Published:Updated:

அம்மாஅப்பாவுக்கு ஓர் அன்பின் மடல்! #MyVikatan

``நீ 23 வயசுலலாம் இரண்டு குழந்தைக்கு அம்மாவா இருந்து கூட்டுக் குடும்பத்துல மாமனார் மாமியார்லாம் பாத்துக்கிட்டு, பெரிய குடும்பத்துக்கு சமைச்சு போட்டு நிக்கக் கூட நேரம் இல்லாம பம்பரம் மாதிரி பல வருஷம் சுத்திருக்க''

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

அப்பா..நான் நல்லா இருக்கேன். நீயும் அம்மாவும் நல்லா இருக்கீங்களா? ஊருக்கு வர்றதுக்கு தீபாவளிக்கு டிக்கெட் எடுத்திருக்கிறேன் தங்கச்சிக்கும் லீவு தான்ப்பா.. அவளையும் கூட்டிட்டுதான் வர்றேன். அவளுக்கு கண் வலிக்குது சொல்லிட்டு இருந்தா. போன சனிக்கிழமை ஹாஸ்பிடல் போனோம்ப்பா. லைட்டா பவர் இருக்குனு சொன்னாங்க. உடனே உங்க பொண்ணு பல கடை ஏறி இறங்கி புது மாடல்ல அவளுக்கு புடிச்ச பிங்க் கலர்லேயே கண்ணாடி வாங்கி மாட்டிக்கிட்டா...நான் பாத்திருக்கிறேன்ப்பா..சின்ன வயசுல ஒரு முறை தேரோட்டம் அப்போ உங்க மூக்குக்கண்ணாடி உடைஞ்சு போச்சு. அத சரி பண்ணாம ஒரு நூலை போட்டு சுத்திட்டு எங்களுக்கு தேரோட்டத்துக்கு சோப்புத் தண்ணி டப்பால இருந்து செப்பு ஜாமான் வரைக்கும் வாங்கிக் கொடுத்து எங்க சின்னச் சின்ன சந்தோசத்தைக் கூட நிறைவா நிறைவேத்தி வச்சீங்க.

Representational Image
Representational Image

இந்த வாரம் எனக்கு மார்னிங் ஷிப்ட்ப்பா. எந்திரிக்கவே கஷ்டமா இருக்கு. எப்படிப்பா ஒரு நாள் கூட சலிச்சுக்காம நான் பத்தாவது வந்ததிலிருந்து நைட் 11 மணிக்கு வேலை முடிச்சிட்டு வந்து மறுபடியும் 4.30 மணிக்கெல்லாம் எந்திரிச்சு அம்மா டீ போட்டு கொடுத்து நீங்க என்ன எழுப்பி விட்டு டியூஷன் கொண்டு போய் விட்டு காத்திருந்து கூட்டிட்டு வந்து ஒரு முனங்கல் கூட இல்லாம இருந்தீங்க? அத நினைச்சிக்கிவேன்ப்பா..டக்குனு முழிச்சிக்கிவேன். சந்திரன் மாமா அவர் பையன்ன காலேஜ் சேக்கிறதுக்கு காசு கேட்டாருப்பா. அம்பதாயிரம் அனுப்பிச்சு வச்சேன். காலைல போன் செஞ்சு பணம் வந்திடுச்சுனு சொன்னாருப்பா. நான் காலேஜ் படிக்கிறப்போ காசுக்காக நீங்க கைய பிசைஞ்சுட்டு தயங்கித் தயங்கி நம்ம சொந்தக்காரங்க கிட்ட பணம் கேட்டதும், பேங்க் வாசல்படி ஏறி இறங்கினதும் எனக்கு நியாபகம் இருக்குப்பா. அப்போ நீங்க என்கிட்ட, தம்பி நாளைக்கு நீ படிச்சு நாலு பேர படிக்க வைக்கணும்னு சொன்னீங்க.. அதான்ப்பா உங்ககிட்ட கூட சொல்லாம உடனே அனுப்பிச்சு வச்சிட்டேன்.

ஆன்லைன்ல தள்ளுபடில நாலு புதுச் சட்டை எடுத்தேன்ப்பா. எவ்ளோ ட்ரெஸ் எடுத்தாலும் ஒரு மாசத்துல பழசான மாதிரி ஆகிடுதுன்னு புதுசு புதுசா எடுக்கத் தோணுது. ஆனா நீங்க எந்தப் பண்டிகை வந்தாலும் நாங்க கடைல வச்சு விலை கூடுன டிரஸ் வேணும்னு அடம் பிடிச்சப்போ உங்களுக்குச் சட்டை எடுக்க வேண்டிய காசுல எங்களுக்கு வாங்கிக் கொடுத்திட்டு நீங்க பழைய சட்டையே போட்டுக்குவீங்க..உங்களுக்கு புதுசு போடலேன்னு வருத்தம் இருக்காதாப்பா..?

குறைஞ்ச சம்பளத்துல கூட்டுக் குடும்பத்துல உங்க விருப்பங்கள் எல்லாத்தையும் குறைச்சிட்டு, படிப்புச் செலவு, வீட்டுச் செலவுலாம் பாத்துகிட்டு எப்படி நீங்க சமாளிச்சீங்கன்னு ஆச்சர்யமா இருக்குப்பா

EMI, மியூச்சுவல் பண்ட், வீட்டு வாடகை கொடுத்தது போக மாச கடைசி ஆனா கிரெடிட் கார்டு பில் வேற எக்கச்சக்கம் வந்துடுதுப்பா..குறைஞ்ச சம்பளத்துல கூட்டுக் குடும்பத்துல உங்க விருப்பங்கள் எல்லாத்தையும் குறைச்சிட்டு, மருத்துவச் செலவு, படிப்புச் செலவு, வீட்டுச் செலவுலாம் பாத்துகிட்டு எப்படி நீங்க சமாளிச்சீங்கன்னு ஆச்சர்யமா இருக்குப்பா..என் அக்கவுன்ட்ல இருந்து கொஞ்சம் காசு தங்கச்சி கேட்டா பிரெஞ்சு கிளாஸ் போகுறதுக்கு. அத எடுத்துக் கொடுக்கவே எனக்கு கஷ்டமா இருந்துச்சு...நம்ம காசுன்னு கொஞ்சம் சுயநலமா யோசிச்சேன். நீங்க உங்க அண்ணன் அக்கானு அவங்க கேக்கறப்போ, அம்மாச்சிக்கு உடம்பு சரியா இல்லாதப்போலாம் உங்க ப்ரவிடென்ட் பணம், டெபாசிட் பணம்னு எல்லாம் கொடுத்து உதவுனீங்க..

இப்போ அம்மாட்ட லெட்டரை கொடுங்க

அம்மா..என்ன வீட்டு வேலைலாம் முடிச்சிட்டியா...என் கூட வேலை செய்ற பூஜா ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகி டிரீட்மென்ட் எடுத்திட்டு இருக்கிறா டிப்ரெஸ்ஸன்னு. அவளை நானும் தங்கச்சியும் இன்னைக்கு பாத்துட்டு வந்தோம். அப்போ தான்மா யோசிச்சேன் நீ 23 வயசுலலாம் இரண்டு குழந்தைக்கு அம்மாவா இருந்து கூட்டுக் குடும்பத்துல மாமனார் மாமியார்லாம் பாத்துக்கிட்டு, பெரிய குடும்பத்துக்கு சமைச்சு போட்டு நிக்கக் கூட நேரம் இல்லாம பம்பரம் மாதிரி பல வருஷம் சுத்திருக்க...நீ ஒரு நாள் கூட மனம் சோர்வா இருக்குனு சொல்லி நான் பாத்ததே இல்லம்மா..எப்படிமா இவ்ளோ கூலா சமாளிச்ச?

Representational Image
Representational Image
Credits : Shutter stock

சரி விடு கேட்டா அதெல்லாம் ஒண்ணுமில்லடான்னு சிம்பிளா சொல்லிடுவ..என் பிறந்தநாளைக்கு கோயிலுக்குப் போயிட்டு வந்தேன் நீ சொன்னேன்னு ..எவ்ளோ கூட்டம்.. அப்பாக்கு வாட்ஸ் அப்பில போட்டோ அனுப்பிச்சேன் பாத்தியா? டயட்ல இருந்து ஒரு 3 கிலோ குறைஞ்சிருக்கேன்.. ரொம்ப கஷ்டமா இருக்குமா சில நேரம் சாப்பிடமா டயட் மேனேஜ் பன்றது. நீ எப்படித்தான் எல்லா வேலையும் பாத்துட்டு செவ்வாய், வெள்ளி னு எங்களுக்காக விரதம் இருந்துட்டு கோயில் கோயிலா ஏறி இறங்கி சாமிகிட்ட வேண்டிக்கிறயோ? உனக்கு அலுப்பா இருக்காதாம்மா ?

உன் பொண்ணு வெயில்ல ரெண்டு நாள் போய்ட்டு வந்து, டேன் ஆகிட்டானு என் பாக்கெட் ல இருந்து 1000 ரூபா காலி பண்ணிட்டா பார்லர்க்கு. உன்னைப்பத்திதான் அவ கிட்ட சொல்லிட்டு இருந்தேன். வேகாத வெயில்ல சுடச் சுட அரிசி கூழ் காச்சி சுவையா வத்தல் போட்டு தருவ.. வாவ்..இப்போ நினைச்சாலும் நாக்கு ஊறுதும்மா.. எங்க பரீட்சைக்கு ஃபீஸ் கட்ட காசு குறையிற சமயம், பண்டிகை நாள், ஏதாச்சு விஷேசம்னா உடனே நீ அப்பாக்கு துணையா இருக்க முறுக்கு சீடை னு எண்ணெய் சட்டி முன்னாடி உக்காந்து விடிய விடிய பலகாரம் செஞ்சு கடைகளுக்குக் கொடுப்ப.. நாலு காசுனாலும் பாத்துப் பாத்து செலவழிப்ப. உன் அழகு, விருப்பம், ஆசைன்னு எதையுமே நீ வெளிகாமிச்சுக்காம ஒரு சிரிப்பிலே எல்லாத்தையும் ஒளிச்சிடுவமா... உனக்கு உருளைக்கிழங்கு புடிக்கலேன்னாலும் எங்களுக்கு புடிக்கும்னு நாங்க கேட்டப்பலாம் செஞ்சு தருவ. நீயும் திட்டமா அதையே சாப்பிட்டுக்குவ. அப்பா கிட்ட நாங்க திட்டு வாங்கிறப்போலாம் நீ எங்களுக்காக பேசி திட்டு வாங்கிக்குவ.. இப்போ அதெல்லாம் நினச்சா சிரிப்பா இருக்குமா. யு ஆர் சோ நைஸ் அம்மா..

Representational Image
Representational Image
Credits : Shutter stock

சரி இப்போ ரெண்டு பேரும் நல்லா கவனிங்க .. நாங்க படிச்சு முடிச்சுட்டோம், நல்ல வேலைக்கும் போய்ட்டோம். இனி எங்க கல்யாணம், எங்க பசங்களோட வாழ்க்கைன்னு அடுத்த கட்டத்துக்குப் போக தயாரா இருப்பீங்கனு நல்லா தெரியும். வேண்டாம்னாலும் கேக்கப் போறது இல்ல. அது ஒரு பக்கம் இருக்கட்டும். அதுக்கு முன்னாடி எங்களுக்கு இன்னொரு ஆசை இருக்கு அத நிறைவேத்தி வச்சுட்டு நீங்க அடுத்த கட்டத்துக்கு போங்க. உங்களுக்கு ரெண்டே சாய்ஸ் தான். நம்பர் 1 உள்நாடு நம்பர் 2 வெளிநாடு. அத மட்டும் சொல்லுங்க.. எங்க போனும்னு நானும் தங்கச்சியும் பாத்து டிக்கெட் எடுத்து தருவோம் நீங்க ஜாலியா போய்ட்டு பல selfie எடுத்து எங்களுக்கு அனுப்பணும். அப்போதான் நாங்க உங்க பேச்ச இனி கேப்போம்

-அன்புடன் பட்டுவும் லட்டுவும்

இவ்வாறு பல லட்டுக்களும் பட்டுக்களும் அவர்கள் பெற்றோரிடம் கேட்டுக்கொள்வது இதைத்தான் -

கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்லயே நீங்க ரெண்டு பேரும் உங்க சொந்த விருப்பு வெறுப்ப மறந்துட்டு பிள்ளைங்க படிப்பு வேலை கல்யாணம்னு அடுத்தடுத்து எங்களுக்காவே யோசிச்சிட்டு வாழ்ந்துட்டு வந்திருக்கீங்க..நாங்க கேட்டாலும் உங்க சந்தோசம்தான் எங்க சந்தோசம்னு சொல்லி சிரிச்சுட்டு போய்டுவீங்க...நாங்க நினைக்கிற சின்ன ஆசையில இருந்து பெரிய கனவு வரைக்கும் கூட எப்டியாச்சு செஞ்சு தந்துடணும்னு நீங்க மெனக்கிடுறது, அதுக்காக எத இழக்கக் கூட நீங்க தயாராகுறது, நாங்க தப்பு செஞ்சா நீங்க தலைகுனிஞ்சு நிக்கிறது, எங்க வலிய கூட நீங்க ஏத்துக்கறதுன்னு உங்க முழு வாழ்க்கையும் எங்களுக்காகவே அர்ப்பணித்த இந்தியப் பெற்றோர்களே..உங்கள் பிள்ளைகள் வேண்டுகிறோம்..எங்களுக்காக சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்...உழைத்துக் களைத்த கைகள் சற்று இளைப்பாறட்டும்..எங்களுக்காகவே விழித்து அயர்ந்த கண்கள் சற்று பசுமையைக் காணட்டும். ஓடித்திரிந்து எங்களை பறக்க வைத்த கால்கள் சற்று கடல் மணலில் விளையாடட்டும். பிள்ளைகளின் எதிர்காலத்தையே கணித்து செயல்பட்ட மனம் சற்று நிகழ்காலத்தில் ஏதேனும் குளிர்ப்பிரதேசத்தில் பயணப்படட்டும்.

Representational Image
Representational Image
Credits : Pixabay

கண்டிப்போடும் கவனத்தோடும் கண்ணீரோடும் பிள்ளைகளுக்காகவே நேரம் ஒதுக்கும் பல இந்தியப் பெற்றோர்கள் தங்களுக்கென நேரம் ஒதுக்காமல் நாளைக் கழிப்பது இந்த நாட்டின் சாபக்கேடுதான்..இதை இக்கால இந்தியக் குழந்தைகள் திருத்தி எழுத முற்படுவோம். அயல் நாடுகளில் பணி ஓய்விற்குப் பின் பணத்தையும் நேரத்தையும் அங்குள்ள மக்கள் அவர்களுக்காகவே செலவிடுகிறார்கள். ஆனால் இங்கே நம் பெற்றோர்கள் பணி ஓய்விற்குப் பின்னும் ஏதோ ஒரு வேலை செய்வதும், பணத்தையும் நேரத்தையும் குழந்தைகளுக்குச் செலவிடுவதையுமே பாக்கியமாக நினைக்கிறார்கள். இது நம் நாட்டு பிள்ளைகளுக்குக் கிடைத்த வரம்தான். இருப்பினும் இந்த வரத்தை அளித்த தெய்வங்களுக்கு நாம் குறைந்த பட்சம் ஒரு சுற்றுலாப் பயணம் ஏற்பாடு செய்து கொடுக்கலாமே.

-சு. நாக சரஸ்வதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

அம்மாஅப்பாவுக்கு ஓர் அன்பின் மடல்! #MyVikatan

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக்கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணைய வெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/