Published:Updated:

வதை!- சிறுகதை #MyVikatan

முதலில் அந்த ஓவியங்களை மனக்காட்சிப்படுத்துவார். தன் தொழுகையிலும் அல்லாவோடு அந்த ஓவியத்தை ரசிப்பார். அவர் தொழுவதே ஒரு ஓவியமாக இருக்கும்.

Representational Image
Representational Image

குமரனுக்கு அந்தக் குளிர் முதலில் அச்சமூட்டக்கூடியதாக இருந்தது. இந்த இரவில் யாருமற்ற தனிமையில் இருட்டை ரசிப்பதென்பது பேரானந்தமாக இருந்தது. இருள் மாபெரும் அழகு பேரழகன்.

அவன் ஓவியங்கள் வரைவான். ஓவியம் கற்றுக் கொடுத்த மொய்தீன் வண்ணங்களை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதை நன்றாகச் சொல்லிக் கொடுத்திருந்தார். வண்ணங்களோடு கரைந்து விடு. அதுவே குமரனுக்கு அவர் சொன்ன முதல் பாடம்.

Representational Image
Representational Image

ஓர் ஓவியம் நிலைத்து நிற்க வேண்டுமென்றால் நாம் பயன்படுத்தும் வண்ணங்கள்தான் அதன் ஆதாரம் என்பார் மொய்தீன். குமரனுக்கு பத்து வயதிருக்கும் போதுதான் முதன் முதலில் மொய்தீன் அறிமுகமானார். குமரனின் அப்பா மொய்தீனிடம் கொண்டு வந்து சேர்க்கும் போது பையன் இனிமே உங்க பையன்... அவன எப்படி பட்டத் தீட்டணுமோ அப்படி பட்ட தீட்டுங்க... இனி உங்கபாடு... என்னன்னு கேக்கமாட்டேன்.

ஆரம்பத்தில் குமரனுக்கு அவரிடம் வருவது பிடிக்கவில்லை. அவன் வயது பையன்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது இவன் அவரோடு அமர்ந்திருப்பது அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. எதுவும் வரையமாட்டார். வெறுமனே தரையில் எதுவும் பேசாமல் அமர்ந்திருப்பார். சிலசமயம் கையில் ஜபமாலையை உருட்டிக் கொண்டிருப்பார். பேசவும் மாட்டார்.

நேரம் என்றெல்லாம் கிடையாது. பள்ளி முடிந்ததும் வந்து அவரைப் பார்க்க வேண்டும். வேலை இருந்தால் சொல்லுவார். இல்லையேல் கிளம்பிப் போகச் சொல்லுவார். எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருப்பது அவருக்கு பிடிக்கும். அவனுக்குப் பிடிக்காது. திடீரென சிரிப்பார்.

அம்மாவிடம் ஒருமுறை பயந்து சொன்னபோது அம்மா அப்பாவிடம் சொல்ல, அப்பாவின் முறைப்பிலேயே அம்மா பயந்து போனாள். பள்ளிக்கூடத்துல அவன் வெறும் படிப்ப மட்டும்தான் கத்துக்குவான். ஆனா, அவர்கிட்ட வாழ்க்கைய கத்துக்குவான். அம்மா அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை.

முதன் முதலாக அவன் கையில் தூரிகையைக் கொடுத்து வரையச் சொன்னார் மொய்தீன். தனக்கு எதுவும் வரையத் தெரியாது என்று அவன் சொன்னபோது எதையாவது வரைந்து விட்டுப் போ என்று புத்தகத்தில் மூழ்கிப் போனார். அவனுக்கு என்ன வரைவது எனத் தெரியவில்லை.

மொய்தீன் அந்த ஊருக்கு ஜமாத்திற்காக வந்திருந்தார். ஒரு சின்ன கிராமம் அது. குளக்கரைக்கு அருகாமையில் அமைந்த சின்ன மசூதி. மூன்று பக்க சுவரும் ஒரு கதவும் அமைந்த மசூதி. வெளியில் கைகால் கழுவி சுத்தம் செய்வதற்கான தொட்டி இருந்தது. மொய்தீனுக்கு அந்த ஊரைவிட்டுப் போவதற்கு விருப்பமில்லை. அந்த மசூதியைப் பெரிதாக்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது.

Representational Image
Representational Image

நீண்ட நாள் பிரார்த்தனைக்குப் பிறகு அவர் முயற்சியால் அந்த இடத்தின் சுற்றுச் சுவர்கள் இடிக்கப்பட்டு ஆழ குழி தோண்டி மசூதி கட்டும் வேலைகள் நடைபெறத் தொடங்கியிருந்தன. மொய்தீனுக்கு ஓவியங்கள் மீது அலாதி பிரியம். ஒரு ஓவியத்தை அத்தனை எளிதில் வரைந்து விடமாட்டார்.

முதலில் அந்த ஓவியங்களை மனக்காட்சிப்படுத்துவார். தன் தொழுகையிலும் அல்லாவோடு அந்த ஓவியத்தை ரசிப்பார். அவர் தொழுவதே ஒரு ஓவியமாக இருக்கும். அத்தனை ரசனையோடு தொழுது முடிப்பார். குமரன் அவரோடு நெருங்கிய நாளில் அவனுக்கும் அந்தத் தொழுகை கை வந்தது. அவனும் வீட்டில் ஐந்தும் வேளையும் தொழுவான். இந்த மொய்தீன் பாய் குமரனையும் கெடுத்துட்டார் பாரேன். ஊரின் பேச்சுக்கு அவர்கள் செவி சாய்த்ததே இல்லை.

அதிகம் பேசமாட்டார் மொய்தீன் பாய். அவர் பேசினால் அதில் அர்த்தம் இருக்கும். வார்த்தைய வீணாக்கக் கூடாது பாரு. அல்லா குடுத்தாங்கறதுக்காக எல்லாத்தையும் கொட்டிடக் கூடாது குமரா. கொட்டிட்டா அத எப்பவும் அள்ள முடியாது பாத்துக்கோ. அவனோடு இந்து கோயில்களுக்கும் போவார். ஐயர்கள் அவரை நன்கு கவனிப்பார்கள். தொலை தூரத்தில் இருக்கும் பல்லவர்கால கோயில்களை குமரனோடு சென்று சிலாகிப்பார். அந்தக் கலை நுணுக்கங்களை விளக்குவார். அவர் வரையும் ஓவியங்களிலும் அதைப் பயன்படுத்துவார்.

அவருக்கு வண்ணத்தில் பிடித்த நிறம் கறுப்பு. கறுப்பு வண்ணம் என்றால் உயிரை விட்டு விடுவார். ஆனால், அதை அவர் வரைந்த எந்த ஓவியத்திலும் பயன்படுத்தியதே இல்லை என்பதுதான் ஆச்சர்யம்.

கறுப்புதான் எல்லாத்தையும் எடுத்துக் கொடுக்கும். ராத்திரியிலதான் நிலா பளிச்சுன்னு தெரியும். இந்த நட்சத்திரங்கள் கண்சிமிட்டி பேசும். எதையும் எடுப்பா எடுத்துக் கொடுக்கும். எல்லாம் பேசுவார். ஆனால், அதை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை.

Representational Image
Representational Image

குமரன் அன்று ஏதோ கடமைக்குக் கிறுக்கி விட்டுப் போனான். அவன் போன பின் நெடுநேரம் அவன் வரைந்த கிறுக்கல்களை அவன் பயன்படுத்திய வண்ணங்களை கவனித்துப் பார்த்தார்.

சிலநாள்களுக்குப் பிறகு முதல் வகுப்பாகக் காட்சிப்படுத்துதலை கற்றுக் கொடுத்தார். அதை அவர் சொல்லும் போது அவர் முகத்தில் ஒருவித தேஜஸ் மின்னும். அதை மிகுந்த உற்சாகத்தோடு செய்வார். தன்னை எப்பொழுதும் வதைத்துக் கொள்ளமாட்டார்.

குமரனுக்கு ஆரம்பத்தில் மிகுந்த சிரமமாக இருந்தது. குமரன் சிரமப்படுவதை மொய்தீனும் புரிந்து கொண்டார். பொறுமையாக சொல்லிக் கொடுத்தார். மனதை மனதால் படிக்கும் வித்தை அத்தனை எளிதில் வாய்க்காது. அதுக்கு அல்லாவோ... இல்ல நீ கும்புடுற சாமியோ கருணை வைக்கணும் என்பார்.

சில சமயங்களில் வயல்வெளியில், நன்கு விளைந்த கழனியில் என அமர்த்தி வைப்பார். அவனுக்கு இன்று வரையிலும் அவர் வரைந்த ஓவியத்தில் பிடித்தது அந்த கழனி ஓவியம்தான்.

ஒருநாள் முழுக்க அந்த கழனியிலேயே அமர்ந்திருந்தார். ரம்ஜானின் நோன்பு மாதம் அது. அன்று குமரனையும் அழைத்துக் கொண்டு போயிருந்தார். அவர் அதை நாள் முழுக்க அமர்ந்து மனதுக்குள் உள்வாங்கிக் கொண்டார். அதை அவர் வரைந்து முடித்த போது அத்தனை தத்ரூபமாக இருந்தது.

நல்ல வெயில் காய்ந்த நிலத்தில் பூத்து நிற்கும் மல்லாட்டை (வேர்க்கடலை) செடிகளையும் அதற்கு ஊடாக வரப்பையும் நடந்து போன காலடித் தடத்தையும் கிணற்றையும் கிணற்று மேட்டையும் பூவரச மரத்தையும் என அங்கிருந்த அனைத்தையும் வரைந்திருந்தார். வானம் அப்படியே அன்றிருந்த மேகக்கூட்டத்தையும் வயல்வெளியில் அமர்ந்திருந்த பறவைகளையும் எழுந்து பறக்கும் சிட்டுக் குருவிகளையும், வலைக்கு அருகாமையில் பாதி நுழைந்த நண்டையும் என எல்லாமே வரைந்திருந்தார். மரநிழல் கூட நீட்சியில்லாமல் அளவெடுத்ததைப் போன்று இருந்தது. அந்த நிழலுக்குக் கூட கறுப்பு வண்ணத்தை வரையாமல் தவிர்த்தது அவரின் ஓவிய அனுபவத்தைக் காட்டியது.

குளிரில் நடுங்கினாலும் அது தேவையாக இருந்தது. உண்மையில் குளிரில் நடுங்கியதை விட அந்த இருளில் உறைந்து போனதே பேரார்வம் கொண்டதாக இருந்தது.

இப்பொழுது வரையச் சொன்னாலும் வரைவார். வரைவதில் அவர் ராட்சசன். அதை தவமாகச் செய்வார். அந்த ஓவியம்தான் குமரனுக்குப் பெரும் ஊக்கத்தை தந்தது. அவனுக்கு வண்ணங்கள் பற்றிய வகுப்பையே ஐந்து வருடங்களுக்கு மேல் எடுத்தார்.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்து ஓவியக் கல்லூரியில் சேர்ந்த போது அவன் எதிர்பார்த்துச் சென்ற எதுவும் கிடைக்கவில்லை. அங்கே ஓவியத்தை வெறும் ஓவியமாக பொருளாகத் தான் பார்த்தார்கள். அது ஓர் உயிருள்ள ஜீவன் என்பதையே அவர்கள் மறந்து போயிருந்தார்கள்.

மொய்தீனிடம் அவர் எங்கே ஓவியம் பயின்றார் எனக் கேட்ட போது ஒரு துறவி தனக்கு சொல்லிக் கொடுத்ததாகவும் ஒரு புத்த பிக்கு ஓவியம் பயிலவென்றே அவரிடம் பலகாலம் தங்கியிருந்ததாகச் சொன்னார். அவர் எப்பொழுதும் தரையில்தான் ஓவியம் வரைந்ததாகவும் அதைக் கொண்டே இவர்கள் கற்றுக் கொண்டதாகச் சொன்னார். அவதானித்தலே ஆகச் சிறந்த ஓவியம் எனவும், ஓவியத்தின் வழி நாம் மனித மனங்களுக்குள் பேச முடியும் எனவும் வண்ணங்கள் நம் இயல்பை பிரதிபலிப்பதாயும் அது தரும் உற்சாகம் வாழ்நாளில் வேறெதுவும் தந்து விடப் போவதில்லை எனக் கூறுவார். அவரிடம் ஓவியம் வரைவதற்கென குறைந்த தூரிகைகளே இருந்தன.

Representational Image
Representational Image

குமரனுக்கு அந்த இருள் பேரானந்தத்தை தந்தது. குளிரில் நடுங்கினாலும் அது தேவையாக இருந்தது. உண்மையில் குளிரில் நடுங்கியதை விட அந்த இருளில் உறைந்து போனதே பேரார்வம் கொண்டதாக இருந்தது.

எல்லாவற்றையும் தொலைத்து எதுவும் நம‌க்கில்லை என்கிற மனநிலையில் ஆழ்ந்த இரவுகளில் அவன் அமர்ந்திருந்தான். தன்னை அந்தக் குளிரில் வதைத்துக் கொள்வதென்பது மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

மொய்தீனுக்குப் புத்தகம் வாசிப்பதென்பது உயிரைவிட மேலானது. ஏதாவது வாசிப்பார். ஒரு புத்தகம் அவரை பாதித்ததெனில் அதை அவர் ஓவியமாக்கி விடுவார். அந்த ஓவியங்களை நல்ல விலை கொடுத்து வாங்க ஆட்கள் இருந்தார்கள். அவர் அதற்கான விலையைக் கூட நிர்ணயம் செய்ததில்லை. மசூதியில் கொடுத்து விட்டால் அவர்களே அதை விற்று காசாக்கி விடுவார்கள்.

போனவாரம்தான் மொய்தீன் பாய் தன் தள்ளாத வயதிலும் ஒரு ஓவியத்தை வரைந்து முடித்தார். வரைந்து முடித்தவர் அந்த ஓவியத்தில் ஏதோ குறை இருப்பதைக் கண்டார். அந்த ஓவியத்தில் ஒரு இடத்தில் கறுப்பு வண்ணத்தைப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்கிற சூழல். அதுதான் அந்த ஓவியத்தின் ஜீவனே என்பதை உணர்ந்தார். தன் வாழ்நாளில் முதன் முதலாக தன்னுடைய ஓவியத்தில் அவருக்குப் பிடித்த‌ கறுப்பு வண்ணத்தைப் பயன்படுத்தினார். மனம் அந்த நாளுக்காகத்தான் காத்திருந்ததாகப்பட்டது அவருக்கு. அவராக சிரித்துக்கொண்டு மாலை நேர தொழுகைக்குக் கிளம்பினார். போவதற்கு முன் ஒருமுறை அந்த ஓவியத்தை உற்றுப் பார்த்தார். கறுப்பைத் தோய்த்த தூரிகை ஒரு துளியைத் தரையில் சிந்தியிருந்தது.

Representational Image
Representational Image

மாலைநேர தொழுகை... அந்த முகம் பிரகாசத்தோடு எந்தச் சலனமுமின்றி அந்த ஓவியத்தை அல்லாவோடு சேர்ந்து வரைந்து கொண்டிருந்தது. அல்லா தன்னோடு அந்தக் கறுப்பு வண்ணத்தைத் தொட்டு வரைய முற்படும் போது ஆனந்தத்தில் "அல்லா" என்று கை உயர்த்த மேலிருந்து ஒரு கை அவரைப் பற்றித் தூக்கியது. தொழுகை அறையில் அவர் உயிரற்ற உடலாகக் கிடந்தார். தொழுகை முடிந்தும் அவர் எழுந்திருக்காத போதும் அவரைத் தொட்டுத் தூக்கினால் உடல் சில்லிட்டிருந்தது.

குமரனுக்கு இந்த இருளையும் உறைந்த குளிரையும் தன் ஓவியத்தில் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதற்காகத் தான் தன்னை வதைத்துக் கொண்டான். அவன் உறைந்து கிடந்தான். அதிகாலையில் தொழுகைக்காக அந்த வழியே போனவர்கள் அவனை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினார்கள்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு அந்த இரவையும் உறைந்த குளிரையும் தன் ஓவியத்தில் வரைந்திருந்தான். மொய்தீனுக்குப் பிடித்த கறுப்பு வண்ணத்தை அதிகம் பயன்படுத்தியிருந்தான். அவன் அந்த ஓவியத்தின் வானத்தைப் பார்த்த போது விண்மீன்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. மாலை நேர தொழுகைக்கான துஆக்கள் ஒலிக்கத் தொடங்கியிருந்தன. அவனும் தொழத் தொடங்கியிருந்தான். அவனுள் அல்லாவோடு மொய்தீனும் துஆ ஓதத் தொடங்கியிருந்தார். குமரனின் முகம் வசீகரம் கொண்டிருந்தது.

-ம.செ.

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/