Published:Updated:

விலை மதிப்பில்லாதது! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

விபத்து நடந்த அடுத்த பத்து நிமிடங்களில் எதுவும் நடவாதது போல் தன்னை மீட்டுக் கொண்டு பழைய நிலைக்குத் திரும்பிவிடும் மாயாவி.

வாகனங்களின் சத்தத்தையும் மீறி பேரிரைச்சலுடன் அந்த வாகனம் சாலையில் நெருப்புப்பொறி பறக்க வழுக்கிக்கொண்டு சென்றது.

Representational Image
Representational Image

என்னவென்று பார்க்க முயன்ற போது ஒரு பெரியவர் என்னைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்க ஓடினார். அவரின் அவசரம் எனது ஆர்வத்தை அடக்கிவிட்டது. நான் பேருந்து நிறுத்தத்தில் எனது பேருந்திற்கான காத்திருப்பைத் தொடர்ந்தேன். நகரின் தண்டுவடமாகச் செயல்படும் இந்தச் சாலைதான் ஆண்டின் மிக அதிகமான விபத்துகளைச் சந்திக்கிறது. விபத்து நடந்த அடுத்த பத்து நிமிடங்களில் எதுவும் நடவாதது போல் தன்னை மீட்டுக் கொண்டு பழைய நிலைக்குத் திரும்பிவிடும் மாயாவி.

குதிரை மேல் அமர்ந்திருக்கும் ஆங்கிலேயரின் சிலையில் தொடங்கும் இந்தச் சாலை நேராக நகரமெங்கும் ஓடி இரு ஆறுகளை கடந்து விமான நிலையம் தாண்டி ஊர் கோடியில் வேறு பெயர் மாற்றி ஓட்டத்தைத் தொடர்கிறது. நான் இந்த நகரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள் நெருங்குகிறது, வந்ததிலிருந்து ஒரு முறையேனும் இந்தச் சாலை ஆரம்பத்திலிருந்து இறுதி வரை பயணிக்க வேண்டும் என்ற ஆசை, தினசரி வேலை ஓட்டத்தில் இது வரை நிறைவேறவில்லை. தலைப் பிளக்கும் வெயிலிலும் சூடாக தேநீர் குடிக்க வேண்டும் போலிருந்து. பையில் கைவிட்டு காசை எண்ணினேன். சரியாக பயணச்சீட்டிற்கான தொகை மட்டுமே இருந்தது.

பின் பக்கம் பர்ஸைத் தொட்டுப்பார்த்துக் கொண்டேன். அதில் நூற்றைம்பது ரூபாய் அடுத்த வாரத்திற்காக எடுத்து வைத்திருந்தேன். விபத்தை ஆராய்ந்துவிட்டு பெரியவர் எனக்கு பக்கத்தில் வந்து நின்றுகொண்டார். அவரைப் பார்த்தபோது, காத்திருந்தவர் போல ``ஒண்ணும் பெருசா ஆகல, சின்ன சிராய்ப்புதான். ப்ரேக் பிடிக்கும்போது தவறிடுச்சாம்.” அவரது பெருசா ஒண்ணும் ஆகல-யில் ஓர் ஏமாற்றம் இருந்ததாகத் தோன்றியது. நான் காத்திருப்பை கைவிட்டு தேநீர் கடை நோக்கி நடக்கத் தொடங்கினேன். இங்கிருந்து அறை இரண்டு நிறுத்தங்கள்தான், பேருந்து சுகத்தை துறந்துவிட்டு நடந்து போய்க்கொள்ளலாம். இப்போது தேநீர் அவசியமாக இருந்தது. நான் வேலை செய்யுமிடம் ராஜீவ்காந்தி சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்பப் பூங்காவில் இருக்கிறது. தினசரி இரண்டு பேருந்துகள் பிடித்துச் சென்று வர வேண்டும். சம்பளத்தில் குறையில்லை என்றாலும் வீட்டுத் தேவைக்கு அனுப்பியது போக கையில் நிற்கும் சொச்சத்தில் தேநீர் குடிக்க வேண்டும் என்றாலும் கணக்குப் பார்த்துதான் செலவு செய்ய வேண்டியுள்ளது.

Representational Image
Representational Image

மாதத் தொடக்கத்திலேயே அன்றைய மாதத்திற்கான அன்றாடச் செலவுகள், வங்கிக் கடன், வாடகை போக உபரியான தேநீர் மற்றும் இதரச் செலவுகளை முதல் தேதியிலேயே கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். ஏதேனும் அவசரத் தேவைகள் ஏற்பட்டால், ஏதேனும் உபரிகளில் ஒன்றை தியாகம் செய்தாக வேண்டும். விரும்பியதை வாங்குவது மிகவும் கடினம். ஆசைகளை அடக்கிக்கொண்டு இரண்டு மூன்று மாதங்கள் பல்லைக் கடித்துக்கொண்டு சேமித்தால் விரும்பும் பொருளை வாங்கலாம். சம்பளம் அதிகம் எனப் பிடிக்காத வேலையைச் செய்தாலும், கடைசியில் எண்ணி எண்ணி செலவு செய்யும் நிலைமைதான் எஞ்சியது.

எண்ணங்கள் பெருகிக் கொண்டே போகக் கடையை நெருங்கிவிட்டேன். என்னைப் பார்த்ததும் மாஸ்டர் வரவேற்பதாக தலையசைத்து தேநீர் தயாரிக்கத் தொடங்கினார். நான் வெளியே சாலையைப் பார்த்தபடி நின்றுகொண்டேன். வாகனங்கள் வேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் கடைப் பையன் என் கையில் கிளாஸைத் திணித்துவிட்டுச் சென்றான். முதல் வாய் விழுங்கியதும் ஒரு புத்துணர்ச்சி உடம்பில் உண்டானது. செல்பேசி சிணுங்கியதும் எடுத்துப் பார்த்தேன், வங்கியில் பணப் பரிமாற்றம் முடிந்தது தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டது எனச் செய்தி தெரிவித்தது.

Representational Image
Representational Image

அப்பாவிடம் சரிபார்த்துக் கொள்ளச் சொல்லவேண்டும். அவருடன் பேசி இரண்டு வாரங்கள் ஆகின்றன. கடைசி முறை பேசியபோது, சொந்தத்தில் வரன் கேட்டிருப்பதாகவும் என் விருப்பம் என்ன என்றும் கேட்டார். நான் யோசித்துச் சொல்கிறேன் எனச் சொல்லி வைத்துவிட்டேன். அதன்பின் அவர் போன் செய்தபோது எடுக்கவில்லை. என்னால் அவரிடம் எனக்கு இப்போது திருமணத்தில் இஷ்டமில்லை எனக் கூறமுடியவில்லை. ஏற்கெனவே அவர் காட்டிய பெண்களை அற்ப காரணங்கள் கூறி மறுத்துவிட்டேன். எனக்கு திருமணம் செய்துவிட்டால் தனது அனைத்துக் கடமைகளும் முடிந்துவிடும், முப்பது வருட வேலைச் சோர்விலிருந்து வெளிவந்து நிம்மதியாக இருக்கலாம் என அவர் நினைப்பது எனக்குப் புரிகிறது. இருந்தாலும் நான் இருக்கும் பண மற்றும் மன நிலையில் இப்போது கல்யாணப் பேச்சே வேண்டாம் என அவருக்கு வருத்தம் தராமல் உணர்த்த சிறிது சமயம் வேண்டும். எனவே, கைபேசியை உள்ளே வைத்துவிட்டு. காலிக் கோப்பையை வைத்துவிட்டு அறை நோக்கி நடந்தேன். சிறிது தூரம் சென்றதும், சாலையோரம் நடைபாதையில் தார்ப்பாய் விரித்து ஒருவர் புத்தகங்கள் விற்றுக் கொண்டிருந்தார். நான் தாண்டிச் சென்றுவிடலாம் என்றுதான் எண்ணினேன்.

ஆனால், புத்தகங்களின் அட்டைப் பளபளப்பு என்னைச் சலனப் படுத்தியது. நான் தயங்கியதைப் பார்த்ததும் கடைக்காரர், ``வாங்க சார், வந்து பாருங்க, எல்லாம் பயன்படுத்திய புத்தகம், பாதி விலை தான்” என மேலும் சலனத்தை அதிகப்படுத்தினார். நான் விருப்பம் இல்லாததுபோல் எதையும் தொடாமல் மேலோட்டமாகப் பார்த்து வந்தேன். அறையில் படிக்காமல் வைத்திருக்கும் புத்தகங்கள் ஞாபகம் வந்தது. இருந்தும் ஆசை யாரை விட்டது. புத்தக அடுக்கைக் கலைக்க ஆரம்பித்தேன். முதல் வரிசையிலேயே அட்டையைப் பார்த்ததும் தெரிந்துவிட்டது. நான் வருட காலமாக தேடிவரும் புத்தகம், என் கண்களில் தெரிந்த வெளிச்சத்தை கடைக்காரர் பார்த்துவிட்டார்.

``வேணுமா சார்?” என என் கையில் புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார். வேண்டும் எனக் கூறிவிட்டால் விலையைக் கூட்டிச் சொல்லுவார். எனவே எனது படபடப்பை மறைத்துக்கொண்டு அசுவராசியமாகப் புத்தகத்தை திறவாமல் ஆராய்ந்தேன். நான் தேடிக் கொண்டிருந்த அதே புத்தகம். பதிப்பு நிறுத்தப்பட்டு பல வருடங்கள் ஆகியிருந்தன. இதை தேடி ஏறாத கடைகள் இல்லை. இன்று என் கைகளில், எவரோ இணையப் பதிப்பை அச்செடுத்து புத்தகமாக மாற்றியிருக்கிறார்.

Representational Image
Representational Image

எப்படி அவருக்கு இதைக் கொடுக்க மனம் வந்ததோ. நான் அதைக் கையில் வைத்துக்கொண்டு வேறு புத்தகம் தேடுவது போல் பாவனை செய்தேன். சிறிது நேரம் கழித்து எடுத்துவிட்டோமே என வாங்குவதுபோல முகத்தை வைத்துக் கொண்டு விலையை விசாரித்தேன். கடைக்காரர் இருநூற்றைம்பது என்றார். என் மனம் கணக்கு போட ஆரம்பித்தது. “என்னண்ணா புதுசு வெல சொல்றீங்க, கொஞ்சம் பாத்துச் சொல்லுங்க?” என்றேன்.

நான் இன்னும் மனதினுள் கணக்கு போட்டுக் கொண்டிருந்தேன். நூறு ரூபாயில் வாங்கிவிட்டால், மிச்ச ஐம்பதில் வாரத்தை ஓட்டி விடலாம். ``புக் வெலைல பாதி தான்பா சொல்றேன், நீயே வேணா புக் ரேட் என்னனு பாரேன்.” என விடாமல் பேசினார். எனது ஆர்வத்தைக் காட்டியதற்காக நொந்துகொண்டேன். விலையைக் குறைப்பது இனி கடினம். “ பாக்க புதுசா இருந்தாக்கூட நீங்க சொல்ற விலை சரிண்ணா. இது பழசா இருக்கு பாருங்க, இவ்ளோ விலை கொஞ்சம் ஜாஸ்திண்ணா.” ``சரிப்பா, இருநூறு குடு, இதுக்கே எனக்கு பத்து ரூபாதான் லாபம் வரும். இதுக்கு மேல கொறைக்க முடியாது.” என்றார். அடுத்த வாரம் எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் என பர்ஸிலிருந்து சில்லரை முதல் எல்லாவற்றையும் பொறுக்க ஆரம்பித்தேன். எண்ணிப் பார்த்ததில் நூற்று எழுபதுதான் வந்தது. என்ன செய்வதெனப் புரியாமல் தவித்தேன்.

Representational Image
Representational Image

அறையில் எவரிடமாவது வாங்கிக் கொள்ளலாம் என அவரைப் பார்த்து, ``கொஞ்சம் தனியா எடுத்து வைங்க, பக்கத்துலதான் ரூம் இருக்கு, யாருக்கும் குடுத்துடாதீங்க, நான் போயி காசு எடுத்துட்டு வந்துடுறேன்.” அவர், “இருக்குமான்னு தெரியாதுப்பா, யாராவது வந்து கேட்டா கொடுத்துடுவேன்.” “அஞ்சு நிமிஷத்துல வந்துடுவேன், இதோதான் இருக்கு” எனப் பரிதவித்தேன். அவர் சிறிது நேரம் யோசித்தார். பின் ``சரிப்பா, எவ்வளோ இருக்கோ குடுத்துட்டு எடுத்துக்கோ.” என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. சந்தோஷம் நிரம்ப ஆரம்பித்தது. கையில் இருப்பதைக் கொடுத்துவிட்டு, கையில் புத்தகத்துடன் மகிழ்ச்சியுடன் நடந்தேன். நடந்து கொண்டே பக்கம் பிரித்து வாசம் பிடித்தேன். பழைய புத்தகத்தின் வாசனை உன்மத்தம் உண்டாக்கியது. முதல் பக்கம் பிரித்துப் பார்த்தேன். ``நிகரில்லா உனக்கு பரிசாக இந்த விலை மதிப்பில்லா அறிவுப் பெட்டகம்” என எழுதி கையொப்பமிட்டிருந்தது.

-ச.வி

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு