சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

சிறுகதை: ஊருக்கு வெளியே ஒரு சொந்த வீடு

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

பிரியா கிருஷ்ணன்

புதுமனை புகுவிழாவிற்கு வந்தது மொத்தமே பதினேழு நண்பர்கள்தான். யாருமே குடும்பத்துடன் வரவில்லை. ‘சிட்டிலேர்ந்து ரொம்ப தூரம்ல, அதான் நாங்க மட்டும் இங்க வந்து தலைய காமிச்சுட்டு, இப்படியே ஆபீஸுக்குப் போயிடலாம்னு பிளான்’ ஒருவன் மட்டும்தான் விளக்கம் சொன்னான். வந்திருந்த யாருமே எனது அந்தப் புது வீட்டைப் பற்றிப் பெரிதாக ஏதும் கேட்கவில்லை, சிறியதாகக்கூடப் பேசிக் கொள்ளவில்லை. ஒருவேளை இன்னும் சிலகாலத்துக்கு முன்பாக, எல்லோரும் வீடு வாங்கும் சமயத்தில் நானும் இதைச் செய்திருந்தால் ஒருவேளை முக்கியத்துவம் இருந்திருக்குமோ என்னவோ, நான் ரொம்பத் தாமதம். அதற்கு காரணங்கள் நிறைய.

தெருவில் எங்கெல்லாம் வெயில் படாத நிழல் இருந்ததோ, அங்கெல்லாம் நின்றவாறு தங்களது அலுவலகப் பிரச்னைகள், அன்றைய அரசியல் நிலவரம் பற்றித்தான் நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். கடைசியாய் ஒரு சம்பிரதாய சந்தோஷத்தைத் தெரிவித்து, கையில் எடுத்துவந்த சுவர்க்கடிகாரம் உள்ளிட்ட வழக்கமான சில பரிசுப்பொருள்களைத் தந்துவிட்டு, ஒவ்வொரு மோட்டார் பைக்குக்கும் தலா இரண்டுபேர் எனத் திட்டமிட்டு வந்தது போல் ஏறி விடைபெற்றுச் சென்றனர்.

கடைசி ஆளாய் மிஞ்சியிருந்த ராகவன் தனியே நின்று போனில் யாரிடமோ நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தான். சென்னைக்கு நான் வந்த புதிதில் அவன் எனது அறைத்தோழன். எதையும் குதர்க்கமாகவும் விமர்சனமாகவும் அணுகக் கூடியவன். எந்த ஓர் உரையாடலையும் ஒருநிலையில் விவாதமாக்கி சண்டை போடும் அளவுக்குச் சூழ்நிலையைக் கொண்டு வந்துவிடுவான். சில நண்பர்களைத் தவிர்க்கவும் முடியாது; நெருக்கமாகவும் வைத்துக்கொள்ள முடியாது. இவன் அந்த வகை. அவனையும் வழியனுப்பிவிட்டு மற்ற வேலைகளை கவனிக்கும் பொருட்டுக் காத்திருந்தேன். எனக்காக உள்ளே என் மனைவி சாப்பிடாமல் காத்திருந்தாள். குழந்தைகள் இருவரும் இங்கும் அங்கும் ஓடியாடிக்கொண்டிருந்தனர்.

போனில் பேசிமுடித்துவிட்டு என்னிடம் வந்த ராகவன், கிளம்பும் பொருட்டு, “ஓகே ரகு...” எனக் கையைப் பற்றி, வீட்டை ஏறெடுத்துப் பார்த்தவாறு கூறினான், ‘ஸோ, துரத்தப்பட்டவர்கள் லிஸ்ட்ல இப்ப நீயும் சேர்ந்துட்டே’ முகத்தில் எவ்வித உணர்வும் காட்டாமல் சொல்லிவிட்டு பதில் எதிர்பார்க்கும் பாவனையுடன் என்னைக் கூர்ந்து பார்த்தான்.

அவன் எதற்காக அப்படிச் சொல்கிறான் என்பது புரியவில்லை என்றாலும், புரியவில்லை என்பதைக் காட்டிக்கொள்ளாமல், பதிலும் கூறாமல் இயல்பாய்ப் பார்த்தேன். ஏதேனும் விளக்கம் கேட்டால், நியாயமாகச் சொல்கிறேன் பேர்வழியென்று நல்லநாளும் அதுவுமாக ஏதேனும் அபசகுனமாகச் சொல்லிவிடுவானோ எனும் பயம்… அமைதியாய் இருந்தால் அவன் கிளம்பிவிடுவான் என எண்ணினேன்.

சிறுகதை: ஊருக்கு வெளியே ஒரு சொந்த வீடு

அவன் விடுவதாய் இல்லை.

“நாம இந்த நகரத்துக்கு வந்தப்ப இது இவ்வளவு பெரிய வளர்ச்சிய அன்னிக்கு அடையல. நம்ம ஊரைவிட கொஞ்சம் நல்லா இருந்துச்சு அவ்ளோதான். நாம வேலை தேடி இங்க வந்த நாளிலேர்ந்து நிறைய தேடினோம், அப்பறம் சில வேலைகளைப் பார்த்தோம். சம்பாதிச்சோம், செலவு செஞ்சோம், போராடினோம், இனிமே எங்கியும் ஜம்ப் பண்ண முடியாதுன்னு இதான் வேலைன்னு ஒரு இடத்துல ஒக்காந்துட்டோம், வாழ்க்கை ஓகேவா போயிட்டிருக்கு… ஜெயிச்சமா என்னன்னு தெரியல, ஆனா இந்த நகரம் வளர்ந்துடுச்சு. ரொம்பப் பெருசா வளர்ந்து, எல்லாப் பக்கமும் பரவி, வருமானம் அதிகம் இல்லாதவங்கள தன்னோட எல்லைக்கு வெளில அனுப்பிடுச்சு. நகரத்தோட சேர்ந்து நாம வளரல. துரத்தப்பட்டுட்டோம். இப்ப நீயும்... ப்ச், உனக்கு எப்படின்னு தெரியலப்பா, ஆனா என்னால முடியாது. உன்ன மாதிரி என்னால இங்க வந்து இப்படில்லாம் வாழமுடியாது. துரத்தப்படறதுல எனக்கு விருப்பமில்ல. நான் அத எப்பவும் அனுமதிக்கவும் மாட்டேன்.’’

‘ஏண்டா, நீயும் நானும் ஒண்ணாத்தானே ஊர்லேர்ந்து வந்தோம், காலம் தள்ளிப்போனாலும் இப்ப நான் ஒரு சொந்தவீடு வாங்கிட்டேன், ஆனா நீ?’ என்று மனதில் கேட்க எண்ணியதை, சூழல் கருதி, கேட்காமல் இயல்பாய்க் கேட்பதுபோல் கேட்டேன், “அப்ப பர்மனென்ட்டா நீ சிட்டிக்குள்ள வாடகை வீட்லேயே இருக்கறதுன்னு முடிவு பண்ணிட்டியா? உன் பேமிலி க்குன்னு ஒரு சொந்த வீடு வேணாம்?”

“ம்ம்... ஸீ, வாட் ஐம் திங்கிங்...” என என்னைத் தாண்டி வேறு எங்கோ பார்த்தபடி யோசனையாகப் பேசுவதுபோல் ஆரம்பித்தான்.

ஆங்கிலத்தில் தொடங்குகிறான் என்றால் நான் சொன்ன சொற்களால் காயப்பட்டு பதிலுக்கு ஏதோ சொல்லி என்னைக் காயப்படுத்தப்போகிறான் என்று அர்த்தம். எதையாவது சொல்லிவிட்டு இடத்தை காலி செய்யட்டும் எனத் தயாரானேன்.

“இதை இந்த நேரத்துல உங்கிட்ட சொல்றதா வேணாமான்னு தெரியல...”

“ம்”

“இப்ப நீ கேட்டதால இதை நானும் சொல்ல வேண்டியிருக்கு... நான் ஒரு தம் போடலாமா?’’

“இங்க வேணாம்.”

“வா, அப்படிப் போயிடலாம்.”

வீட்டுக்குப் பக்கத்தில் காலியாய் இருந்த மனைக்கு நடந்தோம்.

“வீடு எவ்ளோ?

“அம்பது கிட்டத்தட்ட வந்துடுச்சு.”

ஆச்சர்யத் தொனியைக் காட்டும் விதமாய், ``ஓ…” என சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டு திரும்பி என்னைத் தீவிரமாக ஏறிட்டான், “இப்ப உனக்கு என்ன வயசாகுது?”

“ஏன்?”

“என்ன ஒரு நாப்பத்தி ரெண்டு?”

“சொல்லு”

இருவரும் நின்றோம்.

“இப்பதான் சொந்தமா ஒரு வீடு வாங்கியிருக்கே. லோ பட்ஜெட், பாங்க் லோன், அவுட் ஆப் சிட்டி...” புகையை வெளியே விட்டு இருமிக்கொண்டான்.

நான் திரும்பி, மனைவி வருகிறாளா எனப் பார்த்துக் கொண்டேன். இவன் ஏதாவது சொல்லி அவள் கேட்டுவிட்டால் அவ்வளவுதான்.

“எத்தனை வருஷம் லோன்?’’

“பதினெட்டு வருஷம்… மாசம் இருவத்தியெட்டாயிரம் சொச்சம் கட்டணும்... ஏன்?”

கண்களை மூடி ஏதோ மனக்கணக்கு செய்வது போல் முணுமுணுத்தான்.

“என்ன?’’

என்னைப் பார்த்து ஆயாசம் காட்டினான், “பதினெட்டு வருஷம்... இருநூத்திப் பதினாறு மாசம். அறுபது லட்சத்து நாப்பத்தியெட்டாயிரம் சொச்ச ரூவா வருது. ஆனா வீட்டோட வேல்யு அம்பதுக்கும் குறைவு. லோனைக் கட்டறதுக்காக நீ கண்டிப்பா ஓடிட்டே இருக்கணும். லோனைக் கட்டி முடிக்கிறப்ப உனக்கு அறுவது வயசு ஆயிருக்கும்.”

ஏற்ற இறக்கத்துடன் கூறிவிட்டு கடைசியாய் அவனே அதிர்ச்சிகொள்வதுபோல் என்னை ஏறிட்டான்.

இதுபோல் ஆயிரம் தடவை கணக்கு போட்டுத்தான் இந்த வீட்டைக் கட்ட முடிவெடுத்தேன் என்றாலும், இவன் சொன்னவிதம் எனக்குள் ஒரு பதற்றத்தை உருவாக்கியது. இவனை இங்கிருந்து எப்படிக் கிளப்புவது என யோசிக்க ஆரம்பித்தேன்.

அவன் இன்னும் அதே அதிர்ச்சித் தொனி மாறாமலேயே தொடர்ந்தான், “ஸோ, எனக்கும் ஒரு சொந்த வீடு இருக்குன்னு மத்தவங்ககிட்ட சொல்லிக்குற ஒரு பெருமைக்காக நாம காலம் முழுக்கக் கடன்காரனா திரியணுமா? ஒவ்வொரு மாசமும் டென்ஷனாயிட்டே இருக்கணுமா... ம்ம்?”

நான் அவனைப் பார்க்காமல், ஆனால் அவன் கூறுவதைக் கேட்டுக்கொள்ளும் பாவனையுடன் போனில் வந்த வாழ்த்து மெசேஜுகளைப் பார்க்க ஆரம்பித்தேன்.

“இப்ப பாரு... இங்கிருந்து நீ வேலை பாக்குற எடம் இருவத்தியாறு கிலோமீட்டர். தூரத்த விடு, நேரத்த பாரு... பீக் அவர்ஸ் இப்ப எல்லா இடத்துலயும் ஒரே மாதிரித்தான் இருக்கு, அதுவும் சிட்டிக்குள்ள ரெண்டு கிலோமீட்டர் க்ராஸ் பண்ணுறதுக்கு அரைமணி நேரம் ஆயிருது. அப்படின்னா டெய்லி ஒம்பதரை மணி ஆபீஸுக்கு நீ இங்கிருந்து ஏழு மணிக்கே கிளம்பியாகணும் இல்ல? அப்ப, ஏழு மணிக்குக் கிளம்பணும்னா நீ அஞ்சு மணிக்கே எந்திரிச்சாகணும்... வீட்ல உள்ளவங்களும் அதே நேரத்துக்கு எந்திரிச்சாகணும். ஈவ்னிங் நீ திரும்பறதுக்கு எட்டு எட்டரை ஆயிரும்.. அதுவும் ஆபீஸ்ல லேட்டாச்சுன்னா அவ்ளோதான், நடுராத்திரிதான் வந்தாகணும், திரும்ப காலைல சீக்கிரமே கிளம்பியாகணும். ஸ்ஸ்... வேலை பாக்கறதுக்காக மட்டுமே வாழ்ந்து, வர்ற வருமானத்தையும் கடனுக்குக் கட்டி... உனக்காகன்னு ஒரு வாழ்க்கை இல்லாமலே போயிரும்ல?” எனக் குரல் உயர்த்திக் கேட்டவாறு என்னைப் பார்த்தவன், எனது அமைதியை உணர்ந்த சுதாரிப்புடன் தனது தொனியை மாற்றிக்கொண்டான்.

“பிராக்டிகல் பிரச்னைகளைச் சொன்னேன், மத்தபடி நீ இந்த வீட்ட வாங்குனதெல்லாம் எனக்கும் சந்தோஷம்தான்.”

சிகரெட்டைக் கீழே போட்டு மிதித்தபடி, “வீட்ல சந்தோஷமா இருக்காங்கல்ல, கவலைய விடு... வா, போலாம். பஸ் ஏத்திவிடு, வர்றப்ப செந்தில் சார் கூட பைக்ல வந்தேன், இப்ப எல்லாரும் என்னைக் கழட்டிவிட்டுப் போயிட்டாங்க... பஸ் இருக்கும்ல?”

“ம்.. இல்லாம? வா...பக்கத்துலதான். வண்டில கொண்டு போய் விடறேன்.”

“பக்கத்து லதான்னு சொல்றே, ஆனா வண்டில கொண்டு விடறேங்குற, தூரமா?”

“நடக்குற தூரந்தான்...” என் மனைவியின் குரல் கேட்டு இருவரும் திரும்பினோம். வீட்டின் பக்கவாட்டு ஜன்னலுக்கு உள்ளே இருந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இதுவரை நாங்கள் பேசியதையெல்லாம் கேட்டிருப்பாள்போலத் தெரிந்தது அவளது முக பாவனை. “உங்களால நடக்க முடியாதுன்னு அப்படிச் சொல்றாரு... ஏங்க, போயிட்டு சுருக்கா வாங்க, நெறைய வேலை கிடக்கு” என்றவள், தன்னை இடித்துக்கொண்டு ஓடிய குழந்தைகளை அதட்டியபடி உள்ளே சென்றாள், “யேய், கன்னா பின்னான்னு ஓடாதீங்க, எங்க பாத்தாலும் இரும்பும் கல்லுமா கிடக்கு, அடிபட்ரப் போவுது.”

சிறுகதை: ஊருக்கு வெளியே ஒரு சொந்த வீடு

பைக்கில் ஏறும்போது சுற்றிலும் பார்த்தபடி ராகவன் கேட்டான், “இங்க எதாவது க்ளீனிக் இருக்கு?”

“ம்... அடுத்த தெருவுலேயே இருக்கு, லேடி டாக்டர்” பைக்கை வேகமாய் செலுத்தினேன்.

பைக் ஓசையை மீறிக் கத்தினான், “டுவென்ட்டி போர் அவர்ஸா?”

“இல்ல, ஈவ்னிங் வரைக்கும்தான்” சீரற்ற சாலைக்கு பயந்து வேகத்தைக் குறைத்தேன்.

“அப்ப.. எதாவது எமர்ஜென்ஸின்னா சிட்டிக்குத்தான் போயாகணுமா?”

“அதன் பைக்கு இருக்குதே... பக்கத்துல ஆட்டோ ஸ்டாண்டு, கால்டாக்ஸி எல்லாம் கிடைக்கும்...” அவன் மேற்கொண்டு பேசுவதற்குள் அவசரமாய்க் கூறினேன், “இதான் பஸ் ஸ்டாப்பு இறங்கு. இங்கேருந்து சிட்டியோட எந்த மூலைக்கு வேணாலும் போலாம்” என பைக்கை நிறுத்தினேன்.

சிறுகதை: ஊருக்கு வெளியே ஒரு சொந்த வீடு

பஸ் ஸ்டாப் முன்பாக நின்றிருந்த ஒரு பெரியவர் இல்லை என்பது போல் மறுப்பாய் கையை ஆட்டியபடி ஆர்வமாய் எங்களைப் பார்த்து, “போயிருச்சு, இனிமே சாயந்தரம்தான்” என்றபடி அருகே வந்து, “இனிமே மெயின் ரோட்டுக்குப் போனாத்தான்...” என இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.

“இது வேறயா... அப்ப என்னை மெயின் ரோட்ல கொண்டு போயி விட்ரு. நல்லா எடம் பாத்துவீடு வாங்குனடா... இன்னிக்கு ஆபீஸ் போன மாதிரிதான்” சலித்துக்கொண்டவனைக் கோபித்துக்கொள்ள முடியவில்லை.

பைக்கை உதைத்துக் கிளப்பும்போது - பெரியவரும் உதவி கேட்க, மூவருடன் பைக்கில் நெருக்கியடித்துக்கொண்டு சென்றது வேறு ராகவனை மிகவும் வெறுப்பேற்றியிருக்க வேண்டும்.

“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத...” பிரதான சாலைக்கு வந்து இறங்கியதும் இடுப்பைப் பிடித்துக்கொண்டு மூச்சிரைக்க சொன்னான், “நாம பாக்காத கஷ்டமில்ல... இருந்தாலும் வாழ்க்கைல எல்லா விஷயத்தையும் பொறுத்துக்க முடியாதுடா… இதெல்லாம் எப்படின்னு தெரில...” என்றவாறு தூரத்தில் தெரிந்த அரசு மதுபானக்கடையைக் கண்டதும் முகத்தைப் புன்னகையாக்கிக்கொண்டான்.

“நம்ம ஐட்டம் இங்கதான் இருக்கு..?”

“ம்ம், நாந்தான் விட்டுட்டேனே... ரொம்ப நாளாச்சு... இதோ, வந்துடுச்சு பாரு” என சாலையைப் பார்த்துக்கொண்டிருந்த நான், வந்து நின்ற பேருந்தைப் பார்த்துப் பரபரக்க, அதே பரபரப்புடன் அவன் ஓடிச் சென்று ஏறிக் கொண்டான்.

படிக்கட்டில் நின்று எனக்கு அவன் கையாட்டியது, பஸ் கிளப்பிய புகையில் மறைந்து போனது. நான் விடுபட்ட பெருமூச்சுடன் அவசரமாய் பைக்குக்குத் திரும்பினேன்.

இரவு, உறங்கும் வரை மனைவி, அவனைப் பற்றியே பொருமிக்கொண்டிருந்தாள், “என்ன பிரெண்டு புடிச்சிருக்கீங்க, ஒலகத்துல இல்லாத பிரெண்டு... நல்லநாளும் அதுவுமா வாய்ல ஒரு நல்ல வார்த்தை வருதா... நாகரிகம் தெரியாத ஜென்மம். எண்ணம் மாதிரித்தான் அதுகளுக்கெல்லாம் வாழ்க்கை அமையும்... அப்படியே பொறாமை.”

“அப்படில்லாம் அவன் இல்லம்மா... இயல்பே அப்படித்தான்.”

“இனிமே அந்தாளை இந்தப்பக்கம் வர விட்ராதீங்க ஆமா.”

“அவன் மட்டுமில்ல, இனிமே எவனும் இந்தப்பக்கம் வரமாட்டான்... நாமதான் தேடிப் போகணும், அப்படியொரு இடத்துக்கு வந்து சேர்ந்துட்டோம்…” பெருமூச்சு விட்டேன், “அவசரப்பட்டுட்டோம்னு தோணுதும்மா.”

“நீங்களும் அந்தாளு பேச்சைக் கேட்டுக்கிட்டு எதையாவது உளறாதீங்க. உங்க வயசுதான அவருக்கும் ஆவுது? உங்க அளவுக்குத்தான அவரும் சம்பதிக்குறாரு. இப்ப வாய் கிழியப் பேசற மனுசன் சின்னதோ பெருசோ ஒரு வீட்ட வாங்கிப் போடவேண்டியதுதான? எதுக்கு வாடகை வீட்ல கஷ்டப்படணுமாம்... ஆங்?’’

ராகவன் என்னிடம் சொன்ன லோன் கணக்கை அவளிடம் சொல்லவில்லை. பலவருட நட்பு. ஒரே ஊர் வேறு. அவனைப் பற்றி நல்லவிதமாகச் சொல்ல முயற்சி செய்தேன். அவள் அமைதியாக இருந்தாலும் அவன்மீதான அவளது கோபம் அடங்கவில்லை என்பது அவன் வீட்டுக்குச் செல்லும்போது வெளிப்பட்டது.

தன் மகளின் பிறந்த நாளுக் காக வரும்படி சொல்லியிருந்தான். “வேற யாருக்கும் சொல்லல ரகு, வீட்ல அழைச்சுட்டு வா...பசங்களுக்கு நாளைக்கு லீவுதான?”

நான் மனைவி குழந்தைகளுடன், நகரத்தின் பரபரப்பான பகுதியொன்றின் பழைய அப்பார்ட்மென்ட்டில் இருந்த அவனது வீட்டுக்குச் சென்றேன்.

“காத்தோட்டமே இல்லியே... இப்படிப் புழுங்குது?” வீட்டுக்குள் நுழைந்ததுமே என் மனைவி, புடவைத் தலைப்பை வேகமாக விசிறி விட்டுக்கொண்டே ஆரம்பித்தாள். ராகவனும் அவன் மனைவியும் ஏதேதோ சமாளித்து வேறு வேறு விஷயங்களைப் பேசியும்கூட என் மனைவி அவளது நோக்கத்திலேயே குறியாக இருந்தாள். கூப்பிட்டவுடன் இவள் உடனே இங்கு வந்ததற்கு காரணம், ராகவனின் வீட்டைக் குறை கூறி தனது பழியைத் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் என்பது எனக்குக் கொஞ்சம் தாமதமாகவே புரிந்தது. ராகவன் அதை உணர்ந்துவிடாத அளவுக்கு நான் போலியாய் உற்சாகம் காட்டிப் பேசினாலும், அவனது முகம் சற்று வாடித்தான் போயிருந்தது.

வீடு திரும்பும்போது என் மனைவிக்கு ஏக திருப்தி. நிறைவான மனதுடன் குழந்தைகளுடன் சிரித்துப் பேசிக்கொண்டே வந்தாள்.

“நீ செஞ்சது எனக்கே கஷ்டமா இருந்துச்சும்மா, அவன் பாவம்...” என்றதும், அதை எதிர்பார்த்திருந்தவள்போல் பாய்ந்தாள்.

“அடுத்தவங்க வீட்டப்பத்தி அதுவும் அவங்க கஷ்டப்பட்டுக் கட்டின சொந்த வீட்டப்பத்திப் பேசினப்ப இனிச்சுதுல்ல... இப்ப படட்டும்... உங்க பிரெண்டுன்னா அத உங்க கூடவே வச்சுக்குங்க. பெருசா சப்போட்டு பண்ண வந்துட்டாரு.”

“அவன் ஒண்ணும் கஷ்டப்பட்டு அந்த வீட்ல இல்ல. அவனுக்கு அது வசதியாத்தான் இருக்கு... கடைங்க, கோயில், பஸ்ஸ்டாண்டு, மெட்ரோ ரயில், ஷாப்பிங் மால், பீச்... இதைல்லாம்விட குழந்தைங்களோட ஸ்கூல் ரொம்பப் பக்கம்... தானா போயிட்டு தானா வந்து சேர்ந்துடுதுக. ஒண்ணுக்கு நாலு டியூஷன் சென்டர்ஸ் வேற... அதுகளுக்கு ஸ்கூல் படிப்பு முடிஞ்சதும் இங்க இருக்குற எவன் கைகாலைப் புடிச்சாவது ஈஸியா காலேஜ் சீட்டும் வாங்கிடுவான். நாம சொந்த வீடுங்குற பெருமைய மட்டும்தான் சொல்லிட்டு இருக்கணும். மத்த எல்லாத்துக்கும் போராடணும்.”

அவள் என்னை பதிலற்று முறைப்பாய்ப் பார்த்தாள். ஏதும் பேசவில்லை. மனதுக்குள் அவளுக்கும் இதெல்லாம் பட்டிருக்குமோ என்னவோ... செல்போனில் விளையாடிய குழந்தையை முதுகில் அடித்தாள், “எப்ப பாரு, எங்க போனாலும் போன்ல விளையாட்டு... படிச்சு முன்னேர்ற வழியப் பாருங்க.”

வீட்டுக்கு வந்ததும் ராகவனுக்கு போன் செய்தேன். அவன் எடுக்கவில்லை. அதன்பிறகு அவன் எனது போனை எடுக்கவேயில்லை. நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

அடுத்தடுத்து வந்த காலங்களில், இந்த ராகவன் எச்சரித்ததைவிடவும் அதிகமான சிரமங்களையே நான் எதிர்நோக்க வேண்டியிருந்தது. குழந்தைகளுக்கு புதுஸ்கூல் சரியாக அமையவில்லை. சற்றுத் தொலைவில் இருந்த பள்ளியில் சேர்க்க வேண்டியிருந்தது. அங்கும் கட்டணத்தில் கறாராக இருந்தார்களே தவிர கல்வித்தரத்தில் ஆர்வம் காட்டவில்லை. டியூஷனுக்கு இன்னொரு பகுதியில் கொண்டு விட்டு அழைத்துவர வேண்டியிருந்தது. புறநகர் என்பதால் அதிகமான நேரம் மின்சாரம் இல்லாமல் - இன்வெர்ட்டரும் தீர்ந்துபோய் - இரவு நேரங்களில் மொட்டை மாடியில்தான் தஞ்சம் புக வேண்டி யிருந்தது. அடங்காத வியர்வை பொறுக்க முடியாமல் பனையோலை விசிறியால் விசிறிக்கொண்டே ஒருநாள் கேட்டேன், “அவசரப்பட்டு இங்க வந்துட்டோமோ?”

இம்முறை அவள் திட்டவில்லை, “வேற என்ன பண்ணுறதுன்னு யோசிச்சு எதாவது செய்ங்க... எங்க இருந்தாலும் எனக்கு ஒண்ணுதான்.”

அடுத்தவாரமே நகரத்தின் மையப்பகுதியில் வீடு பார்த்து முடிவு செய்தேன். மனைவியோடு சேர்ந்து கணக்கு போட்டோம், “புதுவீட்டோட வாடகை, இந்த வீட்டுக்கு ஈஎம்ஐ-ன்னு பார்த்தா மொத்தம் நாப்பதாயிரம்... இந்த வீட்ட வாடகைக்கு விட்டா ஒரு எட்டாயிரம்தான் வரும்... பரவாயில்ல, பசங்களுக்கு ஸ்கூல் பக்கம், நாலேட்ஜ் நல்லாருக்கும், நமக்கு அலைச்சல் மிச்சம்.”

நல்ல நாள் பார்த்துப் பால் காய்ச்சினோம்.

சொந்த வீட்டைப் பூட்டி, வாசலில் டூலெட் போர்டை மாட்டிவிட்டு, லாரியில் ஏற்றிய பொருள்களுடன் நானும் மனைவியும் அப்பகுதியை விட்டுக் கிளம்பி, பிரதான சாலை ஏறும்போது மனைவிதான் கவனித்துச் சொன்னாள், “ஏங்க, உங்க பிரண்டு வர்றாரு பாருங்க...”

நகருக்குள் பிரிந்துவரும் சாலையில் ராகவன் தனது ஸ்கூட்டரைத் திருப்பிக்கொண்டிருந்தான்.

“நம்ம வீட்டுக்குத்தான் போறாரு போல... எறங்கி என்னான்னு கேட்டு திருப்பி அனுப்பிட்டு வாங்க... புதுவீட்டுக்குக் கூப்பிட்டிராதீங்க, அங்கயும் வந்து ஏதாவது வாய்க்கு வந்தபடி சொல்லி வைக்கப்போறாரு.”

நான் அவசரமாய் வேனை விட்டு இறங்கி, “டே,டே…ராகவா” என சப்தமாய் அழைக்க - அவன் என்னைக் கடந்து சிறிது தூரம் நகருக்குள் போயிருந்தான், நின்று திரும்பிப் பார்த்து ஆச்சர்யமாய் கைகாட்டினான்.

சற்றே ஓட்டமும் நடையுமாய் மூச்சிரைக்க அவனிடம் சென்று நின்றேன், “எங்கடா இங்க... நம்ம வீட்டுக்கா போற?’’

“உன் வீட்டுக்கு வரணும்னுதான் ஒருவாரமா பிளான் பண்ணுறேன், தட்டிக்கிட்டே போவுது...’’ என்றவன் முகத்தில் பெருமிதம் காட்டி, “நான் இங்க சொந்தமா வீடு வாங்கிகிட்டு வந்துட்டேண்டா...” என்றபடி ஸ்கூட்டரில் இருந்து இறங்கினான்.

“இங்கியா..?” அதிகமாய் மூச்சிரைத்தது.

“நீயும் உன் வொய்ப்பும் என் வீட்டுக்கு ஒருநாள் வந்துட்டுப் போனீங்களே... அதுலேருந்து என் வொய்ப்போட நச்சரிப்பு தாங்க முடியல...

எப்படியாவது சொந்தவீடு வாங்கணும்னு சொல்லிட்டே இருந்தா, சரின்னு நாலு இடத்துல விசாரிச்சுட்டே இருந்தேன், கைல கொஞ்சமாவது காசு வேணுமே, அதைச் சேர்க்கறதுக்குக் கொஞ்ச காலம் ஆயிருச்சு... இப்ப நேரம் நல்லாருக்குன்னு ஜோசியக்காரணும் சொன்னானா, சரி வாங்கலாம்னு முடிவு பண்ணி பில்டர்ஸ்கிட்ட பேசினேன், இந்த இடம் பெட்டரா இருந்துச்சு, வாங்கிட்டேன்.போன புதன்கிழமைதான் சிம்பிளா கிரகப்பிரேவேசம் பண்ணினேன், என் பேமிலியும் என் வொய்ப்போட பேமிலியும் மட்டும்தான்.”

“இங்க... சிட்டி அளவுக்கு அப்படியொண்ணும் வசதிங்க... உனக்கு எப்படி...” நான் திணற,

“நீ வேற ரகு... அங்க என்ன இருக்கு. சிட்டிக்குள்ளயே இருக்கோம்னு பெருமையா சொல்லிக்கலாம். ஆனா அந்தப் பெருமைக்கு நாம கொடுக்கவேண்டிய விலை அதிகம். பிராக்டிக்கலாவும் வாழ்க்கைய பாக்கணும்ல...பசங்க படிப்பு முக்கியம்தான், ஆனா படிக்குற புள்ளைங்க எங்க இருந்தாலும் படிக்கும். நாம என்ன கேம்பிரிட்ஜ்லயா படிச்சோம்? அதுமட்டுமில்ல, அதுகளோட ஸ்கூல் லைப்ங்குறது கொஞ்ச காலம்தான். அடுத்து வர்ற வருஷத்துல அதுகளை காலேஜ்ல சேர்க்கணும். சிட்டிக்குள்ள எவன் காலேஜ் நடத்தறான் இப்ப... ஊருக்கு வெளில அதுவும் இந்தப்பக்கம்தான் எல்லாரும் கட்டி வச்சிருக்காங்க. இங்க நாம வந்துட்டா பசங்களுக்கு ஈஸி. நமக்கும் சிட்டியோட பொல்யூஷன்லேருந்து தப்பிச்ச மாதிரியிருக்கும், அதான்...” என்றவன் வேனைப் பார்த்தவனாய், “ஆமா நீ எங்க வேன்ல போயிட்டிருக்கே...ஆபீஸ் விஷயமாவா?’’

நான் அவனையே பார்த்திருக்க,

தொடர்ந்தவன், “சரி, நீ கிளம்பு... அவசரமா போறவன நிக்கவச்சுப் பேசிட்டிருக்கேன். அப்பறமா வந்து பாக்குறேன்... மறுபடியும் இப்ப நாம ஒரே ஊரு ஆளாயிட்டோம். வர்றேண்டா, வீட்ல கெஸ்ட்டுங்க வந்துருக்காங்க.”

நான் மூச்சிரைப்பைக் கட்டுப்படுத்தி ஏதும் பேச இயலாமல் தலையசைக்க, அவன் ஸ்கூட்டரைக் கிளப்பி வேகமாய்ச் சென்றான்.

நான் வேனுக்குத் திரும்பி, சீட்டில் ஏறி அமர்ந்தேன்.

“என்ன, நம்ம வீட்டுக்கா வந்தாரு?’’

மனைவியைப் பார்க்காமல் சாலையை வெறித்தபடி ‘இல்லை’ என்பதுபோல் தலையை ஆட்டினேன்.

“வேற எங்க போறாரு இந்தப்பக்கம்?”

அவளுக்கு பதில் சொல்லாமல், அதைக் காதில் வாங்காதவன்போல், வேன் டிரைவரிடம் கூறினேன், ``பைபாஸ் வழியா போயிடு... சீக்கிரம் போயிடலாம்.”

வேன் எனது சொந்தவீடு இருந்த அந்தப் பகுதியின் எல்லையைக் கடந்து நகரம் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.