Published:Updated:

முரண்!- சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

இத்தாலியன் பேக்கரி அருகில் 80 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் ரோட்டை கிராஸ் செய்வதற்காக, இரு புறமும் பார்த்துக் கொண்டிருந்தார்.

எங்க ஊர் பத்திநாதபுரத்திலிருந்து நாகர்கோவில் செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து கிளம்பினேன். காவல்கிணறு விலக்கு வரை பைக்கில் சென்று அங்கிருந்து பஸ்ஸில் செல்வதுதான் என் வழக்கம். பார்க் செய்யும் இடத்தில் வண்டியை நிறுத்தினேன். பைக்கை நிறுத்தியதற்கான ரசீது வாங்கிவிட்டு வெளியே வந்தேன். இத்தாலியன் பேக்கரி அருகில் 80 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் ரோட்டை கிராஸ் செய்வதற்காக, இரு புறமும் பார்த்துக்கொண்டிருந்தார். அருகில் சென்று, ரோட்டை கடந்து செல்ல உதவும் நோக்கத்தோடு ``நான் கூட்டிட்டு போகவா" என்றேன். என்னைப் பார்த்தவர், தன் மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்துகொண்டே, ``அவன் கூட்டிட்டு போக மாட்டேங்கிறானே!" என்று வானத்தைப் பார்த்து கை காட்டினார். நான் புரிந்து கொண்டேன்.

Representational Image
Representational Image

``ஏதாவது வாங்கி சாப்பிட, பணம் வேண்டுமா" கையை ஆட்டி மறுத்தார். சற்று நிதானித்து, ``பசியில்லை, அப்படியே பசிச்சாலும் சாப்பிட மனமில்லை" என்றவர், என் பதிலுக்கு காத்திராமல் சாலையைக் கடந்து எதிர் திசை நோக்கிச் சென்றார். நான் சற்று முன்னே நடந்து நாகர்கோவில் போகும் பேருந்து நிற்கும் இடத்தை அடைந்தேன். பேருந்து வந்தது. பின்வாசல் வழியாக ஏறினேன். ஏறத்தாழ அனைத்து இருக்கைகளும் நிறைந்திருந்தன. முன்னே சென்று பார்ப்பதற்காக சில அடிகள் நடந்தேன். பின்பக்கமிருந்து கண்டக்டர் சொன்னார், ``இங்கே ஒரு இடம் இருக்கு" அது மூன்று பேர் அமரக்கூடிய இருக்கை. ஏற்கெனவே ஜன்னலோரம் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நடுத்தர வயதுக்காரரும், அவரை அடுத்து ஒரு பெரியவரும் அமர்ந்திருந்தனர். அவரை அடுத்து நான் உட்கார முற்படும் போது, ``பார்த்து உட்காருங்க தம்பி! கைப்பிடி கம்பி உடைஞ்சிருக்கு, கையிலே குத்திடப்போகுது" என்றார் அந்தப் பெரியவர். தமிழ்நாட்டில் ஓடுகிற பெரும்பாலான பேருந்துகளின் நிலைமை இதுதானே! மழைக்காலங்களில் பேருந்துக்குள்ளேயும் குடைப் பிடிக்க வேண்டிய பரிதாப நிலை! நான் அமர்ந்ததும், அந்தப் பெரியவர், நடுத்தர வயதுக்காரரிடம், ``அப்புறம்?" என்றார். ஏதோ முக்கியமான விஷயம் பேசிக்கொண்டு வருகிறார்கள் என்று புரிந்துகொண்டேன். நடுத்தர வயதுக்காரர் தொடர்ந்தார்.

``கல்லூரி முடித்து வேலை தேடி கோவா சென்றேன். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை எங்குமே கிடைக்கவில்லை. அப்பாதான் பணம் அனுப்பிக்கொண்டிருந்தார். ஒருநாள் போன் வந்தது. உடனே வீட்டுக்கு வரச்சொல்லி! வீட்டுக்குள் நுழைந்ததுமே, கட்டிலில் படுத்திருந்த அப்பா, எழுந்து உட்கார முயற்சி செய்தார். நான் அருகில் சென்று, அவரை படுத்துக்கொள்ள சொல்லிவிட்டு, கட்டிலின் விளிம்பில் அமர்ந்தேன். அம்மாவும் என்னோடு வந்து அமர்ந்தார். யாரும் எதுவும் பேசவில்லை". பேச்சை நிறுத்திவிட்டு ஜன்னலுக்கு வெளியே கொஞ்ச நேரம் எட்டிப்பார்த்தவர், மீண்டும் தொடர்ந்தார். ``அப்பா மெதுவாக என் வலது கையைப் பிடித்தார். தன் விரல்களால், என் உள்ளங்கையை வருடினார். நான் அப்பாவை ஏறிட்டுப் பார்த்தேன். அவருக்கு கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது." ``என்னை எப்படியாவது காப்பாத்துப்பா" என்றவர் ஓ வென்று கதறி அழுதார். அப்பா அழுது இதுவரையில் நான் பார்த்ததில்லை.

Representational Image
Representational Image

``நான் இன்னும் கொஞ்ச நாளாவது உயிரோடு இருக்கணும், உன் அக்காவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டா என் கடமை முடிஞ்சிடும், அதுவரைக்குமாவது என்னைக் காப்பாத்துப்பா" என்ற அப்பாவைப் பார்த்து அம்மாவும் அழுதார். அந்த 22 வயதில் எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல், யாரைப் பார்ப்பது என்று புரியாமல், என் இயலாமையை எண்ணி நானும் அழுதேன். நான் வேலை தேடிய அந்தச் சில வருடங்களில் ஏதாவது ஒரு வேலை செய்திருந்தால்கூட என் அப்பாவை நான் காப்பாத்தியிருக்க முடியும். என்னை நானே நொந்து கொண்டேன்.

மூவருமே அழுதோம், கடைசியில் அப்பாவின் அழுகை மட்டும் அடங்கிப்போயிற்று, அக்காவின் கல்யாணத்தைப் பார்க்காமலேயே. ``ஆரல்வாய்மொழி இறங்குங்க" என்ற கண்டக்டர், இருவர் ஏறியவுடன் டபுள் விசில் அடித்தார். ``அன்றைக்கு மட்டும் என்னிடம் இப்போ இருக்கிற பணம் இருந்திருந்தால், என் அப்பாவுக்கு வேறு கிட்னி ஏற்பாடு செய்து அவரைக் காப்பாற்றி இருப்பேன். இன்று பல லட்சங்கள் என்னிடம் உள்ளது. ஆனால், என் அப்பா என்னோடு இல்லையே!" அவரின் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்தது. பார்வையை ஜன்னலுக்கு வெளியே திருப்பிக் கொண்டார். எனக்குள் பல கேள்விகள்!

Representational Image
Representational Image

ஒரே நாளில், சில மணித்துளி இடைவேளையில், இரு வேறுபட்ட மனிதர்கள்! சாலையைக் கடக்க முயன்ற பெரியவர், எப்போது சாவு வரும் என்று எதிபார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த அப்பாவோ, இன்னும் கொஞ்ச நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார். முன்னவர், கொடுத்த பணத்தை வாங்காமலே சென்றுவிட்டார். பின்னவரோ, பணம் இல்லாமையால் போய் சேர்ந்துவிட்டார். ஏனிந்த முரண்பாடு! இன்றும் எத்தனையோ நோயுற்ற அப்பாக்கள் தங்களின் சத்தம் வெளியே கேட்காமல் அழுது கொண்டுதான் இருக்கிறார்கள். படித்து முடித்து வேலை கிடைக்காமல் அவர்களின் பிள்ளைகளும் தங்களின் இயலாமையை நொந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு விடிவு காலம்தான் என்ன?

வேலை! சுயதொழில்!! நேர்மையாக எந்தத் தொழில் செய்தாலும் அது உன்னை ஒருநாள் பெரியவனாக்கும். அதுவரைக்கும் அந்த சிறுவருமானத்தையும் சேமித்து வை! ``காலம் வந்தால் பறவை ரெக்கை முளைக்கும் நேரம் வந்தால் அதுவும் கழுகாகும்"

- ஜேசு ஞானராஜ்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு