பிரீமியம் ஸ்டோரி

என் கவிதை

குட்டையாய்

பருத்த இடைபெருத்த வயிற்றுடன்

மேல்மூச்சு வாங்கத் தெருவில் நடக்கும்

அப்பெண்மணியை

கேலியாய்ப் பார்க்காதீர்கள்

அவள்

மீண்டுமொரு முறை

நடைப்பயிற்சியைத்

தொடங்கியிருக்கலாம்

பொழுதுதோறும்

நான்கு சுவருக்குள்

அடைபட்டிருக்கும் அவளுக்கு

அரை மணியேனும்

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்

ஆசை வந்திருக்கலாம்

காலை முதல் இரவு வரை

வரிசை கட்டி

நிற்கும் கடமைகளுக்கு

இடையில்

தனக்கான நேரமாய்

இதை வரித்துக்கொண்டிருக்கலாம்

இன்னுமின்னும்

அறியா காரணங்கள்

ஏராளம் இருக்கலாம்

முடிந்தால்

சிறு புன்னகை

ஒரு கையசைப்பு செய்யுங்கள்

இல்லை வழமைபோல்

வாய்மூடி மௌனித்து

நகருங்கள்.

- காயத்ரி. எல்

பறவையின் வீடு

ஆசுவாசமாய் வசிக்கக் கட்டிய

மூன்று படுக்கை வீடு

முந்தைய நிலத்தில்

கிளைகள் விரிந்த பெருமரம்

சுற்றமும் நட்பும் புடைசூழ

குடும்பமாய் வசித்தன அப்பறவைகள்

இப்போதைய சமையல் அறை

அப்போது விரிந்த கிளை -

அதில் அமர்ந்து

இரை உண்ணும் அவை

படுக்கையறைக்கு நேர் உச்சியில் கூடு

வலசை சென்று திரும்பிய அந்நாளில்

ஆகச்சிறந்த பொறியாளரின் தலைமையில்

அளந்து முடித்த வரைபடத்தில்

ஆங்காங்கே இடம்பெற்றன

பால்கனி குரோட்டன்கள்

பூக்கள் வேய்ந்த நுழைவாயிலின்

நுனி கேட்டில்

தவறாது வந்தமர்கிறது

அழகான அச்சிறு பறவை

அழைப்பு மணியை அழுத்தும்

தருணங்களில் ஒலிக்கிறது

பறவைகளின் சத்தம்.

- துரை. நந்தகுமார்

சொல்வனம்

தருணம்

பேருந்தில் கவலைசூழ் முகமாக

எதிரே ஒருவன்

அங்கும் இங்குமாய்ச் சுற்றிக்கொண்டிருந்தது

அவன் பார்வை

ஜீவனில்லாமல்

அவன் கைப்பேசி ஒலி எழும்பியது

யாரிடமோ வருந்த ஆரம்பித்தான்

வேறு வேலை கிடைக்குமாவென

விரக்திக் குரலில்

தொழில் தொடங்கலாமாவென

யோசனை ஒன்றையும் முன்வைத்தான்

ம்... என்றான்

சரி... என்றான்

சிறிது நேரம் தொடர்ந்த

அந்தப் பேச்சுக்குப் பின்

அவன் கண்கள் மலர்ந்தன

கனைத்து குரல்வளை

உடைந்து சிரிக்கத் தொடங்குகிறது

முடிகளை விரல்களால் கோதித் திருத்தினான்

சட்டைக் காலரை சரிசெய்து காற்றை

இழுத்து சுவாசிக்கத் தொடங்கினான்

அந்தப் பேச்சுக்கு இறுதியில்

தேங்க்ஸ் என்றான்

நல்ல வேளை அதுவரையில்

என் நிறுத்தம் வரவில்லை..!

- சரண்யா சத்தியநாராயணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு