Published:Updated:

முகமூடி அணிந்த காதல் - சிறுகதை

முகமூடி அணிந்த காதல்
பிரீமியம் ஸ்டோரி
முகமூடி அணிந்த காதல்

- பட்டுக்கோட்டை பிரபாகர்

முகமூடி அணிந்த காதல் - சிறுகதை

- பட்டுக்கோட்டை பிரபாகர்

Published:Updated:
முகமூடி அணிந்த காதல்
பிரீமியம் ஸ்டோரி
முகமூடி அணிந்த காதல்

பலமுறை படிப்பவை, இனி படிக்கவே போகாதவை, இன்னும் முன்னுரைகூட படிக்காதவை என்று வகைப்படுத்திக்கொண்டிருந்த புத்தகங்கள் சுற்றிலும் பல மாடிக் கட்டடம்போல அடுக்கடுக்காக. அவற்றையெல்லாம் படிக்காமலேயே உள்வாங்கிக் கொள்ளத் தயாராக அட்டைப் பெட்டிகள் காத்திருந்தன.

நடுவாந்திரமாக சப்பணம் போட்டு அமர்ந்திருந்த நான் அழுக்கு பனியன், லுங்கியில். என் கையில் அந்த உப்பலான கவர். அதன் மேல் `Purely Confidential’ என்று நாற்பது வருடம் முன்பாக கிருஷ்ணமூர்த்தி சிவப்பு ஸ்கெட்ச் பேனாவால் எழுதியிருந்ததை, காலம் நிறத்தை தேய்த்ததில் தற்சமயம் யூகித்துதான் படிக்க முடிந்தது.

வசுந்தரா காபியை ஆற்றியபடி வந்து எந்த அடுக்கிலும் தடுக்கிவிடாமல் எச்சரிக்கையாக ஆழம் தெரியாத ஆற்றில் கால் வைப்பவள்போல வைத்து சமீபித்தாள்.

“வசு... இதை எத்தனை வருமா தேடிட்டிருந்தேன் தெரியுமா?’’

“என்ன புத்தகம்?’’

“புக் இல்ல வசு. கிருஷ்ணமூர்த்தி எங்கிட்ட கொடுத்து பத்திரமா வெச்சுக்கோன்னு சொன்ன கவர்.’’

“முதல்ல டம்ளரைப் பிடிங்க. எந்த கிருஷ்ணமூர்த்தி?’’

“காலேஜ்மேட். புல்லாங்குழல் வாசிப்பான், டேபிள் டென்னிஸ் சூப்பரா ஆடுவான்னு சொல்லியிருக்கேனே.’’

“ஞாபகம் வரல. அடுப்புல பால் வெச்சிருக்கேன். நான் போகவா?’’

“ரெண்டே பேர் இருக்கற வீட்ல எத்தனை தடவை பால் காச்சுவே நீ?’’

“பால்லேர்ந்துதான் தயிர். தெரியுமில்ல?’’

“பதில் சொல்லிட்டுப் போ. இதைப் பிரிச்சிப் படிக்கலாமா, கூடாதா?’’

“என்ன இருக்கு அதுல.. டைரியா?’’

“இல்ல. அவன் காதலி அவனுக்கு எழுதுன லெட்டர்ஸ்.’’

“அது எப்படி உங்ககிட்ட?’’

“ஒரு பதில் கேட்டா நூறு கேள்வி கேப்பே.’’

“தெளிவாப் புரிஞ்சாதான சொல்ல முடியும்?’’

“நாங்க ஹாஸ்டலை காலி செஞ்சப்ப... `எங்கப்பா ஒரு சந்தேகப் பிராணி, என் ரூம்ல ரகசியமா சோதனை போடுவாரு. பத்திரமா வெச்சுக்கோ, அப்பறமா வாங்கிக்கறேன்'னு சொல்லிக் குடுத்தான்.'’

“நாப்பது வருஷம் முன்னாடி அவரு குடுத்ததை ஏன் திருப்பிக் குடுக்காம வெச்சிருக்கீங்க?’’

“அவன் கேட்டாதானே குடுக்க முடியும்?’’

“ஏன் கேக்கல?’’

“அவனைத்தான் கேக்கணும்.’’

“ஏன் கேக்கல?’’

“என்னடி திருப்பி அதையே கேக்கறே?’’

“ஏன் கேக்கலன்னு அவரை ஏன் நீங்க கேக்கலன்னேன்.'’

“காலேஜுக்கு அப்பறம் எனக்கும் அவனுக்கும் டச்சே இல்லாம போயிடுச்சு. இப்ப அவன் எங்க இருக்கான்னே தெரியல.’’

“இப்ப என்ன உங்க பிராப்ளம்?’’

“இனிமேயா வந்து அவன் கேக்கப் போறான்? பிரிச்சிப் படிக்கணும்னு மனசு துறுதுறுங்குது.’’

“அப்ப படிங்க.’’

“உறுத்தலாவும் இருக்கு. இன்னொருத்தரோட அந்தரங்கமாச்சே.’’

“அப்ப படிக்காதீங்க.’’

வசுந்தரா வெடுக்கென்று போய்விட்டாள்.

`படி', `படிக்காதே' என்று சீட்டெழுதிப் போட்டு முடிவெடுக்கலாமா என்று யோசித்து... உடனே அந்த யோசனையை ரத்துசெய்துவிட்டு, இதென்ன பெரிய கொலைக் குற்றமா என்று சமாதானம் செய்துகொண்டு கவரைக் கிழித்துவிட்டேன்.

பத்து, பதினைந்து கடிதங்கள். எல்லாமே கோடுபோட்ட நோட்டில் கிழித்து எழுதப்பட்டவை. மடிப்புகளில் கிழிந்துவிடத் தயாராக இருந்தன. பிள்ளையார்சுழி போட்டு, தேதி போட்டு நீல நிற இங்க் பேனாவால் எழுதப்பட்டு இப்போது மங்கியிருந்தன.

முதலில் தேதிவாரியாக அமைத்துக்கொண்டு முதல் கடிதத்தில் ஆரம்பித்தேன்.

முகமூடி அணிந்த காதல் - சிறுகதை

*****

அன்புள்ள கிருஷ்ணா...

அர்ச்சனா எழுதிக்கொண்டது.

நட்புரீதியாக மட்டும்தானே கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தோம்... திடீரென்று எப்படி நீங்கள் என்னைக் காதலிப்பதாக எழுதினீர்கள்? படித்தபோது முதலில் கோபமாகவும், பிறகு பதற்றமாகவும் இருந்தது. அதெப்படி நேரில் சந்திக்காமலேயே காதல் வரும்? இதே எண்ணத்தில் நீங்கள் நம் உறவைத் தொடர நினைத்தால்... இனி என்னிடமிருந்து பதில் வராது.

*****

இனியவரே கிருஷ்ணா...

அம்மாடி! பன்னிரண்டு பக்கங்களுக்கு ஒரு கடிதமா? ஒவ்வொரு வார்த்தையும் மயக்கியது. 'அன்புள்ள இனிய காதலி அர்ச்சனாவுக்கு' என்று நீங்கள் தொடங்கியதைப் படித்ததுமே நான் கிழித்துப் போட்டிருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை? ஏன் முழுதும் படித்தேன்?

எனில், எனக்குள்ளும் ஒரு கள்ளத்தனம் இருந்திருக்கிறது. நட்பு என்கிற முகமூடியை அணிந்த நம் அன்புக்கு நிஜமான பெயர் காதல்தான் என்று இப்போது உணர்கிறேன்.

உங்கள் மனதில் எனக்கு இத்தனை பெரிய இடமா என்று உணரும்போது என் மனம் நெகிழ்ந்துபோகிறது.

இப்போது காதலுடன்,

அர்ச்சனா

*****

டியர் கிருஷ்...

கடிதத்தால் வெட்கப்படவைக்கும் வித்தையை எங்கே கற்றீர்கள்? `ச்சீ' என்று சிணுங்கவைத்த வரிகளை மீண்டும் மீண்டும் படித்தேன்.

இப்போது மட்டும் நீங்கள் என் எதிரில் இருந்தால் ஆசைதீர ஆயிரம் முத்தம் கொடுப்பேன். மனம் இணைந்த பிறகு நம் முகங்கள் எனக்கு இரண்டாம் பட்சமாகப் போய்விட்டன. நீங்கள் எப்படி இருந்தாலும் என் உயிரில் கலந்துவிட்ட காதலரே. அதனால் உங்கள் புகைப்படம் அனுப்ப வேண்டாம். நானும் அனுப்புவதாக இல்லை. நேரில் சந்திக்கும்போது கிடைக்கும் அந்த த்ரில்லை நினைத்தாலே மனம் தித்திக்கிறது.

முத்தங்களுடன்,

அர்ச்சனா.

*****

டார்லிங் கிருஷ்...

இப்படித்தான் தினமும் என் கனவில் வந்து தொந்தரவு செய்வதா? எனக்கு ஓய்வு வேண்டாமா செல்லம்?

திருமணம் குறித்து எனக்கு எந்த அவசரமும் இல்லை. உங்களுக்கு முதலில் வேலை கிடைக்கட்டும். அதுதான் முக்கியம். அதன் பிறகு உங்கள் பெற்றோருடன் என் வீட்டுக்கு வந்து பெண் கேளுங்கள்.

ஒப்புக்கொண்டால் பெரியவர்களின் ஆசிகளுடன் திருமணம். இல்லையென்றால் அவர்கள் ஆசியில்லாமல் திருமணம். எப்படியும் இந்த ஜென்மத்தில் எனக்கு நீங்கள், உங்களுக்கு நான் என்கிற பந்தத்தை எவராலும் பிரிக்க முடியாது டியர்.

காற்று புக இடைவெளியின்றி அணைத்தபடி...

அர்ச்சனா

*****

அடுத்தடுத்த கடிதங்களில் அந்தக் காதல் மேலும் பின்னிப் பிணைந்து என்னை நெளியவைத்தது. கடைசிக் கடிதம் வரை படித்ததில் இருவரும் சந்திக்கவே இல்லை என்பது தெளிவானது.

படிப்பது நாகரிகமில்லை என்று மறுபடி எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு என் வேலையைப் பார்த்திருக்கலாம். படித்துத் தொலைத்ததால் இப்போது என் மனதில் அலையலையாய் கேள்விகள்...

அப்புறம் என்ன நடந்தது? பிறகு அவர்கள் சந்தித்தார்களா? பெற்றோர் ஆசியுடன் திருமணம் நடந்ததா இல்லை எதிர்ப்புடன் நடந்ததா? அர்ச்சனாவைத்தான் கிருஷ்ணமூர்த்தி திருமணம் செய்து கொண்டானா?

சுவாரசியமான நாவலைப் படித்துக்கொண்டு வரும்போது கடைசிப் பக்கம் இல்லாமல் கிழிந்துபோயிருந்தால் எப்படியிருக்கும்? அப்படி இருந்தது எனக்கு.

கிருஷ்ணமூர்த்தி இப்போது எங்கே இருக்கிறான் என்று அறிய இதுவரை பெரிய அக்கறை எடுத்துக்கொள்ளாத நான் சட்டென்று மொபைலை எடுத்தேன். கல்லூரிகால நட்புகளில் இப்போதும் தொடர்பில் இருக்கும் நடராஜனைப் பிடித்தேன்.

“கிருஷ்ணமூர்த்தி எங்கடா இருக்கான் இப்போ?’’

“எந்த கிருஷ்ணமூர்த்தி?’’

“டேபிள் டென்னிஸ் விளையாடுவானே... காலேஜ் மியூசிக் ட்ரூப்ல புல்லாங்குழல் வாசிப்பானே...’’

“அவனா? என்னோட டச்சுல இல்லையே அவன்...’’

“அவசியம் தெரிஞ்சிக்கணுமே...’’

“அவனுக்கு கண்ணாடி ரமேஷ்தான் க்ளோஸ். அவனைக் கேளேன்.'’

“கண்ணாடி ரமேஷ் நம்பர் அனுப்பேன்.'’

அடுத்து கண்ணாடி ரமேஷை அழைத்தேன்.

“கிருஷ்ணாவா? அவன் கனடால சிட்டிசன்ஷிப் வாங்கி அங்கயே செட்டிலாய்ட்டான்னு கேள்விப்பட்டேன்.''

“அப்படியா... அவன் கல்யாணத்துக்கு நீ போயிருந்தியா?’’

“பத்திரிகை அனுப்பிருந்தான். காஞ்சிபுரத்துல நடந்துச்சு. என்னால போக முடியல.’’

“அவன் கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணு பேரு என்ன... ஞாபகம் இருக்கா ரமேஷ்?’’

“அவன் கல்யாணம் நடந்து முப்பது, முப்பத்தஞ்சு வருஷம் இருக்கும்... இப்ப கேட்டா எப்படி ஞாபகம் இருக்கும்?’’

“அந்தப் பத்திரிகை வெச்சுருக்கியா?’’

“வெளாடறியா? ஆமாம்... எதுக்கு இதைக் கேக்கறே?’’

“அப்பறம் சொல்றேன். எனக்கு கனடால கிருஷ்ணமூர்த்தியோட கான்டாக்ட் நம்பர் வேணும் ரமேஷ். அவனுக்கு கும்பகோணம்தான... அவங்கப்பா அரிசி வியாபாரம்தான பார்த்தார்... அந்தக் கடை பேர் தெரியுமா?’’

“அவங்கல்லாம் சென்னைக்கு ஷிஃப்ட்டாயிட்டாங்கன்னு தெரியும். சென்னைல எங்கன்னு கேக்காத.’’

“வேற யாரைக் கேட்டா தெரியும்?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முகமூடி அணிந்த காதல் - சிறுகதை

“நம்ம காலேஜ்மேட்ஸ் வாட்ஸ்அப் குரூப்ல கேட்டுப் பாரு. யாராச்சும் சொல்லிடுவாங்க. நீ குரூப்ல இருக்கியில்ல?’’

“நான் வெளில வந்துட்டேன். முதல் ஒரு மாசம் சுவாரசியமா இருந்துச்சு. அப்பறம் எல்லாரும் ரோஜாப்பூ, மல்லிகைப் பூ போட்டு குட் மார்னிங் மெசேஜ் மட்டும் போட ஆரம்பிச்சாங்க. அதுக்கு லைக் போடலைன்னா போன் செஞ்சு கோவிச்சிக்கிட்டாங்க. ப்ளீஸ்... நீயே அந்த குரூப்ல போட்டு நம்பர் வாங்கிக் கொடேன்.'’

“சரி.’’

வசுந்தரா வெண்டைக்காய் வதக்கிக்கொண்டிருந்த கிச்சனுக்கே வந்துவிட்டேன். தோலுரித்த உருளைக்கிழங்கை எடுத்துக் கடித்தபடி என் பரிதவிப்பைச் சொல்ல... கடுகு தாளித்து என்னைக் கமறவைத்தாள்.

“உங்களை யாரு படிக்கச் சொன்னது?’’

“தப்புதான். இப்ப தவிப்பா இருக்கே. உனக்கு இல்லை?’’

“எனக்கு ரெண்டு பேரையுமே தெரியாது. என்ன நடந்துருந்தா எனக்கென்ன?’’

“அடிப்பாவி! உன்னால எப்படி இப்படி பேச முடியுது? நீ க்ரைம் த்ரில்லர் படம் பார்க்கறே... க்ளைமாக்ஸ் டைம்ல கரன்ட் போயிட்டா எப்படி இருக்கும்... டென்ஷனாக மாட்டே?’’

“ஆக மாட்டேன். கரன்ட் வந்தப்பறம் தெரிஞ்சுட்டுப்போகுது.’’

“உங்கிட்ட போயி கேட்டேன் பாரு.’’

“எல்லாத்தையும் அப்படி அப்படியே பரப்பிவெச்சிருக்கீங்களே... சீக்கிரம் எடுத்து வைங்க. கூட்டி மாப் போடணும்.’’

“ஒரு ஐடியா சொல்லுடின்னா...’’

“உங்க ஃப்ரெண்டைத்தான பிடிக்க முடியல... அந்தப் பொண்ணு அட்ரஸ் இல்லையா அதுல?’’

“அது இருக்கு. விழுப்புரம் அட்ரஸ். ஒவ்வொரு லெட்டர்லயும் எழுதிருக்கா.’’

“அப்பறம் என்ன? விழுப்புரத்துல யாரையாச்சும் விசாரிங்களேன்.''

“விழுப்புரத்துல எனக்கு யாரும் இல்ல. அப்படியே இருந்தாலும் இந்த சமாசாரத்தை என்னன்னு சொல்லி விசாரிக்க முடியும்... ஹேய்... இன்னிக்கு சண்டேதானே? ஜஸ்ட் மூணு மணி நேர டிரைவ்ல விழுப்புரம். போய்ட்டு வந்துடலாமா?’’

“நான் எதுக்கு?’’

“ஒரு கம்பெனிக்கு கூட வாயேன். அஞ்சு நிமிஷத்துல நான் குளிச்சுட்டு ரெடியாயிடறேன். நீயும் டிரெஸ் மாத்திக்கோ வசு.’’

“பாதி சமையல்ல இருக்கேங்க.’’

“மீதியையும் முடிச்சு ஹாட் பேக்ல எடுத்துக்கயேன். வழில சாப்ட்டுக்கலாம். என்னாச்சுன்னு தெரியலைன்னா எனக்கு மண்டை வெடிச்சுடும்.’’

டவலை எடுத்துக்கொண்டு நான் குளியலறைக்கு ஓடினேன்.

விழுப்புரத்துக்கு வந்து சேரும் முன்பாக வழியில் ஓரங்கட்டி சாப்பிட்டபோது அர்ச்சனா வீட்டில் இருப்பவர்களிடம் எப்படி அறிமுகப்படுத்திக்கொள்வது, எப்படிப் பேசுவது என்று திட்டம் தயாரித்துக்கொண்டோம்.

அர்ச்சனா எழுதிய கடிதங்களில் சில தகவல்கள் இருந்தன. அவள் அப்பா ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர். பாரம்பர்யமான சொந்த வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு வெல்டிங் பட்டறை. அண்ணன் ஒரு எல்.ஐ.சி ஏஜென்ட்.

விலாசத்தில் இருந்த தெருவைக் கண்டுபிடிக்கவே வெகுவாகச் சிரமப்பட்டோம்.

''மொட்டையா மசூதி தெருன்னு கேட்டா எப்படிங்க? சின்ன மசூதி தெரு, பெரிய மசூதி தெருன்னு ரெண்டு இருக்கே.’’

“ரெண்டுக்கும் வழி சொல்லுங்க.’’

முதலில் சின்ன மசூதி தெருவுக்கு வந்து டயர் பஞ்சர் போடுகிற கடையில், “டோர் நம்பர் ஏழு எங்க வரும்?’’ என்றேன்.

“ஓல்டு நம்பரா, நியூ நம்பரா?’’

“தெரியலையே... ஓல்டு ஏழு எங்க வரும்? நியூ ஏழு எங்க வரும்?’’

“தெரியலையே... டயர்ல காத்து கம்மியா இருக்கே சார்.’’

“பரவால்ல’’ என்று விலகி ஒரு கேபிள் கனெக்‌ஷன் போர்டு பார்த்து அங்கே போய் விசாரித்தேன்.

“அந்த வீட்ல நாப்பது வருஷம் முன்னாடி ஒரு கவர்மென்ட் டீச்சர் இருந்தாருங்க. ஒருவேளை இப்பயும் இருக்கலாம். அவரு பையன் எல்.ஐ.சி ஏஜென்ட். அந்த வீட்ல அர்ச்சனான்னு காலேஜ் படிச்ச ஒரு பொண்ணும் இருந்துச்சு.’’

“எனக்கு வயசே முப்பதுதான் சார். பெரிய மசூதி தெருல ஒரு எல்.ஐ.சி ஏஜென்ட் இருக்கார். சாமிநாதன்னு பேரு. அவரைக் கேளுங்களேன்.’’

பெரிய மசூதி தெரு, சின்ன மசூதி தெருவைவிடவும் அகலக்குறைவாக இருந்ததால் மெயின் சாலையிலேயே காரை நிறுத்திவிட்டு, வாங்கிய அரை டஜன் ஆப்பிள்களுடன் நடந்தோம். சாமிநாதன் வீட்டை ஒரு டெய்லர் கடை, வாட்டர் கேன் கடை, மளிகைக் கடையில் விசாரித்துப் பிடித்துவிட்டோம்.

வீட்டின் வாசலில் `கே.சாமிநாதன்’ என்று இனிஷியலோடு எனாமல் போர்டு மாட்டியிருந்ததைப் பார்த்து துள்ளினேன்.

“வசு... அர்ச்சனாவோட இனிஷியல் `கே’தான். இந்த சாமிநாதன்தான் அவ அண்ணனா இருக்கணும். சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல? நீ அர்ச்சனாவோட காலேஜ்ல ஒண்ணாப் படிச்சவ. சொதப்பிடாத’’ என்றபடி அழைப்பு மணிக்கான பித்தான் தென்படாததால் கதவில் தட்டினேன்.

உள்ளே சேனலில் பட்டிமன்றப் பெண்மணி, `நடுவர் அவர்களே...'’ என்று வாதாடியது சன்னமாகக் கேட்டது. நாற்காலியை `கிரீச்’சென்று இழுத்து எழுந்து யாரோ நடந்துவரும் சத்தத்தைத் தொடர்ந்து, ``யாரு?’’ என்று கேட்டபடி கதவைத் திறந்தார் வேட்டி, முண்டா பனியனில் இருந்த தலை நரைத்த சாமிநாதன்.

“சாமிநாதன் சார்தானே?’’

“ஆமாம். நீங்க?’’

“என் பேரு பாஸ்கர். இது வசுந்தரா. என் வைஃப். விழுப்புரத்துக்கு ஒரு கல்யாணத்துக்கு வந்தோம். வசுந்தரா அர்ச்சனாவோட ஒண்ணாப் படிச்சவ. சும்மா விசாரிச்சுட்டுப் போலாம்னு சொன்னா. நீங்க அர்ச்சனாவோட அண்ணன்தான?’’

“ஆமாம். ரொம்ப ஆச்சர்யமா இருக்கே. இத்தனை வருஷத்துக்கு அப்புறம் தேடிக்கிட்டு வந்திருக்கீங்களே... வாங்க... உள்ள வாங்க. வாங்கம்மா.’’

செய்தித்தாள்கள், துணிகள், காய்கறிப் பை எல்லாவற்றையும் ஒதுக்கி எங்களை அமரவைக்க ஏற்பாடு செய்து, டி.வி-யை அணைத்துவிட்டு, “வீட்ல நான் ஒண்டியாளுதான். கற்பகம் போயி நாலு வருஷமாச்சு’’ என்றபடி போய் சொம்பில் தண்ணீர் எடுத்துவந்து இரண்டு டம்ளர்களைக் கையில் கொடுத்து ஊற்றினார்.

மரியாதைக்கு ஒரு மடக்கு குடித்துவிட்டு வைத்து, ஆப்பிள் கவரைக் கொடுத்துவிட்டு, ``நீங்க உக்காருங்க சார்’’ என்றேன். வசுந்தராவுக்கு ஜாடை காட்டினேன்.

“நானும் அர்ச்சனாவும் அப்ப ரொம்ப க்ளோஸ்’’ என்று சுமாராக நடித்தாள் அவள்.

“அப்படியாம்மா? இப்பக்கூட நம்பவே முடியல. எப்பவோ ஸ்கூல்ல ஒண்ணாப் படிச்சதை ஞாபகம் வெச்சுக்கிட்டு தேடி வந்திருக்கியேம்மா...’’

“ஸ்கூல்ல இல்ல சார். காலேஜ்ல ஒண்ணாப் படிச்சோம்.’’

“காலேஜ்லயா... அவ எங்க காலேஜ் போனா?’’

விலாசம் மாறி வந்துவிட்டோமோ என்று பதைத்தது. மசூதி தெரு, அர்ச்சனா, அண்ணன் எல்.ஐ.சி ஏஜென்ட் இதெல்லாம் பொருந்துகிறதே...

“உங்க அப்பாதானே கவர்மென்ட் ஸ்கூல்ல வாத்தியாரா இருந்தாரு?’’

“ஆமாம். அவரு போய்ச் சேர்ந்து இருபது வருஷம் ஆச்சே.’’

“அர்ச்சனா காலேஜ் போகலைன்னு சொல்றீங்களே...’’

“ஆமாம். இவ அஞ்சாவது வரைக்கும் தானே படிச்சா.’’

“அப்போ நாங்க தேடி வந்தது வேற அர்ச்சனாபோலருக்கு சார். அந்த அர்ச்சனா பி.எஸ்சி பாட்டனி படிச்சிருக்கா. தொந்தரவு பண்ணிட்டோம். மன்னிச்சுக்கங்க’’ என்று எழுந்துகொண்டேன். வசுந்தராவும் எழுந்தாள்.

முகமூடி அணிந்த காதல் - சிறுகதை

“பரவால்ல... அதனால என்ன? சார்... இந்தப் பழம்...’’

“அது... இருக்கட்டும் சார்’’ என்றவன் சுவரில் பத்து வயது சிறுமி ஒருத்தியின் புகைப்படத்துக்கு மாலை போடப்பட்டிருப்பதைப் பார்த்து, ``இது யாரு?’’ என்றேன்.

“இதான் என் தங்கச்சி அர்ச்சனா. ஸ்கூலுக்குப் போயிட்டுத் திரும்பறப்ப லாரி அடிச்சு ஸ்பாட்லயே பொட்டுன்னு போயிட்டா.’’

``சாரி சார். வர்றோம்’’ என்று வெளியில் வந்துவிட்டோம்.

“ஆனா வசு... மசூதி தெரு, அப்பா வாத்தியார், அண்ணன் எல்.ஐ.சி ஏஜென்ட் இதெல்லாம் ஒத்துப்போகுதே...’’

“ஆனா, இவரு தங்கச்சி செத்தே போயிட்டாளே...’’

“இங்க இருக்கற வேற எல்.ஐ.சி ஏஜென்ட் பத்தி விசாரிக்காம விட்டுட்டமே. கேட்டுடலாம்.’’

மறுபடியும் கதவைத் தட்டி, அவர் திறந்ததும், ``திரும்பவும் தொந்தரவு பண்றோம்’’ என்றேன்.

சிந்தனையுடன் காரை சென்னையை நோக்கி நிதானமான வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்தேன்.

“கடைசில என்னங்க இப்படி ஆயிடுச்சி?’’ என்றாள் வசுந்தரா.

“நான் எதிர்பார்க்கவே இல்லை’’ என்ற நான், ஒலித்த போனை காரின் ப்ளூடூத் ஸ்பீக்கர் வழியாக ஆன் செய்துகொண்டு, “ஹலோ... பாஸ்கர் ஹியர்’’ என்றேன்.

“ஹேய் பாஸ்கர்... நான் கனடாலேர்ந்து கிருஷ்ணமூர்த்தி பேசறேன்.’’

திடுக்கிட்டு காரை ஓரமாக நிறுத்திவிட்டேன்.

“கிருஷ்ணா... என்ன ஆச்சர்யம்... இன்னிக்குப் பூரா உன்னை கான்டாக்ட் பண்றதுக்கு அவ்வளவு ட்ரை செஞ்சேன்.''

“நம்ம கண்ணாடி ரமேஷ் ரொம்ப ட்ரை பண்ணி என் நம்பரைப் பிடிச்சுப் பேசி உன் நம்பர் குடுத்தான். நல்லா இருக்கியா?’’

“நான் நல்லாதான் இருக்கேன். நீ எப்படி இருக்கே?’’

“முப்பது வருஷமாச்சுப்பா நான் கனடா வந்து. இங்கயே செட்டிலாகிட்டேன். ரெண்டு பசங்க. பெரியவனுக்கு மேரேஜாகி எனக்கு ஒரு பேத்திகூட இருக்காப்பா. ரெண்டாம் பையன் மெடிக்கல் படிக்கிறான். சாரிப்பா. நடுவுல இந்தியாவுக்கே வரலையா... நான் யாரையும் கான்டாக்ட் பண்ணாம இருந்துட்டேன்.’’

“ரொம்ப சந்தோஷம். ஹாஸ்டலை காலி செஞ்சப்போ எங்கிட்ட ஒரு கவர் கொடுத்தே நினைவிருக்கா கிருஷ்ணா?’’

“அதெப்படி பாஸ்கர் மறக்க முடியும்? இன்னிக்கு வரைக்கும் ரகசியமா தனிமைல எனக்குள்ளேயே அழுதுட்டிருக்கேன் பாஸ்கர். என் பேத்திக்கு அர்ச்சனான்னு பேரு ஏன் வெச்சேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.’’

“கடைசி வரைக்கும் நீ அவளைத் தேடிப் போய் சந்திக்கவே இல்லைதானே கிருஷ்ணா?’’

“இல்லை. குற்ற உணர்ச்சி. எனக்கு வேலை கிடைச்சப்பறம்தான் மீட் செய்யறதுன்னு வைராக்கியமா இருந்தேன். கல்கத்தால வேலை கிடைச்சுது. கும்பகோணத்துல எங்கப்பாவுக்கு வியாபாரத்துல பெரிய நஷ்டம். ஊரெல்லாம் கடன். என் தாய் மாமாதான் ரொம்ப ஹெல்ப் செஞ்சு அப்பாவோட கடனையெல்லாம் அடைச்சாரு. என் ஃபேமிலி சென்னைக்கு ஷிஃப்ட் ஆகிடுச்சு. நன்றிக் கடன் மாதிரி அவர் பொண்ணை எனக்குக் கட்டுறதுன்னு என்னைக் கேக்காமயே என் மேரேஜை ஃபிக்ஸ் பண்ணிட்டாரு எங்கப்பா. என்னால எதுவும் சொல்ல முடியலை. `என்னை மன்னிச்சிடு'ன்னு ஒரே ஒரு லெட்டர் நாலு வரி எழுதிப் போட்டேன். அதுக்கு அவ பதிலே போடலை. ஆனா, அவ முகம் எப்படி இருக்கும்னுகூட தெரியாத அந்த முதல் காதல் இன்னிக்கு வரைக்கும் மனசுல அப்படியே இருக்கு பாஸ்கர்.’’

“இனிமே உனக்கு அந்தக் குற்ற உணர்ச்சியோ, உறுத்தலோ வேணாம் கிருஷ்ணா. நீ அர்ச்சனாவுக்கு துரோகம் எதுவும் செய்யலை.’’

“என்ன சொல்றே? புரியலை.’’

“என்னை மன்னிச்சுடு கிருஷ்ணா. நீ கொடுத்த அந்த லெட்டர்ஸை இன்னிக்குப் படிச்சேன். உன் காதல் அப்பறம் என்னாச்சு, அர்ச்சனாவைத்தான் நீ கல்யாணம் செஞ்சியான்னு தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம். அதனாலதான் உன்னைக் கான்டாக்ட் செய்ய நினைச்சேன். விழுப்புரம் அட்ரஸ் இருந்ததால தேடி வந்தேன். இன்ஃபாக்ட் இப்போ அர்ச்சனாவோட அண்ணனை சந்திச்சுப் பேசிட்டுதான் ஊர் திரும்பிட்டு இருக்கேன்.’’

“ஓ... மை காட்! அர்ச்சனா எங்க இருக்கா பாஸ்கர்?’’

“அர்ச்சனா பத்து வயசுலயே செத்துப் போயிட்டா கிருஷ்ணா.’’

“என்னப்பா உளர்றே? நான் லவ் செஞ்ச அர்ச்சனா பி.எஸ்சி பாட்டனி படிச்சவ.’’

“சொன்னா காமெடியா இருக்கும். நீ கிட்டத்தட்ட நாப்பது வருஷமா முட்டாளாவே இருந்திருக்கே கிருஷ்ணா. இப்ப நீ என்னை விசாரிச்ச மாதிரி அர்ச்சனாவுக்கு என்னாச்சுன்னு தெரிஞ்சிக்க முயற்சி செஞ்சிருந்தா எப்பவோ உண்மை புரிஞ்சிருக்கும் உனக்கு.’’

“தெளிவா சொல்லு. என்னாச்சு அவளுக்கு?’’

சாமிநாதன் சாரிடம் இரண்டாம் முறையாகக் கதவைத் தட்டிப் பேசியதை எல்லாம் அப்படியே அவனிடம் சொல்லி முடித்ததும் கிருஷ்ணா பெருமூச்சுவிட்டான்.

“ச்சே! எவ்வளவு பெரிய லூஸுடா நான்! இத்தனை வருஷமா அர்ச்சனாவுக்கு துரோகம் செஞ்சுட்டமேன்னு புழுங்கிப் புழுங்கி நொந்திருக்கேன். அந்த சாமிநாதனை பொளேர்னு கன்னத்துல அறையறதுக்காகவே நான் இந்தியா வரணும் பாஸ்கர்’’ என்றான்.

மறுபடியும் கதவைத் தட்டி, அவர் திறந்ததும், “திரும்பவும் தொந்தரவு பண்றோம்’’ என்றேன்.

“பரவால்ல... சொல்லுங்க!’’

“இங்க வேற எதாச்சும் எல்.ஐ.சி ஏஜென்ட் இருக்காரா?’’

“இல்லையே சார். உங்க வைஃபோட எப்பவோ ஒண்ணாப் படிச்ச பொண்ணை எதுக்கு இவ்ளோ மெனக்கெட்டு தேடறீங்க?’’ என்றார் சாமிநாதன்.

“சார்... வெளிப்படையாவே சொல்றனே... எனக்கு கிருஷ்ணமூர்த்தின்னு ஒரு ஃப்ரெண்டு. அவனும் நாங்க தேடற அந்த அர்ச்சனாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்காம லெட்டர்லயே பழக்கமாகி சின்சியரா லவ் செஞ்சாங்க. அப்பறம்...’’

என்னை முடிக்கவிடாமல், “கடவுளே! அந்த கிருஷ்ணாவோட ஃப்ரெண்டா நீங்க? இதை மொதல்லயே சொல்லியிருக்கக் கூடாதா? உள்ள வாங்க சார். அட... வாங்க சொல்றேன். பெரிய காமெடியே இருக்கு’’ என்றார்.

மீண்டும் நாங்கள் உள்ளே வந்து அமர்ந்ததும், என் கைகளைப் பிடித்துக்கொண்டார். ``அந்த கிருஷ்ணாவை எப்பவாச்சும் பார்த்தா நான் செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேக்கணும்னு நினைச்சுட்டே இருந்தேன். அவர் சார்பா நீங்க என்னை மன்னிச்சுடுங்க.’’

“எதுக்கு?’’ என்றேன் புரியாமல்.

“சார்... அந்த டைம்ல பேனா நட்புன்றது ரொம்ப பிரபலமா இருந்துச்சு. நினைவிருக்கா? அதுலயும் முகம் தெரியாத பொண்ணுங்களுக்கு லெட்டர் எழுதிப் பழகறதுல ஒரு தனி கிளுகிளுப்பு. சின்ன வயசு பாருங்க. எனக்கு ஒரு சேட்டை புத்தி. செத்துப்போன என் தங்கச்சி அர்ச்சனா பேர்ல ஆம்பளைப் பசங்களுக்கு லெட்டர் எழுதிப் போட்டுக்கிட்டிருந்தேன். உங்க ஃப்ரெண்டு பொண்ணுன்னே நினைச்சு எழுதினார். அப்பறம் லவ் பண்றேன்னார். நானும் அதுக்குத் தகுந்த மாதிரியே காதல் சொட்டச் சொட்ட எழுதிக்கிட்டிருந்தேன். ஒரு நாள் `என்னை மறந்துடு, மன்னிச்சுடு'ன்னு எழுதினார். அதோட அந்த சாப்டர் முடிஞ்சுது. கிருஷ்ணா மாதிரி வெங்கட், பரணின்னு இன்னும் ரெண்டு மூணு பேருக்குக்கூட எழுதிட்டிருந்தேன். கிருஷ்ணா இப்ப எங்க இருக்கார்?... நல்லா இருக்காரா?’’ என்ற சாமிநாதனை என்னால் மனதில் மட்டுமே அறைய முடிந்தது.