கட்டுரைகள்
Published:Updated:

சிறுகதை: பாக்களத்தம்மா

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

புலியூர் முருகேசன்

சமாதியின் மீது மெழுகப்பட்டிருந்த சாணி காய்ந்துபோய் அடை அடையாய்ப் பெயர்ந்திருந்தது. தலைமாட்டில் இருந்த விளக்கு மாடத்தில் எண்ணெய்ப் பிசுபிசுக்கும் புகைப்படலமும் அடர்த்தியாக இருந்தன.

காய்ந்த பூக்கள் காற்றில் பறந்ததுபோக, கல்தாங்கிக் கிடக்கும் நார்மட்டும் இரண்டு கைப்பிடியளவு கனம் இருக்கும். காற்று அழுத்தமாக வீசுவதால் புங்கை மரக்கிளை அங்குமிங்கும் அசைய, சமாதியின் மீது விழுந்த நிழல் அலைவுற்றுத் தள்ளிப்போய் மீண்டு வந்தது. பொடிக் குஞ்சுகள் நெருக்கியடித்துப் பின்தொடரச் செல்லும் பருத்த பெட்டை வானத்தை அண்ணாந்து பார்த்தபடியே வேக நடை போட்டுச் சென்றது. கிளையொன்றில் இறுகப் பற்றிய நிலையில் உட்கார்ந்திருந்த காக்கையின் கரைதல் ஓயவேயில்லை. சமாதியைச் சுற்றி நின்றவர்களைக் குனிந்து பார்ப்பதும் தலையை உயர்த்திக் கத்துவதுமாக இருந்த காக்கையின் செய்கை எல்லோரையும் எரிச்சலையச் செய்தது. சட்டெனக் காற்றின் வேகம் மொத்தமாக நின்றுபோக, காகம் பறந்து போனது. புங்கை மரத்தின் நிழல் சமாதியின் மேல் இறுகப் படுத்துக்கொண்டது.

“ம்... ஆரம்பிங்கப்பா. பொளுதெறங்கறதுக்குள்ளாற சாமி கும்புட்டுறணும். சீக்கிரம்!” கையில் கடப்பாரைகளுடன் நின்றிருந்தவர்களை வேகப்படுத்தியது பாக்களத்தம்மா.

பாக்களத்தம்மாவுக்கு வயதாகியும் கூன் விழாத உடம்பு என்பதால் நிமிர்ந்தே நடக்கும். காதுகளை இழுக்கும் கனத்த பாம்படமும், ஒளிரும் இரட்டை விசிறி மூக்குத்திகளும் பாக்களத்தம்மாவுக்காகவே பிறப்பெடுத்தவை. கழுத்தின் அட்டி கல்யாணத்தன்று சின்னச்சாமி போட்டது. கல்யாணம் ஆன புதிதில் ராக்கடி, நிலாப்பிறை தலையின் இரண்டு பக்கங்களிலும் இருக்கும். வெள்ளிக்கிழமை தலைக்குக் குளித்து, புங்கை மரத்தடியில் நின்று உலர்த்தும் போதுதான் பாக்களத் தம்மாவின் தலைமுடி கெண்டைக்காலைத் தொடுவது தெரியும். மற்ற நாள்களிலெல்லாம் அள்ளிச் சுருட்டி பனங்காயைப்போலக் கொண்டை போட்டுக்கொள்ளும். உலர்ந்த தலைமுடியைப் பின்னியதும் நீளமான சடையில் சடைநாகம் கோத்துக்கொள்வது பாக்களத்தம்மாவுக்குப் பிடித்தமானது. நெற்றியின் மையத்தில் நட்சத்திர வடிவிலும், இரண்டு கைகள் முழுவதும், கால்களிலும்கூட விதவிதமான பச்சை குத்தப்பட்டிருந்தாலும் தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு பாம்புகள் மட்டும் பளிச்செனத் தெரியும். கால் பாதங்களில் பாம்பு, மீன், ஆடு, தவளை, கொக்கு என மாறி மாறி இருப்பதில் தொடங்கி முழங்கால்வரை ஏணியும் பாம்புகளும் நிறைய இருக்கும். இரண்டு கால்களிலும் ஏணிச் சறுக்கல் நிறையவே இருக்கின்றன. கைவிரல்களில் பலவகைப் பூக்கள், முழங்கைகளில் முனிவர்கள், தோள்களில் பெருமாளின் பத்து அவதாரங்கள், கடைசியாகப் பின்னங்கழுத்தில் பாற்கடலில் பத்துத் தலை நாகம் குடை பிடிக்க சயனித்திருக்கும் வைகுந்தன் படமும் பிசிரில்லாமல் பச்சை குத்தப் பட்டிருக்கும். பரமபத விளையாட்டுக் கட்டங்களையே தன் உடல் முழுக்கப் பச்சையாக வரைந்து கொண்டிருப்பது எல்லோரையும் விநோதமாகப் பார்க்க வைக்கும்.

ஊரிலிருந்து வந்த கொள்ளுப்பேரன் ஒருமுறை ஒவ்வொரு படமாகத் தொட்டுத் தொட்டுப் பார்த்து ‘என்னாத்துக்கு ஆச்சியம்மா, இப்பிடி ஏணியும் பாம்புமாப் பச்ச குத்தியிருக்கிற?!’ எனக் கேட்டான். ‘அது ஒண்ணுமில்லடா எஞ்செல்லச் சிசிரு... தாத்தன் இருக்காகல்ல; அவுக எனக்கு முந்தி வைகுந்தம் போயிட்டாகன்னா, எனக்காக அங்கன காத்திருப்பாக. நா மேல போறப்ப வைகுந்தத்துக்குள்ள ஆரு கூட என்னிய அனுப்பறதுன்னு அடையாளம் பாப்பாக. தாத்தனும் இதே மாறி பரமபதக் கட்டத்து பச்சதான் குத்தியிருக்காக தெரியுமா? என்னையப் பாத்தவுக செரியா தாத்தா கிட்ட கொண்டு போயி விட்டுருவாக. அப்பிடி இவுக இன்னாரு, இன்னாருன்னு தெரியணும்ல அதுக்குத்தே!’ எனச் சொன்னது பாக்களத்தம்மா.

காற்று நின்றதும் சமாதியைத் தோண்ட ஆரம்பித்தனர். சாணிப் பொருக்குடன் பெயர்த்தெடுக்கப்பட்ட மண்கட்டி உருண்டோடி உடைந்தது. நான்கு புறமும் கடப்பாரை மண்ணைப் புரட்ட, மேடாக இருந்த சமாதி சமதரையானது.

சிறுகதை
சிறுகதை

‘இன்னம் நாலு வெரக்கட தோண்டுனாப் போதும். கடப்பாரைய ஓரமா வச்சிட்டு, அதா அங்கன களக்கொத்து இருக்குது பாருப்பா, அதுல லேசாப்புல மண்ண நோண்டி மேல எடுக்கணும் தெரியுதா’ என பாக்களத்தம்மா சொன்னதைப் போலவே நோண்டினார்கள். களைக்கொத்தால் மண்ணைச் சுரண்டி எடுத்துக்கொண்டே இருக்கும்போது கொஞ்ச நேரத்திலேயே மரப்பலகை தெரிந்தது. அதைக் கண்டதும் பாக்களத்தம்மா மண்டியிட்டு உட்கார்ந்து பலகையின் மேல் உதிரியாய்க் கிடந்த மண்ணைக் கையால் கூட்டி அள்ளி வெளியே கொட்டி பலகையைச் சுத்தம் செய்தது. ‘போன பதினெட்டாம் பேரன்னிக்கி எஞ்சாமி மொகத்தப் பாத்தது. வருசம் ஆயிப்போச்சே! வெரசா எடுத்து வீட்டுக்குள்ள கொண்டாந்து வையிங்கப்பா. எந் தர்மதொர தவுதாயப் பட்டுக் கெடப்பாரு!’ பாக்களத்தம்மாவின் புலம்பல் நிற்கவே இல்லை. பலகையின் நான்கு ஓரத்திலும் இருந்த மண்ணை ஆழமாகச் சுரண்டியதும் நீளமான சவப்பெட்டி தெரிந்தது. அதை அலுங்காமல் மேலே தூக்கி அரண்மனை வீட்டினுள் கொண்டு சென்றனர்.

சாமி கும்பிடும் அறைக்குள் பெட்டி இறக்கி வைக்கப்பட்டது. கையில் ஒரு வெள்ளைத் துணியுடன் வந்த பாக்களத்தம்மா பெட்டியின் மேற்புறத்தில் இன்னும் ஒட்டிக் கிடந்த மண் தாரைகளைச் சுத்தமாகத் துடைத்து விட்டது. கொள்ளுப்பேரனைக் கூப்பிட்டு ‘எஞ்செல்லச் சிசிரு, செல்லப்ப ஆசாரி வந்துகிட்டு இருக்காகளான்னு ஓடிப்போயி பாத்துட்டு வா சாமி!’ என்றதும் அவன் வீட்டுக்கு வெளியே ஓடிய வேகத்தில் திரும்பி வந்து ‘ஆச்சியம்மா, அவுக வந்துட்டாக’ என்றான்.

செல்லப்ப ஆசாரி பாக்களத்தம்மாவைக் கும்பிட்டுவிட்டு, கீழே உட்கார்ந்து கையில் வைத்திருந்த பையைப் பிரித்தார். உள்ளிருப்பவற்றில் கொம்புச் சுத்தியலைத் தேடியெடுத்து பெட்டியின் மேற்புறத்தில் அடிக்கப்பட்டிருந்த ஆணிகளை மெதுவாகப் பிடுங்கினார். முழுவதுமாகப் பிடுங்கி முடித்ததும் பாக்களத்தம்மாவை நிமிர்ந்து பார்த்தார் செல்லப்ப ஆசாரி. அவரைக் கைகூப்பிக் கும்பிட்ட பாக்களத்தம்மா ‘ரொம்ப சந்தோசமுங்க! சாமி கும்புட்ட பெறகு சாப்புட்டுட்டுத்தான் போவணும்’ எனச் சொன்னது. பெட்டியை மூடியிருந்த பலகையைத் திறந்ததும் பாக்களத்தம்மா இரண்டு கைகளாலும் முகத்தில் அடித்துக்கொண்டு அழத்தொடங்கியது. சுற்றியிருந்தோர் அதைத் தடுத்து ஆறுதலாய்ப் பேசினார்கள்.

சின்னச்சாமியின் வெள்ளை மீசை இன்னும் முறுக்கிய நிலையில்தான் இருந்தது. ஆனாலும் ஒன்றிரண்டு முடிகள் எதனாலோ அரிக்கப்பட்டு அந்த இடம் சொள்ளையாகத் தெரிந்தது.

பாக்களத்தம்மாவின் உத்தரவுப்படி போதுமான அளவு உப்பு கொட்டப்பட்டிருந்தும் இப்படி ஆகிவிட்டது. சின்னச்சாமி உயரமானவர். பாக்களத்தம்மாளைவிட ஒரு மடங்கு கூடுதலாக இருப்பார் என்பதால் அவர் உடலை வைத்த பெட்டியும் நீளமாகவே இருந்தது.

அரண்மனை வீட்டிற்குப் பின்புறம் வயது முதிர்ந்து இறுகியிருந்த வேப்பமரத்தை வெட்டிச் செய்யப்பட்ட பலகைகளைக் கோத்துதான் பெட்டி செய்ய வேண்டும் என பாக்களத்தம்மா அழுத்திச் சொல்லியிருந்ததால் அதன்படியே செய்தார்கள். ‘வேப்பம் பலகையின்னா பூச்சி ஏதும் அரிக்காதுல்ல?’ என அப்போது செல்லப்ப ஆசாரியிடம் வேலை முடியும்வரை கேட்டுக் கொண்டேயிருந்தது பாக்களத்தம்மா. ‘இரும்புத் தகடுன்னாக்கூடத் துருப்பிடிக்கும். வேப்பம் பலகைய ஒரு பூச்சியும் அரிக்காது. நீங்க தைரியமா இருங்க ஆச்சி!’ செல்லப்ப ஆசாரியின் வேலைப்பாட்டைவிட பேச்சு கூடுதல் தெளிவாக இருக்கும்.

வெள்ளானூர்க் கடைவீதியில் பெரிய மாடி வீடு இருந்தாலும், தோட்டத்தில் அரண்மனை மாதிரி ஒரு வீட்டைக் கட்டியிருந்தார் சின்னச்சாமி. மாடியில் இருக்கும் அறைக்குப் போக வீட்டிற்கு உள்ளேயே படி வைத்துக் கட்டிய ஒரே வீடு சின்னச்சாமியின் அரண்மனை வீடுதான். பாக்களத்தம்மாவைக் கட்டிய பிறகுதான் அப்படியான வீட்டை ஆசையுடன் எழுப்பினார்.

ஒரு பதினெட்டாம் பெருக்கு நாளில் சின்னச்சாமி உயிர் விட்டார். ஒவ்வொரு வருடமும் அதே நாளன்று, உள்ளூர் ஆட்கள் பாக்களத்தம்மா கூப்பிடும் முன்பே உதவிக்கு வந்துவிடுவார்கள். அரண்மனை வீட்டின் முன்புறம் சமாதியிலிருக்கும் சின்னச்சாமியின் உடல் பெட்டியோடு பெயர்த்தெடுக்கப்பட்டு நடுவீட்டில் வைக்கப்படும். இது அவர் இறந்த மூன்றாவது வருடம்.

வழக்கம்போல ஆனையூரிலிருந்து தாயம்மாவும், சொக்கலிங்கமும் முதல் நாள் இரவே வந்துவிட்டனர். பாக்களத்தம்மாவிற்கு மகளும் மருமகனும் வந்துவிட்டாலும், பேரப்பிள்ளைகளும், கொள்ளுப்பேரன் பேத்திகளும் வரும்வரை விசனம் தீராது. அதுவும் ஒருத்தர் பாக்கியில்லாமல் வர வேண்டும். குறிப்பாக, செட்டியூரிலிருந்து மூத்த பேத்தி காமாட்சி வராமல் போய்விடுமோ எனத் தவிப்புடனேயே இருக்கும் பாக்களத்தம்மா. சின்னஞ்சிறு வயதிலிருந்து கூடவே வைத்திருந்து கல்யாணம் கட்டிக் கொடுத்த பேத்தியல்லவா! நான்கு ஆண்கள், மூன்று பெண்கள் எனப் பேரன் பேத்திகளுக்கும் திருமணம் முடிந்து பிள்ளை குட்டிகளுடன் இருந்தாலும் ‘மிச்சர்காரப் பேரனுக்கு வம்சம் தழைக்கலியே!’ என அடிக்கடி புலம்பும்.

வடக்கு தெற்காக வைக்கப்பட்டிருந்த சின்னச்சாமியின் தலைமாட்டில் கும்பா நிறைய காட்டுக் கம்பும், சாமை அரிசியும் இருந்தன. ‘மாசம் முச்சூடும் சாமையும், காட்டுக் கம்பும் இருந்தாப் போதும் எஞ்சாமிக்கு, அப்பிடி ருசிச்சுத் திம்பாக!’ என பாக்களத்தம்மா தன் கணவரைப் பற்றிப் பெருமை பேசத் தொடங்கிவிட்டால் நிறுத்தாது. தேங்காய், பழம், ஊதுபத்தி நிறைக்க இருந்த தலைமாட்டுப் பகுதியில் ஐந்து இலைகளில் பலவிதத் தீனிகள். பொரி உருண்டை, முறுக்கு, அவித்த தட்டைப்பயிறு, சோளக் கதிர், ஒருரூபாய் நாணய அளவிலான அப்பளங்கள், சேமியா ஜவ்வரிசிப் பாயசம், பாசிப்பயிற்றுப் பாயசம், துண்டுப் புகையிலை, சக்கரைச் சேவு, பால்பன், ஓலைப் பக்கோடா என இத்தனையையும் ஞாபகம் வைத்து பாக்களத்தம்மா எப்படி இலையை நிறைத்திருக்கிறதோ!

பாக்களத்தம்மாவிற்குக் கல்யாணத்தின் போது பதிமூன்று, பதினான்கு வயதிருக்கும். முதலில் சின்னச்சாமிக்கு முத்தம்மாவைத்தான் கட்டிக்கொடுத்தார்கள். ஒரே வருடத்தில் தாயம்மாவைப் பெற்றுப் போட்ட வயிற்றோடு உயிர்நீத்தது முத்தம்மா. சின்னச்சாமி பச்சை மண்ணாகத் தாயம்மாவை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறோமோ எனக் கலங்கினார். ஆனால், முத்தம்மாவின் அப்பா எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் இளைய மகளான பாக்களத்தம்மாவை சின்னச்சாமிக்கு மணமுடித்து வைத்தார். பாக்களத்தம்மா கல்யாணம் நடந்து விட்டது எனச் சொல்வதைவிட, தாயம்மாவின் செத்துப்போன அம்மாவுக்கு உயிர் வந்துவிட்டது எனத்தான் வெள்ளானூருக்குள் சொல்வார்கள்.

பாவாடை சட்டையுடன் விளையாடித் திரிந்தாலும், தாயம்மாவுக்கு அம்மா என்ற நினைப்பு வந்ததும் பாக்களத்தம்மாவின் நடையுடை பாவனைகள் மாறிவிட்டன.

எப்படி வெள்ளிச்சங்கில் பசும்பாலைத் தாயம்மாவுக்குப் புகட்ட பாக்களத்தம்மா பழகிக்கொண்டது எனச் சின்னச்சாமிக்குத் தாங்க முடியாத ஆச்சர்யம். வளர்ந்த பிறகும் தாயம்மாவும் தன்னைப் பெற்றவள் யாரென்று கேட்டால் பாக்களத்தம்மாவை த்தான் சொல்வாள்.

ஆனையூரிலிருந்து சொக்கலிங்கம் தன் பங்காளிகளுடன் வந்து தாயம்மாவைப் பெண் கேட்டதுமே பாக்களத்தம்மா சொன்னது ‘ஆனையூருக்கு நா ஒரு தடவ வந்து வீடு வாசலப் பாத்துட்டுத்தான் பொண்ணு குடுப்பேன். எம் மவள ராசாத்தி கணக்கா வளத்திருக்கேன். ஒங்க சொந்த பந்தத்தையும் வெசாரிச்சுட்டுப் பெறவு சம்பந்தம் கலந்துக்கலாம்.’ சொன்னதைப் போலவே ஆனையூருக்கு பாக்களத்தம்மா போன அன்றைக்கு ஊரே கிடுகிடுத்துவிட்டது. ‘வெள்ளானூர் அரம்மனக்காரவுக வாராகளாம். பேரு பாக்களத்தம்மாவாம். நம்மூருக்கு அரம்மனக்காரவுக பொண்ணு குடுக்கறதுன்னா, யே யப்பா! சொக்கலிங்கம் யோகக்காரந்தே!’ ஒவ்வொரு வாயும் பாக்களத்தம்மா பேரையே திகட்டத் திகட்டப் பேசியது. வில்வண்டியில் வந்திறங்கிய சின்னச்சாமியையும், பாக்களத்தமாவையும் ஊரே திரண்டு வந்து பார்த்து பிரமித்தது.

‘இவுக வெள்ளானூர்ப் பக்குட்டுப் பெரிய பொயல யாவாரி. அரம்மனைக்குள்ள பாதி அளவுக்கு அம்பாரம் போட்டு அடுக்கியிருப்பாக. சுத்துப்பட்டு சில்லற யாவாரிகளெல்லாம் இந்த அய்யாக்கிட்டதான் வாங்குவாக. வெல சல்லிசா இருக்கும். காசு பணத்தத் தடாலடியாக் கேக்க மாட்டாக. நாங்கூட ரெண்டு மூணுதடவ அவுக அரம்மனைக்குப் போயி பொயல வாங்கியிருக்கேன். அரம்மனைக்கிப் பின்னாடி அது கெடக்கும் பெருசா ஒரு தோட்டம். தோட்டம் முச்சூடும் பொயல பச்சப் பசேல்னு எலை விரிச்சி வெளஞ்சிருக்கும்’ சந்தைதோறும் புகையிலை வியாபாரம் பார்க்கும் சின்னக்காளை அங்கிருந்த ஆண்களிடம் சின்னச்சாமியின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஊர்ப்பிள்ளைகள் வில்வண்டியைச் சுற்றிச் சுற்றி வந்து தொட்டுப் பார்த்துச் சிரித்தனர். வண்ணங்கள் பூசப்பட்ட சக்கரங்கள் அவர்களை வியக்க வைத்தன.

‘நம்ம சனத்துலயே இவுக நெறத்துல ஆரையும் நாங்கண்டதில்ல. சந்தனத்தச் சாத்துன அம்மன் மொகமாட்டமில்ல சொலிக்கிது இவுக மொகம்! அக்கா பெத்த புள்ளைய தம் புள்ளையா இப்ப ஆரு நெனைக்கிறாக! அதில்லாம, இவுக தனக்குன்னு ஒண்ணு பெத்துக்காம இருக்காக. இதுக்கெல்லாம் எம்புட்டுப் பெரிய மனசு வேணுந்தெரியுமா?!’ ஆனையூருக்கு வாக்கப்பட்டு வந்த வள்ளியம்மா வெள்ளானூருக்குப் பக்கத்து ஊரில் பிறந்தவள் என்பதால் பாக்களத்தம்மாவைப் பற்றிப் பெருமை பேசினாள்.

தாயம்மாவின் கல்யாணம் வெள்ளானூர்க் கடைவீதியிலுள்ள பெரிய வீட்டில்தான் நடத்துவேன் என்றதும் சொக்கலிங்கத்தால் எதுவும் எதிர்ப்பேச்சு பேச முடியவில்லை. ‘அஞ்சு நா கல்யாணம்; மாப்பிள்ளை ஆனை மேல ஊர்கோலம். சுத்துப்பட்டு ஊர் சனத்துக்குப் பத்து நா அரிசிச்சோறு விருந்து. அன்னக் கரண்டியில அள்ளி வச்சா கொறவா இருக்குமுன்னு குண்டாவுல அள்ளிக் குமிச்சாக’ என, தாயம்மாவின் கல்யாணம் பற்றி ஊர் முழுக்கப் பேசித் தீர்த்தது. அடுத்த வருடமே தாயம்மாவுக்குத் தலைப்பிள்ளையாகக் காமாட்சி பிறக்கவும் பாக்களத்தம்மாவிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. ‘எங்கக்காதே மறுவுடி பொறந்திருக்கு’ என, பார்ப்பவர்களிட மெல்லாம் சொல்லிச் சொல்லி ஆனந்தக் கண்ணீர் விட்டது.

ஆனையூரிலிருந்து எல்லோரும் வந்து விட்டனர். அரண்மனை வீட்டின் முன்புறமுள்ள கிணற்றில் நீர் இறைத்துக் கைகால் கழுவி உள்ளே நுழைந்தவர்கள் தாத்தன் உடல் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியைத் தொட்டுக் கும்பிட்டார்கள். ‘எல்லாரும் வந்துட்டாகளா?’ என சன்னமாக ஒரு சந்தேகத்தை எழுப்பி விட்டு, சூடத்தட்டை எடுத்துக் கற்பூரக் கட்டியைக் கொளுத்தியது.

சின்னச்சாமியின் கால்மாட்டிலிருந்து தொடங்கி சூடத்தட்டைக் காட்டியபடியே உடலை ஒரு சுற்றுச் சுற்றி வந்தது பாக்களத்தம்மா. அதுவரை அழுகையை வைத்திருந்தது போல; கண்களிலிருந்து நீர் வழிய, வாய் கோணி அழ ஆரம்பித்தது. ‘எந் தர்மதொர. நீங்க பாட்டுக்கு என்னைய வுட்டுட்டு முன்னாலயே போயிட்டீக. இங்க எனக்கு ஒரு கொறையும் இல்லதே. ஆனா, எஞ்சாமி உசுரில்லா வெறும் ஒடம்பா கெடக்கையில, மிச்ச நாள எப்பிடித் தள்ளுவேன்? சட்டுனு ஒனக்குப் பக்கத்திலேயே எனக்கு ஒரு எடங்குடு என் ராசா!’ ஆச்சி அழுவதைப் பார்க்கப் பேரப் பிள்ளைகளுக்கு வேதனையாகத்தான் இருந்தது. ஆனால், தாத்தாவின் முகம் அங்கங்கே சிதையத் தொடங்கியிருப்பதும், உருவம் விகாரமாகி வருவதும் அவர்களைச் சங்கடம் கொள்ளச் செய்தது. சிறு பிள்ளைகள் அவரின் அருகே வரவே பயந்தனர். ‘ஆச்சி, அழுகாத! நீ இன்னம் ரொம்ப நா இருப்ப. ஒனக்குத்தான் இத்தினி பேரு இருக்கமுல்ல!’ காமாட்சி ஆறுதலாய்ப் பேசவும் பாக்களத்தம்மாவின் அழுகை குறைந்தது. பேரன் பேத்திகளிலேயே காமாட்சி மட்டும் பாக்களத்தம்மாவின் மீது கூடுதல் பாசம் காட்டும்.

சாமி கும்பிட்டு முடிந்ததும் திருநீற்றுத் தட்டைக் கீழே வைத்த பாக்களத்தம்மா, கைநிறையத் திருநீறை அள்ளி, குனிந்து பெட்டிக்குள் இருக்கும் கணவனின் நெற்றியில் பூசி விட்டது. மற்ற பிள்ளைகள் பயந்து தள்ளி நின்றுகொண்டார்கள்.

ஊரிலிருந்து பேரப்பிள்ளைகள் வந்து விட்டால் பாக்களத்தம்மா முகம் பூரித்து விடும். வருகிற பிள்ளைகள் எந்நேரமும் பாக்களத்தம்மாவின் பாதங்களில் இருக்கும் பரமபதக் கட்டங்களில் விரலை ஓட்டி விளையாடிக்கொண்டிருக்கும். அதுகளுக்காகவே பரமபதப் பலகை ஒன்றை செல்லப்ப ஆசாரியிடம் சொல்லிச் செய்து வாங்கி வைத்தது.

சிறுகதை
சிறுகதை

செல்லப்ப ஆசாரி வெறும் மர வேலைகள் மட்டும் செய்பவரில்லை; சுற்றுவட்டாரத்திலேயே இவரிடம் இருக்கும் நுண்ணிய அளவிலான சீவுளியும், ஈர்வாளும் யாரிடமும் இல்லை. புது வீடுகளின் உத்திரத்திற்கு மரம் போடும் வேலையை யார் செய்தாலும், நிலைவாசற் கதவுக்காக இவரிடம்தான் வருவார்கள். ஐம்பெரும் தெய்வங்களும் லட்சுமி கடாட்சமாய் நிலையில் செதுக்கித் தருவார். அப்படியானவர் பரமபதப் பலகையில் ஏணி, பாம்பு மட்டுமல்லாமல் பரமபதக் கட்டத்திலிருக்கும் அத்தனை ஓவியங்களும் அதில் செதுக்கி வர்ணம் பூசித் தந்தார்.

மூத்த பேத்தி காமாட்சியின் மகன் வந்துவிட்டால், சின்னச்சாமி வில்வண்டியைப் பூட்டி சந்தைக்குக் கிளம்பியதும் பரமபதப் பலகையை எடுத்து உட்கார்ந்துவிடுவான். இவனுக்காகவே எந்நேரமும் வெள்ளைச் சோழிகளை முந்தானையில் முடிந்து வைத்திருக்கும் பாக்களத்தம்மா. இருவரும் விளையாடும் ஆட்டம் விநோதமாயிருக்கும். மரச் சாய்வு நாற்காலியில் பாக்களத்தம்மா சாய்ந்து படுத்துக்கொள்ளும். அடிப்பகுதி அரக்கு நிறத்திலும், வெள்ளையில் இளம்பச்சை கலந்த மொட்டுப் பகுதியுடனும் இருக்கும் புங்கை மொட்டு ஒன்றை, மரத்தின் கீழ்க் கொம்பிலிருந்து பறித்து வந்து பாக்களத்தம்மாவின் இடது பாதத்தின் கீழ் வைப்பான். ‘ம்... சோவியப் போடுறா எஞ்செல்லச் சிசிரு!’ எனச் சொன்னதும் ஆறு சோழிகளையும் கைக்குள் வைத்து கண்களை மூடி சாமி கும்பிட்டு, தரையில் விசிறுவான். எப்பொழுது விளையாண்டாலும் முதல் விசிறலிலேயே தாயம் விழுந்து விடும் அவனுக்கு. சிரித்தபடியே பாக்களத்தம்மாவின் இடதுகால் முதல் படத்தில் வைப்பான்.

அதுதான் பரமபதத்தின் முதல் கட்டம்; அதன் பிறகு மூன்று விழுந்தால் மீன்; நான்கு விழுந்தால் கோட்டைக் கதவு. பதினாறாவது கட்டத்தைப் புங்கை மொட்டு தொட்டு விட்டால் நாகையா சிரிப்பான்.

அங்கிருந்து சர்ரென பாக்களத்தம்மாவின் முழங்கால் சதையில் இருக்கும் இருபத்தியெட்டாவது கட்ட முனிவரின் மடியில் புங்கை மொட்டு ஒய்யாரமாக இடம் பிடித்துப் படுத்துக் கொள்ளும். வலது காலில் படமெடுத்து ஆடிக்கொண்டிருக்கும் இரண்டு பெரிய பாம்புகளைக் கண்டுதான் நாகையாவுக்கு பயம். அதுவும் ஆச்சியம்மாவின் கெண்டைக்கால் சதையில், இரட்டை நாக்கு வெளியே சுழலப் படமெடுத்து நிற்கும் பாம்பு, விளையாடும்போது மட்டுமல்லாமல் தூங்கும்போதும் கனவுக்குள் வந்து பயமுறுத்தும். ஐந்தும் ஆறும் பன்னிரண்டுமாகச் சோழி வீசி ஏணியில் ஏறி ஆச்சியம்மாவின் கெண்டைக்காலில் புங்கை மொட்டை வைத்தால், இரட்டை நாக்குப் பாம்பு அதைக் கொத்தி இடதுகாலின் எட்டாவது கட்டத்துத் தவளையின் முன் தள்ளிவிடும். தன் முன் விழுந்த புங்கை மொட்டைப் பார்த்துக் கேலியாகச் சிரிக்கும் தவளை. பாம்பு புங்கை மொட்டைக் கொத்தினால் பாக்களத்தம்மாவின் முகமும் வாட்டமடையும். ஆச்சியம்மாவின் இடது கையில் இருக்கும் பெரிய ஏணியில் ஏறி விட்டால், வழியில் படமெடுத்தாடும் நான்கைந்து பாம்புகளைத் தாண்டி வலதுகையின் தோள்பட்டையில் இருக்கும் பாலமுருகனிடம் புங்கை மொட்டைச் சேர்த்துவிடலாம். வலது தோளில் புங்கை மொட்டை வைத்துச் சிரிக்கும் பாக்களத்தம்மாவின் சிரிப்புக்கு அர்த்தம் என்னவென்றால், ‘எஞ்செல்லச் சிசிரு, அல்லாப் பாம்பையுந் தாண்டிட்டான். புங்கமொட்டுக்கு வைகுந்தப் பதவி நிச்சயம் கெடச்சிரும்’ என்பதுதான். பாக்களத்தம்மாவின் நினைப்பைப் போலவே புங்கை மொட்டு வைகுந்தத்தை அடைந்ததும் மலர்ந்துவிடும்.

“ஆச்சி, நாஞ்சொல்றதக் கேப்பீல்ல? வருசா வருசம் தாத்தனுக்குச் சாமி கும்புட வர்றப்பயெல்லாம் சின்னப் புள்ளைக பயப்புடுதுக. தாத்தன் எப்பவும் அல்லாருக்கும் சாமியாத்தான் இருப்பாரு. மேலுக்குச் சொகமில்லாமச் செத்தவர நிம்மதியாக் கண்ணு மூட வைக்கணும்னா சமாதிக்குள்ள வைக்கறதுதான் சரி. அதுக்கப் பெறகு சமாதியக் கும்புட்டுக்குவோம். என்ன ஆச்சி, சரியா?!” காமாட்சி சொன்னதும் மற்றவர்களெல்லாம் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ‘ஏழு பேர்ல ஆரு சொன்னாலும் ஆச்சி கேக்காது. காமாட்சி அக்காதான் இதுக்குச் சரியான ஆளு. ஆச்சியும் அதும்பேருலதான் ரொம்பப் பிரியமா இருக்குது. அதுனால, இந்த வருசத்தோட தாத்தன் நம்ம கனவுல இப்பிடிச் செதைஞ்ச உருவமா வர மாட்டாரு!’ காமாட்சி தவிர மற்றவர்களின் நினைப்பு இதுவாகத்தான் இருந்தது.

சிறுகதை: பாக்களத்தம்மா

அரண்மனை வீட்டின் இடதுபுறம் பருத்துப் படர்ந்திருந்த புங்கை மர நிழலில் புதிதாக ஒரு குழி தோண்டப்பட்டது. சவப்பெட்டியின் மீது பலகையை வைத்து மூடப் போகும்போது குறுக்கே வந்த பாக்களத்தம்மா ‘இருங்கய்யா! எஞ்சாமி மொகத்தக் கடேசியா ஒரு தடவ பாத்துக்குறேன். எந்த செம்மத்துல மறுவுடி பாக்கப் போறனோ!’ எனப் புலம்பியபடி சின்னச்சாமியின் முகத்தருகே குனிந்து கன்னத்தைத் தடவி விரல்களை முத்தமிட்டுக் கொண்டது.

மூடிய சவப்பெட்டியைக் குழிக்குள் இறக்குவதற்குள் காரையைக் குழைத்துத் தயாராக வைத்திருந்தனர். முதலில் பாக்களத்தம்மா ஒருகை மண்ணள்ளிப் போட்டதும் எல்லோரும் போடத் தொடங்கினர். கொள்ளுப் பேரப் பிள்ளைகளைக் கடைசி ஆளாக நிறுத்தி வைத்திருந்தது பாக்களத்தம்மா. ‘இப்ப நீங்க போடுங்க சாமிகளா! தாத்தன் ஓங்கை மண் ஈரத்துல நிம்மதியாத் தூங்குவாக’ எனச் சொல்லி விட்டு அரண்மனை வீட்டுக்குள் நுழைந்தது. பூட்டியிருந்த ஒரு அறையைத் திறந்தது. அந்த அறை இதுநாள்வரை திறக்கப்பட்டதேயில்லை என்பதால் எல்லோரும் என்னவாக இருக்கும் என்ற ஆவலில் உள்ளே பார்த்தனர்.

வெளியே வந்த பாக்களத்தம்மாவின் முந்தானைக்குள் சின்னச் சின்ன உருவங்களாக எதுவோ இருப்பது தெரிந்தது. சமாதிக்கு முன் வந்த பாக்களத்தம்மா கால்மாட்டுப் பகுதிக்குச் சென்றது. முந்தானையை அவிழ்த்து அதிலிருந்த மூன்று சின்னஞ்சிறு உருவாரங்களை சமாதியோடு சாத்தி வைத்தது. நடுவில் மீசை முறுக்கிய நிலையில் ஒரு சிறிய ஆண் உருவாரமும், இரண்டு புறமும் இன்னும் குள்ளமாகப் பெண்கள் உருவாரமும் இருந்தன. எல்லோரும் புரியாமல் பாக்களத்தம்மாவைப் பார்த்தனர். “அடுத்த பதனெட்டாம் பெருக்கன்னிக்கி அல்லாரும் இந்த மூணுபேரையும் கும்புட்டுக்குங்க” என்று கண்மூடி நின்றது பாக்களத்தம்மா.