Published:Updated:

எமிலி டீச்சர்... அரிச்சந்திரன் நாடகம்! - பள்ளியும் பள்ளி சார்ந்த நினைவுகளும் #MyVikatan

நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போதுதான், நம் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, சிவகாசி வழியாக ஒரு பரப்புரை நிகழ்த்துவதற்காகச் சென்றுகொண்டிருந்தார்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

உலகின் பல பகுதிகளில் முன்னாள் மாணவர்கள் வாழ்ந்து வருவதால், உலகெங்கிலும் அறியப்பட்ட புகழுடன் உள்ள நம் சிவகாசி இந்து நாடார் விக்டோரியா உயர் தொடக்கப் பள்ளியில் நான் முதல் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு வரை படித்தேன். 

அந்த ஏழாண்டுகளின் நினைவுகள் மிக இனிமையானவை. 

என்னுடைய முதல் வகுப்பில், ரங்கசாமி அவர்கள் ஆசிரியராக இருந்தார். எவ்வளவு துல்லியமாக, மாணவர்களுக்கு சுமை தெரியாமல் பாடம் பயிற்றுவிக்கப்பட்டது என்பது இப்போது யோசித்துப்பார்த்தால் தெரிகிறது. 

Representational Image
Representational Image

`பஞ்சுமெல்லடிதேவியே...’ என்று வாணியை வணங்கிப்பாடும் இறைவணக்கப் பாடலை திரு.முனியாண்டி அவர்கள் பலநாள்கள் பாடியது இன்றும் என்நினைவில் நிற்கிறது.

என் மூன்றாம் வகுப்பு ஆசிரியர் திரு.நீதிமணி அவர்கள், கம்பீரமான அழகிய தோற்றப் பொலிவுடையவர். சிலப்பதிகார நாடகம் நடத்தப்பெற்றபோது, அவர் கோவலனாக நடித்தது பற்றி என் பெற்றோர் உட்பட பல பெரியவர்கள் வியந்து பேசியது எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது.

நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதுதான், முதல்முறையாக கிருஷ்ணலீலா நாடகத்தில் பாலகிருஷ்ணனாக நடித்தேன்.

மறுநாள் வகுப்புக்குச் செல்லும்போதும், இடைவேளையின் போதும், வகுப்பு முடிந்த பின்னாலும், நான் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது... 'ஏய், இந்தப் பையன்தான்டா நேத்து கிருஷ்ணனா பிரமாதமா நடிச்ச பையன்' என்று மூத்த அண்ணன்களும் அக்காக்களும் சொல்லியதை கேட்டும் கேட்காததுபோல் நான் வீரநடை போட்டதும், அதைப் பார்த்த என்னுடன் படித்த மாவுருண்டை முருகேசன் (பள்ளிக்கு வரும் வழியில் மாவுருண்டை விற்றுக்கொண்டிருக்கும் பாட்டியிடம் ஐந்து மாவுருண்டைகளை வாங்கி, அதில் மூன்றை ஆன் தி ஸ்பாட் முழுங்கிவிட்டு , மீதி இரண்டை கால் சட்டை பாக்கெட்டில் வைத்து, வகுப்பில் பாடம் நடக்கும்போது மொக்கிக்கொண்டிருந்ததால் அவனுக்கு நாங்கள் வைத்த திருநாமகரணம்) வயிற்றெரிச்சல் தாங்காமல் 'பெரும பீத்த கட ஏங்கட ஓட்டக்கட' என்று என்னருகில் வந்து என் காதில் உரக்கச் சொல்லிவிட்டு ஓடியதும் நினைவில் நிழலாடுகிறது.

Representational Image
Representational Image

நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போதுதான், நம் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, சிவகாசி வழியாக ஒரு பரப்புரை நிகழ்த்துவதற்காகச் சென்றுகொண்டிருந்தார்.

இறுக்கமான முகத்துடன் ஜீப்பில் வந்துகொண்டிருந்த நேரு, திரும்பி குழந்தைகளைப் பார்த்தவுடனே முகம் மலர்ந்து, இரண்டு மலர் மாலைகளை எடுத்து குழந்தைகள் மேல் எறிந்தார். அதில் ஒரு மலர்மாலை, ஒரு சிறுமியின் மேல் விழுந்தது. அந்தக் குழந்தை, அன்றடைந்த ஆனந்தத்திற்கு ஈடு கொடுப்பதாக இன்னொன்றைச் சொல்லமுடியும் என்றால், அவள் பெற்றோர் அடைந்த ஆனந்தத்தைதான் சொல்ல முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான்காம் வகுப்பில், கொண்டுரெட்டி அவர்கள் எனக்கு ஆசிரியராக இருந்தார். கணக்கு எளிமையாகப் போடுவது மற்றும் வரலாற்றுப் பாடங்களை மிக இனிமையாகச் சொல்வது என்பதெல்லாம் அவருக்குக் கைவந்த கலையாக இருந்தது.

Representational Image
Representational Image

நான்காம் வகுப்பு படிக்கும்போதுதான் ‘அலெக்ஸாண்டரும் கொள்ளைக்காரனும்’ என்ற நாடகத்தில் நானும் என் சக மாணவன் மாவுருண்டை முருகேசனும் முறையே அலெக்ஸாண்டராகவும் கொள்ளைக்காரனாகவும் நடித்தோம். 'என் வயிற்றுப் பசிக்காக திருடி, தப்பிப்பதற்காகச் சில குடிசைகளை எரித்துவிட்டு ஓடிய நான் கொள்ளைக்காரனா? அல்லது மாவீரன் என்று பெயர்பெற வேண்டும் என்ற உன் சுயநலத்திற்காகப் பல போர்களைத் தொடுத்து, பல்லாயிரக் கணக்கான வீரர்களைக் கொன்று குவித்து, பல நகரங்களையும் நாகரிகங்களையும் அழித்தொ ழித்த நீ கொள்ளைக்காரனா?' என்று அலெக்ஸாண்டரிடம் கேள்வி கேட்டு, அவனை ஆன்ம பரிசோதனைக்கு கொள்ளைக்காரன் உட்படுத்தி நாடகம் சென்றது. நடிக்க தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்ட மாவுருண்டை முருகேசன், அந்தப் பெருமையினாலும் மகிழ்ச்சியினாலும் என்னைத் தன் நண்பனாக வரித்துக்கொண்டான்.

ஐந்தாம் வகுப்பில் எமிலி டீச்சர் வகுப்பு ஆசிரியையாக இருந்தார். அந்தக் காலத்தில், எங்களுக்கு ஐந்தாம் வகுப்பில்தான் ஆங்கிலம் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. எமிலி டீச்சர், மிக அற்புதமான டீச்சராக இருந்தார். எப்பொழுதும் மலர்ந்த புன்னகையோடு, மாணவர்கள் அனைவரையும் அரவணைத்து, கடைசி நிலையிலுள்ள மாணவனும் புரிந்துகொள்ளுமாறு மிகமிகப் பொறுப்புடன் சொல்லிக்கொடுப்பார்.

Representational Image
Representational Image

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதுதான், அரிச்சந்திரனின் ‘மயானகாண்டம்’ என்ற ஓரங்க நாடகத்தை எமிலி டீச்சர் நடத்திக்காட்டினார்கள். நான் அரிச்சந்திரனாக அதில் நடித்தேன். அது, காமாக் ஹாலில் நடத்தப்பெற்றது. பார்வையார்கள் அனைவரும்–ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஊர்ப் பெரியவர்கள். என்னுடைய தந்தையும் வந்திருந்தார்.

என்னுடைய அண்ணன், நாடகத்தில்அதிக கவனம் செலுத்தி, படிப்பில் தவறிவிட்டார் என்ற வருத்தம் காரணமாக, எங்கள் குடும்பத்தில் உள்ள மற்ற எல்லாக் குழந்தைகளையும் எந்தக் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளக்கூடாது என்று எங்கள் தந்தை கட்டளையிட்டிருந்தார். தந்தை என்னை நாடகத்தில் பார்த்துவிட்டாரே என்ற பயத்துடன் வீட்டுக்குச் சென்றேன். ஆனால், அப்பா என்னை மிகவும் பாராட்டினார். நல்லவேளையாக பூசை ஒன்றும் விழவில்லை என்ற நிம்மதியோடு தூங்கப்போய்விட்டேன்.

Representational Image
Representational Image

சிவகாசி ரோட்டரி சங்கம் அப்போதுதான் தொடங்கப்பெற்றிருந்தது. சங்கத்தின் முதல் தலைவராக நம்பள்ளியின் தாளாளர் பி.எஸ்.ஆர்.செண்பகமூர்த்தி நாடார் இருந்தார். என்னுடைய தந்தை, சங்கத்தின் முதல்நிலை உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். அவர்களது வாராந்தரக் கூட்டம் நம்முடைய பள்ளிவளாகத்தில் நடக்கும். பள்ளியை விட்டுப் போகும் சமயங்களில்,என்னுடைய தந்தை அங்கு மற்ற பெரியவர்களோடு இருப்பதைக் கண்டு, நான் பெருமையோடு ராஜநடை போட்டுக்கொண்டு செல்வது வழக்கம்.

அந்தக் காலத்தில், பெண் குழந்தைகள் பள்ளிக்கு வர பல கட்டுப்பாடுகள் இருந்தன. எனவே, எனது தமக்கையர் இருவருடன் என்னையும் குதிரைவண்டியில்தான் பள்ளிக்கு அனுப்பினார்கள். எங்கள் தந்தை விலங்குகள் மேல் அன்புகொண்டவர் என்ற காரணத்ததால், மூன்று குதிரைவண்டிகளுக்கு நான்கு குதிரைகளை வாங்கினார் (அப்படியென்றால்தான் ஒரு குதிரையாவது ஓய்வேடுக்க இயலும் என்று). அப்படி குதிரைவண்டியில் பள்ளிக்கு வந்தது, மாலையில் எனது பெரியப்பா பிள்ளைகளையும் வண்டியில் வாருங்கள் என்று ஏற்றிக்கொண்டு சென்றது என்று பல சுவையான நினைவுகள் இருக்கின்றன.

Representational Image
Representational Image

ஆறாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தோம். ஐந்தாம் வகுப்பில் எங்களுக்கு மிகநன்றாக ஆங்கிலத்தின் அடிப்படை அமைந்த காரணத்தால், ஆறாம் வகுப்பிலும் ஆங்கிலம் பயில்வது எங்களுக்கு எளிதாக இருந்தது. ஆறாம் வகுப்பில், உலகநாதன் அவர்கள் எங்கள் ஆசிரியராக இருந்தார். உலகநாதன் அவர்களின் தாத்தாவின் ஒன்றுவிட்ட சகோதரர்தான் வ.உ.சிதம்பரனார் என்று அவர் மிகப்பெருமையாகக் கூறியதெல்லாம் இன்றும் என் நினைவில் நிழலாடுகிறது.

ஏழாம் வகுப்பில், அற்புதராஜ் என்ற மிக அற்புதமான ஆசிரியர் எங்களுக்கு இருந்தார். எவ்வளவு மோசமாக ஒரு மாணவன் படித்தான் என்றாலும், அவனிடம் சற்றும் கோபம் கொள்ளாமல் பொறுமையுடன் அவனுக்கு கற்பித்துக்கொடுப்பது, எல்லா மாணவர்களையும் சமமாக நடத்துவது, மனம் நிறைந்த அன்பு, வாய் நிறைந்த புன்முறுவல் என்று பல நல்ல சிறந்த பண்புகளைக் கொண்ட ஆசிரியராக விளங்கினார் அற்புதராஜ் அவர்கள்.

Representational Image
Representational Image

அப்போதுதான், கலைவாணர், சிவாஜிகணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன் மற்றும் பத்மினி நடித்த ராஜா ராணி திரைப்படத்தில் இடம்பெற்ற சாக்ரடீஸ் என்ற ஓரங்க நாடகத்தைப் பள்ளி ஆண்டுவிழாவில் நடத்த வேண்டும் என்று தீர்மானித்து, என்னை சாக்ரடீஸாக நடிக்கச் சொன்னார்.

நாடகத்தில் நடித்ததற்காக, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவது வழக்கம். பரிசுப் பொருளாக சீப்பு அல்லது சோப்பு டப்பா போன்றவை வழங்கப்படும். விழா நடந்த மறுநாள், பள்ளியில் வைத்து ஒரு பெரியகூட்டம் போட்டு, எல்லோரையும் அழைத்து பரிசுகளைக் கொடுத்தார்கள். அப்போது, சாக்ரடீஸாக நடித்த பையன் வந்து பரிசைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்தார்கள். நான் போனவுடன், பிளாஸ்டிக்கினால் ஆன ஒரு சிறிய பூக்கூடை கொடுத்தார்கள். மற்றவர்களுக்கெல்லாம் சோப்பு டப்பாக்களை என் கையில்கொடுத்து,கொடுக்கச் சொன்னார்கள்.

Representational Image
Representational Image

கூட்டம் முடிந்து திரும்பி வரும்போது, என் ஆருயிர் நண்பனாக பரிணாம வளர்ச்சி அடைந்திருந்த மாவுருண்டை முருகேசன், ‘தூக்குங்கடா பாலச்சந்திரனை’ என்று கத்த, என்னுடைய நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து என்னைத் தோள்மேல் தூக்கிக் கொண்டு வகுப்புக்கு கூட்டிச்சென்றார்கள். என்னுடைய ஆசிரியர் அற்புதராஜ் அவர்கள், ஆனந்தக் கண்ணீருடன் என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டார்.

இப்படி பல இனிய நினைவுகள்.

சுதந்திர தினவிழா அன்று, தாளாளர் பி.எஸ்.ஆர்.செண்பக நாடார் அவர்கள், நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு பெரியவர்கள் எவ்வளவு சிரமப்பட்டார்கள், எத்தனை பேருடைய தியாகத்தினால் இந்த நாடு சுதந்திரம் அடைந்தது என்பதையெல்லாம் பற்றி விவரமாக, மிக அமைதியாக, மிக ஆழமாக சொற்பொழிவாற்றுவார். அந்தச் சொற்பொழிவை கேட்கும் வாய்ப்பு எனக்கு பல ஆண்டுகள் கிடைத்திருக்கின்றது.

Representational Image
Representational Image

125 ஆண்டுகளாக நிலைத்திருக்கும் நம்முடைய சிவகாசி இந்துநாடார் விக்டோரியா உயர்நிலை மற்றும் தொடக்கப்பள்ளி, நான்கு பள்ளிகளாக ஏழாயிரத்திற்கும் மேலாக மாணவர்களைக் கொண்டதாக இருக்கிறது என்று கேட்கும்போது, மனம் இன்புறுகிறது.

எங்களுக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள் யாரும் பண வசதிபடைத்தவர்களாக அன்று இருந்ததில்லை. ஆனால், பணவசதி இல்லை என்பதை அவர்கள் பெரிய குறையாகக் கருதியதில்லை. கற்பிப்பது என்பது வெறும் கடமை என்று அவர்கள் நினைத்ததில்லை. அதை ஒரு தவமாக, ஒரு வேள்வியாக நினைத்தார்கள். நாங்கள், எங்கள் வாழ்வின் பின்னாட்களில் பெற்ற உயர்வு எல்லாவற்றிற்குமே காரணம், அந்த ஆசிரியப் பெருந்தகைகளும், அருமையான ஒழுக்கத்தினையும் உண்மையான கோட்பாட்டினையும் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த சிவகாசி இந்துநாடார் விக்டோரியா உயர் தொடக்கப்பள்ளி குடும்பமும்தான். என்றென்றும் எங்கள் பள்ளியைப் பற்றியும் ஆசிரியர்களைப் பற்றியும், எங்கள் நினைவுகள் அன்றலர்ந்த புது மலர்களாய், அவை தொடுத்த மாலைகளாய் மனத்திற்குள் மகிழ்வளித்து மணம் தந்துகொண்டே இருக்கும்.

Representational Image
Representational Image

அலைகள் கரைக்கு வருகின்றன, போகின்றன. ஆனால், ஆழ்கடல் நிலைத்துள்ளது. ஆதவன் எழுகிறான் விழுகிறான். ஆனால், அன்னை பூமி சுழற்சியில் நிலைத்துள்ளாள். அதுபோல், மாணவர் வருகின்றார் போகின்றார். ஆனால், பள்ளி என்றென்றும் நிலைத்திருக்கின்றது. அடிக்கும் அலைகள் ஆழ்கடலின் செல்வத்தை கரைக்குக் கொணர்வதுபோல், உதிக்கும் உதயவன் உலகிற்கு ஒளியூட்டுவது, போல், சென்றுவிட்ட மாணவராகிய நாம் சீர்மிகு பள்ளியின் சிறப்புதனைச் சென்ற இடமெல்லாம் சிறக்கச் செய்வதே நாம் நம் பள்ளிக்குச் செய்யும் நன்றிக்கடன்.

-கோ.பாலச்சந்திரன் I A S (R)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு