Published:Updated:

சிறுகதை: ஈரல்

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

புலியூர் முருகேசன்

சிறுகதை: ஈரல்

புலியூர் முருகேசன்

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

வேடிச்சிபாளையம் சந்தையிலிருந்து வரும்போது வழக்கமாக ஆட்டுத் தலை வாங்கி வரும் பழனியப்பன் அன்று வாங்கி வரவில்லை. பதிலாக உயிர்க்கோழி ஒன்று கொண்டு வந்திருந்தார். ‘இதெங்க கெடச்சுது?’ எனக் கேட்டாள் சின்னம்மா. ‘ரெகுலரா பொயலை வாங்கற சோமூர்க்காரரு ஒருத்தரு அஞ்சாறு கோழிய சந்தைக்கிக் கொண்டாந்திருந்தாரு. மலிச்சமான வெலையாச் சொல்லவும் ஒண்ணு வாங்கியாந்தேன். மருதாம்பாவப் பாத்து ரொம்ப நாளாச்சு. நாளைக்கிப் போலாம்னு இருக்கேன். வெறுங்கையோட போவ முடியுமா... அதான்’ என்றார். ‘ஆமா வேற பொழப்பு இல்ல. இங்க ஒரு பய சோத்துக்குச் செத்துக் கெடக்குறான். நல்லது பொல்லதுன்னு ஆக்கிப் போடறதுக்கு வக்கில்லாம இருக்கேன். எப்பப் பாரு மவ மவன்னுட்டு’ சின்னம்மா சிடுசிடுக்கவும், ‘செத்த சும்மா இருக்கியா, இவன வுட்டுட்டா அங்க போவப் போறேன், பேச வந்துட்டா பெருசா!’ என சலித்துக்கொண்டார் பழனியப்பன். அப்பனும் அம்மாவும் பேசியதிலிருந்து நாமும் நாளைக்குக் கோழிக்குழம்பு திங்க அக்கா வீட்டுக்குப் போகப்போகிறோம் என்பதை அறிந்த நாகையா சந்தோசப்பட்டான்.

எம்ஆர்டி பஸ்ஸில் போனால் வெள்ளப்பாறையில் இறங்கி ஆனையூருக்குப் போக மூன்று கிலோ மீட்டர் நடக்க வேண்டும். சின்னப் பிள்ளை நடக்க மாட்டான் என்பதால் நகரத்திலிருந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் செல்லும் டவுன்பஸ்ஸில் ஆனையூருக்கே போய் இறங்கினார்கள். ஈரத்துணி போட்டு மஞ்சப்பைக்குள் கோழியை அமுக்கி வைத்திருந்தும் வழியில் அவ்வப்போது சத்தம் எழுப்பியபடியே வந்தது. நல்லவேளையாக கண்டக்டர் ஏதும் கண்டுகொள்ளவில்லை.

கையில் கோழியுடன் வந்த அப்பனைப் பார்த்த மருதாம்பா சிரித்தபடி வரவேற்றாள். ‘வாப்பா! அம்மா வல்லியா?’ எனக் கேட்டுக்கொண்டே கோழியை வாங்கி, காலில் ஒரு சணலை முடிந்து தூணில் கட்டி வைத்தாள். ‘அம்மாவுக்கு மேலுக்கு முடீல, அதான். ஆமா, எங்க தங்கம்மாவக் காணாம்?’ என்றவரிடம் பதிலாக ‘மத்தியானச் சோறு காட்டுக்குப் போறப்பவே எடுத்துக்கிட்டுப் போயிட்டா. அதனால பொழுதெறங்கத்தான் வருவா’ என்றாள் மருதாம்பா. தங்கம்மா ஒருவாய் சூடாகக் கோழிக்குழம்பு ஊற்றிச் சோறு தின்பாள் என ஆசையாய் நினைத்தவருக்கு அது ஏமாற்றமாகிவிட்டது. தங்கம்மாவைக் கட்டிக்கொடுக்க வழியில்லாமல் மருதாம்பா வீட்டுக்கு அனுப்பி வைத்து நாலைந்து வருடங்களாகியிருக்கும். ‘தங்கம்மாவ எம்மூத்த புள்ளையாப் பாத்து கல்யாணங்காச்சின்னு பண்ணி வைக்கிறேன் மாமா’ எனச் சொல்லிக் கூட்டி வந்த கிருஷ்ணனும் மருதாம்பாவும், காட்டு வேலையில் புள்ளைய வாட்டி வதக்குறாங்களே!’ என அடிக்கடி விசனப்படுவார் பழனியப்பன்.

சிறுகதை: ஈரல்

‘வாப்பா, ஆரு நாகையாவா? சின்னம்மா வந்துருக்குதா?’ திண்ணையில் படுத்திருந்த அம்மாகண்ணு ஆச்சி மெல்ல எழுந்து பார்த்தது. தன் கணவர் ராமையா செத்ததுக்குப் பிறகு பிள்ளைகள் போட்டி போட்டுக் கொண்டு கரிசனையாக கவனிப்பார்கள் என நினைத்த அம்மாகண்ணுவுக்கு அந்த பாக்கியம் இல்லாமல்போய் விட்டது. மிக்சர்கார மகன் காளிமுத்து மட்டும் ‘இங்கனயே இருந்துரேம்மா!’ எனச் சொல்லியும் கேட்கவில்லை. ‘மத்தவுக கோவிச்சுக்குவாக’ எனத் தனக்கு ஒதுக்கப்பட்ட திண்ணையில் படுத்துக்கொண்டது. மாதம் ஒரு மகன் வீட்டிலிருந்து சோறு போகும். இந்த மாதம் கிருஷ்ணன் வீட்டுக் கணக்கு.

அடுப்பில் சந்தைக்கு மிக்சர் போட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணன் சாவகாசமாக எழுந்து வந்து ‘வாங்க மாமா, இப்பத்தான் வந்தீகளா?’ எனக் கேட்டுவிட்டு ‘மருதாம்பா, குளிக்கறதுக்கு வெறகடுப்புல செத்த சுடுதண்ணி வையி’ என்று சொல்லி மீண்டும் மிக்சர் போடப் போய் விட்டான்.

‘அப்பா, நா மாமனுக்குத் தண்ணி வைக்கிறேன். நீ அந்தக் கோழிய ஆஞ்சு, வாட்டி அரிஞ்சு குடுத்துரு. செலவு சாமான் வேற அரைக்கணும்’ மருதாம்பா சொன்னதும், கோழியின் காலில் கட்டியிருந்த சணலை அவிழ்த்தவர் தலையை மளுக்கெனத் திருகி உயிரை அடக்கினார். ஒரு சின்ன ஈயச்சட்டியில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, கோழியை அதில் முக்கி எடுத்து சூடு ஆறும்முன் இறக்கை மயிர்களை ஆய்ந்து சுத்தப்படுத்தினார். அடுப்பில் கொளுந்துவிட்டு எரியும் நெருப்பில் வளைத்து வளைத்து வாட்டுவதில் பழனியப்பன் கைதேர்ந்தவர். நாகையா அப்பனுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து வேடிக்கை பார்த்தான். கிருஷ்ணன் மாமா தீனி எதுவும் தராது என்பதால் அந்தப் பக்கமே போகவில்லை. மிக்சர்கார மாமன் வீட்டில் யாருமில்லை. வீடு பூட்டிக் கிடந்ததை வரும்போதே பார்த்துவிட்டான். அதனால், அங்கேயும் தீனிக்கு வாய்ப்பில்லை.

வாட்டிய கோழியின் மீது மஞ்சளைக் கரைத்துப் பூசி, கொஞ்ச நேரம் காயவிட்டார். கோழியை அரிய அரிவாள்மணையையும் ஒரு சட்டியையும் பழனியப்பனுக்குப் பக்கத்தில் வைத்திருந்தாள் மருதாம்பா. வயிற்றைக் கிழித்துக் குடலை உருவி அடுப்புச் சாம்பலின் மீது போட்டு விட்டு கோழியை அளவான துண்டங்களாக நறுக்கினார். ‘அப்பா, ஈரல சினுக்குருக்கியில சொருவி சுட்டுக் குடுக்கிறியா?’ எனக் கேட்டான் நாகையா.

வாராவாரம் கறி எடுக்க முடியவில்லை என்றாலும் ஐம்பது கிராம் ஈரல் மட்டும் வாங்குவார். அதைச் சிறுதுண்டுகளாக்கி, சீரக மிளகுத்தூளும் உப்பும் தூவி சினுக்குருக்கியில் செருகி நெருப்பில் வாட்டித் தந்தால், வாயில் எச்சில் ஒழுக ருசித்துத் தின்பான் நாகையா. ‘அப்பன்னா எங்கப்பந்தான். ஈரலு நல்லா கருகுன வாடையா இருக்கு’ ஒவ்வொரு தடவையும் இப்படிச் சொல்வான்.

‘இன்னிக்கி வேணாண்டா தங்கம். கொழம்புல போட்டு எடுத்துத் தாரேன். சுட்டுக்கிட்டிருந்தா சோறு திங்க லேட்டாயிரும்’ என்றதும், சரி எனத் தலையசைத்தான். கறிக்குண்டானில் தண்ணீரை ஊற்றி ஒரு அலசு அலசிக் கழுவி ஓரமாக வைத்தார். ‘மருதாம்பா, கறி வேலை முடிஞ்சிருச்சு. மத்தது என்னான்னு வந்து பாரும்மா’ என்றவரிடம் ‘யப்பா, அங்கன பூண்டு எடுத்து வச்சிருக்கேன் பாரு. ஒரு பத்துப் பல்லு உரிச்சி வையி. இதா நா வந்தர்றேன்’ எனச் சொன்னாள். பூண்டை உரித்து வைத்தவர் துண்டை விரித்து சற்றுக் கண்ணயர்வோம் எனப் படுத்தார். நாகையாவுக்கு அப்பன் வேகமாகக் கறி அரிந்தது வியப்பாக இருந்தது.

‘ஆரு என் குருநாதரா, எப்ப வந்தீக? எங்க சித்தி நல்லாருக்கா? தம்பீ... நல்லா படிக்கிறியாடா?’ கேள்விகளாகக் கேட்டபடியே வீட்டுக்குள்ளே வந்தான் கருப்பசாமி. பழனியப்பனின் அண்ணன் மகன். சிலம்பாட்டத்தைப் பழனியப்பனிடம்தான் கற்றுக்கொண்டதால் சித்தப்பனை குருநாதர் எனக் கூப்பிடுவதையே விரும்புவான். கிருஷ்ணனைவிட ஐந்து வயது இளையவன். நாகையா கருப்பசாமியைப் பார்த்துச் சிரித்து விட்டு, அம்மாகண்ணு ஆச்சியின் முன்னால் போய் உட்கார்ந்தான். ஊரிலிருந்து பேரப்பிள்ளைகள் யார் வந்தாலும் அம்மாகண்ணு ஆச்சி, கூப்பிட்டு உட்கார வைத்துக் கதைகள் சொல்லும். கடைசியாக, முந்தானையில் முடிந்து வைத்திருக்கும் காசிலிருந்து நாலணாவோ எட்டணாவோ கொடுக்கும். நாகையாவுக்குக் கதை கேட்க ரொம்பப் பிடிக்கும் என்றாலும் தீனி வாங்கக் காசு கிடைப்பதால் கதை முடியும்வரை பொறுமையாகக் காத்திருப்பான்.

சிறுகதை: ஈரல்

‘வாண்ணா, அப்பன் தூங்குதுன்னு நெனைக்கிறேன். ஆச்சிகிட்ட பேசிக்கிட்டு இரு. வேலைய முடிச்சிட்டு வர்றேன்’ எனச் சொல்லி அம்மியில் அரைக்கப் போனாள் மருதாம்பா. ‘மாப்ள எங்க, குளிச்சிக்கிட்டு இருக்காரா? சேர்காரம்பட்டி சந்தைதான இன்னிக்கி?’ மறுபடியும் கேள்விகளாகக் கேட்டுக்கொண்டே திண்ணையில் இருக்கும் அம்மாகண்ணுவிடம் வந்தான்.

‘இன்னிக்கி எமதர்மராசங்கத சொல்றேன்’ என ஆரம்பித்த அம்மாகண்ணு ஆச்சியின் வாயைப் பார்த்தபடி கைகட்டி உட்கார்ந்தி ருந்தான் நாகையா. ‘என்ன அம்மாகண்ணு அத்தெ... எங்க ராமையா மாமன முன்னாடியே எமலோகத்துக்கு அனுப்பி வுட்டுட்டு நீ இங்க எமதர்ம ராசா கதெ சொல்லிக்கிட்டிருக்கியா?’ என அங்கும் ஒரு கேள்வியைப் போட்டான் கருப்பசாமி. ‘ம்க்கும். கேலிக்காரப் புள்ளைக கிட்ட பேசற மாரியே எங்கிட்ட பேசு’ என முகத்தை நொடித்துவிட்டு, கதையைத் தொடங்கியது ஆச்சி. கருப்பசாமி தூணில் சாய்ந்து உட்கார்ந்தான்.

‘இப்ப நா சொல்லப் போற கதெ நம்ம வூட்ல நடந்த கதெ. செத்துப் போனவன் மறுசெம்மம் எடுத்து உசுர மீட்டுக்கிட்டு வந்த கதெ. எங்க எளையவன் இருக்கான்ல, அதான் ஒங்க கிஸ்ண மாமன். அவன் ஒருநா யாவாரத்த முடிச்சுக்கிட்டு வூட்டுக்கு வந்தானா! அன்னிக்கி அமாசெ. அப்ப ஒங்க தாத்தென் செத்து வருசமாகிப் போச்சு. கிஸ்ணந்தான் அமாசெ ஒருசிந்தி புடிக்கணும்னு ரவைக்கி சோறாக்கிக்கிட்டு இருந்தம். அவனும் டவுனுப்பக்கத்து யாவாரம் முடிஞ்சு வெரசா வந்துட்டான். வந்து குளிச்சவன் நீர்வெளாவிச் சாமியக் கும்பிட்டு வெரதெம் வுட்டான். அதுக்குப் பெறவு நாங்களும் சோத்தத் தின்னுட்டுப் படுத்துட்டோம். நடுராத்திரி இருக்கும். வீட்டுக்கு வெளீல ஆரோ சத்தம் போடறமாரிக் கேட்டுச்சு. தடாபுடான்னு அல்லாரும் எந்திரிச்சு வெளிய ஓடிப் போயிப் பாத்தா கிஸ்ணன். ஓவ்…ஓவ்..னு கொடங் கொடமா வாந்தியெடுத்துக் கிட்டிருந்தான். வெளக்க எடுத்தாந்து திரியத் தூண்டி வுட்டுப் பாத்தா… பூராம் பச்ச பச்சயா இருக்குது. ஊருச்சனம் பூரா சத்தத்தக் கேட்டு எந்திரிச்சு வந்துட்டாக. கிஸ்ணனுக்குத் தண்ணியக் குடுத்து மூஞ்சக் களுவி வுட்டு திண்ணையில ஒக்கார வெச்சு காத்து வராப்படி விசிறி வுட்டம். ‘என்னப்பா ஆச்சு கிஸ்ணா?’ன்னு கேக்க, அவன் சொன்னான். ‘தூக்கத்துல ஆரோ நெஞ்ச அமுக்கற மாறி இருந்துச்சு. கண்ணெத் தொறக்க முடீல. செரமப்பட்டு லேசாத் தெறந்து பாத்தா... கறுப்பா தலையில கொம்பு வெச்சிக்கிட்டு ரெண்டு ஆளுக ஒரு கயித்தெ எங்களுத்துல போட்டு சுருக்கு வெச்சாக. நீங்கல்லாம் ஆருன்னு கேட்டதுக்கு, ஹா...ஹா...ன்னு சிரிச்சிக்கிட்டு நாங்க எமலோகத்து லேருந்து வர்றோம், ஒங்கணக்கு முடிஞ்சாச்சு அதான் பாசக்கயித்தெ வீசிட்டோம். வா போவலாம்னு மேலோகத்துக்கு இளுத்துக்கிட்டுப் போனாக. நடுராத்திரிங்கறதால எங்க போறம்னே தெரீல. சர்ர்ர்ன்னு பறந்த மாறி இருந்துச்சு. அங்கங்க ஒண்ணு ரெண்டு நச்சத்தெரம் தெரிஞ்சுது. பயமா இருக்கவும் கண்ணெ மூடிக்கிட்டேன். அப்பறம் கண்ணத் தொறந்து பாத்தா பெரீய கெடா மீசெ வெச்சிக்கிட்டு எருமெ மாட்டுமேல கருகருன்னு எமெதர்மராசா ஒக்காந்திருக்காக. எங்கைகாலெல்லாம் நடுங்குது. என்னையப் பாத்ததும், பக்கத்துல ஒக்காந்திருந்தவருகிட்ட ‘சித்திரகுப்தா, இவங்கணக்கெப் பாரு!’ அப்படீன்னாக. அவுரு வேக வேகமா ஓலெச்சுவடியப் பொரட்டிப் பாத்துட்டு ‘தர்மராசா, கணக்கு தப்பாப்போச்சு! இவுகளுக்கு இன்னம் ஆயுசு இருக்கு’ அப்பிடீன்னு சொல்லிப்புட்டு தலெயக் குனிஞ்சுக்கிட்டாக. எமதர்மராசா ‘தம்பீ, என்னமோ தப்பு நடந்துபோச்சு. ஒண்ணும் மனசுல வெச்சுக்காத. பத்தரமாப் போ. வயசான பெறகு வா!’ன்னு சொன்னவரு ‘சித்திரகுப்தா, தம்பிக்கு ஒருவா சோறு போட்டு அனுப்பு’ன்னார். அவுரு தலையாட்டிட்டு என்னைய ஒரு எடத்துக்குக் கூட்டீட்டுப் போனாரு. அங்கெ முன்னாடியே பந்தி நடந்துகிட்டிருந்துச்சு. என்னான்னு வெவரங்கேட்டேன். அவுக பூராம் சொர்க்கத்துக்குப் போறவுக. அதனால, எமலோகத்துல விருந்து போட்டு அனுப்பறது வழக்கம்னு சொல்லி ஒரு எலெயில ஒக்கார வெச்சாரு. கொஞ் சூண்டு சோறும் நெறைய அவுத்திக் கீரையும் எலையிலெ இருந்திச்சி. ஒருவா தின்னு பாத்தேன். நம்ம பக்கத்துக் கீரெ மாரி இல்லாம ருசியா இருக்கவும் பூராத்தையும் தின்னுட்டேன். அதுக்குப் பெறவு போன மாறியே இருட்டுலயே பறக்க வெச்சுக் கூட்டியாந்து இங்க வாசல்ல வுட்டுட்டுப் போயிட்டாக. வந்து எறங்குனதும் தலெ லாத்துச்சு. சுதாரிக்கறதுக்குள்ள வாந்தி வந்துருச்சு. அங்கெ எமலோகத்துல தின்ன அவுத்திக் கீரெ பூராத்தையும் வகுறு வெளீல தள்ளிருச்சு’ அப்பிடீன்னான். இதெக் கேட்ட ஊருச்சனம் தெகச்சுப் போனாக. பின்ன எமலோகத்துக்குப் போயிட்டு உசுரோட திரும்பி வர்றதுன்னா ஆவற காரியமா? அதும் விருந்து தின்னுட்டு. எமலோகத்துல அவுத்துக் கீரெதான் ஆக்கிப் போடுவாகங்கறதே அப்பத்தான் தெரிஞ்சுது. அப்படி மறுபொறப்பெடுத்து வந்தவந்தான் ஒங்க கிஸ்ணன் மாமன்.’

கதை முடிந்ததால் முந்தானையின் முடிச்சை அவிழ்த்து அதில் இருந்த எட்டணாவை நாகையாவின் கையில் கொடுத்தது அம்மாகண்ணு ஆச்சி. தூணில் சாய்ந்தபடி கதையைக் கேட்டுக் கொண்டிருந்த கருப்பசாமி, ‘அம்மாகண்ணு அத்தெ, கதெ நல்லாத்தான் கட்டுறீக. ஆனா கிஸ்ணன் மாப்ள பேரு கெடாம இருக்கணும்னு வம்பாடு பட்டுக் கதெ வுட்ட பாரு! அதான் எங்க தாயம்மா அத்தெ. கதெ நடந்தன்னிக்கி நானும் கிஸ்ணன் மாப்ளயும் டவுன்லயே ஆளுக்கு ரெண்டு பாக்கெட்டு குடிச்சிப்புட்டுத்தான் வந்தம். சாராயத்தெக் குடிச்சா அவுத்திக் கீரெ ஆவாதுன்னு பாவம் மாப்ளக்கித் தெரீல. அன்னிக்கி அமாசெ ஒருசிந்திக்கி அவுத்திக் கீரெ ஆக்கி வச்சிருந்திருப்பீக. அதான் அப்பிடி ஆயிப்போச்சு. ஏன் அத்தெ, ஊரு பூரா என்னையக் குடிகாரன்னு பேசறாகல்ல, ஏன் நீயுந்தான் பேசற. அப்பிடி ஒம் மகனப் பேசிப்புடக் கூடாதுன்னுதான நீயும் அத்தனெ சனத்துக்கிட்டயும் இந்தக் கதெய வருசக் கணக்காச் சொல்லிக் கிட்டிருக்கிற. இப்ப பேரப்புள்ள கிட்டயுமா?’ எனக் கிண்டலாகக் கேட்க, அம்மாகண்ணு ஆச்சிக்குக் கோபம் வந்துவிட்டது.

‘எடு கட்டெ வெளக்கமாத்த. கொள்ளேல போறவன! நானும் மருமகப் புள்ளயாச்சேன்னு மருவாதெ குடுத்தா ரொம்பத்தான் நாக்கு நீளுது’ எனச் சத்தம் போடவும் சிரித்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினான்.

சிறுகதை: ஈரல்

குளித்துவிட்டு வந்த கிருஷ்ணன் கருப்பசாமி வந்து போனதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. மருதாம்பா சோற்றை வடித்துவிட்டு, குழம்பைக் கொதிக்க வைத்துக்கொண்டிருந்தாள். கோழிக்குழம்பின் மணம் தளதளவென வீடு முழுக்க மிதந்தது.

நாகையா ஆச்சி கொடுத்த எட்டணாவிற்குத் தீனி வாங்கித் தின்றும் பசியடங்கவில்லை. திண்ணைக்கு வந்து ஆச்சியின் பக்கத்தில் உட்கார்ந்தான். தூங்கிக்கொண்டிருந்த அப்பன் எழுந்து திண்ணைக்கு வரவும் ‘அப்பா, வகுறு பசிக்குது’ என்றான். அவருக்கும் நல்ல பசி. குழம்பு கொதித்துக்கொண்டிருந்த விறகடுப்பைப் பார்த்தார். அடுப்புச் சாம்பலில் தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டிருந்தது. எல்லாம் தயாராகிவிட்டது என்பது தெரிந்ததும் ‘மருதாம்பா, செத்த வாம்மா!’ எனக் கூப்பிட்டார். வந்த மருதாம்பாளிடம் ‘பய பசிக்குதுங்கறான். காலேல ஊருல பளய சோறுதான் குடிச்சான். சின்னப் புள்ளயில்லியா அதான். கொளம்ப எறக்கியாச்சுல்ல, பயலுக்கு மொத போடு. நாங்கூட அப்பறமா சாப்புட்டுக்கறேன்’ என்றார். அதற்கு ‘மாமன் இப்பத்தான் தல தொவட்டிக் கிட்டு இருக்காக. செத்த நேரத்துல சாமி கும்புட்டுட்டு வந்துருவாக. எப்பவுமே அவுக சாப்புட்ட பெறகுதான் மத்தவுகங்கறது வழக்கம். இல்லையின்னா திட்டுவாக’ எனச் சொல்லிவிட்டு துளியும் வருத்தப்படாமல் வீட்டுக்குள் போய்விட்டாள்.

பழனியப்பன் நாகையாவின் முகத்தைப் பார்த்தார். பசி எடுத்து விட்டால் அவனுக்கு அடிவயிறு இழுத்துப் பிடிக்கும். அது உடனே முகத்தில் தெரிந்துவிடும். இப்போதும் தெரிந்தது. இதுமாதிரியான நேரத்தில் வீட்டில் இருந்தால் கத்திக் கூப்பாடு போடுவான். சின்னம்மா ஒவ்வொரு நாளும் அவனுக்குப் பசி எடுப்பதற்கு முன்னாலேயே சோற்றுத்தட்டைக் கொண்டு வந்து வைத்துவிடுவாள்.

‘பாவிமக, இப்பிடிச் சொல்லிட்டுப் போவுதே! பய இன்னஞ்செத்த நேரங்கூட தாங்கமாட்டானே! நா என்னா பண்ணுவேன். இப்பிடி அசிங்கப்படவா எம்புள்ளய இங்க கூட்டியாந்தேன்? சின்னம்மான்னா புள்ளையத் தவிக்க வுட்டுருவாளா?’ பழனியப்பன் கண் கலங்கினார்.

வீட்டுக்குள்ளே மணியடித்து பூஜை செய்யும் சத்தம் கேட்டது. பின் ‘மருதாம்பா, சோத்தப் போடு’ எனும் கிருஷ்ணன் குரல் கொடுக்கவும் மருதாம்பா பரிமாற ஆரம்பித்தாள். பெரிய வட்டத் தட்டில் சூடான சோற்றைக் கொட்டி, கோழிக் குழம்பை ஊற்றி கறியை ஒரு கப்பில் தனியாக அள்ளி வைத்தாள். சோற்றின் சூடு ஆறுவதற்குத் தோதாக பக்கத்திலேயே உட்கார்ந்து விசிறி விட்டாள். கிருஷ்ணன் சொம்பில் இருந்த தண்ணீரை எடுத்து உள்ளங்கையில் கொஞ்சமாக ஊற்றித் தட்டைச் சுற்றித் தெளித்தான். பின் கைகூப்பிக் கண்களை மூடிச் சில நொடிகள் கடவுளைக் கும்பிட்டுவிட்டு சாப்பிடத் தொடங்கினான்.

நாகையாவால் திண்ணையில் உட்கார முடியவில்லை. கதவோரம் லேசாகத் தலையை நீட்டிப் பார்த்தான். கிருஷ்ணன் கோழிக்கறித் துண்டுகளை அள்ளி வாயில் போட்டு ருசித்தபடியே ‘நல்லா வெச்சிருக்க’ எனச் சொல்வது காதில் விழுந்தது. ‘நீயும் கூடச் சேந்து சாப்பிடறதுதான?’ என கிருஷ்ணன் கேட்க, ‘இல்லைங்க, எடுத்து வச்சிருக்கேன். அப்பறமா சாப்புட்டுக்கிறேன்’ எனக் குசுகுசுப்பாய் மருதாம்பா சொன்னாள்.

நாக்கில் எச்சில் ஊறுவதற்கு முன்பே அடிவயிறு இழுத்துப் பிடிப்பதால் கண்ணில் நீர் முட்டிக்கொண்டு நின்றது நாகையாவுக்கு. அப்பனைப் பார்த்தான். அவர் இவனைப் பார்க்காமல் தலையைக் குனிந்தபடி இருந்தார். மறுபடியும் ஒரு தடவை உள்ளே எட்டிப் பார்த்தான். பார்ப்பது தெரிந்தால் அக்கா திட்டுமென்று விருட்டெனத் தலையை இழுத்துக் கொண்டான். அக்கா மாமனுக்கு இரண்டாவது தடவையாகக் குழம்பை ஊற்றிக் கறியை அள்ளி வைக்கிறது. அக்காவும் ஒரு தட்டில் கறியை அள்ளிப் போட்டுத் தின்பதைப் பார்த்தான். அப்படியானால் இன்னும் நேரமாகுமோ என நினைக்கும்போதே வயிற்று வலி அதிகமானது.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த அம்மாகண்ணு ஆச்சி பழனியப்பனிடம் குசுகுசுப்பாய் ‘பாதகத்தி ஒம் மவளும், புத்தி கெட்ட எம் மவனும் பொழுதன்னிக்கும் இப்பிடித்தான் பண்ணுறாக. நா வயசான சீவந்தான? பசிக்குதுன்னு கேக்கறதுக்கு முன்னாடி ஒருவாச் சோத்தப் போட்டு வச்சா என்னா கொறஞ்சா போயிரும். அட! சாகக் கெடக்குற கெழட்டு முண்டக்கித்தான் இந்தக் கெதின்னா, பச்சப் புள்ளைக்கிமா இப்பிடியாவணும். இவனெல்லாம் நல்ல கதிக்குப் போயிச் சேர மாட்டான். அவுத்திக் கீரே தின்ன அன்னிக்கே இவம் போயிச் சேந்திருந்தா ஒருமட்டம் சேந்தாப்பிடி அழுதுட்டு வுட்டுருப்பேன்’ என்றது.

பழனியப்பனுக்கு இங்கே பேசுவது உள்ளே கேட்டுவிடப் போகிறதென்ற பதற்றம் வந்து விட்டது. அம்மாகண்ணு ஆச்சியை மேற்கொண்டு பேச வேண்டாம் எனச் சைகை செய்தார்.

நாகையாவால் எட்டிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இப்போதுதான் ரசத்தைத் தட்டில் ஊற்றுவது தெரிந்தது. குழம்புச் சட்டிக்குள்ளிலிருந்து கறியை அள்ளி அள்ளி வைப்பதையும் பார்த்தான். எல்லாம் ஒரு சில நொடிகள்தான். சட்டெனத் தலையை இழுத்துக் கொண்டான். மெதுவாக அப்பனிடம் ‘வகுறு ரொம்ப வலிக்குதுப்பா’ என அழுதான். ‘அழுவாதப்பா! போறப்ப அப்பன் ஒனக்கு கெளப்புக் கடேல பொரோட்டா வாங்கித் தாரேன். கண்ணத் தொடச்சிக்க’ என சமாதானப்படுத்தினார். முதுகோடு சேர்த்தணைத்து மடியில் படுக்க வைத்துத் தட்டிக் கொடுத்தார்.

‘ஏவ்வ்வ்வ்…’ பெரிய ஏப்பச் சத்தம் வீட்டுக்குள்ளேயிருந்து கேட்டது. துண்டால் வாயைத் துடைத்தபடியே வெளியே வந்தான் கிருஷ்ணன். திண்ணையில் இருந்தவர்களைப் பார்க்காததுபோல் வாசல்பக்கம் போனான்.

வீட்டுக்குள்ளே ஏதோ பாத்திரத்தின் சத்தம். மருதாம்பா ஒரு சின்னத் தட்டில் கொஞ்சமாய்ச் சோற்றுடன் வந்து ‘ஆச்சி! இந்தா சோறு. சாப்புடு. தண்ணி சொம்புல இருக்கா இல்ல கொண்டாரட்டுமா?’ எனக் கேட்டாள். கொஞ்சம் குழம்புடன், எண்ணி இரண்டு துண்டு மட்டுமே கறி இருந்தது. ‘அப்பா, நீயும் தம்பியும் போயிச் சாப்புடுங்க. ரெண்டு பேருக்கும் தட்டுல போட்டு வெச்சிருக்கேன். நா மாமன சந்தைக்கி அனுப்பிச்சு வுட்டுட்டு வர்றேன்’ என வாசலுக்குப் போனாள் மருதாம்பா. கையில் ஒரு ரெண்டடுக்கு டிபன் பாக்ஸ் இருந்தது.

‘கீ கப்புல சோறு வெச்சிருக்கேன். மேல கொழம்பு இருக்கு. ரவைக்கு சந்தையிலயிருந்து கெளம்பறப்ப அங்கனக்குள்ளயே வச்சு சாப்புட்டுட்டு வாங்க’ என்ற மருதாம்பாளின் பேச்சுச் சத்தத்தைக் கேட்டபடியே நாகையாவுடன் வீட்டுக்குள் போனார் பழனியப்பன். நாகையாவின் முகச்சுணக்கம் லேசாகக் குறைந்திருந்தது.

ஆனால், சோற்றுத் தட்டைப் பார்த்ததும் பழனியப்பனுக்கு சுள்ளெனக் கோபம் வந்துவிட்டது. அடக்கிக்கொண்டார். ஒரு ஆட்டுத் தலைக்கறியை முழுசாத் தின்னும் பிள்ளைக்கு மூன்றே மூன்று கறித்துண்டுகளா?! பக்கத்தில் வைத்திருந்த குழம்பு வாளியில் கரண்டியை விட்டுத் துழாவினார். ‘யப்பா, கொழம்புல ஈரலு கெடக்குதா?’ எனக் கேட்டான் நாகையா. வெறும் குழம்பே சுழித்து மேலே வந்தது. ‘இந்த மரியாதெ கெட்ட சோத்தத் திங்காமக் கெளம்பறதுதான் நல்லது. பாவம் பய, சோத்துல கைய வச்சுட்டான்!’ என நினைத்துக் கொண்டே தன் தட்டில் இருந்த மூன்று துண்டுகளையும் எடுத்து நாகையாவின் தட்டில் போட்டார். நாகையா நாலைந்து வாய்ச் சோறுதான் தின்றிருப்பான். அப்பனின் முகம் சொடுங்கியிருப்பதைப் பார்த்ததும் ‘எனக்குப் போதும், திங்க முடீல’ என எழுந்துவிட்டான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism