Published:Updated:

கடன் நட்பை முறிக்கும்! - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

நடைப்பயிற்சியால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள் அமுதனுக்கு அமைந்தது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

குளிரங்கி அணிந்துகொண்டு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தான் அமுதன். தினமும் காலைவேளைகளில் காலாற நடந்து செல்வது அமுதனின் தினசரி வழக்கம். பெங்களூருவின் டிசம்பர் மாதக் குளிர் அவனது எலும்புகளில் ஊடுருவித் துளைத்தது. வழியெங்கும் நிறைய மனிதர்களைப் பார்த்தான். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான குளிரங்கிகளோடு இவன் எதிரே வந்துகொண்டிருந்தார்கள்.

Representational Image
Representational Image

இரு சக்கர வாகனத்தில் இவன் எதிரே நிறைய பேர் இவனைக் கண்டும் காணாததுபோலும் போய்க்கொண்டிருந்தார்கள். நடைப்பயிற்சியால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள் அமுதனுக்கு அமைந்தது. சில சமயம் காரணமேயில்லாமல் நாய்கள் இவனைத் துரத்திக்கொண்டு வரும். சில சமயம் பரிச்சயமேயில்லாத யாரோ ஒருவர் இவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே போவார். சில சமயம் இவனது பக்கத்து வீட்டு பெண்மணிகளும் "வாக்கிங்கா" என்று கேட்டுச் சிரித்தபடியே செல்வார்கள்.

சில சமயம் இவனது வீட்டுப் பக்கத்திலிருக்கும் பேக்கரி கடைக்காரரும் இவனோடு பேசிக்கொண்டே வாக்கிங் வருவார். இந்த மாதிரியான விதவிதமான அனுபவங்களுக்காகவே தினம்தோறும் நடைப்பயிற்சி போவதை வழக்கமாக வைத்திருந்தான் அமுதன். ஒவ்வொரு நாளும் 50 நிமிடங்களுக்கு மேல் நடப்பான். அன்றும் நல்லபடியாக நடைபயணம் முடித்து வீட்டு வாசலில் நின்றான். வாசலில் நின்றவனுக்கு செப்பல் ஸ்டாண்டில் அவனது ஒரு ஷூ மட்டும் இருக்கவே குழப்பமடைந்தான். காலிங்பெல் அடித்த உடனே கதவைத் திறந்தாள் ரேகா.

"வாசல்ல கிடந்த என்னோட புது ஷூ ஒண்ணுதான் இருக்கு, இன்னொண்ணக் காணோம், பார்த்தியா" என்று ரேகாவிடம் கேட்டான்.

Representational Image
Representational Image

"இல்லையே" என்றவாறே ரேகாவும் அவனோடு சேர்ந்து தேடத்தொடங்கினாள். அது பழைய ஷூ வாக இருந்தாலும் அமுதன் அதைப் பெரிசுப்படுத்தியிருக்க மாட்டான். புது ஷூ என்பதால் ரேகாவும் பதற்றமானாள். கொஞ்ச நேரத்திலேயே அவளுக்குப் புரிந்துவிட்டது டாமிதான் எடுத்துப் போயிருக்கணும் என்று. வேகமாகக் கீழிறங்கி பக்கத்திலிருந்த புதர்களில் சென்று தேட ஆரம்பித்தாள். ஷூ கிடைக்கவேயில்லை. கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கும் மேலாகத் தேடியும் கிடைக்காததால் வீட்டுக்குள் நுழைந்துகொண்டே சொன்னாள்.

"காணோம்" என்றாள்.

"எல்லா இடத்திலேயும் பார்த்தியா?" என்றான் அமுதன். "எங்கயுமே இல்ல" என்றாள்.

அதுவரைக்கும் அமைதியாக இருந்த அமுதன் எரிச்சலுற்றான். வாங்கி 2 நாள்களே ஆகியிருந்ததால் மனம் நொந்துபோனான்.

"1,500 ரூபாய் கொடுத்து வாங்கினது எங்க போச்சுன்னுத் தெரியலியே, நமக்கு நேரம் சரியில்ல" என்று சொல்லிக்கொண்டே அவனும் கீழிறங்கிப் போய்த் தேடினான். அவன் போய்த் தேடிய பிறகும் கிடைக்கவில்லை. வீட்டுக்கு வந்து சோகமாய் உட்கார்ந்து கொண்டு மொபைலைப் பார்க்க ஆரம்பித்தான். ஒரு மிஸ்டு கால் இருந்தது. அமுதனின் உற்ற நண்பன் ரமேஷ்தான் போன் பண்ணியிருந்தான். "I will call you later" என்று அவனுக்கு whatsapp-ல் மெசேஜ் அனுப்பினான்.

Representational Image
Representational Image

ரமேஷும் அமுதனும் ஒரே ஊர்க்காரர்கள். ஒரே பள்ளியில் படித்தார்கள், ஒரே கல்லூரியில் படித்தார்கள். ஒன்றாகவே வேலைதேடி பெங்களூருக்கும் வந்தார்கள். இருவரும் சேர்ந்தே பல இன்டர்வ்யூக்களுக்கு ஏறி இறங்கினார்கள். கடவுளின் கருணையில் ரமேஷுக்கு நல்ல வருமானத்தில் வேலை கிடைத்தது. ஆனால், அமுதனுக்கு சுமாரான வேலையே கிடைத்தது. அமுதன் அடிக்கடி ரமேஷுடம் கை மாத்து வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். சில சமயம் சீக்கிரமாகக் கொடுப்பான், சில சமயம் இழுத்தடிப்பான். இப்போது அவன் கால் பண்ணுவதே பணம் கேட்டுத்தான். அவனிடமிருந்து 5,000 ரூபாய் வாங்கி 10 மாதங்களுக்கு மேலானது. அன்று காலையிலிருந்து இவனுக்குக் கொஞ்சம் குற்ற உணர்வாகவே இருந்தது. சரி அடுத்து போன் செய்தால் பார்த்துக்கலாம் என்று மனதுக்குக்குள் நினைத்துக் கொண்டே ஆபிசுக்கு கிளம்பி கிளம்பினான்.

மாதக்கடைசி என்பதால் வேலைப்பளு அதிகமாகவே இருந்தது. போன நேரத்திலிருந்து ஒரு நிமிடம்கூட உட்கார நேரமில்லாமல் வேலைபார்த்துக்கொண்டே இருந்தான். இரவு 10.20-க்குத்தான் வீட்டுக்கு வந்தான். வீட்டுக்குள் நுழைந்த உடனே ரேகா சொன்னாள்.

"ஷூ கிடைச்சிருச்சு" என்றவாறே எடுத்துக் கொடுத்தாள். அதன் முன் பகுதி முழுவதும் கடித்துக் குதறப்பட்டிருந்தது. "இது கிடைச்சதுக்கு, கிடைக்காமலே இருந்திருக்கலாம்" என்று சொல்லிக்கொண்டே அதைத் தூக்கி வெளியில் எறிந்தான். இன்னொரு ஷீவையும் செப்பல் ஸ்டாண்டிலிருந்து எடுத்து வெளியே வீசினான்.

Representational Image
Representational Image

அடுத்த நாள் காலை வாக்கிங் போய் வீட்டுக்கு வந்த உடனே ரேகா சொல்ல ஆரம்பித்தாள் "அரிசி காலியாகப்போகுது, போய் மூட்டை எடுத்துகிட்டு வர்றீங்களா?" என்றாள்.

"இப்போதைக்கு பக்கத்துக் கடையில 2 கிலோ வாங்கிக்கோ, சம்பளம் போட்ட பிறகு, மூட்டை எடுத்துகிட்டு வர்றேன்" என்றான்.

"கேஸும் கம்மியாதான் இருக்கு, எவ்வளவு நாளைக்கு வரும்னு தெரியல" என்றாள்.

"இப்பதான மாத்தினேன். 2 மாசம் கூட ஆகலியே" என்றான்.

"ஆங், எல்லாரும் பச்ச தண்ணில குளிக்காம வென்னில குளிச்சா எவ்வளவு நாளைக்கு வரும்?" என்றாள்.

அமுதன் அமைதியானான். குழந்தை பிறந்ததுக்கப்புறம் செலவுகள் அதிகமாகிக்கொண்டே வருவது அமுதனுக்குப் புரியத் தொடங்கியது. சீக்கிரமாக நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணத் தொடங்கினான். வேறு வேலைக்குப் போவது மட்டும் ஒரே தீர்வு என்று மனதுக்குள் சொன்னான்.

Representational Image
Representational Image

கிடைக்கும் ஓய்வு நேரங்களில் வேறு வேறு வேலைகளுக்கு அப்ளை பண்ணினான். நிறைய கம்பெனிகளுக்கு இன்டர்வியூப் போகத் தொடங்கினான். ஆனால், அவனுக்கு எதுவுமே தோதாக அமையவில்லை. ஒன்று சம்பளம் அதிகமாகக் கொடுக்கும் கம்பெனி தொலைதூரத்திலிருந்தது அல்லது வேலை இவன் படித்ததுக்குச் சம்பந்தமேயில்லாமல் இருந்தது. ஆனாலும், மனம் தளராமல் தொடர்ந்து வேலைதேடிக்கொண்டே இருந்தான். என்றாவது ஒரு நாள் நல்லது நடக்கும் என்று.

ரமேஷுக்கு போன் பண்ணி அவனதுக் கம்பெனியில் ஏதாவது காலியிடம் இருக்கிறதா என்றுக் கேட்கலாம் என்று முடிவெடுத்தான். ஆனால், கொஞ்சம் மனம் குழம்பியது. காசு கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தான். இன்னும் கொஞ்ச நாள் தேடிவிட்டுக் கிடைக்காத பட்சத்தில் ரமேஷிடம் பேசுவோம் என்று முடிவைக் கைவிட்டான்.

அன்றைய தினம் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு TV பார்த்துக்கொண்டிருந்தான் அமுதன். திடீரென மெசேஜ் சப்தம் கேட்டது. சம்பள மெசேஜ் வந்திருந்தது. உங்கள் அக்கவுன்டில் இவ்வளவு பணம் போடப்பட்டுள்ளது என்ற மெசேஜைப் பார்த்த உடனே முகம் மலர்ந்தான் அமுதன். அன்றைக்கு சாயங்காலமே வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான்கள் வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்டுக்குக் கிளம்பினார்கள்.

Representational Image
Representational Image

சூப்பர் மார்க்கெட்டில் என்றைக்கும் இல்லாதக் கூட்டமாக அன்றைக்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எங்கு பார்த்தாலும் மனிதத்தலைகள். வாடிக்கையாக அந்தக் கடைக்கே போவதால் அங்கிருந்த மானேஜர் இவனைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தார். "சேலரி டே, ஏனும் மாடக் காகல" என்றார் கன்னடத்தில். கடையை விட்டு எப்போது வெளியே வரலாம் என்கிற அளவுக்குக் கூட்டம். கூடையை எடுத்து வந்து ஒவ்வொரு பொருளாக நிரப்பத் தொடங்கினார்கள்.

"நீங்க இங்கேயே இருங்க சோப்பு, பூஜை சாமானெல்லாம் எடுத்துகிட்டு வந்துர்றேன்" என்றவாறே ரேகா கூடையை எடுத்துக்கொண்டு ஓடினாள். இவன் கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில்களை எடுத்துப் போட்டான். அடுத்தபடியாக டூத் பேஸ்ட் எடுக்கப்போகும்போது தூரத்தில் நின்றுகொண்டிருந்த ரமேஷைப் பார்த்துவிட்டான். ஆனால், ரமேஷ் இவனைக் கவனிக்கவில்லை. கூட்டம் அதிகமாக இருந்ததால் அவனது கவனம் வேறெங்கோ இருந்தது.

Representational Image
Representational Image

ரேகா வந்த உடனே அவளிடம் கேட்டான், "சீக்கிரமாகக் கிளம்பிரலாமா?" என்றான். "எதுக்கு" என்று கேட்டாள் அவள். "ஒண்ணுமில்ல சும்மாதான், கூட்டம் அதிகமா இருக்குல்ல" என்றான். "சரி, நான் போய் சீக்கிரமா மசாலா அயிட்டத்தையெல்லாம் எடுத்துகிட்டு வர்றேன்" என்றவாறே கிளம்பினாள். "சரி, போ போ" என்றான் அமுதன். அடுத்தடுத்து அவனது கண்ணில் திரும்பத் திரும்பப் பட்டுக்கொண்டே இருந்தான் ரமேஷ். இப்போது அமுதனுக்கு குழப்பமாயிற்று. இவன் நம்மள பார்த்தும், பார்க்காத மாதிரிப்போறானோ என்று கொஞ்சம் குழம்பினான்.

எல்லாம் வாங்கிவிட்டு பில்லிங் கவுன்டர் வரிசையில் நின்றார்கள். அமுதனும் ரேகாவும் கொஞ்ச நேரம் மாற்றி மாற்றிக் குழந்தையை வைத்துக்கொண்டிருந்தார்கள். கூட்டம் மெதுவாகவே நகர்ந்தது. அமுதனின் கண்கள் ரமேஷ் தட்டுப்படுகிறானா என்ற லேசான பதற்றத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டேயிருந்தது. ஒரு வழியாக பில்லிங் முடித்துவிட்டுக் கடையைவிட்டு வெளியே வந்தார்கள்.

அன்று டூ வீலர் பார்க்கிங்கிலும் அதிகப்படியான கூட்டமாக இருந்தது. இவன் வண்டியை எடுத்துவிட்டு சாமான்கள் இருந்த பேக்கை வைத்தான். கிளம்பலாமா என்று கேட்டவாறே வண்டியை உதைத்தான். ஸ்டார்ட் ஆகிக் கொஞ்ச தூரம் போனதுமே எதிர்பாராமல் ஒரு சின்ன குழந்தை இவனது வண்டியைக் கிராஸ் செய்து கீழே விழுந்தது. அமுதனால் வண்டியைச் சரியாக பேலன்ஸ் செய்ய முடியாமல் முன்னாலிருந்த பைக்கை வேகமாக இடித்தான். உடனே, அந்த வண்டியிலிருந்து மெதுவாக ஒருவன் இறங்கி வந்தான். இவன் "சாரி சார், சாரி சார்" என்றான். அவன் பொறுமையாகக் ஹெல்மெட்டைக் கழற்றிவிட்டு "எங்கடா 5,000 ரூபாய்?" என்றான்.

Representational Image
Representational Image

அமுதன் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. "நாளைக்கு மட்டும் பணம் வரல நல்லாயிருக்காது பார்த்துக்கோ" என்று சொன்னவாறே நகர்ந்து சென்றான். "கண்டிப்பா தந்துர்றேன்டா" என்று சொல்லிக்கொண்டே அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான் மனசு நிறையத் துக்கத்தோடு.

-அருண்குமார் செல்லப்பன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு