சினிமா
Published:Updated:

வெள்ளையம்மா - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

- கவிப்பித்தன்

குளத்தங்கரையில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. விரித்துப் போட்ட ஈர வேட்டிகளைப்போல சுற்றிலும் பனி திரையிட்டிருந்தது.

குளக்கரைக் கோயிலின் முன்பிருந்த கல்லின் மீது கிழக்கைப் பார்த்து உட்கார வைக்கப்பட்டிருந்த வெள்ளையம்மாவை இரண்டு வலுவான ஆண்கள் அழுத்திப் பிடித்திருந்தனர். “ஊ…. வ்… ஊ… வ்…” என ஊளையிட்டுக்கொண்டிருந்த வெள்ளையம்மாவின் தலையில் மூன்று குடம் தண்ணீரைத் தபதபவெனக் கவிழ்த்தார் வைத்தியர் தேசிகாமணி.

பனிக்கட்டியைப்போலச் சில்லிட்ட தண்ணீரினால் மூச்சுத்திணறியது வெள்ளையம்மாவுக்கு. உடலைத் திமிறி எழ முயன்றாள். அவளது புஜங்களிலும் தலையிலும் அழுத்திப் பிடித்திருந்த கைகள் மேலும் இறுகின. அப்படியும் உடலை முறுக்கிக் கீழே சாய்ந்து, கழுத்து அறுபட்ட ஆட்டைப்போல கால்களை உதைத்தாள்.

அவளை முழுமையாய் நனைத்துவிட்டுக் கீழே தேங்கி இருந்த அதே தண்ணீரில், விழுந்து புரண்டவளின் ஊதா நிறச் சேலையும் ரவிக்கையும் களிமண் நிறத்திற்கு மாறின. புடவை விலகலில், உரித்த பனங்கிழங்கு நிறக் கால்கள் பளிச்சிட்டன. முந்தானை விலகலில் அவளின் இளமை திமிறிக்கொண்டு தெரிய… பார்த்த கண்கள் தடுமாறின.

விரால் மீனைப்போல தரையில் துள்ளியவளைத் தூக்கி, மீண்டும் அதே கல்லின் மீது உட்கார வைத்து அழுத்திப் பிடித்தனர். அதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அவளது கணவன் கண்ணப்பா மேற்குப் பக்கமாகத் தலையைத் திருப்பிக் குளத்தைப் பார்த்தான். ஒரு பெரிய அலையும், அதனைத் தொடர்ந்து சில சிறிய அலைகளுமாகக் குளமும் அவனைப்போலவே தத்தளித்துக் கொண்டிருந்தது.

“டே கோபாலு… நா கண்ணக் காட்னதும் சர்ரக்குனு ஒரே இசு இஸ்துடணும்” மீண்டும் சவரத்தொழிலாளியிடம் சொன்ன வைத்தியர், தலையை உயர்த்திக் கீழ் வானத்தைப் பார்த்தார். கைகளைக் கூப்பி மசமசத்த சூரியனைக் கும்பிட்டார்.

குளத்துத் தண்ணீரில் நின்றிருந்தவர்களைப் பார்த்து அவர் தலையை அசைக்க… அவர்கள் மீண்டும் இரண்டு குடம் தண்ணீரை மொண்டு வந்து வௌ்ளையம்மாவின் தலையில் கவிழ்த்தனர். மீண்டும் உடலை முறுக்கி ஊளையிடத் தொடங்கினாள் அவள்.

ஒரு துண்டுக் கற்பூரத்தை எடுத்து வெள்ளையம்மாவின் எதிரில் ஒரு வெற்றிலையின் மீது வைத்துக் கொளுத்தினார் வைத்தியர். மேலெழும்பிய கரும்புகையின் மீது உள்ளங்கைகளை விரித்து அதை ஏந்தி, தன் இமைகளின் மீது ஒற்றி வணங்கினார்.

பக்கத்தில் தாம்பாளத் தட்டில் விபூதியோடு வைத்திருந்த ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கற்பூரத் தீயில் காட்டிவிட்டு உள்ளங்கைகளில் உருட்டியபடியே கோபாலைப் பார்த்துத் தலை அசைத்தார்.

வெள்ளையம்மா - சிறுகதை

ஏற்கெனவே பல முறை தீட்டித் தீட்டிக் கூர்மையாக வைத்திருந்த சவரக்கத்தியை விரித்துக்கொண்டான் கோபால். வெள்ளையம்மாவைப் பிடித்திருந்தவர்களின் பிடிகள் இரும்பாய் இறுகின. குளத்தங்கரையிலும், ஆலமரக் கிளைகளிலும், கோயிலின் முன்புறமும் இருந்தவர்களின் கண்கள் பரபரத்தன.

கோயிலைப் பார்த்துக் கும்பிட்ட வைத்தியர், கோபாலைப் பார்த்துக் கண்களைக் காட்டினார். வெள்ளையம்மாவின் தலையின் இரு புறமும்… கூந்தல் முடிகள் அலை அலையாய்ப் படர்ந்திருக்க… வெள்ளைக் கோடாய்ப் பளிச்சிட்ட உச்சி வகிட்டில் கத்தியை வைத்து அழுத்தி ஒரு இழு இழுத்தான் கோபால்.

வெள்ளரிக்காய் பிளப்பதைப் போல நடுவகிடு பிளந்துகொள்ள… சலசலவெனக் கொப்புளித்தது ரத்தம். திகீர் என்ற வலி மூளைக்கு உறைக்க… உடலைத் திமிறி “அய்யோயோ…. அய்யோயோ…. எம்மா… அய்யோயோ அய்யோயோ…” என அலறினாள் வெள்ளையம்மா. ஒரு மலைப்பாம்பைப்போல அசுரத்தனமாய் உடலை முறுக்கினாள். பிடித்திருந்தவர்கள் தடுமாற… மேலும் இரண்டு பேர் அவர்களோடு சேர்ந்து அவளை அழுத்திப் பிடித்தனர்.

வைத்தியர் தன் கையிலிருந்த எலுமிச்சம் பழத்தை கோபாலிடம் நீட்ட, அதே சவரக்கத்தியால் அதை இரண்டாகப் பிளந்து தந்தான். வைத்தியர் அதைக் கசகசவெனப் பிழிந்து அதன் சாற்றை ரத்தம் கொப்புளித்த வெள்ளையம்மாவின் உச்சந்தலையில் விட்டார். ரத்தக்காயத்தில் எலுமிச்சைச் சாறு பட்டதும் நெருப்பைப்போல திகுதிகுவென எரிய… மேலும் மேலும் அலறியபடி திமிறினாள்.

அப்படியே மூன்று நிமிடங்கள் அவளை அலறவிட்ட வைத்தியர், தாம்பாளத் தட்டிலிருந்த விபூதியைக் கைநிறைய அள்ளி ரத்தமும் எலுமிச்சைச்சாறும் கசகசவென வழியும் வகிட்டில் வைத்து அப்பினார்.

இதையெல்லாம் மனசு கொதிக்கக் கொதிக்கப் பார்த்துக்கொண்டிருந்த கண்ணப்பா மூர்ச்சையாகி தடாலெனக் கீழே சரிந்தான்.

வைத்தியர் கண்களைக் காட்ட, வெள்ளையம்மாவைப் பிடித்திருந்தவர்கள் பிடிகளை விலக்கினர். துள்ளி எழுந்த வெள்ளையம்மா ரயில் இன்ஜினைப்போல நீளமாக ஊளையிட்டபடி குளத்தங்கரையில் இப்படியும் அப்படியுமாய் ஓடினாள். குளத்தங்கரையிலிருந்து கீழே குதித்து மேலத் தெருவில் இறங்கி கிழக்கைப் பார்த்து ஓடத் தொடங்கினாள். அவளது அலறல் சத்தம் கிழக்கிலிருந்து தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது.

கண்ணப்பா வெள்ளையம்மாவைக் கைப்பிடித்த புதிதில் தரையில் கால் படாமல் மிதந்தான். கண்ணப்பாவைவிட அவள் ஒரு விரற்கடை அளவு உயரம். பெயருக்கேற்ப தூக்கலான நிறம். காட்டுக்குதிரையைப் போன்ற நடை. திருமணமாகி அவள் அந்த ஊருக்கு வந்தபோது எத்தனையோ பேரின் ஏக்கப் பெருமூச்சுகளைத் தின்றாள். அப்போதெல்லாம் ஒரு ஜில்லாவுக்கே சொந்தக்காரனைப்போல, ஒரு வைரச் சுரங்கத்தின் அதிபதியைப் போல நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நடந்தான் கண்ணப்பா.

அவர்களின் கால் காணி நிலத்தில் விளைகிற கேழ்வரகும் வேர்க்கடலையும் ஜீவனத்துக்குப் போதாமல், அவன் கூலிக்கும் ஏர் ஓட்ட, அவளும் நடவு நட, களை எடுக்க எனக் கூலி வேலைகளுக்குப் போனாள்.

கடந்த சித்திரை வரை எல்லோரையும் போலவே அவளும் சோறாக்கினாள். குழம்பு வைத்தாள். பச்சைப் புல் செதுக்கி வந்து மாடுகளுக்குப் பிரியத்தோடு போட்டாள். மாமியார் சாலம்மாவுக்கு வேளா வேளைக்குத் தட்டில் சாப்பாடு போட்டு வைத்தாள். ஊர்க்காரிகளுடன் கதை பேசினாள். கண்ணப்பாவை சதா சர்வ நேரமும் கிறக்கத்தோடு பார்த்தாள். ஊர் அடங்கிய பிறகு சாரைப் பாம்பைப்போல அவனுடன் பின்னிப் பிணைந்து சரசமாடினாள்.

அவர்கள் ஜோடியாகத் தெருவில் நடக்கும்போதெல்லாம், அவர்களை கிழக்கைப் பார்த்து நிற்க வைத்து திருஷ்டி சுற்றிப் போட்டாள் சாலம்மா.

அவள் நினைத்ததைப் போலவே யார் கண்கள் பட்டனவோ… திருமணமாகி எட்டு ஆண்டுகளைக் கடந்தும் அவர்களுக்குக் குழந்தை வரம் கிடைக்கவே இல்லை.

வெள்ளையம்மாவும் வேண்டாத தெய்வமில்லை. சுற்றாத கோயிலில்லை. அவர்கள் வம்சத்தில் குழந்தை பிறக்காமல் யாருமே இல்லை என்பதால் சீக்கிரத்தில் குழந்தை பிறக்கும் என்று திடமான நம்பிக்கையோடுதான் இருந்தான் கண்ணப்பாவும்.

ஆனால் ஒன்பதாவது வருடத்தின் ஒரு கோடை நாளில், தெருத்திண்ணையில் உட்கார்ந்து தானாகச் சிரிக்கத் தொடங்கினாள் வெள்ளையம்மா. எதையோ நினைத்துக்கொண்டு சிரிக்கிறாள் என்றுதான் எல்லோருமே நினைத்தார்கள். ஆனால் அந்தச் சிரிப்பு மணிக்கணக்காய்த் தொடர்ந்தது. சிரிப்பென்றால் சாதாரணச் சிரிப்பல்ல. வெங்கலக்குடத்தில் பித்தளைச்சொம்பைப் போட்டு உருட்டுவதைப் போல கடகடவென்ற சிரிப்பு. இடைவிடாத ஓங்காரச் சிரிப்பு.

சிரித்தபடியே தெருவில் இறங்கி கிழக்கும் மேற்குமாய் ஓடவும் தொடங்கினாள். குழந்தை பிறக்காத ஏக்கத்தில் பைத்தியம் பிடித்திருக்கலாம் என இதே தேசிகாமணி வைத்தியர்தான் அப்போது சொன்னார். ஏதேதோ மருந்துகள் கொடுத்தார். வேப்பிலை அடித்து விபூதி பூசினார்.

தொடர்ந்து ஆறு மாதங்கள்… தொண்டை புண்ணாகி ரத்தம் கசியக் கசிய… சிரித்துக் கொண்டே இருந்தாள். சாப்பாடு போட்டு வைத்தாலும் அதை அப்படியே கீழே கொட்டிவிட்டுச் சிரிப்பாள். அவளாக எப்போதாவது களியோ, சோறோ அரைகுறையாக சாப்பிட்டால்தான் உண்டு.

வெள்ளையம்மா - சிறுகதை

கண்ணப்பாவும் சாலம்மாவும் ஒவ்வொரு நாளும் கிலிபிடித்துப்போய்க் கிடந்தனர். சாலம்மா குல தெய்வங்களை எல்லாம் மன்றாடி வேண்டினாள். கண்ணப்பா பல வைத்தியர்களிடம் போய் ஏராளமான மருந்துகளை வாங்கி வந்தான். ஆனால் அவற்றை எல்லாம் அவளைச் சாப்பிட வைக்க அவனால் முடியவேயில்லை.

ஆனாலும் என்ன அதிசயம் நடந்ததோ… அடுத்த ஆறாவது மாதம் ஒரு நாள் விடியலில், ஒரு பெருந்தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தவளைப் போல, திடீரென எழுந்து வீட்டைப் பெருக்கினாள். தலைக்குமேல் கூரையிலிருந்து தொங்கிய நூலாம்படைகளைத் தென்னந்துடைப்பத்தால் அடித்துச் சுத்தம் செய்தாள்.

வீட்டிலும் வயலிலும் வழக்கம்போல எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்தாள். கூலி வேலைகளுக்கும் போனாள். அவற்றைப் பார்க்கப் பார்க்க உச்சி குளிர்ந்துபோனது கண்ணப்பாவுக்கு. குல தெய்வங்களுக்கு நேர்ந்து கொண்ட நேர்த்திக் கடன்களை எல்லாம் கண்கள் கலங்கியபடி செய்தாள் சாலம்மா.

ஆனால் அவை எல்லாமே அடுத்த சில மாதங்கள்தான் நீடித்தன. மீண்டும் ஒரு அமாவாசை நாளின் அதிகாலையிலிருந்து பழையபடி சிரிக்கத் தொடங்கினாள். தெருவில் போவோரைத் திட்டுவதும், வீட்டுச்சாமான்களை எடுத்து விசிறியடிப்பதும், தெருவில் கத்திக்கொண்டு ஓடுவதுமாகத் தொடர்ந்தாள்.

ஒரு நாள் மாலையில் ராணுவ வீரனைப் போலக் கைகளை வீசி வீசி நடந்து இரண்டு மைல் தூரத்தில் இருக்கிற நெடுஞ்சாலைக்கே போய்விட்டாள். பதறியடித்து ஓடி நைசாகப் பேசிப் பேசி அங்கிருந்து அழைத்து வந்தான் கண்ணப்பா.

ஒரு மார்கழி மாதத்தின் காலையில் ஊசிக் குளிரில் ஊரே விறைத்துக் கிடந்தது. அந்த அதிகாலையில் புடவையோடு குளத்தில் இறங்கி ஆனந்தமாகக் குளிக்கத் தொடங்கினாள். கடகடவென்று எக்காளமிடும் சிரிப்பு வேறு. மழையில் நனைந்த முள்ளங்கியைப்போல மதமதப்பான உடல் தண்ணீரில் பளபளக்க… அதைப் பார்த்த பல கண்களில் போதைச் செவ்வறி படரத் தொடங்கியது. மணிக்கணக்காய் அவள் தண்ணீரில் மிதக்க… ஜன்னி வந்து செத்துப்போய்விடுவாளோ என பயந்தனர் ஊர்ப் பெண்கள்.

தகவல் தெரிந்து ஏர் ஓட்டுவதை நிறுத்திவிட்டு ஓடிய கண்ணப்பா அவளது முடியைப் பிடித்துத் தரதரவென மேலே இழுத்து வந்தான். ஆத்திரத்தில் பளார் பளார் என அறைந்தான். ஆனால் அவளுக்கு அவை எதுவுமே உறைக்கவில்லை.

அவனுக்குள் துக்கம் பீறிட்டது. ஈரம் சொட்டச் சொட்ட அவளை வீட்டுக்கு இழுத்து வந்தான். இனி அவளை வெளியில் நடமாட விடுவது ஆபத்து என அவன் மனம் அலறத் தொடங்கியது.

பரம்படிக்கும் சங்கிலியை அவிழ்த்து அவளது வலது காலில் மாட்டி அதை வீட்டின் கதவில் கட்டினான். கால்களை உதறிக்கொண்டு நீண்ட நேரம் நின்றபடியே கத்திய வெள்ளையம்மா பின்னர் கீழே உட்கார்ந்து சிரிக்கத் தொடங்கினாள்.

“நைனா, இப்டி இந்தப் பைத்தியத்த எத்தினி நாளிக்கிடா தலைல கட்டிக்கினு அய்வ? உட்டுத் தொலச்சிட்டு வேற ஒரு கெல்யாணம் பண்ணிக்கிடா…” என்றாள் சாலம்மா.

“மா… இன்னா பேசிக்கினு கீற நீ… பச்ச மண்ணு மாரி கீது… அதக் கை உட்டா அந்தப் பாவம் காலாகாலத்துக்கும் நம்பக் காலதான் சுத்தும்…”

“அதுக்குனு எவ்ளோ நாளிக்கிடா இப்டியே இருப்ப..? வள்ளிக் கொடி மாரி நம்ப கொடி வளங்க வாணாமா…? உன்னோட நம்ப வம்சமே அத்துப் பூட்ணமா…?” ஒப்பாரி வைத்து அழத் தொடங்கினாள் கிழவி.

“வேற வயி இல்லப்பா… ராத்திரில சங்கிலிய அவுத்து உட்ரு… எங்கனா கண்காணாத ஊருக்கு போயிட்டும்…” என்றனர் பங்காளிகள்.

அதை நினைத்துப் பார்க்கவே அவன் மனம் நடுங்கியது. ஒரு பைத்தியத்தை யாரை நம்பி வெளியில் விட்டுவிட முடியும்?

“ஏம்பா… நானு ஒரு வயி சொல்ட்டுமா…? தலைல சில்லுனு பச்சத் தண்ணிய ஊத்தி… நடு உச்சில சர்ரக்குனு கத்தியால அறுத்து… அந்தக் காயத்துல எலுமிச்சம் சாறு உட்டம்னா… சுர்ருனு வலி மூளைக்கு ஏறும்… அந்த அதிர்ச்சில பயித்தியம் தெளிஞ்சிப் பூடும்… அப்பறம் உங்கள புட்ச கேடு எல்லாமே உட்ரும்…” என்றார் வைத்தியர் சிகாமணி.

அதைக் கேட்டதுமே நெஞ்சு பதறிவிட்டது கண்ணப்பாவுக்கு.

“அது கொய்ந்தப்பா… அதுந் தலில கத்தில அறுக்கறதா…? அதுக்கெல்லாம் நானு ஒத்துக்க மாட்டங்…”

“இப்டிதாம்பா நம்ப நடுத்தெரு சுப்புகாங் மாடு ஒண்ணு செவுண்டு செவுண்டு பட்துகினு இருந்திச்சி… எவ்ளோ அசக்கி அசக்கிப் பாத்தாலும் எய்ந்துக்கல… நாலு பேரு புட்சி தூக்கி உட்டாலும் நிக்கல… நாந்தாங் நாலு பச்ச மொளகாய அரச்சி, அதுகூட எலுமிச்சம் பயம் சாற கலந்து மாட்டுக் காதுல உட்டங்… சாறு திகீர்னு காதுல எறங்கிச்சோ இல்லியோ… துள்ளி எய்ந்து நின்னுட்சி மாடு…”

“ஐயய்யோ… அந்தப் பாவத்த வேற பண்ணியா நீ… அவ இப்டியேகூட இருந்துட்டுப் போவட்டும்… தலைய கீய்க்கிற வேலையல்லாம் வாணா.” கறாராகச் சொல்லிவிட்டான் கண்ணப்பா.

“இதுகூட கரண்டு சாக் குடுக்கற மாதிரிதாம்பா... பெரியாஸ்பத்திரில ஒடம்ப அறுத்து வைத்தியம் பாக்கலியா? அப்டிதாம்பா…”

“வைதிகாரு சொல்ற மாரி ஒரு வாட்டி செஞ்சிதாங் பாக்கலாண்டா நைனா…” என நச்சரித்தாள் கிழவி. அதற்குப் பிறகும் மனசே இல்லாமல்தான் ஒத்துக்கொண்டான்.

மூர்ச்சை தெளிந்து எழுந்த கண்ணப்பா திகைப்பூண்டை மிதித்துவிட்டதைப்போல விழித்தான். அதற்குப் பிறகும் வெள்ளையம்மாவுக்குப் பைத்தியம் தெளியவில்லை எனத் தெரிந்ததும் மடேர் மடேர் எனத் தலையில் அடித்துக்கொண்டு அழத் தொடங்கினான்.

தெருவில் ஓடிய வெள்ளையம்மா அப்படியே திரும்பி ஏரிப்பக்கம் ஓடி, ஏரிக்கரையில் உட்கார்ந்து அழுவதாகச் சொன்னார்கள்.

ஏரிக்கரைக்கு ஓடினான் கண்ணப்பா. புதராக வளர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்களுக்குக் கீழே ஒரு பாறாங்கல்லின் மீது உட்கார்ந்திருந்தாள் வெள்ளையம்மா. தலைமுடிகள் விரிந்து கிடக்க… பத்ரகாளியைப் போல இருந்தவளைப் பார்க்கவே பயமாக இருந்தது. அவளின் ஊளைச்சத்தம் அவனின் இதயத்திற்குள் ஊசியைப்போல இறங்கியது.

அவனைப் பார்த்ததும் இன்னும் ஆங்காரமாகக் கத்தத் தொடங்கினாள். பயந்து பயந்துதான் அவளை நெருங்கினான். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எட்டி அவளது வலது கையைப் பிடித்து மெதுவாக இழுத்தான். அதிசயமாக அவளது அலறல் நின்றுபோனது. எழுந்து அமைதியாக அவனோடு நடந்தாள்.

வீட்டுக்கு வந்ததும் அதே சங்கிலியால் மீண்டும் கட்டிப் போட்டான்.

அவனுக்கு மனசு விட்டுப்போனது.

“நைனா… இதுக்கு மேல நாம இன்னாதாண்டா பண்றது?”

இயலாமையோடு கிழவியைப் பார்த்தான்.

“அவுத்து உட்டுர்ரா… எங்கனா போயி பஸ்லயோ… லாரிலியோ மாட்டிக்கினு சாவ்ட்டும்…”

“அப்டி ஒரேயடியா செத்துட்டா பரவால்லியே… ஆனா தனியா சுத்துனா பயித்தித்தக்கூட சொம்மா உடுவாங்களா…?’’

“நாமளே சோத்துல நாலு துளி இன்ட்ரி கலந்து குட்துடலாமா..?”

“ஐயோ…”

“இல்லனா தரதரன்னு இஸ்துகினு போயி கண்த்துல தள்ளி உட்டுர்ரா…”

“அவளுக்குதாங் நல்லா மீங்கிலு தெரிமே…”

“கால்ல கல்லக் கட்டித் தள்ளி உட்ரு…”

“ஏம்மா… அவ எதிர்லியே இப்டிலாம் பேசிறியேமா…” அவனுக்கு அழுகை வந்தது.

“பைத்தியத்துக்கு இதல்லாங் ஒண்ணும் புரியாதுரா…”

மறுநாள் வெள்ளிக்கிழமை. மிளகாய்ச் செடிகளுக்குக் களை கொத்திக்கொண்டிருந்தான் கண்ணப்பா. உச்சியில் சூரியன் மந்தமாய்க் காய்ந்து கொண்டிருந்தான். ஆனால் அவன் மனசு தகித்துக்கொண்டிருந்தது. கைகள் களை கொத்திக் கொண்டிருந்தாலும் கவனம் அதில் இல்லை. கிழவி சொன்னவை எல்லாம் அவன் மனசுக்குள் மோதிக்கொண்டிருந்தன.

வெள்ளையம்மா - சிறுகதை

பிள்ளை பிறக்காத பைத்தியத்தை எத்தனை நாள்களுக்குத்தான் சங்கிலியில் கட்டி வைத்திருப்பது? கிழவி சொல்வதைப்போல எப்படியாவது அவள் செத்துப்போனால் எல்லோருக்குமே நல்லதுதான். காலம்பூராவும் கத்திக்கொண்டு கிடக்காமல், எவரிடமும் சிக்கிச் சீரழியாமல் அவளும் போய்ச் சேர்ந்துவிடுவாள். அதற்காக இவ்வளவு தூரம் அவளை இழுத்து வந்து கல்லைக் கட்டிக் கிணற்றில் தள்ள முடியுமா?

மிளகாய்ச் செடிகளுக்காக வாங்கி வந்த பூச்சி மருந்து வீட்டில் இருக்கிறது. அதில் நான்கு துளிகளைச் சோற்றில் கலந்து கொடுத்துவிட்டால் போதும். கிழவி சொன்னதைப்போல வெளியில் தெரியாமல் கதை முடிந்துவிடும்.

அப்படித்தான் செய்யவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். மேக மூட்டம் விலகி மனசு தெளிவதுபோல இருந்தது.

அப்போது பக்கத்தில் ஏதோ அரவம் கேட்பதைப்போல உள்ளுணர்வு உறுத்த, மெதுவாகத் தலையை உயர்த்திப் பார்த்தான். பகீரென்றது.

கிணற்று மேட்டின் மறுபக்கம் அவனையே பார்த்தபடி வெள்ளையம்மா நின்றிருந்தாள். அவனுக்குத் தலையுச்சியில் பரபரவென வேர்க்கத் தொடங்கியது. அவள் எப்படி அங்கே வந்தாள்… அவளை யார் அவிழ்த்து விட்டது?

குழப்பத்தோடு எழுந்து நின்றான்.

சட்டென்று தன் இரண்டு கைகளையும் உயர்த்தி அவனைக் கும்பிட்டாள் வெள்ளையம்மா. அவள் முகம் நிர்மலமாக இருந்தது. அதைப் பார்த்ததும் அவனுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.

அடுத்த நொடி சட்டென எகிறிக் கிணற்றில் பாய்ந்தாள். அடுத்த சில நொடிகளில் கிணற்றில் தொபீர் என்ற பெருஞ்சத்தம்.

அதிர்ச்சியில் அப்படியே சிலைபோல நின்றான் அவன். சில முழு நொடிகள் அப்படி நின்றிருப்பான். திடீரென தலையை உதறிக் கொண்டு ஓடிப்போய் கிணற்றை எட்டிப்பார்த்தான்.

பலப்பல வளையங்களாய் தண்ணீரின் மேற்பரப்பு சுழன்றுகொண்டிருக்க… கொதிக்கிற எண்ணெயிலிருந்து மேலெழுகிற நுரைகளைப் போல… கிணற்றின் ஆழத்திலிருந்து மேலெழுந்த நீர்க்குமிழிகள் வேகவேமாய் மேற்பரப்பில் வெடித்துக்கொண்டிருந்தன.

சுற்றும் முற்றும் பார்த்தான். யாருமே இல்லை. கிணற்றின் கிழக்கு மேட்டிலிருந்த எட்டி மரத்தில் இரண்டு காகங்கள் மட்டும் கிளைகளில் தாவியபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தன.

எதுவோ அவனை உலுக்க, சட்டென எகிறிக் கிணற்றில் பாய்ந்தான். மூச்சை அடக்கிக் கொண்டு நீரின் அடி ஆழத்துக்குள் நீந்தினான். அது அறுபதடிக் கிணறு. நாற்பதடிக்கும் மேல் தண்ணீர் இருந்தது.

இரண்டு கண்களையும் திறந்து பார்த்தபடியே கீழே கீழே நீந்தினான். கிணற்றின் அடி ஆழத்தில் தரையோடு தரையாக நீள வாக்கில் குப்புறப் படுத்தபடி கிடந்தது வெள்ளையம்மாவின் உடல். விலுக் விலுக் எனக் கால்களை உதைத்துக் கொண்டிருந்தாள். கைகள் நீச்சலடிப்பதைப் போல துழாவிக்கொண்டிருந்தன. சட்டென வலது கையைக் கீழே நீட்டி அவளது தலை முடியைப் பிடித்து மேலே இழுத்தான். உடல் அசையவே இல்லை. மூச்சை அடக்கிக்கொண்டு முழு பலத்தோடு மீண்டும் இழுத்தான். அவனால் அவள் உடலை அசைக்கவே முடியவில்லை.

அவனுக்கு மூச்சு முட்டத் தொடங்கியது. வெள்ளையம்மாவின் வயிற்றுப்பக்கம் கையை நுழைத்து சிரமத்தோடு உடலைப் புரட்டினான். திக்கென்றது. வயிறு உப்பியிருந்தது. அழுத்திப் பார்த்தான். பெரிய கல். வயிற்றில் கல்லைக் கட்டிக்கொண்டு குதித்திருக்கிறாள்.

அவளை ஒட்டிப் படுத்தபடி கல்லை அகற்ற முயன்றான். கயிற்றின் முடிச்சை அவனால் கண்டறிய முடியவில்லை.

மனநிலை தவறிய அவளால் எப்படி கல்லைக் கட்டிக்கொண்டு குதிக்க முடியும்…? அவனுக்குத் தலை கிறுகிறுத்தது. கயிற்றின் முடிச்சைத் தேடுவதைவிட அவன் மனசு விடையைத் தேடியது.

அவனுக்கு மேலும் மூச்சு முட்டத் தொடங்கியது.

வேகமாகத் தண்ணீரைத் துழாவிக் கொண்டிருந்த வெள்ளையம்மாவின் கைகள் அடங்கத் தொடங்கின.

அந்த கணத்தில் அவனுக்கு எதுவோ புரியத் தொடங்கியது.

அவனது நுரையீரல்களும் மூளையும் காற்றுக்காக வேகமாக துடிக்கத் தொடங்கின. சட்டெனக் கையை நீட்டி அவளின் வலது உள்ளங்கையைப் பற்றினான். அவள் விரல்களோடு தன் விரல்களைப் பின்னிக் கொண்டான். அவன் மனம் விம்மத் தொடங்கியது.

மீண்டும் கயிற்றின் முடிச்சைத் தேடத் தொடங்கினான். இடுப்பின் வலது பக்கம் இருந்தது முடிச்சு. சரசரவென அதை அவிழ்த்தான். அது அவிழ்கிறபோதே அவனுக்குள்ளும் பல முடிச்சுகள் அவிழத் தொடங்கின. கல்லைப் புரட்டிப் பக்கவாட்டில் தள்ளினான்.

அவள் கையைப் பிடித்து மேலே இழுத்தான். இப்போது அவள் உடல் லேசாகி அவனோடு மேலே வரத் தொடங்கியது.