Published:Updated:

சுட்ட மிட்டாய்! - சிறுகதை #MyVikatan

அவன் படிச்சிட்டிருந்த பள்ளிக்கூடத்துக்கு வெளியேயும் அப்படி ஒரு பாட்டி கடை இருந்துச்சு.

Representational Image
Representational Image ( Credits : Unsplash )

2003 ஆம் வருஷம்...

அப்போ, அவன் மூணாப்பு படிச்சிட்டிருந்தான்.

எல்லா பள்ளிக்கூடத்துலயும் எது இருக்கோ இல்லையோ தினம் காலைலயும் சாய்ந்திரமும் விடுற அந்த 10 நிமிஷ பிரேக்’ல நொறுக்குத் தீனி வாங்கித் திங்க வசதியா ஒரு பொட்டிக் கடையோ, பாட்டி கடையோ பள்ளிக்கூடம் பக்கத்துலயே இருக்கும்.

அவன் படிச்சிடிருந்த பள்ளிக்கூடத்துக்கு வெளியேயும் அப்படி ஒரு பாட்டி கடை இருந்துச்சு.

Representational Image
Representational Image

நாலஞ்சு கோணிப்பை மேல ஒரு பாய். அந்தப் பாய் மேல 30 – 40 வகை பண்டங்கள். முடிஞ்ச அளவு வரிசையா அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

இதான், அந்த பாட்டி கடையோட மொத்த அமைப்பே!

நம்ம பயலுக்கு அந்தப் பாட்டி கடை மேல அப்படி ஒரு அலாதி பிரியம்!

சூட மிட்டாய், இலந்தைப் பழம், இலந்தை வடை, ஜவ்வு மிட்டாய், கல்கோனா, காசு மிட்டாய், சக்கர மிட்டாய் ( என்கிற ‘சுத்துற மிட்டாய்’ ), குச்சி மிட்டாய், கலர் மிட்டாய், சீரக மிட்டாய், பொம்மை ரொட்டி, குருவி ரொட்டி, நெல்லிக்காய், மாங்காய், வெள்ளரிக்காய்னு விரிஞ்சு கெடக்குற ஒரு குட்டி மிட்டாய்க் கடல் அது!

ஆனா, நம்மாளு அந்தக் கடைல எப்போவும் வேடிக்கை பார்க்க போறதோட சரி. வாங்குறதுக்கு’லாம் ‘வாய்ப்பில்ல ராஜா‘. ஏன்னா, இவன் யூனிபார்ம்ல இருக்குற பாக்கெட் எதுக்கு இருக்குனே தெரியாத மாதிரி எப்போவும் காலியாதான் இருக்கும்! (கொழந்தைக்கிட்ட காசு கொடுத்து கெடுக்கக் கூடாதுல! )

இவன்கிட்ட வாங்கி சாப்புட காசும் இல்ல. காசு வக்சிருக்க நண்பனும் இல்ல.

அதனால, தினம் பிரேக் பெல் அடிக்கிறப்போலாம் இவனுக்கு என்னவோ போல இருக்கும்.

25 பைசா கிடைச்சா 4 குட்டி சூடமிட்டாயாச்சும் வாங்கிறலாம்‘னு வீட்டுல, எல்லா இண்டு இடுக்குலயும் அலசித் தேடுவான். தேடித் தேடி கண்டுபிடிச்ச அந்த ரெண்டு 10 பைசா, ஒரு அஞ்சு பைசா காசு செல்லாது ‘னு அவனுக்கும் தெரியும்!

ஆனாலும், அவங்க தாத்தாகிட்ட இத பேங்க்’ல கொடுத்தா செல்லுற காசா மாத்தித் தருவாங்க தானேனு‘லாம் கேட்டுப் பார்ப்பான்.

அதுல , அவனோட கடைசித் துளி நம்பிக்கையும் காலி ஆனது தான் மிச்சம்.

ஆனா, போனது நம்பிக்கை மட்டும்தான். ஆசை இன்னும் அப்படியேதான் இருந்துச்சு.

அந்தப் பாட்டி கடைய சுத்தி செம்ம கூட்டமா இருக்கும். அவ்ளோ கூட்டத்துல எல்லாரும் என்ன பண்றங்க, எவ்ளோ காசு கொடுக்குறாங்க, மீதி எவ்ளோ கொடுக்கணும்’னு அந்த 10 நிமிஷ பிரேக்’ல பார்த்து கவனிச்சு எப்புடித்தான் இந்தப் பாட்டி வியாபாரம் பண்ணுது’னு இவனுக்கு எப்போவுமே ஒரே ஆச்சர்யமா இருக்கும்.

Representational Image
Representational Image

“நெசமாவே பாட்டி எல்லாத்தையும் கவனிக்குதா... அதெப்படி முடியும்? மூணாப்பு படிக்கிற எனக்கே திடீர்னு எழுப்பிவிட்டு 9 x 7 எவ்ளோனு கேட்டா சொல்லத் தெரியல. பாட்டியோ படிக்காத ஆளு. எப்புடி எல்லாத்தையும் கவனிக்க முடியும்... வாய்ப்பே இல்ல!”

So , பாட்டி எல்லாத்தையும் கவனிக்க முடியாது.!” .

அப்போ…

அப்படி யாரும் கவனிக்காதப்போ ஏதாச்சும் ஒரு ஐயிட்டத்த சுட்டுட்டா...

“அடேய், இதுக்குப் பேரு திருட்டு.”

“திருடுறது தப்பு”ன்னுலாம் அவனோட ஆசையும் வயசும் யோசிச்சுப் பார்க்க அவனை விடல.

வழக்கம்போல அன்னைக்கு மதியம் 3 :15-க்கு பிரேக் பெல் அடிச்சது. பாட்டி கடைல கூட்டம் கூட ஆரம்பிச்சுது.

இவனுக்கு உள்ள லேசா பயம் இருந்தாலும் ஆசையால வந்த ஆர்வக்கோளாறு அவனை பின்வாங்க விடல. மெதுவா அந்த கூட்டத்துக்கிட்ட போனான்.

கூட்டத்துல ஒரு ஓரமா உக்காந்துக்கிட்டான்.

ஆள் வேற கொஞ்சம் ‘சின்ன பொடுசா‘ இருக்குறதால, யாரும் இவன அவ்வளவா கவனிக்க வாய்ப்பில்ல.

அவனோட குட்டி கைய அந்தக் கூட்டத்துல நின்னுட்டிருக்குற ஒருத்தன் கால் இடுக்கு வழிய விட்டு, ஒரு ஜவ்வு மிட்டாய் எடுக்கறதுக்கு கிட்ட போய்ட்டான்.

யாரும் கவனிக்கல…

Representational Image
Representational Image

கைக்கு எட்டுற தூரத்துல மிட்டாய்.

இதோ எடுத்துறலாம்...

மிட்டாய் மேல கை வைக்கிறப்போ...

..

“இந்தார்ல… எந்தக் கழுசடை பய டா அவன். குறுக்க கையவிட்டு திருடறது”னு

பாட்டி ஒரு அதட்டல் போட்டதுதான் லேட்டு.

இவன் எடுத்தான் பாருங்க ஒரு ஓட்டம்.

உசுர கொடுத்து ஓடியாந்து, வகுப்புக்குள்ள போய் ஒளிஞ்சுட்டான். பாவம் கொழந்தப்புள்ள. பயத்துல அவனுக்கு வேர்த்து ஊத்த ஆரம்பிச்சிருச்சு.

“யாராவது பார்த்திருந்தா எவ்வளோ அசிங்கமா போயிருக்கும்!”

ஆனா, உண்மையில யாரு திருடப் பார்த்தது’னு யாருமே கவனிக்கல. ‘திருட எவனோ கைய உள்ள விடுறான்!‘னுதான் பாட்டியும் சத்தம் போட்டிருக்கு.

ஆனாலும் இவனுக்கு மனசு தாங்கல.

Representational Image
Representational Image

“யாரும் பாக்காம திருடியிருந்தாலும் நான் திருடியிருக்கேன்னு சாமிக்குத் தெரியும்’ல... திருடுனா, சாமி கண்ணக் குத்திடும்’ல!”

“சாமி சத்தியமா இனிமே எதையும் திருட மாட்டேன்..! திருடனும்’னு யோசிக்கக்கூட மாட்டேன். மன்னிச்சிரு... மன்னிச்சிரு ப்ளீஸ்... ப்ளீஸ்... ப்ளீஸ்”னு அவனுக்கு கண்ணுல அழுகை முட்டிக்கிட்டு வரப்போதான், ஆர்வக்கோளாறு’லாம் தெளிஞ்சு, அவங்க அம்மா சொன்னது ஞபாகம் வந்திச்சு.

“கிருஷ்ணனா இருந்தாலும் திருடுனா தப்புடா!”

நல்ல வேளை, இந்த ‘கிருஷ்ணன்’ வீட்டுல உரல் எதுவுமில்ல.

-அருண் கிருஷ்ணா

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/