கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

சிறுகதை: கொரோனாவும் கொண்டையா மாமாவும்

கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா

பாஸ்கர் சக்தி

கொரோனா எச்சரிக்கைகள் பரவத் தொடங்கிய 2020, மார்ச் மாதத்தின் ஒரு சாயங்காலம். தேனியின் மையப்பகுதியில் மைக் வைத்து எப்படிக் கை கழுவ வேண்டுமென்றும், கூட்டமாகக் கூட வேண்டாமென்றும், முனிசிபாலிட்டி ஆட்கள் ஆட்டோவில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். மக்கள் அதை லேகிய விளம்பரத்தைக் கேட்கும் அதே முகபாவனையுடன் கேட்டபடி இயல்பாகக் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள்… தூசு நிறைந்த தேனியின் தெருக்களில் சுற்றி அலைந்துவிட்டு, ஒரு டீ குடிக்கலாம் என்று கடையில் ஒதுங்கினேன். தேனியின் ஃபேமஸான, சூடான முட்டாஸும் உளுந்தவடையும் கோபுரமாய் அடுக்கியிருந்தன. மற்றொரு தட்டில் மொஸைக் தரையில் எண்ணெய் தடவிவிட்ட மாதிரி மினுமினுக்கும் கேசரி பளபளக்க, கத்தியால் அதை பாளமாக விள்ளல் எடுத்து காகிதத்தில் தர, அஞ்சாறு பேர் வாங்கி வாயெல்லாம் ஆரஞ்சு நிறமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்… ஒரு கேசரியும் உளுந்துவடையும் தின்று, டீயைக் குடித்தால் வயிறு `திம்'மென்று ஆகிவிடும். என்னுடைய ஃபேவரிட்டான முட்டாஸை எடுத்துக் கடித்தேன். முட்டாஸ் என்பது ஜாங்கிரியின் கிராமிய வடிவம்... அதன் உள்ளிருந்து ஜீரா ஒழுகி, மீசையும் விரல்களும் பிசுபிசுக்கையில் பக்கத்தில் வந்து நின்ற பரிச்சய நலம்விரும்பி, ஒரு புன்னகையை உதிர்த்து பொறுப்புடன் கேட்டார், “உங்களுக்கு இன்னும் சுகர் வரலையா தம்பி?”

“வரலைனுதான் நினைக்கிறேன். ஏன்?”

“வரணுமில்லை? இப்பல்லாம் நாப்பது வயசுலயே வந்துருது... எனக்கு முப்பத்தி ஏழுலயே வந்துருச்சு. இப்ப எனக்கு அம்பத்தி ஏழாகுது. உனக்கு இன்னும் வரலைங்கிறே..?”

“அது வந்துண்ணே... எல்லாருக்கும் வரணும்னு அவசியம் இல்லை. சில பேருக்கு இல்லாமக்கூட இருக்கும்.”

“அப்படி ஒரேயடியாச் சொல்லிர முடியாது. எதுக்கும் டெஸ்ட் பண்ணிப் பாரு. நீ பாட்டுக்கு ஒரு முட்டாஸை முழுசாத் திங்கிறியே?” என்று என் கையிலிருக்கும் மிச்ச முட்டாஸைப் பார்த்தபடி… “சீனி இல்லாம ஒரு டீ போடு'' என்றார் பெருமூச்சுடன்.

டி.வி-யைக் கழுத்து வலிக்கும் உயரத்தில்வைத்திருந்தார்கள். செய்தி சேனல்களில் கொரோனா பற்றிய புள்ளிவிவரங்கள் பீதியை அதிகரித்ததாலும், நலம்விரும்பி அடுத்த பிளேடுக்கு ரெடியாவதைப்போல, டி.வி-யை சில நிமிடங்கள் உற்றுப் பார்த்துவிட்டு, அது தொடர்பாக என்னிடம் ஓர் உரை நிகழ்த்தத் தயாராவதை எனது கூர்புலன்கள் உணர்ந்து எச்சரித்ததாலும், இவரிடமிருந்து தப்பி விடலாம் என்று வேகமாகத் திரும்பினால், எதிரே இதைவிட பேராபத்து…

சிறுகதை: கொரோனாவும் கொண்டையா மாமாவும்

கொண்டையா மாமா வெற்றிலைப் பற்கள் தெரிய சிரித்தபடி, “மாப்ளை... இங்க இருக்கியா நிய்யி… வா…” என்று அழைக்க, நான் உடனே அனிச்சைச் செயலாக அவரிடமிருந்து தப்ப விரும்பி, “வேலை இருக்கே மாமா...” என்று சொல்ல, அவர் என்னைத் தோளோடு இறுக்க அணைத்து, “மாப்ளை, சோலி இல்லாத மனுசன் உலகத்துல உண்டுமா? சும்மா இருக்கறதும் சோலிதான், சோலி பார்க்கறதும் சோலிதான், இப்பிடியே மாமன்கூட வீட்டுக்கு வந்து பேசிக்கிட்டு இருக்கறதும் சோலிதான்” என்றார்.

கொண்டையா மாமனிடமிருந்து தப்ப விரும்பிய காரணங்களில் இந்த மாதிரி உதார் தத்துவங்களை அவர் அடிக்கடி உதிர்ப்பதும் ஒன்று. அது தவிர, அவர் தன்னை இரண்டு விஷயங்களில் ஒரு மேதையாக நம்பி வாழ்ந்துகொண்டிருந்தார். அவை மருத்துவம் மற்றும் சித்து வேலைகள்... நான் அவரிடம் மாட்டும்போதெல்லாம் அவர் மிகுந்த உற்சாகமாகிவிடுவார்… எங்கள் வம்சத்திலேயே அவர்போல் மூளை கொண்டவன் நான் ஒருவன்தான் என்பது அவரது நம்பிக்கை. “....மாப்ளை, உன் வகையறாவுல ஒரு பயலுக்கும் மண்டைக்குள்ள வெண்டிக்கா கெடையாது. உனக்கு ராசாசி மூளைடா... என்கூட இருந்திருந்தேன்னா வேற மாதிரி இருந்திருப்பே... அதை விட்டுப்போட்டு இங்க்லீஸ் மருந்து விக்கிறேன்னு பையைத் தூக்கிட்டுத் திரியிறவன்” என்றார். நான் ஒரு மருந்து கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதியாக இருந்து, இப்போது ஸோனல் மேனேஜராக ஆன பின்பும் மாமாவுக்கு நான் இங்க்லீஸ் மருந்து விக்கிறவன்தான்.

கொண்டையா மாமா என்னைவிட இருபது வயது மூத்தவர். தன் அறுபதுகளில் இருக்கிறார். அடிக்கடி சாமி வந்து இறங்கும்.அப்போதெல்லாம் தன் முட்டைக் கண்ணை மேலும் திரட்டி விழித்து `உஸ்ஸு... உஸ்ஸு...' என்று அடைகாக்கும் நாகம்போல சீறுவார். பெண்களெல்லாம் பயந்துபோய் தொபீர் தொபீர் என்று மந்திரிகள்போல காலில் விழுவார்கள்.

“என்ன யோசனை மாப்ளை, வா வீடு வரைக்கும். சோலி கெடக்கு, பைக்குலதான வந்திருக்க? வண்டியை எடு” என்று வம்படியாக என் பைக்கில் ஏறி வீட்டுக்குக் கூட்டிப் போய்விட்டார். வீடு பத்து கிலோமீட்டர் தாண்டி கிராமத்தில் இருந்தது. ஒரு சிறிய குளத்தின் கரை... ஒட்டி ஒரு வேப்பமரமும் ஆலமரமும்... அருகே சின்னதாக இவரது ஓட்டுவீடு. பொண்டாட்டி செத்த பிறகு மறுமணம் செய்யாத தனிக்கட்டை. பிள்ளைகளும் இல்லை…

வீட்டிலமர்ந்ததும் தாமிரப் பாத்திரத்தில் வைத்திருந்த தண்ணீரை பித்தளை டம்ளரில் ஊற்றினார். நீர் மஞ்சள் நிறமாக இருந்தது...வேப்பிலைகள் மிதந்தன... எனக்கும் ஒரு சொம்பில் ஊற்றிக் கொடுத்தார். “தண்ணி குடி மாப்ளை.”

“மாமா... இது தண்ணி மாதிரியே இல்லையே?”

“கொஞ்சம் மூலிகை சேர்மானம் இருக்கு… குடி… என்னமோ புது கிருமி எல்லாம் வந்திருக்காம்ல? இதைக் குடி… அப்புறம் எந்தக் கிருமி வருதுன்னு பாத்துரலாம்.”

வாயருகே டம்ளரைக் கொண்டு போனால் கொஞ்சம் கஷாயம், கொஞ்சம் ரசம் மற்றும் பச்சிலை வாசமடித்தது.

“பரவாயில்லை மாமா.”

“ ஏன் மாப்ளை... நீ விக்குற மருந்தெல்லாம் சனம் காசு குடுத்து வாங்கித் திங்கலாம். ஆனா நீ, நான் குடுக்குற தண்ணியைக் குடிக்க மாட்டியா?”

நான் பதிலேதும் சொல்லாமல் சிரிக்க, அவர் விஷயத்துக்கு வந்தார். “மாப்ளை… இப்ப எதுக்கு உன்னைய வரச் சொன்னேன்னா… இந்த கொரோனாவோ என்னமோ பரவுதுன்னு ஒரு பயத்தைக் கிளப்புறாங்க பாத்தியா?”

“பயந்துதான் ஆகணும் மாமா. அது ஒரு வைரஸ் கிருமி. ரொம்ப வேகமாப் பரவுது…அதுக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கலை.”

“… நீங்க எதுக்குத்தாண்டா இது வரைக்கும் மருந்து கண்டுபிடிச்சிருக்கீங்க... எம்புட்டு மெடிக்கல்ஸு... எம்புட்டு ஆஸ்பத்திரி… ஆனா, ... சீக்கு எங்கயாச்சும் கொறைஞ்சிருக்கா... ம்?”

“யாரு சொன்னது? முன்னாடியெல்லாம் ஏன் செத்தாங்கன்னு தெரியாமலேயே செத்துப் போனவங்க நிறைய பேரு... இப்ப அப்படி இல்லையே?”

“இப்ப காரணம் தெரிஞ்சு செத்துப் போறாங்கெ… ஆனா சாவு சாவுதானே மாப்ளை?”

“மாமா... சாவை யாரும் ஜெயிக்க முடியாது…அதை விடுங்க… என்னமோ சொல்ல வந்தீங்களே?’'

“ம்… அதைக் கேளு... இப்ப நான் என்ன பண்ணி இருக்கேன்னா... அந்த கொரோனா இருக்கில்ல? அது என்ன ... ஒரு கிருமிப் பய புள்ளைதானே… பாக்டீரியான்னு சொல்லுவாங்கள்ல... அதானே?”

“ இல்லை மாமா. இது வைரஸ்... பாக்டீரியா வேற, வைரஸ் வேற.”

“நிய்யி... இந்தப் பேரைவெச்சு பந்தா காமிக்கிற சோலியையெல்லாம் நீ பாக்குற டாக்டருககிட்ட வெச்சுக்க… எனக்கு அது ஒரே வார்த்தையில கிருமி அம்புட்டுத்தான்…”

“சரி... கிருமி... சொல்லுங்க.”

“மாப்ளை…” அவர் குரல் சற்று ரகசியம் பேசுவதுபோல் தழைந்தது.

“அது சீனாவுலருந்து இந்தியா வரலாம், தமிழ்நாட்டுக்கு வரலாம்… தமிழ்நாட்டுல எங்க வேணா வரலாம். ஆனா… நம்ம தேனி மாவட்டத்துக்குள்ள அது எல்லை தாண்டி வர முடியாது.”

நான் வியப்படையவில்லை. கொண்டையா மாமா என்னைக் கடத்தி வந்தபோதே ஏதோ பெரிதாக எதிர்பார்த்தேன்.

பாதரசத்தைக் கட்டி லிங்கம் செய்யப்போவதாக ஒரு புராஜெக்ட்டும், எருக்கம்பூவிலிருந்து ஆண்மை விருத்திக்கான லேகியம் செய்யும் இன்னொரு புராஜக்ட்டும் அவர் என்னிடம் முன்னரே பேசியிருந்தார்.

“அது எதுக்கு மாமா எருக்கம்பூ..?’

“மாப்ளை... கடவுள் எல்லாத்துலயும் ஒரு சூச்சியம்வெச்சுத்தான் படைப்பான். இப்ப வெண்டிக்காய் கொளகொளன்னு இருக்கு. அது மூளைக்கு நல்லது. ஏன்னா மூளை அப்படி வெண்டிக்காய் கணக்காத்தான் இருக்கும். மாதுளம்பழம் ரத்தச் செகப்பா இருக்கா… அது ரத்த விருத்திக்கு நல்லது.எருக்கம்பூவும் அப்படித்தான்… அதோட மொட்டு பார்த்திருக்கியா?”

மாமா தன் எளிய சூத்திரங்களைவைத்து, என்னுடைய பார்மஸி டிகிரியை, பார்க்கும் போதெல்லாம் பந்தாடி வந்தார்.

“ என்ன... அதுல கொஞ்சம் வெஷத் தன்மை உண்டு... அதை முறிச்சுட்டு செய்யணும்.அதுதான் கொஞ்சம் சிக்கலா இருக்கு… என்ன மாப்ளை தூங்குறியா?”

“கேட்டுக்கிட்டிருக்கேன் மாமா. சொல்லுங்க.”

“கொரொனா தேனி மாவட்டத்துக்குள்ள நுழையாதபடிக்கு ஒரு காரியம் செஞ்சிருக்கேன். ஒரு வாரமா அதே வேலைதான்.”

“என்ன பண்ணியிருக்கீங்க?”

“அந்த கொரோனா கிருமியோட வாயைக் கட்டுறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்.”

“என்ன மாமா சொல்றீங்க... அதெப்பிடி மாமா முடியும்?”

“ ஏன் முடியாது?”

“அதுக்கு வாயே கெடையாது மாமா.”

“லூசு மாதிரி பேசாத மாப்ளை… இங்க இவ்வளவு நேரம் உக்காந்திருக்கியே... உன்னை ஏதாச்சும் கொசு கடிச்சுச்சா?”

“இல்லை.”

“குளக்கரையில உக்காந்து பாரு... புடுங்கி எடுத்துரும்... ஏன் இந்த வீட்டுக்குள்ள கடிக்கலை? அது வாயைக் கட்டியிருக்கேன்…உள்ள வராது… வந்தாலும் கடிக்க முடியாது.''

சிறுகதை: கொரோனாவும் கொண்டையா மாமாவும்

“கொசுவுக்கும் வாய் கிடையாது மாமா.”

“இதான் படிச்ச முட்டாள்னு சொல்றது. வாயின்னா பல்லு, நாக்கு. உதடெல்லாம் இருக்குற வாயின்னு அர்த்தமா... கடிக்கிற தன்மையைத்தான் வாயின்னு சொல்றேன்...புரியுதா?”

“அப்படியே வெச்சுக்கிட்டாலும் கொசு கடிக்கும்… கொரோனா கடிக்காது மாமா.”

அவர் கடுப்பாகப் பார்த்தார். “மாப்ளை, உனக்கு இதை விளங்கிக்கிற புத்தி இல்லை…விட்டுரு.”

“சரி மாமா, நான் கிளம்பறேன்.”

“ எங்கடி போற மாப்ளை... நீ என்கூட வரணும்…”

“எதுக்கு... எங்க வரணும்?’

“அப்படிக் கேளு… தேனி மாவட்டத்துக்கு இருக்கறது மொத்தம் நாலு வழி… ஒண்ணு திண்டுக்கல்ல இருந்து வருது… இன்னொன்ணு மதுரையில இருந்து வருது. மூணாவது கேரளாவுல குமுளியில இருந்து வருது... நாலாவது போடி மெட்டு ரூட்டு… சரியா?”

“ஆமா... அதுக்கு?”

“உன் பைக்குல நாம ரெண்டு பேரும் போறோம்… நாலு ரூட்டுலயும் தேனி மாவட்ட எல்லை இருக்குல்ல… காட் ரோடு, கணவாய், லோயர் கேம்ப்பு, மெட்டு... நாலு எடத்துலயும் போயி நாம மந்திரிச்ச தீர்த்தத்தை தெளிக்கிறோம்… அதைத் தாண்டி கொரோனா வராது… புரியுதா?”

நான் பேசாமலிருந்தேன்.

“என்னடா கம்முன்னு இருக்கவன்?”

“மாமா, சொன்னா என்னையை முட்டாளுங்கிறீங்க. நீங்க சொல்றது எல்லாமே ரோட்டுல இருக்கற மாவட்ட எல்லை. கொரொனா பஸ்ஸுலயோ, பைக்கிலயோ, கார்லயோ வர்ற ஐட்டம் இல்லை... அது வைரஸ்… அது ரோட்டு வழியாதான் வரணும்னு இல்லை… எப்படி வேணா வரும்.”

அவர் ஓரிரு விநாடி அமைதியாக இருந்துவிட்டுச் சொன்னார்.

“மாப்ளை... நீ ஒரு படிப்பு படிச்சிருக்கேல்ல... கெமிஸ்ட்ரிம்பியே... அதுல ஒரு பாடத்தை எடுத்து என்கிட்ட குடுத்து படின்னா… என்னால படிக்க முடியுமா... படிச்சாப் புரியுமா..?''

“அது எப்படிப் புரியும்?”

“புரியாதுல்ல... அது மாதிரிதான். இது என் படிப்பு. இதை உன்னால படிச்சுப் புரிஞ்சுக்கிற முடியாது. உன் பைக்குல என்னையைக் கூட்டிட்டுப் போ... வேடிக்கை பாரு. கொரோனா நம்ம மாவட்டத்துக்குள்ள வந்துச்சுன்னா, அப்ப வந்து என்னையைக் கேளு… கெளம்பு.”

அவரிடமிருந்த தாமிரப் பாத்திரங்களை எடுத்து அவர் மந்திரித்த தீர்த்தத்தை நிரப்பினார். என் பைக்கில் ஏறிக் கொண்டார். அவர் சொன்ன நாலு எல்லைகளிலும் போய்த் தெளித்தோம். ஆண்டிபட்டி கணவாய் எல்லையில் அதைத் தெளிக்கையில் ஆடு மேய்க்கும் பெண் ஒருத்தி வந்து விவரம் கேட்க... மாமா சொன்னதும் காலில் விழுந்து விபூதி வாங்கினாள். குமுளி எல்லையில் தெளிக்கும்போது அங்கே இருந்த கேரளா போலீஸ்காரர் சந்தேகமாகப் பார்த்து வேகமாக நெருங்க பைக்கில் ஏறிப் பறந்து வந்துவிட்டோம்.

அவரை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு எஸ்கேப் ஆகி வந்து ஓரிரு நாள்களில் ஊரடங்கு வந்துவிட்டது. இருபது நாள்களுக்கு மேல் அவரைப் பார்க்கவில்லை. போன் செய்யவில்லை. நாங்கள் எல்லையில் தெளித்த தீர்த்தத்தை மீறி கொரோனா எல்லையின்றி பரவத் தொடங்கி, மாவட்டத்தில் நாளுக்கு முந்நூறு கேஸ்கள் ரிபோர்ட் ஆகத் தொடங்கியிருந்தன. திடீரென்று எனக்கு போன் செய்தார்.

“என்ன மாமா?”

“மாப்ளை... கையில சுத்தமா வெள்ளையப்பன் இல்லை. ஒரு எட்டு வந்து பத்து, நூறு கையில குடுத்துட்டுப் போறியா?”

அவ்வப்போது இப்படிக் கேட்கிறவர்தான். லாக்டௌன் வேறு. எனவே, கொஞ்சம் அரிசி பருப்பு எல்லாம் எடுத்துக்கொண்டு போனேன்... போனால் வீட்டில் ஏழெட்டுப் பேரை வரிசையாக அமரவைத்து குறி சொல்லிக் கொண்டிருந்தார்... எரிச்சலோடு தள்ளி இருந்துவிட்டு, எல்லோரும் போனதும் போய் கோபத்தோடு திட்டினேன்

“என்ன மாமா கூறுகெட்டதனமா இருக்கீங்க... அதான் டெய்லி டி.வி-லல்லாம் சொல்றாங்கல்ல... கூட்டம்போடக் கூடாதுன்னு... ஒருத்தரும் மாஸ்க் போடலை. நீங்களும் போடலை... விளையாட்டாப் போச்சா உங்களுக்கு?”

அவர் கெக்கெக்கெ என்று சிரித்தார், “மாப்ளை... அதெல்லாம் நம்மளை ஒண்ணுஞ் செய்யாது.”

“ஏன்?”

“மூணு வேளையும் மூலிகைதான், நாயுருவி வேரு, கண்டங்கத்திரி, முசுமுசுக்கையை அரைச்சுக் குடிக்கிறேன்ல... கொரோனா மட்டும்னு கிடையாது… எதுவுமே வராது.”

“அடேயப்பா, இதுக்கெல்லாம் குறைச்சல் இல்லை. தேனி மாவட்டத்துக்குள்ளேயே வராதுன்னு சொல்லி தீர்த்தம் தெளிச்சமே...என்னா ஆச்சு?”

“அதுல ஒரு சின்ன மிஸ்டேக் ஆகிப் போச்சு மாப்பிள்ளை… ஏழு நாழிகை பூஜை செய்யறதுக்குப் பதிலா நாலு நாழிகை பண்ணிட்டேன்…

அப்புறம் நாகதாளின்னு ஒரு வேரு இருக்கு… அதைப் போட்டதா நினைச்சுட்டேன்… அது மிஸ் ஆகிப் போச்சு...அதனால தீர்த்தத்துல கொஞ்சம் பவரு கம்மியாப் போச்சு.”

நான் கொஞ்சம் கடுப்பானேன். “லூசுத்தனமாப் பேசாதீங்க. நீங்க ஒரு அரைகுறை. உங்களுக்கு சித்த வைத்தியமே சரியா தெரியாது… ஏதோ இத்தனை நாளு சம்பாத்தியத்துக்கு என்னமோ செஞ்சீங்க... அதுவரைக்கும் சரி... ஆனா நிலைமை சரியில்லை... இது எப்படிப் போகும்னு டாக்டர்களுக்கே இன்னும் விளங்கலை.உங்களுக்கு அறுபது வயசுக்கு மேல ஆச்சு…வந்துருச்சுன்னா கஷ்டம். போய்த் தொலைஞ்சிருவீங்க.”

நான் இப்படிக் கோபமாகப் பேசி அவர் கேட்டதே இல்லை. முகம் வாடிப் போய்விட்டார்.

“சரி மாப்ளை. கோவிக்காத... இப்ப என்ன செய்யணும்?”

பணத்தையும் அரிசி பருப்பையும் கொடுத்து விட்டு, கையோடு கொண்டு போயிருந்த இரண்டு மாஸ்க்கைக் கொடுத்தேன்.

“இனிமே இங்க குறி சொல்றது, கூட்டம் கூட்டுறதெல்லாம் கொஞ்ச நாளைக்கு வேணாம். நீங்க கடை கண்ணிக்கு போகணும்னா இந்த மாஸ்க்கைப் போட்டுக்கிட்டுப் போகணும். கொஞ்சமாவது சொல்பேச்சு கேளுங்க.”

நான் கொடுத்த வெள்ளை நிற N95 மாஸ்க்கைப் பார்த்தார்.

“…பொம்பளைக போடுற பாடி கணக்கா இருக்கு. இதை மூஞ்சியில போடச் சொல்லுறியே... நல்லாவா இருக்கு?’'

“சொல்றதைக் கேளுங்க. இல்லாட்டி என்னமோ பண்ணுங்க…” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

ஒரு வாரம் கழித்து மாமாவுக்கு காய்ச்சல் என்று அந்தப் பக்கம் போன சித்தப்பா மகன் விவரம் சொல்ல, கொஞ்சம் கவலையாகிப்போய் போன் செய்தேன்.

“என்னா மாப்ளை?”

“என்ன மாமா… காய்ச்சல்னு சொன்னாங்க... எப்பருந்து?'’

“மூணு நாளா இருக்கு மாப்ளை” சொல்லிவிட்டுத் தொடர்ந்து கொஞ்ச நேரம் இருமினார்.

“இருமல் எப்பருந்து?”

“காய்ச்சலோட அதும் ரெண்டு நாளா இருக்கு.”

“மாமா... எனக்கு டவுட்டா இருக்கு. கொரோனா டெஸ்ட் எடுத்துரலாம்.”

“இது கொரொனா இல்லை மாப்ளை.”

“எப்படிச் சொல்றீங்க?”

“மாப்ளை, ஒண்ணு தெரிஞ்சுக்கங்க. இருமி சளி வந்துட்டா கொரோனா கிடையாது. சளி வராம இருமுனாத்தான் கொரோனா... எனக்குத்தான் சளி வருதே.”

“உங்க ஆராய்ச்சி அறிவையெல்லாம் மூட்டைகட்டி வெச்சுட்டு சொல்றதைக் கேளுங்க... கூட வேற யாருமில்லாம தனியா இருக்கீங்க... பேசாம ஆஸ்பிடல் போயிருங்க.”

“யோவ் மாப்ளை, என்னை என்ன சவங்கைப் பயன்னு நினைச்சியா... ஆஸ்பத்திரிக்குப் போய் போகச் சொல்றே? சண்டமாருதம்னு ஒரு பஸ்பம் வெச்சிருக்கேன்... அதை தேன்ல குழைச்சு சாப்பிட்டா... கபம் கிபம் எல்லாத்தையும் ... அத்து எறிஞ்சிரும்... லொக் லொக் லொக்” என்று தொடர் இருமல்.

நான் முடிவு எடுத்துவிட்டேன்.

“அதெல்லாம் தெரியாது. வண்டி வரும். முரண்டு பண்ணாம ஆஸ்பிடல் போற வழியைப் பாருங்க.”

போனை கட் பண்ணிவிட்டு யோசித்தேன். பார்மஸி துறையில் இருபது வருட அனுபவம். பெரும்பாலான டாக்டர்கள், மருத்துவத்துறை ஆட்கள் எல்லோரையும் தெரியும். ஹெல்த் இன்ஸ்பெக்டரைக் கூப்பிட்டு விவரம் சொன்னேன். `ஆளைத் தூக்கிவந்து ஹாஸ்பிடலில் போடுங்கள். இல்லாவிட்டால் பல பேருக்குப் பரப்பி விடுவார்' என்று சொன்னதும், அரை மணி நேரத்தில் தூக்கிக்கொண்டு வந்து அட்மிட் செய்துவிட்டார்கள்.

மாமாவிடமிருந்து ஒரு நாளைக்கு மூன்று முறை போன் வந்துகொண்டேயிருந்தது.இருமிக்கொண்டே பேசியபடி இருந்தார். “எதுக்கு ஸ்ட்ரெயின் பண்றீங்க... வேணாம். பேசாம ரெஸ்ட் எடுங்க''

என்று சொல்வதையெல்லாம் பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார்.

அந்த வார்டின் இன்சார்ஜ் ஆக இருந்த டாக்டர் சங்கர் எனக்கு நல்ல பழக்கம். அவருக்கு போன் செய்து கேட்டேன்.

“டாக்டர், உங்க வார்டுல கொண்டையான்னு ஒரு பேஷன்ட்”

“ஆமா செந்தில்... யார் அது?”

“என் மாமா சார். அவரோட கண்டிஷன் எப்படி? கொஞ்சம் பாத்துக்கங்க.”

“செந்தில், உன் மாமனை மாதிரி ஒரு நான்சென்ஸ், நான் கோ ஆபரேடிவ் பேஷன்ட்டை நான் பார்த்ததே இல்லை. குடுக்கற மாத்திரையைச் சாப்படுறதுக்கு முன்னால ஆயிரம் கேள்வி கேக்கறாரு. `இந்த மாத்திரை வேணாம்... இது எப்படி வேலை செய்யும்'னு ஒரே தொணதொணப்பு…”

“சாரி டாக்டர், அவரு... அப்படித்தான்.”

“ `என்னைக் கொண்டுபோய் வீட்டுல விடுங்க. கஷாயம்வெச்சு சாப்பிட்டா சரியாயிரும்' அப்படின்னு நேத்து நைட்டு என்கிட்ட ஆர்க்யூமென்ட்... புடிச்சு திட்டி விட்டுட்டேன்.'’

“சாரி டாக்டர், எனக்காகப் பொறுத்துக்கங்க…”

“இட்ஸ் ஓகே செந்தில்…’’

“ஹௌ இஸ் ஹிஸ் கண்டிஷன் டாக்டர்?”

“கொஞ்ச காலம் பீடி குடிச்சிருக்கேன்னு சொன்னாரு. ஸ்கேன் பார்த்ததுல மைல்டா பாதிப்பு இருக்கு... பட் டோன்ட் வொர்ரி…பார்த்துக்கலாம்.”

அன்று இரவு மாமாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, ஆக்சிஜன் செலுத்தப்பட்டதாக சங்கர் போன் செய்து சொன்னார். எனது கவலை அதிகரித்தது.

நான்கு நாள்களாக சங்கர் போனை எடுக்கவே இல்லை. மாமாவின் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது. எனக்கு உள்ளூர பதற்றமாகவே இருந்தது. ஐந்தாம் நாள் அவரே அழைத்தார்.

“டாக்டர்..?”

“உன் லூசு மாமன் சரியாயிட்டாருய்யா...ரெண்டு நாள் ஆக்சிஜன்ல இருந்தாரு…அதுக்கப்புறம் ஸ்பீடா ரெகவர் ஆகிட்டிருக்காரு… நல்ல உடம்புதான் அந்தாளுக்கு... ஒரு வாரம் இருக்கட்டும். ரிசல்ட் பார்த்து அனுப்பிரலாம்.”

அடுத்த வாரம் மாமா டிஸ்சார்ஜ் ஆனார். ஹாஸ்பிடலுக்குப் போய் காத்திருந்தேன்.வெளியே வந்தவர் அலட்சியமாக மருத்துவமனையைத் திரும்பிப் பார்த்தார்.

“பரவால்ல மாமா. வைரஸை ஜெயிச்சுட்டீங்க.”

“நீதானடி போன் பண்ணி என்னை இங்க கொண்டு வரச் சொல்லி மாட்டிவிட்டவன்? நல்ல வேலை பாத்தியா! … கொஞ்சம் விட்டிருந்தா செத்திருப்பேன்யா.”

“மாமா?'’ என்றேன் அதிர்ச்சியுடன்.

“வீட்ல இருந்திருந்தா நாலு நாள்ல சரியாகி இருந்திருக்கும்.”

“மாமா. கிறுக்கு மாதிரிப் பேசாதீங்க..ஆக்சிஜன் குடுத்து காப்பாத்தியிருக்காங்க.”

“பின்ன... குளத்தங்கரையில காத்தாட இருந்தவனை இப்பிடி ரூம்புல கொண்டாந்து அடைச்சா... மூச்சு முட்டத்தானே செய்யும்?”

இவரிடம் பேசிப் பயனில்லை என்று பைக்கில் கொண்டுபோய் வீட்டில் விட்டுவிட்டு செலவுக்குக் காசு கொடுத்துவிட்டு வந்தேன்.

ஒரு வாரம் கழித்து என்ன செய்கிறார் என்று பார்த்து வரப் போனேன். வீட்டு வாசலில் ஏழெட்டுப் பேர். செய்வினை எடுக்க வந்திருக்கிறார்களாம். அது சம்பந்தமான கன்சல்டேஷன் நடத்திக்கொண்டிருந்தார். அவர்கள் போகும் வரை காத்திருந்துவிட்டு, அப்புறம் எரிச்சலோடு சொன்னேன்.

“மாமா, கொஞ்ச நாளைக்கு அடங்கியிருக்க மாட்டீங்களா... மறுபடியும் எதுக்கு வீட்டுல கூட்டத்தைக் கூட்றீங்க?”

“அதான் கழுதை வந்துட்டுப் போயிருச்சே?”

“உங்களுக்கு வந்துட்டுப் போயிருச்சு. இங்க வர்ற மத்த ஆளுகளுக்கு ஒருத்தர் கிட்டருந்து இன்னொருத்தருக்கு பரவுச்சுன்னா?”

“ஏன் மாப்ளை பயந்து சாகுறே? தேனிக்காரனை இந்த கொரொனா என்ன செஞ்சிரும்... உன் கண்ணு முன்னாடி மாமனைப் பாக்குறியா இல்லையா?”

சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் பார்த்தேன்.

“சாதாரண சளி, காய்ச்சல், இருமலுக்கு புதுசா ஒரு பேரைவெச்சு ஊரை ஏமாத்திக்கிட்டிருக்காங்கெ… எல்லாம் உன்னை மாதிரி ஆளுக பண்ற வேலைதான்.”

எனக்குக் கடுப்பு அதிகமானது

“சரியாகி வந்துட்டீங்கள்ல? இனி என்ன வேணும்னா பேசலாம் மாமா… இருக்கட்டும். அடுத்து ஒரு வைரஸ் வருதாம்.”

“அது என்னது மாப்ளை?”

“அடுத்து ஒரு வைரஸ் பரவிக்கிட்டு இருக்காம் மாமா... அது வந்தா ஆள் சாக மாட்டாங்களாம். ஆனா, ஆண்மை போயிருமாம்.”

மாமா சந்தோஷமாகச் சிரித்தார்.

“வரட்டும் மாப்ளை. அதுக்குத்தான் நம்ம கிட்ட மருந்து இருக்கே! பத்து நாள்ல ரெடி ஆயிரும்.”

“ எது?”

“மறந்துட்டியா மாப்ளை... அந்த எருக்கம்பூ லேகியம்?”

கண்சிமிட்டிச் சிரித்தார். “அந்தக் கிருமி வர்றப்ப நம்ம மருந்து ரெடியா இருக்கும். நிய்யி அதை வித்துக் குடு… வர்ற காசுல ஆளுக்குப் பாதி… என்னா?”

கொண்டையா மாமா ஆணவமாகவும் தன்னம்பிக்கையுடனும் சிரித்தார்.