரொம்ப சிரமமாகத் தெரியவில்லை. வெள்ளக்கார சரக்கு.ரூவா கூடதான் இருக்கும். தொட்டியிலேயே வீசிவிட்டு, நாற்காலியை எடுத்து வாயிலருகில் போட்டு அமர்ந்தார். தெருவில் எல்லோரும் கவசம் அணிந்து செல்கிறார்கள். பச்சை, மஞ்சள், துணிக் கவசம், கம்பளிக் கவசம், இதென்ன ஜட்டி மாதிரி இருக்கு. ஒருத்தி ஒரு கையால் மூக்கைப் பொத்திக்கொண்டு மறு கையால் சைக்கிளை ஓட்டிக்கொண்டு போனாள். நன்றாகவே பொழுது கழிந்தது.

அடுத்த நாள் காலை, கார் எடுக்க வந்த டாக்டரிடம் விசாரித்தார், “இந்தக் கவசமெல்லாம் என்ன வெலங்க இருக்கும்.”

“இதுவா... ஏன் உங்களுக்கு எதும் வேணுமா? கொண்டுவந்து தர்றேன்” சொல்லிவிட்டுக் கிளம்பிப்போனார்.

அதற்குப் பின்னான நாள்களில் அப்படியெதுவும் அவர் தரவில்லை என்று தோன்றும்போதெல்லாம் ‘மறந்திருப்பாரு’ என்று பெரியவரே சொல்லிக்கொள்வார்.

வாத்தியார் மனைவிக்காகக் கடைக்குப் போய் வருவது, பெரியவருக்கொரு நிர்ணயிக்கப்படாத பணி என்றாகிவிட்டது. ஒரு முறைக்கோ இரு முறைக்குச் சேர்த்தோ அவளும் ஐந்து பத்து எனக் காசைத் திணிக்க ஆரம்பித்தாள். வங்கி மேலாளரின் மனைவியும் அதேபோலதான். பெரியவரும் அந்த வாடிக்கைக்குப் பழகிவிட்டார் - குப்பைகொட்டக் கீழிறங்கி வருபவர்களிட மெல்லாம், ‘கடைக்கு எதுவும் போவணுமாம்மா?’ என்று கேட்குமளவிற்கு. அசோகனின் மனைவி வேலை ஏவிவிட்டு காசு தரமாட்டாள் என்பதையெல்லாம் இவர் பொருட்படுத்தவேயில்லை. அடைந்துகிடக்க முடியவில்லை; ஏதாவது தன்னைச் செலுத்திக்கொண்டே இருக்கவேண்டும், அவ்வளவுதான்.

அந்தப் பண்டப் பரிவர்த்தனையின் இயங்குமுறையே ஒரு மாதிரி சிடுக்கானது. பையையும் காசையும் கையில் கொடுத்துவிட்டு காத்திருக்காமல் மேலே போய்விடுவார்கள். இவர் கடைக்குப் போய் வந்ததும், சாமான்களை மின்தூக்கிக்குள் வைத்து மேலே அனுப்பிவிட்டு இண்டர்காமில் அழைத்துச் சொல்லுவார். மேலே அவர்கள் அந்தப் பையைக் குட்சியை வைத்து எடுக்கிறார்கள்; வெயிலில் கொண்டுபோய் வைக்கிறார்கள்; பையின் கைப்பிடிகளை கிருமிநாசினி கொண்டு துடைக்கிறார்கள் என்பதெல்லாம் அவருக்குத் தெரிந்ததேயில்லை. தெரிந்தாலும் கேலிதான் செய்திருப்பார்.

மூன்றாவது மாடியில் இருக்கும் சங்கரன், ஸ்விகி ஆட்களை மேலே அனுப்பவேண்டாம் என்று சொல்லிவிட்டார். இவரையே வாங்கிவைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு ஒரு மணி நேரங்கழித்துப் பெற்றுக்கொள்வார். `சாப்பாட்ட சூடா சாப்புடாம நெதைக்கும் ஆறிப்போயி ஆறிப்போயி...’ பெரியவர் புலம்பிக்கொண்டே கொடுக்கும்போது சங்கரன் பதிலெதுவும் சொல்லிக் கொள்ளாமல் வாங்கிக்கொண்டு விறுவிறுவென மேலே போய்விடுவார். ‘அந்தம்மாளும் வந்திருந்து வாழமாட் டேங்குது... கடையிலயே வாங்கித் திண்ணுக்கிட்டு கெடக்கான் மனுசன்’ என்று பெரியவர் விசனப்படுவார்.

சிறுகதை: மறதி

நாளாகாக நடை அதிகமாவதால் மூட்டு வலி அதிகமாகத் துவங்கியது. முன்னரே இது குறித்து டாக்டரிடம் கேட்டதற்கு, “இது ஒரு மாதிரி புலிவாலப் புடிச்ச வியாதிதான்... ஆயுசுக்கும் மாத்தர திங்கணும்” என்று சொல்லியிருந்தார். அவர் கொடுத்த மருந்துகளை எடுத்துப்பார்த்தும், பெரிதாகவொன்றும் சுகப்படவில்லை என்பதால் மேற்கொண்டு இவரும் நாட்டம் காட்டவில்லை. இப்போது வலி வின்னு வின்னென்று வெடிக்க ஆரம்பிக்கிறது. கடைசி இரண்டு நாள்களாக பாண்டி கடை வரைகூட நடக்க முடியவில்லை. நடுவில் மாத்திரை போடாமல் விட்டுவிட்டு, இப்போது போய்க் காட்டினால் ஏச்சு வாங்கித்தொலைய வேண்டும். இரண்டு நாள்கள் மேலுக்கு முடியவில்லையென அறைக்குள்ளேயே படுத்துக்கொண்டார் - மூட்டு கொஞ்சம் தணிந்துகொடுப்பதைப்போலத் தெரிந்தது.

மூன்றாம் நாள் மீண்டும் வாத்தியாரின் மனைவி பட்டியலுடன் வந்துவிட்டாள். இவருக்கும் சற்று வெளியே போய்விட்டு வந்தால் தேவலாம் என்றிருந்ததால், பையை வாங்கிக்கொண்டு முன்பைவிடக் கூடுதலாகத் தாங்கி, பாண்டி கடையின் பக்கம் போனார். கடையில் கூட்டம் வரிசை கட்டியிருந்தது. கோலமாவு வட்டங்களெல்லாம் காணாமல் போயிருந்தன. குறைந்தபட்சம் எல்லோரும் கைக்குட்டையையாவது முகத்தில் கட்டிக்கொண்டிருந்தார்கள்.

“பாண்டி.. அந்த ஸ்டூல கொடு. செத்த இப்டி குந்துறேன்.”

கூட்டம் கலைவதாக இல்லை. பட்டியலைப் பாண்டியிடம் கொடுத்துவிட்டுக் காத்திருந்தார். மாநகராட்சி ரோந்து வாகனம் விழிப்புணர்வு வாசகங்களை ஒலிபெருக்கியில் முழங்கியபடி கடந்துபோனது. வண்டி சாலைமுனையில் திரும்பும்வரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

“பொழப்பில்லாம கூவிட்டே இருக்கான் வாரக்கணக்கா. ஒரு நாயும் மதிச்சபாடில்ல.”

வரிசையில் நின்ற ஒருவர் முறைப்பதாகத் தெரிந்தது. இவர் தலையை ஒரு பக்கமாகத் திருப்பிச் சிரித்தார். மேற்கொண்டு அவருடைய முகத்தையே பார்க்கவில்லை.

பாண்டி இரண்டு பைநிறைய சாமான்களைப் போட்டு வந்து அவரிடம் நீட்டி, “வந்தா வாய் சும்மா இருக்காதாய்யா ஒனக்கு. மாஸ்க்கு போடாம ஒக்காந்ததும் இல்லாம வம்பு பேசி. அந்தாளு திட்டிட்டுப் போறான்..”

சிரித்தபடியே பைகளைப் பற்றிக் கொண்டவர், “மனசு சுத்தமா இருக்கவனுக்கு எதுக்குடா மாஸ்க்கு...” நடக்க ஆரம்பித்தார்.

“தெருவுல இதுக்கு மொத சாவு நீயாதான் இருக்கப்போற பாரு” பாண்டி பின்னாலிருந்து கத்துவது காதில் கேட்டது. பக்கவாட்டில் ஒரு முறை காறித் துப்பிவிட்டு சிரித்துக்கொண்டே நடையைத் தொடர்ந்தார். அதுதான் அவர் பாண்டி கடைக்குப் போய்வந்த கடைசி முறை.

மூட்டுவலி ஒரு காலோடு ஓயவில்லை; மறு மூட்டும் தெறிக்க ஆரம்பித்தது. இடுப்பெலும்பையும் தண்டுவடத்தையும் கவ்விப் பிடித்தது. கீழ்த் தண்டிலிருந்து கழுத்துவரை ஒரு பாறைக்கம்பியை உள்ளே செருகியதைப் போல, உடம்பை முறுக்கினால் உயிரே போவதுபோலிருந்தது. புரண்டுகூட படுக்கமுடியவில்லை. ஒரு நாளுக்குள்ளாக ஒட்டுமொத்த உடலையும் இறுக்கிப் பிழிந்தது வலி.

அசோகனின் மனைவி இரண்டு முறை கடைக்குப் போவதற்காகக் கேட்கவந்து, இவர் சுருண்டுகிடப்பதைப் பார்த்துத் தயங்கிவிட்டுப் போனாள். அசோகன் ஒருமுறை கீழே வந்து பெரியவரை எழுப்பாமல், மோட்டார் ரூம் சாவியை மட்டும் எடுத்துக்கொண்டு போய் தண்ணிமோட்டாரைப் போட்டுவிட்டு மேலே ஏறிவிட்டார். மதியமொரு முறை ஜெனரேட்டரைப் போடுவதற்காக வந்தபோதும் அவர் பெரியவரைத் தொந்தரவு செய்யவில்லை. சாயுங்காலத்தில் டாக்டரின் கார் கதவில் நின்றபடி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தபோது அவருடைய மனைவிதான் கீழே வந்து திறந்துவிட்டாள்.

“செக்யூரிட்டிண்ணா... ண்ணா... என்னாச்சு?”

படுத்தவாக்கிலேயே தலையைத் திருப்பிப் பார்த்தார்.

“ஒடம்பு நோவு சார்... எப்பயும் இல்லாம... கொன்னெடுக்குது.”

டாக்டர் கொஞ்சம் தயங்கி,

“காய்ச்சல் இருக்குதா?”

“காச்சல்லாம் இல்ல... வலிதான்.”

“… மாத்தர வீட்ல வெச்சுருக்கேன். கொண்டு வரேன் இருங்க.”

மாத்திரைக்கெல்லாம் ஒன்றுமே கேட்கவில்லை. வலியே மூச்சை நிறுத்திவிடும் போலிருந்தது; நின்றுவிட்டால் தேவலாம் என்றுதான் நினைத்தார். நடுராத்திரிக் கெல்லாம் முனகல் அதிகமானது. நா வறண்டு கசந்தது. எழுந்து ஒரு குவளை தண்ணீரை விழுங்கமுடியவில்லை. வலி.. பெருவலி.

அடுத்த நாள் கடைக்குப் போயிருந்த வாத்தியாரின் மனைவி சொல்லித்தான் பாண்டிக்கு விஷயம் தெரிந்தது. கடையில் ஒரு பையனை நிறுத்திவிட்டு, அவன் இங்கு வந்தபோது அசோகனும் ராஜேந்திரனும் டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். பாண்டி வந்து விசாரித்ததில் பெரியவரின் மகனுக்குத் தகவல் சொல்லிவிடப்பட்டி ருப்பதாகவும், மதியம் வந்து அவன் அழைத்துப்போவான் என்பதும் தெரிந்தது.

“ஜொரம் எதும் இருக்கா சார்?”

பாண்டி அந்தக் கேள்வியை அழுத்தமாகத்தான் கேட்டிருந்தான். யாரும் பதில் சொல்லவில்லை. பாண்டி அந்த அறைக்குள் போகப்போன போது அசோகன் தடுத்தார்.

“நீங்க மேல போங்க சார்... நா பாத்துக்குறேன்...” தோளில் கிடந்த துண்டையெடுத்து மூக்கைச் சுற்றிக் கட்டிக்கொண்டு அறைக்குள் நுழைந்தான்.

“பெரியவரே, சாப்ட்டியா எதுவும்...”

தலையை இடவலமாக வலுவில்லாமல் ஆட்டிவிட்டு நாக்கை ஒரு முறை நீட்டிக் காட்டினார்.

“கசக்குதா..?” நெற்றியில் கை வைத்தான் - லேசான சூடு.

அசோகன் சற்றுத் தள்ளி பின்னால் நின்று, “காய்ச்சல் இருக்கா என்ன?” என்றார்

“இவரு பையன ஜிஎச்சுக்கு வரச் சொல்லிருங்க சார்... நா கொண்டி இவர பெட்ல சேக்குறேன்.”

யாரும் அவனைத் தடுக்கவில்லை.

அன்று மாலை அந்த டாக்டர் கொண்டு வந்த ஏதோவொரு திரவத்தில் துணியொன்றை முக்கியெடுத்து உருட்டி, அந்தக் காலி அறைக்குள் வீசி, கதவிற்குப் பூட்டு போட்டார்கள்.

பெரியாஸ்பத்திரியில் சேர்த்த அடுத்த நாள் காலை பெரியவர் செத்துப்போய்விட்டார் என்பதும், அதற்கு முன்னர் அவருக்கு மூச்சுத் திணறல் இருந்ததென்றும், நோய்த்தொற்றுக்கான டெஸ்ட் எதுவும் எடுக்கப்படவில்லையென்றும், கடைசியாக இறப்புச் சான்றிதழில் ஆஸ்துமா என்று குறிப்பிடப்பட்டிருந்ததென்றும் பாண்டி சொல்லித்தான் குடியிருப்புவாசிகளுக்குத் தெரியவந்தது.

கிட்டத்தட்ட அடுத்த ஒரு மாதத்திற்கு அவர்கள் யாருக்கும் பாண்டி கடையிலிருந்து எதுவுமே தேவையாய் இருக்கவில்லை.

பன்னிரண்டாம் தேதி இறந்துபோன பெரியவருக்கான முழு மாதச் சம்பளத்தை மூன்று நான்கு முறை அலையவிட்ட பின்னர் அவரின் மகனிடம் கொடுத்தனுப்பினார்கள். அடுத்த செக்யூரிட்டிக்காக ஏஜன்ஸியில் சொல்லிவைத்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. பூட்டிய அறை பூட்டியபடியே கிடந்தது.

வாயிற்கதவைத் தாங்களே திறந்து மூடிக்கொள்ள குடியிருப்புவாசிகள் பழகி விட்டார்கள். பாண்டி கடையில் தொற்றுக் காலத்திற்கு முன்பைவிட கூட்டம் இப்போது அதிகம் நிற்பதாகத் தெரிந்தது. தள்ளுவண்டிக் கடையின் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில், தாடையில் முகக்கவசத்தை இழுத்து விட்டுக்கொண்டு போலீஸ்காரர்கள் இட்லித் தட்டுடன் நிற்க ஆரம்பித்தார்கள். இஸ்திரி வண்டியின் மணியோசை மீண்டும் வாடிக்கையானது.

ஒரு நற்காலையில், புதிய செக்யூரிட்டியை ஏஜன்ஸியிலிருந்து அனுப்பிவைத்தார்கள். அசோகன், வந்தவரிடம் நெறிமுறைகளை விளக்கிக்கூறிவிட்டு, பூட்டியிருந்த அந்த அறையை விருப்பப்பட்டால் சுத்தப்படுத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். உடன்நின்ற வங்கி மேலாளரும், ராஜேந்திரனும் எப்போதும் முகக்கவசம் அணியவேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்கள். வாசல் விளக்கு போடவெல்லாம் மாடிக்கு வரவேண்டியதில்லை என்பதை வாத்தியார் சேர்த்தார்.

அத்தனையையும் கேட்டுக்கொண்ட அந்தப் புது ஆள் படியிறங்கும்போது ஏதோ யோசித்தவாறு, மேலே நின்ற அவர்களைப் பார்த்துக் கேட்டார்,

“முன்னாடி யாரு சார் இருந்தது. நம்ம ஏஜன்ஸி ஆளா?”

“இல்லல்ல. பெரியவர் ஒருத்தரு இருந்தாரு. அவரு பேரு... ராஜேந்தர் சார்... அவரு பேரென்ன..?”

ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்தப் பெயர் யாருக்குமே நினைவிலில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism