Published:Updated:

புளிசாதம்! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

பக்கத்து வீட்டு சைக்கிள் கடன் வாங்கி வைத்திருந்தார் அப்பா. ஏனோ, வேகமாக மிதிக்க செயின் இரண்டுமுறை கழன்று விழுந்தது.

அந்த அதிகாலையில் மிதிவண்டியில் மேடேறும்போது மணி நான்காகி விட்டிருக்குமோ என்கிற பதைபதைப்பு இருவருக்குமே இருந்தது. சீக்கிரமா மிதி நைனா என்றபோது அவர் இன்னும் அந்த மேட்டில் மிதிக்க முயற்சி செய்தார். அவர் மிதிக்கும்போது சைக்கிள் ஏதோ பள்ளத்தில் இறங்கித் தடுமாற இருவரும் விழப்பார்த்தார்கள். அதற்கேற்றாற்போல் தொலைதூரத்தில் பேருந்தின் ஹாரன் ஓசைக் கேட்டது. பதற்றம் இன்னும் மேலும் கூடியது. எப்படியாவது பேருந்தைப் பிடித்து விட வேண்டும் என்கிற பதைபதைப்பு மேலிட சைக்கிளை இறங்கித் தள்ளினான் அவன். வரும்போது அவன்தான் ஓட்டி வந்தான்.

Representational Image
Representational Image

பக்கத்து வீட்டு சைக்கிள் கடன் வாங்கி வைத்திருந்தார் அப்பா. ஏனோ, வேகமாக மிதிக்க செயின் இரண்டுமுறை கழன்று விழுந்தது. அப்பா தான் உனக்கு சரிவராது என வண்டியை வாங்கி அழுத்த ஆரம்பித்தார். அவன் ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் வந்தால்தான் சென்னைக்கு முதல் பேருந்தைப் பிடிக்க முடியும். இன்று திங்கள் கிழமை வேறு. கூட்டம் அதிகமாக இருக்கும். அவன் வைத்திருந்த பையின் மேல் கதகதப்பாக இருந்தது. அதிகாலை குளிருக்கு அந்த கதகதப்பு தேவலாம்போல் இருந்தது. போனவுடனே காலம்பற எலுமிச்சை சாதத்தை சாப்ட்டுடு...அம்மா, கிளம்பும்போது இரண்டு முறை சொன்னாள். கிளம்பும் அவசரத்தில் சரி என்று தலையாட்டிக்கொண்டான். அவன் மூன்று மணிக்கு எழுந்தபோது அம்மா மண் அடுப்பில் விறகை வைத்து ஊதாங்கோலால் ஊதி நெருப்பை பற்ற வைக்க முயன்று கொண்டிருந்தாள். மூன்று நான்கு முறை உஸ்... உஸ்... உஸ்... என ஊதி மீண்டும் உள்ளிழுத்தபோது பலமாக இருமினாள். இவன் பல் விளக்கிக்கொண்டே, ஏம்மா... ஸ்டவ்வுல செய்யலாமில்ல.. என மெல்லிய கோபத்தோடு கேட்டான்.. அம்மா, அந்த இருமலோடு ஏதோ சொல்ல முனைந்தாள். இல்லப்பா... பண்டகசாலையில் (ரேஷன் கடை) மண்ணெண்ணெய் இந்த மாசம் போடலை. அதுவுமில்லாம இந்த வெறவு வேற வீணாப் போய்டும் போல. எருமுட்டை வேறு அப்படியே கெடக்குது. அதான் ராசா... எனச் சொல்லிக்கொண்டே மீண்டும் ஊதாங்கோலால் ஊதத் தொடங்கினாள்.

நான் நேரமாவதை உணர்ந்து வேகமாக குளிக்கப் போனேன். நான் குளித்துவிட்டு வரும்போது அம்மா பெரிய தட்டில் சாதத்தை கொட்டி விசிறியால் விசிறி ஆற வைத்துக்கொண்டிருந்தாள். அப்பா வாழை இலையை கழுவி பேப்பரோடு சாதத்தை கட்டுவதற்கு காத்துக்கொண்டிருந்தார். சீக்கிரம் கிளறுடி... பஸ்ஸு போய்டப் போவுது.. இன்னைக்கு திங்கட்கிழமை வேற.. எடம் கெடக்கிதோ என்னவோ... அவ்ளோ தூரம் நின்னுகினே போவணும். அப்பா சொல்லிக்கொண்டிருக்கும்போதே அம்மா சாதத்தை கிண்ணத்தில் கொட்டிக்கொண்டிருந்தார்கள். கிளறும் சத்தம் கேட்டது. நான் சட்டை கையை மடித்துக்கொண்டே ரூமிலிருந்து வெளியே வந்தேன். வீடு அந்த மஞ்சள் விளக்கில் மங்கலாக இருந்தது. வாழ எலய நல்லா தொடைங்க... தண்ணி இருந்தா சாப்பாடு கெட்டுடும்ல... அம்மா, அப்பாவை அதட்டலாக சொல்ல அப்பா மீண்டும் ஒருமுறை இலையை நன்றாக உதறினார்.

Representational Image
Representational Image

அம்மா இரண்டாவது சாதத்தை கிளறத்துவங்கியிருந்தார்கள். நான் மணி பார்த்தேன். மூன்றரை ஆக இன்னும் ஐந்து நிமிடம் தான் இருந்தது. சீக்கிரம் நைனா... டைம் ஆகுதுல்ல.... பஸ்ஸ விட்டுடப் போறோம்.. அவ்ளோ தூரம் போவனுமில்ல... கத்தினேன்.... ஆச்சிடா.. ஆச்சிடா... என சொல்லும்போது அவர் இலையை மடிப்பதைப் பார்த்தேன். நைனா... சாப்பாடு எனக்கு ஒருத்தனுக்குத்தான். ஊருக்கே இல்ல. அம்மா, அப்பாவிடம் ஒரு கரண்டி சாதம் கொடுத்து உப்பை சரி பார்க்க சொன்னார்கள். அவர் தலையாட்ட அம்மா மீண்டும் கிளற ஆரம்பித்தார்கள்.

புளிசாதத்தின் வாசம் மூக்கைத் துளைத்தது. நேற்றிரவே அம்மா புளிக்குழம்பை வைத்துவிட்டாள்... புளியை நன்றாக ஒரு கிண்ணத்தில் ஊற வைத்து காஞ்ச மிளகாயை பாதியாக வெட்டி கடலைப் பருப்பில் கற்களைப் பொறுக்கி சுத்தம் செய்து மல்லாட்டையை (வேர்க்கடலை) வறுத்து தோள் நீக்கி சுத்தம் செய்து வெள்ளை வெளேரென வைத்து கறிவேப்பிலை என அனைத்தும் தயாராக இருந்தன. நான் நண்பர்களைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது மண் அடுப்பில் வாய் அகன்ற சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி எரியும் புகைகளுக்கு இடையே மணமணக்க புளிக்குழம்பை தயாரித்தாள். கொஞ்சம் உள்ளங்கையில் விட்டு சூடு ஆற்றி ருசியின் பதம் பார்த்தாள். அவள் அந்த ருசிக்கு உச் கொட்டியதே அத்தனை அழகாக இருந்தது... காலையில் எழுந்து சாதம் மட்டும் வைத்துக் கொண்டால் போதுமானது. காலையில் இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து சாதம் வைத்து அப்படியே இன்னொரு அடுப்பில் எலுமிச்சை சாதத்துக்கான குழம்பையும் சற்று நேரத்தில் வைத்துக் கிளறியும் விட்டாள்.

Representational Image
Representational Image

அப்பா இரண்டு ஆள் சாப்பிடும் அளவுக்கு பொட்டலமாக கட்டி விட்டார். அது, எனக்கு எரிச்சலாக இருந்தது. கேட்டால், நல்லா சாப்டுறா என்பார். எப்படியோ நாங்கள் அங்கு போகவும் பேருந்து வரவும் சரியாக இருந்தது. கூட்டம் கொஞ்சம் அதிகமாகத் தான் இருந்தது. நான் சென்னைக்கு டிக்கெட் எடுத்தேன். அருகில் சீட்டில் அமர்ந்திருந்தவர் என்னைப் பார்த்து புன்னகைத்து நான் செஞ்சியில் இறங்கிவிடுவேன்... நீங்க இங்க உக்காந்துக்கோங்க என்றார். எனக்கு தூங்கிக்கொண்டு போக சீட் கிடைத்ததையே அதிர்ஷ்டமாக கருதினேன். நான் வேலை செய்யும் சைட்டிற்கு ஒன்பது மணிக்கெல்லாம் போய்விட்டேன். இன்று போல் எல்லாம் அப்பொழுது அலைபேசி வராத காலம். ஆட்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்திருந்தார்கள். நான் ஓரமாக அமர்ந்து தலைமைச் செயலக வராண்டாவில் அம்மா கட்டிக் கொடுத்த எலுமிச்சை சாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இன்னொரு இன்ஜினீயர் ராம்குமார் வந்தான். என்ன சார், வீட்டு சாப்பாடா... தெரிஞ்சிருந்தா சாப்பிடாம வந்திருப்பேன். அதுக்கென்ன ராம் மதியம் சாப்ட்டுக்கலாம் என்றேன். மதியம் நானும் ராமும் சாப்பிட அமரும்போது மணி இரண்டாகி விட்டிருந்தது. நாங்கள் அப்பொழுது தலைமைச் செயலகத்தின் சட்டசபையின் மேற்கூரையைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தோம். நாங்கள் எல்லாம் அங்கு வருவோம் என்பதை கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை. இருப்பதில் பெரிய பொட்டலத்தை எடுக்கும்போது ராம் கிண்டலாக கேட்டான். ஒரு மாசத்துக்கு சாப்பாட்ட கட்டிக் கொடுத்துட்டாங்களா சார் என்றான். நான் புன்னகைத்துக்கொண்டே இருகூறாகப் பிரித்து அவனுக்கு வைத்தேன். அவன் வாசம்பிடித்து புளிவாசனை நல்லாருக்குல்ல என்றான். நாங்கள் இருவரும் எதுவும் பேசாமல் புளிசாதத்தை சாப்பிடத் துவங்கினோம்.

சார், செம டேஸ்ட். அம்மா.. அம்மாதான் இல்லையா. இனிமே எங்க புளிசாதம் சாப்ட்டாலும் இந்த டேஸ்ட் கிடைக்குமான்னு தெரியல. இன்னும் கொஞ்சம் அவன் பக்கம் தள்ளினேன். அவன் வேண்டாம் என்று மறுக்கவில்லை. காலையில் சாப்பிட்ட எலுமிச்சை சாதமே எனக்கு செரிக்காமல் இருந்தது. மாங்கா ஊறுகாய் ரொம்ப நல்லாருக்கு சார் என்றான். வேற என்னல்லாம் ஸ்பெஷலா செய்வாங்க சார் அம்மா என்றான். நான் சிரித்துக் கொண்டே, அம்மா வைக்கிற வேப்பம்பூ குழம்புக்கு அந்த தேவாமிர்தம் கூட தோத்துப் போய்டும் ராம். அவ்ளோ டேஸ்டா இருக்கும். கூடவே மிளகு ரசம் செமையா இருக்கும். இங்க வந்து தான் நாம சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கோம்... அவன் உண்மை என்பதுபோல் தலையாட்டினான். கைகழுவும்போது நல்லெண்ணெயின் பிசுபிசுப்பு அம்மாவின் அன்பைப் போல் ஒட்டிக்கொண்டிருந்தது.

Representational Image
Representational Image

வேலை முடிந்து அறைக்கு திரும்பியபோது அறைக்கு பாலா வந்திருந்தான். அன்று இரவு இன்னொரு புளிசாத பொட்டலத்தை காலி செய்தோம். அவன் அன்று இரவு அறையில் தங்கி அதிகாலையில் கிளம்பிப் போனான். நான் வழக்கம்போல் இன்னொரு பொட்டலம் புளிசாதத்தை சாப்பிட்டுவிட்டு மதியத்துக்கு ஒரு பொட்டலத்தை எடுத்துக்கொண்டு வேலைக்கு கிளம்பினேன். வேலைப் பளு அழுத்தி எடுத்தது. மதியம் சாப்பிடுவதற்கான மனநிலையே இல்லை. இரவு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்றிருந்தேன். இரவு நண்பர்களோடு ஓட்டலில் சாப்பிடும் நிலையாகி விட்டதில் அம்மாவின் புளிசாதத்தை மறந்தே போனேன். மறுநாள் விடிந்தும் விடியாமலும் எழுந்து வேலைக்கு ஓடினேன். காலையில் சாப்பிட நேரம் கிடைக்கவில்லை. பதினொரு மணிவாக்கில் ஒரு காபி மட்டும் குடித்துக்கொண்டேன். இந்த வேலைமுடிய இன்னும் கொஞ்சநாள் தான் உள்ளது. அப்பொழுதுதான் அம்மா கட்டிக் கொடுத்த சாப்பாடு ஞாபகம் வந்தது. ஐய்யய்யோ, சாப்பாடு கெட்டுப் போயிருக்குமே. ச்சே, இப்படி வீணடிச்சுட்டமே என மனதுக்குள் வருத்தப்பட்டுக்கொண்டேன். சரி, மதியம் சாப்பிடப் போகும்போதுதான் அதை குப்பையில் வீசி எறிய வேண்டும் என எண்ணிக்கொண்டேன். மனது பிசைந்தது.

மதியம் சாப்பிடக் கிளம்பும்போது மீண்டும் அம்மாவின் நினைவு வர ஞாபகமாக அந்த வராந்தாவில் இருந்த குப்பைத் தொட்டியில் புளிசாத பொட்டலத்தை மனம் வலிக்க வலிக்க போட்டேன். நடந்து போய்க்கொண்டே இருந்தேன். எப்படி இருக்குதுன்னு பாத்துப் போட்டிருக்கலாமோ.. இரண்டு நாளைக்கு மேல தாங்காது. நல்லெண்ணெய் நிறைய ஊத்தியிருக்கேன். அப்படி ஒண்ணும் கெட்டுடாது. ஏதேதோ நினைவுகள்.. பசியை மொத்தமாக அடக்கி விட்டிருந்ததைப்போல் இருந்தது. அம்மா, ஊதாங்கோலால் ஊத அந்தப் புகையின் வாசம் நெடியாக மூக்கில் ஏறியது. பித்துப் பிடித்தவன்போல திரும்பி அந்தக் குப்பைத் தொட்டியை நோக்கி நடந்தேன். அப்பொழுதுதான் ஒரு சுத்தம் செய்யும் அக்கா அந்தக் குப்பைத் தொட்டிக்கு அருகில் இன்னும் கொஞ்சம் குப்பைகளைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அவர்கள் விலகிப் போவதற்காக காத்திருந்தேன். அவர்கள் போன பிறகு குப்பைத் தொட்டியைப் பார்த்தேன். நிறைய குப்பைகளை கொட்டியிருந்தார்கள்.

Representational Image
Representational Image

ஒவ்வொரு குப்பையாக அகற்றினேன்.ஒருவேளை காணாமல் போயிருக்குமோ என பதற்றம் வேறு, யாரேனும் கவனிக்கிறார்களோ என்கிற கவலை வேறு என்னை ஆக்கிரமித்துக்கொண்டே இருந்தது. நல்ல வேளையாக அந்த பொட்டலம் கிடைத்துவிட்டது. நான் அந்தப் பொட்டலத்தை எடுத்துக்கொண்டு திரும்பவும், அந்த அக்கா திடீரென வெளிப்பட்டு என்னை விநோதமாக பார்த்தார்கள்.

எனக்கு கொஞ்சம் அவமானமாக இருந்தது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அம்மா செஞ்சதுக்கா... தூக்கி எறிய மனசில்ல.. அதான்... அவர்கள் என்னை வெறித்துப் பார்த்த வண்ணம் கடந்துபோனார்கள். எனக்குத்தான் நெஞ்சக் குழி அடித்துக்கொண்டது. ஓர் ஓரமாக அமர்ந்து பொட்டலத்தைப் பிரித்தேன். அம்மாவின் முகம்போல சாதம் பளிச்சென்றிருந்தது. வாசம் பார்த்தேன். அம்மாவின் வாசம் அடித்தது. அள்ளி வாய்நிறைய சாப்பிட்டேன். கண்கள் கலங்கிய வண்ணம் தொண்டை அடைத்தது. அவ்வப்போது புகை வாசமும். பெரும்பசி அடங்கிய உணர்வு. நான் எதையும் அவமானமாகக் கருதவில்லை. அம்மா வயிறோடு நெஞ்சிலும் நிறைந்திருந்தாள். வாழை இலை முழுக்க நல்லெண்ணெய் பரவியிருந்தது. நான் மேலாக சாப்பிட்டு முடித்த இலையை எறிந்தேன். அந்தப் பொட்டலம் மடித்த செய்தித்தாள் உற்சாகமாக காற்றில் படபடத்தது. அது ஏனோ மிகுந்த மகிழ்ச்சி கொண்டு கைத்தட்டுவது போலிருந்தது.. படபடக்கும் செய்தித் தாளில் காற்றோடு கவிதை வாசித்துக் கொண்டிருந்தது... எந்த தவத்தின் வலிமையான வரத்தினாலும் திரும்பப் பெற முடியவில்லை அந்தத் துறவியால்...., அம்மாவின் ஒரு கவளச் சோறையும்... பேரன்பையும்....!

-மகேஷ்குமார் செல்வராஜ்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு