Published:Updated:

அப்பா வீடு! - நெகிழ்ச்சி சிறுகதை #MyVikatan

பக்கத்தில் கட்டிலில் வந்து அமர்ந்த மகனைப் பார்த்தார். `பகல் கனவோ’ என்றது மனக் குரல்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

காலிங் பெல் பாரியின் மதிய உறக்கத்தைக் கலைத்தது. தலைமாட்டில் இருந்த போனை எடுத்து மணியைப் பார்த்தார். 3:30. `இந்த நேரத்தில் யார்?’ யோசித்துக்கொண்டே எழுந்து, கலைந்திருந்த வேட்டியை கட்டியபடியே நடந்துசென்று கதவைத் திறந்தார்.

``அப்பா! நல்லாருக்கீங்களா?” என்று சிரித்தபடி நின்றிருந்தான் மகன். மருமகள் கையில் பெரிய பையுடன் நின்றிருந்தாள். ``தாத்தா” என்று ஓடிவந்தான் பேரன்.

மழைக்கான மேகம்கூட இன்றி வானத்தில் வெயில். ``வாங்க” என்று பேரன் கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே சென்று ஃபேனின் வேகத்தை அதிகப்படுத்தினார். மருமகள் சோஃபாவில் அமர்ந்தபடி, ``இப்போ உடம்பு எப்படி இருக்கு மாமா?” என்றாள்.

``ம்ம்ம்… நல்லாருக்கேம்மா. நீங்கள்ளாம் எப்படி இருக்கீங்க?”

பக்கத்தில் கட்டிலில் வந்து அமர்ந்த மகனைப் பார்த்தார். `பகல் கனவோ’ என்றது மனக் குரல்.

Representational Image
Representational Image

``நல்லாருக்கோம். அதே பிஸி. இரண்டு பேருக்கும் இன்னும் நைட் ஷிஃப்ட்தான். பகல்லாம் தூக்கத்துல போயிடுது. அஷ்வின் அத்தை வீட்லதான் இருக்கான். இன்னிக்கு தாத்தாவப் பார்க்கப் போறோம்னு சொன்னதும், ரொம்ப குஷி. ஓடிவந்துட்டான்” என்றான் மகன்.

``நேத்து போத்தீஸ் போயிருந்தோம்” என்று சொல்லியபடி பையைத் தந்தாள் மருமகள். அமைதியாக வாங்கி கட்டிலில் வைத்தார் பாரி. உள்ளே சட்டை, வேட்டி தவிர வேறு சில துணிகளும் தெரிந்தன. இடது அக்குளைச் சொறிந்துகொண்டார். அப்பகுதியில் கிழிந்திருந்த பணியனைப் பார்த்துவிட்டு, ``தாத்தா, டாடி இதுல புது பணியனும் வெச்சிருக்கார்” என்றான் அஷ்வின்.

``ஏன்பா இப்போ இந்தச் சிரமம்?” என்று மகனிடம் சொன்னபடி பேரனை மடியில் அமர்த்திக்கொண்டு, ``இப்போ ஸார் என்ன படிக்கிறீங்க?” என்றார் பாரி.

``தர்ட் தாத்தா”

மூன்றாவது முறையாக மனைவி கர்ப்பமானதும் பாரிக்கு இரவும் பகலுமாக விடாத வேண்டுதல். `முதல் இரண்டு முறையும் கலைந்துவிட்டது. இம்முறையாவது அனைத்தும் நல்லவிதமாக நடந்து வாரிசு பிறக்க வேண்டும்.’ கவலையும் அக்கறையும் கலந்தோங்கி, மனைவியைக் கையில் தாங்காத குறை. கைராசி மருத்துவர் என்று சுற்றமும் நட்பும் பரிந்துரைத்தவரிடம் அழைத்துச்சென்று செக்அப்; டைம்டேபிள் போட்டு மருந்து, மாத்திரை, டானிக் என்று பணிவிடை. நெகிழ்ந்து போனார் பாரியாள். பத்தாம் மாதம் ஆனந்தக் கண்ணீருடன் ``என் வேண்டுதல் நிறைவேறியது” என்றார் பாரி. ``கடவுளின் நாட்டம்” என்றாள் மனைவி. பிறந்த மகனை உச்சி முகர்ந்து “அஜய்” என்று பெயரிட்டார்கள்.

பாரிக்கு அரசாங்க உத்தியோகம். சென்னைப் பட்டணத்தில் வாழ்க்கை நடத்தும் அளவுக்கான மாதச் சம்பளமே வருமானம். என்ற போதிலும் மகனை கான்வென்ட் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். அந்தப் பள்ளியின் அபரிமித படிப்புச் செலவுகள் கையைக் கடிக்குமே என்று மனைவி கவலைப்பட்டபோது, ``அதெல்லாம் எப்படியாவது சமாளிச்சுடலாம்” என்று ஆரம்பத்தில் சொன்னாலும் ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் இடித்தது.

ஒருநாள், ``இக்பால் மஸ்கட்லேருந்து போன் பண்ணினான். அவன் கம்பெனியில் அக்கவுன்டன்ட் வேலை, இரண்டு வருஷ காண்ட்ராக்ட் விசாவுடன் இருக்காம். இங்கு லீவு போட்டுவிட்டு போய் வந்தால், கொஞ்சம் நிலைமை சரியாகும். என்ன சொல்றே” என்று மனைவியிடம் ஆலோசித்தார்.

Representational Image
Representational Image

நல்லது என்று முடிவானது. மஸ்கட் வருமானம் நொடிக்கவிருந்த குடும்பப் பொருளாதாரத்தைச் சீராக்கியது. பிள்ளையின் படிப்பு தடையின்றித் தொடர உதவியது. அங்கு அவர்களுக்கு பாரியைப் பிடித்துப்போய் பணியைத் தொடருங்களேன் என்றார்கள். கணக்கிட்டுப் பார்த்தார். கை நிறைய கிடைக்கும் அந்நிய நாட்டு வருமானத்தை இழக்கவும் மனமில்லை. அதற்கு மேல் நீண்ட விடுப்புக்கு வாய்ப்புத் தராத அரசாங்கப் பணியை உதறவும் துணிவில்லை. `காலத்துக்கும் பென்ஷன் வருமேங்க’ என்று கவலைப்பட்டார் மனைவி. ஆனால், மனைவி சொல் மிக்க மந்திரமாய் மனமெல்லாம் புத்திர பாசம். அவன் படித்து ஆளாகிவிட்டால் போதாது? பிறகு காலத்துக்கும் என்ன கவலை?

மீண்டும் மஸ்கட்டுக்கு விமானம் ஏறிவிட்டார். ஆண்டுக்கு ஒரு மாதம் விடுமுறை, தாராளமாய்ப் பணப் புழக்கம் என்று ஆண்டுகள் இனிமையாக ஓடின. சேமித்த பணத்தில் சென்னையில் மூன்று பெட்ரூம் பிளாட் வாங்கினார். புறநகரில் இரண்டு கிரவுண்ட் நிலம் சகாய விலையில் கிடைத்ததை ஓய்வு காலத்தில் பெரிய வீடு கட்டி வாழ வசதிப்படும் என்று வாங்கிப் போட்டார். கம்ப்யூட்டர் சயின்ஸில் மகன் மாஸ்டர்ஸ் முடித்து வேலைக்கும் சேர்ந்துவிட்டபோது, ``போதும் முடிச்சுட்டு வந்துடுங்க. இங்க எனக்கும் முடியாமல் இருக்கு” என்று சொல்லிவிட்டார் மனைவி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முடித்துக்கொண்டு ஒன்வேயில் சென்னை திரும்பி ஓர் ஆண்டுதான் ஆகியிருக்கும். மனைவியின் டயாபடீஸ் பிரச்னை முற்றி, கிட்னி பழுதாகி, அதற்கு மாற்று சிகிச்சை செய்து தேற வைத்தால், தைராய்டு உபாதை அதிமாகி, ஏகப்பட்ட பணம் செலவழித்து சிகிச்சை புரிந்தும் வாழ வாய்க்காமல் கண்ணை மூடிவிட்டார் மனைவி. அப்படியே உடைந்து போனார் பாரி. மனதைத் தேற்றி மீள சில மாதங்கள் ஆயின. மீண்ட ஒருநாளில், ``அப்பா! என் அலுவலகத்தில்தான் வேலை பார்க்கிறாள். எங்களுக்குப் பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறோம்” என்று மாதவியை அழைத்து வந்து அறிமுகப்படுத்தினான் அஜய்.

மகனின் ஆசையில் அவர் குறுக்கிடவில்லை. முறைப்படி பேசி முடித்து, திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மிச்சமிருந்த தன்னுடைய சேமிப்பிலிருந்து அனைத்தையும் எடுத்து அதற்கும் தாராளமாகவே செலவழித்தார்.

Representational Image
Representational Image

``அப்பாவுக்குப் புதுசா முடியலப்பா. உன் திருமணத்துக்கு கிஃப்டா இந்த ஃபிளாட்டை உன் பெயருக்கு மாத்திட்டேன்” என்று பத்திரத்தை நீட்டியபோது, “அப்பா!” என்று அப்படியே கண்கலங்கி மனைவியுடன் அவரது காலில் விழுந்தான்.

கணவன், மனைவி இருவருக்கும் ஒரே அலுவலகம் என்பது மட்டுமின்றி இருவருக்கும் ஒன்றே போல் இரவு ஷிஃப்ட். காலையில் இவர் எழுந்து காபி போடும் நேரத்தில் வந்து நுழையும் அவர்களின் கண்களில் தூக்கம் சொக்கும். ரூமுக்குள் நுழைந்தால் மீண்டும் மாலை அவர்கள் கிளம்பும்போதுதான், ``ஹலோ, நலமா?” எல்லாம். அதற்குள் இவர் தன்னுடைய தேவைகளைத் தானே பார்த்துக்கொண்டு, மஸ்கட்டில் வாழ்ந்த நாள்களில் கற்றுக்கொண்ட சமையல் கைகொடுக்க ஏதேனும் சமைத்து சாப்பிட்டுவிட்டு, மாலையில் டிவி பார்க்கும் நேரத்தில், ``சாப்பிட்டீங்களாப்பா!” என்று கேட்டுவிட்டு சம்பிரதாயமாய் ஏதேனும் உரையாடிவிட்டு, அவசரமாக சமைத்துச் சாப்பிட்டுவிட்டு இருவரும் கிளம்பிவிடுவார்கள். தனிமை துணைக்கு அமர்ந்துகொள்ளும். வெகு விரைவில் அது அவரை வாட்ட ஆரம்பித்தது.

மனக் கனவுகள் விடலைக் காதல்போல் இனிமையானவை. வாழ்க்கையின் நிஜம் அறியாதவை என்று புரியு ஆரம்பித்தபோது விரக்தி எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. உழைத்துக் களைத்து வயதான உடலில் சிற்சில உபாதைகளும் தோன்ற ஆரம்பித்தன. கால் மூட்டுப் பிரச்னை பெரிதாகி நிரந்தரமானது. மருந்துகளும் தினசரி உணவாகின. மகன்தான் அச்செலவுகளைப் பார்த்துக்கொண்டான். மட்டுமன்றி, வேறு சில்லறைத் தேவைகளுக்கும் அவனிடமே பணம் கேட்கும் நிலை ஏற்பட்டபோதுதான் அவனது கண்ணோரம் தோன்றிய சலிப்பைக் கவனித்துவிட்டார்.

தனியாக வீட்டில் அடைந்து கிடந்தால் இனி அது புத்திக்குச் சரிப்படாது என்று தோன்றியவுடன் வரி விளம்பரங்களின் ஆள் தேவை பகுதியும் அவரது வாசிப்புக்கு உட்பட்டது. இன்டீரியர் டிஸைன் நிறுவனம் ஒன்று அனுபவம் வாய்ந்த கணக்கர் வேண்டும் என்று கேட்டிருந்தது. விலாசத்தைக் குறித்துக்கொண்டு நுங்கம்பாக்கத்திலிருந்த அலுவலகத்திற்குச் சென்றுவிட்டார். உள்ளே இக்பால்!

Representational Image
Representational Image

``என் நிறுவனம்தான். மஸ்கட்டிலிருந்து வந்ததும் சும்மா இருக்கப் பிடிக்கலே. ஏதாச்சும் செய்வோமேன்னு ஆரம்பிச்சேன். பிக்அப் ஆகி இப்ப சிறப்பா போகுது. உனக்கு இல்லாத வேலையா?” என்று மேனேஜராக உட்கார வைத்துவிட்டார்.

அலுவலகம் கிளம்பி வருவது, அங்குள்ள பொறுப்புகள், வேலைகள் என்று மூழ்கி மனம் பிஸியாக ஆரம்பித்ததும் பெரும் விடுதலையை உணர்ந்தார். வெகு விரைவில் அந்தப் புது வாழ்க்கைப் பிடித்துப் போனது. வீடு திரும்பும் நேரம் இருக்கும் களைப்பில், தனிமையின் சோர்வுக்கு வேலையே இருக்காது. உறக்கம் ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும். அப்படியே ஐந்து ஆண்டுகள் ஓடின.

வழக்கம்போல் விடிந்த ஒருநாள் வித்தியாசமாக முடிந்தது. அலுவலகத்தை அடைந்து அன்றைய வேலைகளைப் பார்க்க ஆரம்பித்திருந்தார் பாரி. இடது தோள் வலிப்பதைப் போல் இருந்தது. வியர்த்தது. எழுந்து நிற்க முயன்று முடியாமல் நாற்காலியில் அமரப் போனவர், தரையில் சரிந்து விழ, அலுவலகம் திடுக்கிட்டுப் பரபரத்தது. ஆம்புலன்ஸில் அவரைத் தூக்கிப் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்குப் பறந்தார் இக்பால்.

``சரியான நேரத்துக்கு வந்துட்டீங்க” என்று அவரைக் காப்பாற்றிவிட்ட டாக்டர், இக்பாலிடம், ``எல்லா வால்வும் அடைச்சுப்போய் கிடக்கிறார். விரைவில் பைபாஸ் செய்ய வேண்டும். நோ அதர் ஆப்ஷன்” என்று சொல்லிவிட்டார்.

செலவைக் கேட்டு கையைப் பிசைந்தான் மகன். ``முடிந்ததைத் தா! மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன்” என்றார் இக்பால்.

சொன்னதைப் போலவே, கணக்குப் பார்க்காமல் நட்பு நலம் புரிந்தது. பிழைத்து எழுந்து வந்து பாரிக்கு தன்னுடைய இல்லம் அந்நியப்பட்டது. வயதும் நோயிலிருந்த மீண்ட உடம்பும் முந்தைய சுறுசுறுப்பை இழந்திருந்தன. ஏறி இறங்க வேண்டிய மூன்று மாடிகள் ஏற்படுத்திய சிரமத்தினால் நினைத்தபடி வெளியில் எங்கும் செல்லவும் முடியாத நிலை.

“கிரவுண்ட் ஃப்ளோர் வீடு வாடகைக்குக் கிடைத்தால் இதை வாடகைக்கு விட்டுட்டு மாறிடலாமா?” என்று மகனிடம் ஒருநாள் யோசனை கேட்டார்.

Representational Image
Representational Image

அஜய்யும் மாதவியும் அந்த யோசனையை அப்படியே நிராகரித்துவிட்டார்கள். வாடகை, பட்ஜெட், வசதி இத்யாதி காரணங்கள் அடுக்கப்பட்டு அந்தப் பேச்சே இனிக் கூடாது என்பதுபோல் அதற்கு முற்றுப்புள்ளி விழுந்தது. மூச்சடைத்துப் போனார் பாரி. நலம் விசாரிக்க வந்த இக்பாலிடம் இவ்விஷயத்தை மேலோட்டமாகப் பேசும்போதே பாரியின் கண்கள் கலங்கிவிட்டன.

``எனக்கு ஒரு யோசனை. என் மச்சானின் இரண்டு பெட்ரூம் ஃப்ளாட் ஒன்று இருக்கு. அது கிரவுண்ட் ஃப்ளோர். அவனுக்கு ஆஸ்திரேலியாவில் பணி. சில்லறை சாமான்கள் மட்டும் போட்டு அந்த ஃப்ளாட் பூட்டியிருக்கு.. அந்தச் சாமான்களை ஒரு ரூமில் போட்டு பூட்டிட்டுத் தர்ரேன். உனக்கு ஒரு ரூமும் ஹாலும் கிச்சனும் போதாது?”

``ஐயோ! இந்த ஒண்டிக்கட்டைக்கு அது மாளிகையாச்சே!”

அடுத்த வாரமே ஆழ்வார்பேட்டையில் இருந்த அந்த ஃப்ளாட்டுக்குத் தன் சொற்ப உடைமைகளுடன் குடிபெயர்ந்தார் பாரி. ``இந்த வயசுல எதுக்கு நீங்க தனியாப் போய் சிரமப்படனும்” என்றாவது அஜய் கேட்டிருக்கலாம். `அவனுக்கு அதுகூடத் தெரியவில்லை’ என்றுதான் நினைத்துக்கொண்டார். ஆனால், சாமான்களைத் தூக்கி வந்து உதவினான். துடைத்துப் பெருக்கி, சுத்தம் செய்து தந்தான். ``அடிக்கடி கால் பண்ணுங்கப்பா” என்று விடை பெற்றான்.

``என் ஃப்ரெண்ட் ஃபேமிலி நாலு வீடு தள்ளி இருக்காங்க. சமைத்துத் தரச் சொல்லியிருக்கேன்” என்று சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்து தந்தார் இக்பால்.

``எவ்வளவுடா கேப்பாங்க?”

``அடப் போடா!” என்று சிரித்தபடி சென்றுவிட்டார்.

தன் பிள்ளையை ஊட்டி வளர்த்ததற்கு உற்றார் உதவியில் அவரது சொச்ச வாழ்க்கை தானே கழிய ஆரம்பித்தது. அந்தக் கடனை எப்படித் தீர்ப்பார்? கடனா? இக்பால் அதை அப்படி நினைத்தால்தானே? தான் ஏதாவது பிரதியுபகாரம் செய்யத்தான் வேண்டும் என்று மனம் மட்டும் படுத்தி எடுத்தது. பிறகு அதற்கொரு வழியும் பிறந்தது.

தனியாக வந்த புதிதில் வாரம் ஒருமுறை வந்து எட்டிப்பார்த்துவிட்டு சென்ற மகனின் வரவு மாதம் ஒன்றாகி, பண்டிகை, திருநாள் என்றாகிப்போனது. வரும்போது ஹோட்டலில் இருந்து வாங்கிய விசேஷ உணவும் பழங்களும் கொண்டு வருவான். கிளம்பும்போது, ``செலவுக்கு வெச்சுக்குங்கப்பா” என்று இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை அவரது கட்டிலில் வைத்துவிட்டுச் செல்வான். பாரியின் மொழியில் பெருமூச்சும் வார்த்தைகளாகி இருந்தன.

Representational Image
Representational Image

கடைசியாக பொங்கல் பண்டிகையின்போது வந்து சென்றவன், இன்று எப்படி திடீரென்று குடும்பத்துடன்? ஏதும் விசேஷ நாளோ? மறந்துவிட்டோமோ? என்று மனத்துக்குள் கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது.

மாதவி கிச்சனுக்குள் சென்று தானே காபி போட்டு அனைவருக்கும் எடுத்து வந்தாள். குடித்துக்கொண்டே, ``அப்பா! நாங்கள் இருவரும் பேங்கில் லோனுக்கு அப்ளை செய்ய பிளான் பண்ணியிருக்கிறோம். தனி வீடாக இருந்தால் உங்களுக்கும் கிரவுண்ட் ஃப்ளோர் ஈஸியா இருக்கும். எத்தனை நாள்தான் மூன்றாம் மாடி ஃபிளாட்டில் நெருக்கடியில் கிடப்பது?”

குடித்து முடித்த கப்பை அருகில் இருந்த ஸ்டூலில் வைத்துவிட்டு, ``ம்…” என்றார்.

``அதான் நம்ம மனை இருக்குல்லே, அதுல கட்டலாம்னு இருக்கோம். இப்ப அந்த ஏரியா நல்லா டெவலப் ஆகி பிஸியாகவும் ஆகிவிட்டது. நல்ல ஸ்கூலும் அங்க வந்துடுச்சு. எங்களுக்கும் அங்கிருந்து கம்பெனி பஸ் இருக்கு. இப்ப சென்னைக்குள்ள டிராஃபிக்கும் நெரிசலும், படு கேவலமாயிடுச்சு” என்று பேசிக்கொண்டே இருந்தவனிடம், ``அந்த மனையை நான் கொடுத்துட்டேனே” என்றார்.

காபி கோப்பைகளை அலம்பிய கிச்சன் குழாய் தண்ணீர் சட்டென்று நின்று அமைதியானது. திகைத்த அஜய், ``எப்போ? என்னிடம் சொல்லவே இல்லே! என்ன முடிவு இது? எவ்வளவுக்கு?” என்று கேள்விக்குறிகளாக அடுக்கினான்.

``விலைக்கு இல்லே. தானமா! இக்பாலும் அவன் நண்பனும் சேர்ந்து அறக்கட்டளை ஆரம்பிக்கிறார்கள். புறநகரில் இடம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னான். பிராஜெக்ட்டைப் பார்த்தேன். பிடிச்சுப் போச்சு. நன்கொடையா தந்துட்டேன்”

``ஃப்ரீயாவா? அந்த இடத்துடைய இன்றைய வொர்த் என்னன்னு தெரியுமா உங்களுக்கு? அஷ்வினை நினைச்சுப் பார்த்தீங்களா? உங்க பேரன்தானே அவன். என்னடா, மேல்விழுந்து உதவி செய்கிறாரே என்று பார்த்தேன். அந்த பாய் சாமர்த்தியசாலி...”

தந்தையின் உஷ்ணக் குரலும் எந்தச் சலனமுமின்றி அமர்ந்திருக்கும் தாத்தாவும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது புரியாமல் பார்த்தான் அஷ்வின்.

அடுத்து சில நிமிடங்களில், ``நாங்க கிளம்புறோம்” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

********

Representational Image
Representational Image

``வாங்க ஸார்? உட்காருங்க. நான்தான் சேதுராமன். நீங்கள் போனில் பேசினீர்களே”

``தேங்ஸ் ஸார். உங்களுடைய சர்வீஸ் பற்றி நிறைய கேள்விப்பட்டேன். விசாரித்த வகையில் கண்ணை மூடிக்கொண்டு ரெஃபர் செய்கிறார்கள். இதைவிடச் சிறப்பான இடம் கிடைக்காது என்று தெரிந்துவிட்டது.”

``எங்களுடைய ஃபீஸ் நிர்வாகச் செலவுகளுக்கு மட்டும்தான். லாப நோக்கமற்ற சேவை மையம் இது. எங்களால் ஆனதைச் சிறப்பாகச் செய்வோம். உங்கள் பெற்றோர் எங்களுடைய பெற்றோர் என்பது எங்கள் பாலிஸி. அப்பாவுக்கு எப்போலேருந்து இப்படி?”

``நாலு மாசமாச்சு. ஒரு பக்கம் கையும் காலும் பாதிப்பாயிடுச்சு. பேச்சு குழறும். அம்மாவும் இல்லே. நாங்க இரண்டு பேரும் வேலைக்கு ஓடவே நேரம் சரியா இருக்கு. இவரை எப்படி ஸார் நாங்க சரியா கவனிக்க முடியும்? டாய்லெட் பாத்ரூமுக்குக் கூட உதவியில்லாமா அப்பாவுக்கு முடியல. மனசெல்லாம் கவலையாகவே இருந்துச்சு. அப்போதான் இந்த ஹோம் பற்றிக் கேள்விப்பட்டோம்.”

``டோன்ட் வொர்ரி. வீ ஆர் ஹியர். நீங்க எப்ப வேணும்னாலும் வந்து பார்த்துட்டுப் போகலாம். உங்க பேப்பர்ஸ் ரெடியா இருக்கு. கொண்டு வர்றேன். பிறகு ரூமைப் பார்க்கப் போகலாம்”

நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவன், சுவரில் சிரித்த அன்னை தெரஸாவுக்குப் பக்கத்தில் இருந்த படத்தைப் பார்த்து, அதிர்ந்து, திடுக்கிட்டு, ``சேதுராமன் ஸார், இது? இவர்?” என்றான்.

``வள்ளல் சார். பெயர் பாரி. இந்த இல்லம் உருவாக உதவிய மூலகர்த்தா. இவ்வளவு பெரிய இடத்தை அப்படியே தூக்கி இனாமாகத் தந்தவர். ஒரே ஒரு கண்டிஷன் மட்டும்தான் போட்டார். அது கிடக்கட்டும். அவரை உங்களுக்குத் தெரியுமா?”

``என் தாத்தா ஸார்” என்றான் அஷ்வின்.

Representational Image
Representational Image

வீல் சேரில் இருந்தவரைப் பார்த்தபடி, ``அஜய் ஸார் பாரியின் மகனா?” வியந்தார் சேதுராமன்.

உதவியாளர் உள்ளே வந்து நீட்டிய உடன்படிக்கைக் காகிதங்களை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு, ``மிஸ்டர் அஷ்வின். உங்கள் தாத்தா இடத்தை டொனேட் பண்ணும்போது போட்ட கண்டிஷன் ஒன்றே ஒன்றுதான். `என் சந்ததியினருக்கு மட்டும் இங்கு முற்றிலும் இலவச சேவை செய்யப்பட வேண்டும்’. அவருடைய மகன் இனி இங்கு எங்கள் மகன். இது அவருடைய அப்பா வீடு ஸார்”

``அ..ப்..பா…” என்று குழறிய அஜய்யின் முகத்தில் தாரையாய்க் கண்ணீர். வீல்சேர் குலுங்கியது.

-நூருத்தீன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு