Published:Updated:

இருள்!- சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

2015 டிசம்பர். கோரமான மழையாலும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தாலும், சென்னையும் அதன் உயிர்களும் தத்தளித்துக்கொண்டிருந்த நாள்கள்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில், சரி டி.வி-யில் ஏதாவது படம் பார்ப்போம் என்று அமர்ந்தேன். நான் ஏமாற்றம் அடையவில்லை; அது ஒரு திகில் படம். அதுவும் ஒரு பிரபலமான, திறமையான இயக்குநரின் முதல் முயற்சி. படம் மிகவும் சுவாரஸ்யமாகத்தான் சென்றுகொண்டிருந்தது. தனியாகப் பார்க்கும் அரிய வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. படத்தின் சில காட்சிகள், என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை மனதில் கொண்டுவந்தது. மறக்கக் கூடியதா அது...

Chennai flood
Chennai flood

2015 டிசம்பர். கோரமான மழையாலும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தாலும், சென்னையும் அதன் உயிர்களும் (ஆம்...எல்லா உயிர்களும்தான்) தத்தளித்துக்கொண்டிருந்த நாள்கள். அது எனக்கு கல்லூரியின் முதலாம் வருடம். கல்லூரியே காலியாய் இருந்தது. எல்லா மாணவர்களையும் அவரவர் ஊர்களுக்குச் செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததன் விளைவு. என்னோடு சேர்த்து ஒரு நான்கு ஐந்து மாணவர்கள், அடுத்த நாள் பயணத்திற்கு முடிவெடுத்தோம். எங்களை விடுதியினுள் இருக்க அனுமதிக்கவில்லை. மாறாக, நாங்கள் உணவகத்தின் மேசைகளைப் படுக்கைகளாக்கிக்கொண்டோம்.

கடிகார முட்கள் மட்டுமே அதை மாலை வேலை என்றது. நாள் முழுவதும் இரவு இருள் குடிகொண்டிருந்தது. (மின்சார சேவை பல நாள்களாகத் துண்டிக்கப்பட்டிருந்தது என்பதை நினைவில் கொள்க). மழை தணிந்து லேசாகத் தூறிக்கொண்டிருந்தது. நானும் என் சக நண்பன் ஒருவனும் விடுதியினுள் செல்ல முடிவெடுத்தோம். இருளைப் பொருட்படுத்தவில்லை. எதற்காகச் சென்றோம் என்பது இப்போது எனக்கு எட்டவில்லை.

உள்ளே நுழைந்தோம். இருள் இன்னும் பெருகியது போன்ற எண்ணம். திடீரென்று எங்கள் முகத்தை நோக்கி வெளிச்சம், கண்கள் கூசியபடி பார்த்ததில், அது ஆஸ்டல் வாட்ச்மேன் அடித்த டார்ச் ஒளி என்றறிந்தோம். பீதி, அங்கிருந்துதான் பின்தொடர்ந்தது.

Representational Image
Representational Image

முதல் தளம் மிகவும் விரைவாகவே வந்ததுபோல் இருந்தது. அவன் அறை அத்தளத்தில் உள்ளதால், அவன் கழன்றுகொண்டான். இப்போது நான் ஒற்றைப் பிரயாணம்; இலக்கு இன்னும் இரு தளத்திற்கு மேல். என் அறை அங்குதான் உள்ளது.

இருள் இன்னும் பெருகியதுபோல் ஒரு பிரமை. இருளில் கண்களின் ரெட்டினா செல்களால் கொஞ்சம் பார்வை கிடைக்கும் என்று படித்திருக்கிறேன். ஆனால், அந்நேரம் என் ரெட்டினாக்களும் என்னை ஏமாற்றியதை உணர முடிந்தது. அட்ரினலின் உடல் முழுவதும் சுற்றிவந்தான். என் பயத்தை அதிகரித்தான்...

ஒவ்வொரு படியையும் கடக்க பல யுகங்கள் ஆனதுபோல இருந்தது. நம் மனம் இருக்கிறதே... அது ஒன்றே போதும் நம்மை அழித்துவிட. என்னோடு அது உரையாட ஆரம்பித்தது.

"இந்த இருள், பேய்களின் ஆனந்த வருகைக்கு உகந்தது. அனைவரும்தான் இறக்கின்றனர். இறந்த அனைவருமா பேயாகிறார்கள்? கண்டிப்பாக இல்லை. யாருடைய ஆசை நிறைவேறாமல் இருக்கிறதோ, அவர்களுடைய ஆத்மா பேயாக அலையுமாம். உன் அருகிலேகூட ஏதாவது பேய் இருக்கலாம். கொஞ்சம் ஜாக்கிரதை..." என்றது.

Representational Image
Representational Image

திடீரெனத் திரும்பிப்பார்க்க எண்ணம். ஆனால் மறுத்தேன். ஒருவேளை, அது நான் கடந்துவந்த பாதையில் இருந்திருக்கலாம். அதன் எண்ணம் என்னை அழிப்பதாக இருந்தால், நான் வரும்போதே தன் தீவிரத்தைக் காண்பித்திருக்கும். நான் அனாவசியமாகத் திரும்பிப் பார்த்து, அதற்குக் கோபம் உண்டானால், ஐயோ... வேணாம் வேணாம்.

"நீ பார்க்காததால், அது உன்னை விட்டுவிட்டது என்று நினையாதே நண்பா. பல நேரங்களில், அவை திடீரெனப் பின்னால் இருந்து தலையில் படார் என்று அடிக்குமாம். அப்போது தான் அந்த அதிர்ச்சியில் உடல் பாதி பாடி ஆகிவிடும் என்று அதற்கு ஒரு எண்ணம்."

நொடிப்பொழுதில் மின்னலெனப் பாய்ந்தேன், மூன்றாம் தளத்திற்கு.

"ஓடாதே நண்பா..அது துரத்தி வந்து தாக்கினால்..." என்று இழுத்தது.

அந்நேரத்தில் நான் அடைந்த பயத்தை விளக்க வார்த்தைகள் இல்லை. வாழ்ந்துபார்த்தால் மட்டுமே உணர முடியும். அப்பப்பா!

ஒருவழியாக அறையை வந்து அடைந்தேன். உள்ளே இருட்டில் தடவிக்கொண்டே, எங்கிருந்தோ என் குடையைக் கண்டெடுத்தேன். அதை என் அறையின் வெளியே, சுவரில் சாய்த்தபடி வைத்துவிட்டு எதையோ மீண்டும் தேடச் சென்றேன்.

Representational Image
Representational Image

உண்மைதான். ஆனால், நீங்கள் நம்பமாட்டீர்கள். ஏனோ ஒரு எண்ணம். திடீரென்று வெளியே எட்டி என் குடையைப் பார்த்தேன். நான் ஏன் அவ்வாறு பார்த்தேன் என்று எனக்கு இன்னமும் தெரியவில்லை. ஒரு வேளை என்னைப் பின்தொடர்ந்த ஆத்மா என் குடையை எடுத்துக்கொண்டு, என்னைப் பயமுறுத்த நினைக்கும் என்று தோன்றியதோ... இருக்கலாம்.

அதைப் பேச விடவில்லையே. மீண்டும் மின்னலெனப் பாய்ந்தேன்.

இரண்டாம் தளம்.

முதல் தளம். என் நண்பனைக்கூட தேடவில்லை.

கீழ்த்தளம் வந்ததும், வந்த வேகத்தில் யார்மேலோ முட்டினேன்.மூர்ச்சையாகி விழுந்தேன்.

நான் ஒருவேளை அந்த ஆவியை மோதி இருப்பேனோ! இருக்காது; அதில் உறுதிகொண்டிருந்தேன். காரணம், என் உயிர் பிரியவில்லை என்பதை அந்தக் குரல் கேட்டதில் இருந்து தெரிந்துகொண்டேன்.

நான் மோதியது வாட்ச்மேன் மேல்தான். நான் மோதிய அதிர்ச்சியில் அவர் அலறிய சத்தம் கேட்டு முதல் தளத்தில் இருந்த என் நண்பன் அலறியடித்துக்கொண்டு ஓடி வந்தான். கீழே நான் விழுந்துகிடப்பதை அறியாத அவன், என் கால் தடுத்து அதே அலறலோடு விழுந்தான். அந்தக் குரல்தான் எனக்கு நினைவூட்டியது, உயிர் இருப்பதை.

விழித்தேன்... புறப்பட்டேன்.பயத்தை வெளிக்காட்டவில்லை... மனித இயல்பு.

உனக்கு ஆயுசு கெட்டி டா... எனக்கு நானே கூறிக்கொண்டேன்.

'அப்படியா',என்று சிரித்தது அதே குரல்.

-இன்பரசு தமிழ்மகன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு