Published:Updated:

பொன்னெனக் கொண்ட பொழுதிலே... சிறுகதை

பொன்னெனக் கொண்ட பொழுதிலே...
பிரீமியம் ஸ்டோரி
பொன்னெனக் கொண்ட பொழுதிலே...

- வி.உஷா

பொன்னெனக் கொண்ட பொழுதிலே... சிறுகதை

- வி.உஷா

Published:Updated:
பொன்னெனக் கொண்ட பொழுதிலே...
பிரீமியம் ஸ்டோரி
பொன்னெனக் கொண்ட பொழுதிலே...

அந்தப் பெண்கள் விடுதியின் கடைசி அறை மட்டுமே காலியாக இருந்து, அவளுடைய அவசரத்துக்கு அதுதான் கிடைத்தது. என்றாலும், அதிலிருந்த ஒரே ஒரு சலுகையாக செம்பருத்தி மலரின் கிளைகள் காணக் கிடைத்தன. சில நேரம் மலர்களும். அதிலும் அடர் செம்பருத்தி.

வி.உஷா
வி.உஷா

சபர்மதி ஜன்னல் கம்பிகள் மேல் முகம் பதித்து அந்தச் செடியை மிருதுவாகப் பார்த்துக்கொண்டிருப்பாள். அறையையொட்டி இருக்கிற பொதுக் குளியலறை, பொதுக் கழிப்பறை என்று கலந்துகட்டி வருகிற மணங்களோ, நாற்றங்களோ எதுவும் தெரியாது. மெல்லிய கிளை, அடர் பூவின் பாரம் தாங்காது இப்படியும் அப்படியும் அசைந்தாடுவது மட்டுமே தெரியும். உனக்கும் எல்லாமே சுமைதானா என்று தோன்றும். செம்பருத்தி தைலம், செம்பருத்தி தேநீர், செம்பருத்தி ஷாம்பூ, செம்பருத்தி சோப்பு என்று உலகம் எத்தனை பிழி பிழிகிறது உன்னை? அவ்வளவு வலிகளையும் தாங்கிக்கொண்டு ஒன்றுமே நடக்காதது போல புன்னகைக்கும் பெண்கள் போல நீயும் நாடகம் ஆடுகிறாயா மலரே என்று நினைத்துக்கொள்வாள்.

லயாவின் முகம் அப்படியே மேலெழும்.

``அம்மா… உனக்கு ஏன்தான் பூ மேல ஆசையோ? எனக்கு பிளைன் கிரவுண்ட்தான் வேணும். டென்னிஸ், கிரிக்கெட், த்ரோ பால் இப்படி...என்ன வேணா விளையாட லாம் '’ என்பாள் உதட்டைச் சுழித்து.

சபர்மதி அந்த ரம்மியத்தை ரசித்தபடியே சொல்வாள்.

``பூக்கள்கிட்ட நாம கத்துக்க நெறைய விஷயங்கள் இருக்கு லயா குட்டி. ஒரே நாள் வாழ்ந்தாலும் எப்படி ஒளி வீசி வாழுறது, மௌனமா எப்படி மகிழ்ச்சியை வெளிப்படுத்துறது, தன் நறுமணத்தை, தானே வெச்சுக்காம எப்படி விநியோகிக்கிறது, சொட்டு தேன் இருந்தாலும் தானம் கொடுத்துட்டு சந்தோஷமா இருக்குறது. இன்னும்...’’ என்று அவள் முடிப்பதற்குள் லயா எழுந்துவிடுவாள்.

``இதை எல்லாம் நான் அம்மாகிட்டயே கத்துப்பேனே... நீயும் இதே வெரைட்டிதானே அம்மா? எல்லாத்தையும் எல்லாருக்கும் கொடுத்துடுவேதானே? ஆனா அப்பா, பாட்டி, தாத்தா, அத்தை யாரும் உன் மாதிரி இல்லேம்மா... அவங்களுக் கெல்லாம் அவங்கதான் ஃபர்ஸ்ட்… மத்ததெல்லாம் அப்புறம் தான்.’’

``இட்ஸ் ஓகே லயா குட்டி... நீ எப்படி இருக்கணும்னு நீயே டிசைட் பண்ணிக்கோ.’’

``இப்பவா... ஏழு வயசுலயா?’’

``இப்பன்னா இப்ப இல்லே… எல்லாத்தையும் கவனி… எல்லாத்தையும் கேளு… எது சரின்னுபடுதோ அப்படி இரு.’’

விடுதியின் அறை வாசலில் பாமினி வந்து நின்றாள். அவளைப் பார்த்ததும் குழந்தை லயாவின் நினைவிலிருந்து மீண்டு, நிகழ்காலத்துக்கு வந்தாள் சபர்மதி.

``ஏன் அங்கயே நிக்கற பாமி? உள்ளே வா.’’

``காபி குடிச்சியா?’’

``நான்தான் காபி குடிக்கிறதில்லையே பாமி.’’

பாமினி உள்ளே வந்தாள். தரையில் உட்கார்ந்து கால்களை நீட்டிக்கொண்டாள்.

``காலைல நாலு மணிக்கெல்லாம் முழிப்பு வந்துடுச்சு சபர். உன் நினைவுதான். தூக்கமே வரலே. படுபாவி. நல்லா இருப்பானா அந்த நாகப்பாம்பு… சீ… பேரைப் பாரு... நாகநாதன்.’’

``பெயர்ல என்ன இருக்கு பாமி? ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ்… நீதான் ஷேக்ஸ்பியர் ரசிகை ஆச்சே.’’

``ம்ம்… எத்தனை மணிக்கு இன்னிக்கு கோர்ட்?’’

``மூணு மணிக்கு… ஆடிட்டிங் போய்க்கிட்டி ருக்கு ஆபீஸ்ல… மூர்த்தி சார் ஒரே டென்ஷன்… எப்படி பெர்மிஷன் கேட்டு கிளம்பறதுன்னு ஒரே கவலையா இருக்கு.’’

``லீவு போடலாம்ல... எப்பவும் ஓடிகிட்டே இருக்கணுமா?’’

``நான் ரொம்ப பிகினர் இல்லையா பாமி...இந்த வேலை எனக்கு எவ்வளவு முக்கியம்னு உனக்குத் தெரியுமே... இது கொடுக்கிற நம்பிக்கை, தைரியம் எனக்கு இந்த நேரத்துல அளவிடவே முடியாது பாமி.’’

பொன்னெனக் கொண்ட பொழுதிலே... சிறுகதை

``தெரியும் சபர்… நானும் வரேன் இன்னிக்கு… எங்க காலேஜ்ல இன்னிக்கு ஃபுட் ஃபெஸ்டிவல் டே… மத்தியானத்துக்கு மேலே வகுப்புகள் இல்லே. சபர், ஒரு விஷயத்தை மட்டும் கோட்டை விட்டுடாதே... பெருந்தன்மை, ஜென்டில்னஸ் அப்படி இப்படி பேர் வெச்சு லயாவை மிஸ் பண்ணிடாதே... சரியா?’’

``லயா... என் சுவாசம் பாமினி.’’

``அதான் சொல்றேன்… அந்த ஈவில் குடும்பம் உன்கிட்ட இருந்து எல்லாத்தையும் சுரண்டிட் டது. மெஷின்ல குடுத்து கரும்புல இருந்து சாறு எடுக்கிற மாதிரி. லயா உன்கிட்டதான் இருக்கணும். அங்க இருக்கறது அவளுக்கே நல்லதில்லே. இன்னொரு சுயநலவாதியா ஆக்கிடுவாங்க அவளையும்… புரியுதா?’’

``ஆமாம் பாமினி... உண்மைதான்.’’

``சரி கெளம்பறேன்... தைரியமா இருடா சபர்மதி... இன்னியோட எல்லா தீங்கும் போச்சுன்னு நெனச்சிப்போம்.’’

தோழியை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு பாமினி கிளம்பிப் போனாள்.

எங்கே ஆரம்பித்தது, எப்படி ஆரம்பித்தது, ஏன் ஆரம்பித்தது என்ற நிறைய கேள்விகளுக்கு அவளுக்குப் பதில்கள் தெரியும்.

கல்யாணமான முதல் ஆறு வருடங்கள் பெரிதாக பிரச்னைகள் இல்லை.  இயல்பான, இனிமையான காலம் அது. தன் பங்கு அதில் பெரும்பங்கு என்பது அவளுக்குத் தெரியும். நாகா சராசரி மனிதன். உணர்ச்சிகளின் தாக்கமே அவன் வாழ்க்கை. சிந்தனை, பண்பு, செயல், நேயம் என்று அவன் கற்றுக்கொள்ள விரும்பியதில்லை. இந்தப் பூமி தனக்காகவே தோன்றியது, மனிதனுக்கு மிஞ்சித்தான் மற்றதுக்கு என்று நம்பும் மனப்பான்மை கொண்டவன். எளியவர்களிடம் பரிவுடன் இருத்தல் என்கிற குறைந்தபட்ச தன்மைகூட அவனுக்குக் கிடையாது என்பதை முதல் மாதமே அவள் புரிந்துகொண்டிருந்தாள்.

மிக வருத்தமாகத்தான் இருந்தது. ஏழ்மையான மனிதனும் மரியாதையாக நடத்தப்பட வேண்டியவனே என்கிற தன்னுடைய நோக்கு அவனுக்கு அலட்சியமாக இருந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் மென்மையாகச் சொல்வாள். ஹோட்டல் சிப்பந்தியிடம், காவலாளியிடம், ஆட்டோ ஓட்டுநர்களிடம், கீரைக்காரம்மாக்களிடம் மிகவும் பரிவுணர் வுடன் நடந்துகொள்வாள். அவன் அதை ரசிக்காதவனாக முகம் திருப்பிக்கொள்வான்.

தன்னிடம் அவன் காதலுடன் இருப்பது ஒரு வகையில் அவளுக்குப் பிடித்திருந்தது. அந்த அன்பு ஏதோ ஒரு பலத்தைக் கொடுத்தது. அம்மாவும் அவளும் தனியாக வாழ்ந்த பதினாறு வருடங்களில் எத்தனையோ நேரங்களில் மூச்சுமுட்டலை உணர்ந்திருக் கிறாள். மூடிய குடுவையிலிருந்து பூதம் ஒன்று புறப்பட்டு வந்து கழுத்தை நெரிப்பது போல வலியைப் பார்த்திருக்கிறாள். கருணையற்ற சமுதாயத்தின் ஏளனப்பார்வைகள், படிப்புக் குக் கிடைக்காத வேலை, கைக்கும் வாய்க்கும் எட்டாத ஊதியம், சிறிய புற அன்பைக்கூடத் தரத் தயாராக இல்லாத உறவு என்று அந்தக் காலம் கொடிய காலம்தான். பாவம்... அம்மாதான் விடாப்பிடியாக எப்படியோ சிட்டுக்குருவி போல பணம் சேர்த்து, அவள் கல்யாணத்தை முடித்து வைத்தாள்.

``கண்ணு... அப்பாவுக்கும் சேர்த்து இந்தப் பெரிய கடமையை நான் முடிச்சுட்டேன். இனிமேல் நிம்மதியா கண்ணை மூடுவேன். என்னைப் பத்தி எந்தக் கவலையும் வேண்டாம் உனக்கு’’ என்று சொன்னவள், ஒரே வாரத்தில் தூக்கத்திலேயே மறைந்து போனாள்.

அதிர்ச்சியாக இருந்தாலும் பிரமிப்பாக இருந்தது. அம்மா ஒரு தூய்மையான தேவதை யாக வாழ்ந்து மறைந்திருக்கிறாள் என்று புரிந்தது. தன்னைத் தேர்ந்தெடுத்து அந்தத் தேவகுமாரி வந்துபோனது நெகிழ வைத்தது. இந்தக் கல்யாணத்தை நல்ல படியாகக் காப்பாற்றுவதே அம்மாவுக்குக் காட்டும் நன்றி என்று மனது சொல்லிற்று.

அதன்பின் நாகா மேல் அன்பு கூடிற்று. தண்ணீரை இரு கைகளாலும் அள்ளிப் பருகி தாகம் தீர்த்துக்கொள்வதுபோல, அவன் மேல் பேரன்பைக் கொட்டி தானும் எடுத்துக்கொண்டாள். அப்படி காதலும் கருணையும் மழையாகப் பொழிந்து குளிர்ந்த நாளில்தான் அவன் கேட்டான்.

``ஏ அழகுக் குட்டி… இப்பிடி இருக்கியேடி ஸ்டார் மாதிரி… சொல்லு உனக்கு லவ் ப்ரபோசல் வந்துதா, இல்லையான்னு?’’

அவள் புருவம் உயர்த்தி சிரித்தாள்.

``ஏன் கேட்கறேன்னா... அந்த வயசுல நானும் அப்படித்தான். நிர்மலான்னு பேரு. அவ மேல வந்தது காதல் எனக்கு. என் பர்சனாலிடிக்கு அவ வெறும் தூசு. ஆனா, பைத்தியம் மாதிரி அவளையே நெனச்சேன். நல்ல வேளை, பெரிய விபத்துல மாட்டி நடக்க முடியாம காலேஜ் விட்டு நின்னுட்டா. பொழச்சேன் நான்... நீ சொல்லு இப்ப.’’

``பாவமே... எனக்கும் ஒரு அனுபவம் இருக்கு நாகா.’’

``என்ன... பாத்தியா சொல்லவே இல்ல.’’

``பெரிய விஷயமா நான் நெனைக்கவே இல்லே நாகா... அவன் பேரு குமார்தாஸ். எனக்கு ரெண்டு வருஷம் சீனியர் காலேஜ்ல. எப்பவும் பின்னாடியே வந்தான். எங்க போனாலும் எனக்கு அது தொந்தரவா இருந்தது. திரும்பி பாத்தா டக்குனு மறைஞ்சுடு வான். என்னடா இது தொல்லைன்னு ஃபிரெண்ட்ஸ்கிட்ட சொல்லி அலுத்து கிட்டேன். அவனா... அவன் ஹீரோவாச்சே, சயின்டிஸ்ட்டா வருவானே, கிடார் பிளேயராச்சேன்னு ஒரே ஆச்சர்யம் எனக்கு. ஆனா, சத்தியமா அவனைப் பத்தி தெரியலே. என் நோக்கமெல்லாம் டிஸ்டிங்ஷன் வாங் கணும், நல்ல வேலைல உட்காரணும். ஒரு நாள் நேர்ல வந்து என் கைல லெட்டரை திணிச்சுட்டுப் போயிட்டான். படிச்சேன். ஒரே லிட்டரேச்சர் ஸ்டைல். பென்னி மார்க்ஸ், கீட்ஸ், எலியட்னு கொட்டேஷன்ஸ். வீட்டுக்கு வந்தா, அம்மா கைல கேசரியோட நிக்கறாங்க. நாகான்னு ஒரு ஜாதகம் வந்திருக்குடா சபர்மதி, அவ்வளவு பொருத்தமா இருக்கு, நாளைக்கே பெண் பார்க்க வராங்கன்னு வாயில் திணிக்கறாங்க ஸ்வீட்டை. அம்மா சிரிச்சு மகிழ்ந்த காட்சி ஒண்ணே போதும்னு இருந்தது எனக்கு. இதோ இப்ப நம்ம சொர்க்கம் கைல இருக்கு.’’

அவன் பிடி நழுவியது. பார்வையில் இருந்த இளக்கம் மறைந்தது.  

``என்ன பண்ண அந்த லெட்டரை?’’ என்றான். குரலின் கடுமை அவளை துணுக்குற வைத்தது.

``அவன்கிட்டயே திருப்பிக் கொடுத்துட்டேன். ஏன்?’’

``பொய்... உனக்கு இலக்கியம் பிடிக்கும். பத்திரமாதான் வெச்சி ருப்பே. காட்டு.’’

``ஓ காட்... என்ன நாகா பேச்சு இது? இந்த சம்பவம்கூட என் நினைவுலயே இல்ல... நீங்க வற்புறுத்திக் கேட்டதால யோசிச்சு தான் சொன்னேன்.’’

``அட... நம்பணுமா நான் இதை? எந்தப் பொண்ணும் முதல் காதலை மறப்பாளா என்ன? சோ, நான் செகண்ட் ஹேண்ட்... அப்படித் தானே?’’

``என்ன ஆச்சு உங்களுக்கு நாகா? என்னைப் பத்தி தெரியாதா என்ன? எனக்குப் பொய் சொல்லவே தெரியாது. இந்த நிமிஷம் என்ன யோசிக்கிறேன்னு கேட்டாகூட அப்படியே என்னால சொல்ல முடியும். யூ நோ தட்.’’

அவன் சீற்றத்துடன் சொன்னான்... ``அவ்வளவும் பொல்லாத்தனம் உனக்கு... மனசுக்குள்ள வெச்சிட்டு ருக்கே அவனை. வெளில என்கூட குடித்தனம் நடத்தறே. பாட்டு கேட்கும்போதெல்லாம் கிடார் கிடார்னு சொல்லுவியே... இப்ப தானே புரியுது... அய்யோ இப்படி நடத்தைக் கெட்ட ஒருத்தியா எனக்கு வந்து சேரணும்...’’

அன்று மழை கொட்டி, இடி இடித்து, மின்னல்கள் பச்சை மரங்களை கீறிப் பிளந்த நாள் என்பதுகூட நினைவில் இருக்கிறது. தொடர்ந்து அவளை சீண்டிக் கொண்டே இருந்தான். இப்படி யெல்லாம் சிந்தனைகள் தரம் கெட்டுப் போகும் என்று கற்பனைகூட செய்திராத அவளுக்கு அதிர்ச்சியும் அவமானமும் தாங்க முடியாமல் இருந்தன. நிஜமாகவே அவன் அப்படி நம்புகிறான் என்று புரிந்த போது பரிதாபம் கொள்வதா, புரிய வைப்பதா, மன்றாடுவதா, சண்டை யிடுவதா என்று தெரியவில்லை.

அடுத்தகட்டமாக வீட்டில் இருப்பவர்களிடம் விஷத்தைப் பரப்பினான். தன் தமக்கை அடுத்த ஊரிலிருந்து வந்தபோது அவள் குடும்பத்திடமும் சொன்னான். பார்வையே வெறுப்பைக் கக்கிற்று. இப்படியா ஒருவன் மாற முடியும், அதுவும் ஆதாரமில்லாத குற்றச் சாட்டை ஒருத்தியின் மேல் சுமத்தி, தானும் அதை நம்பி, மற்றவர்களையும் நம்பவைத்து… அய்யோ என்று உள்ளே அவளுக்கு அலறல்கள் ஆரம்பித்தன.

லயாவிடமும் சொல்லி அந்தப் பிஞ்சு மனதை நஞ்சாக்கத் தொடங்கியபோதுதான் அவள் அழுத்தமாகக் குறுக்கிட்டாள்.

``இது பெரிய தப்பு… குழந்தை மனசைக் கெடுக்காதீங்க. இப்பவும் சொல்றேன்… இறந்த என் அம்மா மேல ஆணையா சொல்றேன். உங்களைத் தவிர வேற யாருக்கும் என் மனசுல இடமே இல்லை. இதை எப்படி நிரூபிக்கிறதுன்னும் தெரியலை. நீங்க யாரோ நிர்மலா பத்திச் சொன்னப்ப அப்படியே முழுசா நம்பினேன். நீங்களும் அதே போல முழுசா என்னை நம்பணும். இதான் நம் தாம்பத்யத்தின், பேரன்பின் அடையாளம்...’’ - அவள் முடிக்கும் முன்பே அவன் குறுக்கிட் டான்.

``நிறுத்துடி. நிர்மலா விஷயம் நானா சொன்னது. அவ்வளவு நேர்மையானவன் நான். ஆனா, நீ அப்படியா... நானா கேட்டபிறகுதானே சொன்னே... அவ்வளவு கள்ளத்தனம். எந்த ஆம்பிளைடி ஏத்துக்குவான் பொண்டாட்டி மனசுல ஒருத்தன்கூட படுத்துகிட்டு இருக்கறத..? உன் மூஞ்சிய பாக்கவே பிடிக்கலடி. கெளம்பு நீ.’’

``என்ன பேச்சு நாகா இதெல்லாம்? என் அன்பு உங்களுக்கு போலித் தனமா இருக்கா? எது நிஜம், எது நடிப்புன்னுகூட புரியாத குழந்தையா நீங்க? வேண்டாம்... நான் மென்மையா, மிருதுவா, அமைதியா இருக்கேன்... ஏன்னா, எப்படியாவது உங்களுக்கு என்னைப் புரிய வெச்சுடலாம்னு நம்பிக்கைல இருக்கேன். என் அன்பு அதை செய்து காட்டும்னு நம்பிக்கைல இருக்கேன்.’’

``நான் கேட்கலேடி… அன்பாம் அன்பு… தரம் கெட்ட ஒருத்தி எனக்கு அன்பு காட்டணும்னு நான் ஒண்ணும் காத்துக் கெடக்கலே. அது அவமானம் எனக்கு. போயிடு… அந்த கிடார்க்காரனோடவே குடித்தனம் நடத்து. எனக்கு என் அப்பா, அம்மா, அக்கா, லயா போதும். போயிடுடீ.’’

பொன்னெனக் கொண்ட பொழுதிலே... சிறுகதை

அதற்குப் பின் அவர்கள் எல்லோருமே அவளை மூலை நோக்கித் தள்ளினார்கள். எப்படி அதில் அவ்வளவு ஒற்றுமையாக இருந்தார்கள் என்பது அதிசயமாகத்தான் இருந்தது.

அக்கம்பக்கம் வீடுகளுக்கும் விஷயம் பரவிவிட்டது. வழக்கமாகச் செல்லும் ஆட்டோ ஸ்டாண்டு வண்டிகளின் ஓட்டுநர்கள் வெளிப்படை யாகவே கொச்சையாகப் பேச ஆரம்பித்தபோது, அவள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்.

``சரி நாகா… நான் கிளம்பறேன்… உங்களுக்கு டைவர்ஸ் வேணும்னாலும் கொடுத்துடறேன்... லயா மட்டும் போதும் எனக்கு... லயா வாடி கண்ணு’’ என்று சூட்கேஸுடன் அவள் நின்றபோது மாமியார் ஓடி வந்து லயாவைத் தூக்கிக்கொண்டாள்.  மாமனார் அரண் போல இருவரையும் அழுத்தமாகப் பிடித்துக்கொண்டார்.

அவன் புயல்போல வந்து அவளைத் தள்ளினான். சுவரில் நெற்றி பட்டு உடனே புடைத்தது.

``டேய்... ரத்தகாயம் எதும் ஆகிடாம... அப்புறம் அவள் போலீஸ் கீலீஸ்னு போய்டுவா... நம்மளை கம்பி எண்ண வெச்சுடுவா’’ என்று மாமனார் பல்லைக் கடித்தார்.

``என்னடி திமிர் இன்னும் போகலையா உன்னைவிட்டு? லயா வேணுமா லயா? பிச்சைக்கார நாயே... பிளாஃட்பார்ம்ல கிடக்கப் போற நாய் நீ... உன் கூட லயா வந்து லோல் படணுமா? நடத்தைக் கெட்ட உனக்கெல்லாம் குழந்தை ஒரு கேடா? அம்மா நீ உள்ளே போ... அப்பா கதவை மூடு. ஏய்... இனி எங்க மூஞ்சிலயே முழிக்காதே... கோர்ட்ல கடைசியா பாத்தா போதும்... வேற பிரச்னை பண்ண, கழுத உன்னை லாரி ஏத்தி கொல்ல வெச்சிடுவேன்’’ என்று அவன் புலி போல உறுமினான்.

லயா பரிதாபமாக, ``அம்மா அம்மா… எங்கம்மா போற? நானும் வரேன்மா… பாட்டி விடு பாட்டி… அம்மாகிட்ட போகணும் பாட்டி’’ என்று கை நீட்டியது. கதவு ஓங்கி அறைந்து சாத்தப்பட்டது.

பாமினிதான் தன்னுடன் வைத்துக்கொண்டாள். தன் கல்லூரி விரிவுரையாளர் செல்வாக்கால் உடனே ஒரு வேலை வாங்கிக் கொடுத்தாள். ஏழாயிரம் சம்பளம், ஒன்பது மணி நேர வேலை, முதுகெலும்பை பதம் பார்க்கும் பார்சல் ஆபீஸ் பணி, ஹாஸ்டலில் கடைசி அறை.

கோர்ட்டின் காட்சிகள் வழக்கமான உடைந்துபோன மனிதர் களையும், உடைத்துப்போட்ட மனிதர்களையும் வெளிச்சமிட்டுக் காட்டிக்கொண்டிருந்தது. தான் உடைந்துவிடாமல் இருக்க அவள் அவ்வப்போது விழிகளை மூடிக் கொண்டாள்.

``தோ பாரு சபர்… ஜட்ஜ்கிட்ட தெளிவா சொல்லிடு… அவங்க வெறும் நீதி, நியாயம்னு மட்டும் பாக்குறவங்க இல்லே… வாழ்க்கைச் சூழல், சமய சந்தர்ப்பம், எதிர்காலம், வாதி பிரதிவாதிகளின் மனப்போக் குன்னு எல்லாம் பார்த்து தீர்ப்பு கொடுக்கறவங்க. லாயர் சொன்னா ரில்லே. லயாவை விட்டுடாதே... உன்னால அழகா சொல்ல முடியும், உன் பக்கத்து நியாயத்தை’’ என்று உறுதியான குரலில் பாமினி சொல்லி விட்டுப் போனாள்.

அறைக்குள் அழைக்கப்பட்டாள்.சம்பிரதாயக் கேள்விகள், அறிவுரைகள், மணவாழ்வு, சட்டத் தின் செக்‌ஷன்கள் என்று விளக்கி விட்டு நீதிபதி அவளிடம் கேட்டார்.

``சபர்மதி... இந்த வழக்கு இன்றுடன் ஒரு முடிவுக்கு வருகிறது. உங்கள் விருப்பம் என்ன? குழந்தை உங்களிடம் வளர வேண்டும் என்று விரும்புகிறீர்களா?  மனுவில் அதைப் பற்றி எதுவும் இல்லை. அப்படி நீங்கள் விரும்பினால், முதல் உரிமை உங்களுக்குத்தான். சொல்லுங்கள்.’’

``இல்லை... குழந்தை எங்கிட்ட இருக்க வேணாம். அவங்ககிட்டயே இருக்கட்டும்’’ - அவள் நிதானமாகச் சொன்னாள்.

``அப்படியா? யோசித்தாயா பெண்ணே?''

``ஆமாம்... லயா அங்கே அவங்க கிட்டயே இருக்கட்டும். ஞாயித்துக் கிழமைல மட்டும் என்கிட்ட வரட்டும். கோர்ட் சொல்ற நேரம் போதும் எனக்கு. யோசிச்சுதான் சொல்றேன்.’’

மற்றவர்களும் பேச்சற்று அவளையே பார்த்தார்கள்.

``ஒரு தாயா இப்படிப் பேசுறாள்னு நீங்க நினைக்கலாம். ஆனா, இது தாய்மையோட சிறப்புனு நான் நினைக்கிறேன். இப்போ

என் நிலைமையில பெண் குழந் தையை வளர்க்குற அளவுக்கு  வசதி இல்லை. வசதினு நான் சொல்றது, குறைந்தபட்ச பாதுகாப்பு. கடுமை யான வேலை, கம்மியான சம்பளம், மன உளைச்சல், தூக்கமில்லாதது, சோர்வுனு இருக்கேன். இந்தச் சூழல்ல அவளை வளர்த்தா  என் நெகட்டிவ் தன்மைகள் அவளை இறுக்கிடும். வெளியே காட்ட முடியாத என் கோபம் அவ மேல பாயும். போதாமை, இயலாமைனு இருக்கும் என் தினங்களுடைய வலி அவ மேலயும் திணிக்கப்படும். ஆனா, இது மாறும். நான் கம்ப்யூட்டர், மாடித் தோட்டம், பிரெஞ்சுன்னு மூணு கோர்ஸ் படிக்கிறேன். இதுல நான் ஏதாவது ஒண்ணுல ரெண்டே வருஷங்கள்ல மேலே வந்துடுவேன். என் சகல கஷ்டங்களும் சரியாகி இயல்பான மனுஷியாகிடுவேன். அதுவரை அவ பாட்டி, தாத்தா, அத்தை, அப்பான்னு அன்பான உலகத்துல வளரட்டும். ஞாயிறு ஒரு நாள் போதும். நானும் அவளும் எங்க அன்புலகத்துல பறவைகள் போல பறந்து போவோம். அடுத்த ஆறு நாள்கள் அந்த நினைவுகள் போதும். அது தியாகமெல்லாம் இல்லை, அன்பு செய்யுற பெண்ணின் நெஞ்சம்... அவ்வளவுதான்.’’

நீதிபதி அவளை ஆதுரத்துடன் பார்த்தார். புன்னகைத்தார். அவர் விழிகளின் இரு துளி கண்ணீரை அறையில் இருந்த லயாதான் புரியாமல் பார்த்துக்கொண்டிருந் தாள்.