Published:Updated:

``ஒலிப்பதிவுக் கூடத்தில் கலைஞர்..." - தமிழ்த்தாய் வாழ்த்து அனுபவம் பகிரும் பி.சுசீலா

பி.சுசீலா
பி.சுசீலா

பி.சுசீலா: 50 ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை இந்தப் பாடல் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்பப்படுகிறது. இதில் நானும் சிறுபங்கு வகித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்!

தமிழ்த்தாய் வாழ்த்து பற்றி பி.சுசீலா பகிரும்போது, "இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடமிருந்து வழக்கம்போல பின்னணிப் பாடல் பாடுவதற்கு அழைப்பு வந்தது. ஜெமினி ஸ்டூடியோவுக்குச் சென்றேன். அங்கு டி.எம்.செளந்தரராஜனும் வந்திருந்தார். அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியும் ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்தார்.

நாம் பாடவிருப்பது வழக்கமான சினிமாப் பாடல் இல்லை; சிறப்பு வாய்ந்த பாடலாக இருக்கக்கூடும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. 'நீங்கள் பாடவிருப்பது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்' என்று கூறிய எம்.எஸ்.விஸ்வநாதன், அந்தப் பாடலின் சிறப்பம்சம் மற்றும் பாடவேண்டிய விதம் குறித்தும் எனக்கும் டி.எம்.எஸ்ஸுக்கும் விளக்கினார். நாங்கள் இருவரும் இணைந்து அந்தப் பாடலைப் பாடினோம்.

பாடல் ஒலிப்பதிவு முடிவதற்குச் சில மணிநேரம் ஆனது. அதுவரை அருகில் அலுவலக அறையில் இருந்தவாறு ஒலிப்பதிவுப் பணிகளைக் கலைஞர் கவனித்துக்கொண்டிருந்தார். முடிவில் அந்தப் பாடலை ஒலிபரப்பினார்கள். அனைவருக்கும் பிடித்திருந்தது.

அதன் பிறகு எல்லா அரசு நிகழ்ச்சிகளும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலித்த பிறகே தொடங்கும். முக்கியமான அரசு நிகழ்ச்சிகளில் என்னையும் டி.எம்.செளந்தரராஜனையும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாட அழைப்பார்கள். சினிமாப் பாடல்களுக்கு இணையாக, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கும் பலரும் என்னை வாழ்த்தினார்கள். அதன்பிறகுதான் இந்தப் பாடலின் முக்கியத்துவம் எனக்குப் புரிந்தது.

50 ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை இந்தப் பாடல் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்பப்படுகிறது. இதில் நானும் சிறுபங்கு வகித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்!" என்றார் பி.சுசீலா.

- "ஒரு காலம் இருந்தது, அது தொல்பழங்காலம். இந்த மண்ணில் பிறந்த திராவிட மதம் மட்டுமே அந்நாளில் வழக்கில் இருந்தது" என்று பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞரும் தத்துவவியல் அறிஞருமான பெ.சுந்தரம் பிள்ளை கூறியபோது, அந்தச் சிந்தனைகள் பிற்காலத்தில் தமிழ் மனப்பரப்பில் அதிர்வலைகளை உருவாக்கும் என்று அவரே எதிர்பார்த்திருக்க முடியாது.

ஆனால் கேரளாவில் பிறந்து தென்தமிழ்நாட்டில் இயங்கியவரான சுந்தரனார் பிற்காலத்தில் தனித்தமிழ் இயக்கத்துக்கும் திராவிட இயக்கத்துக்குமான விதைகளை விதைத்த பல மேதைகளில் ஒருவர். அவரது பெயரில்தான் மனோன் மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இயங்குகிறது. (அவர் எழுதிய காவியமான மனோன்மணீயத்தின் பெயரையும் சேர்த்து அவரை மனோன்மணீயம் சுந்தரனார் என்று இன்று அழைக்கிறோம்).

பி.சுசீலா
பி.சுசீலா

அவர் எழுதிய மனோன்மணீயம் காவியத்தில் இடம்பெறும் ஒரு பாடலான 'நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்' என்கிற பாடல்தான் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டு இந்த ஆண்டுடன் ஐம்பதாண்டுகள் ஆகிவிட்டன.

சுந்தரனார் அந்த வரிகளை எழுதி முக்கால் நூற்றாண்டுக் காலம் கழித்து அந்த வரிகள் அப்படி ஒரு தேசிய இனத்தின் வாழ்த்துப்பாடலாக ஆனதற்குப் பின்னால் இரண்டு தலைமுறைக்கால அரசியல் போராட்டங்களைத் தமிழ்நாடு சந்தித்திருந்தது.

- இதுகுறித்து ஆழி செந்தில்நாதன் எழுதிய சிறப்புக் கட்டுரையை முழுமையாக ஆனந்த விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... > எத்திசையும் புகழ் மணக்க... https://bit.ly/3ex4FVn

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு