Published:Updated:

பேனர்! – சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

அந்த தேவதை ரோஜா வண்ண துண்டில் பொக்கிஷமாய் மிளிர்ந்து ஒளிர்ந்தாள். முதல் முறையாக அப்பாவான மகிழ்ச்சி அறிவுக்கு.

டாக்டர் மிருதுளா பூங்கொத்தை கரங்களுக்குக் கொடுப்பது போல் அந்தப் பிஞ்சை அவன் கரங்களுக்கு மாற்றிக் கொடுத்த போது சிலிர்த்துப் போனான். இந்த உலகம் தன் காலடியில் மிதந்து உற்சாகம் கொள்வது போலிருந்தது.

Representational Image
Representational Image

ரோஸ் வண்ணத்தில் குட்டிக் குட்டியாய் விரல்கள் மூடிய வண்ணம். கண்கள் மூடி குறு புன்னகையில் திறப்பேனா என அழிச்சாட்டியம் வேறு. அந்த தேவதை ரோஜா வண்ண துண்டில் பொக்கிஷமாய் மிளிர்ந்து ஒளிர்ந்தாள். முதல் முறையாக அப்பாவான மகிழ்ச்சி அறிவுக்கு. "டாக்டர் தமிழ் எப்படியிருக்கா.. பாக்க முடியுமா" குரலில் ஏக்கம் கலந்திருந்தது. வாய் மட்டும் பேச கண்கள் ஏந்தியிருக்கும் தேவதையையே பார்த்து கண்ணீரால் விழி மூடத்தொடங்கியிருந்தது.

உங்க மனைவி கொஞ்சம் மயக்கத்துல இருக்காங்க அறிவழகன். நிச்சயம் மயக்கம் தெளிஞ்சவுடனே பாக்கலாம். அவங்க நார்மல்தான். பயப்படாதீங்க. வெயிட் பண்ணுங்க என்ற போது இன்னொரு நர்ஸ் அந்தக் குட்டி தேவதையைக் கைமாற்றி பூப்போல தூக்கிச் சென்றாள். அம்மா, அப்பா, மாமனார், மாமியார் புடைசூழ நின்றவன் போகும் தேவதையை ஏக்கத்தோடு பார்த்து நின்றவனின் தோளை அப்பா தொட்ட போது ஒருவித மனநிறைவும் பெருமையும் அந்தப் பிடிப்பில் இருந்தது. அம்மா முந்தானையின் நுனியால் ஆனந்தக் கண்ணீரை துடைத்தாள். மாமியாரிடம் ஒரு பவ்யமும் பணிவும், மாமனாரிடமிருந்து ஒரு அழுத்தமான கைக்குலுக்கலில் எல்லாமே அடங்கியிருந்தது. எல்லோருக்கும் இனிப்பு வழங்கி சந்தோஷ மிகுதியில் மருத்துவரின் அனுமதிக்காக சேரில் சற்று இளைப்பாற அமர்ந்தான்.

``டாக்டர், உங்கள கூப்பிடறாங்க" என்னும் குரல் கேட்டு வேகமாய் எழுந்து ஓடியவன் அறை வாசலில் நின்றான். கோட்டில் டாக்டர் மிருதுளா என எழுதியிருந்ததை மீண்டும் ஒரு முறை மனம் படித்து மிருதுளாவின் கண்களையே பார்க்க, ``எல்லோரும் நார்மலா இருக்காங்க"...பயப்படும்படி ஒண்ணுமில்ல, கொஞ்சம் அந்த அதிர்ச்சியில இருந்து மீளலை. அதான் கொஞ்சம் பாத்து சேப்டியா பண்ணுங்க, நீங்க போய் அவங்கள பாக்கலாம்"...."தேங்யூ டாக்டர்" என்பதைக் கூட காதில் வாங்கிக் கொள்ளாமல் மிருதுளா தெய்வமாக நடந்து போனார்கள். உள்ளே நுழைந்த அவனைப் பார்த்து அவர்கள் மெலிதாகச் சிரிக்க அவனும் சிரித்தான். ``ஒண்ணுமில்லேன்னு சொல்லிட்டாங்க, பயப்படாதீங்க....எல்லாம் சரியாயிடும்...உடம்ப பாத்துக்கோங்க....உங்கள பாத்துக்க உங்க கூட ரெண்டு பேர் இருப்பாங்க. இன்னும் ஒரு நாள்ல டிஸ்சார்ஜ் ஆயிடலாம்னு சொல்லியிருக்காங்க..."எனும் போதே அவன் போன் ஒலித்தது. "குட்டிமா, கொஞ்ச நேரத்துல கூப்புறேன்டா...."போனை அணைத்து விட்டு கொஞ்ச நேரம் ஏதேதோ பேசினான். சாருக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டு வந்திடறேன் என வெளியில் வந்தான். மறுமுனையில், அவன் ஜி.எம்.."சார், ஒண்ணுமில்லேன்னு சொல்லிட்டாங்க, அவர் எதையும் காதில் வாங்குபவராக தெரியவில்லை. பாருங்க அறிவு, ஏதாவது ஒண்ணு ஆகியிருந்தா யார் பொறுப்பு... எம்.டி.யிலேர்ந்து கிளைண்ட் வரை பதில் சொல்லி முடியலை.

Representational Image
Representational Image

அசால்ட்டா வேலை பாத்திருக்கீங்க. அதுவும் கிளைன் ட் இனாகுரேஷன் டேட் பிக்ஸ் பண்ணதுக்கப்புறம் இப்டி நடந்தா ஒத்துக்குவாங்களா. அவங்க வேற சி.எம்.மை கூப்பிடலாமான்னு பேசிக்கிட்டிருக்காங்க. அவங்களையும், எம்.டி.யையும் கன்வின்ஸ் பண்றதுக்குள்ள போதும்னு ஆயிடுச்சி. நம்ம ஷெட்யூல்ல ஏற்கெனவே ரெண்டுநாள் பேக்ல இருக்கோம். இந்த நேரம் பாத்து மழ வேற. மூணு மாசத்துக்கு முந்தி தண்ணியில்லன்னு வேலை நின்னுச்சி...இப்ப, மழ பேஞ்சி வேல நிக்குது. இதுக்கு நடுவுல இந்தப் பிரச்னை வேற. சீக்கிரம் சைட்டுக்குப் போங்க...ரிப்போட் ரெடி பண்ணுங்க. கிளைன்ட நீங்களே கன்வின்ஸ் பண்ணுங்க. என்ன கேட்டா அவுட் ஆப் ஸ்டேஷன்னு சொல்லிடுங்க. பிராப்ளம் சால்வானதுக்கப்புறம் நான் வர்றேன். பேமென்ட்ட ஹோல்டு பண்ணிடப் போறாங்க. எம்.டி.உங்க பேர்ல செம கோபத்துல இருக்கார். புரொமோஷன் டைம்ல தேவையில்லாம பேர கெடுத்துக்குறீங்க. எவ்ளோ குயிக்கா பிராப்ளத்தை மட்டுமல்லாம சைட்டை முடிக்கிறீங்களோ அவ்ளோ உங்களுக்கு நல்லது. எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு கைத்தூக்கிட்டு போய்ட்டே இருப்பேன். பால் ஈஸ் இன் யுவர் கோர்ட்.... வைக்கிறேன்னு சொல்லாமலேயே போன் வைத்தார்.

அதிகாரம் என்ன வேணா பண்ணும். ஸ்டோர் கீப்பரை வரவழைத்து என்ன வேணுமோ பாத்து அரேஞ்ச் பண்ணிக்கோங்க, எதுனாலும் கூப்பிடுங்க எனச் சொல்லி விட்டு நேராக காரில் சைட்டை நோக்கிக் கிளம்பினான் அறிவு என்கிற அறிவழகன். நேற்று மாலை தான் அந்தச் சம்பவம் நடந்தது. ஐந்து மீட்டர் ஆழத்தில் ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். மேலே இருந்து மண் அழுத்தத்தால் மண் சரிய கீழே வேலை செய்தவர்கள் மேல் மண் மூடிக் கொண்டது. அந்த நேரம் பார்த்து மழை வேறு. மழையிலும் வேர்த்துக் கொட்டும் என்பார்களே அப்படி ஒரு நிலை.

Representational Image
Representational Image

சிலர் சட்டெனத் தப்பிக்க, மூவர் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்டு ஆஸ்பிட்டலுக்குள் சேர்ப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. நேற்றைய இரவு உறக்கமில்லாத இரவு. குட்டிமாவிடம் கூட சரியாகப் பேச முடியவில்லை. அவளும் மணிக்கொரு தரம் போன் செய்து கொண்டே இருந்தாள். அப்பொழுதுதான் அந்தக் கனவு அறிவிற்கு ஞாபகம் வந்தது. ச்சே, குழந்தைய கொஞ்ச கூட நேரமில்லாம போச்சே. எல்லாமே அவசரம்தான் இங்க. எவ்ளோ அழகா இருந்தா அந்த தேவதை. குட்டிமாகிட்ட சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவா. காலையில நல்ல கனவு நிச்சயம் பலிக்கும்னு உள்மனசு சொல்லுது. எஃப்.எம்மில் ஸ்ரேயா கோஷல் `எனக்குப் பிடித்த பாடல்' பாடலைப் பாட கொஞ்சம் சூழலை மாற்றிப் போனது மனது.

சரியாக எட்டு மாதங்களுக்கு முன் ஒரு நண்பனின் திருமணம். முதல் நாளே சென்று அங்கிருந்த சுற்றுலாத் தளங்களைப் பார்த்து விட்டு நேராக ரூம் வந்து குளித்து ரிஷப்ஷனுக்குப் போய்விட்டான். கூட்டம் நிறைய. இவனுக்கு தெரிந்த முகங்கள் என யாரும் இல்லை. தனியே ஓரமாக அமர்ந்திருந்தான். நண்பனின் தங்கை தான் வந்து அண்ணா சாப்டீங்களா எனக் கேட்டுப் போனாள். அவளோடு ஒரு பெண் அத்தனை அழகு. அழகா, அவள் பேரழகு. அவள் நடந்து போவதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது அவன் நண்பன் மேடையிலிருந்து இவனைப் பார்த்து சிரித்தான். சைகை செய்த போது பின்னாலிருந்த பேரழகும் இவனைப் பார்த்து கையசைக்க ஒருவித கிறக்கம் அலையடிக்கத் தொடங்கியது. சற்று நேரத்திற்கெல்லாம் அவள் இவனை நோக்கி வந்தாள். நெஞ்சக்குழி படபடக்க அவன் உதடுகளை ஈரமாக்கிக் கொண்டான். என் பேர் தமிழ்மொழி, அவளாகத்தான் அறிமுகமானாள். சட்டென எழுந்தவன் நான், அறிவழகன் என்ற போது குறு புன்னகையில் கை நீட்டி நைஸ் நேம் என்றாள். தமிழ்மொழி எனப் பெயர் வச்சிக்கிட்டு இங்கீலீஷ்ல பேசறீங்கன்னு கேக்கணும்னு தோன, அப்படியே அதை அடக்கி ``உங்க பேரும் ரொம்ப நல்லாருக்கு" என்றான்.

Representational Image
Representational Image

``சாப்பிட போகலீங்களா, தனியா இருக்கீங்களே ஃப்ரெண்ட்ஸ் யாரும் வரலை. இல்லீங்க, இங்க யாரையும் எனக்குத் தெரியாது. நானும் மாப்பிள்ளையும் ஒண்ணா ஒரே சைட்ல வேலை செஞ்சோம். அவங்க ஃபேமிலி நல்ல குளோஸ். அவனத் தவிர வேற யாரையும் தெரியாது .." ஓ, நீங்களும் சிவில் என்ஜினீயரா...."ஆச்சர்யமாகக் கேட்டாள். ஆமாம், என்பதைப் போல தலையசைக்க அதற்கு அவள் தோழி கூப்பிட வர்றேன் எனக் கடந்து போனாள். நம்மள பத்தி தெரிஞ்சிக்கிட்டா, அவ என்ன பண்றான்னு தெரியலயே...ஆனா, எவ்ளோ நல்ல பேரு தமிழ்மொழின்னு. மனம் அந்தக் கூட்டத்தில் அவளைத் தேடி பின்னாலேயே அலைந்தது. போட்டோ எடுக்கும் போது அவளும் ஒரு முனையில் நின்றாள். சாப்பிடும் போது எதிராக அமர்ந்து சாப்பிட்டு சிரித்தாள். மறுநாளும் அதே நிகழ்வுகள். பேசத் தயக்கம், அவளோ அநாவசியமாக அவ்வப்போது ஓரப்பார்வைகளை வீசிப் போனாள். அவனைக் கடந்து போகும் போது அவளாக வந்து

"ஏதாவது கேக்கணுமா" என்றாள்.

``ம்"... சொல்லுங்க

``நீங்க இந்த ஊரா...”

``இல்ல, விழுப்புரம், ஆனா, சென்னையில குடியேறிட்டோம். ஏதாவது வேணுமா.”

``சென்னையா நீங்க. அதான் இந்த ஊரு பொண்ணு மாதிரி இல்லையேன்னு பாத்தேன்.”

“ஏன், சென்னை பொண்ணுன்னா கொம்பு முளைச்சிருக்கும், இந்த ஊரு பொண்ணுன்னா அம்மாஞ்சியா இருக்கும்னு பாத்தீங்களா...”

“ஐயோ,அப்டீ இல்லீங்க, அந்த ஆட்டிட்யூட்...அத சொன்னேன். அப்டியே துறு துறுன்னு பம்பரம் மாதிரி சுத்தறீங்களேன்னு கேட்டேன்.”

``தேங்ஸ்.”

வேகமாககடந்துபோகும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

எல்லாம் முடிந்து கிளம்பும் தருணம், மாப்பிள்ளை இவனைக் கட்டிப்பிடித்து ``டேய், அடுத்து உன்னோட கல்யாணச் சாப்பாடு தான்... சீக்கிரம் போடு, அதுவரைக்கும் பசி தாங்கமாட்டோம்," கிண்டலடித்துப் பேசிய போது மாப்பிள்ளையின் குடும்பமே சிரிக்க அவர்களோடு தமிழும் சிரிக்க அவளை ஏக்கப் பார்வை பார்த்தான்.

Representational Image
Representational Image

``கண்டிப்பா" என அவன் சொல்லும் போது ஒரு வெட்கம் கவ்விப் போனது. கண்களாலேயே தமிழ்மொழி டாட்டா காட்டினாள். மூன்று நாள்களுக்கு மேல் இருவருக்குள்ளும் இருந்த அவஸ்தையை அடைகாத்து வைக்க முடியவில்லை. தெரிஞ்சவங்க ஒருத்தருக்கு பிளான் போட்டுத் தரணும்னு அவன் போன் நெம்பரை வாங்கிவிட்டாள். அவனுக்கு அவளின் நெம்பரை எப்படி வாங்குவது என்பது எனத் தெரியவில்லை. மூன்றாவது நாள் ஏதோ ஒரு எண்ணிலிருந்து புது அழைப்பு.

"சார், நாங்க புதுசா வீடு கட்டணும், பிளான் போடணும். எவ்வளவு ஃபீஸ் வாங்குவீங்க," பொதுவாக கேட்டாள்.

அவனுக்கு அவள்தான் பேசுகிறாள் என்பதே தெரியவில்லை.

"எவ்ளோ ஏரியான்னு சொல்லுங்க, மனையோட நீள அகலம், ரோடு எந்தப்பக்கம்" என சகலமும் கேட்டான்.

சரியான மாங்கா மடையன் வாய்விட்டே திட்டினாள். அவன் என்னவென்று கேட்ட போது

“மாங்க வேணுமான்னு போன் பேசும் போது மடையனாட்டாம் கேட்டுப் போகிறான்” எனச் சொன்னாள்.

நான்கு நாள்களில் அவன் பிளான் போட்டுத் தர அவள் பிடிக்கவில்லையெனச் சொன்னாள். மீண்டும் பிளான், மீண்டும் பிடிக்கவில்லை. கடைசியில் சைட்டைப் பார்த்தே ஆக வேண்டும் எனச் சொல்ல, ஒரு காபி ஷாப்பின் அருகாமைக்கு வரச் சொன்னாள். அவன் போன போது அதிர்ச்சியில் உறைந்தே போனான். அந்த காபி ஷாப்பின் அருகில் நின்று சிரித்துக் கொண்டிருந்தாள் தமிழ்.

Representational Image
Representational Image

``மடையா, மடையா பேசறது யாருன்னு கூடவா கண்டுபிடிக்க மாட்ட. அவ்ளோ உருகிப் பேசறேன், அப்ப கூடவா எந்நினைப்பு வரல உனக்கு," செல்லமாக கோபித்துக் கொண்டாள்.

"ஐயோ,நா, உண்மையிலேயே கிளைன்ட்னு நெனச்சி தாங்க பேசினேன். ஆனா, நீங்கன்னு நெனைக்கலை. எப்டீங்க என் நம்பர் கண்டுபிடிச்சீங்க."

"ஆமா, ரொம்ப கஷ்டமான விஷயம் பாரு. ஒரு பொண்ணுக்கு ஒண்ணு தேவைன்னா எப்படியாவது கண்டுபுடிச்சிடுவா. ஆனா, இந்த ஆம்பளைங்கதான் பயந்தாங்கொள்ளிங்க."

காபி சாப்பிட்டார்கள் பேசினார்கள்... பேசினார்கள்.... தமிழ்மொழி... ஐ.டி.யில் வேலை. ஒரே ஒரு அண்ணன். வயசு இருபத்திமூணு. போதுமா... இன்னும் வேணுமா.... கிளம்பும் போது அவள்தான் சொன்னாள், ``ஐ லவ் யூ".... அவனுக்கு ஆகாயம் கீழே இறங்கி வந்து அணைத்து தூக்கிக் கொண்டு செல்வது போல் இருந்தது. அவன் மெசேஜ் அனுப்பினான்... ``குட்டிமா, ஐ லவ் யூ"... அதைப் பார்த்து சிரித்தாள். அவளுக்கு ஒரே ஆனந்தமாக இருந்தது. இந்த வயதில் காதலிக்கப்படுகிறோம் என்பதே எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது. கைநிறைய சம்பளம், வாழ்வை அனுபவிக்க இதைவிட சரியான வயதென்று ஒன்று உள்ளதா எனத் தெரியவில்லை. குட்டிமா... சகலமும் ஆகிப்போனாள். வாட்ஸ் அப்பில், ஐஎம்ஓ-வில் எனக் காதல் வளர்த்தார்கள்.

வாரங்களில் கைக்கோத்து கால்வலிக்க நடந்தார்கள். சைட்டிற்குப் போனார்கள். எல்லாம் ஒரு நேர்க்கோட்டில் போய்க் கொண்டிருந்தது. நேற்று மண் சரியும் போது அங்கே நின்று அவளோடுதான் பேசிக் கொண்டிருந்தான். அப்பொழுதுதான் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தான்...

``என் கண்ணில் இருக்கும் கண்மணியின் கருவிழி நீ...இதனால் தான் நான் இந்த உலகத்தை புதுசா பாக்குறேன்."

"அடேயப்பா, இது கவிதையா சார்.... பாப்போம். பாப்போம்.. கல்யாணத்துக்கப்புறமும் இப்படிக் கொஞ்சறீங்களான்னு...."

Representational Image
Representational Image

அப்பொழுதுதான் அந்த மண் சரிவு. பயங்கரச் சத்தம்.. ”இருடா, குட்டிமா கூப்புடறேன்...” மழைவேறு.... போன் மணி அடிக்க....”சொல்லுடா குட்டிமா... நானே கூப்புடணும்னு இருந்தேன். ஆமான்டா சைட்டுக்குதான்... ஒர்க் பிரஷர விட மென்டல் பிரஷர் ஜாஸ்தியாயிடுச்சி. அடுத்த ஸ்டேஜ் நகருணும்ல... ஆமா, இப்ப கஷ்டப்பட்டாதான் உன்ன ராணி மாதிரி பாத்துக்க முடியும். ” நடந்த அனைத்தையும் போவதற்குள் சொல்லி முடித்தான். பத்து நாள்களுக்கு மேல் ஆகிப்போனது அவனுக்கு அவளின் குட்டிமாவைப் பார்த்து. ஹாஸ்பிட்டலின் கனவைச் சொன்னான். ”உடனே உன்னப் பாக்கணும் போல இருக்குடா” எனச் சொன்னாள். ஒரு வாரத்துக்கு தொந்திரவு பண்ணாத.. .நானே வர்றேன்... அன்று காலை, அவளின் ஸ்கூட்டியில் போன போது போன் மணி அடிக்க ஓரமாக வண்டியை நிறுத்திப் பேசினாள். குட்டிமா, ஒரு மூணு மணி நேரம் தூங்கிட்டு நாலு மணிக்கெல்லாம் உன்னப் பாக்க அவர்கள் எப்பொழுதும் சந்திக்கும் இடத்திற்கு வருவதாகச் சொன்ன போது "ஏம்மா, அப்டி ஓரமாப் போய் பேசுமா... இந்த போன கண்டுபுடிச்சவன சொல்லணும்.. .நேரம் காலம் தெரியாம இதுங்க வேற.... பேனருக்கு குறுக்க நின்னுக்கிட்டு ஒரு ஆள் திட்டிக் கொண்டே போனான். அவளுக்கு முகம் மாறிப் போக ஆபீஸ் போய் அழைப்பதாகச் சொன்னாள். என்னவென அவன் கேட்க கடுப்பில் போனை கட் செய்து அந்த பேனரை பார்த்தாள்.

யாரோ ஒரு அரசியல்வாதி நகைகளோடு செல்போனில் பேசும் படத்தில் சிரித்துக் கொண்டிருக்க அவளுக்கு ஆத்திரமாக வந்தது... மாலை, அவன் போன் செய்த போது உற்சாகமாகக் கிளம்பினாள்.

Representational Image
Representational Image

"குட்டிமா, உனக்காக வெயிட் பண்றேன்..அப்டியே என்னோட கருவிழிக்குள்ளயே நிக்கற...சீக்கிரம் வாடா...."

இன்று ஏனோ அவன் குரல் கிறங்கடித்தது. அவன் காத்திருக்க தொடங்கினான். குதூகலத்தோடு அவள் மிதந்து வந்து கொண்டிருந்தாள். மெல்லிய காற்று. காதுகளில் அவன் எப்பொழுதும் அழைக்கும் "குட்டிமா"...ச்சே, எவ்ளோ நல்லவன்... எனக்கே எனக்கானவன்... அந்தப் பிஞ்சு குழந்தை... ஒரு ஒளிப்படம் போல் எல்லாம் மனதில் அலையடிக்க....ச்சத்.... எல்லோரும் அலறி அடிக்க, சடசடவென வாகனங்கள் மோத தண்ணீர் லாரி தமிழ்மொழி முகத்தில் ஏறி இறங்கியிருந்தது. காலையில் கட்டப்பட்ட பேனர் காற்றில் பறந்து மோத நிலைகுலைந்து தடுமாறி கீழே விழ தமிழ்மொழி அடங்கிப்போனாள். குட்டிமாவிற்கு அறிவு முயற்சி செய்ய, அலைபேசி அணைத்து வைத்த ஒலிப்பதிவு குரல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. அது நிரந்தரமாக அணைக்கப்பட்ட செய்தியே அவனுக்கு நீண்ட நேரம் கழித்துதான் தெரிந்தது. மார்ச்சுவாரியில் அறிவு குட்டிமாவிற்காக கேவிக்கேவி சதைப்பிண்டங்களைப் பார்த்து அரற்றிக் கொண்டிருந்தான். மறுநாள் செய்தித்தாள்களில், சமூக வலை தளங்களில் சிரித்துக் கொண்டிருந்தாள் அவனின் குட்டிமா.

-மகேஷ்குமார் செல்வராஜ்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு