Published:Updated:

இழந்த சொர்க்கம்! - சிறுகதை #MyVikatan

விகடன் வாசகர்

பார்கவி, உன்னைப் பற்றி நான் இரண்டு கவிதைகள் எழுதி இருக்கிறேன். படித்து பார்த்து எப்படி இருக்கிறது என்று சொல் எனச் சொல்லிக்கொண்டே என்னிடம் இருந்த காகிதத்தை அவளிடம் நீட்டினேன்.

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

கி. பி. 1999, கணினி பொறியியல் படிப்பின் இறுதி ஆண்டு. இந்த ஆண்டு மட்டும் நன்கு முயற்சி செய்தால், வாழ்க்கை முழுக்க வசந்த காலம்தான். எனவே எப்பாடுபட்டாவது, பார்கவியை இந்த வருடத்திற்குள் என்னை காதலிக்கவைப்பதென முடிவெடுத்தேன்!! "பார்கவி"....பொங்காமல் இருக்கும் "பொங்கல்". மன்னிக்கவும்...."எரிமலை". அவள் ஒரு அபாய வளைவு, பால் வீதியின் இருண்ட பகுதி, வரையறுக்க முடியாத கணிதம், சுருக்கமாக, "பார்கவி".

Representational Image
Representational Image
Credits : Pixabay

கல்லூரியிலிருந்து 40 கி. மீ. தொலைவில் உள்ள ஒரு நகரத்தைச் சேர்ந்தவள். ஊர் பெயர், கள்ளிப்பாடி. அவளுடைய ஊர் முழுக்க செம்மண் ரோடுதான். தார் ரோட்டைப் பார்க்கவேண்டுமானால், மாட்டு வண்டியைக் கட்டிக்கொண்டு எட்டு கல் தூரத்தில் உள்ள கூட்ரோட்டுக்கு வரவேண்டும். அவளின் அழகில் மயங்காத விரிவுரையாளர்களே இல்லை எனலாம். மாணவர்களை பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை. ஒரு சக மாணவன், அவளுக்கு காதல் கடிதம் எழுதினான். அவனுக்கு "பதில் கடிதம்" HOD இடமிருந்து வந்தது. இவன், அவன் என்று இல்லை. எவனாக இருந்தாலும், HOD இடம் போட்டு கொடுத்துவிடுவாள். ஆனால், அவளை தொந்தரவு செய்தால் மட்டும்தான் இப்படி. மற்றபடி MUTE செய்த DVD Player போல இருப்பாள். இவளைத்தான் என்னைக் காதலிக்கச் செய்ய வேண்டும். Quite Difficult Task You Know?... ஆங்கிலம் பேச Warm Up செய்து கொள்கிறேன். சில உபாயங்களை வகுக்கிறேன். அதில் முதல் வழி, கவிதை எழுதி அதை அவளிடம் கொடுப்பது. இரவு முழுவதும் சிந்தித்தேன், கண்ணில் பட்டது அனைத்தையும் கவிதையாக்க முயற்சி செய்தேன்.

எழுதி, எழுதி வீடு முழுக்க குப்பை ஆனதுதான் மிச்சம். இருந்த குப்பைகளில், சுமாரான இரண்டு குப்பைகளை எடுத்துக்கொண்டு பார்கவியிடம் சென்றேன். பார்கவி, உன்னைப் பற்றி நான் இரண்டு கவிதைகள் எழுதி இருக்கிறேன். படித்து பார்த்து எப்படி இருக்கிறது என்று சொல் எனச் சொல்லிக்கொண்டே என்னிடம் இருந்த காகிதத்தை அவளிடம் நீட்டினேன்.

1. பார்கவி, நீ பார்த்ததனால், நானும் ஒரு கவி!! 2. நீர்மூழ்கி கப்பலான நீ, கப்பலானால்.... நான், நீர்மூழ்கிப்போவேன்!! படித்து விட்டு, அது சரி, கவிதைகள் எங்கே? எனக் கேட்டாள்.

இப்பொழுது இது ஒரு மொக்கை ஜோக். ஆனால் அப்பொழுது எனக்கு சிரிப்பும், அழுகையும் சேர்ந்து வந்தது. கவிதை, வர வழியில் காக்கா தூக்கிகிட்டுப் போய்டுச்சி என்று என்னுடைய தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்துவிட்டேன். கவிதை வழி, கேவலமாக முடிந்து விட்டதால், அடுத்த உபாயத்தை முடிவு செய்தேன். அது, பார்கவியின் உற்ற தோழியின் உதவியை நாடுவது. அப்படி ஒருவள் இருந்தாள். அவள் பெயர், பவித்ரா. இங்கு பவித்ராவைப்பற்றி ஒரு சில வார்த்தைகள். அவள் நடந்தால் சுமார் அறை ஏக்கர் நிலத்தை அவளுடைய புடவை பெருக்கி சுத்தம் செய்து கொண்டு போகும். அவளுடைய கண்ணாடி வழியாக நிலாவைப் பார்த்தால், நிலவில் இருக்கும் குளம் குட்டை கூட தெளிவாகத் தெரியும். சந்திரயான் தேவையேபடாது. பவித்ராவைப் பற்றி இப்படி வர்ணிக்கிற நான் அமீர் கான் மாதிரி இருப்பேன் என்று தவறாக நினைக்காதீர்கள். பவித்ரா கதை எழுதினால்தான் என்னுடைய லட்சணம் உங்களுக்கு தெரியும். அன்று காலை, பேருந்து நிறுத்தத்தில் பவித்ரா கல்லூரிப் பேருந்துக்காகக் காத்திருந்தாள். அவள் அருகில் சென்றேன், எப்படி ஆரம்பிப்பது...ஒரு வழியாக முடிவு செய்து, இப்படி ஆரம்பித்தேன்., "பவித்ரா, புடவைல நீ ரொம்ப அழகா இருக்க" முகத்தில் ஒரு சலனமே இல்லாமல் "ம்" என்றாள். ஏற்கெனவே அப்படிதான் நினைத்துக்கொண்டு இருப்பாள் போல இருக்கிறது.

Representational Image
Representational Image
Credits : Pixabay

பவித்ரா சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் எனச் சொல்ல நினைத்தேன்...ஆனால் வந்த வேலைக்கு வேட்டு வைத்த மாதிரி ஆகிவிடுமே என அடுத்த கணையைத் தொடுத்தேன். பவித்ரா, நீ ஏன் Contact லென்ஸ் அணியக் கூடாது? "இப்போ உனக்கு என்ன வேணும்?" எனச் சீறினாள். அடடா ஏதோ புரிந்து விட்டது போல இருக்கே, என நினைத்துக்கொண்டே, பவித்ரா, நீ எனக்கு ஒரு உதவி செய்யணுமே, பார்கவிகிட்ட என்னைப் பத்தி கொஞ்சம் எடுத்துச் சொல்லி......... "என இழுத்தேன், "எடுத்துச் சொல்லி....?" என முறைத்தாள்... ஒண்ணும் இல்லை நான் கிளம்பறேன் எனச் சொல்லி விட்டு அங்கு இருந்து எகிறி விட்டேன். மூன்றாவது உபாயம், நேராக பார்கவியிடமே காதலைச் சொல்லி விடுவது... யாரிடமும் பேசாத, பழகாத பார்கவி, என்னுடைய மூதாதையர்கள் செய்த புண்ணியத்தால், என்னிடம் மட்டும் சிரித்துப் பேச ஆரம்பித்து இருந்த நேரம். ஒருவேளை, பார்கவி என்னை காதலிக்கிறாளா?. காதல் இருந்தாள் கண்களில் தெரியும் என்றான் என்னுடைய நண்பன். அப்படியா, இன்னைக்கிப் பார்த்துடறேன். அன்று பார்கவியிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அவளுடைய இரண்டு கண்களையும் உற்று நோக்கினேன். இடது கண் சற்று வீங்கி இருந்ததுதான் தெரிந்தது. என்ன ஆச்சி பார்கவி Left கண் சிவப்பா வீங்கி இருக்கு. நேத்து நைட் Full லா என்னைப் பத்தி யோசிச்சிகிட்டு இருந்தியா? பின் விளைவுகள் பற்றி யோசிக்காமல் வாய் இப்படி உளறியது. உள்மனசில் HOD வந்து போகிறார். கோபமே இல்லாமல், "பூச்சி கடிச்சிடுச்சி" என்றாள் கூலாக. எனக்கு தைரியம் வந்தது. அடச்சே அந்த அதிர்ஷ்டக்கார பூச்சியா நான் இருக்கக் கூடாதா என்றேன். அந்தப் பூச்சிய நசுக்கி சாவடிச்சிட்டேன் என்றாள். இனிமேல் நாம் இங்கு இருக்க வேண்டாம் வாங்க அடுத்த Shot க்குப் போகலாம்.

ஆண் மயில் தோகை விரித்து ஆடி அதனுடைய காதலியை மயக்கும் எனக் கேள்விபட்டு இருக்கிறேன். எனக்கு தெரிந்தது எல்லாம் ஒரே Dance தான். அதை ஆடினால் எனக்குப் பின்னால் பிணம் வந்துகொண்டு இருக்கிறதென எல்லோரும் நினைப்பார்கள். அதனால் Dance...No Chance...ஆகி விட்டது. சரி...மீண்டும் கவிதையே எழுதிக்கொடுத்து விடலாமா....."கர்ர்ர்ர்ர்" என்று ஒரு சத்தம். என்னவென்று பார்த்தால், என்னுடைய மனசாட்சி என் மீது கடுங்கோபத்தில் முறைத்துக்கொண்டிருந்தது. கவிதை யோசனையும் Cut. இதற்கு நடுவில், நானும் பார்கவியும், நல்ல நண்பர்கள் ஆனோம். நான் என்ன சொன்னாலும் அவள் HOD யிடம் போட்டுக் குடுக்கவே இல்லை. எப்பொழுதும் படிய வாரிய தலையோடுதான் கல்லூரிக்கு வருவாள். ஆனால் அன்று, Zig-Zag பின்னல் போட்டு இருந்தாள். என்னால் இதைப்பற்றி அவளிடம் கேட்காமல் இருக்கவே முடியவில்லை.

Representational Image
Representational Image
Credits : Pixabay

விரிவுரையாளர் எதையோ விரிவாக எடுத்துரைத்துக்கொண்டு இருந்தார். நான் ஒரு துண்டுச் சீட்டில் இப்படி எழுதி பார்கவிக்கு அனுப்பினேன்... National Highways போல இருந்த உன் கூந்தல்... கள்ளிப்பாடி பாதை போல ஆனதன் ரகசியம் என்ன? இதைப் படித்து பார்த்தவள் என்னைப் பார்த்து சிரித்தாள். என் மனசுக்குள் மத்தாப்பு. அடுத்து எழுதினேன்... "நாளை மாலை 5 மணிக்கு Computer Lab க்கு வரமுடியுமா? " திரும்பிப் பார்த்து கண்களால் சரி என்றாள்.....அன்று தான் என்னுடைய தலை தீபாவளி. எப்படியும் நாளை, என்னுடைய காதலைச் சொல்லிவிடுவதென இருந்தேன்.

அடுத்த நாள், 4 மணிக்கே நான் Computer Lab ல் ஆஜர். 4:15, 4:30, 4:45 மணி ஓடிக்கொண்டே இருந்தது. 4:55, என்னுடைய இதயம் ஒழுங்கில்லாமல் துடிக்க ஆரம்பித்தது. 5:00, எனக்கு மயக்கமே வருவது போல இருந்தது. 5:15, பார்கவி இன்னும் வரவில்லை. 5:30, பார்கவி வந்து இருக்கவேண்டிய நேரம். 6:00, பார்கவி வரவேயில்லை. நொந்து போனேன். 7:00 மணி வரை காத்திருந்து விட்டு வீடு திரும்பினேன் அரைமனிதனாக. மறுநாள், என் முன் பார்கவி. நான் பேசுவதற்கு முன், ஒரு துண்டு காகிதத்தை என் கையில் திணித்தாள். பிரித்து படித்தேன். "நேற்று வராததற்கு என்னை மன்னித்து விடு". என் பூரிப்பிற்கு அளவே இல்லை. என்னையும் ஒரு பொருட்டாக நினைத்து, இப்படிச் சொல்கிறாள் என்றாள், அவளுக்கு என் மேல் நிச்சயமாக காதல் இருக்கிறதென "நானே" முடிவு செய்து கொண்டேன். அவள் மீது எனக்கு சற்றும் கோபம் இல்லை என்பதை தீர்க்கமாகச் சொல்ல நினைத்தேன். ஆனால் எப்படி?..காதலில் ஜெயித்து விட்ட அந்தக் கணத்தில் ஒரு கவி என்னுள் எழுந்தான்... அவன் இப்படி எழுதிக் கொடுத்தான்...

``உன்னைக் காற்றில் தேடினேன், கணிப்பொறியைக் கேட்டேன், ஆனால் காகிதத்தில் வந்தாய். மன்னித்தேன்...., தாமதமாய் வந்ததனால் காகிதத்தை!!’’

இறுதித் தேர்வு நடந்துகொண்டு இருந்தது. இன்னும் என் காதலைச் சொல்லவில்லை. கல்லூரி இறுதித் தேர்வு முடிந்த பிறகு ஒரு நாள் எல்லா மாணவர்களும் ஒன்று சேர்வதென முடிவாகி இருந்தது. அந்த நாளை குறித்து வைத்து இருந்தேன். காதல் கடிதமும் தயார். அந்த நாளும் வந்தது. பார்கவி காணவில்லை. சின்ன குழந்தை போல அங்கும் இங்கும் தேடிப்பார்க்கிறேன். ஆள் இல்லை. பவித்ராவிடம் கேட்கிறேன். பார்கவியா, அவளுடைய பாட்டி செத்து போய்ட்டாங்க அதனால அவ இன்னைக்கி வரல என்றாள். ஹும்...நல்ல நாளில் போவதற்கென்றே எல்லார் வீட்டிலும் ஒரு பாட்டி Reserve ல் இருப்பாங்க போல இருக்கு என்று நினைத்தபடி. நான் எதிர் திசையில் நடந்தேன். விதி, இன்னும் என் பார்கவியை என்னுடன் சேர்க்கவில்லை. இப்பொழுது கணினி பொறியாளனாக ஆகி விட்ட எனக்கு பக்கத்து இருக்கையில், பார்கவியைப் போலவே ஒரு மங்கை Code அடித்துக்கொண்டு இருக்கிறாள். இவளுக்கு ஒரு கவிதை எழுதி தரலாமா...கண்களை மூடி கவிதையைச் சிந்திக்கிறேன்..

கண்களில் நெருப்பும், கையில் செருப்புமாக என்னுடைய மனைவியின் பிம்பம்!! காதலிப்பதும், கவிதை எழுதுவதுமான சொர்க்கத்தை இழந்து விட்டது இப்போதுதான் புரிந்தது. மீண்டும் எழுதப் போகிறேன்.. என் மனைவிக்காக!!

-அசோக்.மு

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/