Published:Updated:

வெளியற்ற நிழல்

வெளியற்ற நிழல்
பிரீமியம் ஸ்டோரி
வெளியற்ற நிழல்

பொன்முகலி - ஓவியங்கள்: மணிவண்ணன்

வெளியற்ற நிழல்

பொன்முகலி - ஓவியங்கள்: மணிவண்ணன்

Published:Updated:
வெளியற்ற நிழல்
பிரீமியம் ஸ்டோரி
வெளியற்ற நிழல்

ந்தக் கதையை எங்கிருந்து சொல்லத் தொடங்குவது என்று தெரியவில்லை. இதைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம், அம்மா தூக்க மாத்திரைகளை அள்ளித் தின்றுவிட்டு, கண்கள் சொருக படுக்கையில் அலங்கோலமாக விழுந்துகிடந்ததுதான் நினைவுக்கு வருகிறது. அண்ணனுக்கு அப்போது பதினேழு வயது, எனக்கு எட்டு. நடு இரவில் பாதித் தூக்கத்தில், அப்பாவும் அண்ணனுமாகத் தோள்களை ஒருவரும் கால்களை ஒருவருமாகப் பிடித்துத் தூக்கிக்கொண்டுபோய் காரில் கிடத்தியபோது, நான் என் பாட்டியின் கைகளைப் பிடித்தபடி கலவரத்தோடு நின்றிருந்தேன். பாட்டி, “சண்டாளி... சண்டாளி இப்படி அவசரப்பட்டுட்டியே” எனக் கண்களில் நீர் வழிய அரற்றியபடியே அவர்களின் பின்னால் ஓடினாள். நானும் அவர்களோடே ஓடி காரில் ஏற முற்பட்டபோது, ஆனந்தி அத்தை என்னை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துப் பிடித்துக்கொண்டாள். கார் கிளம்பிப்போய் தெருமுனையில் திரும்பி மறைகிறவரைக்கும் அங்கேயே நின்று கொண்டிருந்துவிட்டு உள்ளே திரும்பினோம். நான் அவள் கைகளிலிருந்து என் கைகளை விடுவித்துக்கொண்டேன். உள்ளே நுழைந்ததும், அத்தை ஹாலில் இருந்த நாற்காலியில் தொப்பென அமர்ந்து, முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அதில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். அம்மா அங்கே இல்லாத வெறுமையை என்னால் சட்டென உணர முடிந்தது. நான் அம்மாவின் அறைக்குள் நுழைந்தேன். கட்டிலில் அவள் எப்போதும் படுக்கும் இடத்தில் படுத்துக்கொண்டு, அவளுடைய தலையணையை எடுத்து பக்கத்தில் வைத்துக்கொண்டேன். குளிர்கால இரவுகளில் ஒரு பூனையைப்போல அவள் வயிற்றுச் சூட்டுக்குள் சுருண்டு படுத்து உறங்குவது நினைவுக்கு வந்தது. கேவிக் கேவி அழ ஆரம்பித்தேன்.

வெளியற்ற நிழல்

ண்ணன் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்தான். அப்பா தொலைபேசியில் யாரிடமோ உரக்கப் பேசிக்கொண்டிருந்தார். காலை வெயில் மெதுமெதுவாகத் தாழ்வாரத்தில் இறங்கிக்கொண்டிருந்தது. முந்தைய நாள் இரவு முழுவதும் விடாமல் பெய்திருந்த மழை, வெயிலுக்கு ஒரு புதிய அழகைக் கொடுத்திருந்தது. “கிளம்பிட்டியாடா?” என்றபடியே தொலைபேசியை வைத்துவிட்டு, அண்ணனைப் பார்க்காமல் , கண்ணாடியைத் துடைத்தபடியே கேட்டார் அப்பா. “ம்” என்று அவருக்கு முனகலாகப் பதிலளித்துவிட்டு, படிகளில் அமர்ந்தபடி எனக்கும் தலைவாரி விட்டபடி இருந்த அம்மாவையும் என்னையும் பார்த்து கையசைத்துவிட்டுப் புறப்பட்டான். அப்பா சிறிது நேரம் அதே இடத்தில் நின்று, அவன் சைக்கிளில் போய் மறைவதைப் பார்த்தார். பிறகு என் பக்கம் திரும்பி, “இன்னிக்கு உனக்கு ஸ்கூல் இல்லையா நர்மிக் குட்டி?” என்று கேட்டுக்கொண்டே என்னைப் பார்த்து அருகே வருமாறு கையசைத்தார். நான் ஓடிப்போய் அவர் மடிமீது தாவி ஏறி அமர்ந்துகொண்டு “இல்லை” என்று சொல்லிச் சிரித்தேன். கோபம் எதுவும் இல்லாத பொழுதுகளில் அப்பா நிறைய கதைகள் சொல்வார். மிகச் சிறியதாக வளர்ந்திருக்கும் தன் தாடி மயிர்களை என் கன்னத்தோடு உரசிச் சிரிக்கவைப்பார். டை அடிக்கும்போது, பின் தலையில் எந்த இடத்திலாவது விட்டுப் போய்விட்டதா என்று கேட்பார். இந்தச் சமயங்களிலெல்லாம் அப்பாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் அண்ணனுக்கு அம்மா என்றால்தான் எப்போதும் பிரியம். அப்பா வீட்டிலிருக்கும் சமயங்களில் ஒருவிதமான இறுக்கத்தோடும் மௌனத்தோடும் பெரும்பாலும் அவனுடைய அறையிலோ இல்லை, மொட்டை மாடியிலோ இருப்பான். மாலை வேளைகளில் அம்மா, நான், அவன் என டீ அருந்தும்போது இருக்கிற அண்ணனாகவோ, எப்போதும் என்னிடம் பேசி வம்பிழுத்து, சண்டையிட்டுச் சிரிக்கிற அண்ணனாகவோ அப்போது இருக்க மாட்டான்.

ருடமோ மாதமோ சரியாக நினைவிலில்லை . ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன். அந்த வருடம் மழை தொடர்ந்து பெய்தபடியே இருந்தது. அடைமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர்ந்து இரண்டாவது நாளாக விடுமுறை விட்டிருந்தார்கள். சாயங்காலம் மணி நான்குக்கெல்லாம் வானம் இருண்டுபோய்விட்டது. நானும் அண்ணனும் அம்மாவும் பின்கட்டு வாசலில் அமர்ந்து, மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். நான் அம்மாவின் மடியில் அமர்ந்துகொண்டு, ஓட்டிலிருந்து கம்பி கம்பியாய் இறங்கும் நீர்த்தாரைகளைப் பிடித்து அண்ணன்மீது தெறிப்பதும், கீழே விடுவதுமாக விளையாடிக்கொண்டிருந்தேன். நாங்கள் இருந்தது நல்ல பெரிய வீடு. அப்பா வராந்தாவைத் தாண்டி, முன்கட்டையும் ஹாலையும் சமையலறையும் தாண்டி, நாங்கள் இருந்த இடத்திற்கு வரும்வரை அவர் வருகையை நாங்கள் அறியவில்லை. போன வாரத்தில், வீட்டுத் தோட்டத்தில் நான் ஒன்றும் அண்ணன் ஒன்றுமாய் நட்ட தென்னங்கன்றுகளில் எது விரைவாக வளர்கிறது என்று அம்மாவிடம் முறையிட்டுக் கொண்டிருந்தோம். அப்பா வந்து, “எல்லோரும் இங்கேதான் உட்கார்ந்துட்டு இருக்கீங்களா?” என்று கேட்கிறவரைக்கும் யாருக்கும் அவர் வந்தது தெரியவில்லை.

“ஒரு டீ போடு” எனச் சொல்லியபடியே சட்டையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டிவிட்டு, அலமாரியைத் திறந்து வேஷ்டி ஒன்றை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தார். திரும்பி வந்து, அம்மா தட்டில்  வைத்திருந்த முறுக்கை எடுத்துக் கடித்துவிட்டு, ஒரு வாய் டீயைக் குடித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெளியற்ற நிழல்

அப்போது அம்மா “கணேசண்ணன் போன் பண்ணி இருந்தாங்க” என்றாள். அப்பா எதுவும் பேசவில்லை. அம்மா மறுபடியும், “ஆபீஸுக்கும் போகலேன்னா காலைல இருந்து இப்போவரைக்கும் எங்கே இருந்துட்டு வர்றீங்க?” என்று கேட்டாள். அப்பாவுக்கு முகம் சிவந்தது. கோபத்தில் டீயோடு தம்ளரைத் தூக்கி எறிந்தார். அது தூணில் பட்டு, தாழ்வாரத்தித்தில் விழுந்து உருண்டது.

“மனுஷன் இப்படினு வெளியே போயிட்டு வந்தா ஆயிரத்தெட்டுக் கேள்வி. உன்கிட்ட எல்லாத்துக்கும் உத்தரவு வாங்கிட்டுத்தான் ஒண்ணொண்ணும் செய்யணுமா?” என்று அம்மாவை நோக்கிக் கோபத்தோடு கத்தினார்.

அம்மா எதுவும் சொல்லாமல் இருந்தால் பரவாயில்லையே என்பதுபோல நானும் அண்ணனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

அம்மா, “எதுக்கு இத்தன ஆர்ப்பாட்டம்? இங்கே போனேன்னு சொன்னா முடிஞ்சது” என்று மீண்டும் கொஞ்சம் கோபமான, ஆனால் கிண்டல் தொனிக்கிற குரலில் சொன்னாள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவ்வளவுதான்! அப்பா பாய்ந்து எழுந்து அவள் முடியைக் கொத்தாகப் பற்றியிழுத்து கன்னத்தில் மாறி மாறி அறைந்தார். “எங்கெ வேணா போவேன். என்ன வேணா பண்ணுவேன். உனக்குப் பிடிச்சா இரு, பிடிக்கலேன்னா வெளியே போடி நாயே” என்றபடி இன்னும் உக்கிரமாக அம்மாவை அடிக்க ஆரம்பித்தார். அண்ணன் எழுந்து ஓடி, இருவருக்கும் இடையில் புகுந்து, அப்பாவைத் தள்ளிவிட முயற்சி செய்தான். அப்பா இன்னும் ஆத்திரமாகி, “என் மகனையே எனக்கு எதிராத் திருப்புறியாடி நாயே” எனப் பற்களை வெருவியபடி அம்மாவைச் சுவரோடு சேர்த்து அழுத்தினார். அண்ணன் தன் முழு பலத்தோடு அப்பாவைப் பிடித்துத் தள்ளிவிட்டு, “ஒழுங்காப் போயிடு. இன்னொரு தடவை எங்க அம்மா மேல கைவெச்சேன்னா... மரியாதை கெட்டுடும்” எனத் தன் ஆட்காட்டி விரலை ஆட்டியவாறு அவரை எச்சரித்தான். அப்பா அவன் தன்னை முதன்முறையாக ஒருமையில் பேசியது கேட்டுத் திகைத்துப்போய் நின்றார். நம்ப முடியாதவர்போல ஒரு நிமிடம் குழம்பி நின்று அவன் முகத்தையே பார்த்தார். பிறகு திரும்பி, ஹேங்கரில் மாட்டியிருந்த சட்டையை எடுத்து அணிந்துகொண்டு, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மழையில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். அம்மா அப்படியே மடங்கி உட்கார்ந்து, அண்ணனின் கால்களைக் கட்டியபடி சிறு குழந்தைபோலத் தேம்பினாள். அண்ணன், எந்த அசைவுமின்றி அதே இடத்தில் அப்படியே நின்றுகொண்டிருந்தான். மழை இன்னும் வலுத்துப் பெய்யத் தொடங்கியது. முகத்தில் சாரல் அடிக்க, தென்னங்கன்றுகள் காட்சியிலிருந்து மங்கலான பின்னும் நான் அங்கேயே அமர்ந்திருந்தேன்.

பாட்டி வந்திருந்தாள். “ஒரு வாரமா பிள்ளைங்க கண்ணுக்குள்ளயே நிக்குதுங்க. அதான் நேரமே எல்லா வேலையையும் முடிச்சுப்போட்டு, எட்டரை மணி பஸ்ஸுக்கே கெளம்பி வந்துட்டேன்”என்றபடி சமையலறையில் மனைப்பலகையை இழுத்துப்போட்டு அமர்ந்தாள். ஒவ்வொரு முறை வருகிறபோதும், தான் சுமக்க முடிவதற்கு மேல் ஒரு பையையாவது அதிகமாக் கொண்டுவருவதுதான் அவள் வழக்கம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பண்டங்களையாவது விசேஷமாகச் செய்துகொண்டு வருவாள். அதில் வேர்க்கடலை உருண்டையும், “வாசு கண்ணுக்குப் புடிக்குமேன்னு...” என்று கடலைப் பருப்பை வேகவைத்து, அதில் வெல்லமும் ஏலமும் சேர்த்து நன்றாக அரைத்து, நிறைய நெய்விட்டு சிறு சிறு உருண்டைகளாக்கிக் கொண்டு வருவாள். அதற்குப் பிஞ்சுக் கத்திரிக் காய்களில் நிறைய தேங்காய் துருவிச் சேர்த்து செய்த பொரியல். அதை அவளே தட்டில் போட்டு பேரனுக்குக் கொடுத்து, அவன் அதை மிச்சம்வைக்காமல் சாப்பிட்டு முடித்தால்தான் திருப்தியடைவாள்.

கோடை விடுமுறையை நாங்கள் எப்போதுமே எங்கள் வீட்டில் கழித்தது இல்லை. விடுமுறை விட்டவுடன், அப்பாவின் அக்காவான ஆனந்தி அத்தையின் வீட்டுக்கு நான் மட்டும் போய் ஒரு நான்கைந்து நாள்கள் இருப்பேன். அத்தையின் பிள்ளைகளெல்லாம் பெரிய பிள்ளைகளாகி மூத்தவன் ஓர் இடத்தில் வேலையிலும், இளையவன் ஹாஸ்டலில் படித்துக்கொண்டும் இருந்ததால், அங்கே வந்தால் போரடிக்கும் என்று அண்ணன் எப்போதும் வரமாட்டான். அத்தை இருந்தது நகரமொன்றில் என்பதனால் பெரிதாக வெளியே சென்று விளையாடவும் அவள் என்னை அனுமதிக்க மாட்டாள். சரியாக ஐந்தாவது நாளிலெல்லாம் நான் அத்தையை நச்சரிக்கத் தொடங்கிவிடுவேன். “வீட்டுக்குப் போறேன் அத்தை. கொண்டுபோய் விடு” என்று சிணுங்கிக்கொண்டே இருப்பேன். அத்தை இரண்டு நாள்கள் சமாளித்துப் பார்த்து, பிறகு அவளுக்குப் பிடித்த நிறத்தில் ஓர் உடையும், எனக்குப் பிடித்த நிறத்தில் ஓர் உடையுமாக வாங்கிக் கொடுத்து வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போவாள்.

வெளியற்ற நிழல்

போன மறுநாளே பாட்டி வீட்டிற்கு நானும் அண்ணனும் கிளம்பிவிடுவோம். அங்கே போவது என்றால் எங்களுக்குத் தனி சந்தோஷம் வந்துவிடும். பாட்டி வீடு தோட்டத்தில் அமைந்திருந்தது. வீட்டிற்குப் பின்னால் நிறைய மரங்களாக இருக்கும். கொய்யா மரத்தில் ஏறி, பக்கத்துத் தோட்டத்தைச் சேர்ந்த மஹேஸ்வரி அக்காவுடனும், கதிர்வேலு அண்ணனுடனும் நானும் அண்ணனும் ‘டிரைவர் - கண்டக்டர்’ விளையாட்டு விளையாடுவோம். பாட்டி வளர்த்த செவலை மாட்டுக்கு வைக்கோல் எடுத்துப்போடுவதில் எனக்கும் மகேஷ் அக்காவிற்கும் எப்போதும் போட்டி இருக்கும். அங்கே படிகள் வைத்த ஒரு கிணறு இருந்தது. அந்தக் கிணற்றைச் சுற்றி வேப்பமரங்களும் ஆலமரமொன்றும் வளர்ந்திருக்கும். அதனால் பகல் நேரத்தில்கூட அங்கே நல்ல குளிர்ச்சியாக இருக்கும். அந்தக் கிணற்றில்தான் அண்ணன் நீச்சல் பழகினான். அவன் அந்தக் கிணற்றில் சுற்றிச் சுற்றி நீச்சல் அடிக்கும்போது, நான் கடைசிப் படிக்கட்டில் அமர்ந்து கிணற்று நீரில் கால்களை அளைந்து கொண்டிருப்பேன்.

மழைக்காலங்களில் பாட்டி வீட்டில் நாங்கள் இருந்தபோது, காலையில் பாட்டி என்னை எழுப்பி கரும்பு வயல்களின் ஓரங்களில் புடைத்திருக்கும் காளான்களைத் தேடக் கூட்டிச் செல்வாள். சில நாள்களில் மடி நிறைய காளான்களோடு திரும்புவோம்; சில நாள்களில் ஒன்றும் கிடைக்காது. நாங்கள் அங்கிருக்கும்போது, பாட்டி ஒரு சிறுமியைப்போல ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பாள். அவளின் ஒரே மகளின் பிள்ளைகளான எங்களின் மீது அவளுக்கு அளவுகடந்த அன்பு இருந்தது. அண்ணனிடம் அவ்வப்போது வாஞ்சையாக “நீ மட்டும் இன்னும் கொஞ்சம் ஆளாகிட்டாப் போதும் கண்ணு. உங்க அம்மாவுக்கு எல்லாப் பிரச்னையும் தீர்ந்துடும்” என்று சொல்வாள்.

ந்த மழை இரவுக்குப் பிறகு, அப்பா எங்களிடம் பேசவே ரொம்ப சங்கடப் பட்டவராக இருந்தார். யாரோ முன்பின் தெரியாதவர் வீட்டுக்கு விருந்து போனவர் போல ஒரு சங்கடத்தோடு இருந்தார். ஒரு வாரத்திற்குப் பிறகு, என்னிடம் மட்டும் சங்கோஜமெல்லாம் மறைந்துபோய் இயல்பாகப் பேச ஆரம்பித்தார். ஒருநாள் அலுவலகத்திலிருந்து திரும்பி வரும்போது, தேவர் மெஸ்ஸிலிருந்து எல்லோருக்கும் பரோட்டா வாங்கி வந்திருந்தார். அண்ணனும் அம்மாவும் அதைத் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. நான் மட்டும் அண்ணன் என்னை முறைத்ததைப் பொருட்படுத்தாமல் இரண்டைச் சாப்பிட்டுவிட்டு எழுந்தேன். அந்த வயதில் எனக்குப் புரியாத மௌனமொன்று இவர்கள் மூவருக்கும் இடையில் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருந்ததைச் செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த மழை இரவுக்குப் பிறகு, அப்பா எங்களிடம் பேசவே ரொம்ப சங்கடப் பட்டவராக இருந்தார். யாரோ முன்பின் தெரியாதவர் வீட்டுக்கு விருந்து போனவர் போல ஒரு சங்கடத்தோடு இருந்தார்.

விடியற்காலையிலெல்லாம் அம்மாவின் உடலை வீட்டிற்கு எடுத்துவந்துவிட்டார்கள். துக்கத்திற்கு வருகிற ஒவ்வொருவரும் என்னைப் பார்க்கும்போது பொங்கிப் பொங்கி அழுது தீர்த்தார்கள். பாட்டி விழிப்பதும் அலறுவதும் மயங்கிவிழுவதுமாக இருந்தாள். அண்ணன், அம்மாவின் தலைமாட்டில் அமர்ந்துகொண்டிருந்தான். அவனுடைய கைகள் அம்மாவின் தலையை வருடியபடியே இருந்தன. ஆனந்தி அத்தை அவனுக்குப் பக்கத்தில் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அழுதழுது அவளுடைய கண்கள் வீங்கிப்போயிருந்தன. எனக்கு இனிமேல் அம்மா எப்போதும் திரும்பி வரமாட்டாள் என்பது ரொம்ப நிச்சயமாகத் தெரிந்திருந்தது. நான் அவளுடைய கால்மாட்டில் அமர்ந்திருந்தேன். “அம்மா... அம்மா...” என்று அழுதபடியே கண்களைத் துடைப்பதும் மூக்கை உறிஞ்சுவதுமாக இருந்தேன். அம்மாவின் கால் பெருவிரல்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. அவளுடைய பாதவெடிப்புகள் வறண்டு, தோலுரிந்து காணப்பட்டன. அம்மா எப்போதும் இரவு படுக்கப்போகும் முன்னர் அந்த வெடிப்புகளில் வலி குறைவதற்காக களிம்பொன்றைப் பூசுவாள். எனக்கு இப்போது அந்தச் சிறிய டப்பாவிலிருந்து கொஞ்சம் களிம்பெடுத்து வந்து அவள் கால்களில்  தேய்த்துவிட வேண்டும்போல இருந்தது. ஆனால், அந்த இடத்தைவிட்டு எழவில்லை. எழுந்துபோனால் அம்மாவை யாராவது என்னிடமிருந்து பிரித்து எடுத்துக் கொண்டுபோய்விடுவார்கள் என்று அச்சப்பட்டவளைப்போல அதே இடத்திலேயே உட்கார்ந்திருந்தேன். அவளுடைய கால் விரல்களை என்னுடைய கைகள் இறுக்கமாகப் பற்றியிருந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

னக்கு அந்த நாள்களில் நடந்த எதுவுமே அப்போது சரியாகப் புரிந்தது இல்லை. அம்மாவும் அப்பாவும் ஏன் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்? அண்ணனுக்கும் பாட்டிக்கும் எதற்காக அப்பாவின் மீது இவ்வளவு கோபம் என்று எதையும் என்னால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. தெளிவில்லாமல், ஒரு சில காட்சிகள் மட்டும் அவ்வப்போது நினைவில் வந்துபோகும். வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவ, பக்கத்துத் தெருவிலிருந்து லலிதா என்று ஒரு அக்கா அவ்வப்போது வீட்டிற்கு வந்துபோவார். ஒருமுறை அவசரமாக நாங்கள் கலைவாணி சித்தியின் வீட்டிற்குப் போகவேண்டி இருந்தது. அப்பா மதியம் சாப்பிட வீட்டிற்கு வருவார். எனவே அம்மா, லலிதா அக்காவிடம் “வீட்டைப் பெருக்கிட்டு, ஒரு ரசம் மட்டும் வெச்சு சாப்பாடு வடிச்சுட்டு, சாவியை சுமதி அக்கா வீட்ல கொடுத்துட்டுப் போயிடு லலிதா. நாங்க வர சாயந்திரம் ஆகிடும்” என்று சொல்லிவிட்டு, எங்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு கிளம்பினாள். அன்று மாலை ஐந்து மணிக்கெல்லாம் வீடு திரும்பிவிட்டோம். நான் அண்ணனுக்கும் அம்மாவிற்கும் முன்னால் சுமதி அத்தையின் வீட்டிற்குச் சாவி கேட்க ஓடினேன். அத்தை, “லலிதா சாவி எதுவும் கொடுக்கலியே” என்று சொன்னாள். நாங்கள் மூவரும் வீட்டிற்குப் போனபோது கதவு திறந்திருந்தது. அப்பா பழைய இந்திப் பாடல் ஒன்றைக் கேட்டபடி, வராந்தாவில் படிகளில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். அம்மா, “சாப்டுட்டு மத்தியானம் ஆபீஸ் போகலையா?” என்று கேட்டபோது, “இல்லை. கொஞ்சம் தலைவலி. அதான் லீவு சொல்லிட்டேன் கூப்பிட்டு” என்று சொல்லிவிட்டு, வீட்டிலிருக்கும் சமயங்களில் எப்போதும் செய்வதுபோல, குளித்துவிட்டு வந்து பூஜையறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு கைகளைக் குவித்தபடி திருவாசகம் ஓத ஆரம்பித்தார். “எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்...”

வெளியற்ற நிழல்

கணீரென்று வீடு முழுவதும் ஒலித்தது. அம்மா அவரையே சமையற்கட்டின் நிலைப்படியில் நின்றபடி வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“நேரமாச்சு. இனி எடுத்துடலாம்” என்று கூட்டத்திலிருந்து ஓர் ஆண் குரல் உரக்கக் கேட்டது. அப்போது பாட்டியிடமிருந்து ஒரு பெரிய ஓலம் எழுந்தது. “அய்யய்யோ, நீ செத்து சவமாகக் கெடக்கறத பாத்தப்பறமும் இந்த உசுரு இன்னும் கூட்ட விட்டுப் போகாம இருக்கே...” என்று பெரிதாகக் கத்தியபடி மார்பில் அறைந்துகொண்டாள். துரை சித்தப்பாவும் நடராசு  பெரியப்பாவும் அம்மாவின் உடல் அருகே வந்தபோது ``எம் புள்ளய எடுத்துட்டுப் போக யாரையும் விடமாட்டேன். டேய் சண்முகா, எம் புள்ளையவே கொன்னுட்டு நீ எப்போவும் இருந்துடலாம்னு பாக்கறியா. விடமாட்டன்டா உன்னை”என்று சன்னதம் வந்தவள்போலக் கத்தினாள். அவளை நான்கைந்து பெண்கள் சேர்ந்து அழுத்திப் பிடித்துக்கொண்டனர். அண்ணன், “அம்மா அம்மா” என்று அலறியபடியே அவள் தலையை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டான். எனக்குக் கலவரமாக இருந்தது. அந்தக் கூட்டத்தில் அப்பாவைத் தேடினேன். அவர் எங்கேயும் தென்படவில்லை. இதிலிருந்தெல்லாம் இனி அம்மா மட்டும்தான் என்னைக் காப்பாற்ற முடியும் என்பதுபோல, “அம்மா...” எனக் கத்தியபடி அவள் உடல் மீது ஏறி, அவளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டேன்.

கணீரென்று வீடு முழுவதும் ஒலித்தது. அம்மா அவரையே சமையற்கட்டின் நிலைப்படியில் நின்றபடி வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

பதினாறாவது நாள் காரியம் முடிந்தது. நடுவீட்டில் அம்மாவின் புகைப்படம் பெரிய ரோஜாப்பூ மாலை சார்த்தி வைக்கப் பட்டிருந்தது. அருகே பெரிய குத்துவிளக்கில் சுடர் ஆடாமல் நின்று நிதானமாக எரிந்தபடி யிருந்தது. பதினாறுக்கு வந்திருந்தவர்களில், முக்கியமானவர்கள் சிலரைத் தவிர எல்லோரும் கிளம்பிப் போய்விட்டிருந்தனர். இருந்தவர்களிடம் பாட்டி, “இனிமே இந்தப் பிள்ளைகளை இந்த ஆளை நம்பி இங்கே விட்டுட்டுப் போகமாட்டேன்” என்று தீர்மானமான குரலில் அதை ஒரு முடிவான அறிவிப்பைப்போலச் சொன்னாள். ஆனந்தி அத்தை ஏதோ பேச முற்பட்டபோது, “இருன்னு சொல்ல நினைக்கற யாரும் முதல்லே செத்துப்போன எம் பொண்ணுக்குப் பதில் சொல்லிட்டு அப்புறம் பேசுங்க” என்றாள். அத்தைக்கு நிற்காமல் கண்ணீர் வழிந்தது. அப்பா ஒரு வார்த்தையும் பேசாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

நானும் அண்ணனும் எங்களுடைய துணிகள் நிறைந்த பைகளையும் புத்தகப் பையையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தபோது, அப்பா, “நர்மி குட்டி...” என்று பெரிய கேவலுடன் மண்டியிட்டு என்னை அணைத்துக்கொண்டார். அம்மா இறந்து அத்தனை நாள்களுக்குப் பிறகு அப்போதுதான் அப்பா என் அருகில் வந்து என்னைக் கட்டியணைக்கிறார். நானும் அவரைத் தாவி அணைத்துக்கொண்டு அழுதேன். எனது விரல்கள் அவரது சட்டையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டன. அவர் கைகளிலிருந்து, என்னை வலுக்கட்டாயமாகப் பிரித்து காரில் ஏற்றிப் புறப்பட்டபோது, சாணம் பூசி மெழுகப்பட்ட அந்த மண்தரையில் மண்டியிட்டு, முகத்தைப் பொத்தியபடி அவர் அழுதுகொண்டிருப்பது தெரிந்தது.

நான் யாரையும் மன்னிக்கத் தேவையில்லை என்பதுபோலவும், மன்னிப்பதில் பிழையில்லை என்பதுபோலவும் மாறிமாறித் தோன்றியது.

அண்ணன் அந்த வருடம் பன்னிரண்டாவது முடித்த பிறகு, அங்கே பாட்டி வீட்டில் இருக்கவில்லை. அவன் படித்த தொழிற்நுட்பக் கல்லூரியோடு இணைந்திருந்த விடுதி ஒன்றிலேயே தங்கிக் கொண்டான். மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே வீட்டிற்கு வருவான். பள்ளி நேரம் தவிர என்னுடைய பொழுதுகள் பெரும்பாலும் பாட்டியைத் தவிர யாருமற்ற உலகத்திலேயே கழிந்தன. அண்ணன் படிப்பு முடிந்தவுடன் கலிஃபோர்னியா யுனிவர்சிட்டி ஒன்றில் மேற்படிப்புக்குத் தேர்வாகி, அங்கே போய் படித்து, அங்கேயே வேலை தேடிக்கொண்டு தங்கிவிட்டான். அவனுடைய கல்யாணத்திற்குக்கூட அப்பாவை அழைக்க அவன் ஒத்துக்கொள்ள வில்லை.

நான் பாட்டி வீட்டிற்கு வந்தவுடன், புதிய பள்ளிக்கூடம் ஒன்றில் சேர்க்கப்பட்டேன். இடையில் என்னைப் பார்ப்பதற்காக, இரண்டு முறை தனியாகவும் கடைசி முறை வரும்போது ஆனந்தி அத்தையோடும் அப்பா வந்துபோனார். இதைக் கேள்விப்பட்ட பாட்டி பள்ளிக்கு வந்து, பள்ளி முதல்வரிடம் ‘அவர் வந்தால் அனுமதிக்கக் கூடாது’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். நான் படித்து முடித்து, பெங்களூரில் வேலை பார்க்கும்போது, என்னுடன் வேலைபார்த்த நவீன் சக்ரோபர்த்தியைக் காதலித்து, அது திருமணம்வரை கைகூடி வந்தபோதுதான், முதற் பத்திரிகையை எடுத்துக்கொண்டு, தனியாக அத்தனை வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் அப்பாவைப் பார்க்கப் போனேன். நான் போனபோது அப்பா வீட்டில் இல்லை. வீடு எந்தப் பெரிய மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது. தனியே வெளித் திண்ணையில் அமர்ந்திருந்த என்னைத் தயங்கியபடியே விசாரிக்க வந்த பக்கத்து வீட்டு சுமதி அத்தை, அடையாளம் தெரிந்தவுடன் ஓவென்று அழுதபடியே என்னை அணைத்துக்கொண்டாள். அவளது மகன் அவசர அவசரமாக அப்பாவை அழைத்துவரக் கிளம்பினான்.

அப்பாவுக்கு என்னைப் பார்த்தவுடன் என்ன சொல்வது, என்ன கேட்பது என்று எதுவும் புரியவில்லை. “இப்போதான் வந்தியா? உள்ளே வா” என்று சிரிக்க முயன்றார். ஹாலில் இருந்த சோபாவைக் காட்டி, “உட்காரு, தண்ணி எடுத்துட்டு வர்றேன்” என்று உள்ளே போனார். ஹாலில் தாத்தா, பாட்டியின் புகைப்படத்திற்கு அடுத்து அம்மாவின் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. தொலைக்காட்சிப் பெட்டியின் மேல் நானும் அண்ணனும் சிறுவர்களாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமொன்று வைக்கப்பட்டிருந்தது. ‘ஆனந்தி அத்தை வந்து வீட்டை அவ்வப்போது ஒழுங்குபடுத்திவிட்டு, மாவரைத்து வைத்துவிட்டுப் போவாள்’ என்று சொன்னார். வேறு என்ன பேசுவது என்று இருவருக்கும் தெரியவில்லை.

நான் என்னுடைய பையிலிருந்து திருமணப் பத்திரிகையை எடுத்து அவர் கையில் கொடுத்தேன். அவர் பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தார். சிறிது நேரம் இருவரும் அப்படியே அமர்ந்திருந்தோம். “சரி. நான் கிளம்பறேன். நேரமாச்சு” என்று எழுந்தபோது, அவரும் கூடவே நடந்து வந்தார். நான் காரைக் கிளப்பிவிட்டு, கண்ணாடியை இறக்கித் தலையசைத்தபோது அவர் கண்களில் நீர் தளும்பியது. நான் வேகமாகப் புறப்பட்டேன். இரண்டு கிலோ மீட்டர்களுக்குப் பிறகு அந்த நெடுஞ்சாலையில் இருந்த ஒரு வேப்ப மரத்தினடியில் காரை நிறுத்தியபோது, அவ்வளவு நேரம் நெஞ்சில் அடைத்துக்கொண்டிருந்த கேவலொன்று வெடித்துக் கிளம்பியது. ஒரே நேரத்தில், நான் அங்கு போனது தவறு என்பதுபோலவும், சரி என்பதுபோலவும், நான் யாரையும் மன்னிக்கத் தேவையில்லை என்பதுபோலவும், மன்னிப்பதில் பிழையில்லை என்பதுபோலவும் மாறிமாறித் தோன்றியது. அப்போதே நவீனுடைய வெற்றுடம்பைக் கட்டிக்கொண்டு, அவன் நெஞ்சில் தலைவைத்துக்கொள்ள வேண்டும் போன்ற ஓர் இச்சை காட்டாறுபோலப் பெருகியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism