Published:Updated:

ஷிப்ட் + டெலிட் = கொலை! - (சிறுகதை) #MyVikatan

``ஸோ இந்த ரெண்டு நாள்ல இந்த டார்கெட்ட முடிச்சே ஆகணும்... இல்லனா நீங்க வீட்டுக்குப் போகலாம்... நானும் தான். என்ன சொல்றீங்க?”

Representational Image
Representational Image

``கோர்ட்டுக்கெல்லாம் போவேணாம், இங்கயே முடிசிச்சிக்கலாம்னு சொல்லுய்யா... கொஞ்ச நேரத்துல நானே ஸ்டேஷனுக்கு வரேன்.. வெயிட் பண்ணச் சொல்லு”

செல்போனில் பேசியபடியே அந்த அரசு மருத்துவமனையினுள் நுழைந்தார் காவல் ஆய்வாளர் உதயக்குமார். செல்போனை அணைத்தபடியே அங்கு சற்று தூரத்தில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த காவலரை அழைத்தார்...

``சுந்தரம்!...”

``சார்…” என்றபடி அவர் ஓடிவர..

``என்னாச்சி? எதும் தகவல் கெடைச்சுதா? யாரு அந்தாளு?”

``இப்போதான் சார் விசாரிச்சிட்டு இருந்தேன்… அதோ அந்தாளு பேரு பரமசிவம்... சிக்னல் பக்கத்துல டீக்கடை வச்சிருக்காரு. அவர் சொன்ன தகவல்படி… செத்துபோனவன் பேரு சின்னப்பன். அவனுக்கு இங்க யாரும் சொந்தபந்தம் இல்லை.. ஏரியா கடைகள்ல எடுப்புவேலை செஞ்சிகிட்டு இருந்துருக்கான். சரியான வருமானம் இல்ல. குடும்பத்த கவனிக்காம கட்சி, கொடின்னு சுத்திக்கினு இருந்துருக்கான். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவன் பொண்டாட்டியும் பிரிஞ்சிபோய் வேலூர்ல அவங்க சொந்த ஊர்லையே இருந்துகிட்டாளாம். சம்பவத்தன்னிக்கி டீக்கடைக்காரர் வீட்ல ஏதோ விசேஷம்ன்னுட்டு சீக்கிரமாவே கடைய சாத்திட்டு போயிட்டாராம்.. நடந்தது எதும் தெரியாதுங்கறார்“ என்று மூச்சு விடாமல் ஒப்பித்ததை தனது செல்போனின் திரையை தடவியபடியே கேட்டுகொண்டிருந்த உதயக்குமார், அதனை அனைத்து பையில் போட்டபடி…

Representational Image
Representational Image

``பாடிய பாக்கலாமா?” என்று கேட்க... அந்தக் காவலர் ஒருபுறம் அவரை அழைத்துச்செல்கிறார். அந்த அறையைத் திறந்ததும் ஒருவிதமான தீய்ந்த வாடை வெளிவரவும்...உதயக்குமார் தனது கைக்குட்டையை மூக்கில் அழுத்திக்கொண்டு… ``டோரக் க்ளோஸ் பண்ணுய்யா” என்றபடி அந்த அறையின் உள்ளே செல்கிறார். அங்கே ஒரு ஸ்ட்ரெச்சரில் முழுதும் வெள்ளைத்துணியால் சுற்றப்பட்டிருந்தது அந்த உடல். உதயக்குமார் அந்தக் காவலரிடம் அந்த வெள்ளைத்துணியை விளக்கும்படி சைகையில் காட்டவும், அது விலக்கப்பட்டது. அந்த உடல் பாதி எரிந்த நிலையில் பார்ப்பதற்கு விகாரமாக இருந்தது.

இரு நாள்களுக்கு முன்… ``இன்னிக்கி முன்வரிசைல இடம் கிடைக்கக் கூடாதுடா சாமி... எல்லாம் ஃபுல்லாயிருக்கணும்” என்று வேண்டிக்கொண்டே ஓட்டமும் நடையுமாக அலுவலத்தினுள் நுழைந்தான் மணிமாறன். இரண்டாவது தளத்தில் இருக்கும் அவனது அலுவலகத்துக்கு செல்ல தினமும் லிப்டில் பயணிக்க வேண்டும். அதுஒரு மேலாண்மை சேவை நிறுவனம். பலவகையான நிதித்தகவல்களை கணினியில் பதிவேற்றும் `டேட்டா என்ட்ரி’ எனப்படும் பிரிவில் இரு ஆண்டுகளாக அடிமட்டத் தொழிலாளியாக இருந்தான் மணி. தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து பிழைப்புக்காக வந்து சென்னையின் புறநகரில் உள்ள ஒரு பகுதியில் சிறு அறையில் தன் நண்பர்கள் மூவருடன் தங்கியிருக்கிறான். ஊரில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை நம்பியிருந்த இவனது குடும்பம், விவசாயம் பொய்த்தப்பின் இவனின் வருமானத்தை நம்பியிருக்க வேண்டிய சூழல். தினமும் காலை 7:30 மணிக்குத் தயாராகி பேருந்தில் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் பயணித்து நகரின் மையத்திலிருக்கும் அந்த அலுவலகத்துக்கு வருவான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சேரும்போது ஆறாயிரம் ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தவன், தனது இடைவிடாத உழைப்பின் மூலம் தற்போது ஏழாயிரத்து ஐந்நூறு ரூபாய் பெறுகிறான். ஒன்றிரண்டு நாள்கள் சில நிமிடங்கள் தாமதமாக வந்தால்கூட அந்த நாளை பாதி வேலை நாளாக கணக்கில் கொண்டு சம்பளம் குறைந்துவிடும். மேலும், பண்டிகை என்றாலோ, உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்தாலோ இருமடங்கு சம்பளம் குறைந்துவிடும். இதுபோன்ற காரணங்களால் மணி ஒருநாளும் விடுப்பு எடுக்கவே மாட்டான். இந்த இரு வருடங்களில் நான்கைந்து முறையே ஊருக்குச் சென்றிருப்பான். பணிநேரம் மாலை 7 மணி வரைதான் என்றாலும், பெரும்பாலும் அவன் புறப்பட இரவு 9:30 மணி ஆகிவிடும். இடைப்பட்ட நேரத்தில் மதிய உணவுக்காக கொடுக்கப்படும் முப்பது நிமிடங்களைத் தவிர மற்ற நேரங்களில் கணினியுடன் இணைக்கப்பட்ட ஒரு இயந்திரமாகவே இவன் இருக்க நேரிடும். அங்கே மலைபோல் குவிக்கப்படும் மேலாண்மை சார்ந்த மனுக்களை தட்டச்சு செய்து கணினியில் பதிவேற்ற வேண்டும். அதிலும் முன்வரிசையில் அமர்ந்தால் ஏற்கெனவே கொடுக்கப்பட்டவற்றை முடிக்கும் முன்பே அடுத்தடுத்து மனுக்களைக் குவிப்பார்கள். பின் வரிசை என்றால் சில விநாடிகள் ஓய்வு கிடைக்கும். நீண்ட நேரம் பணிபுரியும் நாள்களின் பேருந்து பயணத்தின்போதும், நள்ளிரவு உறக்கத்தின்போதும் எண்களும், முகவரிகளும் கண்களிலிருந்து மறையாது.

Representational Image
Representational Image

அலுவலகத்தின் வாயிலில் இருந்த கருவியில் தனது பெருவிரலை பதியச் செய்துவிட்டு, ``நல்லவேல ரெண்டு நிமிஷம் லேட்டா வந்திருந்தா ஆஃப்டே ஆயிருக்கும்” என்றபடி உள்ளே சென்றான். அவன் நினைத்தது போலவே பின்வரிசையில் இடம் கிடைத்தது. அமர்ந்த உடன் அருகிலிருந்தவனைப் பார்த்து சிரித்துக்கொண்டான். பணியில் மூழ்கினான். மதிய உணவுக்காக வெளியேறும் முன் இவர்களின் மேற்பார்வையாளருடன் சந்திப்பு…

``ஹலோ கய்ஸ், எப்டியிருக்கிங்க?”

``...”

``டார்கெட்ஸ் எப்டி போகுது?”

“...”

``இந்த ஸ்பீட் பத்தாது... இந்த வீக்ல நாம முடிக்கவேண்டிய டார்கெட்ல பாதிய கூட இன்னும் ரீச் பண்ணல. இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு.. என்ன பண்ணலாம்”

``...”

``நீங்க வொர்க் பண்ணலன்னு சொல்லல... இது பத்தாது... இன்னும் ஸ்பீட் வேணும் அதான் விஷயம்”

“...”

``ஸோ இந்த ரெண்டு நாள்ல இந்த டார்கெட்ட முடிச்சே ஆகணும்... இல்லனா நீங்க வீட்டுக்குப் போகலாம்... நானும்தான். என்ன சொல்றீங்க?”

``...”

``ஸீ, உங்களுக்காக நா மேனேஜர்கிட்ட பேசி பர்மிஷன் வாங்கியிருக்கேன். இந்த டூடேஸ் நாம டேநைட் வொர்க் பண்றோம். நீங்க இப்போ வீட்டுக்கு கெளம்புங்க... நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு நைட் பத்து மணிக்கு வந்தா போதும்... மார்னிங் இங்கயே டிஃபன் அரேன்ஜ் பண்றாங்க. சாப்டுட்டு திரும்ப வொர்க் பண்ணிட்டு மதியம் நீங்க வீட்டுக்குக் கெளம்பலாம். அகைன் நைட் பத்துமணி... ஓகே ?”

என்று கூறிமுடித்த உடன், கூட்டத்தில் சிறு சலசலப்பு வர,

``யாருக்காவது ப்ராப்ளம் இருக்கா? இருந்தா சொல்லிடுங்க…”

``...”

``எதுவும் பண்ணமாட்டோம்…`ஷிப்ட் + டெலிட்’ தான்...ஹா ஹா...ஐ மீன் வெளிய அனுப்புறது. செட் ஆகலன்னா வேற என்ன செய்ய முடியும்?”

அதைக் கேட்டு அனைவரும் அமைதியாக இருக்க…

``ஓகே தாங்க்ஸ் ஃபார் யுவர் குவாப்பரேஷன்... சி யு.. பை”

இன்று

அந்த உடலைப் பார்த்த உதயக்குமார், தனது கைக்குட்டையை மூக்கிலிருந்து எடுக்காமல்

``என்னைய்யா இது…” என்றபடி சைகையால் மூடச்சொல்லிவிட்டு வெளியில் வருகிறார்கள்.

``இந்தாளுக்கு வேண்டாத எதிரிங்க யாராச்சும்....”

``விசாரிச்சிட்டேன் சார்... அந்த அளவுக்கு ஆளு வொர்த் இல்ல போல”

``பின்ன எதுக்குய்யா இப்டி பப்ளிக் ப்ளேஸ்ல…” என்று கூறி முடிக்கும் முன்பே சுந்தரம் சற்றே குரல் தாழ்ந்து…

``சார் நீங்கங்கறதால பர்சனலா உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும் சார்” என்று கூற, உதயக்குமார் ஒருமுறை சுற்றிலும் பார்த்தபின்..

``கோர்ட்டுக்கெல்லாம் போவேணாம், இங்கயே முடிசிச்சிக்கலாம்னு சொல்லுய்யா... கொஞ்ச நேரத்துல நானே ஸ்டேஷனுக்கு வரேன்.. வெயிட் பண்ண சொல்லு”

``சொல்லுங்க என்ன விஷயம்?”

``இதுல ஒருசில பெரிய புள்ளிங்க பேரு அடிபடுது சார்.. நம்ம ஸ்டேஷன்லகூட பேசிக்கிட்டாங்க சார்.”

``என்ன சொல்றீங்க.. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சுந்தரம்”

``நேத்து ஆளுங்கட்சித் தலைவர அந்தாளு கண்டபடி பேசிட்டான்ல, அவன் மேல ஸ்ட்ராங்கா கேசபோட்டு உள்ளத்தள்ள யாரோ பெரும்புள்ளிங்க சொன்னபடி வட்டத்துலதான் யாராச்சும் பண்ணியிருப்பாங்கன்னு பேச்சு அடிபடுதுங்க சார்.. அதோட இன்னிக்கி போஸ்டர் கூட..” என்று முடிக்காமலேயே அவர் ஒருபுறம் சுட்டிக்காட்ட… அங்கே இருவர் சுவரொட்டிகளை வேகமாக ஒட்டிக்கொண்டிருந்தனர். அதில்..

[ தங்கத்தலைவருக்காக உயிர் நீர்த்த மாவீரன் சின்னப்பன் ஆத்மா சாந்தி அடைய அந்த அரசியல் நாகரிகம் அறியா அற்பனை கைது செய்க... ]

என்ற வாசகத்துடன் கீழே சிலரின் பெயர்களும் கொடுக்கப்பட்டிருந்தன.

நேற்று காலை

சிக்னலை ஒட்டிய அந்த டீக்கடையில்…

``என்ன சின்னப்பா, எப்டியிருக்க? ரொம்ப நாளாச்சே பாத்து…”

``எனக்கென்ன... நீ எப்டிண்ணே இருக்க? வெளியூர்லையே செட்டில் ஆகிட்டியோன்னு நெனைச்சேன்”

``இல்லப்பா, நமக்கு அங்கெல்லாம் செட் ஆவாது… ஆமா நீ எப்டி இருக்க? பொண்டாட்டி புள்ள எல்லாம் சவுக்கியமா?”

``அட ஏன்ணே நீ வேற.. அவள தொரத்தி ரெண்டு வருஷம் ஆச்சே... அதுலாம் நமக்கு சரிப்பட்டு வராது..”

`என்னடா சொல்ற? நல்ல பொண்ணாச்சே அவ..”

``அதுக்கு நாம என்னண்ணே பண்ண முடியும்? எப்போ பாரு வேலைக்குப்போ… குடும்பத்த பாருன்னு ஒரே நச்சரிப்புண்ணே..”

``அதுல என்னடா தப்பு? நீ எந்த வேலைக்குப் போன?”

Representational Image
Representational Image

``நமக்கு அதெல்லாம் செட்டாவாதுண்ணே… நாம கட்சி, கொள்கைன்னு சுத்துற சாதி... நமக்கு எதுக்குண்ணே குடும்பம் கொழந்தயெல்லாம்? நாமெல்லாம் என்னைக்குமே சொதந்தரமா இருக்கணும்ண்ணே ”

``என்னடா பைத்தியக்காரன் மாதிரி பேசற? உன் தலைவனுக்கும் குடும்பமெல்லாம் இருக்குல்ல?.. சரி இனி உன்கிட்ட பேசி என்ன புண்ணியம்.. நா கெளம்புறேன்..” என எழுந்திருக்க..

``இருண்ணே ரொம்ப நாள் கழிச்சி வந்துருக்க.. கொண்டாட வேணாமா?”

``பண்றேண்டா... அடுத்த வாரம்தான் காசு கைக்கு வருது... பொறுமையா பண்ணுவோம்”

``அது உன் ட்ரீட்டு.. இன்னிக்கி என்னோட ட்ரீட்டுண்ணே, நைட்டு இங்க வந்துடு”

``என்னடா.. கைல காசு வெளையாடுது போல? எங்க கைய வச்சே?”

``அதெல்லாம் ஒன்னுமில்லண்ணே.. இன்னிக்கிதான் நம்ம செயலாளர் கணேசன் வந்தாப்ல… அவருக்கு கட்சில ஏதோ போஸ்டிங் வந்துருக்குன்னு எல்லாருக்கும் பார்ட்டி வச்சி சந்தோஷமா இருக்கச் சொல்லி ஒரு அமௌண்ட்ட குடுத்துட்டு போனாப்ல”

``ஓ அதான் காலைலயே கொஞ்சம் வித்தியாசமா இருக்கியா ...”

``இதெல்லாம் சும்மாண்ணே... இன்னிக்கி நைட்டு இருக்கு கூத்து... நீ வா பாக்கலாம்”

நேற்று இரவு

இரவு மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.

மணிமாறன் மதியம் வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்துவிட்டு இரவு பணிக்காக புறப்பட்டு வந்தான். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அலுவலகத்தை நோக்கி வேகமாக நடந்தான். பகல், இரவு என தொடர்ந்து வேலை இருந்ததால் மிகவும் சோர்ந்து காணப்பட்டான். இருவருடங்கள் வேலை பார்த்த அவனுக்கு மேற்பார்வையாளர் கூறிய அந்த வார்த்தைகள் அவ்வளவு எளிதானவை அல்ல. அவனது மனம் `ஷிப்ட் + டெலிட்’ என்றே துடித்தது. இந்த வேலையை விட்டுவிடலாமா என்று ஒருகணம் யோசித்தான். அவனது குடும்பம் ஒரு விநாடி மனதில் வந்து மறைய, யோசனையை மறந்துவிட்டு ஒருவித மன இறுக்கத்துடன் எந்தப் புறமும் பார்க்காமல் சென்றுகொண்டிருந்தான். சில நிமிடங்களில் அவன் அலுவலகத்தை அடைந்தாக வேண்டும்.

அந்த சிக்னலை கடக்கும்போதுதான் அவனைக் கண்டான் மணிமாறன்.

Representational Image
Representational Image

அவன் அளவுகடந்து மது அருந்திவிட்டு சுயநினைவின்றி அந்த நடைபாதையின் குறுக்கே கிடந்தான். இரவு நேரம் என்றாலும் அது முக்கிய சாலை என்பதால் கூட்டம் குறையவில்லை. அவ்வழியே வருவோர் போவோர் அவனைக் கடக்க ரொம்பவே சிரமப்பட்டனர். நடைபாதையை விட்டு இறங்கி சாலையில் நடந்து பின் அதன் மேல் ஏறி நடந்தனர். அந்த நொடியில் சட்டென மின்சாரம் துண்டிக்கப்பட அந்தப் பகுதி முழுதும் இருளானது.

அப்போது மணியும் அவனை நெருங்க... அவனது பாதையில் தடையாய் கிடந்தவனைக்கண்டு .. சட்டென எரிச்சலைந்தான்… `ஷிப்ட் + டெலிட்’...

அவன் சுற்றும் முற்றும் பார்க்க.. அந்த டீக்கடையோரம் இருந்த இரும்பு டின் வாகனங்களின் ஒளியில் மின்னியது. அவன் அதனருகில் சென்றதும் அதில் கசிந்த வாசனையில் அது ஒரு எரிபொருள் என்பது தெரிந்தது. அந்த ஒருநொடியில் அவன் மிருகத்தனமாய் செயல்பட்டான். சட்டென அதைத் திறந்து பாதையில் கிடந்தவன் மீது அதைச் ஊற்றி நனைத்தான். பின் டீக்கடையில் எரிந்துகொண்டிருந்த மெழுகுவத்தியை அவன் மீது தூக்கி எறிந்துவிட்டு அடுத்த சந்தில் புகுந்து நடந்து மறைந்தான்...

கீழேகிடந்தவனின் அலறல் அப்பகுதி முழுதும் கேட்டது. இதைக்கண்ட அருகிலிருந்த கடைக்காரர்கள் சட்டென கடையை மூடிவிட்டு இடத்தைக் காலிசெய்தனர். தூரத்தில் நின்றுகொண்டிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் ஓடிவந்தார்.

கதை : தியாகராஜன்