Published:Updated:

சிறுகதை: நித்ய சுமங்கலி

நித்ய சுமங்கலி
பிரீமியம் ஸ்டோரி
நித்ய சுமங்கலி

நக்கனுக்கு முதல் ஆளாக வந்து தன்னுடைய அன்பிற்குரிய நாயகனைப் பார்த்துவிட வேண்டும். அதுவும் தனிமையில் பார்க்க வேண்டும்.

சிறுகதை: நித்ய சுமங்கலி

நக்கனுக்கு முதல் ஆளாக வந்து தன்னுடைய அன்பிற்குரிய நாயகனைப் பார்த்துவிட வேண்டும். அதுவும் தனிமையில் பார்க்க வேண்டும்.

Published:Updated:
நித்ய சுமங்கலி
பிரீமியம் ஸ்டோரி
நித்ய சுமங்கலி

ள்ளியறையில் பெருமானைத் துயிலெழுப்பத் தயாரானாள் நக்கன்.

திருக்காப்பிடப்பட்ட பள்ளியறையைத் தானே முதலில் திறக்க வேண்டும், திருக்காப்பிடும்போது ஊஞ்சலில் தூங்கவைத்துச் சென்ற எம்பெருமான் அயர்ந்து உறங்குவதைக் கண்ணிறையக் காண வேண்டும், உலகையே விழிக்கச் செய்யும் முதல்வன் உறங்குவதைக் காணும் பேறுபெற்றவள் நான் மட்டும்தானே... என்ற பெருமிதத்தில் நக்கன் முதல் ஆளாய்க் கோயிலுக்குள் நுழைந்தாள்.

கோயிலின் அதிட்டானத்தில் கால்வைத்துத் தாண்டும்போது, தன் ராஜ்ஜியத்திற்குள் நுழையும் அரசியைப்போல், தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட மாளிகையில் பவனிவரும் செல்வச் சீமாட்டிபோல், கம்பீரமாக உள்ளே வந்தாள். தன் நாயகனை நினைத்து, உள்ளத்தில் பக்தி மேலோங்குவதைவிட, காதலே மேலோங்கியது.

இன்று சிவனின் பிறந்த நாள் மங்கலம். திருவாதிரை நட்சத்திரம். சிவனுக்கு அலங்காரம் விசேஷமாக இருக்க வேண்டும்.

`சில நாழிகைக்கு முன்னர் நீரில் கிடந்த உடம்பா இது... ஆடை ஈரமாய் இருக்க, உடம்போ துளி ஈரமின்றி இருக்கிறதே...' என யோசித்தபடி, நக்கன் இடுப்பில் செருகியிருந்த கோயில் சாவியை எடுத்து, கதவைத் திறந்தாள். காத்திருந்ததைப்போலவே பூட்டு, நா விலகிக் கொண்டது. தாழ்ப்பாளைத் திறந்து, மீண்டும் பூட்டை நாதாங்கியில் பூட்டிவிட்டு, கதவைத் திறக்கப் பார்த்தாள். பெரிய மரக்கதவு அவளின் பூங்கைக்கு அசையவில்லை. உடல்பலத்தோடு மனபலம் கூட்டி, கதவைத் தள்ளினாள்.

‘சர்ரக்...’ என்று சப்தம் எழுப்பியபடி மரக்கதவு அசைந்து கொடுத்தது. ஓதுவார் தினமும் இவளிடம் கோபித்துக்கொள்வார். “நான் வருவதற்குள் என்ன அவசரம்... ஏன் ஓர் ஆளாக மல்லுக்கட்டிக் கதவைத் திறக்கிறாய்? சொல்வதைக் கேட்கவில்லையென்றால், உன்னிடமிருக்கும் சாவியை நான் வாங்கி வைத்துக்கொள்வேன்” என்று பல முறை சொல்லியும் நக்கன் கேட்பதில்லை.

சிறுகதை: நித்ய சுமங்கலி

நக்கனுக்கு முதல் ஆளாக வந்து தன்னுடைய அன்பிற்குரிய நாயகனைப் பார்த்துவிட வேண்டும். அதுவும் தனிமையில் பார்க்க வேண்டும். எல்லோரும் வந்த பிறகு, எல்லோருடனும் சேர்ந்து பார்ப்பதில் அவளுக்கு உடன்பாடு இருப்பதில்லை. அர்த்த ஜாம பூஜை முடிந்த பிறகும் அவள் உடனே கிளம்பிவிட மாட்டாள். பள்ளியறைப் பாடல்களைப் பாடி, தன் நாயகனைத் தாலாட்டி முடித்த பிறகும் நக்கனின் கால்கள் நகராது. தானும் பள்ளியறைக்குள் செல்ல வேண்டும், அவனுடன் உறங்க வேண்டும், தன் நாயகனைத் தூங்கச் செய்துவிட்டு, தான் ஏன் வெளியில் செல்ல வேண்டும் என மனம் முரண்டுபிடிக்கும். “நேரமாச்சு, நேரமாச்சு, கிளம்பி வா” என ஓதுவார் சொல்வது இவளுக்குக் காதிலேயே விழாது.

*

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கண்ணுறங்கும் பிரபஞ்சத்தின் எந்தப் பகுதியை முதலில் விழிக்கச் செய்வேன்? அருள் வேண்டி காலடியைத் தொட்டுத் தொட்டு அடியார்கள் செய்த வேண்டுதலில் சிவந்துகிடக்கும் பெருமானின் செந்தாமரைமலர்ப் பாதங்களைத் தொட்டு விழிக்கச் செய்யவா? கூம்பிய தாமரைமலர்போல் ஒளிர்ந்து கிடக்கும் பாதங்களைப் பார்ப்பவர்கள் எல்லோரும் வேண்டுவது சரணாகதி ஒன்றைத்தானே! `ஐந்தொழிலுக்கும் நானே கர்த்தா' என்ற பெருமிதத்தில் எம்பெருமான் ஆடும் ஆனந்தத் தாண்டவத்தில் சுழன்றாடும் பாதங்களா இவை... பார்க்கும் விழிகளுக்கு ஆனந்தப் பரவசம்.

கால் விரல்களா, கை விரல்களா என்பதைப் பிரித்தறிய முடியாமல் ஒன்றைவிட ஒன்று நளினமாக இருந்தது. பெருமானின் அடிகளைத் தவிர்த்து உடலின் வேறெந்தப் பகுதியையும் நெருங்குவதில் இன்னும் கூச்சமிருக்கிறது. தேவனின் மனைவியாக, முதன்மைச் சேவகியாகக் கோயிலுக்குள் அடியெடுத்துவைத்து ஆண்டுகள் பலவாகிவிட்டன. அவன் எழில் ரூபத்தைக் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மனம் அவனில் திளைத்துக்கிடக்கிறது. என் ஆன்மாவின் ஒவ்வோர் அணுவிலும் அவன் திருநாமம். உடலைத் தீண்டுவதில் மட்டும் இன்னும் கூச்சம்.

அவனின் திருவிழிகளில் தாமரைப் போதின் குளிர்ச்சிபட, விழிக்கச் செய்யலாம். அருள்பாலித்துச் சோர்ந்துபோன கண்களுக்கு இன்னும் கொஞ்சம் ஓய்வு கிடைக்கட்டுமே... எம்பெருமானுக்கு நேர்ந்து விடப்பட்டதற்குக் காரணமே, அவனைப் பார்த்துக்கொள்ளத்தானே! சிறு கோபம் பெருகிடினும் பெருமான் திரிபுரத் தாண்டவத்தைத் தொடங்கிவிடுவானே! திருக்காப்பு நீக்கி, அவனை விழிக்கச் செய்து, மீண்டும் திருக்காப்பு நாண் சாத்தி அவனை உறங்கச் செய்வதுவரை குறையேதுமின்றிப் பார்த்துக் கொள்ளத்தானே நான்?

சிறுகதை: நித்ய சுமங்கலி

நான் இறைவனின் மனைவி. இறைவி. இறைவன் உலகையே ரட்சிக்கிறான். நான் அவனை ரட்சிப்பவள். உமையவள் இறைவனின் சரிபாதியாக இருக்கலாம். இத்திருக்கோயிலில் நானே அவனின் நடமாடும் மனைவி. உமையவளின் மானுடப் பிரதி. பெருமான் வீற்றிருக்கவே இத்திருக்கோயில். பெருமானின் அருள்பெற, பூசைகளும் சடங்குகளும் நடக்கின்றன. அவனை மகிழ்விக்க நிருத்தம் ஆடப்படுகிறது. இசையும் வாத்தியங்களும் இசைக்கப்படுகின்றன. மடப்பள்ளியில் அவனின் விருப்பமான உணவு தயாரிக்கப்பட்டு ஸ்ரீபலி கொடுக்கப்படுகிறது. ஸ்தல விருட்சம் அவனின் குண இயல்பாக வளர்ந்து நிற்கிறது. பெருமானின் திருவிளையாடல்கள் சிற்பங்களாக வடிக்கப்படுகின்றன. அவனின் வண்ணங்கள் ஓவியங்களின் நிறங்களுக்குள் பொதிந்து வைக்கப்படுகின்றன. நானே இத்திருக்கோயிலில் முதன்மையானவள். இல்லறத்தில் பெண்ணே தலைமைப் பொறுப்பை ஏற்கிறாள். கோயிலில் பெருமானின் மனைவியாகிய நானே முதன்மையானவள். மனைவிக்கே பள்ளியறைக்குள் நுழையும் அதிகாரம் இருக்கிறது. எம்பெருமானின் உருவற்ற உருவை தரிசிக்கையில் நான் என்னை மறக்கிறேன். இவ்வுலகத்து உயிர்களையெல்லாம் உய்விப்பவன், என்னால் உய்விக்கப்படுகிறான் என்ற கர்வம் எனக்குள் ஊறிக்கிடக்கிறது.

*

பள்ளியறையில் தன் மனதுக்கினியானை முதல் ஆளாக தரிசித்த நக்கன், ஈர ஆடையில் நெய்க் குவளையுடன் ஆலயத்தின் கருவறைக்குள் வந்தாள். செஞ்சாந்து பூசப்பட்ட அவளுடைய முலைக்காம்புகள், செங்காந்தள் மலர்களாகக் குவிந்திருந்தன. அகிலும் சந்தனமும் பன்னீரும் குழைத்துப் பூசப்பட்ட நக்கனின் உடல் சந்தனப் பேழையாக மணந்தது. இருளில் தேவலோகப் பூவாக அவளின் உடல் ஒளிர்ந்தது. இடையில் மடித்துச் செருகப்பட்டிருந்த வெண்பட்டு, அவளின் உடல் நெளிவுகளுக்கேற்ப உடலுடன் ஒட்டியிருந்தது. பருத்திருந்த கணுக்கால்கள் அவளின் நடனத் தேர்ச்சியை வெளிக்காட்டின. அவளின் ஒவ்வோர் அடியிலும், தான் இந்தக் கோயிலின் அபூர்வ மலர் என்ற பெருமிதம் தெரிந்தது. நடையில், உடையில் அவளின் கம்பீரம் வெளிப்பட்டாலும், அவளின் இதயம் நீருக்குள்ளேயே அழுகிய தாமரைத் தண்டாகச் சோர்ந்திருந்தது.

கருவறைக்கு முன்னாலிருந்த சரவிளக்கில் திரியைத் தூண்டி, நெய் ஊற்றினாள். நந்தா விளக்கிலிருந்து ஒரு திரியை எடுத்து சரவிளக்கை ஏற்றினாள். ஒவ்வொரு திரியாக ஏற்ற, கருவறையில் பிரகாசம் கூடியது. ஆவுடையாரின் தாமரைகள் ஒளிர்ந்தன. லிங்கத்தின் கருமேனியில் ஒளியின் சுடர்கள் தெறித்தன. கருவறை முழுக்க ஒவ்வொரு விளக்காக ஏற்றினாள். பெருமானின் கருணையாக ஒளி படர்ந்தது. ஒளியின் நறுமணம் படர்ந்தது.

விடிவதற்கு இரு நாழிகைக்கு முன்பு கருவறையில் அடர்ந்திருக்கும் இருளையகற்றி, முதல் தீபத்தை ஏற்றும்போது அந்த நறுமணத்தை உணரலாம். நெய் தீபம் ஏற்றியவுடன், கருவறை ஒளியின் நறுமணத்தில் நிறையும். இறைவன் ஒளியால் ஆனவன் என்றால், அவனின் நறுமணம் இதுதான். நக்கன் ஒளியின் நறுமணத்தை தினம் அனுபவிப்பாள். கருவறை ஒளிரத் தொடங்கியவுடன், வெகுதொலைவில் புள்ளினங்கள் விழிக்கும் சப்தம் கேட்கும். ஒளியின் நறுமணத்தைப் புள்ளினங்களும் அறியும்போல. விடியலின் முதல் க்ஷணத்தைப் புவியில் புள்ளினங்கள்தானே முதலில் உய்க்கின்றன.

நந்தா விளக்கெரிக்க தானம் கொடுக்கப்பட்ட ஆடுகளின் பாலிலிருந்து காய்ச்சி எடுக்கப்பட்ட நெய். திருக்கோயிலின் விளக்கெரிக்க நெய் தரும் ஆடுகள் என்பதால், அவை மலைகளுக்கு மேய்ச்சலுக்குச் செல்வதில்லை. நஞ்சை நிலத்தின், காவிரிப் படுகையில் தங்கள் உயரத்திற்குமேல் வளர்ந்திருக்கும் பசிய புற்களை மட்டுமே உண்டு வளருபவை. நெய்யிலும் பசிய நறுமணம் இருக்கும். கருவறையில் ஏற்றப்படும் சிறு விளக்கும் பேரொளியாய் இருட்டில் பரவும்.

நக்கன் ஒவ்வொரு விளக்கையும் ஏற்றிவிட்டு இடம்பெயரும்போது, அவளின் காலடிச் சிறு தீச்சுவாலையாக ஒளிரும்.

இருள்தான் ஒளிக்கு அழகு. இருளில்தான் ஒளி பன்மடங்கு ஒளிர்கிறது. ஒளி அழகாக இருக்கிறது என்பதை இருளே சொல்கிறது.

நக்கன் திருக்கோயிலின் இருளாகவும் ஒளியாகவும் இருந்தாள். அவள் ஏற்றிச் செல்லும் விளக்குகள் ஒளிர, இருளாக அவ்விடத்திலிருந்து முன்னகர்ந்து கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில், ஊரே இருளில் இருக்க, கோயில் பெரிய நெய்விளக்காக நின்றெரியத் தொடங்கியது.

மேளக்காரர்கள் கோயிலுக்குள் வந்தார்கள். கருவறைக்கு முன் நின்றவர்கள் இறைவனை வணங்கி, கருவறைக்கு வெளியிலிருந்த இசைக்கருவிகளை எடுத்தார்கள். கல் நாகசுரத்தின் உள்ளிருந்த நாதம் இரவின் குளிர்ச்சியில் உறைந்திருந்தது.

பணிப்பெண்ணின் பணிவுடன் நாகசுரத்தின் உறையைப் பிரித்தெடுத்த வாத்தியக்காரர், நாகசுரத்தின் சீவாளியைத் தன்னுடைய வெண்பட்டால் துடைத்தார். உள்ளிருக்கும் ராகங்கள் அழுந்திவிடுமோ என்ற அச்சத்தில் நாகசுரத்தை மென்மையாகக் கையாண்டார். அவரவர் வாத்தியம் அவரவர் குழந்தையாகக் கைகளில் அடைக்கலமாகின. ‘ஒத்தி’லிருந்து ‘டம்’ என்ற ஒலி எழுந்தது. நக்கனுக்குள் அந்த முதல் நாதம் சிலிர்ப்பை உண்டாக்கியது.

சிறுகதை: நித்ய சுமங்கலி

“அர்த்தசாம பூசையில் தினம் உன்னை ஊஞ்சலில் உட்காரவைத்து, உன்னருகில் உமையையும் அமர்த்தி, இருவரையும் சேர்த்துவைத்துத் தாலாட்டுப் பாடும்போது, நீ கண் செருகி என் பாடல்களில் லயித்திருப்பாய் அல்லது நான் அப்படி நினைத்துக்கொள்வேன். `உலகத்தையே உய்விப்பவன் என் தாலாட்டில் மயங்கிக் கிடக்கிறானே...' எனப் பெருமிதமும் கொள்வேன். கர்வம் உச்சியைப் பிளக்கும். `திரிபுரத் தாண்டவத்தில் கொப்பளித்து எழும் கண்களை உடைய எம்பெருமானா இது...' என்று நான் வியந்துபோகும் வண்ணம், கண்கள் பெருங்கருணையைத் தவழவிடும்.

உமை, தன் பணியைச் சேவகியிடம் கொடுத்த மகிழ்வில், தானும் மயங்கிக்கிடப்பாள். `தாலாட்டில் நீ உறங்குவதற்கு பதிலாக உயிர் பெற்றுவிடக் கூடாதா...' என்று ஒவ்வோர் இரவும் ஏங்குவேன். `காளையைப் போன்று விரிந்தகன்ற மார்பும், மேடிட்ட நெற்றியும், குமிழ்ச் சிரிப்பும், திரண்ட தோள்களும், வடிவான கால்களும் உயிர்த்தெழுந்து என்னை அணைத்துக்கொண்டால் எப்படியிருக்கும்' என்று எண்ணும்போதே உடல், சுதி கூட்டப்பட்ட வாத்தியமாகி நிற்கிறது.

`பன்னிரண்டு வயதில் நீயே எல்லாம், நான் உன் தாசி என்று உன் காலடியில் வைக்கப்பட்டிருந்த திருநாணை கோயில் பூசாரி என் கழுத்தில் கட்டிவிட்டபோது, கோயில் மடப்பள்ளியிலிருந்து எனக்கு மூன்று வேளை உணவு கிடைக்கும் என்ற எண்ணமே மகிழ்ச்சியாக வைத்திருந்தது. கோயிலில் யார் கட்டுப்பாடும் இல்லாமல் விளையாடலாம், உனக்கு இருவாட்சிப் பூப்பறித்து மாலை கோத்துத் தரலாம், திருக்கோயிலைப் பெருக்கிச் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம் என்ற விளையாட்டுத்தனம்தானே மனத்திற்குள் நிரம்பியிருந்தது?

உன் திருநாமம் சொல்லி நிருத்தியம் ஆடவும் பாடவும் கற்றுக்கொண்டபோது நான் ருதுவாகி இருந்தேன். என் வயதுப் பெண்கள் எல்லோரும் விரும்பிய ஆடவரை மணமுடித்து, குழந்தைகளுடன் இருக்க, நான் உன் காலடியில் கல்லாகக் கிடக்கிறேன். கல்லான உனக்கு நான் மனைவியானவுடன் என் உடலும் கல்லாகியிருக்கலாம்.'

நாகசுரமும், தவில் இசையும் அருகில் கேட்கத் தொடங்கியது. வெளிப்பிராகாரம் சுற்றி முடித்து உட்பிராகாரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள் சின்ன மேளத்தினர். ஊஞ்சலில் கண்ணயர்ந்திருக்கும் உன்னைக் கண்விழிக்கச் செய்ய, பூபாள ராகத்தை நாகசுரத்தில் குழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரவும் பகலும் பருவமும், விழிப்பும் உறக்கமும் இல்லாத உன்னை நாங்கள் உறங்கச் செய்கிறோம். இப்போது விழிக்கச் செய்கிறோம். கருவறைக்கும் பள்ளியறைக்கும் நடைபயிலும் என்னை முன்விட்டுப் பின் பேசுவார்கள். பரந்தகன்ற இத்திருக்கோயிலுக்குள் மின்னலென மறையுமென்னை, அதுவும் இப்போது நான் உன் காலடியில் நின்றிருப்பதைப் பார்த்தால் வம்பு பேசுவார்கள். உமையுடன் உமையவன் இருக்கும்போது வெறித்துப் பார்ப்பது சரியா என்று வெட்கம் வர கேலி பேசுவார்கள். உறக்கத்திலிருந்து எழுந்திரு எம்பெருமானே. என்னைப் புரியாததுபோலவே இருக்கும் உன் விளையாட்டிலிருந்தும் விழித்திடு. அருள் வேண்டும் உன் பக்தர்களுக்கெல்லாம் அருளும் கருணை உள்ளம் கொண்டவனே, நீயே அடைக்கலம் என்றான இந்த நக்கனை மட்டும் ஏன் வதைக்கிறாய்?

`பார், புலரியில் உன்னை இன்பமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றே இத்தனை இசைக்கருவிகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மனம் உன்னுடன் பேசிக் கொண்டிருந்தாலும், உடல் பாவத்துடன் தாளத்திற்கேற்ற அபிநயத்துடன் `தலப்புஷ்பப்பட' கர்ணத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. என் சலங்கைகளின் கொஞ்சல் ஒலி கேட்டுத்தானே தினம் கண் விழிக்கிறாய். நீயே பேரின்பமாக இருக்க, உனக்கான சிற்றின்பமாக நான் இத்திருக்கோயிலில் இருக்கிறேனே பெருமானே? நீ விழி மூடியிருந்தாலும், உலகின் காலடிகள் உன் கருவிழிகளுக்குள் அகப்படாமல் இயங்க முடியாதே... நக்கன் என்னும் இந்த நாட்டிய ஒளியான நான் மட்டும் உன் விழிகளுக்குள் அகப்படாமல் இருக்கிறேனா?

பெருமானே, விழிப்பிலிருந்து எழுந்தருள்வாய். பூபாளத்திலிருந்து தேவகாந்தாரிக்கு வந்துவிட்டார்கள். தொலைவில் கோயில் யானையின் பிளிறல் கேட்கிறது. உன்னை நீராட்ட கோயில் குளத்திலிருந்து திருமஞ்சன நீரைச் சுமந்து வந்து கொண்டிருக்கிறது. ஆவினங்கள் விழிக்கும் நேரம். விழித்தெழுவாய் இறைவா' என்று நக்கன் வேண்டிக் கொண்டிருக்கும்போதே, உட்பிராகாரத்தின் வாசிப்பை முடித்துக்கொண்டு, பள்ளியறை நோக்கி வந்துகொண்டிருந்தது சின்ன மேளம். சின்ன மேளத்திற்கு முன்னால் பல்லக்கைத் தூக்கியபடி கோயில் பல்லக்குத்தூக்கிகள்.

“உன்னுடன் தனித்திருக்கும் நேரம் முடிந்தது பெருமானே” என்று சோகம் கவிழ நக்கனின் இதழ்கள் முணுமுணுத்தன.

பல்லக்கில் உட்காரவைக்கப்பட்ட இறைவனும் இறைவியும் கோயிலின் அர்த்தமண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். திருமஞ்சனத்துக்காகக் கொண்டு வரப்பட்ட நீர், சந்தனம், இளநீர், நெய், தயிர், தேன், மஞ்சள், குங்குமத்துடன் நந்தியாவட்டை பன்னீர்ப் பூக்களும் தயாராக இருந்தன. கோயிலின் ஓதுவார் ஒவ்வொரு புனிதப்பொருளாலும் இறைவனுக்கான ஆராதனைகளைச் செய்யத் தொடங்கினார். திருமஞ்சன நீரால் இறைவன் நீராட்டப்பட்டார். ஒவ்வோர் அபிஷேகப் பொருளாலும் இறைவனுக்கான குளியல் நடக்கும்போதும் நக்கன் பரவசத்துடன் திருச்சிலையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய உதடுகளில் தெய்வ நிலை குடிகொண்டிருந்தது.

அவள் உடல் காமத்துக்காக ஏங்கினாலும், அர்த்த மண்டபத்தில் அவளே இறைவனின் அபிஷேகத்துக்காகக் காத்திருக்கும் புனித மலரைப்போல் மலர்ந்திருந்தாள். இறைவனை மகிழ்விக்க திருப்பள்ளியெழுச்சி பூசைகள் நிதானமாக நடந்தன. நக்கன் எதிரில் பாவத்தில் திளைத்திருந்தாள். ஆராதனைகள் ஒவ்வொன்றாக முடிய, இறைவனின் திருவுருவம் ஒளிர்ந்தது. புதுத்துணி அணிவிக்கப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இறைவனின் நெற்றிப்பிறையில் மஞ்சளும் குங்குமமும் வைக்கப்பட்டன. உள்ளங்கையில் சந்தனத்தின் சிறு கீற்று வைக்கப்பட்டவுடன், அர்த்த மண்டபம் குளிர்ந்தது. உமையின் நெற்றியில் அடர்த்தியாக வைக்கப்பட்ட குங்குமம் சுடரென மிளிர்ந்தது. அவளின் கண் இமைகளை மஞ்சளால் திறந்தவுடன் கனிவு ததும்ப உலகைப் புதுப் பார்வை பார்த்தாள்.

ஓதுவார், தேவாரத்தின் பதிகங்களை உரத்த குரலில் சொல்லி, சரவிளக்கின் தீபங்களை ஒவ்வொன்றாகத் தூக்கிவிட்டார். பிரபஞ்சத்தின் சிறு துளியாக இருந்த அர்த்த மண்டபம் ஒளிவெள்ளத்தில் பிரபஞ்சமாக உருத்திரண்டது. தீப ஆராதனை. ஒளி மூலவனுக்குக் கற்பூர ஆராதனை. துயிலிலிருந்த இறைவனை விழிக்கச் செய்து, குளிர் நீராட்டி, அலங்கரித்து, மனம் குளிர்வித்து, அவருடைய இருக்கையில் அமரச் செய்தார்கள். இனி இறைவன் தன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது ஆரம்பமாகும்.

அலங்காரம் முடிந்தவுடன் நக்கன் கும்பாரத்தி எடுத்தாள். பித்தளைக் குடத்தில் மஞ்சள் கரைக்கப்பட்ட நீரில், எலுமிச்சைப்பழத்தின்மேல் கற்பூரம் ஏற்றி இறைவனுக்குக் கண்ணேறு சுற்றினாள்.

“உலகின் பேரழகனான உன்னை அலங்கரித்திருக்கிறோம். உன் பக்தர்களின் கண்பார்வை உன்னைத் தாக்காமலிருக்க உனக்குக் கண்ணேறு எடுக்கிறேன் எம்பிரானே” என்று நக்கன் கும்பாரத்தியைச் சுற்றினாள்.

இறைவனின் முன்னால் மூன்று முறை மேலும் கீழும் சுற்றியவள், வெளியில் வந்து எலுமிச்சைப்பழத்தை நான்காகப் பிரித்து, நான்கு திசைகளிலும் வீசி எறிந்தாள். நாட்டை ஆளும் அரசனுக்கும், உலகை உய்விக்கும் இறைவனுக்கும் நக்கனே கண்ணேறு எடுப்பவள். அரசனின் திருநெற்றியில் நெற்றித் திலகமிட அவளே அனுமதிக்கப்பட்டவள்.

கும்பாரத்தி சுற்றிய நக்கன் கோயிலின் கருவறை முன் நின்றாள். இரு கைகளைக் குவித்து இறைவனை நோக்கித் தலைகுனிந்து நின்ற அவளுக்குக் கோயிலின் ஓதுவார் வெண்பட்டுத் துண்டால் தலையில் பரிவட்டம் கட்டி, கழுத்தில் மாலை அணிவித்தார். இறைவனின் சேவகியாக அவளே இத்திருத்தலத்தின் முக்கியமானவள்.

கும்பாரத்தி எடுத்தவுடன், நக்கனுக்குப் பரிவட்டம் கட்டப்பட்டது. தலைவணங்கி நின்று பரிவட்டம் கட்டப்படுவதை நெகிழ்ந்து ஏற்கும் நேரத்தில் நக்கனின் கண்களில் நீர் வழிந்தோடியது. ``பெருமானே, எனக்குக் கிடைக்கும் எல்லா மரியாதைகளும் உன்னால்தான். உன் தாசி என்பதால்தான் என்னிடம் அரசன் நெற்றித் திலகம் இட்டுக் கொள்கிறான். உன் திருக்கோயிலின் முதல் மரியாதை எனக்குக் கிடைக்கிறது. என்னைத் தவிர இத்திருக்கோயிலில் அதிக உரிமை கொண்டவர்கள் யாருமில்லை. என்னுடலும் இசையும் உனக்கே. உடல் உனக்குத்தான் என்று பன்னிரண்டு வயதில் நேர்ந்துவிடப்பட்டவள் நான். ஆன்மா உன்னையே நினைக்கிறது. உடலின் உணர்ச்சிகளை நான் என்ன செய்வேன் பெருமானே?

என் உடலைப் பார். அல்லித்தண்டின் உட்குருத்தைப் போன்ற மெல்லிய என் தேகம் உனக்கு மட்டுமே என்கிறார்கள். நீயே என்னை ஆட்கொள்ள வேண்டியவன். துன்பத்தில் உழல்பவர்களுக்கு அருள்பாலிக்கிறாய். நோய் வந்தவர்களை குணமாக்குகிறாய். உன்னடிமையான என் தனிமையை நீ எவ்விதம் போக்குவாய்... கற்சிலையான உன்னிடம் நான் என்ன அன்பை எதிர்பார்ப்பேன்?

உன்னை நேசிப்பதற்கு அடியார்கள் இருக்கிறார்கள். பணிவதற்கு பக்தர்கள் இருக்கிறார்கள். அருள்வேண்டிக் காத்திருப்போர் ஆயிரமாயிரம் குடிகள். உன் கடைக்கண் பார்வைக்காகப் பிரபஞ்சமே தவம் இருக்கையில், பெருமானே நான் எதற்கு உனக்கு... என் சேவை எதற்கு... அழுதழுது உன் வரம் வேண்டுவோர் இருக்க, என் நெருக்கம்தானா உன்னை மகிழச் செய்யும்?

இத்திருக்கோயிலைப் பார். எங்கள் அரசனின் அரண்மனையைவிடக் கல்லாலான உன் திரு இல்லமோ பெரியது. ராஜ்ஜியங்களை வாள்முனையில் வெற்றி கொண்டுவரும் அரசரும் உன் முன் இருகரம் குவித்து, தலைவணங்கி நிற்கிறார். உனக்குக் கட்டுப்படாதோர் யாருமுண்டோ? அடியார்களின் தமிழ் உன் புகழ் பாடி நெக்குருகி நிற்கிறது. ஆச்சாரியார்களின் மந்திரங்கள் புராணக் கதைகளில் உன்னை விஸ்வரூபனாக்கி மகிழ்கின்றன.

நாள் முழுவதும் உன்னுடைய பெருமைகளைப் பேசி, புகழ்ந்து பாடி, அபிநயத்து, பாவம் பிடித்து, உன்னுடைய நினைவுகளோடு நடமாடிவிட்டு, இரவு கோயிலைவிட்டுப் புறப்படச் சொல்லும் க்ஷணத்தில் என் மனம் படும் பாட்டை நீ அறிவாயா? இரவு முழுவதும் உறங்காமல், உடலும் மனமும் அமைதிகொள்ளாமல் தவித்திருக்க, ஓடோடி வந்து பள்ளியறையில் துயிலும் நாயகனைப் பார்க்க வேண்டும் என்ற தவிப்பே முதல் ஆளாகக் கோயிலுக்குள் நுழைவதற்குக் காரணம்.

“கல் நாகசுரத்திலிருந்து வழிந்தோடும் இனிமையான அந்த நாதம் நீண்டு தொங்கும் உன் காதுகளுக்குக் கேட்கிறதா... கல்லிலிருந்து இசை பிறக்குமா... உன் மீதான அன்புதானே கல்லையும் உருகவைக்கிறது?

அருவுருவமாய் நிற்கும் லிங்கம். கை, கால், முகம், கண்கள், தலை எனக் கண்ணுக்குப் புலனாகும் தனித் தனி உறுப்புகளுடன் இருந்தால், உடலின் ஏதாவது ஓர் அங்கத்தைப் பார்த்தாவது பேச முடியும். சிரிக்கும் கண்கள் தெரிந்தால், குமிழ்வாய்ச் சிவந்த உதடுகள் தெரிந்தால் பார்த்தாவது பசியாறலாம். உன்னிடம் எதைப் பார்த்துப் பேசுவது லோகநாயகனே?

நீ உருவமா... அருவமா? அருவமெனில், உனக்கு உருவமெதற்கு... உனக்கு இசை எதற்கு...நடனம் எதற்கு... சேவை செய்ய பெண்கள் எதற்கு... அருவுருவாய் நிற்கும் உனக்கு நான் என்ன சேவை செய்ய முடியும்...

ஏன் உனக்கு என்னைத் திருமணம் செய்துவைத்தனர்... திருமணமான கணவனும் மனைவியும் வாழும் குடும்ப வாழ்வை உன்னால் எனக்குத் தர இயலாதா... உன்னுடைய உலக பராக்கிரமங்களைப் பேசிப் பேசி என் நாள்கள் கழிகின்றனவே?

பெருமானே, என்னின் இந்தத் தேகம் உன்னுடையதல்லவா. உனக்கானதல்லவா. உன்னில் கலந்து கரைந்துபோக வேண்டியதல்லவா. நீர்த்துளிகூட இந்த தேகத்தில் ஒட்ட மறுத்து வழிந்தோடுகின்றதே... உன்னை உமையுடன்விட்டு, என்னால் தனித்திருக்க முடியவில்லை. தனித்திருக்கும் என் இரவுகள் என்னை அலைபாயச் செய்கின்றன.

ஆறுகாலப் பூசையின்போது உன் முகத்தைப் பார்த்துப் பார்த்துப் பரவசப்படும் எனக்கு, இரவு நேரங்கள் தனிமையின் இருளைப் பரிசளிக்

கின்றன. பள்ளியறைப் பாடலைப் பாடும்போதே கனன்றெழத் தொடங்கும் என் தேகம், உன் அணைப்புகளின்றிச் கருகிச் சாம்பலாகிறது.

என்னை ஏன் உனக்கானவளாக நேர்ந்துவிடச் சொன்னாய்? பொட்டுக் கட்டி, `உனக்கு இன்று முதல் நான் சேவகம் செய்பவள், மனைவியானவள், உன்னையன்றி வேறோர் ஆடவன் என்னைத் தீண்ட விட மாட்டேன்' என ஏன் என்னை உறுதியேற்கச் செய்தாய்?

உனக்கு அழிவில்லை. உன்னை மணந்ததால் நான் நித்ய சுமங்கலி. நித்ய சுமங்கலி பட்டம் போதுமா? மங்கலம் என் உடலில் தங்க வேண்டாமா? நுட்பமாகச் செதுக்கப்பட்ட கோபுரத்துச் சிலையாக நான் நிற்கிறேன்.

எம்பெருமானே, உன் அலகிலா விளையாட்டின் அங்கமாய் என்னைக் கல்லாக்கிவிடு. உன் திருக்கோயிலின் இருள் பிராகாரத்தின் ஓரத்தில் சமைந்துவிடுகிறேன். இல்லை, கல்லிலிருந்து உயிர்பெற்று வா. வெதுவெதுப்பான உன் திருமேனியை ஒரேயொரு முறை ஆரத் தழுவி, பின் மரித்துப்போகிறேன் நான்.

எனக்கென்று வாழ்வில்லை. எனக்கென்று உணர்வில்லை. வாழ வேண்டிய பருவத்தில் என்னைக் கோயிலுக்குள் நேர்ந்துவிட்டு, ஊரே அவரவர் வாழ்க்கையை வாழ்கிறது. பெருமானே நீ கூட உமையவளுடன் பள்ளியறைக்குச் செல்கிறாய்.

உனக்காக இசைத்து, உனக்காக ஆடி, உன் நாமம் புகழ்ந்து, உன் மனைவியாகி நான் தனித்திருக்கிறேன். ஒவ்வோர் இரவும் எனக்கென்று யாருமற்ற தனிமையில் நான் கருகுகிறேன். உலகின் முதல்வனான உனக்கே இந்த நியாயம் புரியாதபோது நான் யாரிடம் முறையிடுவது? யாருமற்றவளாகப் புறக்கணிக்கப்படும் நானும், இந்த உடலின் வேட்கையும் யுகங்கள் கடந்தாலும் அழியாது.

உன் திருநாணைக் கட்டிக்கொண்டதால் நான்

நித்ய சுமங்கலி. நித்ய சுமங்கலி என்ற வரத்துக்குள், நித்ய கன்னியென்ற சாபத்தை ஏன் மறைத்து வைத்தாய் பெருமானே?’’

பிறந்தநாள் நட்சத்திரத்தில், பூர்ண அலங்காரத்துடன், உமை சமேதரனாய், இதழ்க் கடையோரம் விகசிப்புக்கூடிய புன்னகையுடன் அமர்ந்திருந்தான் எம்பெருமான்.