Published:Updated:

பசியினும் கொடிது - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

- இந்துமதி

இன்று தணிக்கைக்கு ஆண்டிபட்டி போக வேண்டும். அலுவல கத்தை விட்டு வெளியில் எங்கு போவதானாலும் எனக்கு மகிழ்ச்சியே. அதிலும் தணிக்கைக் கணக்குக்குப் போவ தென்றால் இன்னும் சந்தோஷம். சுற்றியுள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் நானும் கோவிந்தனும்தான் போவது வழக்கம்.

எல்லா அரசு அலுவலகங்களிலும் உள்ள மற்ற சடங்குகளைப்போல இந்தத் தணிக்கைக் கணக்கும் ஒரு சடங்குதான். செய்து அலுத்துப் போனாலும் இதில் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. கிராமத்து மக்களிடம் வெள்ளந்தித்தனமும் வெகுளித்தனமும் இருக்கும் என்று நான் எதிர் பார்த்தது முற்றிலும் பொய்த்துப்போனது. நகரத்து மக்களைவிட சாமர்த்தியசாலிகளாக இருந்தார்கள். அழகாய் சுற்றி வளைத்து பதில் சொன்னார்கள். கேட்ட கேள்விக்கான பதில் தவிர அதில் வேறு எல்லாம் இருக்கும்.

இந்துமதி
இந்துமதி

கேள்விக்கான நேரடி பதிலைப் பெறுகிற வரை நானும் வார்த்தை விளையாட்டு விளை யாடுவேன். அது சுவாரஸ்யமாகவும் பெருத்த சவாலாகவும் இருந்தது. ஆகவே, தணிக்கைக்குப் புறப்படுவது என்பது ஆர்வத்தைத் தூண்டுகிற விஷயமாயிற்று.

இன்று அங்கன்வாடி, பால்வாடி தணிக்கை கிளம்பியபோது போன் வந்தது.

``சார்... காலை ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு என்ன வாங்கி வைக்கட்டும்?’’

``ஏய்யா... நீ ஆபீஸுக்கு புதுசா?’’

``இல்ல சார்... ஏன் கேக்கறீங்க?’’

``ஒரு டீ வேணும்னாலும் நான் என் காசுல தானே வாங்கிப்பேன். ஆடிட் போற இடத்துல பச்சத்தண்ணி கொடுத்தாகூட குடிக்க மாட்டேன்னு தெரியாதாய்யா..?’’

``சாரி சார்...’’

``என் விஷயத்தை நான் பார்த்துக்கறேன். நீங்க உங்க வேலைய கவனிங்க. நான் வர்றதுக் குள்ள மொத்த அக்கவுன்ட்ஸையும் சரியா எடுத்து வைங்க...’’

``சரி சார்...’’

மொபைலை அணைத்து பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு கிளம்பினேன். எப்போதும் போல் பஸ்ஸிலேயே புறப்பட்டேன். சரியாக ஒன்பதரை மணிக்கு தணிக்கை செய்ய வேண்டிய அலுவலக அறைக்குள் நுழைந்தேன்.

அறையையொட்டிய பெரிய கூடத்தில் சின்னஞ்சிறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆசிரியைப்போல் இருந்த நடுத்தர வயது பெண்மணி ஒருவரும், கூடவே ஆயாவைப் போன்ற வேலைக்கு இளவயது பெண் ஒருவரும்... குழந்தைகளின் மேய்ப்பாளர்கள்.

ஆடும் குதிரையிலும், சட்டம் போட்ட கம்பிகளில் நகரும் வர்ணமணிகளும், சின்னச் சின்ன பொம்மைகளுமாகக் கூச்சலிடும் குழந்தைகள்... அந்த வயதைக் கடந்து வந்து பல காலம் ஆயிற்று என்ற வருத்தத்தில் ஆழமான பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது. அதைக் கடந்து எனக்கென ஒதுக்கப்பட்ட மேஜையில் உட்கார்ந்தபோது அந்த பால்வாடியில் பொறுப்பாளப் பெண் வந்து கரம் குவித்தார். முப்பது முப்பத்திரண்டு வயது இருக்கும். கழுத்தில் மஞ்சள் கயிறு. கைகளில் கண்ணாடி வளையல்கள். நெற்றியில் பெரிய பொட்டு.

``வணக்கம் சார்.’’

``வணக்கம்மா... உங்க பேரு..?''

``பூங்கோதைங்க.’’

``எத்தனை வருஷமா வேலை பாக்குறீங்க..?’’

``எத்தனையோ வருஷம் முயற்சி செய்து இப்பதாங்கய்யா கெடைச்சது.’’

`எப்படிக் கிடைச்சது?' என்ற கேள்வி நாக்கின் நுனி வரை வந்து உள்ளேயே தங்கிவிட்டது.

``எல்லா அக்கவுன்ட்ஸும் ரெடியா இருக்குதாம்மா..?’’

``இருக்குங்க சார்...’’

``சரி... உக்காருங்கம்மா பார்க்கிறேன்.’’

எடுத்துப் பார்க்க ஆரம்பித்தேன். தீவிர சோதனைதான். ஐந்து நிமிடங்களுக்குப் பின் தலைநிமிர்ந்தபோது மேஜையின் அந்தப் பக்கம் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமராமல் அந்தப் பெண் நின்றுகொண்டே இருப்பது தெரிந்தது.

``ஏம்மா உட்காரல..?’’

``பரவாயில்லீங்க சார்.’’

``எத்தனை நேரம் நிப்பீங்க..?’’

``பழக்கமாயிடுச்சுங்க சார்.’’

அரசு அலுவலகங்களில் நிறைய விஷயங்கள் இப்படிப் பழக்கமாகிப் போயி ருப்பது தெரிந் திருந்த காரணத் தால் பேசாமல் இருந்துவிட்டேன்.

கிட்டத்தட்ட எல்லா கணக்குகளும் சரியாகவே இருந்தன. கடைசி யாக முதியோர் சாப்பாட்டுக் கணக்கை கையில் எடுத்தேன். யாருமற்ற வயதான முதியவர் களுக்குப் பகல் சாப்பாடு போடு வது வழக்கம். அங்கு மொத்தம் பதினெட்டு முதியவர்கள். இருபத்தொன்றாக இருந்தவர் களாயிற்றே என்று யோசித்த நான் அந்தப் பதினெட்டு பேரும் பல நாள்களாக சாப்பாடு வாங்க வராததைக் கவனித்துவிட்டுக் கேட்டேன்.

``ஏம்மா ரொம்ப நாளா இவங்க சாப்பிட வரல போல இருக்குதே..?’’

``ஆமாம் சார்.’’

``ஏம்மா..?’’

``அவங்க இறந்துட்டாங்க சார்.’’

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. `பதினெட்டு பேருமா இறந்துட்டாங்க? மொத்த மாகவா... ஒரே சமயத்திலா... அது எப்படி..?'

நான் கேட்க வாயெடுத்த போது... ``சார் சாப்பிடப் போலாமா’’ என்று வந்து நின்ற அவர்களைப் பார்த்து தலை யசைத்து எழுந்து கொண்டேன்.

பசியினும் கொடிது - சிறுகதை

``நீங்களும் சாப்பிட்டு வாங்கம்மா...’’

பதில் சொல்லாமல் போனார் அந்தப் பெண். முகம் லேசாகக் கலவரமாக எனக்குத் தோன்றியது.

அந்த ஊரில் இருந்த பெஞ்ச்சும் மேஜையும் போடப்பட்ட ஓட்டு வீட்டு ஹோட்டலில் சாப்பிட்டேன். வெறும் சாம்பார் சாதமும் அப்பளமும். மனைவி சமையலைவிட ருசியாக இருப்பதை உணர்ந்தேன். மற்றவர்கள் சிகரெட் புகைத் தார்கள். எனக்கு புகைப்பழக்கமோ, வெற்றிலைப்பாக்கு பழக்கமோ இல்லாததால் நேராக மேஜைக்கு வந்தேன். அதற்குள் அந்தப் பெண்ணும் வந்திருந்தார்.

``ஏம்மா... சாப்பிட்டீங்களா..?’’

``ஆச்சுங்க சார்.’’

``உட்காருங்கம்மா.’’

தயங்கினார்.

``உட்காருங்கம்மா.’’

உட்கார்ந்தார்.

``விட்ட இடத்திலிருந்து தொடரு வோமா..?’’

``சரிங்க சார்.’’

``அந்த பதினெட்டு பேரும் ஒரே சமயத்துல ஒட்டுமொத்தமாவா செத்துப் போயிட்டாங்க?’’

``இல்லீங்க சார்... மூணு பேர் மட்டும்தான் இறந்துபோனவங்க. மொத்தம் இருபத்தோரு பேருங்க சார்...’’

``சரி... பாக்கி இந்தப் பதினெட்டு பேர்?’’

``வர்றதில்லீங்க’’

``ஏன்..?’’

``பழைய சமையற்காரம்மா போய் புது சமையற்காரம்மா வந்ததிலிருந்து வர்றதில்லீங்க.''

``ஏன் இந்தம்மா சரியா சமைக்கிற தில்லையா..?’’

``அதில்லீங்க சார்...’’

``பின்ன..?’’

அந்தப் பெண்ணிடமிருந்து பதில் வராமல் போகவே வேறு வழியில் தொடர முயன்றேன்.

``அந்த மூணு பேரும் எப்படி இறந்து போனாங்க..?’’

``அவங்களும் இந்த மாதிரி சாப்பிட வர்லீங்க சார்... வேற சாப்பாடும் கிடைக்கல... பசில சுருண்டு விழுந்து செத்தாங்க சார்.’’

``அதைப் பார்த்தும் கூடவா இவங்க வரல...’’

``ஆமா சார்... புது சமையற்கார அம்மாதான் காரணம்.’’

``ஏம்மா நல்லா சமைக்க மாட் டாங்களா? இல்லாட்டி சுத்தமாக இருக்க மாட்டாங்களா?’’

``இருப்பாங்க சார்... தினமும் குளிச்சு, தலை சீவி பளிச்சுன்னு புடவை கட்டி பொட்டு வச்சுக் கிட்டு நல்லா வருவாங்க சார்.’’

``பின்ன..?’’

``அது... அது... வந்து சார்...’’

``தயங்காம பயப்படாம சொல்லும்மா..’’

``அவுங்க காலனி ஆளுங்க!’’

குபீரென்று என் அடிவயிறு பற்றிக்கொண்டது. உடம்பு முழுதும் எரிகிற மாதிரி தோன்றியது. இறந்துபோன அந்த மூன்று பேரும் எனக்குள் வந்து போனார்கள். என் நெஞ்சம் குமுறியது...

‘அடப்பாவிகளா!