கணம்

பெற்றோரை அழைத்து வர

பணிக்கப்பட்டு

தலைமையாசிரியர் அறைமுன்பு

நின்றுகொண்டிருக்கும் மாணவன்

மகளைச் சுமந்தபடி

உச்சியேகும் ஊஞ்சல்

தரைக்கு வர

கைகள் விரித்துக்

காத்திருக்கும் தகப்பன்

மனைவியின் மருத்துவ

அறிக்கையை உற்று நோக்கும்

மருத்துவரின் முகத்தைப்

பார்த்திருக்கும் கணவன்

தூரத்து உறவினர்

வரும் வரை

சிதையேறாமல்

கண்ணாடிப் பேழைக்குள்

நீண்டிருக்கும் பிரேதம்

எல்லாவற்றிற்கும் முன்பாக

காத்திருக்கிறது

திடுக்கிடும் ஒரு கணம்.

- கே.ஸ்டாலின்

எல்லா மூங்கில்களும்...

மூங்கில் அனைத்தும்

இசைத்திருப்பதில்லை

சில மூங்கிலாகவே

இருந்திருக்கலாம்

சில கூரையேறி சூரியனுக்குத்

தடைபோட்டிருக்கலாம்

சில வயோதிகன் கூனுக்கு

முட்டுக்கொடுத்திருக்கலாம்

சில கன்னியின்

கைகளில் தாண்டியா ஆடியிருக்கலாம்

சில கூடையாகி சுமையைத்

தாங்கியிருந்திருக்கலாம்

எனவே எளிதில்

ஏற்றிவிடாதீர்கள்

அகராதிகளில்

மூங்கிலென்றால் வெறும்

இசைத்திருப்பதென...

- கெளந்தி மு

கோடை

கொளுத்தும் வெயிலில்

எல்லோரும்

பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறார்கள்

அவரவர் நிழலை மிதித்தபடி

வெயில் தாக்கும் இலைகளின்

கண்ணீர்க் குளுமையே

மரத்தடி நிழல்களாகின்றன

வியர்வைதான்

வெயில்காலத்திற்கான

மழைத்தூறல்

தகிக்கும் வெக்கையில்

வேலை செய்பவர்களுக்குக்

கொடுக்கப்படும் கூலியென்பது

வெயிலுக்கானது மட்டுமே

கோடைக்காலத்தின்

சொற்கள்கூட

வெம்மை தோய்ந்திருக்கின்றன

வெயிலென்பது

யாரையும்

பட்டப்பகலிலேயே

பயப்பட வைக்கும்

தீயின் குழந்தை.

- சாமி கிரிஷ்

பிம்பம்

கதவருகே நின்று

கத்திக்கொண்டிருக்கும்

பூனையின் கண்களுக்குள்

மீன்தொட்டியின் பிம்பம்

கையளவு நீரில்

கச்சிதமாய் நீந்தும்

மீனின் வாயருகே

உடையும் நீர்க்குமிழிகள்

என் இதயத்துடிப்பு

அதிகரித்தபடியே

அறைக்குள்.

-சிவ ஞானம்

தொட்டி இதயம்

ஆறடி நீளம்

இரண்டடி அகலக் கடலுக்குள்

கட்டைவிரல் அளவில் நீந்தத் தொடங்கிய மீனுக்கு

தனக்கெனத் தூவப்படும் பிரத்யேக

உணவு உருண்டைகளின் மீது

பூசிக்கிடக்கும் அதிர்ஷ்டங்கள் புரிவதில்லை

நீள்பாதை நோக்கி மட்டுமே

சப்பையாய் வளர முடிந்ததில்

ஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்க

மாதம் இரண்டு முறை வந்து போகும்

மன அழுத்த டாக்டர்

நிவாரணி ஊற்றிச் செல்கிறார்

அந்த மீனுக்குத் தெரியவில்லை

தன்னால் ஒரு டாக்டர் உருவாகியிருப்பதும்

தன் மன அழுத்தத்தால்

அந்த டாக்டரின் மன அழுத்தம்

கொஞ்சம் நீங்கும் என்றும்

அடுத்த முறை வரும் டாக்டரிடம்

நிச்சயம் கேட்க வேண்டும்

‘இந்தக் கடலை மீறி வளர

நான் என்ன செய்ய வேண்டும்?’

- தக்ஷன்

அதனதன் நிமித்தம்

ஒரு பூவுக்குக்கூட

பறக்கும் ஆசை இல்லை

ஓர் இலைக்குக்கூட

பூவின் வண்ணத்தில்

பொறாமை இல்லை

ஒரு வேருக்குக்கூட

ஆகாயம் பார்க்கும்

ஆசை இல்லை

ஒரு கொடிக்குக்கூட

கிளையின் உறுதியில்

கவலை இல்லை

ஒன்றைத் தாண்டி

ஒன்றை விரும்பினால்கூட

அது பேராசை என்ற எண்ணம்தான்

வாழ்தலின் ஆதாரம்.

-இளந்தென்றல் திரவியம்

கணம்

பெற்றோரை அழைத்து வர

பணிக்கப்பட்டு

தலைமையாசிரியர் அறைமுன்பு

நின்றுகொண்டிருக்கும் மாணவன்

மகளைச் சுமந்தபடி

உச்சியேகும் ஊஞ்சல்

தரைக்கு வர

கைகள் விரித்துக்

காத்திருக்கும் தகப்பன்

மனைவியின் மருத்துவ

அறிக்கையை உற்று நோக்கும்

மருத்துவரின் முகத்தைப்

பார்த்திருக்கும் கணவன்

தூரத்து உறவினர்

வரும் வரை

சிதையேறாமல்

கண்ணாடிப் பேழைக்குள்

நீண்டிருக்கும் பிரேதம்

எல்லாவற்றிற்கும் முன்பாக

காத்திருக்கிறது

திடுக்கிடும் ஒரு கணம்.

- கே.ஸ்டாலின்

எல்லா மூங்கில்களும்...

மூங்கில் அனைத்தும்

இசைத்திருப்பதில்லை

சில மூங்கிலாகவே

இருந்திருக்கலாம்

சில கூரையேறி சூரியனுக்குத்

தடைபோட்டிருக்கலாம்

சில வயோதிகன் கூனுக்கு

முட்டுக்கொடுத்திருக்கலாம்

சில கன்னியின்

கைகளில் தாண்டியா ஆடியிருக்கலாம்

சில கூடையாகி சுமையைத்

தாங்கியிருந்திருக்கலாம்

எனவே எளிதில்

ஏற்றிவிடாதீர்கள்

அகராதிகளில்

மூங்கிலென்றால் வெறும்

இசைத்திருப்பதென...

- கெளந்தி மு

கோடை

கொளுத்தும் வெயிலில்

எல்லோரும்

பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறார்கள்

அவரவர் நிழலை மிதித்தபடி

வெயில் தாக்கும் இலைகளின்

கண்ணீர்க் குளுமையே

மரத்தடி நிழல்களாகின்றன

வியர்வைதான்

வெயில்காலத்திற்கான

மழைத்தூறல்

தகிக்கும் வெக்கையில்

வேலை செய்பவர்களுக்குக்

கொடுக்கப்படும் கூலியென்பது

வெயிலுக்கானது மட்டுமே

கோடைக்காலத்தின்

சொற்கள்கூட

வெம்மை தோய்ந்திருக்கின்றன

வெயிலென்பது

யாரையும்

பட்டப்பகலிலேயே

பயப்பட வைக்கும்

தீயின் குழந்தை.

- சாமி கிரிஷ்

பிம்பம்

கதவருகே நின்று

கத்திக்கொண்டிருக்கும்

பூனையின் கண்களுக்குள்

மீன்தொட்டியின் பிம்பம்

கையளவு நீரில்

கச்சிதமாய் நீந்தும்

மீனின் வாயருகே

உடையும் நீர்க்குமிழிகள்

என் இதயத்துடிப்பு

அதிகரித்தபடியே

அறைக்குள்.

-சிவ ஞானம்

தொட்டி இதயம்

ஆறடி நீளம்

இரண்டடி அகலக் கடலுக்குள்

கட்டைவிரல் அளவில் நீந்தத் தொடங்கிய மீனுக்கு

தனக்கெனத் தூவப்படும் பிரத்யேக

உணவு உருண்டைகளின் மீது

பூசிக்கிடக்கும் அதிர்ஷ்டங்கள் புரிவதில்லை

நீள்பாதை நோக்கி மட்டுமே

சப்பையாய் வளர முடிந்ததில்

ஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்க

மாதம் இரண்டு முறை வந்து போகும்

மன அழுத்த டாக்டர்

நிவாரணி ஊற்றிச் செல்கிறார்

அந்த மீனுக்குத் தெரியவில்லை

தன்னால் ஒரு டாக்டர் உருவாகியிருப்பதும்

தன் மன அழுத்தத்தால்

அந்த டாக்டரின் மன அழுத்தம்

கொஞ்சம் நீங்கும் என்றும்

அடுத்த முறை வரும் டாக்டரிடம்

நிச்சயம் கேட்க வேண்டும்

‘இந்தக் கடலை மீறி வளர

நான் என்ன செய்ய வேண்டும்?’

- தக்ஷன்

அதனதன் நிமித்தம்

ஒரு பூவுக்குக்கூட

பறக்கும் ஆசை இல்லை

ஓர் இலைக்குக்கூட

பூவின் வண்ணத்தில்

பொறாமை இல்லை

ஒரு வேருக்குக்கூட

ஆகாயம் பார்க்கும்

ஆசை இல்லை

ஒரு கொடிக்குக்கூட

கிளையின் உறுதியில்

கவலை இல்லை

ஒன்றைத் தாண்டி

ஒன்றை விரும்பினால்கூட

அது பேராசை என்ற எண்ணம்தான்

வாழ்தலின் ஆதாரம்.

-இளந்தென்றல் திரவியம்