சுமையில் சுகம்!- சிறுகதை #MyVikatan
தன் மகளை சிமென்ட் மூட்டையின் மீது ஒரு துணியைப் போட்டு அதன்மீது அமரவைத்தான். ``அம்முகுட்டி போலாமா " என்று செல்லமாய் கேட்டான்.

``ஏ வேலு ..!!! வண்டில ஏத்துன சிமென்ட் மூட்டையலாம் இந்த விலாசத்தில போய் இறக்கிட்டு வந்துடு" என்று விலாசம் எழுதிய தாளை சுப்பிரமணி வேலுவிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். அந்த விலாசத்தைப் பிரித்துப் பார்த்ததும் அது தன் வீட்டருகே உள்ள விலாசம் என்று தெரிந்ததும் தன்னுடைய மீன்பாடி வண்டியைத் தள்ளிக்கொண்டு கொஞ்சம் உற்சாகத்துடன் சிமென்ட் கம்பெனியிலிருந்து புறப்பட்டான்.

தான் போகும் வழியில்தான் தன்னுடைய மகள் செல்வி படிக்கும் பள்ளி இருப்பதாலும் அதே நேரத்தில் பள்ளி விடும் நேரம் நெருங்கி விட்டதாலும் அவளையும் தன்னுடன் வீட்டுக்கு அழைத்துப் போகலாம் என்று முடிவுசெய்து பள்ளிக்குச் சென்று அங்கே வெளியே காத்துக்கொண்டிருந்தான். வேலு மகள் செல்வி அங்கே இருக்கும் மாநகராட்சிப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். அவளைச் சேர்த்த முதல் மாதம் மட்டும் அவளைப் பள்ளிக்கு கூட்டிச் செல்வதும், திரும்ப வீட்டுக்கு அழைத்தும் வந்தார்கள். அதன்பின் அவள் வீட்டருகே பள்ளிக்குப் போகும் மாணவர்களோடு போய்வர பழகிக்கொண்டாள்.
செல்வி பள்ளி விட்டு வெளியே வந்தாள். அப்போது ஓரமாய் இருந்த வேலு ``அம்மா செல்வி .... அம்மா செல்வி" என்று கூப்பிட்டான். செல்வி திரும்பிப் பார்த்ததும் தன் தந்தை அங்கே நின் கொண்டிருப்பது தெரிந்ததும் ``அப்பா" என மகிழ்ச்சியில் கத்திக்கொண்டே தாவிக் குதித்து ஓடிவந்து வேலுவின் கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டாள். தன் மகளை சிமென்ட் மூட்டையின் மீது ஒரு துணியை போட்டு அதன் மீது அமரவைத்தான். ``அம்முகுட்டி போலாமா " என்று செல்லமாய் கேட்டான். ``போலாம் பா " என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.
பள்ளியில் விளையாடிய விளையாட்டை தன் தந்தையிடம் விவரித்துக்கொண்டே வந்தாள். வேலுவும் `ஓ அப்படியா..!!! அப்புறம் என்ன நடந்தது யாரு ஜெயிச்சீங்க' என்று தன் மகளிடம் சந்தோஷத்தோடு பேசிக்கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான். அப்போது ஒரு மேம்பாலம் குறுக்கிட்டது. அவர்கள் வீட்டுக்குச் சென்றடைய அந்த மேம்பாலத்தை அவர்கள் கடந்தாக வேண்டும். அவன் வண்டியிலிருந்து இறங்கி அந்த வண்டியை மேம்பாலத்தில் தள்ளிக்கொண்டு ஏற்றினான். மேம்பாலம் கொஞ்சம் உயரமாக இருந்ததால் வேலு மிகவும் கஷ்டப்பட்டு வண்டியை இழுத்துக்கொண்டு ஏற்றிக்கொண்டிருந்தான்.

இவ்வளவு நேரம் பேசிக்கொண்டே வந்த தந்தை திடீரென்று பேசாமல் இருந்ததைப் பார்த்து அவரை உற்றுநோக்கினாள் செல்வி. வேலு முகம் முழுவதும் வியர்வையால் நனைந்து கொண்டிருந்தது. மூச்சையும் அதிகமாய் வாங்கிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த செல்விக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏதோ ஒன்று நினைத்தவளாய் திடீரென்று எழுந்து தன்னுடைய புத்தகப்பையை தலை மேல் வைத்துக்கொண்டு ஒற்றைக்காலில் நின்றாள். இதைப் பார்த்த வேலுக்கு ஒன்றுமே புரியவில்லை. வண்டியுடைய பிரேக்கை பிடித்துக்கொண்டு ``என்னமா ஆச்சு?" என்று பதறியபடி கேட்டான். அதற்கு செல்வி ```ஒண்ணும் இல்லப்பா. ஏற்கெனவே வண்டி ரொம்ப பாரமா இருக்கு. நானும் என்னுடைய பையும் பாரமா இருக்கும்ல. அதான் பையைத் தூக்கி என் தலைமேல வச்சிகினா உங்களுக்கு எடை கம்மியா இருக்கும். அதுபோல ஒத்த கால்ல நின்னா பாதி எடை கொரைஞ்சிடும்ல. அப்புறம் நீங்க சுலபமாய் வண்டியைத் தள்ளலாம்ல" என அப்பாவியாய் தன் மழலைக் குரலில் வேலுவிடம் சொன்னாள்.
இதைக்கேட்ட வேலுவுக்கு மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் லேசாக வந்தது. அதை துடைத்துக்கொண்டே ``அப்படியா சொல்ற, அப்போ நீ சொல்றது சரியாதான் இருக்கும். ஆனா நீ ஒத்த காலில் நிற்க வேணாம், நீ உட்கார்ந்துகொண்டே பையை மடிமேல வச்சிக்கோ! அப்பவும் நீதானே எடையை தூக்கினு இருக்க.. அப்படி செஞ்சா வண்டி தானா கஷ்டப்படாம போய்டும் " என்று மகளிடம் சொன்னான். அவளும் அதை ஆமோதித்து வேலு சொல்படியே நடந்தாள்.

தன் மகளுக்கு தான் கஷ்டப்படுவது தெரியக்கூடாது என்று ``அப்புறம் உங்க விளையாட்டுல என்னமா நடந்தது ? யாரு ஜெயித்தது என்று அப்பாகிட்ட சொல்லவே இல்லையே'' என்று கேட்டான். ``ஓ சொல்லலையா சரி சரி சொல்றேன்" என்று தான் விளையாடிய விளையாட்டைத் தொடர்ந்து விவரிக்க ஆரம்பித்துவிட்டாள் செல்வி. மறுபடியும் அப்பாவும் மகளும் ஜாலியாய்ப் பேசிக்கொண்டே சென்றனர். வேதனையை வேலு தன் முகத்தில் மட்டும் காட்டாமல் அந்த மேம்பாலத்தை மெதுவாய் ஏறிக் கடந்தான்!
-விஜயன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/