Published:Updated:

சுற்றந்தழால் - சிறுகதை

சுற்றந்தழால் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சுற்றந்தழால் - சிறுகதை

- ஹரீஷ்

சுற்றந்தழால் - சிறுகதை

- ஹரீஷ்

Published:Updated:
சுற்றந்தழால் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சுற்றந்தழால் - சிறுகதை

மூன்றாம் முறை அழைப்பு மணி அடிக்கும் முன் அவசரமாய் முடித்துக்கொண்டு வெளியே வந்து கதவைத் திறந்தேன். அவர்தான் நின்றிருந்தார். வழக்கமான மெல்லிய புன்னகை. “வாங்க” என்றபடி நகர்ந்து வழி விட்டேன். தயங்கி உள்ளே வந்தார். “உக்காருங்க” என்றேன். சொல்லாமல் உட்கார மாட்டார். மூன்று வருடங்களாகியும் இங்கு வரும்போதெல்லாம் இருக்கும் தயக்கம் கொஞ்சம்கூட மாறாமல் சோபாவின் நுனியில் அமர்ந்தார். அடுத்து அவர் பார்வை அந்தப் போட்டோவை நோக்கிப் போனது. அதுவும் வழக்கம்போல். அவராகப் பேசட்டும் என்று காத்திருந்தேன்.

திரும்பி என்னைப் பார்த்தவர் குறிப்புணர்ந்தவராகப் பையிலிருந்து ஒரு சிறிய டிபன் பாக்ஸை வெளியே எடுத்தபடி, “வீட்ல முறுக்கு செஞ்சேன். அப்படியே உங்களுக்குக் கொஞ்சம் குடுத்துட்டுப் போகலாம்னு” என்று நீட்டினார். வாங்கிக்கொண்டேன். அவர் வீட்டில் முறுக்கு சாப்பிட ஆள் இல்லை. எனக்காகத்தான் செய்திருக்கிறார் என்று தெரியும். நானும் சௌமியும் சேர்ந்து வாழ்ந்த இந்த வீட்டை அவ்வப்போது வந்து பார்த்துவிட்டுப் போவதில் அவருக்கொரு திருப்தி.

“அவர் எப்படி இருக்காரு?” என்றேன்.‌ இந்த அவர் என்பது என் மாமனார். “அவருக்கென்ன? வழக்கம்போல அதிகாரம் பண்ணிக்கிட்டு கூட்டத்த சேர்த்துக்கிட்டு...‌’’ என்று நிறுத்தியவர் “உங்களை விசாரிச்சதா சொல்லச் சொன்னார்’’ என்றார். அவர் சொல்லியிருக்க மாட்டார் என்று நன்றாகத் தெரியும். அவருக்கு என்னைப் பிடிக்காது.

சௌமியின் பிடிவாதத்தாலும் என் மாமியாரின் விடாமுயற்சியாலும் மட்டுமே திருமணம் சாத்தியமானது.‌ முதன்முதலில் திருமண விஷயமாய் அவரிடம் பேச சௌமியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அவர் பேசியது இப்பொழுதும் நன்றாக ஞாபகமிருந்தது.

சுற்றந்தழால் - சிறுகதை

“ஐ.டி-ல வேலை பாக்கறதா சௌமி சொன்னா.”

அமைதியாக இருந்தேன். சுவரில் ஆங்காங்கே சௌமி தனியாகவோ அவள் அம்மாவுடனோ இருக்கும் புகைப்படங்கள் தொங்க விடப்பட்டிருந்தன. சௌமியின் அப்பா எந்தப் புகைப்படத்திலும் இல்லை.

“மாசமானா சம்பளம்.‌ சவால்னு எதுவும் பெருசா இல்லல்ல வாழ்க்கைல?”

என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

“அப்பா அம்மாதான் இல்ல. சொந்தக்காரங்களாவது யாராவது இருக் காங்களா?” ஏளனமும் சலிப்பும் கலந்திருந்தது குரலில்.

“இருக்காங்க” என்றேன் மென்மையான குரலில்.

“நேரமாச்சு. நான் கிளம்பறேன்” என்று மாமியாரின் குரல் கேட்டு நிகழ்காலத்துக்கு வந்தேன். எழுந்தவர், “உடம்ப பாத்துக்கங்க” என்று கூறி விட்டுக் கிளம்பினார்.

“நீங்களும்” என்றேன். வெளியே போனவரைப் பார்த்துப் பிற்சேர்க்கையாக, “அவரையும் கேட்டதாச் சொல்லுங்க” என்றேன். சிறு ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தவர், மெல்ல ஆமோதிப்பாய்த் தலையசைத்துவிட்டு நகர்ந்தார்.

சௌமியின் வீட்டில் பேசிவிட்டு வந்த பிறகும் திருமணத்துக்கு வேறு வழியில்லாமல் என் மாமனார் சம்மதித்த நாளுக்கும் இடையே தெருமுனையில் ஆட்களை நிறுத்தி வேவு பார்ப்பது, வீட்டின் எதிரே வெகு நேரம் சும்மா யாராவது நின்றுவிட்டுத் திரும்பிப் போவது, அலுவலகத்திலிருந்து திரும்பி வரும்போது பின்னாலேயே வீடு வரை யாரேனும் தொடர்ந்து வந்துவிட்டுத் திரும்பிப் போவதென்று அவர் விடுத்த சின்னச் சின்ன மிரட்டல்களெல்லாம் நினைவில் வந்து போயின.

சௌமியிடம் அப்போது இதைப் பற்றி யெல்லாம் பெரிதாகச் சொல்லிக்கொள்ளவில்லை. திருமணம் முடிந்த பின் ஒரு நாள் தற்செயலாகப் பேச்சின் இடையே மிரட்டல் குறித்த விஷயங்களையெல்லாம் சொல்லப் போக, சௌமி மிகவும் குழம்பிப்போனாள். அவரைப் போய்‌க் கேட்கப் போகிறேன் என்றவளைக் கெஞ்சிக் கொஞ்சி அமைதிப்படுத்தி வைத்தேன். ஆனாலும் அதுநாள் வரையில் அவள் பார்த்துப் பழகி‌ வளர்ந்த அப்பாவின் பிம்பத்தை மறுசீரமைக்க முடியாத அளவு கெட்டதாக மாற்றிவிட்ட குற்றவுணர்ச்சி கொஞ்சம் படுத்தவே செய்தது.

சமையலறைக்குள் சென்று மாமியார் கொடுத்துவிட்டுப் போயிருந்த முறுக்கைச் சுவைத்தேன். ஏற்கெனவே சௌமி இருந்தபோது சில தடவை இந்த முறுக்கைச் சுவைத்திருக்கிறேன். இது என் மாமியாரின் சிறப்புக் கைப்பக்குவ முறுக்கு.‌ ஒரு முறையும் சுவை மாறியதே இல்லை. முறுக்கைக் கடித்ததும் தானாகவே சௌமியின் ஞாபகம் வந்தது.

“டேய்... இந்தா. அம்மா முறுக்கு கொண்டு வந்து குடுத்தாங்க” என்று சௌமி கொடுத்ததும், “என்ன எப்ப பார்த்தாலும் இதே செய்யறாங்க? வேற பண்டம்லாம் பண்ண மாட்டாங்களா?” என்றேன் விளையாட்டாக. “அப்பாவுக்கு என்ன புடிக்குமோ அதுமட்டும்தான் வீட்ல செய்ய முடியும் அம்மாவால. அப்பாவுக்கு இதான் பிடிக்கும்” என்றாள்.

“சரி, அதை விடு. உங்க அம்மா இங்க வர்றப்ப எல்லாம் நான் உங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு ஒதுங்கிடறேனே, அப்படி என்னதான் பேசுவீங்க?’’

“உன்னைப் பத்தித்தான் பேசுவோம்” கண்சிமிட்டினாள். “ச்சே... விளையாடாத. என்னைப் பத்திப் பேச அவ்ளோ என்ன இருக்கு” என்று வாய் சொன்னாலும் உள்ளுக்குள் அவர்கள் பேசியதைத் தெரிந்துகொள்ளும் குறுகுறுப்பு இருக்கவே செய்தது. கொஞ்ச நேரம் என்னைச் சீண்டி விளையாடிய பின் கண்களில் நிஜமான மினுமினுப்புடன், “அம்மாவுக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். நான் லக்கின்னு எப்பவும் சொல்வாங்க” என்றாள்.

அதிர்ஷ்டம் என்ற வார்த்தையை நினைத்ததும் சிரிப்பு வந்தது. கூடவே சௌமி இறந்தபொழுது அவளைத் தன் வீட்டுக்கு எடுத்துச் செல்லவும் இறுதிக் காரியங்களைத் தானே செய்யவும் என் மாமனார் செய்த வன்முயற்சிகள் நினைவுக்கு வந்தன. உண்மையில் என்னிடமிருந்து பெரும் எதிர்ப்பு வரும் என்று நினைத்தே அவர் அது மாதிரியான முயற்சிகளுக்குத் தயாராக இருந்தார். எனக்கு சௌமி போன பின் இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்றே விளங்கவில்லை. யாரோ என்னவோ செய்துவிட்டுப் போகட்டும் என்று ஒரு பித்த நிலையில் திரிந்தேன்.

சுற்றந்தழால் - சிறுகதை

மூர்த்தி முதலில் வந்து, “தம்பி... பாடியை அந்த வீட்டுக்கே எடுத்துட்டுப் போயிடலாம்னு அய்யா அபிப்ராயப்படறாரு...’’ என்றார். சட்டென்று அவர் ‘பாடி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது எரிச்சலை வரவழைத்தாலும் அவரை எதுவும் சொல்லாமல் சைகையிலேயே ‘சரி’ என்பதாக ஒப்புதல் கொடுத்தேன்.

அங்கே வீட்டுக்குச் சென்றதும் அடுத்து இறுதிக் காரியங்களை யார் செய்வது என்று பேச்செழுந்தது. மூர்த்தி மீண்டும் வந்து “தம்பி...” என்றார். அவரை இடைமறித்து, “ஏன், இதைக்கூட அந்தாள் வந்து கேக்க மாட்டாராமா?” என்றேன் காட்டமாக.‌ உள்ளுக்குள் எனக்கே அந்தக் கேள்வியை அந்த இடத்தில் கேட்டது அற்பத்தனமாக இருந்தது.‌ எதுவும் பேசாமல் வெளியில் சென்று புல்வெளி நடைபாதையில் நின்றுகொண்டேன். அதையே சம்மதமாக எடுத்துக்கொண்டு மாமனார் காரியங்களைச் செய்யத் தொடங்கியிருந்தார்.

உண்மையில் எனக்கு சௌமியை அந்த வடிவத்தில் பார்ப்பதே ஜீரணிக்கச் சிரமமாயிருந்நது. எதிலும் ஒட்டாமல் ஓரமாய் நின்றுகொண்டிருந்தேன்.

அதையும் தன் சுற்றத்தாரிடம் சுட்டிக்காட்டி, “என் பொண்ணைக் காணாம அடிச்சுட்டு அதைப் பத்திக் கொஞ்சம்கூட வருத்தமே இல்லாம எப்படித் திரியறான் பாருங்க” என்று அவர் பொருமியதும் என் காதுக்கு வந்து சேர்ந்தது. அதுவும் என்னை பாதிக்கவில்லை.

சௌமி போன பிறகு, கடைசியாக எப்போது தனியாக அவள் இல்லாமல் ஏதேனும் செய்தேன் என்று எவ்வளவோ யோசித்துப் பார்த்தும் நினைவுக்கு வரவில்லை. அவள் இல்லாத வாழ்க்கைக்குச் சிறிது சிறிதாய்ப் பழகிக்கொள்ள ஏழெட்டு மாதங்கள் பிடித்தன. அந்த எட்டு மாதங்களுக்குப் பிறகு இதேபோல் ஒரு ஞாயிறு காலையில் என் மாமியார் வாசலில் வந்து நின்றது பெரும் ஆச்சரியமாய் இருந்தது.

வழக்கமான விசாரிப்புகள் முடிந்து, வீடு, ஊரிலிருக்கும் தோட்டம், நாய்க்குட்டி, குத்தகை என்று என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தவர் கவனமாய்ப் பேச்சில் சௌமியைத் தவிர்த்தாலும் அவரது பார்வை மட்டும் அவ்வப்போது நானும் சௌமியும் சேர்ந்திருக்கும் படத்தின் மீது பட்டுத் திரும்பி வந்தபடியிருந்தது.

சற்று நேர உரையாடலில் அவர் வருகையின் ஆச்சரியம் அடங்கிய பின், சிறிது தயக்கத்துக்குப் பிறகு, “நீங்க பேசாம எங்க கூடவே வந்துருங்களேன்” என்றார். அதைக் கேட்கும்போது அவர் கண்களில் தெரிந்த குழந்தைத்தனமும் குரலில் இருந்த கெஞ்சலும் எத்தனையோ நாள்களுக்குப் பிறகு ஒரு புன்னகையை வரவழைத்தன. ‘‘இந்த விஷயம் அவருக்குத் தெரியுமா” என்றேன். அமைதியாக இருந்தார்.

திருமணத்தன்று நானும் மாமனாரும் மட்டும் தனித்து விடப்பட்ட எதிர்பாராத சமயமொன்றில் எங்கோ வெறித்தபடி பேச்சைத் தொடங்கினார். “சொந்த ஊர்ல இருந்திருந்தா வேற மாதிரி பண்ணியிருக்கலாம் கல்யாணத்த’’ என்றார் பெருமூச்சுடன். அவர் எங்கோ பார்த்துப் பேசினாலும் அங்கே என்னைத் தவிர யாருமில்லாததால் அவருடைய ஆற்றாமையை ஆமோதிக்கும் பொருட்டு மெல்லத் தலையசைத்தேன். அதை அங்கீகரிக்காமல் தொடர்ந்தவர், “பெரிய மண்டபம், பெரிய ஏற்பாடு...’’ என்று இடைவெளி விட்டவர், “பெரிய மாப்பிள்ளைன்னு ஜமாய்ச்சிருக்கலாம்’’ என்று சொல்லிவிட்டுச் சட்டென்று எழுந்து போன நொடி நினைவில் வந்தது.

மீண்டும் மாமியாரைப் பார்த்தேன். கேள்வியின் நிஜம் சங்கடப்படுத்தியதில் அசௌகரியமாய் அமர்ந்திருந்தார். அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தேன். அதன்‌பின் அடிக்கடி வரத் தொடங்கினார். அது மாதிரியான மற்றொரு வருகையின் போது இளகிய கணமொன்றில் “அடிக்கடி நீங்க வர்றதுக்கு உண்மையான காரணம் என்ன? என்னிக்காவது ஒரு நாள் என்னை அங்க வர சம்மதிக்க வச்சிடலாம்னா?” என்று சட்டென்று கேட்டு விட்டேன்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவர், “அந்த மாதிரி எண்ணம் இல்லன்னு பொய் சொல்ல மாட்டேன்” என்றார். பின், “ஆனா இங்க வரும்போது சௌமி கடைசியா சந்தோஷமா வாழ்ந்த இடம்னு ஒரு சின்ன நிம்மதியான உணர்வு கிடைக்குது.‌ அதோட உங்களையும் பாத்துக்கணும்ல” என்றார் வெகு இயல்பாய்.

இப்படியாக அவரின் வரவுகள் வழமையாகிப் போய்விட்ட பின்தான் அந்த அதிகாலை அழைப்பு வந்தது. “அவருக்கு திடீர்னு ஹார்ட் அட்டாக். ஆஸ்பத்திரில சேர்த்திருக்கு. நீங்க கொஞ்சம் உடனே வர முடியுமா?’’ என்றார் மாமியார். “மூர்த்தி இல்ல?” என்றேன் யோசிக்காமல். கேட்டு முடித்த நொடியிலேயே கேள்வியின் அபத்தம் புரிந்தது. மூர்த்தி மாமனாரின் வலது கை. சிறிய மௌனத்துக்குப் பின், “அவர் இருக்காரு. இருந்தாலும் நீங்க கூட இருந்தா எனக்குக் கொஞ்சம் தைரியமா இருக்கும்” என்றார்.

அவர் அவ்வப்போது வந்து போய் க்கொண்டிருந்தபோது அவ்வளவாய்த் தோன்றாத எச்சரிக்கை உணர்வு அப்போது தோன்றியது. என் புதிய வழமைக்குள்ளும் பழகிய தனிமைக்குள்ளும் வலுக்கட்டாயமாகத் தங்களை அவர்கள் நுழைத்துக்கொள்வது போல் தோன்றியது. என்னைப் பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்ற சந்தேகம் எரிச்சலைக் கொடுத்தது. மற்றொரு புறம், வறண்டு கிடக்கும் வாழ்வில் இதுபோன்ற சின்னப் பிடிமானங்களை வைத்துக் கொண்டால்தான் என்ன என்று தோன்றியது.

யோசனையோடே மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்தேன். அடுத்து வந்த நாள்களில் மூர்த்தி தொழில் விஷயங்களைக் கவனித்துக் கொள்ள, மூன்று வேளையும் மாமியார் வீட்டிலிருந்து உணவு சமைத்துக் கொண்டு வரும் இடைவெளிகளில் எல்லாம் மாமனாருடன் நான் கூட இருந்து பார்த்துக்கொள்ளும்படியாயிற்று.

பெரும்பாலான சமயங்களில் எங்கள் இருவருக்குமான இடைவெளியை சங்கடமான வெற்று மௌனங்களே நிரப்பின. அவர் ஏதேனும் அசௌகரியப்படுவதுபோல் தெரிந்தால், “என்ன பண்ணுது? தண்ணி ஏதாவது வேணுமா? டாக்டரைக் கூப்பிடவா?” போன்ற சிறு கேள்விகளோடு நிறுத்திக்கொண்டேன். “நீங்க ஆபீஸ் போகலையா” என்றார் ஒருமுறை. அதைக் கேட்கவே மனசைத் தேற்றித் திரட்டிக்கொள்ள அவர் எவ்வளவு முயன்றிருக்கிறார் என்று புரிந்தது. மாமியாரின் வாசனை கொண்ட கண்ணுக்குத் தெரியாத கயிறொன்று எங்கள் இருவரையும் சேர்த்துக் கட்ட இடைவிடாத முயற்சியிலிருப்பது போலிருந்தது.

மருத்துவமனை வாசம் முடிந்து வீட்டில் அவரைக் கொண்டு விடுகையில் நேருக்கு நேர் கண் பார்ப்பதைத் தவிர்த்துப் பார்வையை அலைய விட்டபடி “நானே சமாளிச்சிருந்திருப்பேன்’’ என்றார். உடல்நிலை சற்றே தேறி வந்தவுடன் எட்டிப் பார்க்கும் பழைய குணமாகவே நினைத்தேன் என்றாலும், என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அதைப் பற்றி யோசிக்கும்முன் பேச்சை மாற்றும் விதமாக மூர்த்தியிடம் திரும்பித் தொழில் விஷயங்களைப் பேசத் தொடங்கிவிட்டார்.

அதன் பிறகும் வழமை போலத் தொடர்ந்த மாமியாரின் வருகைகளில் மாமனாரைப் பற்றிய பேச்சு சற்றே அதிகமாகியிருந்தது. அவர் வருவது ஆச்சரியங்களற்றுப்போய் ஒரு வாரத்துக்கும் மேல் வரவில்லையெனில், மரியாதையின் பொருட்டேனும் அழைத்து விசாரிப்பது வாடிக்கையாகிப்போயிருந்தது.

இந்த முறை நடு இரவில் அழைப்பு வந்தது. மாமியார் பேசவில்லை. மூர்த்தி பேசினார். மருத்துவமனைக்கு விரைந்தேன். கீழ்த்தளத்திலேயே மாமனார் வரிசையாயிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்திருந்தார். தலை தொங்கியிருந்தது.‌ அருகில் நாற்காலி காலியாக இருந்தும் மூர்த்தி நின்றிருந்தார். அருகில் போய் இருவருக்கும் பொதுவாய் “என்னாச்சு?” என்றேன். மாமனார் நிமிர்ந்து மூர்த்தியைப் பார்த்தார்.

உத்தரவுக்குக் கட்டுப்பட்டது போல் மூர்த்தி, “அம்மா தண்ணி குடிக்க எழுந்தவங்க மயக்கம் போட்டுக் கீழ விழுந்துட்டாங்க. ஏதோ ஸ்ட்ரோக்குங்கறாங்க. ஐசியூ-ல வச்சிருக்காங்க’’ என்றார். இந்த நிலைமையிலும் தோரணையைக் கைவிடாத மாமனாரின் மேல் சற்றே எரிச்சல் வந்தது. ஏதேனும் பேசலாம் என்று வாயெடுத்தவன் அவர் கைகள் லேசாய் நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து நிறுத்திவிட்டேன்.

உள்ளுக்குள் கலகலத்துப்போயிருக்கிறார் என்று தெரிந்தது. மெல்லத் தயங்கி அவர் தோளில் பட்டும் படாமலும் கை வைத்து, ‘‘கவலைப்படாதீங்க... சரியாயிடும்” என்றேன். நிமிர்ந்து உணர்ச்சியற்ற பார்வை ஒன்றை வீசிவிட்டுக் குனிந்துகொண்டார்.

சுற்றந்தழால் - சிறுகதை

அடுத்து வந்த நாள்களில் மீண்டும் மருத்துவமனைத் தங்கல்கள் தொடர்ந்தன. மாமியார் ஓரளவு தேறி வந்தாலும் முன்போல் அவரால் இயங்க முடியாதெனவும் படுக்கையோடுதான் இருக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டது. மாமியார் வீடு திரும்பினார். அவர் வந்து என்னைப் பார்த்ததுபோல், நான் அவரை அவ்வப்போது போய்ப் பார்க்கத் தொடங்கினேன். மாமனார் ஒவ்வொரு முறை போகும்போதும் முந்தைய தடவையைக் காட்டிலும் மெலிந்ததுபோல் காணப்பட்டார்.

வீட்டையும் அவரையும் இவை இரண்டும் சார்ந்த அனைத்துப் பிரச்னைகளையும் கட்டிச் சமாளித்து இழுத்துக்கொண்டிருந்தவர் சாய்ந்ததும் மிச்ச வாழ்க்கையின் மீதான பெரும் பயம் பீடித்தவராகக் காணப்பட்டார். ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமலிருக்கவும் பெரும் பிரயத்தனப்பட்டார். அவரை நெருங்கிச் சென்று மனதாரப் பேசி ஆறுதல் சொல்லும் அளவெல்லாம் நெருக்கம் இல்லாததால் ஒரு பார்வையாளனைப் போல் அவரது துயரங்களை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வப்போது, “அவரை பயப்படாம தைரியமா இருக்கச் சொல்லுங்க” என்பேன் மூர்த்தியிடம் அபத்தமாய்.

மூன்று நாள்களாய் அங்கே செல்லவில்லை. விடுமுறையாக இருந்ததால் செல்லலாமென்று மூர்த்தியிடம் அழைத்துச் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து வெளியே வந்து கதவைப் பூட்டும் சமயம் மாமனாரின் கார் வந்து நின்றது. தயங்கியபடியே இறங்கி என்னைப் பார்த்தார். ஏனோ எனக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை‌.‌ ஒரு வகையில் முன்கூட்டியே இதுபோல் ஏதோ ஒன்றை எதிர்பார்த்ததுபோல்.

“வாங்க” என்றேன். வாசல் கதவு பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்து, “எங்கயோ கிளம்பிட்டீங்கபோல’’ என்றார் நின்று. “அங்க வரத்தான் கிளம்பினேன். நீங்க வாங்க” என்று பதிலளித்தபடியே கதவைத் திறந்தேன். உள்ளே வந்தவரை “உக்காருங்க” என்றேன். பட்டும் படாமல் அமர்ந்தவர் பார்வையை ஹால் முழுக்கப் படர விட்டார். நானும் சௌமியும் சேர்ந்திருக்கும் படத்தில் அவர் பார்வை நின்றது.

“என்ன சாப்பிடறீங்க?” என்றேன். திரும்பியவர் “எதுவும் வேண்டாம்” என்றார். சில நொடிகள் யோசித்து “கொஞ்சம் தண்ணி மட்டும் குடுங்க’’ என்றார். அவர் குளிர்ந்த நீர்தான் விரும்பிப் பருகுவாரென்று தெரிந்ததால் பிரிட்ஜிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்து அவர் முன் மேசையில் வைத்துவிட்டு அமர்ந்துகொண்டேன். என்ன விஷயமாக வந்திருக்கிறார் என்று கேட்பது நாகரிகமாய் இருக்காதென்பதால் அவரே சொல்லட்டும் என்று அமைதியாயிருந்தேன்.

“ஒண்ணுமில்ல. சௌமி கடைசியா சந்தோஷமா வாழ்ந்த இடத்தைப் பாக்கணும்னு திடீர்னு தோணுச்சு... அதான்” என்றுவிட்டுக் குனிந்து கொண்டார். அமைதியாக இருந்தேன்‌. முழுதாக ஒரு நிமிடம் அமைதியாகக் கழிந்த பின், குனிந்திருந்தவர் நிமிர்ந்தார். கண்களின்‌ ஓரத்தில் நீர் தேங்கிப் பளபளப்பாக இருந்தது. ‌சிறு கெஞ்சலுடன், “பேசாம நீங்க அங்கேயே வந்துருங்களேன்” என்றார்.