Published:Updated:

இவள்...? - சிறுகதை #MyVikatan

துள்ளித் திரிய வேண்டிய பருவத்தில் இப்படி எந்நேரமும் புத்தகமும் கையுமாகப் பிள்ளைகள் இருந்தால் என்னாவது என அட்சயாவுக்குக் கவலையாக இருக்கும்.

Representational Image
Representational Image

``இன்னைக்கு ஃபிரண்ஸ்சோட சரியான ஆட்டம்மா...!” சகானா துள்ளலுடன் சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள். பூரித்திருக்கும் மகளது முகத்தை நோக்கிய அட்சயாவின் மனம் நிறைந்தது. `இந்த மகிழ்ச்சி மகளுக்கு இன்னும் எத்தனை நாளுக்கு நீடிக்கப் போகிறதோ?’ என்ற கேள்வி அவளது மனத்தில் பிறந்தது.

கல்லூரி தொடங்கி சில வாரமே ஆகியிருக்கும் சமயம் அது. சிங்கப்பூரில், பிள்ளைகளுக்குத் துரத்தல் இல்லா ஆண்டுன்னு பார்த்தால் ஒன்றாம் வகுப்பு மட்டும்தானோ? இரண்டாம் வகுப்பு வந்தவுடனே, அடுத்தாண்டு ‘streaming’ என்னும் பாரம் தொடங்கியது. அதற்கடுத்து வரும் நான்காண்டுகளும் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணைக் கொண்டு வகுப்புகள் தீர்மானிக்கப்படுவதுடன், அவர்களது கற்றல் திறனுக்கேற்பப் பயிற்சிகளும் அளிக்கப்படும். அத்தகைய கடுமையான போட்டிக்கிடையில் சகானா ‘பெஸ்ட் கிளாசை’ தவறவிடாமலே படித்து நான்கு A*களோடு வெளியே வந்தாள். அடுத்தது உயர்நிலைப் பள்ளி. அதுவும் தொடக்கநிலைக்குச் சற்றும் சளைத்ததில்லை என்ற நிலையையே கொடுத்தது.

Representational Image
Representational Image

துள்ளித் திரிய வேண்டிய பருவத்தில் இப்படி எந்நேரமும் புத்தகமும் கையுமாகப் பிள்ளைகள் இருந்தால் என்னாவது என அட்சயாவுக்குக் கவலையாக இருக்கும். உயர்நிலைப் பள்ளி இறுதியாண்டின்போது, இப்படிக் கடுமையா கண்விழித்துப் படிக்கணுமா என மகளிடம் அடிக்கடி கடிந்துகொள்வாள். அப்போதுதான் தான் நினைக்கும் தொடக்கக் கல்லூரியில் இடம் கிடைக்குமென சகானா, தாயின் வாயையும் அறையின் கதவையும் அடைப்பாள். பொங்கியிருக்கும் அட்சயாவின் ஆதங்கம் வேறு வழியின்றி கணவனிடம் வடியும். அவரோ, `அடித்தளம் வலுவா இருக்கிற கட்டடம்தான் காலத்துக்கும் நிலைச்சிருக்கும்னு உனக்குத் தெரியாதா?’ என்பார். அந்தப் பதிலால் முகம் சுண்டிப்போன மனைவியிடம் ‘பிள்ளைங்க சரியா படிக்கலையேன்னு எவ்வளவு பேர் புலம்புறாங்க? அப்படியிருக்க, சும்மா சாப்பிடுறதில்ல... தூங்குறதில்லன்னு புலம்பிக்கிட்டு.... சகானா ஒரு முடிவெடுத்தா அதிலிருந்து மாற மாட்டாள்னு உனக்குத் தெரியாதா?’ என அவளைச் சமாதானப்படுத்துவார்.

எப்படியோ அந்தப் போராட்டத்தின் முடிவில் சகானாவின் விருப்பமான தொடக்கக் கல்லூரியும் கிடைத்தது. அத்தோடு பிரச்னை விட்டதா என்ன? அத்தனை ஆண்டுகள் படித்ததைவிடச் சிரமமான காலமாக அவ்விரு ஆண்டுகளும் அமைந்தன. படிக்க வேண்டிய பாடமோ அதிகம். ஆனால் கிடைக்கும் நேரமோ குறைவு. ஒருவழியாக அதையும் முடித்து அவள் விரும்பிய ‘கோர்ஸ்’ அவளுக்குப் பிடித்த கல்லூரியிலேயே கிடைத்தது.

Representational Image
Representational Image

கல்லூரி திறந்து ஒரு மாதமாகிறது. சகானா காலேஜுக்குப் போக ஆரம்பித்ததிலிருந்து அட்சயா, மகளிடம் ஒருவித மலர்ச்சியைக் காண்கிறாள். “ச்... நாளையிலிருந்து டெஸ்ட் ஆரம்பிக்குதும்மா...” ‘இந்த நாலு ஆண்டுகள் எப்படிப் போகுமோ? ம்... அது மட்டும் சுலபமாவா இருந்துடப் போகுது? ஏதோ பிள்ளைங்க கொஞ்சநாளா ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு இருக்காங்க.’ “என்னம்மா நான் சொல்லிட்டேயிருக்கேன்... நீங்கபாட்டுக்கு ஏதோ யோசனையில இருக்கீங்க?” “ஒண்ணுமில்லை... என்ன சொன்னே?” “நாளைக்கு டெஸ்ட் இருக்குது.” “அதுக்குள்ளேவா?” “ஆமாம்மா... புத்தகத்தைக் கையிலெடுக்கவே பிடிக்கல...” குழந்தையின் கையிலிருந்த பொம்மையைப் பிடுங்கிய மாதிரி சகானாவின் முகம் இருந்தது.

``அதெல்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டா சூடு பிடிச்சிடும். அது நடுவுல வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிட்டு, தூங்கிடு எனக்கு அது போதும்.” ``சாப்பிடு, தூங்கு... இதைத்தவிர வேற நினைப்பே வராதாம்மா உங்களுக்கு?” “ஆரோக்கியம்னு ஒண்ணு இருக்கு. அதை நீ மறந்து போறதாலதான் நான் உனக்கு ஞாபகப்படுத்த வேண்டியிருக்கு. சரி, சரி... இப்ப பேக்ல இருக்கிற தண்ணி பாட்டிலை எடுத்துட்டு வா. கையோட கழுவி வைக்காட்டா நாளைக்கு நீ காலேஜுக்குப் போகும்வரை அது பேக்லயே இருக்கும்.” “ச்... நான் குளிக்கப் போறேன்... நீங்களே எடுத்துக்கோங்க” சகானா அவசரமாகக் குளியலறையில் நுழைந்தாள்.

Representational Image
Representational Image

சகானாவின் அறையில் கட்டிலின் மேல் வீசிய நிலையில் புத்தகப்பை கிடந்தது. தண்ணீர் பாட்டிலை வெளியே எடுக்க, ‘இதென்ன பலூனைப்போல...?’ எடுத்துப் பார்த்த அட்சயா வெலவெலத்துப் போனாள். தன் கண்கள் பொய் சொல்கின்றனவா எனத் திரும்பவும் பார்க்க, ‘அது’வேதான். ‘இவளிடம் ஏன் இது?’ அதற்குமேல் யோசிக்க முடியாது நெஞ்சம் ஆர்ப்பரித்தது. அப்படியே அதைப் புத்தகப் பையினுள் போட்டுவிட்டு வெளியே ஓடி வந்தாள். கணத்தில் ஏற்பட்ட அதிர்வால் மகள்மீது கொண்டிருந்த அபிப்பிராயம் அத்தனையும் கொந்தளித்த ஆழிப்பேரலைகளால் அபகரிக்கப்பட்டதைப்போலானது. அசுத்தத்தைத் தொட்டுவிட்ட தினுசில் மனம் அருவருக்க, அதைத் தீண்டிய கைகளை மீண்டும் மீண்டும் தேய்த்துக் கழுவினாள். இருந்தும் நீங்காத கறையைப்போன்ற பிரமையால் நெஞ்சில் அதிர்வலைகள் நொடிக்குநொடி பெருகின.

`தன் மகளா இப்படி? பதின்ம வயதாயிருந்தும் எட்டு வயது பிள்ளையைப்போலச் செல்லம் கொஞ்சிக்கொண்டு சுற்றி வரும் என் செல்லமா? செல்லம்.... என்ன செல்லம்? எல்லாம் வேசம்கிறதுதான் பட்டவர்த்தமாத் தெரிஞ்சிடுச்சே...! கூட்டிலிருக்கும் குஞ்சுபோல அவளைத் தான் நினைக்க, தன் மகள் தறிகெட்டு அலைபவளா? இவள் இப்படிச் சீரழியவா அவரும் நானும் இந்தப் பாடு படுறோம்? ஆற்றாமைப் பெருகிக் கண்ணீராய் வழிந்தபோதும் குமுறல் மட்டும் அடங்கவேயில்லை. எவ்வளவு திமிர் இருந்திருந்தால் இதைத் தன்னுடைய புத்தகப்பையிலேயே வைத்திருப்பாள்?’ ஆத்திரத்தில் அட்சயாவின் உடல் நடுங்கியது. ‘கல்லூரியிலிருந்து வந்தவுடன் “இன்னைக்குச் செம ஜாலிம்மா” என்றாளே. இதுதான் இவளது ஜாலிக்குக் காரணமா? தொடக்கக்கல்லூரி என்னும் கடும் பயணத்தைக் கடந்து இப்போதுதான் கல்லூரியில் காலடியெடுத்து வைத்திருக்கிறாள். அதனால் கொண்டாட்டம் அதிகமாதான் இருக்கும் எனத் தன்னை நம்ப வைத்திருக்கிறாளே!

Representational Image
Representational Image

எவ்வளவு நாளா இந்தக் இந்த காரியம் செய்யுறாளெனத் தெரியலையே? இனத்தைக் கடந்து ஆண், பெண் பேதமின்றி ஒருவர்மேல் ஒருவர் கைபோட்டுக்கொண்டு எடுத்த போட்டோக்களை எல்லாம் காட்டியிருக்கிறாள். அதில் இருக்கும் யாராவது ஒருவராகத்தான் இருக்கும். இதைக் கவனிக்காமல்விட்ட தன் அறியாமையை என்னென்பது?’ வெளியில் எங்காவது தன் மகள் வயதையொத்த பிள்ளைகள் சிரித்துப் பேசினாலே அட்சயாவின் மனம் நிறைந்துவிடும். சிங்கப்பூரில் பெரும்பாலும் வளர்ந்த பிள்ளைகள் ஏதோ ஒளித்திரையை உற்று நோக்கியபடியோ எதையோ தொலைத்த பாவனையில்தானே காணப்படுகின்றனர். எதைத் தேடி இந்தப் பிள்ளைங்க இப்படி ஆகின்றனர் என்ற தவிப்பு அவளுள் இவ்வளவு நாளாக ரணமாகவே இருந்தது. இயந்திரம்போல ஓடுறாளே என மகளை நினைத்துத் தான் கவலைகொள்ள, நம்பிக்கைத் துரோகம் செய்தவளை எண்ணி அட்சயாவின் நெஞ்சம் பொசுங்கியது.`இவ்வளவு அசிங்கத்தை மனத்தில் வைத்துக்கொண்டு எப்படிச் சின்னப்பிள்ளை மாதிரி வளைய வர்றா? அம்மான்னு கழுத்தைக் கட்டிக்கிட்டுக் கன்னத்தில் முத்தமிட்டுக் கொஞ்ச முடியுது? தனக்கு மனதார அது பிடித்தும், வெறுப்பதுபோல நடிப்பேனே. அப்போல்லாம் என் மகள் குழந்தை மாதிரிங்கிற பெருமை உள்ளுக்குள் நிரம்பி வழியுமே.... அத்தனையும் பொய்யா? என் நம்பிக்கை அத்தனையும் நான் கண்ட காட்சியில் களவாடப்பட்டுப் போனதே! இப்போது என்ன செய்வது? என்ன இதுன்னு அவளிடமே கேட்கலாமா? நான் கேட்கப்போக, “ஆமாம் அதுக்கென்ன?” என்று கேட்டுவிட்டால்? அதன் பிறகு அவளை இனி ஏறெடுத்தும் பார்க்க முடியுமா?’ இயலாமை புரட்டியெடுக்க மனம் ஆடிப் போயிருந்தாள் அட்சயா.

சோபாவில் சரிந்த நிலையில் இருந்தவளுக்குத் தன் உயிர் இப்போதே போய்விடக்கூடாதா என்ற தவிப்பு விநாடிக்கு விநாடி பெருகியது. உயிரைவிட மானமே பெரிது என நினைப்பவளுக்கு, இப்படியொரு கொள்ளி பிள்ளையாய் வந்து வாய்த்திருக்க வேண்டுமா? ‘இந்தக் கருமத்தைக் கணவரிடம் சொல்லலாமா? வேண்டாமா..இலக்கின்றி போகும் சிந்தனை தாயின் மண்டையைப் பிளந்தது.

சோப்பு வாசத்துடன் வந்த சகானா “பயங்கரப் பசிம்மா...” சிணுங்கிக்கொண்டே அம்மாவின் கழுத்தை வளைத்தாள். அந்தக் கணமே அட்சயாவின் உடலெங்கும் அருவருப்பு ஆக்கிரமிக்க சட்டென உதறிவிட்டு உள்ளே போனாள். அவளுக்குத் தன்மீது அழுகிய பிணத்தின் வாடையடிப்பதுபோலத் தோன்றியது. ``எனக்குப் பசிக்குதுன்னு சொன்னேம்மா...” அறைக்குள்ளிருந்து குரல் மட்டும் வந்தது. பசியென்று சகானா ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும். எந்த வேலையாயிருந்தாலும் அப்படியே விட்டுட்டு, அவள் போதும் போதும்னு சொல்லும்வரை வயிற்றை நிறைத்துவிட்டுதான் அட்சயா ஓய்வாள். ஆனால் இன்று...? ‘மகாராணி அறையைவிட்டு வெளியே வரமாட்டாங்க.

Representational Image
Representational Image

படிக்கிறேன் பேர்வழின்னு அறைக்குள்ள போறதோட சரி. இவ்ளோ நாளா அவள் என்ன செய்யுறாள்னு பார்க்கணும்னுகூடத் தோணியது இல்லை. மகளை வேவு பார்க்கும் அளவிற்கு இருப்பாளெனக் கனவிலும் நினைக்கலையே! நம்ம பிள்ளையாச்சேன்னு கண்டுக்காம விட்டதுதான் இந்த இழிநிலைக்குக் காரணமோ? இந்தக் கருமத்துக்கு உடந்தையாய் இருக்கும் மற்றொரு குற்றவாளி யாராக இருக்கும்?’ “அம்மா...” இந்த முறை குரல் சீற்றத்துடன் கூடத்தில் எதிரொலித்தது. அட்சயா எரிச்சலுடன் தோசையை ஊற்றி எடுத்துப் போனாள்.

காதுக்குள் இயர்பீசை அடைச்சிக்கிட்டு, லேப்டாப்பில் படம் பார்த்தபடி, கையில் மட்டும் பேனா. ‘இதுதான் படிக்கிற லட்சணமா?’ இவ்வளவு நாள்களாகக் குறையாகத் தெரியாதது இப்போது விஸ்வரூபமெடுத்தது. மேசைமீது கிடந்த புத்தகப்பையை அட்சயாவின் பார்வை தீண்டியவுடன் சற்று அடங்கியிருந்த படபடப்பு ஆரம்பமாக அவளால் ஒரு நொடிகூட அங்கே நிற்க முடியவில்லை. “அப்படியே ஊட்டுங்கம்மா...” என்ற வார்த்தைகள் தனக்காகச் சொன்னவை கிடையாது என்பதுபோல அறையைவிட்டு வெளியானாள். “அம்மா... நாளைக்கு எனக்கு டெஸ்ட் இருக்கு....” அறையைத் தாண்டி வந்த வார்த்தைகள் கூடத்தில் உருண்டன.

Representational Image
Representational Image

`என்ன ஒரு நெஞ்சழுத்தம்? செய்யுறதையும் செஞ்சிட்டுக் கொஞ்சமும் கூச்சமில்லாம எப்படி இப்படிப் பேச முடியுது?

கணவருக்குச் சாப்பாட்டைக் கொண்டுவந்து மேசையில் வைத்தாள். “சகானா சாப்பிடலை பாரு...” என்று அவர் கூற அதைக் கண்டுகொள்ளாது போனாள். “பரீட்சை நேரத்துல பிள்ளைக்கு மன உளைச்சல் கொடுக்கக்கூடாதுன்னு ஒவ்வொண்ணையும் பார்த்துப் பார்த்துச் செய்வே... ஏற்கெனவே பிள்ளைங்க படிப்பதற்காக ரொம்பவும் சிரமப்படுதுங்க. இதில் என்னால முடிஞ்ச உதவி இது மட்டுந்தானேன்னு சொல்ற உனக்கு இன்னைக்கு என்னாச்சு ஆச்சு?” “...” “அட்சயா....! என்ன நடந்திச்சுன்னு சொன்னாதானே தெரியும்?” கணவரது குரல் உயர்ந்தது. தன் மனத்தில் இருப்பதை முகம் மொழிபெயர்த்துவிடுமோ என்ற ஐயம் உதிக்க, ``எனக்குத் தலையை வலிக்குது” கணவரிடம் சொன்னதோடு போய்ப் படுத்துவிட்டாள். ‘இப்போது தற்காலிகத் தற்காப்பான தலைவலியைக் காரணங்காட்டி இவரிடமிருந்து தப்பித்துக்கொண்டேன். ஆனால் பின்னாளில் வரும் இழிச்சொல்லிலிருந்து எப்படி மீளப் போகிறேன்? புரட்டியெடுக்கும் மனவலி தாங்காது உள்ளம் மருகியது.

“அம்மா...!” சகானாவின் சத்தம் சாத்திய அறையை முட்டி மோதியது. ‘இந்தக் கேடுகெட்டவளுக்கு என்னானது? உயிர் போறமாதிரி எதுக்கு இப்படி அலர்றா?’ அதற்குமேல் அட்சயாவால் படுக்கையில் இருக்க முடியவில்லை. வெளியே வந்தவளுக்கு எதுவுமே புரியவில்லை. தெறிக்கும் விழிகளுடன் இதுவரை தான் கண்டிராத மகள் நின்றிருந்தாள். எதுவுமே விளங்காத நிலையில் கணவர் இருந்தார். “இதான காரணம்?” சகானாவின் கையில் புத்தகப்பையில் அட்சயா பார்த்த ‘அது!’ “சே.... இதைப் பாத்துட்டுதான நீங்க இப்படி இருக்கீங்க?” என்று அந்த ஆணுறையை அட்சயாவை நோக்கி வெறுப்போடு வீசினாள். காற்றில் பறந்த அது டீபாயின் அடியில் ஓடியது. குழப்பமடைந்திருந்த தந்தையின் பார்வை அதை நோக்கிச் சென்றது. கீழே கிடந்ததை `ஜியாக் கிம் ஸ்ட்ரீட்டில்’ கண்டெடுத்த இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டைப்போல விழிகள் விரியப் பார்த்தார். “சொல்லுங்க... நீங்க மூஞ்ச தூக்கி வச்சிருக்கிறதுக்கு இதான காரணம்?” “தரங்கெட்ட வேலையைச் செஞ்ச உனக்கு இவ்வளவு திமிரா?” அவ்வளவு நேரமாக அடக்கி வைத்திருந்த ஆத்திரம் திறந்த நிலையில் அட்சயா புதிய அவதாரமெடுத்தாள். “போதும்... நிறுத்துங்க.... நீங்க என்னோட அம்மாவே கிடையாது...” “என்ன நடக்குது இங்கே?” கீழே கிடக்கும் பொருள், மனைவி, மகளென எல்லாமே புதிராகத் தெரிய அவரது குரல் உயர்ந்தது.

Representational Image
Representational Image

“அப்பா...!” சகானா பெருங்குரலெடுத்தாள். “என்னம்மா...? என்ன நடந்திச்சிடா...?” அட்சயாவிற்குள் ஏதோ ஒன்று நொறுங்கியது. ‘அப்படியென்றால்...?’ “அப்பா.... ஃபிரண்ட்ஸ் யாரோ என்னைக் கிண்டல் பண்ண இதை என் பேக்ல வச்சிருக்காங்கப்பா. ஆனா நான் இதை இப்பத்தான் பார்த்தேன். இவங்க அதை ஏற்கெனவே பார்த்திருக்காங்க. ஆனால் எங்கிட்ட எதுவுமே கேக்கலை...” குருதியில் தோய்ந்த சொற்கள் கூடமெங்கும் இறைந்தன. சிவந்த முகத்துடன் தந்தையின் தோளில் சாய்ந்தவளது கேவல் பயமூட்டுவதாய் இருந்தது. `கடவுளே.... எப்பேர்ப்பட்ட தப்பை செஞ்சிட்டேன்...?’ நொறுங்கிய அட்சயா பால் கட்டிக்கொண்டதைப்போலப் பரிதவித்தாள். “செல்லம்... இங்க பாருடா...” மனம் மாண்ட நிலையிலிருந்த அவளது குரல் மேலெழும்பத் தடுமாறியது. “என்னைத் தொடாதீங்க.... என் மேல நீங்க வெச்ச நம்பிக்கை இவ்வளவு தானா? இவ்வளவு கீழ்த்தரமான எண்ணங்கொண்ட நீங்க நிச்சயமா என்னோட அம்மாவா இருக்கவே முடியாது....!” அறையின் கதவை அறைந்த சகானாவின் குரலில் திண்மை நிறைந்திருந்தது.

-மணிமாலா மதியழகன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/