பேரிடர் சான்றிதழ்
ஆதாரத்திற்கு கொஞ்சமாய்
சிரியுங்கள் போதும்.
இன்று
இந்த நாளை
தத்தமது தேக்கரண்டிகளால்
அள்ளிக்கொண்டார்கள்
மக்கள்
உலகம்
குறைந்துகொண்டேவருவதாக
எல்லோருக்குள்ளும்
மிகுந்த
வருத்தமுமிருக்கிறது
சமாதானத்தின்
வெள்ளை வண்ணத்தைப்
பெற்றுக்கொண்ட
வணிகர்கள்
கடைகளின் முன்
வட்டக்குறிகளை
இட்டுக்காட்டுகிறார்கள்
தொற்றாளர் என்பது
அரசாங்கத்தின்
புதிய சர்ட்டிபிகேட்
இருமலும் தும்மலும்
இருப்பவர்களுக்கு
பிரான்சிலிருந்து
ராக்கெட் வரவிருப்பதாக
கிராமங்களில்
பேசிக்கொள்கிறார்கள்
புல்லட் ரயிலையா
கேட்கிறீர்கள்?
அதைப்
புலம் பெயர் தொழிலாளர்கள்
ஓட்டிச் சென்று
போனார்களே...
உங்களுக்கு
தொலைக்காட்சிகளின்
நேரலை பார்க்கும்
பழக்கமில்லை போல
எதையாவது தா
என்பவர்களுக்கு
வரிசையாக
மசோதாக்கள் வருகின்றன
சற்றுப் பொறுக்க
வேண்டும்
ஒரே நாடு
ஒரே கார்டில்
ஒரே முகமூடி திட்டம்
பரிசீலனையில் உள்ளது
பிறகு...
தேமேவென்று
எப்படித்தான் இருப்பதென
சங்கடப்படுகிறீர்களா?
அட...
வாங்க பாஸ்
ஒரு
மூலிகை டீ குடிக்கலாம்.
- நந்தன்கனகராஜ்

தெரியும்
சிரிப்பதற்குள்
எடுக்கப்பட்ட படம்
அக அழகைக் காட்டுகிறது!
- ஸ்ரீநிவாஸ் பிரபு
காகிதநதி
நதியொன்றை
வரைந்து கொண்டிருக்கிறேன்,
காகிதக் கப்பல் ஒன்றைத்
தயார் செய்துவிட்டாள்
மகள்!
- மு.முபாரக்

கை நழுவும் காலம்
வலது கையிலிருந்து
இடதுகைக்கு மாற்றுவதைப் போல
எல்லாவற்றையும்
அவ்வளவு எளிதில்
இடம் மாற்றி வைத்துவிடுகிறது
காலம்.
ஆசையாய் வாங்கிய பண்டம்
கை நழுவித் தரையில் விழுந்ததை
திரும்பித் திரும்பிப் பார்த்துச் செல்லும்
சிறுமியைப் போல
தாங்கவியலா மனதோடு
எல்லாவற்றையும்
கடந்து செல்கிறோம்.
- வெள்ளூர் ராஜா
நிறை
காற்று போன
நிலையில்
கால பந்து
நினைவு எறும்புகள்
கடித்த இடத்தில்
எல்லாம் தடயம்
பூச்சிப்பல் எடுக்கப்
போடப்பட்ட வலிநிவாரணியில்
இனிப்பு மயக்கம்
ஒத்திசைவு இல்லாப்
பேரிரைச்சலில் சூழலும்
மாய வலையில்
யாவும்
குடம் தாங்கிய
நீரில் ததும்பி வழியும்
நம்பிக்கை...
- யாழ் ராகவன்