Published:Updated:

சிறுகதை: திறக்காத ஜன்னல்கள்

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

- இந்துமதி

சிறுகதை: திறக்காத ஜன்னல்கள்

- இந்துமதி

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை
மழை வருகிற மாதிரி இருக்கவே அவள் கொடியில் உலர்த்தியிருந்த துணிகளை எடுக்க மாடிக்கு ஓடினாள்.போட்டிருந்த பிளாஸ்டிக் கிளிப்களை விலக்கி துணிகளை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்ட போது மழை சடசடவென வலுத்தது. பாளமாக வெடித்திருந்த பூமியில் நீர் விழுந்த மாதிரி மனசு குதூகலித்தது. முகத்தை நிமிர்த்தி கண்களை மூடி தெறித்த தூரல்களை ரசித்தாள். அதன் குளிர்ச்சியை, இதயத்தை, சந்தோஷத்தை அனுபவித்தாள். மழையில் சொட்டச் சொட்ட நனைய வேண்டும் போலிருந்தது. திரைப்படக் கதாநாயகிகளைப் போல் ஆடிப் பாட வேண்டுமென்று தோன்றியது. ரிதம் பட மழைக்காட்சி ஞாபகத்திற்கு வந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எல்லாமே சில நிமிடங்கள்தான்... கீழேயிருந்து சங்கரராமன் கூப்பிட்டான். மழைச் சத்தத்தை மீறி அவன் குரல் கேட்டது. சட்டென்று அத்தனை சந்தோஷமும் வடிந்தது. நீர்க் குமிழி மாதிரி விநாடி நேரத்தில் உடைந்துபோனது.

``இதோ வந்துட்டேன்...’’ என்று பதறிக் கொண்டு ஓடினாள். ஈரக் கால்கள் வழுக்காமல் படியிறங்கினாள். கீழே வந்து ஈரத் துணிகளைப் பிளாஸ்டிக் நாற்காலியில் போட்ட போது அவன் கேட்டான்.

``எங்க போய்த் தொலஞ்ச?’’

`அப்படித் தொலைய முடிஞ்சாத் தேவலாம்...' வாய்விட்டுக்கூடச் சொல்லவில்லை. முணுமுணுப்பாகத்தான் சொன்னாள். ஆனாலும் உறுமினான் அவன்.

சிறுகதை: திறக்காத ஜன்னல்கள்

``சொல்றத காதுல விழும்படி சொல்லு.’’

``நான் ஒண்ணும் சொல்லல... எதுக்குக் கூப்ட்டீங்க..?’’

``மணி நாலாகுது. கீழ காண்டீனுக்குப் போய் டீ வாங்கிட்டு வர வேண்டியதுதானே..?’’

``அப்படியே ராத்திரிக்கு என்ன வேணுமோ சொல்லிட்டு வந்திடறேன்.’’

`` இப்ப டீ கூட சூடா பஜ்ஜி, வடை ஏதாச்சும் கிடைக்காதா..?’’

``இது ஆஸ்பத்திரி... இங்க நாம ட்ரீட்மென்ட்டுக்கு வந்திருக்கோம். இந்த ஆயுர்வேத சிகிச்சைக்குப் புளி, காரம், எண்ணெய் ஆகாதுன்னு வந்த அன்னிக்கே டாக்டர் சுஜேஷ் பிள்ளை சொன்னாரில்ல..?’’

``அவுங்களுக்கென்ன, சுலபமா சொல்லிடறாங்க... யாரால சப்பு சவுக்குன்னு வெறும் சோத்தைக் கொட்டிக்க முடியுது? வந்து பத்து நாளாச்சு... நாக்கு செத்துப்போவுது...’’

``இப்படி சாப்ட்டதனாலத்தான் ஏற்கெனவே இருந்த ரத்த அழுத்தம் இன்னும் ஏறிச்சு. கைகால் இழுத்துக்கிட்டு படுக்கைல போட்டுடுச்சு.’’

``நான் இப்படி கை கால் இழுத்துக்கிட்டுப் படுத்த படுக்கையாக் கிடக்கிறது உனக்கு சந்தோஷம்தானே..? ஆபீஸுக்குப் போறேன் பேர்வழின்னு உன் இஷ்டத்துக்கு ஆடலாம்... அடிக்கடி காரைத் தூக்கிக்கிட்டு வரானே ஒருத்தன், அவன்கூட சுத்தலாம்.’’

``ராதாகிருஷ்ணன் என் செக்‌ஷன் ஹெட். ரொம்ப மரியாதையானவரு. எனக்கு அண்ணன் மாதிரி. அவரைப் பத்தி அபாண்டமாப் பேசினா நாக்கும் இழுத்துக்கும்.’’

``அடி செருப்பால நாயே... மூஞ்சி முகரையெல்லாம் பேந்துபோயிடும் ஜாக்கிரதை.’’

`ஆமா, கால்ல செருப்பு போடக்கூட முடியாது... இந்த லட்சணத்துல செருப்பால அடிப்பியா...?'

நினைத்தாளே தவிர சொல்லவில்லை. சொன்னால் கத்துவான். அக்கம்பக்கத்து அறைக்கெல்லாம் கேட்கும்படி நாராசமாகப் பேசுவான். கொஞ்சம்கூட கூச்சப்பட மாட்டான். அது ஆஸ்பத்திரி என்றுகூட நினைக்க மாட்டான். வாய் சொல்லத் தகாத வார்த்தைகளெல்லாம் சொல்லும். `அடி போடி முண்டை' என்பான். `பிளடி பிட்ச்' என்று அதையே ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பான். நீ பண்றதெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைக்கிறியாடி..? கொலைகாரப் பாவி முண்ட.. உன் தளுக்கு மினுக்கு இதெல்லாம் யாருக்காகடி... கார்ல வரானே அவனுக்கா..? அவன் மட்டும் தானா... இன்னும் எத்தனை பேரோ... யார் கண்டது..?’’

சிறுகதை: திறக்காத ஜன்னல்கள்

`தூ' என்று காறி உமிழத் தோன்றும் அவளுக்கு. ஆனால் அப்படிச் செய்துவிட முடியாது. செய்துவிட்டு அதன் பிறகு அந்த வீட்டில் இருக்க முடியாது. கை கால் நன்றாக இருந்தபோதே அவளை அடித்து மிதித்துத் துவைத்தவன்தான் அவன். கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளி ராத்திரி முழுவதும் வாசல் வராந்தாவில் நிற்க வைத்தவன்தான். அக்கம் பக்கமெல்லாம் பார்த்தது. பரிதாபப்பட்ட எதிர் வீட்டுக்காரர் இருட்டில் நிற்கிறாளே என்று இரவு முழுவதும் தன் வீட்டு வாசல் விளக்கைப் போட்டே வைத்தார். மறுநாள் காலை அதற்கு வாங்கிக் கட்டிக்கொண்டார் அவர்.

``நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு அலையறையாடா..? செவப்புத் தோலைக் கண்டால் ஓடி வந்துடுவீங்களே...?’’

அதன் பின்னர் அவர் ஒதுங்கிக்கொண்டு விட்டார். சாக்கடையில் கல் எறிந்தால் முகத்தில் தெறிக்கும் என்பதை உணர்ந்து வேறு வழியின்றி தன் மனிதத்தனத்தை சுருக்கிக்கொண்டார்.

அவனது எச்சில் பேச்சுக்களை சகிக்க முடியாது தெருவே விலகிக்கொண்டது‌. பெண்கள் மட்டும் இவளைப் பார்த்தால் சிரிப்பார்கள். அந்தச் சிரிப்புகூட தயங்கித் தயங்கித்தான் வரும். அதில் பரிதாபம் இருக்கிற மாதிரி இவளுக்குத் தோன்றும். சினேகம் வறண்டு போன சிரிப்பாகவே படும். `இதுபோன்ற வீட்டுக்காரன் இருந்தால் யார்தான் சுமுகமாகப் பழகுவார்கள்..? எப்படிப் பழக முடியும் ..?’ என்றும் நினைத்துக்கொள்வாள்.

ஆரம்பத்திலிருந்தே அவன் அப்படித்தான் இருந்தான். பெண் பார்க்க வந்தபோது மெல்லத் தலை உயர்த்திப் பார்த்தவளுக்கு திடுக்கென்றது. நெஞ்சில் பள்ளம் விழுந்தது. குண்டு உடம்பும், தொப்பையும் தொந்தியும், வழுக்கைத் தலையுமான இவனா...? இவனையா...?'

``வேணாம்ப்பா...’’ என்று மறுத்தாள் அவள்.

சட்டென்று நிமிர்ந்து பார்த்தவர் மனதின் நிம்மதி வடியக் கேட்டார்.

``ஏம்மா...?’’

``என்னப்பா இப்படிக் கேட்கறீங்க..? அவரை நீங்களும்தானே பார்த்தீங்க...?’’

``உத்யோகம்தாம்மா புருஷ லட்சணம். நல்ல வேலை. கவர்ன்மென்ட் உத்தியோகம். கை நிறைய சம்பளம். ரிடையர் ஆனா பென்ஷன். சொந்த வீடு. அம்மா, அப்பா, கூடப் பொறந்தவங்கன்னு யாருமில்லாத தனி மனுஷன்...இப்படி எங்கிருந்து கிடைக்கும்...?’’

சிறுகதை: திறக்காத ஜன்னல்கள்

``எனக்குப் பிடிக்கலப்பா..?’’

``உனக்குப் பிடிச்ச மாதிரியெல்லாம் தேட எனக்கு சக்தி இல்ல... நயா பைசா செலவில்லாமல் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டுப் போறேன்றான். இந்தக் காலத்துல யார் சொல்லுவா இந்த மாதிரி..? தங்கம் விற்கிற விலைக்கு, இருபது சவரன் போடறியா, இருபத்தஞ்சு போடுவியான்னு கேக்கறாங்க... என்னதான் நீ சம்பாதிச்சாலும், குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்தாலும்கூட முடியாதும்மா. உனக்கும் கீழே ரெண்டு தங்கைங்க இருக்காங்கன்றத மறந்துடாதே. உனக்கப்புறம் அவங்களை வேற நான் கரையேத்தணும்!’’

அடித்துச் சொல்லிவிட்டார் அப்பா. முகத்தில் அறைந்த அந்த உண்மைக்கு மேல் இவளாலும் ஒன்றும் பேச முடியவில்லை. சந்தனத்தையும் கருஞ்சாந்தையும் மணையில் உட்கார்த்தி வைத்த மாதிரி இருந்தது. போதாக் குறைக்கு கல்யாணம் முடிந்து பக்கத்தில் உட்கார்ந்து அவன் சாப்பிட்ட விதம் இவளுக்கு வயிற்றைப் புரட்டியது. மலையாய் சாதம். நடுவில் மடுவாய் பள்ளம். அதில் நிரப்பப்பட்ட சாம்பார், ரசம். முழங்கை வரை வழிந்து ஓட அவன் ஜிர் ஜிர் என்று உறிஞ்சி சத்தம் போட்டு சாப்பிட்டான்.

இலையில் போடப்பட்ட எதையும் தொடவில்லை இவள். தொடப் பிடிக்கவில்லை. விரல் நுனிகளை மட்டுமே உபயோகித்து சாப்பிடுபவள் இவள். அம்மா உயிரோடு இருந்த வரை, `` ஏன் இப்படி அணில் மாதிரி கொரிக்கிற...?’’ என்பாள். அவளது உயரம், நிறம், கூர்மையான மூக்கு, தீர்க்கமான கண்கள், செப்புபோன்ற வாய், முட்டி தொடும் கூந்தல்...

``நம்ம மகா நல்ல லட்சணம். இந்த அழகுக்கு எவனாவது வந்து கொத்திண்டு போயிடுவான்...’’

``ஆமாம்... குதிரைமேல வருவான்.பார்த்துண்டே இரு...’’

அப்பா சொன்னதும் நிஜம் என்றே நினைத்தாள் இவள். ராணி சம்யுக்தையைத் தூக்கிப் போன மாதிரி தன்னையும் ஒரு பிரித்விராஜன் வந்து தூக்கிப் போவான் என்றே நம்பினாள்.

``மகாவோட ரசனை, அவர் புடவை கட்ற அழகு, தரைக்கு நோகுமோ என்று நடக்கிற நடை, அவள் படிப்பு, நாசூக்கு எல்லாத்துக்கும் ஏத்த மாதிரி ஒருத்தன் வரத்தான் வருவான். நீங்க பார்க்கத்தான் போறீங்க...’’

அம்மா சொல்லிச் சொல்லி, விசிறி விசிறி அவளுக்குள் நம்பிக்கையை எரிய விட்டாள்.ஆனால் அம்மாவே தகனமான பின்பு அவள் ஏற்படுத்திய அந்த நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தகனமாகத் தொடங்கியது. சமையல், வீட்டுப் பொறுப்பு, அலுவலக வேலை, மாலை வீடு திரும்பினால் மீண்டும் சமையல் என்று ஓடிய நாள்கள் வருடங்களாயின. இருபத்தாறு இருபத்து எட்டாயிற்று. பின் முப்பதைத் தொட்டது. முப்பத்திரண்டைக் கடந்தபோதுதான் அப்பா சடாரென்று விழித்துக்கொண்டார். தீவிரமாக மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார்.

``நான் போயிட்டா யாருப்பா வீட்டைப் பார்த்துப்பா...?’’

``அதுக்காக நீ இருந்துட்டே இருக்க முடியுமாம்மா..? அம்மாவுக்கப்புறம் நீ பார்த்துண்ட மாதிரி உனக்கப்புறம் உன் தங்கை பார்த்துப்பா... அதைப் பத்தியெல்லாம் நீ கவலைப்படாதே!’’

சிறுகதை: திறக்காத ஜன்னல்கள்

அதற்கு மேல் அவளைப் பேசவில்லை அவர். எண்ணியபடி சங்கரராமனுடனேயே கல்யாணத்தை முடித்தார். இரு தங்கைகளுக்கும் மறு வருடமே கல்யாணம் பண்ணி தன் கடமையை முடித்துக்கொண்டு போய்ச் சேர்ந்தும் விட்டார். தங்கைகள் கல்யாணத்திற்குப் பிறகு நன்றாக இருப்பதாகவே கேள்விப்பட்டாள். அவர்களை நல்ல இடத்தில் கொடுத்த அப்பா தன்னையும் அதுபோல் கொடுத்திருக்கலாமே என்று ஆதங்கப்பட்டாள். கல்யாணத்திற்கு முன்னால்தான் என்றில்லை. கல்யாணத்தன்று இரவே இன்னும் முறிந்துபோனாள் அவள். கையில் பால் செம்புடன் அறைக்குள் நுழைந்தவள்மீது மாடு மாதிரி விழுந்தான் அவன். அரை மணி நேரத்தில் தன் அத்தனை வருட இச்சையைத் தீர்த்துக்கொண்டு கால்களை அகல விரித்து மல்லாந்து படுத்துத் தூங்கிப்போனான். அடுத்த ஐந்து நிமிடங்களில் இயந்திரம் ஒன்று ஓடுகிற மாதிரி குறட்டைச் சத்தம் வேறு.

கட்டிலின் பெரும் பகுதியை அவன் ஆக்கிரமித்திருந்ததால் ஒரு ஓரத்தில் ஒடுங்கிப் படுக்கக்கூட இடமின்றி இவள் கீழே இறங்கினாள். அறையின் மூலைக்குப் போய் தரையில் உட்கார்ந்தாள். முழங்காலை மடித்து அதில் முகத்தைப் பதித்துக்கொண்டு துக்கத்தைத் தீர்த்துக்கொள்ள வாய் விட்டு அழுதாள். ஆனால் தீருகிற துக்கமா அது..?

பத்து வருடங்களாகியும் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிற துக்கம்.

அவன் வாய் திறந்து பேசினால் சாக்கடை ஓடி வரும். கூவம்கூட வெட்கித் தலைகுனியும். அடி உதைகளும், கால் மிதியுமாக துவம்சப்பட்டு உள்ளுக்குள் ஒடுங்கிப்போனாள். சமையற்காரியாகவும், வேலைக்காரியாகவும், படுக்கைக்காகவும் மட்டுமே அவன் அவளை உபயோகப்படுத்திக்கொண்டான். எத்தனையோ முறை வீட்டை விட்டுப் போய்விட வேண்டும் என்கிற எண்ணம் எழுந்திருக்கிறது. ஆனால் எங்கு போவது என்பது தெரியாத காரணத்தால் பேசாமல் இருந்தாள். வெளி உலகத்தில் இவனைவிட இன்னும் மோசமான ஆண்கள் இருக்கின்ற பயம் வேறு போக விடாமல் தடுத்தது. இரண்டு மூன்று முறை தற்கொலை எண்ணம்கூட வந்தது. ஆனால் அதற்கும் தைரியம் வரவில்லை.அரை குறையாகச் செத்து உயிருக்கு மன்றாடி பிழைத்துக்கொண்டுவிட்டால்..? அது வேறு விதமான தண்டனை. அதற்கு இந்த தண்டனையே மேல் என்று பொறுத்துக்கொண்டிருந்த போதுதான் கடவுளாகப் பார்த்து இரக்கப்பட்டு அடி உதைகளிலிருந்து அவளை விடுவித்தார்.

ரத்த அழுத்தம் அதிகமாகி ஒரு கை ஒரு கால் இழுத்துக்கொண்டு படுத்த படுக்கையானான் அவன். தனியாகவே போராடி ஆஸ்பத்திரியிலிருந்து அவனை மீட்டு வந்தாள். ஆனால் அவன் பிரச்னை மட்டுமன்றி வீட்டுப் பிரச்னைகளும் கூடச் சேர்ந்து அதிகமாயின. அவனது வேலை போயிற்று. வந்த பணம் ஆஸ்பத்திரிக்கே சரியாகப் போயிற்று. மருந்து, மாத்திரைகள், மளிகைச் சாமான், கரன்ட் பில் எனச் செலவுகள் கூடிக்கொண்டே போயின. சமாளிக்க முடியாமல் தவித்து, திருமணத்திற்குப் பின்னர் அவன் சண்டை போட்டு விட வைத்த வேலையைத் தானே நேரில் போய்ப் பேசி மீண்டும் பெற்றுக்கொண்டதில் சற்று இறுக்கம் குறைய ஆரம்பித்தது.

ஆனால் அது எப்படிக் குறையலாம் என்கிற மாதிரி வரிந்து கட்டினான் அவன். தான் வீட்டில் முடக்கப்பட்டதும், அவள் வேலைக்குப் போய் சம்பாதிப்பதும் அவன் கண்களையும், நெஞ்சையும் உறுத்தியது. அந்த உறுத்தலை தன் நரம்பற்ற நாக்கினால் அவள்மீது வார்த்தை நெருப்பை வாரி வீசினான். அதில் அவள் எரிந்து சாம்பலாவதைக் கண்டு உள்ளூர சந்தோஷப் பட்டான். ஒரு கை செயல்படாது போய்விட்ட காரணத்தினால் மற்றொரு கையால் அவள் தலை முடியைப் பற்றி இழுத்தான். செயல்பட்ட காலினால் எட்டி உதைத்தான். அவள் ஊட்டிய உணவை அவள் முகத்திலேயே துப்பினான். ஆவி பறக்கும் காபியை அவள்மீதே விசிறினான்.

நாளுக்கு நாள் அவனது கொடூரம் அதிகரித்துக் கொண்டே போன நிலையில் ஆங்கில மருத்துவத்தால் இனிப் பயனில்லை என்றான பின் அவளுடைய செக்‌ஷன் ஹெட் ராதா கிருஷ்ணன் இந்த ஆயுர்வேத ஆஸ்பத்திரி பற்றிச் சொன்னார்.

`` எப்படிப்பட்ட நோயும் குணமாகுது மேடம். அவுங்க செய்யுற வைத்தியத்துக்கு உங்க ஹஸ்பெண்ட்டிற்கு வந்திருக்கிற ஸ்ட்ரோக் ஒண்ணுமே இல்ல. நான் என் மாமனாரை அங்க வச்சுத்தான் குணப்படுத்தினேன். படுத்த படுக்கையாக ஸ்ட்ரெச்சர் வச்சு தூக்கிட்டுப் போனவரை ரெண்டே வாரத்துல நடத்தி வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திட்டேன்.’’

சொன்னது மட்டுமன்றி ராதாகிருஷ்ணன் டாக்டரிடம் பேசினார். தன் காரின் பின்னிருக்கையில் அவனைக் கிடத்தி, தனது ஓட்டுநர் இருக்கையின் அருகில் அவளை அமரச் செய்து தானே வண்டி ஓட்டி பாலக்காடு வரை வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டுப் போனார்.

அவர்கள் இருவரும் முன்னால் அமர்ந்ததை அவனால் தாக்கிக்கொள்ள முடியவில்லை. வழி முழுதும் சிடுசிடுத்துக்கொண்டே வந்தான். வேண்டுமென்றே அடிக்கடி வண்டியை நிறுத்தச் செய்தான். குடிக்கத் தண்ணீர் கேட்டான். சிறுநீர் கழிக்க வேண்டும் என்றான். அவள் ராதாகிருஷ்ணனைத் தள்ளிப் போகச் சொல்லி விட்டு அவனது வேட்டியை விலக்கி சிறுநீர் பிடித்து வெளியில் ஊற்றிக் கழுவித் துடைத்து வேட்டியை இறக்கிவிட்ட பின்னரும் குற்றம் கண்டுபிடித்தான்.

``சரியாத் துடைக்கல பாரு.’’

``நல்லாத்தான் துடைச்சிருக்கேன்.’’

``திமிர் பிடிச்ச மூதேவி... வாய் ஒரு கேடா உனக்கு...?’’

அவனது உரத்த குரல் கேட்டு தள்ளி நின்றிருந்த ராதாகிருஷ்ணன் அருகில் வந்தார்.

``என்ன சார்..?’’

``புருஷன் பெண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும். அதுக்குக்கூட நீங்க ஓடி வரணுமா? அவளுக்குத் தாலி கட்டின புருஷன் நான் தானே... நீங்க இல்லையே...?’’

அரண்டுபோன ராதாகிருஷ்ணன் அவளை ஏறிட்டார். மன்னித்து விடும்படி கண்களாலேயே வேண்டினாள் அவள்.

``ரொம்ப நல்லாருக்கு உங்க நயன பாஷை. மோகனாம்பாள் சண்முக சுந்தரம்னு நினைப்பா...?’’

ஆஸ்பத்திரி வந்த பின்னரும் பேசவில்லை ராதாகிருஷ்ணன். டாக்டர் பரிசோதித்து அறை ஏற்பாடு செய்த பின் கொண்டு வந்து படுக்க வைத்து விட்டுக் கிளம்பினார்.

சிறுகதை: திறக்காத ஜன்னல்கள்

``வரேன் சார்.’’

``ம்... ம்...’’ என்றான் அவன்.

மாடிப்படி வரை வந்து கண்கலங்கக் கை கூப்பினாள் அவள்.

``பாவம்மா நீங்க... எப்படித் தாங்கிக்கிட்டிருக்கீங்க...?’’

``என்ன சார் செய்யறது... எங்க போறது?’’

ராதாகிருஷ்ணனிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.

``எது தேவைன்னாலும் கூப்பிடுங்கம்மா...தயக்கமோ, பயமோ வேணாம்.’’

``சரி சார்.’’

படியிறங்கி அவர் ஆஸ்பத்திரி விட்டு வெளியேறும் வரை பார்த்துக்கொண்டு நின்றாள்.பின் உள்ளே வந்தவளிடம் காய்ந்தான் அவன்.

``கொஞ்சிக் குலாவி வழியனுப்பியாச்சா..?’’

வாய் திறந்து பயனில்லை என்பதால் வாயே திறக்கவில்லை அவள். ராதாகிருஷ்ணன் கொண்டு வந்து விட்டுப் பத்து நாள்களாகி விட்டன. தினமும் எண்ணெய் மசாஜ் நடக்கிறது. சூடு பறக்கும் வெந்நீர்க் குளியல். காலை, மதியம், மாலை மருந்து, மாத்திரைகள். இரண்டு வேளை கஷாயமும் தரப்படுகிறது. புளி, காரம், உப்பு குறைந்த சாப்பாடு... அவனுக்கு இறங்க மறுக்கிறது. பசியடங்காதது வேறு கோபத்தையும் எரிச்சலையும் அதிகப்படுத்துகிறது. அதை இப்படி வார்த்தைகளில் கொட்டுகிறான்.

அமைதியாக பிளாஸ்க்கை எடுத்துக்கொண்டு டீ வாங்கக் கிளம்பியவளிடம் சொன்னான் அவன்.

``போனமா வந்தமான்னு வா... கேன்டீன்ல எவனையாவது பார்த்து இளிச்சிண்டு நிக்காத..!’’

அவள் மொபைலை எடுத்தபோது மறுபடியும் சூடிழுத்தான்.

``ஏன் அவன் கூப்பிடுவானோ... தனியா வந்து கொஞ்ச சொன்னானோ... மறக்காம மொபைலைத் தூக்கிக்கிட்டுப் போற?’’

மொபைலை அவன் முகத்தில் வீசி எறிய வேண்டும் போலிருந்தது.

`ராஸ்கல். அயோக்கிய நாயே... ஸேடிஸ்ட் பாஸ்டர்ட். மெண்டல்... சைக்கோ...' என்றெல்லாம் மனசாரக் கத்தி நாலு அறை அறைய முடிந்தால்...?'

மொபைலை வைத்துவிட்டு மௌனமாகப் போய் டீ வாங்கி வந்தாள். டம்ளரில் ஊற்றி அவனிடம் நீட்டியதை வாங்கி அவள் முகத்தில் விசிறினான். சூடு தாங்காமல் அலறினாள் அவள்.

``நீ டீ வாங்கப்போன நேரத்துல சொல்லிவச்ச மாதிரி மொபைல் அடிக்குது. கூப்புட்றான் அவன்... தினமும் நடக்குதாடி இது..? கண் மறைவாப் போயி மொபைல்ல வேற கொஞ்சறியா..?’’

`ஐயோ கடவுளே...' என்று உள்ளுக்குள் மன்றாடினாள் அவள். `என்னை அழைச்சிட்டுப் போயிடு. இல்லைன்னா இவனையாவது கூப்ட்டுக்க... இதுக்கு மேல எனக்குத் தாங்குற சக்தி இல்ல...'

இயந்திரமாக சாப்பாடு ஊட்டினாள். இரவு நர்ஸ் வந்து மருந்து கொடுத்தாள்.. ``ஊணு கழிஞ்சோ..?’’ ஏதோ கேட்கவேண்டுமென்று கேட்டாள். இவளும் பதிலுக்கு மையமாகத் தலையாட்டி வைத்தாள்.

``ராத்திரி ஏதாச்சும் வேணும்னா பெல் அடிங்க... நிம்மதியாத் தூங்குங்க சாரே...தூங்கறதுக்குச் சூர்ணம் கொடுத்திருக்கு.’’

சிறுகதை: திறக்காத ஜன்னல்கள்

அப்பாடா என்றிருந்தது இவளுக்கு. தூங்கி விடுவான். இவளைத் தூங்கவிடாமல் செய்ய மாட்டான். இரண்டு மூன்று தரம் சிறுநீர் பிடித்துக் கொட்ட வேண்டாம். தானும் சற்று படுக்கலாம். அப்படித் தலைசாய்த்தே வெகு நாள்களாகிவிட்டன. போடப்பட்டிருந்த ஒன்றரையடி பெஞ்சில் படுத்தாள். சூடான டீ முக்தைப் பதம் பார்த்த கன்னம் முகவாயெல்லாம் எரிய ஆரம்பித்தது. எழுந்து அலமாரி திறந்து தேங்காய் எண்ணெய் பாட்டில் எடுத்துத் தடவினாள். சற்று இதமாகத் தெரிய மெல்லக் கண் மூடினாள். கொஞ்ச நேரம்தான். லேசாகக் கண் இழுத்த போது தடாலென்று பெரிதாய் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்தாள். அந்த இரவு விளக்கின் மங்கல் வெளிச்சத்தில் அவன் தரையில் குப்புற விழுந்துகிடப்பது தெரிந்தது. கட்டிலிலிருந்து விழுந்திருக்கிறான். தலை தரையில் மோதிய சத்தம். அந்தப் பெருத்த உடம்பு கீழே விழுந்த சத்தம்.

பதறிப்போய் பெரிய விளக்கைப் போட்டாள். அவனது வேட்டி மலத்திலும் மூத்திரத்திலும் நனைந்து கிடப்பதைப் பார்த்தாள். மணியடித்து நர்ஸைக் கூப்பிட்டாள். இரண்டு மூன்று நிமிடங்களில் சிறு பெண்ணான அந்த நர்ஸ் ஓடி வந்தது.

``எந்தா சேச்சி விளிக்கி..?’’ என்ற பெண் அவன் விழுந்துகிடந்த கோலத்தைப் பார்த்தது.

``என்னண்ட குருவாயூரப்பா...’’ என்று அருகில் ஓடிற்று. அதற்குள் அவளும் அலமாரி திறந்து வேறு வேட்டி எடுத்து வந்தாள்.

``நர்ஸ், இவரைத் தூக்கணும். வேஷ்டி மாத்தணும்.’’

``இருக்கி...’’ என்ற அந்த நர்ஸ் ஓடிப்போய் ஆண் நர்ஸைக் கூட்டி வந்தது. மூவர் சேர்ந்தும் அந்த உடம்பைப் புரட்டக்கூட முடியாததால் அந்த ஆண் நர்ஸ் இரண்டு செக்யூரிட்டி ஆட்களைக் கூட்டி வந்தான். எல்லோரும் சேர்ந்து தூக்கிக் கட்டிலில் கிடத்தியபோதுதான் பார்த்தார்கள். மூக்கு சப்பையாய் நசுங்கிக் கிடந்தது. கண்கள் மூடியிருந்தன. வழுக்கைத் தலை முழுதும் ரத்தம். அவன் விழுந்து கிடந்த தரையெல்லாம் ரத்தம்.

நர்ஸ் கையைப் பற்றி பல்ஸ் பார்த்தது. கையை விட்டு ஒன்றும் சொல்லாமல் வெளியில் போயிற்று. பின்னாலேயே அந்த ஆண் நர்ஸும் செக்யூரிட்டி ஆட்களும்கூட போய்விட்டார்கள்.

செய்வதறியாது திகைத்தாள் அவள். சதைக் கோளமாக நசுங்கி உருத்தெரியாமலிருந்த மூக்கைப் பார்த்தாள். ஒரு மலை விழுந்த மாதிரி விழுந்திருக்கிறான்... மூச்சு விடுகிறானா இல்லையா? உயிர் இருக்கிறதா இல்லையா? ஒன்றும் தெரியவில்லையே...?'

அடுத்த ஐந்தாவது நிமிடம் டாக்டர் வந்தார். அவனது இரு கைகளையும் மடக்கி மார்பின் மீது வைத்தார். கால்கள் இரண்டையும் ஒன்று சேர்த்தார். நர்ஸிடம் கட்டை விரல்களைக் கட்டச் சொல்லி மலையாளத்தில் சொன்னதை இவள் புரிந்துகொண்டாள்.

``இத்தனை வருஷத்துல இந்த ஆஸ்பத்திரில இதுபோல ஒரு சம்பவம் நடந்ததே இல்லை. யாரும் ஈ ஆஸ்பத்திரியில் மரிச்சுப்போனதே இல்லை. இதுவே முதல்முறை. ஐயம் ஸாரி மேடம். யூ கேன் டேக் தி பாடி ஹோம். எங்க ஆம்புலன்ஸ் வரும். இன்னும் பத்து நிமிஷத்துல டெத் சர்ட்டிபிகேட் ரெடியாயிடும்.’’

அவளால் ஒன்றும் பேச முடியவில்லை.ஆம்புலன்ஸில் வீடு வந்த போது ராதாகிருஷ்ணனும், உடன் பணிபுரியும் சிலரும் காத்திருந்தனர். அக்கம் பக்கத்தவர் யாரும் வரவில்லை. உற்றம், சுற்றமில்லை. கொள்ளிபோட யாருமில்லை. உடம்பைக் குளிப்பாட்டக்கூட இல்லை. அப்படியே மின் மயானத்திற்குக் கொண்டு போனார்கள். இவளும் கூடப் போனாள். உடலைக் கிடத்தி உள்ளே தள்ளினார்கள். அரைமணி நேரத்தில் சாம்பலாகத் தந்தார்கள். ஆறோ, கடலோ இல்லாததால் கிணற்று நீரிலேயே கரைத்தாள்.

``மனசைத் தேத்திக்கோங்க.’’

``தைரியமாக இருங்க.’’

``நாங்கள்ளாம் கூட இருக்கோம்.’’

``எப்பவும் இருப்போம்.’’

``இருக்க வீடும், கைல வேலையும் இருக்கு.அதனால் பயமோ, கவலையோ பட வேண்டாம்.’’

ஆளாளுக்கு சொல்லிவிட்டு விடைபெறாமல் போனார்கள். கடைசி மனிதனாக ராதாகிருஷ்ணனும் கிளம்பினார்.

``வீட்டு ஜன்னல் கதவுகளையெல்லாம் இனிமேலாச்சும் திறங்க... கொஞ்சம் நல்ல காத்து உள்ளே வரும்...’’

அவரும் போனபின் வாசல் கதவை மூடித் தாழிட்டாள். ஒவ்வொரு ஜன்னல் கதவுகளாகத் திறந்துகொண்டே வந்தாள். இதுவரை அவள் ஜன்னல் கதவுகளைத் திறந்ததே இல்லை. வாசல் கதவையாவது உள்ளே வரவும், வெளியே போகவும் திறந்திருக்கிறாள். ஆனால் ஜன்னல் கதவுகள் மட்டும் திறக்கப்பட்டதே இல்லை. அவனுடைய கத்தலும், அநாகரிகமான சொற்களும் வெளியில் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அனைத்து ஜன்னல்களும் நிரந்தரமாக சாத்தப்பட்டே கிடந்தன. அதையும் மீறி அவன் சத்தம் வெளியில் கேட்டுக் கொண்டுதான் இருந்தது.

திருமணமாகி வந்த இத்தனை வருடங்களில் முதல் முறையாக ஜன்னல் கதவுகளைத் திறக்கிறாள். சிலுசிலுவென்று குளிர்ந்த காற்று முகத்தில் அடித்தது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது, மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டது. ஒரு நட்சத்திரம்கூடத் தெரியாத வானம்...

நிச்சயம் மழை வரும். வரட்டும்! இனி அவள் மழையில் தாராளமாக நனையலாம். முகம் கொண்ட மட்டும் தூரலை வாங்கிக்கொள்ளலாம். குதிக்கலாம். ஆடலாம். பாடலாம்... தடுப்பதற்கு ஆள் இல்லை. திட்டுவதற்கு ஆளில்லை. தலை முடியைப் பற்றி இழுக்கும் கை இல்லை. அடி வயிற்றிலும், பிறப்புறுப்பிலும் எட்டி உதைக்கும் கால் இல்லை. கேவலமாகப் பேசும் வாய் இல்லை.

சடசடவென்று தூரல் போட ஆரம்பித்து மனதின் பாரத்தை சற்றுக் குறைத்தது. இவள் வந்து கட்டிலில் தாராளமாகப் படுத்தாள்.கண்களை மூடியபோது அவளிடமிருந்து ஆழமான பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது. அது நிம்மதிப் பெருமூச்சு என்பது அவளுக்கே புரிந்தது. திறக்கப்பட்ட ஜன்னல்களில் வழியாக வந்த ஈரப்பதத்தோடு கூடிய காற்று தாலாட்டி மனதில் எத்தனையோ வருடங்களுக்குப் பின்னால் வந்த முதல் சுதந்திரமான உறக்கத்தை அனுபவிக்கத் தொடங்கினாள் அவள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism