Published:Updated:

சிறுகதை: ஒரு பின் மதிய பேருந்துப் பயணம்

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

அரி சங்கர்

திய வெயிலுடன் இன்ஜின் சூட்டின் வெப்பமும் ஒன்றாகச் சேர்ந்து பஸ் டிரைவரை இருக்கையில் அமரவிடாமல் செய்துகொண்டிருந்தது.அவன் தன் சட்டையின் முதல் இரண்டு பட்டன்களைக் கழற்றிவிட்டு சட்டையின் காலரை மேலே இழுத்துவிட்டுக் கொண்டான். குனிந்து தன் மார்பின் மீதும் தோள்களின் மீதும் வேகமாக ஊதிவிட்டான். வியர்வை வழிந்தோடிய அவ்விடத்தில் கொஞ்சம் குளிர்ச்சியாக இருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நிலையத்திலிருந்து புறப்பட்டிருந்த பேருந்து அதற்கு அடுத்த நிறுத்தமான அந்தோணியார் கோயில் பக்கவாட்டில் கடலூர் சாலையில் நின்று கொண்டிருந்தது.

சிறுகதை
சிறுகதை

அங்கிருந்து புறப்பட இன்னும் நான்கு நிமிடங்கள் இருந்தது. பேருந்தில் இருந்த சொற்பமானவர்கள் டிரைவரையும், இன்ஜினுக்கு மேல் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தையும் சலிப்புடன் மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்தனர். சிலர் வெளியே கேட்கும்படி முணுமுணுத்தனர். கண்டக்டர், டிரைவரின் எதிரில் இருந்த இருக்கையில் உட்கார்ந்துகொண்டு கணக்கு பார்த்துக் கொண்டிருக்க, செக்கர் பின்படிக்கட்டின் அருகே நின்றுகொண்டு, முதலியார் பேட்டை, தேங்காத்திட்டு, முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம், நோனாங்குப்பம், தவளக்குப்பம், கன்னிகோயில், பாகூர் எனத் திரும்பத் திரும்பக் கத்திக் கொண்டிருந்தான். அவன் குரலுக்கு மதிப்புகொடுத்து யாரும் பேருந்தில் ஏறியதாகத் தெரியவில்லை. இருந்தாலும் அவன் விடாப்பிடியாகக் கத்திக் கொண்டிருந்தான். காலியான மீன் கூடையுடன் அமர்ந்திருந்த பெண்களில் ஒருத்தி,“இன்னா வீராம்பட்ன பஸ்ஸ காணோம்” என்றாள் அவனைப் பார்த்து. அவன் திரும்பி அவளை முறைத்துவிட்டு பதிலேதும் சொல்லாமல் மீண்டும் தன் ஊர் வரிசையைக் காற்றில் அடுக்கினான்.

பேருந்தில் அனைவரும் அமைதியாக வர, அந்த ஜோடி மட்டும் சிரித்துப் பேசிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.

வெக்கை அதிகமாக இருந்ததால் அப்பேருந்தில் இருந்த அனைவருமே ஒருவித சலிப்புடன் காணப்பட்டனர். இன்னும் ஒரு நிமிடத்தில் பேருந்து புறப்பட்டுவிடும் என்ற நிலையில், பின்னால் ஒரு டெம்போ (புதுச்சேரியின் ஷேர் ஆட்டோ) வந்து நின்றது. அதிலிருந்து இருவர் இறங்கினர். ஒருவன் லுங்கி கட்டிக்கொண்டு, கலைந்த தலையுடன் ஒரு அரைக்கை காக்கிச்சட்டை அணிந்தி ருந்தான். கையில் கட்டுப் போட்டிருந்தான். அவனுடன் அவன் மனைவி கையில் ஒரு கட்டைப்பை வைத்துக்கொண்டு இருந்தாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேருந்து
பேருந்து

பேருந்து நின்றிருப்பதைக் கண்டதும் இருவரும் பேருந்தை நோக்கி வந்தனர். அவனால் வேகமாக வர முடியவில்லை. அவன் உடல் தளர்ந்திருந்தது. பேருந்தை நிறுத்திவைக்கலாம் என்று அவள் வேகமாக வந்து பின்பக்கப் படிக்கட்டின் அருகில் நின்றுகொண்டு கணவனைப் பார்த்தாள். அவன் இப்போது பொறுமையாக வந்து கொண்டிருந்தான். செக்கர் அவளிடம்,

“எங்க போற…”

“பாகூரு…”

“ஏறு… ஏறு…”

“இரேன்… அவரு வராருல்ல…”

“ஏய்… சீக்கிரம் வாப்பா… மணி ஆவுதுல்ல…”

அவன் அதைக் கண்டுகொள்ளாமல் பொறுமையாக வந்தான். இவ்வளவு நேரம் நின்றிருந்த பேருந்தை மேலும் தாமதப்படுத்தியதால் பேருந்தில் இருந்தவர்கள் இவர்களை வெறுப்புடன் பார்த்தனர். இரண்டு தலைகள் ஜன்னல் வழியாக எட்டி அவன் எங்கு வருகிறான் என்று பார்த்தது. அவர்கள் ஏறியதும் பேருந்து புறப்பட்டு மெதுவாக நகர்ந்தது. அவர்கள், காலியாக இருந்த இரண்டு பேர் மட்டும் அமரும் ஒரு இருக்கையில் நெருக்கமாக அமர்ந்துகொண்டனர். பேருந்தில் இருந்த அனைவரின் பார்வையும் அவர்கள் மேலேயே இருந்தது. டிரைவரும் ஒருமுறை தன் தலையின் அருகில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடியின் வழியாக அவர்களைப் பார்த்துக்கொண்டான்.

பேருந்து
பேருந்து

பேருந்து மிகவும் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. செக்கர் பின்பக்கப் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தான். கண்டக்டர் எழுந்து டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தான். அவன் அனைவருக்கும் டிக்கெட் கொடுத்து முடித்திருந்த போது பேருந்து அதற்கு அடுத்த நிறுத்தமான முதலியார்பேட்டையில் நின்றது. பேருந்திலிருந்து யாரும் இறங்கவில்லை. ஒரே ஒரு பெண் மட்டும் ஏறினாள். நேராக கண்டக்டரிடம் சென்று டிக்கெட் வாங்கிக் கொண்டு அவன் அருகில் இருந்த காலியான இருக்கையிலேயே அமர்ந்துகொண்டாள். பேருந்து முன்பைவிட வேகமெடுத்தது. பேருந்தில் அனைவரும் அமைதியாக வர, அந்த ஜோடி மட்டும் சிரித்துப் பேசிக்கொண்டு வந்துகொண்டிருந்தது. அவள் அடிக்கடி அவனுக்கு அடிபட்டிருந்த கையில் செல்லமாகத் தட்டினாள். அவனும் வலிப்பதுபோல பாவனை செய்து கொண்டிருந்தான். நொடிக்கொருமுறை ஏதாவது ஒரு ஜோடிக் கண்கள் அவர்கள் மீது மேய்ந்து சென்று கொண்டிருந்தன.

அதற்கு அடுத்த நிறுத்ததில் யாரும் இறங்கவோ, ஏறவோ இல்லாததால் பேருந்து தொடர்ந்து சீரான வேகத்தில் செல்லத் தொடங்கியது. முருங்கம்பாக்கத்தை நெருங்கும்போது பேருந்திலிருந்து வீலென்று ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. அனைவரும் குழந்தை அழும் சத்தம் எங்கு கேட்கிறது எனத் தங்கள் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தனர். தங்கள் அருகில் இல்லாததைக் கண்டு எங்கே எனத் தேடத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் அனைவரின் கண்களும் அந்த ஜோடியின் மீது விழ, அவர்கள் சத்தம் எங்கிருந்து வருகிறது எனப் பார்த்தனர். அவர்கள் சீட்டுக்குக் கீழே அவர்களுடையது போலவே ஒரு கட்டைப்பை இருக்க, அதில் துணியால் சுற்றப்பட்டு ஒரு குழந்தை அழுதுகொண்டிருந்தது. அந்தப் பையில் ஒரு பால் புட்டியும் அதில் கொஞ்சம் பாலும் இருந்தன.

“யார் குழந்த அது…” என்று நாலாபக்கத்திலிருந்தும் கேள்விகள் வந்தவண்ணம் இருந்தன. அனைவரின் பார்வையும் அந்த ஜோடியின் மீதே பதிந்திருந்தது. கண்டக்டரும் செக்கரும் மாற்றி மாற்றிக் கேள்விகள் கேட்டபடி இருந்தனர். அவர்கள் இருவரும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றே கூறிக்கொண்டிருந்தனர். அவள் அழ ஆரம்பித்தாள்.

“ஏய்… சும்மா நடிக்காத… எங்கிருந்து இதத் தூக்கினு வந்தீங்க…” என்று செக்கர் அவர்களை அடிக்கக் கை ஓங்கினான். குழந்தை அழுதபடி இருக்க பஸ்ஸுக்குள் பெரிய கலவரமே வெடிக்க ஆரம்பித்தது. டிரைவருக்கு அடுத்த நிறுத்ததில் நிறுத்தவா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. கண்டக்டர், டிரைவரைப் பார்த்து,

“யோவ்… தவளக்குப்பம் ஸ்டேஷனுக்கு வண்டிய வுடுய்யா…” என்றான்.

சிறுகதை: ஒரு பின் மதிய பேருந்துப் பயணம்

அதற்குள் பின்னாலிருந்து ஒருவர், “ஏம்பா… நான் நோனாங்குப்பத்துல எறங்கணும்… தவளக்குப் பத்துக்கு வுட்டா இன்னாப்பா…” என்று கத்தினார்.

“யாரும் எறங்க முடியாது… ஸ்டேஷனுக்கு வந்து பஞ்சாயத்த முடிச்சிட்டுப் போங்க…” என்றான் கண்டக்டர்.

அனைவரும் அந்த ஜோடியையே முறைத்தபடியும் திட்டியபடியும் இருக்கைகளில் அமர்ந்தனர். அவளும் அழுதபடியே தன் இருக்கையில் அமர்ந்தாள். அவள் கையில் குழந்தை இருந்தது. அதை எப்போது தான் எடுத்தோம் என்பதே அவளுக்கு நினைவில் இல்லை.

“இதுங்கதான் எங்கனாருந்து தூக்கினு வந்திருக்கும்…” என்று அவர்கள் காதுபடவே பேசினார். அவள் தொடர்ந்து அழுதபடியே இருந்தாள். குழந்தை தன் அழுகையை நிறுத்திவிட்டு அவள் அழுகையைப் பார்த்துக் கொண்டிருந்தது. பேருந்து தவளக்குப்பம் காவல் நிலையத்தை நோக்கி வேகமாகச் சென்றது.

மெல்ல தன் கணவனின் காலைக் கிள்ளினாள். அவன் குனிந்து அவளிடம் “இன்னா” என்று கேட்டான்.

பேருந்து காவல் நிலைய வாசலில் நின்றுகொண்டிருக்க, பேருந்தில் இருந்த அனைவரும் உள்ளே வரிசையாக நின்றுகொண்டிருந்தனர். குழந்தையை அவளே தன் நெஞ்சோடு அணைத்தவாறு வைத்திருந்தாள். அவள் கணவன் கையில் இரண்டு கட்டைப்பையையும் பால் புட்டியையும் வைத்துக் கொண்டு நடுங்கியபடி நின்றுகொண்டிருந்தான். மற்றவர்கள் அனைவரும் ஒருபக்கமாக நின்றுகொண்டு அந்த ஜோடியையும் போலீஸ்காரர்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

டிரைவரும் கண்டக்டரும் செக்கரும் நடந்ததை நடந்தபடி ஏட்டிடம் சொல்லிக் கொண்டி ருந்தார்கள். அவர் அனைத்து விவரங்களையும் கேட்டு விட்டு அவர்களை ரைட்டரிடம் அனுப்பினார். அவர்கள் மீண்டும் நடந்ததை நடந்தபடி ரைட்டரிடமும் சொல்ல ஆரம்பித்தனர். அதற்குள் எஸ்.ஐ வர, இவ்வளவு கும்பலைப் பார்த்து என்னவென்று விசாரித்துவிட்டு அந்த ஜோடியை ஏளனமாக ஒரு பார்வை பார்த்தார். பிறகு ஏட்டிடம் திரும்பி,“இவங்க எல்லாரு கிட்டயும் டீட்டெயில்ஸ் வாங்கிக்கங்க… இதோ வரேன்…” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். அவள் பின்னாலேயே வந்த ஒரு கான்ஸ்டபிள் தன் கையில் இருந்த லட்டியால் அவள் பின்பக்கத்தில் ஓங்கி அடித்துவிட்டு அவளைப் பார்த்து முழுப்பல்லையும் காட்டி இளித்துவிட்டு நகர்ந்தான். அவள் கையில் குழந்தை இருந்ததால் வலித்த இடத்தில் தேய்த்துவிட முடியாமல் தவித்தாள்.

சிறுகதை: ஒரு பின் மதிய பேருந்துப் பயணம்

அதற்குள் கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தை ஒன்று கிடைத்திருப்பதைப் பற்றி அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் தகவல் அனுப்பப்பட்டது.

ஏட்டு, இன்னொரு கான்ஸ்டபிளைத் துணைக்கு அழைத்துக்கொண்டு அவர்கள் ஒவ்வொருவரிடமும் தகவல்களைக் கேட்டு எழுத ஆரம்பித்தார். மீண்டும் குழந்தை அழ ஆரம்பிக்க அனைத்துக் கண்களும் அவர்களை நோக்கித் திரும்பின. இருவரும் நடுங்கிய படி பார்க்க, ஏட்டு அவர்களிடம்,

“ஏய்… அப்படி உக்காந்து அதுக்கு அந்தப் பாலைக் குடு…” என்று எரிந்துவிழுந்தார். அவள் பதறியபடியே வேகமாகச் சுவரோரம் சாய்ந்து அமர்ந்தபடி பாட்டில் பாலை ஒருமுறை மோந்து பார்த்துவிட்டு குழந்தைக்குக் கொடுக்க ஆரம்பித்தாள். அது அவளைப் பார்த்தபடியே பாலைக் குடிக்க ஆரம்பித்தது.

இவ்வளவு நேரப் பதற்றத்திற்குப் பிறகு அவள் இப்போதுதான் அக்குழந்தை யின் சூட்டை உணர ஆரம்பித்தாள். அவளுக்கு உடல் முழுவதும் ஏதோ பரவசம் ஏற்படுவது போல் இருந்தது. மெல்ல தன் கணவனின் காலைக் கிள்ளினாள். அவன் குனிந்து அவளிடம் “இன்னா” என்று கேட்டான்.

அவள் மிக மெதுவாக யாருக்கும் கேட்காதபடி அவனிடம், “பேசாம இந்தக் கொழந்த நம்புள்துனு சொல்லி எடுத்துனு போயி டலாமா… நமக்கின்னா கொழந்தையா பொறக்கப் போவுது…” என்றாள்.

அவன் அப்படிச் சொன்னதும் ஸ்டேஷனில் இருந்த அனைவரும் மெல்லச் சிரித்தனர். எஸ்.ஐ-யும் நக்கலாகச் சிரித்தார்.

அவன் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான். “வாய மூடினு சும்மா இருடி… எல்லாரும் நம்ப மேல பழிபோடப் பாக்கறானுங்க… இதுல நீ வேற…” என்று அவள்மீது எரிந்துவிழுந்துவிட்டு மீண்டும் அடக்கமாக எழுந்து நின்றுகொண்டான். கை வலித்ததால் இரண்டு பையையும் அவள்மீது சாய்த்தபடி வைத்துவிட்டு சுவரில் சாய்ந்தபடி நின்றுகொண்டான். இனி என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ என்று அவன் மனம் பதறத்தொடங்கியது. குனிந்து கீழே பார்த்தான். அவள், குழந்தை பால் குடிப்பதை ரசித்துக் கொண்டிருந்தாள்.

அது பால் குடித்துக்கொண்டே தூங்கிவிட்டிருந்தது. அவள் அதன் தலையை ஒருமுறை கோதிவிட்டாள். அது ஒருநொடி மெல்லச் சிரித்து அடங்கியது.

பஸ் முதலாளியிடமிருந்து நேராக எஸ்.ஐ-க்கு போன் வந்ததால் பஸ்ஸும் பணியாளர்களும், காக்கவைக் கப்பட்டிருந்த சிலரில் இவர்கள் இருக்காது என்று தோன்றியவர்களும் அனுப்பிவைக்கப்பட்டனர். பின்னர் நடந்த விசாரணைக்குப் பிறகு மீதம் இருந்தவர்களும் அனுப்பிவைக்கப் பட்டனர்.

இப்போது கணவன் மனைவி இருவர் மட்டுமே அடுத்தது என்ன என்ற கேள்வியுடன் ஒவ்வொரு முகமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கணவன் மனைவி
கணவன் மனைவி

எஸ்.ஐ உள்ளே இருந்து வந்தார். அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண் கான்ஸ்டபிளிடம் கண்ணைக் காட்ட அவள் வேகமாகச் சென்று குழந்தையை வாங்கிக் கொண்டாள். அதற்குள் மாயமாக எஸ்.ஐ-யின் கையில் ஒரு லட்டி வந்திருந்தது. லட்டியை மின்னல் வேகத்தில் இருவர் மீதும் சரமாரியாகச் சுழற்றினார். அவர்கள் இருவரின் அலறல் சத்தம் மட்டுமே சில நிமிடங்களுக்கு அவ்விடத்தை அச்ச மூட்டுவதாக மாற்றியிருந்தது.

கைவலித்ததால் எஸ்.ஐ சிறிது ஓய்வெடுத்தார். ஆனால் அவர்கள் அலறிக்கொண்டுதான் இருந்தனர். இருவரும் மாற்றி மாற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றே சொல்லிக்கொண்டிருந்தனர். எஸ்.ஐ-க்கு அவர்கள் பொய் சொல்வதுபோல் தெரியவில்லை. லட்டியை டேபிள்மீது வைத்துவிட்டு நன்றாகச் சாய்ந்து இருக்கையில் அமர்ந்தபடி இருவரையும் அருகில் அழைத்தார்.

இருவரும் நடுங்கியபடியே அவர்கள் அருகில் வந்து, ஆனால் அவர் கைக்கு எட்டாதவாறு நின்று கொண்டனர்.

அவர் தன் பங்குக்கு விசாரணையைத் தொடங்கினார்.

“உன் பேரு இன்னா?”

“வாசு… சார்.”

திரும்பி அவளைப் பார்த்து, “உன் பேரு இன்னா?” என்றார்.

“தென்றல்… சார்.”

மீண்டும் அவனிடம், “இது யாரு ஒனக்கு…”

“என் பொண்டாட்டி சார்.”

அவன் அப்படிச் சொன்னதும் ஸ்டேஷனில் இருந்த அனைவரும் மெல்லச் சிரித்தனர். எஸ்.ஐ-யும் நக்கலாகச் சிரித்தார். பிறகு விசாரணையைத் தொடர்ந்தார்.

“இன்னா பண்ற…”

“பாகூர்ல ஆட்டோ ஓட்டறன் சார்.”

சிறுகதை: ஒரு பின் மதிய பேருந்துப் பயணம்

“கையில் இன்னா அடி…”

அவன் திரும்பி தன் மனைவியைப் பார்த்தான். அவள் இருவரையும் பார்த்து முழித்தாள்.

“அங்க இன்னா பாக்கற…” என்று கையை ஓங்கினார்.

“இல்ல சார்… இவதான் தடி எடுத்து அடிச்சிட்டா… சார்…”

“எதுக்கு அவன அடிச்ச…”

“தெனிக்கும் குடிச்சிட்டு குடிச்சிட்டு வரான் சார்.”

“சரி எங்க போயிட்டு வரீங்க…”

அவளே தொடர்ந்தாள், “பெரிய ஆஸ்பத்திரிக்குப் போயி கட்டு மாத்திகினு அப்படியே சினிமாவுக்குப் போயிட்டு வந்தோம் சார்…”

“டிக்கட் இருக்கா…”

அவள் தன் ரவிக்கைக்குள் கையை விட்டு ஒரு மணிபர்ஸை எடுத்து அதிலிருந்து ஒரு வெள்ளைக்காகிதத்துண்டை எடுத்து நீட்டினாள். அவர் அதை அலட்சியமாக வங்கிப்பார்த்தார். அதில் பதினொரு மணிக்கான காட்சிக்கு இரண்டு டிக்கட்டுகள் அச்சடிக்கப் பட்டிருந்தது. இதற்கு மேல் இவர்களை விசாரிப்பது வேலைக்கு ஆகாது என்று அவருக்கு தோன்றினாலும் இவர்களை அனுப்பும் எண்ணம் அவருக்கு வரவில்லை. ஒருவேளை யாரும் சிக்கவில்லை என்றால், இவர்களை வைத்துதான் ஒப்பேற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

சிறுகதை: ஒரு பின் மதிய பேருந்துப் பயணம்

“போய் அப்படி உக்காருங்க…” என்று சொல்லிவிட்டு, தன் செல்போனை எடுத்து எதையோ நோண்டிக் கொண்டிருந்தார். அதற்காகவே காத்திருந்த பெண் கான்ஸ்டபிள் குழந்தையை அவளிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தாள். அவள் கைக்குக் குழந்தை வந்ததும் அழத்தொடங்கியது. அவள் பாட்டிலை எடுத்தாள். அது காலியாக இருக்க, எஸ்.ஐ-யைப் பார்த்தாள். அவர் திரும்பி, பெண் கான்ஸ்டபிளைப் பார்க்க, கான்ஸ்டபிள் முறைத்துக் கொண்டே வந்து அவளிடமிருந்த பால் பாட்டிலை வெடுக்கென்று பிடிங்கிக்கொண்டு வெளியே போகத் தொடங்கினாள். அப்போது அவள்,“பாட்டில நல்லா சுடுதண்ணி போட்டுக் கழுவிட்டு வாங்கினு வாங்க… ஆங்… அப்புறம் நல்லா ஆத்தி வாங்கினு வாங்க…” என்றாள்.

ஸ்டேஷனில் இருந்த அனைவரும் அவர்களை முறைத்தனர். அந்தப் பெண் கான்ஸ்டபிளும் முறைத்துவிட்டுச் சென்றாள். ‘இவள் தனக்கு மீண்டும் வேட்டு வைக்காமல் விடமாட்டாள் போல’ என்று அவன் நினைத்துக் கொண்டான். அவள் மீண்டும் அவனிடம்,

“யோவ்… நாமளே இத வெச்சிக்கலாமா…”

“வாய மூடிக்கினு கம்முனு இருக்க மாட்ட..?”

அவள் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் தன் கையில் இருந்த குழந்தையைக் கொஞ்ச ஆரம்பித்தாள்.

அதே சமயம் ஸ்டேஷனுக்கு போன் வர, ஏட்டு எடுத்துப் பேச ஆரம்பித்தார். நீண்ட நேரம் பேசியவர், போனை வைத்துவிட்டு இவர்களை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு எஸ்.ஐ-யிடம் சென்று ஏதோ ரகசியமாகச் சொன்னார். எஸ்.ஐ ஏதோ யோசித்துவிட்டு சரி என்று தலையாட்ட, நேராக இவர்களிடம் வந்து நின்றுகொண்டு, இன்னொரு பெண் கான்ஸ்டபிளை அழைத்தார். அவள் வந்து நின்றதும் இவர்களை நோக்கி,

“ந்தா… குழந்தையை இவங்ககிட்ட குடுத்துட்டு, கையெழுத்து போட்டுட்டுக் கிளம்புங்க…”

சிறுகதை: ஒரு பின் மதிய பேருந்துப் பயணம்

ஏட்டு அவ்வாறு சொன்னதும் அவளுக்கு திக்கென்றது. அவன் சந்தோஷப்பட்டு வேகமாக எழுந்தான். அவள் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. மெல்ல எழுந்தாள். கண்களில் முட்டிக்கொண்டு வந்தது. அதே நேரம் சரியாக, பால் வாங்கப்போன கான்ஸ்டபிள் வர, இவள் வேகமாக,

“பால் கொடுத்துட்டுப் போறோம் சார்…” என்றாள்.

அவர் சரியென்று தலையசைக்க, அவள் கணவன் அவளை எரிச்சலுடன் பார்த்தான். அவள் மீண்டும் உட்கார்ந்து பால் புட்டியை அதன் வாயில் வைத்தாள். அதற்குள் அவள் கண்கள் குளமாகிவிட்டிருந்தது. பொறுமையாகப் பால் கொடுத்துவிட்டு மெல்ல குழந்தையை கான்ஸ்ட பிளிடம் கொடுத்துவிட்டு, கையெழுத்து போட்டுவிட்டு, திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தாள். அவள் கணவன் முன்னமே வெளியே சென்றுவிட்டிருந்தான்.

“அடங்க… அதுங்க ரெண்டயும் வெச்சி இன்னிக்கு டைம் பாஸ் பண்ணலாம்னு இருந்தேன்… போச்சா…”

குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. தூக்கத்தில் மீண்டும் ஒருமுறை சிரித்தது. அந்தக் கடைசிச் சிரிப்போடு தன் முகத்தைத் திருப்பிக்கொண்டு வேகமாக ஸ்டேஷனை விட்டு வெளியேறினாள்.

முதலில் எஸ்.ஐ-யுடன் வந்தபோது அவளை அடித்த கான்ஸ்டபிள் தன் வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான். அவர்கள் இருந்த இடம் காலியாக இருக்க, ஆச்சர்யத்துடன் திரும்பி ஏட்டிடம்,

“ஏட்டய்யா… எங்க அந்தக் கை ஒடஞ்சவனும் அவன் கூட இருந்ததும்?” என்றான்.

“அதுவா… குழந்தைய அதுங்க தூக்கல… அது ஒரு யுனிவர்சிட்டி பொண்ணுது… எங்கிருந்தோ படிக்க வந்துட்டு புள்ள பெத்துட்டு பயந்து போயி பையில வெச்சி பஸ்ஸுல போட்டுருச்சி… அப்புறம் மனசு கேக்காம அதுவே கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்கு… கன்ட்ரோல் ரூம்லேருந்து மெசேஜ் போயி இங்க வந்துனு இருக்காங்க…”

சிறுகதை: ஒரு பின் மதிய பேருந்துப் பயணம்

“அடங்க… அதுங்க ரெண்டயும் வெச்சி இன்னிக்கு டைம் பாஸ் பண்ணலாம்னு இருந்தேன்… போச்சா…”

“சேதி தெரியுமா… அதுங்க ரெண்டும் புருஷன் பொண்டாட்டியாம்…”

“இதோ பார்ரா…” என்று நக்கலாகச் சிரித்துவிட்டுத் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினான்.

வாசுவும், தென்றலும் தவளக்குப்பம் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தனர். அவளுக்கு அந்தக் குழந்தை நினைப்பாகவே இருந்தது. அதன் முகமும், அதன் சிரிப்பும் அவள் கண்களு க்குள்ளேயே இருந்தது. அதன் சிரிப்பு நினைவுக்கு வந்ததும் அவள் ஒருமுறை தன்னை மறந்து சிரித்துக்கொண்டாள். தன் உள்ளங்கையை மோந்துபார்த்தாள். அதில் அந்தக் குழந்தையின் வாசனை இன்னும் இருந்தது.