Published:Updated:

வாடா! - சிறுகதை #MyVikatan

வஸ்தாது மாமா எங்களுக்கு கதை சொல்லும் சாக்கில் தன் நினைவு நதியின் அடியாழம் சென்று காலம் தன்னுள் திருடிக்கொண்ட அவரது இளமையின் நினைவோட்டத்தில் கலந்து நீந்தும் தருணம்..

Representational Image
Representational Image ( Credits : pixabay )
குறிப்பு : இது புதுவை மாநிலத்தின் காரைக்கால் இஸ்லாமியர்களின் பேச்சு வழக்கில் எழுதப்பட்ட வாழ்வியல் கட்டுரை

காரை அக்பர் வஸ்தாது மாமாவின் இளமைகால வீரசாகசங்களை கேட்டு ரசிப்பதற்காகவே மாலை நேரங்களில் சஹீது நானாவின் பெட்டிக்கடையில் ஜமா களைகட்டும் !

எழுபதைக் கடந்த வயதிலும் வாட்டசாட்டமாய் தளராது இருந்த வஸ்தாது மாமா வாலிபத்தில் பெரும் சண்டியர். புதுவை மாநிலம் பிரெஞ்சு காலனியாக இருந்த காலத்தில் சொல்தாக்களுக்கே தண்ணி காட்டியவர். மாமா நல்ல நிறம். நரைத்த புருவமும் இடுங்கிய கண்களுமாய் மேல் வயிற்றில் தூக்கி கட்டிய லுங்கியுடன் சட்டை இல்லாமல் சப்பணமிட்டு அமர்ந்து குபுகுபுவென புகை விட்டு சுருட்டு ஊதும் வஸ்தாது மாமாவை பார்த்தால் சிங்கப்பூர் சிரிக்கும் புத்தர் சிலை ஞாபகம் வரும்.

Representational Image
Representational Image

பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த காரைக்காலிலிருந்து பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்த பகுதிகளுக்கு அரிசி கடத்திய சம்பவங்களையும், இடுப்பு கைலி கட்டினுள் தங்கக் கட்டிகளை ஒளித்துக்கொண்டுவந்தபோது விசாரிக்க நிறுத்திய ``சொல்தாவிடம்" தனக்குத் தெரிந்த ஒன்றிரண்டு பிரெஞ்சு வார்த்தைகளைக் கூறி அவனை குழம்பச் செய்து தப்பித்ததையும் சுருட்டுப் புகை வழியும் வாயுடன் வார்த்தைகளில் ஏற்ற இறக்கம் சேர்த்து அவர் விவரிப்பதைக் கேட்பவர்கள் அவரது நினைவுவெளியில் தன்னையும் அறியாமல் நுழைந்து அந்த காலத்துக்கே சென்று விடுவார்கள் !

``அரசாலாத்தங்கரைகிட்ட வந்துட்டேன்... இடுப்புக்கைலியில ரொட்டி இருக்குது... திடீர்ன்னு ஒரு சொல்தா... மாமாவின் சங்கேத வார்த்தைகளைத் தெரிந்தவர்கள் ரொட்டி என்றால் தங்க பிஸ்கெட் என்பதை ஜமாவில் இருக்கும் புது தலைகளுக்கு குசுகுசுப்பாய் விளக்குவார்கள் ! " சட்டுன்னு கைலிய அவுத்து புடிச்சிக்கிடேன்... கை பிடிக்குள்ள ரொட்டி... போஞ்சூர் முஸியே அப்டீன்னு ஒரு சலாம் வச்சேன்... போஞ்சூர்... போஞ்சூர்... சே க்வா அப்டீன்னு கைலியை காட்டி அதட்டறான்... அரசலாறு புத்திக்குள்ள போச்சு ! ஆத்தங்கரையில ஒதுங்கிட்டு வரேன் முசியேன்னு ஒரு போடு போட்டேன் ! கைலியை ஒதறுங்கறான் ! ...அது ஒண்ணும் பிரச்னையில்ல. ஆனா நான் லங்கோடு கட்டலை முசியேன்னு மறுபடியும் ஒரு சலாம்... தலையில அடிச்சிக்கிட்டு தெகாஜ் அப்டீன்னான்... வுட்டா போதும்ன்னு எடுத்தேன் ஓட்டம் !

`` மாமா... அந்த வாடா கதையை... "

Representational Image
Representational Image

வஸ்தாது மாமா எங்களுக்கு கதை சொல்லும் சாக்கில் தன் நினைவு நதியின் அடியாழம் சென்று காலம் தன்னுள் திருடிக்கொண்ட அவரது இளமையின் நினைவோட்டத்தில் கலந்து நீந்தும் தருணத்தில், மிட்டாய் பாட்டிலில் கை ஊன்றி கடைக்குள் அமர்ந்திருக்கும் சஹீது நானா எடுத்துக் கொடுப்பார் ! `` ஓய் போம்புளே... அந்தக் கதையை எத்தனைவாட்டி சொல்றதாம் ? " மறுப்பதாக வார்த்தைகளில் காட்டிக்கொண்டாலும் வாடா கதை என்றதுமே புன்முறுவல் பூக்கும் வஸ்தாது மாமாவின் கண்களில் குறும்பு மினுமினுக்கும்! எத்தனையோ முறை கேட்டிருந்தாலும் வாடா கதையைக் கேட்காமல் எங்களின் அந்தக் கால அந்தி ஜமா நிறைவடைந்ததில்லை! கதை சொல்ல சஹீது நானாவின் கோரிக்கை மட்டும் போதாது... கூடியிருக்கும் அனைத்து இளவட்டங்களும் மாமாவையும் நானாவையும் மாறி மாறி பார்க்க, தன் கடையிலிருக்கும் சுருட்டுப் பண்டல்களில் ``ஒஸ்தியான" கட்டிலிருந்து ஒரு சுருட்டினை உருவி அதனுடன் ஒரு இரட்டைகிளி தீப்பெட்டியையும் சேர்த்து கதைக்கான சன்மானமாய் மிட்டாய் பாட்டிலின் மீது வைப்பார் சஹீது நானா.

``அது நல்ல மழகாலம்... அரிசி கைமாத்திவுடற வேலையும் சொணங்கி இருந்த நேரம்... புளிப்பாணம் ஊத்தி பொரிச்ச உருளக்கிழங்கு தொட்டுக்கிட்டு சோத்தை ஒரு புடி புடிச்சிட்டு அந்த மயக்கத்துல இழுத்துப் போத்திக்கிட்டு தூங்குன நான் அப்பத்தான் சாயந்தரமா எந்திரிச்சி வூட்டு வாசல்ல உக்காந்திருக்கேன்... ரெண்டு நாளா வுடாம பேஞ்ச மழ அப்பதான் நின்னு வானம் வெளுத்திருக்கு... ரொம்ப நாளைக்கப்புறம் வேலைவெட்டி இல்லாம விட்டேத்தியா இருந்ததுல மனசு கொஞ்சம் துள்ளலா இருந்திச்சு..."

Representational Image
Representational Image

கதையை ஆரம்பித்தபடி தான் அமர்ந்திருக்கும் பெட்டிக்கடையின் பக்கவாட்டு திட்டுசுவற்றிலிருந்து எக்கி, சஹீது நானா மிட்டாய் பாட்டிலின் மீது வைத்த சுருட்டையும் தீப்பெட்டியையும் எடுத்து கைலி மடிப்பில் பத்திரப்படுத்திகொண்டு கதையைத் தொடருவார் வஸ்தாது மாமா !

``தெருவுல வாடா வாடான்னு சத்தம்... மம்மசன்கனியிட மூத்த மக கூவிக்கிட்டு வாரா... ரெண்டு நாள் மழையில நின்னுபோன யாவரெமெல்லாம் அப்பத்தான் சுறுசுறுப்பா தொடங்கியிருக்கு... அடியேய் குட்டி ! என்னா நீ மரியாதை மட்டில்லாம வாடா வாடான்னு கூவிக்கிட்டு போற அப்டீன்னேன் ! " ``அட போ நானா... ஒனக்கு வேற வேலையே கிடையாது... போற போக்குல நீ அரிசி கொண்டு போறத சொல்தாக்காரன்கிட்ட சொல்லிடுவேன் ஆமா அப்டீன்னா அவ ! " ``நான் கேலி பேசறதும் அவ சிலிப்பிக்கிட்டு போறதும் வளமைதான்னாலும் அன்னைக்கி டக்குன்னு தெருவுல குதிச்சி... " சட்டென நிறுத்திவிட்டு கனன்று புகையும் சுருட்டை வஸ்தாது மாமா ஒரு இழுப்பு இழுக்க, " அன்னைக்கிங்க மாமா உண்மையிலேயே வாடி வாடின்னு கூவிக்கிட்டு அவ பின்னால நடக்க ஆரம்பிச்சிட்டாக ! "

விட்ட இடத்திலிருந்து எடுத்துக் கொடுப்பார் சஹீது நானா ! " அதேதாம்புள ! அவ வாடா வாடான்னு கூவ நான் ஒரு ரெண்டு தெரு தூரத்துக்கு வாடி வாடின்னு கூவிக்கிட்டு அவ பின்னாடியே போயிட்டேன்...! பாவம் ! அந்தப் புள்ள மெரண்டு போயி ஓட்டமும் நடையுமா போயே போயிட்டா ! " கதையை கூறிவிட்டு கண்களில் நீர் திரள குலுங்கிச் சிரிக்கும் மாமாவுடன் ஜமா மொத்தமும் சேர்ந்துகொள்ளும் !

Representational Image
Representational Image

நாகப்பட்டிணம், நாகூர், காரைக்கால் மற்றும் இவ்வூர்களை ஒட்டிய பகுதிகளில் வாழும் முஸ்லிம் சமூகத்தினரின் உணவு வகைகளில் ஒன்று வாடா! ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை இவ்வூர்களின் தெருக்களில் மாலை நேரங்களில் கையில் கூடை அல்லது தூக்குச்சட்டியுடன் வாடா வாடா என சிலர் கூவிப் போவதை வாடா எனும் பண்டத்தை அறியாதவர்கள் பார்த்திருந்தால் சற்று குழம்பித்தான் போயிருப்பார்கள் ! சோற்றுடன் அரிசி மாவை சேர்த்து அல்லது நன்றாக அரைத்த அரிசிமாவை கூழாக்கி அதனுடன் பொடியாக்கிய அரிசியை சேர்த்து ஆப்பமாவு அளவுக்கு புளிக்க வைத்து வடையாக தட்டி அதன் மீது இரால் அல்லது சென்னாக்குன்னி எனப்படும் சிறுஇரால்கள பொதித்து எண்ணையில் பொரிக்கப்படும் உணவு வாடா ! மிஞ்சிப்போன பிரியாணி சோறு அல்லது புலாவுடன் அரிசி மாவை சேர்த்து வாடா சுடுவதும் உண்டு ! வாடாவில் சாதா வாடா, உள்ளட வாடா என இரண்டு வகை உண்டு. மஞ்சள் தூள் மற்றும் மசாலா சேர்த்து எண்ணெய்யில் வதக்கிய வெங்காயத்தை மாவினுள் பொதித்து சுடப்படும் வாடா உள்ளட வாடா.

இரு வாடாக்களுக்கு இடையே இந்த வெங்காய வதக்கலை வைத்தும் விற்பார்கள். தேர்ந்த பக்குவத்தில் சுடப்பட்ட வாடா மேலே நன்கு முறுகலாகவும் உள்ளே சதைக்கட்டியாக மென்மையாகவும் இருக்கும். கஞ்சத்தனமான வாடா எண்ணெய்யிலிருந்து எடுத்தவுடன் உப்பலாக காட்சி தரும் ஆனால் சூடு ஆறியதும் உள்ளே ஒன்றுமில்லாமல் துவண்டுவிடும் ! சில வாடாக்களில் இராலுக்குப் பதிலாக அதன் தலையோ அல்லது வால்முனை தோலோ மட்டும்தான் ஒட்டிக்கொண்டிருக்கும் !

Representational Image
Representational Image

வாடாவை ``தேத்தண்ணியில்" நனைத்து சாப்பிட்டுவிட்டு வாடாவின் எண்ணெய் மினுமினுக்கும் சூடான `தேத்தண்ணியை' குடிப்பது தனிச்சுவை ! இவ்வூர்களில் வெளியூர் விருந்தாளிகளுக்குப் பரிமாறப்படும் `தேத்தண்ணியுடன்' வாடா கட்டாயமாக இடம்பெற்ற காலம் ஒன்றிருந்தது ! எங்கள் ஊர் வாடா தான் ருசி என அவரவர் பெருமை பேசிக்கொள்ளும் காரைக்கால்வாசிகளும் நாகூர்க்காரர்களும் தங்களின் ஊர்களுக்கு நடுவே இருக்கும் திருமலைராயன் பட்டிணம் வாடாவைப் பற்றி பேசினால் மட்டும் அதுதான் உள்ளதிலேயே மோசம் என கூட்டணியாகிவிடுவார்கள் !

ஒவ்வொரு வட்டாரத்திலும் வாழ்வாதாரம் இல்லாத அபலைப் பெண்களுக்கென சில கைத்தொழில்கள் உண்டு. அதில் அந்தந்த வட்டார உணவு பழக்கத்துக்கு ஏற்ப ஆப்பம், தோசை, இட்லி போன்ற எளிய பதார்த்தங்களைச் சுட்டு விற்பது பிரதானம். நான் மேற்சொன்ன ஊர்களின் வாழ்வாதரமற்ற எளிய இஸ்லாமிய பெண்களின் தொழிலாக விளங்குவது வாடா வியாபாரம். காலையிலும் மாலையிலும் தொழுகைப்பள்ளிகள் மற்றும் தர்ஹாக்களுக்கு அருகில் காலங்காலமாக வாடா விற்பனை செய்பவர்கள் உண்டு. நோன்பு காலம் மற்றும் கந்தூரி வைபவங்களின்போது போடப்படும் உணவு கடைகளிலும் வாடா விற்பனை மும்முரமாக நடக்கும். அப்படியான நாள்களில் " பெருநாளுக்கு மட்டும் தொழவரும் கூட்டம் தினசரி தொழுகையாளிகளைப் பின்னுக்குத் தள்ளிவிடுவதைப் போல" நிரந்த வாடா விற்பனையாளர்கள் ஒதுக்கப்பட்டுவிடுவார்கள் ! இட்லி, தோசை, ஆப்பம் போலன்றி தெருவோரங்களில் விற்கப்படும் வாடா எனக்குத் தெரிந்தவரை எந்த ஹோட்டலிலும் விற்கப்பட்டது இல்லை ! டீக்கடைகளுக்கு மிக அருகில் வாடா விற்கப்படுமே தவிர டீக்கடைகளில் வாடா சுட மாட்டார்கள் ! சோற்றுடன் அரிசி என்ற வாடாவின் மிக எளிய செய்முறை இதற்கு காரணமாக இருக்கலாம் என தோன்றுகிறது !

Representational Image
Representational Image
Credits : Unsplash

வாடா என்றதும் எனக்கு வஸ்தாது மாமாவின் நினைவுடன் மற்றொரு சிறுமியைப் பற்றிய எண்ணமும் மனதில் தோன்றும்... பீட்சாவும் பர்கரும் இறக்குமதியாகாமல் கோக்கும் பெப்சியும் கோலோச்சாத அந்தக் காலத்தில் சமோசா முட்டை போண்டாவுக்குப் பிறகு எங்களின் மாலை சிற்றுண்டி டீயும் வாடாவும்தான் ! அப்படி ஒரு நாள் மாலை மெய்தீன் பள்ளிக்கு அருகே நண்பர்களுடன் தெருவோரத்தில் நின்று வாடா சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது என் கண்ணில் பட்டாள் அந்த குழந்தை. வாடா விற்பனை செய்யும் தன் தாய்க்கு அருகில் அமர்ந்திருந்தாள். மேல்சட்டை இல்லாமல் பாவாடையுடன் அமர்ந்திருந்த அந்த ஐந்து அல்லது ஆறுவயது குழந்தையின் ஒரு பக்க மார்பு முழுவதும் எண்ணெய் சுட்ட தழும்பு. ``ஆமா நானா... போன வருசம் சுடு எண்ணெய் சட்டியை மேல கவுத்திக்கிட்டா... "

வாடா வாங்க நின்றிருந்த ஒருவருக்கு விளக்கிக் கொண்டிருந்தாள் அந்த குழந்தையின் தாய். இன்றும் வாடவை சாப்பிடும்போதெல்லாம் வஸ்தாது மாமாவின் ஹாஸ்யம் நினைவுக்கு வந்து புன்னகை தோன்றும் அதே நேரத்தில் அந்த குழந்தையின் ஞாபகத்தில் எண்ணெய் சட்டியின் சூடு என் இதயத்தில் இறங்கும். இன்று அவள் எங்கு எப்படி இருக்கிறாள், அவளது வாழ்க்கையாவது சுகமாக அமைந்ததா அல்லது அவளது தாயை போலவே அவளுக்கும் எண்ணெய் சட்டிதான் வாய்த்ததா என்பதாய் ஓடும் என் எண்ணங்கள் இதயத்தை கனமாக்கும் !

இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில வட்டார வழக்கு மற்றும் பிரெஞ்சு வார்த்தைகளுக்கான பொருள்.

புளிப்பாணம் - தேங்காய்ப்பாலுடன் புளி சேர்த்த ஒரு வகை ரசம் தேத்தண்ணி - தேனீர் பிரெஞ்சு வார்த்தைகள் சொல்தா - ராணுவவீரன் போஞ்சூர் - காலை வணக்கம் முசியே - ஐயா செ க்வா - இது என்ன என்று வினாவுதல் தெகாஜ் - போ என்பதற்கான மரியாதையற்ற பதம்

-முகம்மது ஜலாலுதீன் அக்பர்

My VIkatan
My VIkatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/