Published:Updated:

பெஹெலா பெஹெலா பியார்ஹை - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

- தீபா நாகராணி

பெஹெலா பெஹெலா பியார்ஹை - சிறுகதை

- தீபா நாகராணி

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

கண்ணில் முதலில் தட்டுப்பட்டது அந்த இடது கைப் பெருவிரல் நகம். அரை இன்ச் நீளத்திற்கு இருந்தது. மீதி நான்கு விரல் நகங்களும் ஒட்ட வெட்டப்பட்டிருந்தன. கறுத்த, நீண்ட கையில் முழங்கை வரை சட்டை மடித்து விடப்பட்டிருந்தது. பக்கவாட்டில் ‘அப்படியே அவனுடைய கை மாதிரியே இருக்கே’ என யோசித்தாள் சங்கரி. அந்தக் கை சட்டைப் பையிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தது. அந்தப் பணத்தைப் பெற்ற மற்றொரு கைக்கு உரியவர் சேலை உடுத்தியிருந்தார். வாங்கிய வாழைப் பழங்களுக்கான தொகையைக் குறைக்கச் சொல்லி பேரம் பேசுவதுபோலத் தெரிந்தது. அருகில் இருந்த நீள நகம் உடையவரிடம் அவ்வப்போது சிரித்துப் பேசிய அந்தப் பெண் எதிர் திசையில் இருந்த கடையைச் சுட்டிக்காட்ட, முழுமையாய்த் தெரிந்தது முகம். தினகரன். பத்தடி தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த ஆடி காரின் உள்ளே அமர்ந்தவாறே பார்த்த சங்கரியின் முகத்தில் கலவையாய் உணர்வுகள். இருபத்தைந்து வருடங்களுக்கு முன் தன்னிடம் முதன்முதலாய்க் காதலைச் சொன்ன தினகரனேதான் அவன். மும்பையில் வசிக்கும் சங்கரி, இந்த முறை மதுரை வருகையின்போது எதிர்பாராமல் தினகரன் எதிரில் இருப்பதை நம்ப முடியாமல் திகைத்துப்போனாள்.

பெஹெலா பெஹெலா பியார்ஹை - சிறுகதை

ஐம்பதுகளில் இருந்தார் அவர். அவர் மனைவிக்கும் அதே வயதிருக்கும்போல. இருவரும் எந்தச் சாயமும் பூசாமல் நரைத்த கேசத்தோடு இருந்தனர். அதே உதட்டை மூடி உள்ளுக்குள் சிரிக்கும் சிரிப்பு அப்படியே இருந்தது தினகரனுக்கு. முகத்தில், தேகத்தில் எட்டிப்பார்க்கத் தொடங்கிய முதுமை முள்ளாய் இருந்தாலும் அவர்கள் இருவரிடையே இருந்த அன்னியோன்னியம் ரோஜாவாய் மணத்தது சங்கரிக்கு.

இமைக்காமல் தினகரனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பழக்கடையிலிருந்து நகர்ந்து பக்கத்தில் இருந்த காய்கறிக் கடைக்குச் சென்றனர். ஒரு பிளாஸ்டிக் தட்டை எடுத்து அதில் வெண்டைக்காய்களை ஒடித்து, சேகரித்துக் கொண்டிருந்தார் அந்தப் பெண். தினகரன் அவளுக்கு உதவிக்கொண்டிருந்தார். இலேசாக கூன் போட்டு இருந்தார்.

பதினோராவது படிக்கும்போது ஜெராக்ஸ் எடுப்பதற்காகச் சென்ற ஒரு நாளில்தான் தினகரனை கவனித்துப் பார்த்தாள் சங்கரி. அப்போதே அவனுக்கு முப்பதை நெருங்கும் வயது. யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் தொடர்ந்து தட்டச்சு செய்ய, நகலெடுத்துக் கொடுக்க என இருப்பவனின் அருகில் கடைக்கான தொலைபேசி இருக்கும். கருகருவென மெலிந்து இருக்கும் அவன் முகம் சின்னக் கண்களுடன், சீராய் வெட்டப்பட்ட முடியுடன் பார்க்கும்படி இருக்கும். இவளும் கீதாவும் அங்கு அடிக்கடி செல்வதுண்டு. கடையின் வெளியே கிடந்த பலகையின் மூலம் தொலைபேசி எண்ணைக் குறித்துக்கொண்ட சங்கரி, அன்று மாலையே வேறொரு இடத்திலிருந்து போன் செய்தாள். ஜெராக்ஸ் கடைப் பெயரைச் சொல்லி அவன்தான் பேசினான். ஓரிரு விஷயங்கள் பொதுவாய்க் கேட்டவள், உங்க பேர் என்ன எனக் கேட்டாள். பெயரைச் சொன்னான். இவள் பெயரைக் கேட்டவன், பள்ளிக்கூடத்தில் படிக்கிறாள் எனச் சொன்னவுடன், ‘நல்லா படி’ எனச் சொல்லி போனை வைத்துவிட்டான். கடையின் உரிமையாளர் இல்லாத மாலை நேரங்களில் இவன் மட்டும் இருப்பதைப் பார்த்ததும் அடுத்த தெருவில் இருக்கும் பொதுத் தொலைபேசியில் ஒரு ரூபாய்க் காசுகளைத் தயாராய் வைத்துக்கொண்டு டயல் செய்ய ஆரம்பித்துவிடுவாள் சங்கரி. அவனும் ‘யார்’ எனத் தெரியாமலே பேச்சைத் தொடர்ந்தான்.

இவளுக்கு அந்தக் குரலில் ஒரு வசீகரம் இருப்பதாய்ப் பட்டது. தொலைபேசியில் பேசவும் பிடித்திருந்தது. வகுப்பில் ஒவ்வொருத்தியும் பையன்கள் பற்றி ரகரகமான கதைகள் சொல்ல, தன் பங்குக்கு ஒரு கதையைத் தேத்த வேண்டிய கட்டாயமும் அவளுக்கு இருந்ததாய் நினைத்தாள். ‘இன்று இந்தச் சட்டை பொருத்தமாய் இருந்தது’, ‘புதிதாய் வளர்த்த தாடி சகிக்கவில்லை’ என எதையாவது தொலைபேசியில் சொல்லிக்கொண்டே இருப்பாள்.

முதலில் பட்டும் படாமல் பேசிக் கொண்டிருந்தவன், நாள்பட, ‘இன்னைக்கு மதியம் என்ன சாப்பாடு உங்க வீட்டில’ என்கிற அளவில் பேச ஆரம்பித்துவிட்டான். இவள் நெருங்கிய உறவின் துக்கத்தில் பங்கேற்க ஊருக்குச் சென்ற இரண்டு நாள்களாய் அடிக்கடி தொலைபேசியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மூன்றாவது நாள் மாலை நேரத்தில் சங்கரி அழைக்க, சொல்லாமல் சென்றதற்காக வெகுவாய்க் கடிந்து கொண்டான்.

பொதுவாக போனில் பேசுகையில் கீதாவும் உடன் இருப்பாள். அவள் இல்லாத நாள்களில் அன்று பேசியதை அப்படியே அடுத்த நாள் சொல்லாவிட்டால் சங்கரிக்குத் தலை வெடித்துவிடும். கேட்டுக் கேட்டு கீதாவுக்குத் தலை வெடிக்கும்.

பள்ளிக்கூடம் விட்டு வரும் வழியில் எந்தெந்த இடங்களில் எல்லாம் பொதுத்தொலைபேசி மையங்கள் இருக்கின்றன என்கிற ஆராய்ச்சியெல்லாம் செய்திருந்தவள், புதிதாய் ஒரு தொலைபேசியைப் பார்த்துவிட்டால், ஓடிப்போய் எண்களைச் சுழற்றத் தொடங்கிவிடுவாள்.

“இன்னைக்கு அரைப் பரீட்சை, ஸ்கூலுக்குப் போற நேரத்தில பேசணுமா...’’

‘‘மட்ட மத்தியானத்தில எதிர்பார்க்காத நேரத்தில பேசறதிலதான் ஒரு த்ரில் இருக்கு, நீ முன்ன போ!’’ சொன்னவள், புதிதாய்ச் செருகப்பட்டிருந்த தொலைபேசியைக் கையில் எடுத்து எண்களைச் சுழற்ற ஆரம்பித்தாள்.

சமீபமாய் கீதாவுக்கும் சங்கரிக்கும் முட்டிக்கொள்ள ஆரம்பித்தது. அதிக நேரம் இவள் தொலைபேசியில் அவனுடன் பேசுகிறாள் என்பதே பிரதான காரணம். பள்ளிக்கூடம் விட்டு வரும் வழியில் எதுவும் புதிதாய்த் தொலைபேசி தட்டுப்பட்டால் அது சங்கரி கண்ணுக்குப் பட்டுவிடக்கூடாது என்பதே கீதாவின் உடனடி பிரார்த்தனையாக இருக்கும்.

சங்கரிக்கு அன்றாடம் நடப்பதை அப்படியே தினகரனிடம் ஒப்பிப்பது பிடித்திருந்தது. அவனுடைய `ம்ம்’ உலகின் உன்னத வார்த்தையாய்த் தெரிந்தது. அவளுள் அந்த வெதுவெதுப்பான குரல் மாயாஜாலத்தை நிகழ்த்தியது. உலகிலேயே மகிழ்ச்சியான ஜீவன் தான்தான் என நம்பினாள். மூன்று மாதங்கள் சுழன்று விட்டன.

ஒரு நாள் பேசும்போது, ‘அடுத்த நாள் ஓனர் ஊரில் இல்லை, கடைக்கு நேரில் வந்து பேசு’ என்று அழைத்தான். இவளுக்கோ பதற்றம். தான் எனத் தெரிந்தால் எப்படி நடந்துகொள்வான் என்கிற பயம். எவளோ என்பதைத் தாண்டி நேரில் எதுவும் இவள் அவனிடம் பேசியதில்லை. கீதாதான் ‘போ, எல்லாத்துக்கும் முடிவுரை எழுதிட்டு வா’ எனச் சொல்லி அனுப்பினாள்.

திரட்டிய தைரியத்தோடு கூட்டம் அதிகம் இல்லாத மதியம் இரண்டு மணிக்குச் சென்றாள். அவன் மட்டும்தான் இருந்தான்.

“சொல்லுங்க, என்ன ஜெராக்ஸ் எடுக்கணும்?’’

எதுவும் சொல்லாமல் சங்கடத்துடன் புன்னகைத்தாள் சங்கரி. கேள்விக்குறியுடன் பார்த்தவனிடம், “இன்னைக்கு மதியம் என்ன சாப்பாடு?’’ என்றவுடன் முகமெல்லாம் ஒளிவெள்ளம்.

“வாண்டு...  நீதானா அது... வா வா... உக்காரு.’’

எதிரில் இருந்த இரும்பு நாற்காலியில் அமர்ந்த சங்கரியை ஒரு நிமிடம் காத்திருக்கச் சொல்லிவிட்டு வெளியே சென்றான். அரை நிமிடத்தில் திரும்பியவன் கையில் டொரினோ இருந்தது. ‘வேண்டாம்’ என மறுத்தும் கையில் திணித்தான். உள்ளங்கை சில்லென்றானது.

பெஹெலா பெஹெலா பியார்ஹை - சிறுகதை

“ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி நேர்ல வந்திட்டுப் போய்ட்டு, போன்ல சேட்டை... என்ன அப்படியே கைல வச்சிருக்க, குடி. டொரினோ பிடிக்கும்ல, இல்லாட்டி பவண்டோ மாத்திட்டு வரவா?’’

“இல்லில்ல, இதுவும் பிடிக்கும்.’’

உறிஞ்ச உறிஞ்ச வாய், தொண்டை, உணவுக்குழாய், வயிறு என சகலமும் குளிர்ச்சியானது. அடியில் துளியும் வைக்காமல் முழுதாய்க் குடித்து பாட்டிலைக் கீழே வைத்தாள். அரைமணி நேரப் பேச்சில் குளிர்ந்துபோய் இருந்தனர் இருவரும்.

நல்ல வேலை கிடைக்கும் வரை இங்கு வேலை செய்வதாக அவன் சொன்னான். இவளுக்கு அடுத்து பன்னிரண்டாம் வகுப்பு.

ஒரு நாள் தொலைபேசியில் சங்கரியைத் திட்டினான்.

“நீ ஏன் எல்லார்கிட்டயும் சொல்ற நம்ம பத்தி, இன்னைக்கு வந்ததில ஒருத்தி பக்கத்தில இருக்க இன்னொருத்திகிட்ட ‘இவன் சங்கரி ஆளு’ன்னு சொல்றா, உன் பேர்தானே கெட்டுப்போகுது, தேவையா?’’

“அதைப் பத்தி உனக்கென்ன கவலை, வந்தவளுகள்ல எவளாவது ஒருத்தி செட் ஆக முடியாமப் போச்சுன்னுதானே கடுப்பு வந்திருக்கும் உனக்கு, அதானே?’’

எதுவும் பேசாமல் தொடர்பைத் துண்டித்தான்.

இவள் நினைத்தால் மட்டுமே தொடர்பு கொள்ளக்கூடிய தொலைவில் அவன் இருந்தான். ஆனால் அவன் நினைத்தால் பேச இவளிடம் தொடர்பு எண் இல்லை. மேலும், பள்ளிக்குப் போகும், வரும் வழியில் பேசுவதை அநாகரிகம் என எண்ணுவான்.

அடுத்த நாள் பள்ளியிலிருந்து ஹைதராபாத்துக்குச் சுற்றுலா. அவனிடம் எதுவும் சொல்லவில்லை. நான்கு நாள்கள் பிர்லா மந்திர், கோல்கொண்டா கோட்டை, சாலர்ஜங் மியூசியம் எனக் குழுவோடு சுற்றிக்கொண்டிருந்த போது மனம் முழுக்க அவன் நிறைந்து தொந்தரவு செய்தபடி இருந்தான். சதா அவன் குரல் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. அந்தக் குரலை அங்கிருந்தபடி ஒரு முறையாவது கேட்க ஆவல் படுத்தி எடுத்தாலும், ‘எத்தனை நாள் பேசாமல் இருப்போம், பார்க்கலாம்’ என்கிற வீம்பு அப்போதைக்கு வென்றது.

வீட்டில் கைச்செலவுக்கு எனக் கொடுத்து விட்ட முந்நூறு ரூபாயும் அப்படியே அவளிடம் இருந்தது. நான்காம் நாள் சார்மினார் அருகே வீட்டுக்குப் பரிசளிக்க வேண்டிய பொருள்களை வாங்கிக்கொண்டிருந்தனர் கூட வந்திருந்த மாணவிகள். சங்கரி தேடிப் போய் ஒரு டீஷர்ட் வாங்கினாள். அதன் விலை இருநூற்று எண்பது. வேறு எதுவும் வாங்கப் பிடிக்கவில்லை. எப்போடா மதுரைக்குப் போவோம் என்றிருந்தது.

ஊர் திரும்பிய மறுநாள் வியாழன். அன்று பள்ளிக்கு விடுப்பு எடுத்திருந்தாள். மதிய நேரத்தில் யாருக்கும் தெரியாமல் செய்தித்தாளில் சுருட்டி வைத்திருந்த பனியனை எடுத்துக் கூடையில் வைத்துக்கொண்டு கீதா வீட்டுக்குச் சென்று வருவதாகக் கிளம்பினாள்.

ஜெராக்ஸ் கடையின் வெளியில் நின்றவாறு நோட்டமிட்டாள். தட்டச்சு செய்துகொண்டிருந்தவன் முகம் வாடி வதங்கிப்போய் இருந்தது. தீவிரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அருகில் ஓனர் இருந்தார்.

துணிவை வலிய வரவழைத்துக்கொண்டு, “இவர் தங்கச்சி என்னோட பிரெண்ட். இந்தப் பார்சலை அவளுக்குக் கொடுக்கணும்... கொடுத்துக்கிறேன்’’ என்று சொல்லியபடி விரைந்து நடந்து அவனிடம் அந்தப் பொட்டலத்தை நீட்டினாள். நிமிர்ந்து பார்த்த நொடியில் முழுப் பிரகாசமான முகத்தோடு வாங்கியவன் உதட்டைப் பிரிக்காமல் அழகாய்ப் புன்னகைத்தான்.

பக்கத்தில் இருந்த ஓனர், எதிரில் இருந்த நோட்டில் எதையோ திருத்திக் கொண்டு இருந்தாலும் கவனம் முழுக்க இவர்களிடம் இருந்தது. அடுத்த நிமிடத்திலேயே கிளம்பிவிட்டாள்.

அன்று மாலை தொலைபேசியில் பேசியபோது அந்த உடுப்பு மிகச் சிறியதாய் இருப்பதாய்ச் சொன்னான். அவன் தம்பி அதை அணிந்துகொள்வான் எனவும் சொன்னான். இவளுக்கு வருத்தமாய்ப் போய்விட்டது.

அடுத்த மாதத்தில் அவன் ஒரு சேலை எடுத்து வைத்துக் காத்திருப்பதாய்ச் சொன்னபோது கடுமையாக மறுத்து விட்டாள்.

“எங்க வீட்டில அம்மாக்குத் தெரியாம டிரஸ் எல்லாம் நான் எடுக்க முடியாது. சாரி, உன் தங்கச்சிக்குக் கொடுத்திடு.’’

பெருத்த ஏமாற்றம் அவன் முகத்தில் தெரிந்தாலும் குரலில் காட்டிக்கொள்ளமாட்டான். அவனுக்கு சங்கரியை மிகவும் பிடித்திருந்தது. தன்னுடன் தினசரி விரும்பிப் பேசுகிறவளை யாருக்குத்தான் பிடிக்காது.

சின்னச் சின்ன உரசல்கள் அவ்வப்போது வெடித்து விரிசல் ஏற்பட்டாலும் தன் பொறுமையால், அன்பால் அவற்றைப் பூசிச் சரி செய்துகொண்டிருந்தான் தினகரன்.

“ஹம் ஆப் கே ஹைன் கோன் படத்தில பாட்டு எல்லாம் நல்லா இருக்கு. ஸ்க்ரீன்ல எப்படி இருக்குன்னு நான் பார்த்தே ஆகணும், அதுவும் உங்கூட. என்ன செய்வியோ எனக்குத் தெரியாது, அமிர்தம் தியேட்டருக்கு நாளைக்கு மத்தியானம் சீக்கிரம் வந்திடு, கூட்டம் ஜாஸ்தியாம்.’’ சொன்ன சங்கரி இணைப்பைத் துண்டித்தாள்.

பெஹெலா பெஹெலா பியார்ஹை - சிறுகதை

மறுநாள் மதியம் விடுப்பு எடுத்துவிட்டு கர்சீப்பால் நெற்றி வியர்வையைத் துடைத்தபடி கவுன்டர் அருகே நிற்கும் தினகரனைப் பார்த்துப் புன்னகைத்தாள். அரங்கின் உள்ளே ஒவ்வொரு பாட்டுக்கும் விசில் சத்தம் காதைப் பதம் பார்த்தது. சங்கரியின் வலது உள்ளங்கையை எடுத்துத் தன் இடது கையோடு பிணைத்துக் கொண்டான் தினகரன்.

“எங்கூட எப்பவும் இப்படியே இருப்பல்லம்மா?’’ அவளுக்கு மட்டும் கேட்கும்படி தலையை இலேசாக சாய்த்து, காதில் கிசுகிசுத்தான்.

“இப்படியே இருந்தா வேற வேலையெல்லாம் பார்க்க வேணாமா?’’

“உங்கிட்டபோய் சொன்னேன் பாரு.”

“அந்தப் பக்கம் வேணும்னா திரும்பிச் சொல்லிப் பாரேன்... இரு இரு சூப்பரான பாட்டு வரப்போகுது.’’

‘தீதி தேரா தேவர் தீவானா’ பாட்டுக்கு மாதுரி தீட்சித் உடன் சல்மான் கான், தியேட்டரில் குவிய ஆரம்பித்த உற்சாக சத்தங்களுக்கு இடையே ஆடி முடித்ததும் பிணைத்திருந்த கைகளை ஒன்றிணைத்துக் கூர்ந்து பார்த்த சங்கரி அதிர்ந்தாள்.

“என்னது, என்னோட விரலைவிட உன் விரல் உசரம் கம்மியா இருக்கு?” டெசிபல் வெகு குறைவான அவளின் குரல் அடிவயிற்றில் இருந்து வந்தது.

“விரல் மட்டுமில்ல, அழகு, அறிவு, அந்தஸ்து எல்லாத்திலயும் உன்னைவிடக் கம்மிதான்.’’

“நல்லதுதான், அத்தனை சுலபத்தில இன்னொருத்திகிட்ட விழுந்திட மாட்ட. நானும் உன்னைக் கண்காணிச்சுக்கிட்டே இருக்க வேண்டிய அவசியம் இருக்காதில்ல.’’

தலையில் செல்லமாகக் குட்டினான். குட்டிய இடத்தைத் தேய்த்துவிட்டபடி முறைத்த சங்கரியின் நெற்றியில் முத்தமிட வந்தான். கையைக் குறுக்கே கொண்டு வந்து முகத்தைப் பின்னே தள்ளி விட்டாள்.

“இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்.’’

“இதுக்கேவா?’’

“அடுத்த பாட்டு வரப்போகுது, படம் முடியற வரை கையையும் வாயையும் பொத்திட்டு இரு, இந்தக் குரலில பேசிப் பேசி தொண்டை வேற வலிக்குது.’’

‘பெஹெலா பெஹெலா பியார் ஹை’ என எஸ்.பி.பி பாட ஆரம்பித்தார். பாட்டின் மத்தியில் தினகரனின் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டாள். அவனது இடது கைப்பெரு விரலில் மட்டும் நீண்டிருந்த நகத்தை சங்கரியின் வலது கைச் சுண்டு விரல் நகம் தட்டிக்கொண்டிருந்தது.

அதே மாதத்தில் ஆண்டுத் தேர்வுகள் நடக்க ஆரம்பித்தன.

வயது முப்பது ஆவதால் திருமணம் செய்து கொள்ள தினகரன் வீட்டில் கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தனர். மீனாட்சி கல்லூரியில் சேர விண்ணப்பம் வாங்கியிருப்பதாகச் சொன்னாள் சங்கரி.

“என்ன வாண்டு... காலேஜ்ல சேரப் போறியா? எங்க வீட்டில பொண்ணு பார்க்கிறாங்க. இன்னும் மூணு வருஷம்னா என்னை உதைக்க மாட்டாங்க?’’

“வாங்கு... நல்லா வாங்கு... நீ மட்டும் டபுள் டிகிரி வச்சிருப்ப, நான் வெறும் ஸ்கூலா?’’

“இப்பிடி பேசினா எப்பிடி? வேணும்னா கல்யாணத்துக்கு அப்புறம் படி?’’

“வயித்தைத் தள்ளிக்கிட்டா... அதெல்லாம் முடியாது. எனக்கு காலேஜ் லைஃப் இப்ப எப்படி இருக்குன்னு பார்க்கணும்.’’

“ஒரு வேளை நீ காலேஜ் முடிச்சப்புறம் உனக்கு என்னைப் பிடிக்காமப்போயிடுச்சுனா?’’

“ஏன் உளர்ற?’’

“இல்லம்மா, இப்போ இருக்க நீ வேற. இன்னும் மூணு வருஷத்தில நீ பார்க்கிற, கேட்கிற எல்லாம் உன்னை யோசிக்க வைக்கும். அப்போ, என்னை உனக்குப் பிடிக்காமப் போனா?’’

“அதுக்காக என்னை இப்பவே கல்யாணம் பண்ணச் சொல்றியா?’’

பக்கவாட்டில் இருந்த கண்ணாடி தட்டப்படும் ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்த சங்கரி கண்ணாடியை இறக்கி, கணவன் ஹரியின் கையில் இருந்த ஒரு தேநீர்க் கோப்பையை வாங்கிக்கொண்டாள். சுற்றி வந்து இன்னொரு கதவைத் திறந்து உள்ளே வந்து சங்கரியின் பக்கத்தில் அமர்ந்தான் ஹரி.

எதுவும் பேசாமல் தேநீரைப் பருகியபடி கறுப்புக் கண்ணாடி வழியாய் தினகரனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கரி. மிடறு மிடறாய் இறங்கிய தேநீரை ருசித்தபடி சங்கரியைப் பார்த்துக்கொண்டிருந்தான் ஹரி. வெகு காலத்திற்குப் பின் உதித்த மகிழ்ச்சி படர்ந்த சங்கரியின் முகத்தில் குளிர்ந்துபோனான். சில நொடிகள் கழித்து அவளின் பார்வை சென்ற திசையை நோக்கத் தொடங்கினான்.

பேசியபடி வண்டி நிற்கும் இடத்திற்கு வந்திருந்தனர் தினகரன் தம்பதி. காய்கறிகளை வாங்கிய கட்டப்பையைப் பக்கவாட்டில் தொங்கவிட்டார் சற்றே தளர்ந்துபோயிருந்த தினகரன். அவரின் மனைவி உட்கார சௌகரியமாய் வண்டியைத் தள்ளி நிறுத்தினார். சங்கரியின் தோளைத் தட்டி `வெளியே போய் பேசுகிறாயா’ எனச் சைகையில் கேட்டான் ஹரி. தலையை இடவலமாய் உறுதியாய் அசைத்தாள்.

வண்டியை ஓட்டியபடி அருகில் வந்த தினகரன் ஏதோ ஒரு உந்துதலில் வண்டிக்குள் ஒரு நொடி உற்று நோக்கினார். கறுப்புக் கண்ணாடி ஒட்டப்பட்டிருந்த வண்டி, தினகரன் தன் மனைவியுடன் சென்ற ஸ்பிளென்டர் நரிமேடு பிரதான வீதியிலிருந்து மறையும் வரை அங்கேயே நின்றிருந்தது.