Published:Updated:

மீம் கிரியேட்டர்! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

சென்னை வருவதற்கான பயணக்கட்டணம், தங்கும் இடம், உணவு ஆகிய அனைத்துமே அவர்களுக்கு இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சென்னையின் ஐந்து நட்சத்திர விடுதியின் அரங்கத்தில் அவர்கள் குழுமியிருந்தனர். ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாத புதிய நபர்கள். சுமார் நூறு பேர் இருப்பார்கள். எதற்காக அங்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறோம் என்று இதுவரை அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களின் மெயில் ஐடி மூலமாக தொடர்பு கொள்ளப்பட்டு, பொன்னான வாய்ப்பு என இங்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

Representational Image
Representational Image

சென்னை வருவதற்கான பயணக்கட்டணம், தங்கும் இடம், உணவு ஆகிய அனைத்துமே அவர்களுக்கு இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால், எதற்காக இதெல்லாம்? இந்த கூட்டம் யாருக்காக? எதற்காக? என்று அவர்கள் யாருக்குமே புரியவில்லை. காத்திருந்தனர். அப்போது அரங்கின் கதவு திறக்கப்பட்டது. நாகரிகமாக உடை அணிந்த சிலர் மேடையில் வந்து அமர்ந்தனர். அவர்களில் தலைவர்போல் இருந்த ஒருவர் மைக் முன்பு வந்து நின்றார். அவர் என்ன கூறப் போகிறார் என கூட்டத்தில் இருந்த அனைவரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

தொண்டையைக் கனைத்துக்கொண்டு அவர் பேச ஆரம்பித்தார். ``நண்பர்களே நாம் அனைவரும் ஒரு புதிய செயல் திட்டத்துக்காக இங்கு கூடியுள்ளோம். அது என்ன என்பதை தெரிவிக்காமலேயே உங்களை இங்கு வரவழைத்துள்ளோம். அதற்கு முதலில் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் தமிழகத்தின் மிகப் பிரபலமான ஒரு அரசியல் கட்சியின் தொழில்நுட்பக் குழுவினர்.

Representational Image
Representational Image

எதிர்வரும் தேர்தலில் எங்கள் கட்சியை எப்படி வெற்றிபெறச் செய்வது என்பதற்கான வியூகங்களை வகுத்துக் கொடுப்பது எங்களுடைய முதன்மையான பணி. அதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் ஆக இருக்கலாம். ஆனால், உங்களுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்றால் நீங்கள் அனைவருமே தமிழகத்தின் மிகச்சிறந்த மீம் கிரியேட்டர்கள்! சரியா?" அவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இப்போதுதான் தாங்கள் எதற்காக இங்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கான ஒரு மேம்போக்கான ஐடியா அவர்களுக்குக் கிடைக்க ஆரம்பித்தது.

அவர் தொடர்ந்தார் ``நண்பர்களே நீங்கள் சமூகவலைதளங்களில் நிறைய மீம்களைப் போடுகிறீர்கள். அதனால் உங்களுக்குக் கிடைப்பது வெறும் லைக்குகளும், பாராட்டுகளும் மட்டுமே. உங்களைப் போன்ற மீம் கிரியேட்டர்களுக்கே உங்களை அடையாளம் தெரியவில்லை. இந்த கிரியேட்டிவிட்டி திறமையை வைத்து நீங்கள் ஏன் பணம் சம்பாதிக்கக் கூடாது?

Representational Image
Representational Image

நீங்கள் அனைவருமே படித்த இளைஞர்கள். போதுமான வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் பலர் இருக்கலாம். சரியான வேலைக்குச் சென்றுகொண்டிருப்பவர்களும் இருக்கலாம். ஆனால், பணத்தின் தேவை என்பது அனைவருக்குமே பொதுவானதுதான். நாங்கள் உங்களுக்குத் தரக்கூடிய செயல் திட்டம் மிகவும் சுலபமானது. நீங்கள் இப்போது செய்து கொண்டிருக்கக் கூடிய அதே பணியைத் தொடர்ந்து செய்யப்போகிறீர்கள். அதன் மூலம் பணம் சம்பாதிக்கப் போகிறீர்கள்.

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். எங்கள் கட்சி குறித்த பாசிட்டிவான மீம்களை உருவாக்குங்கள். அவ்வாறு உருவாக்கக்கூடிய மீம்களை நாங்கள் தரக்கூடிய மெயில் ஐடிக்கு அனுப்பி வையுங்கள். எங்கள் தொழில்நுட்பக் குழு அதை ஆய்வு செய்து அது சரியானதாக இருந்தால் உங்களுக்கு அனுமதி அளிக்கும். அந்த மீம்களை உங்களுடைய சமூக வலைதளங்கள் மூலமாக நீங்கள் பரப்புங்கள். அதற்குரிய பணம் உங்களுக்கு வழங்கப்படும். மிகச் சுலபமான பணி. எங்கள் கட்சியின் கொள்கைகளை மிக சுலபமாக மக்களிடத்தில் எடுத்துச் செல்ல இந்த வியூகத்தை நாங்கள் வகுத்துள்ளோம். இதில் உங்களுக்கு எந்த இடர்பாடும் இருக்க வாய்ப்பில்லை.

Representational Image
Representational Image

மிகவும் சுலபம். தினசரி சில மீம்களை கிரியேட் செய்கிறீர்கள். அதை நாங்கள் தரக்கூடிய மெயில் ஐடிக்கு அனுப்புகிறீர்கள். அதில் எங்கள் குழு ஒப்புதல் அளிக்கக் கூடிய மீம்களை நீங்கள் உங்கள் சமூக வலைதளங்களில் போஸ்ட் போடுகிறீர்கள். அதற்கான தொகை உங்களுக்கு வழங்கப்படும் அவ்வளவே! இதில் யாருக்காவது உடன்பாடு இல்லை என்றால் நீங்கள் இப்போதே இதிலிருந்து விலகிக்கொள்ளலாம். இதில் கட்டாயம் எதுவுமில்லை. ஆனால், இது ஒரு பொன்னான வாய்ப்பு. உங்களைப் பற்றி யாருக்கும் தெரியப்போவதில்லை. நீங்கள் வழக்கமாக உங்கள் பணிகளையே பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்கள். உங்களுக்குப் பணம் வந்துகொண்டே இருக்கப் போகிறது. மிகவும் சுலபமான வேலைதான்." அவர் பேசிவிட்டு தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார்.

அங்கிருந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். என்ன பதில் கூறுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இத்தனை நாள்களாக தன்னுடைய சுய விருப்பத்தின் அடிப்படையில், தன்னுடைய எண்ணங்களை கேள்விகளை, கிண்டல்களாகப் பரப்பிவந்த அவர்களுக்கு, ஒரு அரசியல் கட்சி இது போன்ற ஒரு கூட்டத்தைக் கூட்டி தங்களுக்கு இந்த மாதிரி ஒரு செயல்திட்டத்தை அளிக்கும் என்றும், அதற்காகப் பணமும் அளிக்கும் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை.

Representational Image
Representational Image

யாருக்குமே இதில் மறுப்பு தோன்றவில்லை. அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்! அவர்களுடைய வங்கிக் கணக்கு எண்கள் பெறப்பட்டன. அவர்களுக்கான மெயில் ஐடிகள் கொடுக்கப்பட்டன. கட்சியின் கொள்கை விளக்கங்கள் குறித்த கையேடுகள் வழங்கப்பட்டன. அவர்கள் அனைவரும் ஆடம்பரமான மதிய உணவை அருந்திவிட்டு மகிழ்வுடன் கலைந்து சென்றனர். அந்தக் கட்சியின் தொழில்நுட்பக் குழுவில் இருந்த ஒரு இளைஞனுக்கு இதில் உடன்பாடு இல்லை. இம்முறை வெற்றியடையும் என அவனுக்குத் தோன்றவில்லை. இச்செயல் திட்டம் ஏன் வெற்றி பெறாது என்பதற்கு பல்வேறு காரணங்களைப் பட்டியலிட்டு அவன் விளக்கினான். ஆயினும் அவனது கருத்து அங்கு மதிக்கப்படவில்லை.

பிரபல கட்சியின் இந்தச் செயல்திட்டம் அவர்களின் பிரதான எதிர்க்கட்சிக்கும் கசிந்தது. அவர்களும் இதே முறையைப் பின்பற்ற ஆரம்பித்தனர். மீம் கிரியேட்டர்களின் பணி தொடர ஆரம்பித்தது. ஒவ்வொரு நாளும் தங்கள் கற்பனைக்கு எட்டிய, குறிப்பிட்ட அரசியல் கட்சி குறித்த பாசிட்டிவ் மீம்களை உருவாக்கினர். அவற்றை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மெயில் ஐடிக்கு பகிர்ந்தனர். அவற்றில் சிலவற்றிற்கு ஒப்புதல் கிடைத்தது. அவற்றை தங்களுடைய சமூக வலைதளங்களில் பரப்பினர்.

Representational Image
Representational Image

இரு கட்சிகளுமே போட்டி போட்டுக்கொண்டு சமூக வலைதளங்களில் முட்டி மோதின. தேர்தல் முடிந்து முடிவுகள் வந்தன. யாருமே எதிர்பாராத வகையில் இரண்டு கட்சிகளுமே படுதோல்வியைச் சந்தித்திருந்தன. புதியதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்திருந்தது. இரு கட்சிகளின் தொழில்நுட்ப அணியினருக்கும் இதை ஏற்கவே முடியவில்லை. இது எப்படி என மூளையைக் குழப்பிக்கொண்டனர். இந்த செயல்திட்டம் பலன் அளிக்காது எனக் கூறிய அந்த இளைஞனுக்கும் இதில் குழப்பம்தான். அவன் எதிர்பார்த்தபடி இச்செயல் திட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது. ஆனால், இரு கட்சிகளும் எப்படி தோற்றன என அவனுக்குப் புரியவில்லை.

தனது லேப்டாப்பை எடுத்து வைத்து மீம்களை ஆய்வு செய்யத் தொடங்கினான். நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின் அவன் அந்த நுட்பத்தைக் கண்டறிந்தான். இரு கட்சிக்குமே ஒவ்வொரு பாசிட்டிவ் மீமுக்கும் அடுத்த நொடியே ஏராளமான நெகட்டிவ் மீம்கள் போடப்பட்டு இருந்தன. மீமின் கான்செப்ட் புரிந்து அடுத்த நொடியே பதில் போட யாராலும் முடியாது. பாசிட்டிவ் மீமும் நெகட்டிவ் மீமும் ஒரே நபர் உருவாக்கினால் மட்டுமே இது சாத்தியம். ஆமாம்! ஒவ்வொரு மீம் கிரியேட்டரும் அவரின் மீம்களுக்கு அவரே பேக் ஐடி மூலம் எதிர் மீம்கள் போட்டுள்ளனர்.

மீம் கிரியேட்டர்! - சிறுகதை  #MyVikatan

என்றுமே கிரியேட்டர்கள் சுயமாகத்தான் சிந்திப்பார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும், கட்சித் தொண்டர்கள் போல தலைமை கூறுவதை எல்லாம் அவர்கள் கேட்க மாட்டார்கள். அவர்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தவே முடியாது. எனவே, இந்தச் செயல் திட்டம் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்பதைத் தான் எடுத்துக் கூறியும் ஏற்காத தன் அணி சீனியர்களுக்கு தோல்விக்கான காரணத்தை விளக்க வேகமாகச் செல்ல ஆரம்பித்தான் முன்னாள் மீம் கிரியேட்டரான அந்த இளைஞன்!

-அகன்சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு