Published:Updated:

நித்திலம் - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

- காஞ்சனா ஜெயதிலகர்

நித்திலம் - சிறுகதை

- காஞ்சனா ஜெயதிலகர்

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

கோவையின் பவானியும் மற்றொரு கிளை நதியுமாய் கலந்த பசுமைப் பரப்பில் இருந்தது அத்திக்காடு. ஆதிவாசிகளுள்ள அந்த வனப்பகுதியை சுற்றுலாப் பயணிகள் வரும் தோதில் உருவாக்கியவர் வன அதிகாரி ஒருவர் - அது முப்பது வருடங்களுக்கு முன்பு.

பாதுகாப்பு கவசத்துடன் பரிசல் பயணம், பாரம்பர்ய உணவு, மாலை நேரம் மூலிகைத் தேநீருடன் மலைநாட்டுப் பாட்டு என்று அத்தனை பொறுப்புகளையும் அவர் அம்மண்ணின் மக்களிடமே தர... அந்தப் பகுதி, கலகலப்போடு காசும் பார்த்தது.

ஆனால், சுற்றுலா நேரம் காலையிலிருந்து இருட்டும் வரைதான். காட்டினுள் சில நாள்கள் தங்க, வகை செய்தால், சுவாரஸ்யத் துடன் வருமானமும் கூடும் என்ற திட்டத்தில், அரசிடம் பத்து ஏக்கர்களை லீஸுக்கு எடுத்து, ஆங்காங்கே பத்து குடில்களை அமைத்த தர்மேஷ் கெட்டிக்காரன்.

நித்திலம்  - சிறுகதை

வட இந்தியனான அவனுக்கு கோவையில் வலதுகை சம்பத். ஆதிவாசிகளை இலகுவாய் நெருங்கிய சம்பத் அவர்களறிந்த பரிசல் துழாவல், தினைப்புட்டு, பயறு சமையல் ஓங்காரப் பாடல்களை மெருகேற்றி பாதி வெற்றியை வெல்ல, கணினி மூலம் இவற்றை யெல்லாம் காட்டி, உலக டூரிஸ்ட்டுகளை வரவழைத்து அதை முழுமையாக்கினான் முதலாளி தர்மேஷ். ஆனால், சம்பத்தின் வாழ்வு பூரணப்பட்டது, இவர்கள் ரிசார்ட்டுக்கு தலைமை செக்யூரிட்டி சித்தன் வருகையால்தான் - அது அவருடன் வந்த நித்திலத்தினால்!

சில மாதங்களிலேயே சம்பத் அவளைப் பெண் கேட்டுவிட, சித்தன் வெளிப்படை யாகவே ‘டீல்’ பேசினார். `எனக்குன்னு மிஞ்சியது எம் பொண்ணுதான் ஸார்... சொச்ச காலத்தை நான் இங்க கழிக்க முடியாது. இந்தத் தணுப்புல என் இளைப்பு சாஸ்தியாகுது. மூணு லட்சம் தந்தீங்கன்னா கோயம்புத்தூர் ஹோமுல சேர்ந்திடுவேன். சாப்பாடு மருந்து எல்லாம் அவங்க பாத்துடு வாங்க - உங்களுக்கும் தொல்லையில்ல.'

கேட்டதை சுணங்காமல் தந்து சம்பத் தன்னை மனைவியாக்கியதில் நித்திலம் மனசு நிறைந்து போனாள். பெண்ணைப் பெற்றவர்கள் காசைக் குவித்துக்கொண்டு மாப்பிள்ளை தேட, சீர் தந்து கௌரவமாய் தன்னை ஏற்ற தன் கணவனை அவள் ராஜா வாகவே பார்த்தாள்.

சம்பத் அழகனல்லன்; வெகு சாதாரணன்.

தன் அழகை நித்திலம் பெரிதுபடுத்தின தில்லை. ஆனால், கடந்த சில வருடங்களில் அது பெருகியிருந்தது - தகதகப்பான இடத்திலும் செழுமைப் பூரிப்பிலும்.

ஆனால், மனசு... கூடாகிப் போனதோ... உயிர்ப்பின்றிக் கிடக்கிறதே...

முதன்முதலில் இந்தச் செயற்கை அருவி யைக் கண்டவள் எப்படிக் குதூகலித்தாள். சலசலத்த வாய்க்காலைத் திருத்தி வழிய விட்டிருக்க, மதிய ஒளியில் வெள்ளியும் வைரமுமாய் தெறித்த நீர்ப்பாய்ச்சலில் ஆசையாய் இறங்கிவிட்டு, ‘இதுல குளிக்கலாமா’ கெஞ்சலாய் கேட்டாள். கூழாங்கற்களில் இவள் தடுமாறி விடாதபடி தன் தோளோடு இறுக்கிக் கொண்ட சம்பத்,

``இந்தக் காட்டுக்கு ராணில்ல நீ... தினமும்கூட குளிக்கலாம்'' என்றான் காதில் முத்தமிட்டபடி.

இதுபோக மூலிகை சூழ்ந்த வசதியான வீடு வேறு. ரிசார்ட்டில் தங்குபவர்களுக்குத் தயாராகும் கோழி வறுவல், மீன் புட்டு, கஸ்டர்ட் புட்டிங்... எல்லாம் முதலில் இவளுக்கே படைக்கப்பட்டன.

சில மாதங்களில் பழகிய இச்சுகங்கள் தொடர்ந்த வருடங்களில் அலுத்துப்போயின.

அதிலும் நான்கு வருடங்களுக்குப் பிறகு, கோவையின் முன்னணி மகப்பேறு மருத்துவரிடம் போய் தம்பதி தங்களைப் பரிசோதித்த பிறகு, சகலமும் வெறுப்பாய் தெரிந்தது.

``என்னங்க எல்லா டெஸ்ட்டும் பார்த்த பிறகும் டாக்டர் ஏன் நமக்கு ட்ரீட் மென்ட்டைத் தொடங்கலை?''

``பெரிசா பாதகமில்லை கடவுளை நம்புவோம்னாங்கல்ல?''

``அது சரியா படல... ''

``உன்னைக் குத்திக் கொதறாம விட்டதே எனக்கு நிம்மதிம்மா...''

ஆனால், இவளது நிம்மதி தொலைந் திருந்தது.

நித்திலம் என்றால் முத்து... தன் வயிற்றில் முத்தொன்று உருவாகாதா?

கணவனின் முகத்தில், நெருக்கத்தில் வந்த மாற்றம் இவளுள் நிராசையாகி, ஏமாற்றம் நாளுக்கு நாள் ஆழப்போய் ஆறாத புண்ணாகி வலித்தபடி இருந்தது. மூலிகைக் காற்றிலும் மூச்சடைத்தது.

உயர் மரங்கள், அடர் புதர்களிடையே வேதனையும் திகிலும் பம்மியிருந்ததுபோல வீட்டினுள் முடங்கினாள்.

ஆதிவாசிகளின் உரத்த பாடல்கள் மிரட்டின.

‘இனி உன்வாழ்வும் வம்சமும் ஓய்ந்து போனதே’ எனப் புலம்பின.

இதெல்லாம் புரிய, சம்பத் மனைவி யிடமிருந்து மேலும் ஒதுங்க, ரிசார்ட்டின் வரவேற்புப் பகுதியில் வேலைக்கிருந்த சுமித்ரா இவளை சற்று நெருங்கினாள்.

ஓரளவு பழகிய பின் அப்படியொரு கேள்வியை நித்திலம் எதிர்பார்க்கவில்லை... ``அழகு குறைஞ்சிடும்னு குழந்தை பெத்துக் கறதைத் தள்ளிப் போடறீங்களா நித்தி...''

அறைபட்டது போல் திகைத்த முகத்தில் கண்கள் நிரம்பின. தாயற்ற வீட்டைப் பராமரிக்க, சமைக்க என்று கழிந்த இளம் பருவத்தில் பெரிதாய் நண்பர்களில்லை. ஆக நித்திலத்துக்கு சுலபமாய் யாருடனும் பழக முடிந்ததில்லை.

ஆனால், நல்ல வேளை... சுமித்ரா விடாமல் வந்து மறுநாளே பேசிப் பழகினாள்... அதில் ஆசுவாசமடைந்தாள்.

‘`நாளைக்கு நம்ம பாஸ் தர்மேஷ் வர்றாராம் நித்தி எனக்கு ரொம்ப த்ரில்லா இருக்குது.''

``ஏன்?''

நம்பாதது போல் ஒரு பார்வைவிட்ட சுமித்ரா, ``ரிசார்ட் ஓப்பனிங் டைம்ல எடுத்த படமெல்லாம் பார்த்தேன். சினி ஸ்டார் போல இருக்காரே... இங்கே இருந்து போறதுக்கு முன்ன பார்க்க முடியுமான்னு இருந்தேன்.''

``போறது பற்றி ஏன் யோசிக்கிறீங்க சுமித்ரா?''

``ரொம்ப நாள் இந்தக் காட்டுல காலந்தள்ளறது கொடுமை!''

அமைதியும் அழகுமான இடமிது.

நித்திலம்  - சிறுகதை

எல்லாராலும் இப்படி கிடக்க முடியாதே. சம்பளம் போக நல்ல டிப்ஸ் வருது. யூரோப்பியன்ஸ் தாராளம்தான். சுமித்ரா மாதிரி பெண்ணுக்கு வேறெங்கும் வரவேற்பு வேலை கிட்டாது. இங்கே இருகிய கறுப்பு கோட் சூட்டில் உற்சாகமாய் வளைய வருகிறாள்.

இவளும் போய்விட்டால்... பேச்சுத் துணைக்கும் ஆளிராது. கட்டிக் கொள்வது, ஒட்டி இழைவதெல்லாம் சம்பத்திடம் இப்போதில்லை. பேச்சும்கூட அளவாகத்தான். அத்தியாவசியத்துக்கு மட்டும்

ஏக்கத்தில் தொண்டை இறுகியது நித்திலத்துக்கு.

இரண்டாம் நாள் கமகமப்பாய் எல்லாருக்கும் மட்டன் பிரியாணி பரிமாறப்பட, தகவல் தந்தது சுமித்ராதான்... ``ஹேண்ட்சம் பாஸுக்கு மூன்றாம் குழந்தை பிறந்திருக்காம் நித்தி. அதான் நமக்கிந்த ட்ரீட். ரெண்டு பசங்களுக்குப் பிறகு, அவர் ஆசைப்பட்டதுபோல பெண் குழந்தையாம்.''

முனங்கிய நித்திலத்துக்கு உணவு இறங்கவில்லை. சிலருக்கு மட்டும் வாழ்வு ஏன் இவ்வளவு அனுசரணை காட்டுகிறது? எப்படி இந்த நியாயம்?

தன் கணவனோடு நின்று பேசிக்கொண்டிருந்த முதலாளியைப் பொறாமையாய் பார்த்தாள். தொழில், காசு நிறைந்த குடும்பம் போக... பார்க்க மிக கவர்ச்சியாக இருந்தான். ஆனால், இந்த எரிச்சல் தவறு என்ற உறுத்தலுடன் வெகு நாளைக்குப் பின்பு அருவியில் குளிக்கக் கிளம்பினாள்.

புதுப்படமொன்று பெரிய திரையில் ஓட ஆரம்பிக்க, மொத்த ஊழியர்களும் கான்ஃபரன்ஸ் ஹாலில் அடைந்து கொண்டார்கள்.

அந்தக் காதல் படத்தை உட்கார்ந்து ரசிக்கும் மனநிலை இவளுக்கு இல்லை. புதிதாய் தலை நீட்டும் பொறாமையை அருவி நீரில் கரைத்து விடும் தீர்மானத்துடன் சலசலத்த நீரை நெருங்கினாள்.

அதுவும் இவளை கிண்டலாய் வரவேற்றது. முன்பு ஆட்களற்ற நேரங்களில் சம்பத் இவளுக்கு சினிமா நாயகிகளைப்போல வெள்ளை நிற மெல்லிய புடவையை மட்டும் சுற்றி விட்டு இங்கே நனையவிட்டு ரசித்த ஞாபகம் முட்டியது. பிறகு, தொடர்ந்த வெப்பமான மோகத் தழுவல்கள்... அதெல்லாம் இனி மறக்க வேண்டிய கைக்கெட்டாத சுகங்கள்...

மழைக்காலங்களில் ரிசார்ட் பெரும்பாலும் காலிதான். இப்போது போல அறைகளில் பராமரிப்பு வேலை மட்டும் நடக்கும்.

மழை மெல்லியதாக இறங்க ஆரம்பித்தது. உடுத்திய இளமஞ்சள் சல்வாருடன் அருவிக்குள் புகுந்தாள். வெகுநாள்களாய் காணாத வேகத்தில் அது இவளை அள்ளிக்கொண்டது... அடித்துச் சாய்த்தது.

நீர்வரத்து அதிகமென்பதால் அதன் மூர்க்கத்தில் இவள் குனிந்து நெளிந்தாலும் நித்திலம் அதன் ஆவேசத்தினின்று விலகவில்லை

மூச்சு முட்ட நடுங்கித் தவித்தாள்.

விரல்நுனிகள் நெருங்கி சுருங்கியதைக் கண்ட பிறகே கிளம்ப வேண்டுமென உறைத்தது - மனமின்றி விலகினாள்.

கட்டிலில் களிப்பூட்டிய இணையைப் பிரிவது போல கால்கள் தயங்கித் தடுமாறின.

உதடுகள் தந்தியடிக்க முகத்தில் வழிந்த கூந்தலை ஒதுக்கியவள் திகைத்தாள்.

`இவரா ஏனிங்கு நிற்கிறார்? எத்தனை நேரமாய் தன்னைப் பார்த்திருக்கக்கூடும்?'

மோகமேறிய சிவந்த இரு ஜோடி விழிகளும் கவ்வ, எதிரே நின்றவன் தடுமாறினான்.

தயக்கமின்றி அவன் கண்கள் இவள் மேனியை அழுந்தத் தடவின.

தன் உடை மிக மெல்லியதென்றும் உள்ளாடை லேஸ் போன்றது என்றும் உணர்ந்தவள், அங்கிருந்து விலகும் வேகத்துடன் காலை வைத்ததும் ஈரத்துணி தடுக்கியது.

தர்மேஷின் கை நீண்டு இவளைத் தாங்கியது.

அப்பிடியில்தான் எத்தனை வெப்பம்... வலிமை...

நிலைமை புரிந்தது போல மேகங்கள் கவிய, மரங்களும் நாங்கள் ரகசியம் காப்போம் என்ற ரீதியில் கருத்தன. யுகங்களைக் கடந்த அயர்ச்சியில் இறுகி நின்றன கரும் பாறைகள்.

இல்லாதது போலாகிவிட்ட உடையும், தொடுதலும் கிளப்பிய தாபம் தாளாமல் தர்மேஷ் இவளை இழுத்து இறுக்கினான்.

தப்பு, சரி என்பதை மீறிய உணர்வுப்பெருக்கு.

அணைப்பில் அணையாத விநோத நெருப்பின் தகிப்பு.

ஆணின் வேட்கை வழக்கம் போலத்தான் என்றாலும், இப்பெண் ணின் தாபம், ஒரு குழந்தையை வேண்டியது.

இதுபோல இறுக்கி முத்தமிட, தனக்கென்று ஒரு குழந்தை வந்தால் போதுமே என்ற தவிப்பு...

அடிக்கடி கேட்டுப் பழகிய ஆதிவாசி பாடல் வரிகள் மனதுக்குள் மோதி அவளை உலுக்கின.

சிப்பிக்குள் வாழ
விரும்பாத நீர்த்துளி
ஒருபோதும்
முத்தாக முடியாது...


ஓங்காரமாய் கேட்கும் அவை சொல்வது என்ன... கட்டுப்பாடற்ற சுதந்திரம் சரிவராது என்று தானே? இப்படித் தரிக்கும் சிசுவை தன்னால் அள்ளிக் கொஞ்ச முடியுமா? அதோடு கூட குற்ற உணர்வும் குறுகுறுவென வளருமே...

காந்தர்வனைப்போல தன்னைத் தழுவினவனை உதறினாள்.

‘ச்ச்சீ...’அந்த ஒற்றைச் சொல் வீச்சு, அவனை வெட்டித் தள்ளியது.

வீடு நோக்கி ஓடியவளின் மனம் வாசலில் நின்றவனை வெகு நிம்மதியுடன் நெருங்கியது.

``நீ படம் பார்க்க வரலியா... தேடிட்டு வந்தேன் நித்தி'' என்றவனில் பொதிந்து கொண்டாள்.

தன்னில் முத்தொன்று உருவா காமல் போனாலென்ன... தான் அப்பழுக்கில்லாத முத்தாய் இருந்து கொள்வது.

நனைந்து நடுங்கியவளை சம்பத்தின் கரங்கள் சிப்பியாய் தன்னுள் பொதிந்து வைத்தன

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism