Published:Updated:

பிராப்தம் - தீபா நாகராணி

தீபா நாகராணி
பிரீமியம் ஸ்டோரி
News
தீபா நாகராணி

அவள் எழுத்து

ரவி

வனேதான்... ரமணா மெஸ்ஸுடன் ஒட்டி இருந்த காபி கடையில் கண்ணாடி டம்ளரை கையில் பிடித்தபடி யாருடனோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தான் ராகவன்.

பத்து வருடங்களுக்கு முன் பார்த்த மாதிரி அப்படியே இருக்கிறான். தலை சீவல்கூட அன்றைக்குப் பார்த்தது போலவே இருந்தது. என்ன எண்ணெய் தலைக்குத் தேய்க்கிறான் என விசாரிக்கச் செய்யும் கருகரு அடர் கேசம். வகிடெதுவும் எடுக்கவில்லை. அசையாமல் ராணுவ ஒழுங்குடன் நின்றுகொண்டிருந்தன மயிர்க் கால்கள். சின்ன நெற்றியில் திருநீறுக் கீற்று. மூக்குக்குக் கீழே ஓரங்களில் சற்று மேல் நோக்கி இருக்கும் அடர் மீசை. மாநிறத்தில் அதே அழகு.

திரும்பப் பார்க்கும் ஆவல் உந்தியது. கையில் வைத்திருந்த இட்லி பார்சலுடன் காபிக்கான டோக்கனை கவுன்டரில் வாங்கினேன். பித்தளை வட்டைக்குள் நிற்கும் டம்ளரில் வழியும் ஆவிப் பறக்கும் காபியுடன் அடித்துப்பிடித்து அவனைப் பார்க்க வாகாக நின்றால், எதிரில் இருந்த சாலையில் வாகனங்கள் நிதானமாகக் கடந்து கொண்டிருந்தன. இப்போது பத்தடிக்கும் குறைவான தூரத்தில் நின்றுகொண்டிருந்தான்.

கால்வாசி காபியை நான் காலி செய்த பின் தான் என்னை எதேச்சையாகப் பார்த்தான். முகத்தில் தீவிரம் கூடியது. வேகவேகமாகக் குவளையை காலி செய்தான். எதிரில் நின்றவரிடம் எதையோ சொல்லிவிட்டு விருட்டெனக் காணாமல் போனான். அவன் போன திசையைப் பார்த்தபடி மீதி காபியைக் குடித்துவிட்டு வண்டியை எடுத்தேன். கடுப்புடன் பாதி காபியை விட்டுவிட்டு வரும் சுவையில் காபி இல்லை என்பதை சொல்லியே ஆக வேண்டும்.

விடுமுறை நாள்களில் அம்மா வீட்டுக்குக் குழந்தைகளுடன் மதுரைக்கு வருவது வழக்கம். தோதாக திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு தினசரி ஓடியது பாசஞ்சர் ரயில். இன்று சின்னவளுக்கு வயிற்றுக்கு குணமில்லாததால் இட்லி வாங்க ரமணா மெஸ்ஸுக்கு வந்தேன். பத்து வருடங்களுக்கு முன் இதே விஸ்வநாதபுரத்தில் எங்கள் இல்லத்துக்கு இரண்டு வீடு தள்ளியிருந்த வீட்டுக்கு உறவினராக வந்தவன் ராகவன். மேலூரில் அவன் வீடு இருந்தது. பீபீ குளத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் அறிவியல் வாத்தியார் வேலை கிடைத்திருந்ததாக தகவல். தினசரி வந்து செல்வது கடினம் என்பதால், பக்கத்திலிருந்த சித்தியின் வீட்டில் தங்கியிருந்தான்.

அப்போது நான் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். எத்தனையோ முகங்களைக் கடந்து வந்திருந்தாலும் சில முகங்கள் ஒருமுறை பார்த்தாலும் ஆயுளுக்கும் நினைவிருக்கும். அப்படியான முகம் அவனுடையது.

வீட்டில் சுட்ட முறுக்கை எடுத்துச் செல்வது, அவனது சித்தியின் மகள்களோடு வம்பாக வாயாடுவது, சித்தியை `அத்தை... அத்தை' எனச் சொல்லி, ஒவ்வொரு வாக்கியத்தையும் முடிப்பது என கவனத்தைக் கோருவதற்கான அத்தனை பிரயத்தனங்களையும் செய்து கொண்டிருந்த காலம். அவனோ, நாளைதான் தன் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்வு நடக்கப் போகிற முனைப்பில் புத்தகங்களைப் புரட்டுவான். என்னவோ எழுதுவான். அத்தனையும் மீறி என் மீதெறியும் ஒரு நொடிப் பார்வையை வாங்கிக்கொள்வதில் கொள்ளை நிறைவு இருந்தது அந்த நாள்களில்.

“சார், நீங்க டியூசன் எடுப்பீங்களா... நானும் பிஎஸ்ஸி பிசிக்ஸ்தான் படிக்கிறேன்.”

“எங்க அண்ணனை எதுக்கு வம்புக்கு இழுக்கிறக்கா, அது பாவம்...”

ஏழாவது படிக்கும் கலா சொல்ல, விமலாவோ சிரித்துக்கொண்டிருந்தாள். அந்த ஜீவனோ கூடுதலாக இரண்டு நொடிகள் என் கண்ணைப் பார்த்துவிட்டு மீண்டும் புத்தகத்துக்குள் நுழைந்தது.

பிராப்தம் - தீபா நாகராணி

இன்னொரு நாள்... வெள்ளிக்கிழமை என நினைவு. ரிசர்வ் லைன் மாரியம்மன் கோயிலில் பிராகாரத்தைச் சுற்றிவிட்டு அம்மனை தரிசனம் செய்ய வரிசையில் நின்றால் எனக்கு முன்னால் ராகவன். அதுவும் தனியாக. உள்ளுக்குள் இருந்த அத்தனை செல்களும் உற்சாகம் பொங்க ஆடின. மெல்லிய பதற்றத்துடன் கூடிய அளவற்ற கொண்டாட்ட உணர்வை அனுபவிக்க அனுபவிக்க மனம் கிறங்கித்தான் போய்விடுகிறது. அந்த கிறக்கம் தரும் சுகம் மீண்டும் மீண்டும் வேண்டுமெனக் கேட்டது மனம். கையில் வைத்திருந்த பர்ஸில் செருகப்பட்டிருந்தக் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தேன். நல்ல வேளையாக இன்று தலைக்கெல்லாம் குளித்து புத்துணர்ச்சியோடு இருந்தேன். முகத்தின் இரண்டு பக்கங்களிலும் சிற்சில முடிக் கற்றைகள் எடுத்துவிட்டது தெரியாதது மாதிரி பறந்துகொண்டிருந்தன. வெகு பிடித்தமான கனகாம்பரப்பூ வண்ண சேலை. கூந்தலின் நீளத்துக்கு தொங்கிக் கொண்டிருந்த மல்லிகைச் சரம். திருப்தி. தன்னம்பிக்கையோடு நிற்க வரிசை நகர்ந்தது.

“என்ன ராகவா, கலா விமலா வெல்லாம் வரலையா...''

“கொஞ்சம் மரியாதை கொடுக்கிறது...''

வெடுக்கென பதில் சொல்லும்போது சுவரில் வரையப்பட்டிருந்த ஓவியங் களைப் பார்த்துக்கொண்டிருந்தன ராகவனின் கண்கள்.

“கொஞ்சம் முகத்தைப் பார்க்கிறது...''

அவ்வளவுதான் பக்கவாட்டில் தெரிந்த முகம் மறைந்தது. இது என்ன இப்படி தொட்டாச்சிணுங்கியாக இருக்கிறானே என எரிச்சல் மண்டியது. அதற்குள் வரிசை நகர தீபாராதனையை கைகளில் ஒற்றி கண்களில் வைத்துவிட்டு விபூதியை எடுத்து முன்னால் நகர்ந்தான். நான் கூடுதல் நேரமெடுத்து நின்று அம்மனிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

இது மாதிரியான நிராகரிப்புகள் நம் தோற்றத்தை சந்தேகப்பட வைத்து விடுகின்றன. வீட்டில் சம்பந்தம் பார்க்க ஆரம்பித்திருந்த நேரம். முகம் தெரியாத எவனோ ஒருவனுக்குப் பதில் இவன் வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தால் ராகவன் மிகையாக நடந்துகொள்கிறான் எனப்பட்டது. கோயிலுக்குள் கிடைத்த மலர்ச்சி, உள்ளே நுழையும் முன்னர் இருந்த மலர்ச்சியையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வதங்கிய மனதுடன் வெளியே வந்தேன்.

வழியில் இடப்புறம் நீண்டது ஆயுதப்படை மைதானம். காலை பத்து மணிக்கே சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தான். வாலிபால் விளையாடுமிடம் வந்ததும் காந்த ஈர்ப்பு. இடப்புறம் திரும்பினால் பத்து பதினைந்து சிறுவர்கள். இவன் பணி செய்யும் பள்ளிக்கூட மாணவர்கள்போல. பேசிக்கொண்டிருந்தான். விடாமல் அசைந்துகொண்டிருந்தது வாய். இப்படிக்கூடப் பேசத் தெரியுமா என்பது போல நின்று பார்த்தேன். கண்டுகொள்ளாதது போல பேச்சைத் தொடர்ந்தான். நான்கடி மைதான சுவர் மத்தியில் இருந்தது. கீழே பார்வையை ஓடவிட்டால் கையடக்கக் கல் ஒன்று கிடந்தது.

`ஆனது ஆகட்டும் ஒரே எறி' என்கிற முனைப்போடு வலக்கையில் இருந்த பர்ஸை இடக்கைக்கு மாற்றியபடி கல்லை எடுத்தேன். வலது உள்ளங்கையில் அரையடி உயரத்தில் தூக்கிப்போட்டு இரண்டாவது முறையாகப் பிடிக்கையில் பேச்சை நிறுத்திவிட்டு நகரத் தொடங்கியிருந்தான். ஒருவேளை இவனைப் பார்ப்பதற்காகவே கோயிலுக்கு வந்திருக்கிறேன் என நினைத்து இப்படி திமிராக நடந்துகொள்கிறானோ என சந்தேகம் உதித்தாலும், `அப்படிதான் வந்தேன்' என்ற பதில் சமாதானமாக இருந்தது.

ஒரு சனிக்கிழமை மாலை... தொலைக் காட்சியில் `பிராப்தம்' திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. சுவரில் சாய்ந்த படி கோல நோட்டில் புள்ளிக்கோலம் வரைந்து கொண்டிருந்தேன். பரிச்சயமான அசைவை உணர்ந்து வரைவதை நிறுத்திவிட்டு ஏறிட்டுப் பார்த்தேன். வாயிற்படியருகே திறந்திருந்த கதவைத் தட்டியபடி நின்றுகொண்டிருந்தான் ராகவன். நொடியில் சர்க்கரைப் பாகு கரைந்து பச்சை மிளகாயைக் கடித்தது போல எரிந்தது.

“வாப்பா ராகவா, உள்ளே வா...'' - அம்மா வரவேற்றாள். வரவேற்பறையில் சுற்றி நான்கு பிளாஸ்டிக் நாற்காலிகள் கிடந்தன. எப்படியும் உள்ளே வரமாட்டான் என்று தெரியும். நமக்குப் பிடித்தவர்களைவிட நம்மைப் பிடித்தவர்கள் முக்கியம் என்ற வசனம் நினைவுக்கு வந்தது. இவனுக்குப் பிடிக்காவிட்டால் என்ன மோசம் போனது. இவனது ரசனைக்குள் நான் வராமல் இருக்க வாய்ப்பு உண்டுதானே... வாசமாக இருக்கிற மல்லிகை சிலருக்குத் தலைவலியைத் தருகிறது என்பதற்காக மல்லிகையைக் குறை சொல்ல முடியுமா, என்ன...

எத்தனை சமாதானம் சொல்லிக் கொண்டாலும் தீரவே தீராத ஆசை முகம். பார்க்கும் இடங்களில் எல்லாம் தான் மட்டுமே நிறைந்து இருக்கி றோம் என்பதை அறியாமல் இதோ கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது. இதிலிருந்து மீண்டு வர எத்தனை மாதங்கள் ஆகுமோ எனத் தெரியவில்லை. முதலில் மீள்வேனா என்பதே தெரியாது. புறக்கணிப்பின் புண் உருவாக்கும் வாதை கொடியது என்பதை அணு அணுவாக அனுபவித்துக்கொண்டிருந்தேன்.

அம்மா கொடுத்த காபியைக் குடித்தவாறே சிவப்பு வண்ண பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருந்தான். இதுவே அதிசயமாகப்பட்டது. கோல நோட்டில் வீம்பாக அதே புள்ளிகளை இணைத்துக்கொண்டிருந்தேன் பத்தாவது முறையாக. புள்ளிகள் மறைந்து கொண்டிருந்தன.

“சித்தப்பா வகையில கேதம்னு நாலு பேரும் உசிலம்பட்டி வரை போயிருக்காங்க. வர ராத்திரி ஒன்பது மணிக்கிட்ட ஆயிருமாம். நாளைக்கு காலைல மேலூர்ல என்கூட படிச்சவன் வீடு கட்டி பால் காய்ச்சிறான். நான் போயே ஆகணும். அதான் சாவியை உங்கக்கிட்ட கொடுத்திட்டுப் போலாம்னு வந்தேன்.”

“எனக்கும் உங்க சித்தி போன் போட்டாங்கப்பா. வர நேரமாறாதல உங்கிட்ட சாவியை வாங்கி வைக்க சொன்னாங்க. ஆறு மணி ஆகப் போகுது. மத்தியானம் சாப்பிட்டியா, இல்லையாப்பா... மாவு இருக்கு தோசை ஊத்தித் தரவா...”

இவன் உட்கார்ந்து பேசுவதே பெரிது. காபி குடித்ததே எப்படி எனக் கண்டுபிடிக்க முடியாத போது, சாப்பாடாம்! அத்தனை ஆர்வம் அவன் மூக்கை அறுக்கும் அழகைப் பார்க்க. அம்மாவை ரெண்டு சாத்து சாத்த வேண்டும்போல இருந்தது.

“வேணாம், வேணாம். மதிய சாப்பாடு வாட்ச்மேன் தாத்தா ஹோட்டல்ல வாங்கிக் கொடுத்தாரு. நல்லாவே சாப்பிட்டேன், கிளம்பறேன்.”

எழுந்து வாசலுக்குச் சென்று செருப்பை மாட்டியவன் ஓரிரு நொடிகள் நின்றது தெரிந்தது. பின் படியிறங்கினான். முதன்முதலாக வீட்டுக்குள் வந்திருக்கிறான். கிட்டத் தட்ட பத்து நிமிடங்கள் வரை உள்ளே அமர்ந்து காபியை குடித்துவிட்டு பேசி போய் இருக்கிறான். சில அடிகள் தூரத்தில் கோலம் வரைந்து கொண்டிருந்த நான் தவறியும் தலையை நிமிர்த்தவில்லை. ஆனால், காதுகள் கண்களுக்குரிய வேலையையும் செய்து கொண்டிருந்தன. பார்த்துக்கொண்டே இருக்கச் செய்யும் முகம்தான். ஆனால், என்னைப் பிடிக்கவில்லை என ஒதுங்கிச் செல்பவனிடம் எதற்காகத் தொங்கிக் கொண்டே இருக்க வேண்டும்? `ஆனாக்க அந்த மடம், ஆகாட்டி இந்த மடம்... அதுவும் இல்லாட்டி சந்த மடம்' ஆனாலும் ஹ்ம்ம்...

சில நாட்கள் கழித்து...

“என்னங்க... வாத்தியார் வேலை பார்க்கிறானே ராகவன்... அந்தப் பையனுக்கு நல்ல பொண்ணு இருந்தா சொல்லச் சொல்லி அவங்க சித்தி சொன்னாங்க.”

விசுக்கென்று இருந்தது. எவ்வளவு கொழுப்பு இருந்தால் என் அம்மாவிடம் பெண் பார்க்க சொல்லுவார்கள்.

“அவன் வீட்டுக்குள்ள ரொம்ப நல்ல பிள்ளையாட்டம் இருக்காம்மா, அன்னிக்குப் பார்த்தா கிரவுண்ட்ல பொடிப்பயலுகளோட ஆடிட்டு இருக்கான். வயசுக்கேத்த சகவாசம் வேணாம்... ஆளும் மொகரையும். நீங்க இதை எல்லாம் இழுத்துப் போட்டுக்காதீங்க. போய் கருப்பட்டிப் பணியாரத்துக்கு மாவாட்டி சுடுறதுக்கு வழிய பாருங்க...”
பிராப்தம் - தீபா நாகராணி

“வேணாட்டி விடு, பார்க்கலை. நீ எதுக்கு இப்படி சத்தம் போடறே.”

உஷ்ணம் கக்கியப் பேச்சு எனக்கே அந்நியமாகப்பட்டது. வேறுவழி... என் உறவுகளில் ஒருவரை இவன் மணந்துகொண்டு அடிக்கடி எதிரே பார்க்கும் கொடுமையை எல்லாம் என்னால் சகிக்க முடியாது.

சில மாதங்களிலேயே மேலூரில் அவனுக்குத் திருமணம் நடந்தது. என் பெற்றோர் திருமணத்துக்குச் சென்றிருந்தனர். கல்யாணப் பத்திரிகையில் மணமக்களின் புகைப்படங்களும் அச்சாகி இருந்தன. மனத்தில் ஒளியின் கீற்று.

வெகு சுமாராகவே தெரிந்த பெண் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன... ஆனால், இவன் பக்கத்தில் எந்தப் பெண்ணுமே சுமாராகவே தெரிவர் என்ற எண்ணமும் மனத்தின் ஓர் ஓரத்தில் எட்டிப் பார்த்தது.

முனைவர் பட்டம் பெற்று கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறாள்.

அதற்கடுத்த மாதத்தில் என் திருமணம். திண்டுக்கல்லில் புகுந்த வீடு. திருமணத்துக்குப் பின் அவனைப் பார்க்கவில்லை. ராகவனுக்கு ஒரே பையன் என்கிற தகவல் எல்லாம் அம்மா சொல்லக் கேட்டுத் தெரியும்.

பிராப்தம் - தீபா நாகராணி

வண்டியை வெளியே நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று பார்சலை எடுத்து வெளியே வைத்தேன். அம்மா பொட்டலத்தைப் பிரித்து சின்னவளுக்கு முன்னால் வைத்தார். வாழையிலையின் ஓரத்தில் மடித்துவைத்திருந்த தேங்காய்ச்சட்டினியை மட்டும் தொட்டு சாப்பிட ஆரம்பித்தாள். பெரியவள் வீடியோ கேமில் தொலைந்து இருந்தாள்.

“ரமணா மெஸ்ல ராகவனைப் பார்த்தேன்.”

“அப்படியே இருக்காம்மா. எதுவும் பேசல.”

“எதுக்குப் பேசணும்? `எங்களுக்கு இஷ்டமில்லை வேணாம்'னு ஜாதகத்தைத் திருப்பி அனுப்பிச்சவங்ககிட்ட என்னன்னு பேசணும் அவன்?''

“ஜாதகமா?”

“உன்னை அவனுக்குப் பிடிக்கப் போய் தான் ராகவனோட ஜாதகத்தைக் கொடுத்து பொருத்தம் பார்க்க சொன்னாங்க. உனக்குப் பிடிக்குதான்னு தெரிஞ்சுக்கதான் அப்பா கிட்ட, நம்ம சொந்தத்தில பொண்ணு இருந்தாப் பாக்க சொன்னாங்கன்னு சொன்னேன். நீ அவன் பொடிப் பயலுகளோட திரியறான்னு வானத்துக்கும் பூமிக்கும் குதிச்ச... நான் சங்கடப்பட்டுகிட்டே உள்ளூர்ல வேணாம்னு அவங்க அப்பா சொல்றார்னு சொல்லி ஜாதகத்தைத் திருப்பிக் கொடுத்திட்டேன், நல்ல பய. ஹ்ம்ம்...''

`அடிப்பாவி அம்மா, மறைமுகமா சொல்ல நீ என்ன இலக்கிய ஞானம் பொங்கி வழியற எழுத்தாளரா? நேரடியா அவன் இதைத்தான் சொன்னான்னு சொல்லி இருக்கக் கூடாதா? இப்படி என் வாழ்க்கைல விளையாடிட்டியே...' - என்னென்னவோ வார்த்தைகள் உள்ளே வரிசைகட்டி வந்தாலும் வெளியே எதுவும் வரவில்லை.