தட்டான்கள்
வெயில் காய்ந்துகிடக்கும்
குடிதண்ணீர்க் குழாய்முன்
வரிசையாகக் காத்திருக்கின்றன
வெற்றுக் குடங்கள்
பச்சைக்குப் பின் சிகப்பு
சிறியதற்குப் பின் பெரியது
உங்களுக்குப் பின் நானென
முன் நிற்பவளிடம் ஒப்புவித்தவளுக்கு
கசந்துகிடக்கிறது காத்திருப்பு
பத்தடி தூரத்தில்
பச்சை எலுமிச்சை மரத்தின்
புளிப்பு நிழலைத் தலையில் பூசி
பேச்சுத்துணைக்கு ஆள்தேடுகிறது
தனித்திருக்கும் குத்துக்கல்
கூடிக் களித்திருக்கும்
தேன்குழல் பூவின் இனிப்பெல்லாம் உறிஞ்சியவள்
பார்வையோடு விட்டுவிடுகிறாள்
பறக்கும் தட்டான்களை
வரிசை நெருங்கியதாக
யாரோ குரல்கொடுக்க
பாஸா பெயிலாவுக்கு
பதில் தெரியாமலே
பாதியில் விட்டுவந்தாள் எருக்கம் பூவை
ஐந்தாம் வகுப்பு கற்பகம்.
- கனகா பாலன்
செல்லாத நேர்மை
கிழிந்த நோட்டைத்
தெரியாமல் வாங்கி
ஏமாற்றப்பட்டதில் இருந்தே
தவியாய்த் தவித்தது மனம்
இரண்டு மூன்று முறை
மாற்ற முயன்று
நிராகரிக்கப்பட்டது நேர்மை
இப்போது நேர்மையை மாற்ற முயன்றான்
மாறிவிட்டது நோட்டு
கிழிந்துபோன நேர்மை கண்டு
சிரித்தபடி.
- அ.வேளாங்கண்ணி


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
புத்தம்புதிய ஏற்பாடு
கானல் தகிக்கும் தார் ரோட்டின்
கருஞ் சல்லியை
உருக்கி எரிகிறது சிக்னல்
கையேந்தி நகரும்
ரேகை நதியில்
மிதக்கிறது உச்சிப்பகல்
ஹாரன்கள் அலறும்
நகரத்தின் விலாவில்
பசியோடு புரண்டு திரும்புகிறாள்
செம்பட்டை ஏவாள்
வனமழிந்து அழுகிய
ஆப்பிள் மரத்தைத் துருப்பிடித்து
மெலிந்து தகிக்கும்
உருவகக் கம்பத்தின் தலையில்
கூடு கட்டி முட்டையிடுகிறான்
ஆதாம்
பாவச் சம்பளத்தை
ரகசியமாய்ப் புரட்டிப் பழகிய
சர்ப்பத்தின் பிளந்த
நாவிடுக்கில் ஒலிக்கிறது
உலோக விசில் சத்தம்.
- தக்ஷன்
தீர்ந்துகொள்ளும் ஞாயிறு
பொன்னிறமென
சனிக்கிழமைகளில் தவழும்
மாலைச் சூரியனில்
ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுதில்
விடிந்துகொள்கிறது
அந்த வாரத்திற்கான அசதி
மஞ்சப்பையின் அடைமொழியில்
நிறைந்துகொள்கிறது ஓர் ஊர்
அரைபடும் தேங்காய்ச் சில்லும்
வறுத்த மிளகையும்
கறிக்கும் மீனுக்கும் வாடைமாற்றிப்
பருவம் கொள்கிறது
கேட்பாரற்று உறங்கிக்கொள்கிறது
நண்பகல்
பந்தி முடிந்ததென மடக்கிக்கொண்ட
மாலைச்சூரியனில்
ஒரு கிழமைக்கான ஏக்கம்
நிழல்கொள்கிறது.
- சன்மது
அவற்றுக்கு இடமில்லை
சீராகப் போட்ட
நகைகளை வைக்க பிரத்யேக லாக்கர்
பட்டுப்புடவைகளுக்கும்
கோட் சூட்டுகளுக்கும்
உயர்தர இரும்பு பீரோ
பாத்திரம் முதல்
காலணி வரை
எதை எங்கு ஒழுங்காக
வைக்க வேண்டுமென
அறிவுறுத்தப்படுகிறது
கணவன் வீட்டில்
சொன்னபடியே அனைத்தையும்
ஒழுங்குபடுத்தி ஒழுங்குபடுத்தி
ஓய்ந்துபோகிறேன்
நாங்கள் எங்கு போய்த் தொலைய
வேண்டுமென
வெறுப்போடு பார்த்துக்
கொண்டிருக்கின்றன
என்
கல்லூரிப் புத்தகங்களும் சான்றிதழ்களும்.
- தி.கலையரசி
வலி
வாழ்ந்து கெட்டவனின்
முனகலை
உற்றுக்கேளுங்கள்
வறுமையின் பிடிக்குள்
சிக்குண்ட அவனின்
இயலாமையின்
ஆற்றாமையை
சின்ன சிரிப்பில் கடப்பான்
நிறுத்தி அறிவுறுத்துகிறேன் என
குத்திக் கிழிக்காதீர்கள்
உங்களிடமிருந்து
எப்படித் தப்பிப் பிழைப்பதென
நித்தம் யோசிக்கக்கூடும்
ஏதோ ஒன்றைச் செய்தோ
செய்யாமலோதான்
தோற்றிருப்பான்
இருந்தும் அப்படி ஒன்றும்
உங்களைவிட மோசமானவனில்லை
அவன்.
மகேஷ்குமார் செல்வராஜ்