Published:Updated:

பாட்டுக் கச்சேரி - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

- தமயந்தி

பாட்டுக் கச்சேரி - சிறுகதை

- தமயந்தி

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

திடீரென ஒரு வால் நட்சத்திரம் வானத்திலிருந்து இறங்கி வந்து மேலே விழுவது போல் கனவு இப்போதெல்லாம் கெளரிக்கு அடிக்கடி வருகிறது. நடுநிசியில் எழுந்து உட்கார்ந்து தண்ணீர் குடிக்கக்கூட முடியவில்லை. நாக்கு தொண்டைக்குள் இழுத்துக்கொண்டாற்போலொரு உணர்வு. பன்னீர்ப்பூக்கள் வெளீரென விரிந்து கிடக்கும் சாலையில் நடுவில் கிடக்கும் நெருஞ்சி முள்ளாய் ஒரு உணர்வு. இதெல்லாம் சங்கரிடம் சொன்னால் “உனக்குன்னு ஸ்பெஷலாதான் எல்லாமே வருது...தோணுது” என்பான். அவனிடம் சின்னச் சலிப்பு இருக்கிறது இப்போதெல்லாம். முதன்முதலில் கச்சேரி முடித்து வேனில் இரவு வந்துகொண்டிருக்கும்போது ``உம் பேரு கெளரி, எம் பேரு சங்கர்... கெளரி சங்கரு... நல்லாருக்குல்ல” என்றான்.

சாத்தான்குளத்தில் கச்சேரி முடித்து ஆயாசமாய் வரும் வேளை. நாசரேத் கறிக்குழம்பு மாதிரி கல்யாண வீட்டில் போட்டார்கள். பாடிப் பாடிப் பசித்த வயிற்றுக்கு எல்லாத் துயரும் நீங்கி ஆயாசம் புத்துணர்வாய்ப் பிறந்தது. ``இங்கிட்டுதான ரெண்டு பேர - அப்பா புள்ளய போலீஸ் அடிச்சுக் கொன்னுட்டாக’’ என்று ஏஞ்சலின் கேட்க, யாருக்கும் தெரியாமல் சங்கர் அவள் காலை மிதித்ததை இவள் பார்த்துவிட்டாள். வேனில் ஏறியதும் அவ்வளவு சுகமான அயர்வாய் இருந்தது. மரக்கிளை நிழல்களோடே இரவுக் காற்றில் வானில் அரைநிலவு மெட்டடார் வேனின் அதிர்வில் அங்குமிங்குமாய் அலைவதைப் போலிருந்தது இவளுக்கு.

“ஆஹ்…”

“கேக்கலயா?” என்று காதுப் பக்கமாய் கிசுகிசுப்பாய்க் கேட்டான். “இல்ல திரும்பக் கேக்கணும்னு சொல்றியா?”

“கெளரிசங்கர்ங்கிறது உங்க ப்ரெண்டா? இல்ல... என்ன ப்ரோபோஸ் பண்றீங்களா?”

அவன் அலுப்பாய் முகத்தைத் திருப்பிக்கொண்டான். அன்றுதான் கச்சேரியில் “வான்நிலா நிலா அல்ல” பாடியிருந்தான். கூட்டத்தில் மஞ்சள் சுரிதார் போட்ட ஒரு பெண்ணைப் பார்த்துப் பாடினமாதிரி இருந்தது என்று ஏஞ்சலின் சொன்னாள். ஏஞ்சலின் அம்மா கச்சேரிக்கு எப்போதும் கூட வந்துவிடுவாள்.

“பொம்பளப் புள்ளங்கள காலைல வேலைக்கு வுடுறதே கஷ்டம்மா…இதுல ராத்திரி முழுக்க இதுகள கச்சேரிக்கு அனுப்பிட்டு வீட்ல உக்காந்திருக்க முடியாது. ஆமா… ஒனக்கு யாரும் வரலயா?”

“இல்ல... அம்மா சின்ன வயசுலயே போயிட்டா…”

“அப்ப... உங்கல்யாணம்?”

“ஏன்... நீங்க பாத்து வைக்கறீங்களா அத்த?”

“அச்சோ… இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு...”

“நீங்க ஒண்ணும் கேக்கல… ஆனா, என்னப் பொறுத்தவரைக்கும் இப்டி சும்மா சும்மா கல்யாணம் எப்பன்னு கேக்கறவங்கட்டல்லாம், என்ன பையன் பாக்குறதுலருந்து மண்டபம் பிடிச்சு அட்வான்ஸ் கொடுத்துத் தாலி கட்றது வரைக்கும் பாத்துக்கச் சொல்ல வேண்டியதுதான். எப்டி... செய்றீங்களா அத்த?”

அவருக்கு உடனே இருமல் வந்து உடனே தண்ணீர் குடிக்க எழுந்து போனார். அவர் போவதையே நிழல் நகர்வதுபோல் இவள் பார்த்தாள். துகள் துகளாய் அவர் அந்தக் கச்சேரி விளக்குகள் மத்தியில் பஸ்பமாகிப்போவது போலிருந்தது. அன்று இவள் “ஒரு கணம் ஒரு யுகமாக’’ பாடலைப் பாடியபோது சங்கர் இளையராஜா பாடும் இடத்தில் பாடாமல் இவளையே பார்த்து நிற்க, இவள் லேசாக கையால் அவனைத் தட்ட, சட்டெனப் பாடினான். வாத்தியக் குழு அவன் தவற விட்டதைத் தள்ளிப் பிடித்து சமன் செய்தார்கள்.

பாட்டுக் கச்சேரி - சிறுகதை

“என்னாச்சு’’ என்றாள் பாடி முடிந்ததும்.

“இல்ல… ஏஞ்சலினா அம்மா சொன்னத யோசிச்சேன்… ஸ்டக் ஆயிருச்சு.”

“கேவலமா இல்ல?”

“எல்லாரும் மனுஷங்கதான? புத்தி நெனக்கதுக்கு முன்னம மனசு நெனைக்கும்... இல்லன்னு மட்டும் தலையாட்டு... நீ பொய் சொல்லுதன்னு அர்த்தம்.”

“அவங்க என்னதான கேட்டாங்க, உனக்கு என்ன போச்சு?”

“இல்ல... யோசிச்சேன். இவ்ளோ திமிரா பேசுறியே, என்னத் தவிர உன்ன யார் கட்டிக்க முடியும்னு...”

“உனக்குத் தெரியும்தான?”

“என்ன?”

“சின்ன வயசுல நா கால் வலிக்க ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கிட்டு, புள்ள பெத்துக்கிட்ட பொறகா என் புருஷன் தூக்கு மாட்டிக்கிட்டான்னு. அது ஏஞ்சலினா அம்மாக்குத் தெரியாம இருக்குமா?”

“தெரிஞ்சிருக்கலாம்.’’

”தெரிஞ்சிக்கிட்டு கேக்கறவங்களுக்கு என்ன சொல்ல? நீங்க மட்டும் என்ன… என்னத் தவிர யாரு கட்டிக்க முடியும் உன் திமிரன்னு கேட்டா என்ன அர்த்தம்... எனக்கும் அந்த ஆசல்லாம் இருக்கோணும்.”

சங்கர் தோளைக் குலுக்கிக்கொண்டு தள்ளி நடந்தான். அவன் அங்கேயே நின்றிருக்க வேண்டும் என்று மனம் எதிர்பார்த்ததா என்று தெரியவில்லை. அவன் நேராக ஏஞ்சலினாவிடம் போய் குழைந்து பேசினான். ஏஞ்சலினாவுடன் அவன் குழைந்து பேசுவான் என்று தெரியும் என்றாலும் அந்த நொடி ஏனோ வலித்தது. மொபைலில் டிஸ்ப்ளேயில் இருந்த குழந்தையின் படத்தைப் பார்த்தாள்.

பக்கத்திலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து புளிச் புளிச்சென முகத்தில் தண்ணீரை இறைத்தாள். அதன் குளிர்ச்சி மனசுள் ஒரு பாம்பின் நெளிதலோடு கடந்துபோனது போலிருந்தது. மனசுக்குள் ஜானகியம்மா குரல் தேய்ந்து “தினம் தினம் உனை எதிர்பார்த்து மனம் ஏங்கிப்போனதோ?” என்ற வார்த்தையோடு மறைந்துபோனது. இந்தப் பாடல் எழுதும் போது இளையராஜாவுக்கு என்ன மனநிலை இருந்திருக்கும் என்று இவள் நீண்ட நாள்கள் நினைத்ததுண்டு. ஒரு முறையாவது சாகும் முன்னே அவர் இசையில் கோரசாச்சும் பாடிவிட வேண்டுமென இவள் சொன்னபோது சங்கர் சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் புரையேறும் வரை சிரித்தான்.

“நீ பாடுனா... நான் சாகவா?”

“க்கும்... நடக்கும்.”

“உனக்கெல்லாம் இது காசு கெளரி... எங்களுக்கெல்லாம் இந்தக் கச்சேரி மேட இளையராஜாலாம் உசுரு. ரெண்டுத்துக்கும் வித்யாசம் இருக்கு... எங்களாலயே இந்தப் பத்து பதினஞ்சி வருஷத்தில ஒரு மசுரும் அசையல…மிஞ்சினா கச்சேரி முடிவுல நாலு பொண்ணுங்க கடைக்கண்ணுல பாத்துட்டு நல்லாருக்குங்கிற மாரி தலையசைக்கும்…அதுங்க அதான் சொல்லுதுங்கன்னு மனசார நாங்க நெனச்சிக்கணும். ராப்பூரா ராஜா மியூசிக்ல பாடிட்டா இந்தப் பொண்ணுல ஒண்ணாச்சும் கட்டிக்கிடலாம்னு நம்பிக்க வரும். அப்புறம் பாத்தா அந்தப் பொண்ணுங்க கல்யாணத்துக்கே நாங்கதான்... எங்களுக்கே கெடைக்கலயாம்.”

இவள் கோபமாய் எழுந்து போய்விட்டாள். அன்று இரவு அவன் மெசேஜ் செய்து ‘சாரி’ கேட்டான். அதற்கு பதில் சொல்லாமல் இருக்க, அவன் கால் செய்தான். அவள் எடுக்காமல்போக, தொடர்ந்து செய்தபடியே இருந்தான். பிறகு ஒரு மாசம் பிளாக் செய்தாள். கச்சேரியும் வரவில்லை என்று சொல்லிவிட்டாள். வீட்டில் இருந்து அம்மாவின் புலம்பல்களைக் கேட்பதைக் காட்டிலும், சங்கரை சகித்துக்கொண்டு கச்சேரிக்குப் போய்விடலாமா என்றே அவளுக்குத் தோன்றியது. குழந்தையைக்கூட அவள் வசவு பாடினபடிதான் இருந்தாள். மெய்ஞ்ஞானபுரத்திலிருந்து ஏதோ பள்ளிக்கூட சத்துணவுக் கூடத்தில் வேலை இருக்கிறது என்று பக்கத்து வளவு அக்கா சொன்னதுதான் தாமதம்.

“இந்தப் பொட்டச்சிக்கு எங்க அறிவு போகுது… நல்லவன்னு நெனச்சு நம்மல்லாம் ஆகாதவங்கன்னு தலய குனிய வச்சிட்டுப் போயிட்டா. அங்காச்சும் நல்லா வாழ்ந்துட்டான்னு சொல்ல வுடுறாளா… பாதகத்தி. என்ன எழவுக்குத் தூக்குல தொங்குனான்னு இப்ப வரைக்கும் சொல்ல மாட்டேங்கா. ஊர் பூரா இவ எவங்கூடயோ படுத்துக்கெடந்தத பாத்து மாட்டிக்கிட்டான்னு சொல்லுதாக... தேவையா சாவப்போற வயசுல இதெல்லாம் சகிக்க? நானே மாட்டிக்கிட்டுப் போயிறணும்னு இருக்கு. இப்ப எழவு கச்சேரி வேற. பேசாதைக்கு கோமதி ஆச்சி பேத்தி சொன்ன மெய்ஞ்ஞானபுரம் வேலைக்குப் போலாம். அங்கிட்டு பால்வாடி இருக்காம்... அப்டியே குழந்தைய விட்டுக்கலாம்… சொன்னா கேட்டாதான? தான் போற மூப்புல போய்ச் சாவ வேண்டியதுதான்.”

ஏஞ்சலினா போன் செய்ய அம்மா சட்டென குரலை கம்மி செய்துகொண்டாள்.

“அடியே லூசு... நீ எப்ப வாரன்னு இருக்கு. சங்கரும் லாசரசும் மெகா கச்சேரி மேளான்னு டவுன்ல காந்தி சிலயாண்ட பண்ணப் போறாகளா. லாசரஸ் உன்ன கூப்பிடச் சொன்னான். இந்த சங்கருதான் `வேணாம் வேணாம்... பெரீய்ய இவ... பிளாக் பண்ணி வச்சிட்டா’ன்னு சொல்லிட்டான். நீ பேசாதைக்கு லாசரஸுக்கு போன் போட்டுச் சொல்லுடி… உன்னாட்டம் ஜானகியம்மா பாட்ட யாருமே பாட முடியாதுன்னு அந்தப் பய சங்கரே சொல்றான்… பூரா இப்ப ரெண்டு பேரும் மஜா குடி. கச்சேரிக்கு பொண்ணுங்க வந்தா கடல போடுறதுன்னு அலையுறானுக.”

பாட்டுக் கச்சேரி - சிறுகதை

“அப்டியா? நீ ..த்தல்லாம் நல்லாருக்கீங்களா?”

“இருக்கோம். ம்மா சங்கரங்கோவில்ல மாப்ள பாத்துச்சு… சினிமாப்பாட்டு கச்சேரி பாடுற சி.எஸ்.ஐ பொண்ணு வேணாம்னு சொல்லிட்டாக. எனக்குப் புரில கெளரி. என்னத்துக்குக் கல்யாணம் கட்டிக்கிறோம்... சோறு பொங்கவா? புருஷன்னு ஒருத்தன் இருந்தா ஒருபய நம்மட்ட பேச மாட்டானே... அதுக்கா? புள்ள பெத்துக்கறதுக்கா? இல்ல, லவ்வுன்னு சொல்றாங்களே... அது என்ன எழவுன்னு கண்டு பிடிக்கறதுக்கா?’’

“ம்ம்ம்”

“நீ ஞானியாயிட்டன்னு நெனைக்கறேன். லாசரஸ்ட்ட பேசுறியா? எப்டி செலவ சமாளிக்கற?”

“காய்கறிக் கடைல கணக்கு எழுதப் போறேன்.”

“எவ்ளோ?”

“150 ரூபா.”

“பேசாம வந்து சேரு... சொல்லிட்டேன்.எசலிட்டு கெடக்காத... சரியா? சங்கரு கெடக்கான் கிறுக்கன். உன்னயும் கட்டிக்கிறேன்னு சொல்லுவான், என்னயும் சொல்லுவான்... நம்ம கண்ணு முன்ன இன்னொருத்தியையும் ரூட்டு வுடுவான். அவன் சாதா சங்கரு இல்லடி... ரூட்டு சங்கரு.”

“சாப்டியா?”

“உங்கிட்ட பேசதுக்கு...”

டக்கென போனை வைத்துவிட்டாள். ஒரு துரும்புச் சத்தம்கூடக் கேட்காமல் ஒரு நிமிடம் இருக்குமா? இருந்தது. மனசோரமாய் லேசாய் விதிர்க்க, அரிசியை வேகமாகக் கிண்டினாள். குழந்தைக்கு அரிசியை ஏலக்காயோடு அரைத்து அருணாசலம் அண்ணன் ஊற்றுகிற தண்ணீர் பசும்பாலில் பாதி நீர் ஊற்றிக் கொடுத்தால் அது பசியோடு சொர்க்கத்தில் உட்கார்ந்து சாப்பிடுகிறது. சட்டென ஒரு கணம் சங்கர் இந்த வீட்டில் குழந்தைக்கு செரிலாக் கொடுப்பதுபோல் தோன்ற, குடத்தில் நீர் மொண்டு கண்ணைக் கழுவினாள். ஓரமாய்ப் படிந்திருந்த பூளையை எடுத்து முந்தானையில் துடைத்தாள்.

மூன்று நாள் கழித்து சங்கரே வீட்டுக்கு வந்து எதுவுமே நடக்காதது மாதிரி வந்து அம்மாவிடம் மெகா கச்சேரியில் இவள் பாட ஐயாயிரம் ரூபாய் அட்வன்ஸ் கொடுத்தான். அம்மா சட்டெனக் கொத்தமல்லிக்காப்பி போட உள்ளே போக, இவன் குழந்தை கையில் வேஃபர்ஸ் பிரித்துக் கொடுத்து மடியில் வைத்து “அவ்ளோ கோவமா? என்ன சாதிக்கப்போற? பாரு... கழுத்து எலும்பெல்லாம் புடைக்குது” என்றான்.

“என்னக் கட்டிப்பீங்களா?”

அவன் ஒரு நிமிடம் கையைப் பிடித்துக் கொண்டு “பின்ன... சும்மா வாழ இல போட்டு சாம்பார்னு பேப்பர்ல எழுதி வைப்பேன்னு நெனைச்சியா பயித்தியகாரி… சாயந்தரம் ப்ராக்டீஸ்... வந்து சேரு... பேசிக்கலாம்” என்றான்.

அன்று மாலை ப்ராக்டீஸ் சமயமே வ.உ.சி மைதானம் பின்னாலிருக்கும் காளான் கடையில் கார்ன்ப்ளேக்ஸ் மிதக்கும் காளானை வாங்கிக் கொடுத்து “கல்யாணத்தை எப்ப வச்சிக்கலாம்? யோசிச்சு சொல்லு. அந்த ஏஞ்சலின் கீஞ்சலீன்ட்ட ஒளறாத. அது ஒரு கழுத… பொறாம மூட்ட” என்றான். அன்று இரவு குழந்தையின் கரத்தைக் கழுத்தில் இறுக்கிக்கொண்டு தூங்கினாள்.

மெகா கச்சேரியின் டிக்கெட் சும்மா பறந்த தென்றுதான் சொல்லவேண்டும்... அத்தனை அற்புதமாக அது நடந்தது. வாகையடி முக்கிலிருந்து காந்தி சிலை வரைக்கும் கூட்டம் வழிந்தோடி நெல்லையப்பர் கோவிலிலிருந்தே ஆரெம்கேவி வழியாய் பேருந்துத் தடத்தையெல்லாம் மாற்றி விட்டிருந்தார்கள். ஏஞ்சலின் அம்மாவுக்கெல்லாம் பயங்கர சந்தோஷம். சாப்பிடும்போது பக்கத்தில் வந்து “பத்தாயிரம் ரூபா அட்வான்ஸ் கொடுத்தப்பவே எப்டி இப்டி தண்ணியா செலவழிக்குதானுகன்னு நெனச்சேன்... பரவால்ல பரவல்ல” என்றபடி குட்டி பரோட்டா மேல் இன்னும் கொஞ்சம் சால்னா விட்டுக்கொண்டாள்.

சாப்பாட்டுத் தட்டைக் குப்பையில் போட வந்த சங்கரின் பின்னாலேயே போய், “ஏஞ்சலீனா கீஞ்சலீனாக்கு பத்தாயிரம் அட்வான்ஸ் கொடுத்தீயளா?” என்றாள். அவன் சிரித்து, “என்னாடி வீட்டுக்காரம்மா… தாலி கட்றதுக்கு முன்னாலயே கணக்கு கேக்குற... அவட்ட கேளூ, மூதி... பொய்ப் பரம்பர… சரியா ரெண்டாயிரத்தைந்நூறுதான் வெட்டினேன்...” என்று பேசி ப்ளேட்டை தூர எறிய, இவள் விறுவிறுவென நைனார் குளம் பஸ் ஸ்டாண்ட் பக்கம் நடக்க, அவன் போய் பைக்கை எடுத்துக் கொண்டு வந்து மறித்து நின்று “என்ன நம்ப மாட்ட இல்ல?” என்றான்.

வந்த பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து இவள் போக அவன் பைக்கில் பின்னாலேயே வந்து, ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் இறங்கு இறங்கு என்று போனில் சொன்னான். அவள் இறங்கினதும் கையில் இருந்த மோதிரத்தை இவள் விரலில் போட்டு விட்டான். இவள் எதற்கென்றே தெரியாமல் தேம்பி அழ, அவளை அப்படியே அணைத்துக்கொண்டு பைக்கில் உட்கார வைத்து, கன்னியாகுமரி கூட்டிப் போனான். அம்மாவிடம் இவள் காலையில் வருவதாகச் சொல்ல, அவள் “எவ்ளோ கெடச்சிது... பய தூங்கிட்டான். காலைல வெள்ளன வந்துரு” என்றாள். குளிர்காற்றில் “ஒரு கணம் ஒரு யுகமாக’’ பாடினாள். காலையில் கிளம்பும் போது, அடுத்த வாரம் அவன் அம்மாவோடு வந்து இவள் அம்மாவிடம் பேசுவதாகச் சொன்னான். லாசரஸ் பெண்களோடு சரக்கு போட்டுக் கூத்தடிப்பதாகச் சொன்னவன், தனியாக ட்ரூப் ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னவன், அதற்குப் பிறகு ஊருக்குப் போய் அம்மாவைக் கூட்டி வருவதாகச் சொன்னான். ஒரு முறை போனில் அவன் அம்மாவும் பேசி நலம் விசாரித்தாள்.

“நல்லாருக்கியா தாயீ... அழகா பாடுவேன்னான். புள்ள இருக்காமே? போட்டோல சின்னப் புள்ளையாருக்க…”

“எப்ப வரீகம்மா?”

“வேற என்ன, கண்ணாலம் பேசதான் வரணும்.”

அதற்குப் பிறகு எப்போது கூப்பிட்டாலும் அவசர அவசரமாகப் பேசினான். அம்மாவுக்கு பி.பி., ஆஸ்பத்திரி என்று ஆயிரம் காரணங்கள். புரியாத குழப்பங்கள் ஆயிரம் மனசிலோட வால் நட்சத்திரம் தினமும் தூக்கத்தில் விழுந்தது. கச்சேரி என்று லாசரஸ்தான் கூப்பிட்டான். “சங்கரு அம்மா டிஸ்சார்ஜ் ஆயிட்டாகளா” என்றதுக்கு, “அட எழவே… உனக்கு விஷயம் தெரியாதா... அந்த ஏஞ்சலின் புள்ளைய திடும்னு கட்டிக்கிட்டான்’’ என்றான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism