Published:Updated:

புகைப்படம்

புகைப்படம்
பிரீமியம் ஸ்டோரி
புகைப்படம்

கன்னட மூலம்: எஸ்.திவாகர்- தமிழில்: நஞ்சுண்டன் - ஓவியம்: பாரதிராஜா

புகைப்படம்

கன்னட மூலம்: எஸ்.திவாகர்- தமிழில்: நஞ்சுண்டன் - ஓவியம்: பாரதிராஜா

Published:Updated:
புகைப்படம்
பிரீமியம் ஸ்டோரி
புகைப்படம்

யவுசெய்து இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள். இதிலிருப்பவர்கள் மணமக்கள். இருவரில் ஒருவராவது செல்வந்தர் என்பதற்கு இவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களே சாட்சி. முதலில் மணமகளின் மீதே உங்கள் கவனத்தைக் குவியுங்கள்.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்பிள்ளைகளுக்கு மிக விரைவில் திருமணம் செய்வது ஒரு வாடிக்கையாக இருந்தது. அதனால் இந்தச் சிறுமிக்கும் பதினான்கோ பதினைந்தோ வயதாகியிருந்தால் அதிகம். இந்த வார்த்தைகளுக்கு முந்தானையில் மூடிக்கொண்டிருக்கும் இவள் மார்பும் ஆதாரம் அளிப்பதுபோலிருக்கிறது. உருண்டை முகம். அதில் சற்று புடைத்திருப்பது போன்ற கண்கள். தடிமனே என்று சொல்லத்தக்க புருவம். மூக்கின் புல்லாக்கு உதடுகளைத் தொடுமளவுக்கு கீழிறங்கியிருப்பதிலிருந்து அந்த உதடுகள் தீவிரத்தையோ புன்னகையையோ காட்டுவதாகக் கறாராகச் சொல்வது கடினம். இவள் கன்னங்கள் உப்பியிருக்கின்றன என்பதற்குத் தாடையில் கவிந்திருக்கும் நிழலே போதும். வகிடையும் நெற்றியையும் மூடியிருக்கும் ஆபரணங்கள். அவற்றின் பேச்செடுத்தால், இவள் கழுத்தில் எத்தனை சங்கிலிகள் இருக்கின்றன தெரியுமா? நான் எத்தனையோமுறை எண்ணியிருப்பதிலிருந்து கழுத்தில் நெருக்கமாகச் சுற்றியுள்ளது மூன்று விரலளவு அகலமுள்ள சங்கிலி. அதற்குக் கீழே புஜத்தளவு வரும் நான்கு சங்கிலிகள். அங்கிருந்து மார்பின் கீழ்வரை இறங்கியிருக்கும் ஏழு சங்கிலிகள். இந்தத் தங்கச் சங்கிலிகளில் முத்து, பவளம், விலை மதிப்புமிக்க மணிகள் உள்ளனவென்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. போதாததற்கு வங்கி, இடையில் ஒட்டியாணம், கைகளில் வளையல்கள், கங்கண வளையல்கள். அந்த வளையல்களிலிருந்து நீளும் இணைப்புச் சங்கிலிகளின் இரண்டு முனைகள், ஆட்காட்டி விரலிலும் சுண்டு விரலிலும் இருக்கும் மோதிரங்களைப் பிடித்துள்ளன. மேலும் இவள் கால்களைப் பாருங்கள். அவற்றில் கைப்பருமனில் சலங்கைத் தண்டைகள். நான்கு விரல்களில் நான்கு மோதிரங்கள். பெருவிரலிலிருக்கும் அவ்வளவு தடிமனான மோதிரத்தைப் பார்த்து என்னைப்போலவே நீங்களும் ஆச்சர்யப்படலாம். மொத்தத்தில் தொடைகளின் மேல் கைவைத்துக்கொண்டு, கால்களை முடிந்தளவு பக்கத்தில் கொண்டுவந்து யாருடைய வற்புறுத்தலுக்காகவோ என்பதுபோலக் கணவனின் உடம்போடு தன் உடம்பு பட்டும் படாமலும் உட்கார்ந்திருக்கும் பாணி. சும்மா உங்களிடம் எதற்குப் பீடிகை? இது புவனகிரியின் நடுவீட்டிலிருக்கும் என் தாத்தா பாட்டி புகைப்படம். 1923 அளவில் பெங்களூரிலிருந்து வந்திருந்த வேலப்பன் என்னும் தமிழர் ஒருவர் எடுத்தது.

புகைப்படம்

என் தாத்தாவின் பெயர் லக்ஷ்மிநாரணய்யா. பாட்டி கமலம்மா. அவள் கங்காவதியின் இனாம்தார் ஷாமண்ணாவின் மகள். அவருடையது வேண்டியளவு நிலம், காணி கொண்டிருந்த பரம்பரைப் பணக்காரக் குடும்பம். அவர் தன் ஒரே மகளைப் புவனகிரியின் அவ்வளவு வசதியற்ற லக்ஷ்மிநாரணய்யனுக்குத் தாரை வார்த்துத் தர வேறு காரணங்கள் இருந்திருக்கலாம். அந்த விஷயம் நமக்கு இப்போது வேண்டாம்.

கமலம்மாவுடையது பணக்காரக் குடும்பமானால் என்ன, புகுந்த வீட்டுக்குப் போனபிறகு கணவனே கண்கண்ட தெய்வம். லக்ஷ்மிநாரணய்யா கொஞ்சம் கர்வம் கொண்டவர், அதோடு முன்கோபி. கமலம்மா அந்த வீட்டில் எப்படியிருந்தாள் என்பதை இந்தப் புகைப்படத்தில் தெரியும் ஜன்னலே சொல்கிறதல்லவா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என் அம்மா ஒருமுறை சொன்னதுபோல (அப்போது என் அம்மாவுக்கு ஏழோ எட்டோ வயசாம்) தாத்தா லக்ஷ்மிநாரணய்யா சூலிபெலெ நகரத்தில் ஒய்யாரி ஒருத்தியை வைத்துக்கொண்டிருந்தாராம். ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகு, அந்தச் செய்தி வீட்டிலிருந்தவர்களுக்கும் எட்டி, வேலைக்காரப் பெண்கள்கூடக் குசுகுசுக்கும்படியாயிற்று. கமலம்மா மனமுடைந்துபோனாள். பலமாக அழுது கூவி ஆர்ப்பாட்டம் செய்யும் தைரியம் இல்லாமல் சாப்பாட்டை நிறுத்தினாள். தூக்கம் கெட்டாள். எதுவும் செய்ய முடியாமல் உடம்பைப் பிறாண்டிக் கொண்டாள்.

புகைப்படம்

அன்றொரு நாள் காலை, லக்ஷ்மிநாரணய்யா சுவாமி பூஜைக்காகப் புழக்கடையில் பூப்பறித்துக் கொண்டிருந்தபோது, அவள் கோடாலியைத் தூக்கிக்கொண்டு மூலையில் விறகுக்காக ஆள் உயரத்துக்கு அடுக்கியிருந்த மரக் கட்டைகளை (அந்தக் காலத்தில் எங்கெங்கும் மரங்களிருந்தனவாம்) ஒவ்வொன்றாக உருட்டிப் பிளக்கத் தொடங்கினாளாம். ஒரு நாளாவது விறகு வெட்டு வெட்டுவதிருக்கட்டும், கோடாலியைக்கூடத் தொட்டவளல்ல. புகைப்படத்தில் சுருங்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் இவள், அன்று தன் முந்தானையை இடுப்பில் சொருகி, புடவையைத் தூக்கிக் கட்டி, வீராவேஷத்தோடு கட்டைகளைப் பிளந்துகொண்டிருந்தபோது, எப்படித் தோற்றமளித்திருக்கலாம் என்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். லக்ஷ்மிநாரணய்யா பயந்துபோய் நின்றுவிட்டார். அவள் கோடாலியைத் தூக்கிய ஒவ்வொரு முறையும் அவன் இதயம் திடுக்கென்றது. அவ்வளவுதான், அதன் பிறகு எதுவும் நடக்கவில்லை என்பதுபோல முன்னைப்போலவே சிரித்துக்கொண்டு இருந்து விட்டாள். லக்ஷ்மிநாரணய்யா பிறகு என்றைக்கும் சூலிபெலெ நகரத்தின் பக்கம் கால்வைக்கவே இல்லை. கமலம்மா பிறகு என்றைக்கும் கட்டைகளை உடைக்க வேண்டியிருக்கவில்லை.

என் அம்மாவிடமிருந்து இந்தச் சங்கதியைக் கேட்ட பிறகு, புகைப்படத்திலிருக்கும் இவளது கண்கள் இப்போது எனக்கு எதையோ புதிதாகச் சொல்வது போலிருக்கிறது. அது என்ன? என் உடம்பிலிருக்கும் நகைகளைப் பார் என்றா? பக்கத்தில் உட்கார்ந் திருக்கிறவன் எப்படிப்பட்ட கல்லுளிமங்கன் என்றா? நீ நினைக்கிறபடி நான் ஒன்றும் அப்பாவியல்ல என்றா?

கதையையோ கவிதையையோ படிப்பதுபோலப் புகைப்படத் தைப் படிப்பதும் ஒரு கலை, அவ்வளவுதான். அப்படி நானும் இந்தப் புகைப்படத்தை நுட்பமாக, உச்சி முதல் அடிவரை படிக்க முயல்கிறேன். முடிந்தால் நீங்களும் படியுங்கள். படித்த பிறகு உங்களுக்கு வேறு ஏதேனும் தோன்றினால் எனக்குச் சொல்வதற்கு மட்டும் மறந்துவிடாதீர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எஸ்.திவாகர்

ன்னட இலக்கிய உலகில் ஃபேன்டசி எழுத்து என்றதும் நினைவுக்கு வரும் முதல் பெயர் திவாகர். பெங்களூரு கிராமப்புற மாவட்டத்துத் தேவனஹள்ளித் தாலுகாவின் சோமத்தன ஹள்ளியில் 1946-ம் ஆண்டு பிறந்த திவாகர், தார்வாடிலுள்ள கர்நாடகப் பல்கலையில் பிஏ பட்டம் பெற்றார். பல முன்னணிக் கன்னடப் பத்திரிகைகளில் உதவியாசிரியராகவும் ஆசிரியராகவும் விளங்கிய இவர், 1967 முதல் 1971 வரை ‘சோவியத் செய்தி’ இதழின் கன்னடத் துறையில் பணியாற்றினார். பிறகு, நீண்டகாலம் சென்னை அமெரிக்கத் தூதரகத்தில் கன்னடச் செய்தித் தொகுப்பாளராகத் திகழ்ந்தார். இவரது பல கதைகள், தமிழ் நிலப்பரப்பில் களம்கொண்டவை. தற்போது பெங்களூருவில் வசிக்கிறார்.

புகைப்படம்

திவாகரின் மொத்த நூல்கள், முப்பதுக்கும் மேல். இவரது சொந்தப் படைப்புகளாக நாவல்கள், சிறுகதை மற்றும் கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. கன்னடத்தின் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களில் திவாகர் ஒருவர். நோபல் பரிசு பெற்ற மூவரின் நாவல்கள், நோபல் பரிசு பெற்றவர்களின் தேர்ந்தெடுக்கப் பட்ட சிறுகதைகளின் தொகுப்பு, உலகின் மிகச் சிறிய கதைகளின் தொகுப்பு ஆகியன இவரது பேர் சொல்லும் ஆங்கிலம் வழிக் கன்னட மொழியாக்கங்கள். இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கன்னடச் சிறுகதைகளின் தொகுப்பு திவாகரின் தலையாயப் பதிப்பு. இத்தொகுப்பில் இவரது சிறுகதை இடம்பெறவில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.

‘தங்கத் தாமரை’ தேசிய விருது பெற்ற ‘கடஸ்ரார்த்த’ கன்னடத் திரைப்படத்தின் துணை இயக்குநராகவும் ‘கிரஹன’ படத்தின் கலை இயக்குநராகவும் திவாகர் பங்காற்றினார். கன்னட இலக்கிய உலகின் எந்த அணியிலும் சேராத திவாகர், தன் ‘இதிஹாச’ சிறுகதையைக் குறும்படமாகவும் தயாரித்து இயக்கியுள்ளார்.

திவாகரின் துணைவியார் ஜெயஸ்ரீ காஸரவள்ளியும் சிறந்த கன்னட எழுத்தாளர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism