Published:Updated:

தனிமை! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

திருச்சி தேசியக்கல்லூரியில் முதலாமாண்டு பொருளாதார பட்ட மேற்படிப்பு மாணவன் நான் அப்போது, விடுதியில் தங்கியிருந்தேன்.

அது 1975-ம் ஆண்டு தீபாவளி, 44 ஆண்டுகளுக்கு முந்தைய தீபாவளி என்றாலும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தீபாவளி அதுதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை, எப்படி என்றுதானே கேட்கிறீர்கள்? அதைச் சொல்லத்தானே இதை எழுதுகிறேன்.

திருச்சி தேசியக்கல்லூரியில் முதலாமாண்டு பொருளாதார பட்ட மேற்படிப்பு மாணவன் நான் அப்போது, விடுதியில் தங்கியிருந்தேன். இரண்டாவது மாடியில் 57-வது அறை, இரண்டு பேர் மட்டுமே தங்கும் அறையில் நண்பர் கமால் பாட்சா ரூம் மேட், புதுக்கோட்டையைச் சேர்ந்த அவர் வார வாரம் ஊருக்குச் செல்பவர், பயண நேரம் குறைவு என்பதாலும், வீட்டில் மூத்தவர் என்பதாலும், விடுமுறை என்றாலே ஊருக்கு ஓடி விடுவார்.

Representational Image
Representational Image

நானோ நேர் எதிர், வீட்டில் கடைக்குட்டி, அது மட்டுமன்றி சொந்த ஊரான கீழப்பெருமழை செல்ல வேண்டுமானால் சுமார் 4 மணி நேரத்திற்கும் அதிகமாகப் பயணம் செய்ய வேண்டும். தஞ்சாவூர் சென்று, திருத்துறைபூண்டி பஸ் பிடித்து, அப்புறம் பேருந்து மாறி பட்டுக்கோட்டை மார்க்கத்திலுள்ள பாண்டியில் இறங்கி, 3 கி.மீ நடந்து சென்று ஊரை அடைய வேண்டும், தூரம் அதிகம், செலவும் அதிகம், அண்ணனின் உழைப்பில் நான் செலவு செய்து கொண்டிருந்ததால், எல்லாவற்றுக்கும் கணக்குப் பார்க்கும் சுபாவம், எதிலெல்லாம் சிக்கனம் பிடிக்க முடியுமோ, அதிலெல்லாம் சிக்கனமாக இருக்க வேண்டுமென்ற நோக்கம்.

‘பசித்திரு, விழித்திரு, தனித்திரு’ என்பதில் சின்ன வயதிலிருந்தே ஓர் ஈடுபாடு, நல்லவற்றைக் கற்கும் பசியுடனே எப்பொழுதும் இருக்க வேண்டும்; விழிப்புடன் எச்செயலையும் ஆற்ற வேண்டும்; தனித்தன்மையுடன் எல்லாநிலையிலும் செயல்பட வேண்டும், என்பதே நானறிந்த பொருள், அதற்கேற்ப கூடுமானவரை நடப்பதென்ற உறுதிப்பாடு, மேலும், `Familiarity breeds contempt;while rarity wins admiration’ என்பதிலும் நம்பிக்கை. எனவே, ஒருமுறை ஊரிலிருந்து கிளம்பி வந்துவிட்டால், அடுத்தது நீண்ட கோடை விடுமுறைக்கு ஊர் சென்றால் போதுமே என்ற நிலைப்பாடு. ஆனாலும், ’எப்பொழுது கோடை விடுமுறை வரும்? ஊர் செல்லலாம் நிம்மதியாக, ’என்ற எண்ணம் மட்டும் ரகசியமாக மனதுக்குள் வலம் வந்து கொண்டே இருக்கும்.

நட்சத்திரங்களைத் தேடி ராக்கெட் வெடிகள் சீறிப் பாய்ந்து, தோற்று பாதி வழியிலேயே மயங்கி விடும், எத்தனை இளைஞர்கள் அது போலத் தங்கள் குறிக்கோளை அடைய முடியாமல் பாதி வழியிலேயே நின்று விடுகிறார்கள் என எண்ணத் தோன்றும், நாம் அதுபோல் நின்றுவிடக் கூடாது என்ற எண்ணம் ஒளிச் சிதறலாய் உள்ளம் நிறைக்கும். அது என்னவோ தெரியவில்லை, சிறு வயதிலிருந்தே எனக்கு வெடிகளைக் கொளுத்துவதைக் காட்டிலும், அடுத்தவர்கள் பட்டாசுகளை வெடிக்க, நான் சற்றுத் தூரத்திலிருந்து அதை ரசிக்கவே பிடிக்கும், அதுவும் எனக்கு இயற்கையாகவே அமைந்த ஒரு பாதுகாப்புத்தானே, ஏனோ பல இளைஞர்களுக்கு அது பிடிப்பதில்லை, தினமும் முன்னிரவில் மொட்டை மாடிக்குச் சென்று வெடி தரிசனம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டேன்.

Representational Image
Representational Image

ஒரு வாரத்திற்கு மட்டும்தானே அந்தத் தரிசனம் கிடைக்கும். ஆயிற்று, தீபாவளிக்கென்று விடுமுறையும் விட்டாயிற்று. விடுதி நண்பர்கள் கொத்துக் கொத்தாக ஊருக்குக் கிளம்ப ஆரம்பித்து விட்டார்கள். வசதி படைத்த சிலர், முந்தைய நாள்களில் டவுனுக்குச் சென்று பெரிய பெரிய பண்டல்களாக வெடிகளை வாங்கிக் கொண்டு வந்து, அதை ஊருக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். என்னுடைய அறை வாசல் வராண்டாவிலிருந்து வலது புறம் பார்த்தால் மெயின்கேட் தெளிவாகத் தெரியும். சின்ன வயதில் அப்பா வாங்கிக் கொண்டு வரும் வெடிக்காக நானும் எனது சகோதரரும் விழித்திருந்தது ஞாபகத்தில் ஓடியது. மூத்த சகோதரர்கள் இருவரும் திருத்துறைப்பூண்டி டவுன் சென்று, புத்தாடைகளைத் தைத்து வாங்கிக் கொண்டு நள்ளிரவில்தான் திரும்புவார்கள். பெரும்பாலும் அவர்கள் வரும் சமயம் நான் தூங்கிப் போய் விடுவேன். தூக்கம் எனக்கு மிகப் பெரிய நண்பன். கல்லூரி விடுதியில் நண்பர் நல்லதம்பி அடிக்கடி சொல்வது இதைத்தான், ‘ஆத்மநாதன் இன்னும் நின்றுகொண்டுதான் தூங்கவில்லை, அதைச் செய்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை,’ என்பார்.

இரவு அறைக் கதவைத்திறந்து வைத்துவிட்டு, நாற்காலியில் அமர்ந்து காலை மேசை மீது போட்டுக்கொண்டு படிக்க ஆரம்பித்தால், அடுத்த பத்தாவது நிமிடத்தில் நித்திரா தேவி முழுதாக ஆட்கொண்டு விடுவாள். நண்பர் கமல் நைசாக வந்து மடியிலிருக்கும் புத்தகத்தை எடுத்து ஒளித்துவிட, துடித்தெழும்பி புத்தகத்தைத் தேடிய நாள்கள் அதிகம், தேர்வுகள் நெருங்கியதும், மைதானம் போய் நின்று கொண்டே படித்துத் தான் B plus வாங்கினேன். இந்தத் தீபாவளிக்கு விடுதியிலேயே இருந்து விடுவது என்ற முடிவை நான் முன்பாகவே எடுத்திருந்தேன். அதற்கு இரண்டு காரணங்கள், முதலாவது, எங்கள் ஊரில் தீபாவளி கொண்டாடுவதை நிறுத்தியிருந்தார்கள். முந்தைய தீபாவளிகளை வசதி படைத்த சிலர் கொண்டாட, வசதி குறைந்த சிலர் அதனை வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. அதனால் சிறுவர்கள் மனம் வெதும்பும் என்று கருதி, ஊர்க் கட்டுப்பாடாக நாட்டாமைகள் எட்டுப் பேரும் ஒன்று சேர்ந்து அந்த முடிவை அறிவித்திருந்தார்கள். எட்டு நாட்டாமைகளில் என் தந்தையும் ஒருவர். இரண்டாவது, பண்டிகை கொண்டாடாதபோது பணத்தை வீணாகச் செலவு செய்ய வேண்டாமே என்ற சிக்கன புத்தி, ஊருக்கு எழுதிய கடிதத்தில் ‘பெல்’லில் இருக்கும் உறவினர் வீட்டில் தீபாவளி கொண்டாடச் செல்வதாக எழுதிவிட்டு, இவர்களிடம் ஊருக்குத் தீபாவளிக்குச் செல்வதாகக் கூறி விட்டேன். அடுத்த நாள் விடிகாலை தீபாவளி, அருகிலிருந்த ஊர்க்காரர்களும் புறப்பட்டுப் போய் விட்டார்கள்.

Representational Image
Representational Image

மாலையும் வந்தது, மெயின் கேட் வாட்ச் மேன் என்னைத் தேடி அறைக்கே வந்து விட்டார், சார். ஶ்ரீரங்கத்தில்தான் குடும்பம் இருக்கு, இப்ப போயி தீபாவளியைக் குழந்தைகளுடன் கொண்டாடிட்டு, நாளைக்கி மதியமே வந்திடறேன். நீங்க அறையிலேயே இருக்கப் போறதா முன்னாடியே சொன்னீங்களே, அதான் உங்ககிட்ட மெயின் கேட் சாவியைக் கொடுக்கலாமுன்னு வந்தேன். இந்தாங்க சாவி, என்று சொல்லி சாவியைக் கொடுத்து விட்டு, அவரும் விடைபெற, தீபாவளி வாழ்த்துச் சொல்லி அவரை வழியனுப்பியபோது, உள்ளே ஏதோ ஒன்று லேசாக உதைத்ததை உணர்ந்தேன். விடுதி மூடப்பட்டு விட்டதால் சாப்பிட வெளியில்தான் செல்ல வேண்டும். ஜங்ஷன் பக்கம் சென்று இரவு டிபனை முடித்துக் கொண்டு, மெல்ல காலாற நடந்து வந்த போது, ஆங்காங்கே சிறுவர்களும், இளைஞர்களும் பட்டாசுகள் வெடித்ததை வேடிக்கை பார்த்தபடி விடுதியை அடைந்தேன்.

பூட்டப்பட்ட பெரிய கேட்டைத் திறந்த போது மனதின் ஓரத்தில் ஏதோ ஒன்று அமர்ந்தது. பயமா?விரக்தியா? தனிமையா? எனக்குப் புரியவில்லை. சுமார் 120 அறைகளிலும் மின்னொளி படர, மாணவர்கள் வந்து கொண்டும், போய்க் கொண்டும், மாடி அறையில் இருக்கும் நண்பர்களைக் கூவி அழைத்துக் கொண்டும், எப்பொழுதும் சே, சே என்றிருக்கும் விடுதி, மயான அமைதியில் இருளைப் போர்த்திக்கொண்டு இருக்கும் இடம் தெரியாமல் இருந்தது. கேட்டைத் திறந்து, உள்ளே பூட்டி விட்டு, அவசரமாகப் படியேறி அறையை அடைந்தேன். சுமார் 350 மாணவர்கள் உள்ள விடுதியில் அந்தத் தீபாவளி இரவில் நான் மட்டும்தானா? எந்த அறையிலும் விளக்கு இல்லை. வாட்ச்மேன் இல்லாத காரணத்தால் பொது விளக்குகளும் போடப்பட வில்லை. மொட்டை மாடி சென்று நகரைப் பார்த்தால், வானத்தில் வர்ண ஜாலங்களைக் காணலாம். ஆனால், மனது மேலே செல்ல அனுமதிக்கவில்லை. எதையோ இழந்துவிட்டது போன்ற ஓர் பிரமை. பெரிய தவறை இழைத்து விட்டது போன்ற குற்ற உணர்வு. தனிமை இவ்வளவு கொடியதா? என்ற மனவோட்டம். அறையைச் சாத்திவிட்டு படுக்கையை விரித்தேன். அதிக வெப்பமாக இருக்கும் போது குளிர்ப்பிரதேசங்களில் இருப்பதைப் போன்று கற்பனை செய்து கொண்டால், வெப்பம் தெரியாதென்று எங்கோ, எப்பொழுதோ படித்தது அப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது.

Representational Image
Representational Image

விடுதிக்காப்பாளர்களில் ஒருவராகிய பி.ஆர்., எப்பொழுதும் சிரிக்க வைப்பதில் வல்லவர். அன்று நான் கல்லூரி செல்ல, கேட்டை நெருங்கிய போது, அவர் விடுதிக்கு வர உள்ளே நுழைந்தார். எல்லாப் பேராசிரியர்களையும் எனக்குப் பிடிக்குமென்றாலும் அவர் மீது எனக்கு அளவற்ற அன்பும் மரியாதையும் உண்டு.

வணக்கம் சொன்ன என்னிடம், ’பையில எவ்வளவு பணம் இருக்கும்? நூறு இருநூறு இருக்குமா? கடனாகத் தர முடியுமா?’ என்று அவர் கேட்டதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை, விழித்தேன். அவரோ,`அது ஒண்ணுமில்ல, நம்ம கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில நெல் நடவு செஞ்சிருக்காங்க, இப்பவே அட்வான்ஸைக் கொடுத்திட்டா, விடுதிக்கு அரிசிக்கு அலைய வேண்டாமே. அதுக்காகத்தான் கேட்டேன்,’ என்று அவர் சிரிக்காமல் சொன்னாலும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அப்புறம்தான் தெரிந்தது, கல்லூரி வளாகம் மழை நேரத்தில் சேறும் சகதியுமாக ஆகி விடுகிறது என்று கூறி, உள்ளே தரமான சாலைகள் அமைக்க வேண்டுமென்று மாணவர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்க, நிர்வாகம் கண்டு கொள்ளாததால், இரவோடிரவாக விடுதி மாணவர்கள், கருமண்டபத்திலிருந்து நெல் நாற்றுக்களைக் கொண்டு வந்து, மைதானச் சேற்றில் நடவு செய்து வைத்து விட்டார்களென்று!

Representational Image
Representational Image

பி.ஆர், விடுதியில் பிரச்னை ஏதுமில்லையே என்று என்னைக் கேட்க, நானும் இல்லையென்று சொல்ல, `அரிசி, இதரச் சாமான்கள் வாங்கிக் கொடுத்தாயிற்று, சமைக்கவும், பரிமாறவும் ஆட்கள் இருக்கிறார்கள், சாப்பிட நீங்களெல்லாம் இருக்கிறீர்கள், நான் விடுதிக்குச் சென்று என்ன செய்யப் போகிறேன்? வாருங்கள், கல்லூரிக்குப் போவோம்,’ என்று என்னுடனே திரும்பிவிட்டார். அதனை மனத்தில் அசை போட்ட நேரத்தில், தனிமையில் இருந்ததால் நித்திராதேவி என்னை இறுகத் தழுவிக் கொள்ள... நான் உறங்க… வெளியில் உலகம் விழித்திருந்து தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. தனிமையின் தாக்கத்தை அந்தத் தீபாவளி இரவு நன்றாகவே உணர்த்திவிட்டது.

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு